Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் ! - தொடர் - 18 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முந்தைய பதிவில் ஸாத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் வாழ்வின் மூலம் நாம் பெற்ற படிப்பினைகள் பார்த்தோம், இந்த வாரம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் பற்றி அறிந்து அதனைக் கொண்டு நாம்ம எவ்வாறான படிப்பினை பெறலாம் என்பதைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாத்திற்காக வீரமரணம் (ஷஹீத்) அடைந்தவர்களில் சுமைய்யா (ரலி) அவர்களும் யாசிர்(ரலி) அவர்களும் முதன்மையானவர்கள் என்ற வரலாற்று உண்மைகளை நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. இந்த தம்பதிகளில் அருந்தவப் புதல்வன்தான் அம்மார்(ரலி) அவர்கள். ஒரு வருத்தம் என்னவென்றால், அம்மார்(ரலி) அவர்களின் குடும்பமே செய்த தியாயங்கள் பற்றிய வரலாற்று சம்பவங்களை அவ்வப்போது மார்க்க சொற்பொழிவுகளில் நினைவு கூறப்படுகிறதே தவிர. நம் ஒவ்வொரு வீடுகளிலும் அந்த ஷஹீத் குடும்பங்களின் தியாகங்களை நினைவுப் படுத்தவோ, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கோ, அவர்கள் போல் நாமும் தியாக சிந்தனையோடு அல்லாஹ்வுக்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கோ, நாம் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. இத்தகைய நிலை கைச்சேதம் என்று சொன்னால் மிகையில்லை. சத்திய சஹாபாக்களும் தீனுல் இஸ்லாத்தை எண்ணற்ற தியாகங்கள் செய்து நம்மிடம் கொண்டு வந்துள்ளார்கள். இதனை நாம் அறிந்து நம்முடைய ஈமான் வலுப்பெற செய்வது நம்முடைய அவசியத் தேவை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சத்திய சஹாபாக்களின் தியாக வரலாறுகள் அனைத்தும் போற்றுதலுக்குறியது, இருப்பினும் அம்மார்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகம் மிக உயர்ந்த தியாகம். காரணம் அம்மார்(ரலி) அவர்களும், தாய் சுமைய்யா(ரலி), தந்தை யாஸிர்(ரலி) அவர்களும், இஸ்லாத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்கள்.

நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வந்த அந்த காலகட்டத்தில் அம்மார்(ரலி) அவர்களின் தந்தை யாஸிர்(ரலி) அவர்கள் காணாமல் போன தன்னுடைய சகோதரனைத் தேடி சிரியா, ரோம் போன்ற பிரதேசங்களில் தேடி பிறகு மக்கா வந்தடைந்தார்கள். மக்காவில் ஹுதைபா என்பவரிடம் ஒப்பந்தம் செய்து வேலைக்கு சேர்ந்தார். ஹுதைபா அவர்களிடம் நிறைய பணிப்பெண்கள் வேலைப் பார்த்து வந்தார்கள். அதில் ஒருவர் தான் அந்த தியாகத் திருமகள் சுமைய்யா(ரலி) அவர்கள். யாசிர்(ரலி) அவர்களின் நன்னடத்தையைப் பார்த்த ஹுதைபா அவர்கள் சுமைய்யா(ரலி) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

மக்காவில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைத்த அந்த ஆரம்ப காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்களின் குடும்பம் தவிர்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தவர்கள் சிலர் அதில் மிக முக்கியமானவர்கள் அம்மார்(ரலி), யாசிர்(ரலி), சுமைய்யா(ரலி), சுஹைப்(ரலி), மிக்தாத்(ரலி), கப்பாப்(ரலி), பிலால்(ரலி),  அபூபக்கர்(ரலி) ஆகியோர். அன்றைய காலத்தில் கொடூரன் என்று வர்ணிக்கப்பட்ட அபூஜகல் என்ற கொடுங்கோலன், புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் எந்த ஒரு உயர்ந்த குலத்தவர்களையும் அழைத்து அவர்களின் பொருளாதாரத்தை நாசமாக்குவேன் என்றும், அவசியம் ஏற்பட்டால் அவர்களை கொலையும் செய்வேன் என்றும் மிகக்கடும் எச்சரிக்கை செய்பவனாக இருந்துள்ளான்.

