கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கமிட்டியினருக்கும் ADTயின் கடிதம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடற்கரைத் தெரு ஜமாஅத், கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகள் மற்றும் கந்தூரிக் கமிட்டியினரைச் சந்தித்து, கந்தூரியின் தீமைகளை விளக்கிக் கடிதங்கள் கொடுப்பது எனும் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசனை அமர்வுத் தீர்மானத்தின்படி, முதலாவதாக கடற்கரைத் தெரு ஜமாஅத்தார்களுக்கு 3.11.2013இல் ஒரு கடிதம் கொடுத்தோம்.

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்ட்டின் முன்னாள் தலைவராக இருந்தவரான சகோ. அலாவுத்தீன் சென்ற ஆண்டு கபுருக்கு சந்தனம் பூசுவதற்குப் போய் உயிர் நீத்துவிட்டதால் அன்னாரின் சின்னவாப்பா சகோ. அஹ்மது ஹாஜா அவர்கள் தர்கா ட்ரஸ்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நலக் குறைவால் தர்கா சம்பந்தப்பட்ட எதிலும் தலையிடாமல் இருந்து வருகிறார்.

எனவே, தர்கா ட்ரஸ்ட்டின் செயலாளரான சகோ. அபுல் ஹஸன் அவர்களை, அவருடைய 'ஹஸன் ஹார்ட்வேர்' கடையில் கடந்த 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நான், தாருத் தவ்ஹீதின் அமீர் அஹ்மது காக்கா, பொருளாளர் நிஜாமுத்தீன் ஆகிய மூவரும் சென்று சந்தித்து இணைப்பில் உள்ள கடிதத்தைக் கொடுத்தோம்.

சகோ. அபுல் ஹஸன் அவர்கள் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேசினார். அதில் நமக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன. அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் இடம்பெற்றன. அவற்றின் சுருக்கம்:

* "நாகூரிலும் முத்துப்பேட்டையிலும் இன்னும் பல பெரிய ஊர்களிலும் கந்தூரிகள் நடக்கின்றன. இந்தச் சின்னக் கிராமத்தில் நடைபெறும் கந்தூரியை எடுக்கக்கூடாது என்று ஏன் சொல்கின்றீர்கள்? அங்கே போய் சொல்வதுதானே?" என்ற கேள்வியை முன்வைத்தபோது நான் குறுக்கிட்டு, "எல்லா ஊர்களிலும், நாகூரிலும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. நாகூர் பிரச்சாரத்திற்கு நானும் போயிருக்கிறேன்" என்று சொன்னேன்.

* "எனக்கு ஒன்றும் தெரியாது; உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. முன்னோர்கள் 570 வருசத்துக்கு முந்தி கந்தூரி எடுத்திருக்கிறார்கள். அது, அப்படியே தொடர்ந்து வருகிறது" என்று முன்னோர்களை உயர்த்திப் பேசிவிட்டு, "தர்கா என்பது இறைவனை வணங்கும் இடம்" என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். "அல்லாஹ்வை தர்காவில் தொழ முடியாதே. எப்படிச் சொல்கிறீர்கள் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "அப்படித்தான் நான் படித்திருக்கிறேன். எனக்குப் படித்துத் தந்தவர் அப்படித்தான் சொல்லித் தந்தார்" என்று விளக்கினார். முன்னோர்களின் வழிவந்த உஸ்தாதின் மார்க்க அறிவே இப்படி என்றால் அந்தக் காலத்து முன்னோர்கள் மார்க்கத்தை எப்படி விளங்கி இருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அல்லாஹ்வின் (2:170) வார்த்தைகள் எத்துணை சத்தியமானவை என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

* தர்காவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் வீட்டில் ஐந்து பவுன் நெக்லஸ் காணாமல் போய்விட்டதாம். "இன்னார் வீட்டு தர்வாஜாவில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. போய் எடுத்துக்கொள்" என்று கனவில் வந்து சொன்னாராம் ஜொகராம்மா. "கனவு கண்ட பெண், ஐந்து பவுன் நகையையும் விற்று, கபுர் கட்டினார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம். இந்தக் காலத்தில் ஐந்து பவுன் என்ன விலை? அதை விற்று அவர் கபுர் கட்டினால் உங்களுக்கென்ன?" என்ற கேள்வியை வைத்தார். உண்மைதான். அவருடைய கேள்வியில், "ஆலிம்கள் பெருத்த ஊர்; ஆறு குத்பா நடக்கும் ஊர். யாருமே வாய் திறந்து பேசாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் குதிப்பது ஏன்?" எனும் உப கேள்விகள் பொதிந்திருந்தன. "கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு என்று நோட்டீஸ் போட்டீர்களே என்ன நடந்தது? நோட்டீஸைப் படித்துவிட்டு, நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் நிறைய பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

* கந்தூரியில் நடைபெறும் குத்துப்பாட்டு, கச்சேரிகளில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவை கந்தூரி கமிட்டியாரால் செய்யப்படுபவை என்றும் தெளிவாக்கினார். "கந்தூரி கமிட்டியார் யார் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "இதுவரைக்கும் யாரெனத் தெரியவில்லை. என்னிடம் வந்து பர்மிஷன் கேட்பார்கள். நான் சரி என்பேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.

* "ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா செய்து வைக்க முன்வாருங்கள். ஏழைக் குமருகளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள். அதை விட்டுவிட்டு கந்தூரியை நிறுத்து என்றால் நின்றுவிடுமா?" என்று ஆலோசனை வழங்கினார்.

* பேச்சு வாக்கில், "நாங்கள் ஹாஷிமிகள்" என்பதாக எனக்குப் புதுத் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஹாஷிமிகளான அபூஜஹ்லும் அபூதாலிபும் என் நினைவில் வந்தனர். இந்த ஹாஷிமி விபரத்தை 'ஸில்ஸிலா'வைப் படித்துப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ். ஏனென்றால், ஹாஷிமிகளுக்கு தானமோ தர்மமோ கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹராமாக்கப்பட்டது. வாங்குவதும் ஹாஷிமிகளுக்கு ஹராமாக்கப்பட்டதாகும்.

மக்ரிபுக்கு நேரமாகிவிட்டதால் விடைபெற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் : -

ஜமீல் M.ஸாலிஹ் - SEC-ADT

14 கருத்துகள்

Shameed சொன்னது…

தோளில் சிவப்பு கலர் அணிந்த அந்த பார்டியுடன் 20 நிமிடம் நீங்கள் அனைவரும் பொறுமையுடன் பேசியதற்கு உங்கள் அனைவருக்கும் இருபது முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//Shameed சொன்னது…
தோளில் சிவப்பு கலர் அணிந்த அந்த பார்டியுடன் 20 நிமிடம் நீங்கள் அனைவரும் பொறுமையுடன் பேசியதற்கு உங்கள் அனைவருக்கும் இருபது முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்//

அந்த இருபது நோபல் பரிசையும் அவருக்கே கொடுத்துடலாம்... கொஞ்சம் இறங்கி வரச் சொல்லுங்களேன்...!

கமிட்டி யாருன்னு தெரியாமலே பர்மிஷன் கொடுக்கும் அந்த பார்ட்டியிடம் தர்ஹாவுக்கு பூட்டு போடனும் ஒரு பெமிஷன் போட வழி சொல்லுங்களேன்...

sabeer.abushahruk சொன்னது…

அல்லாஹ் எனக்குக் கொஞ்சம் கூடுதலா உடல் உறுதியைக் கொடுத்திருந்தால் அந்த நாசமாப் போன புது கபுரை கடப்பாரையைக் கொண்டு கர சேவை செய்துவிடுவேன்.

என்ன ஜன்மங்களோ...ச்