அப்படிப்பட்டவன் பொருளாதார ரீதியாகவும், குலம் ரீதியாகவும் அன்றைய காலகட்டத்தில் அவன் பார்வையில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்த அடிமைகளான அம்மார்(ரலி) அவர்களின் குடும்பத்தை எப்படி எல்லாம் சித்திரவதை செய்திருப்பான் (சுப்ஹானல்லாஹ்), அந்த கொடுமையை பெயரளவில் தட்டிக்கேட்க நாதியற்ற காலகட்டம். இன்று இருப்பது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுகூட இல்லை. நபி(ஸல்) அவர்களோ அந்த கொடுமைகளைப் பார்த்து கண்ணீர் சிந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்வதைத் தவிர வேறு எதுவும் அவர்களால் அன்றையச் சூழலில் செய்ய முடியவில்லை பாவப்பட்ட அம்மார் (ரலி) அவர்களின் குடும்பத்திற்காக.

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும். குர்ஆன் (3:157).

இந்த குர்ஆன் வசனத்திற்கு பொருத்தமானவர்களாக வாழ்ந்துள்ளார்கள் சுமைய்யா (ரலி) அவர்களும், யாசிர்(ரலி) அவர்களும்.

அந்த குரைஷிக் குலத்துக் கொடுங்கோலன் அபூஜஹல் ஹுதைபா விடமிருந்து சுமைய்யா(ரலி) அவர்களை அழைத்துச் சென்று, ஒரு பெண் என்றுகூட பார்க்காமல், இரும்பு கவசத்தை அந்த அம்மையாரின் மேனியில் அணியச் செய்து, அவர்களை வீதிகளில் தரதரவென்று இழுத்து வரச் செய்பவனாக இருந்தான். இந்த கொடுமையான சூழலிலும் இறை நிராகரிப்பு வாசகத்தை சொல்லச் சொல்லி துன்புறுத்துவனாக இருந்தான் கொடூரன் அபூஜகல், ஆனால் அந்த அம்மார்(ரலி) அவர்களின் தாயார் சுமைய்யா (ரலி) அவர்கள் ‘அஹத் அஹத்’ என்று அல்லாஹ் ஒருவனே என்ற வார்த்தயை தவிர வேறு எந்த ஒரு இறை நிராகரிப்பு வார்த்தையும் பயன்படுத்தாமல் தன்னுடைய ஈமானைப் பாதுகாத்தார்கள். அடித்தாலோ கொன்றாலோ தட்டிக்கேட்க ஆளில்லாத அடிமைக்கா இவ்வளவு திமிர் என்று சினம் கொண்ட அபூஜகல், ஆத்திரத்தில் சுமைய்யா(ரலி) அவர்களை மீண்டும் அந்த பாலைவனப் பெருவீதியில் இழுத்து வந்து, ஈட்டியினால் அந்த அம்மையாரின் வயிற்றை கிழித்து அவர்களை கொலைச் செய்தான். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அம்மார்(ரலி) அவர்களின் தந்தை யாசிர்(ரலி) அவர்களையும் அந்த குரைஷிக் கொடூரர்கள் விட்டு வைக்கவில்லை. முஹம்மதுடைய(ஸல்) மார்க்கத்தை விட்டு விடு இல்லாவிட்டால் உன்னுடையை உயிரை எடுப்போம் என்று மிரட்டினார். யாசிர்(ரலி) அவர்களோ அல்லாஹ் ஒருவனே என்ற சொல்லைத்தவிர வேறு எந்த ஒரு இறை நிராகரிப்புச் சொல்லையும் உச்சரிக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக, பல இன்னல்களைக் கொண்டு கொடுமை படுத்தப்பட்டார்கள். 

இறுதியாக யாசிர்(ரலி) அவர்களின் ஒரு கால் ஒரு ஒட்டகத்திலும், மற்ற கால் ஒரு ஒட்டத்திலும் கட்டப்பட்டு இரு எதிர் திசைகளிலும் அந்த ஒட்டகங்கள் விரட்டப்பட்டு, இரண்டு பகுதியாக உடல் கிழிக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்கள் யாசிர் (ரலி) அவர்கள். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன். 

அத்தகையச் சூழலிலும் குப்ரான எந்த ஒரு வார்த்தையும் அந்த வீரத் திருமகனார் யாசிர்(ரலி) அவர்கள் உச்சரிக்கவில்லை. இவ்விரு கொடுரங்களை கண்ட அம்மார்(ரலி) அவர்கள் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் தன்னுடைய ஈமானில் மட்டும் மிக உறுதியாக இருந்தார்கள் என்பது தான் இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியவை.

நாம் ஒவ்வொரு தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கிறோம், நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்த விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கிறோம். ஏன் கேடுகெட்ட சினிமாவின் மூலம் பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கின்றோம். அதற்காக பல மணி நேரங்களையும் செலவழிக்கிறோம். என்றைக்காவது தியாகச் சுடர் அம்மார் (ரலி) அவர்களின் குடும்பம் செய்த தியாகம் பற்றி உளப்பூர்வமாக வாசித்திருக்கிறோமா?

நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் நாம் வைக்கும் பெயர் புதிதாக இருக்க வேண்டும், வித்யாசமான அர்த்தம் இருக்க வேண்டும் என்றும் நாம் பார்க்கிறோமே தவிர. இஸ்லாத்திற்காக தியாகம் செய்த அம்மார்(ரலி) அவர்களின் பெற்றோர் சுமைய்யா(ரலி), யாசிர்(ரலி) இவர்களின் பெயர்களை வைத்து அந்த தியாகிகளை நினைவு படுத்தி வருபவர்கள் நம்மில் எத்தனை பேர். தியாகத் செம்மலின் பெயர் வைத்தவர்கள் எத்தனைப் பேர் அவர்களைப் போன்ற தியாக உணர்வு உள்ளவர்களாக வாழ்ந்து வருகிறோம்!?. இஸ்லாத்திற்காக தியாகம் செய்தவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தாம் அன்றாடம் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிறிய மற்றும் பெரிய பாவங்களை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அதனை விட்டும் விலகியவர்களாக தியாகம் செய்தவர்கள் எத்தனை பேர்?

தியாகம் என்ற சொல்லுக்கு பெண்களுக்கு முன்னுதரணமாகவும் அதற்கான அத்தாட்சியாகவும் வழ்ந்து ஷஹீத் ஆன சஹாபிப் பெண்மனி சுமைய்யா (ரலி) அவர்கள். அவர்களைப் போன்று ஒரு இறை நிராகரிப்பு சொல் சொல்லாத பெண்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளோம் என்று சிந்திக்க வேண்டும்.

இதுவரை நாம் பார்த்தது, தாய், தந்தை இஸ்லாத்திற்காக பட்ட கஷ்டங்கள், பின்னர் உயிர் தியாகம் செய்தது. அந்த வீரத்தியாகிகளின் மகன் அம்மார்(ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்கள் அதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள். இன்ஷா அல்லாஹ் வரும் வாரங்களில் விரிவாக தொடர்ந்து பார்க்கலாம். 

யா அல்லாஹ் எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் நம் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன் 

7 Responses So Far:

نتائج الاعداية بسوريا said...

யாசிர் (ரலி) சுமையா (ரலி) தியாகக்குன்றுகள்,

இறை நிராகரிப்போருடன் துணிந்து நின்று ஈமானை காத்த தியாகச்செம்மல்கள், குலப்பெருமை, கோத்திர பெருமை , பண வலிமை, உடல் வலிமை ஒன்றுமில்லாமல் இறை பொருத்தம் ஒன்றே நிரந்தரம் என்ற வலுவுள்ள ஈமானுடன் இவ்வுலகை பிரிந்திருக்கின்றார்கள் என்றால், எத்தனை பேருக்கு இந்த ஈமான் இன்றுள்ள முஸ்லிம்களாகிய நமக்குள் இருக்கின்றது.?

நம்மை நாமே கேட்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


அபு ஆசிப்.

Yasir said...

அல்லாஹ் இத்தகைய தியாகிகளை பொருந்திக் கொள்வானாக....நன்மையான சிந்தினையை செம்மைப்படுத்தும் இச்சம்பவங்களை அள்ளித்தரும் சகோ.தாஜூதீன் அவர்களின் மார்க்க அறிவை விசாலப்படுத்துவானாக

sabeer.abushahruk said...

வாராவாரம் நீங்கள் தரும் நல்லுபதேசங்களுக்காக அல்லாஹ் சுபுஹானஹுத்'ஆலா தங்களுக்கு நல்லருள் பாளிப்பானாக, ஆமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சத்திய ஸஹாபாக்கள் வாழ்ந்தது போல் நம் அனைவரையும் வாழ தொடர் விழிப்பூட்டம் தருவதற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருதடவை அல்ல இன்னும் பலதடவை வாசிக்க வேண்டிய விஷயங்களை உள்ளடக்கிய படிப்பினைகள் ஏராளம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ். மிகத் தெளிவாகவும், அழகாகவும் உள்ளம் உறையக்கூடிய அளவிற்கு உங்களின் எழுத்துக்கள் அமைந்தது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இந்த தியாக குடும்பங்களின் பெயர்களை நம் சந்ததிக்கு வைத்து! நம் தலைமுறைக்கு இவர்களின் தியாகத்தை நினைவுபடுத்துவோமாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு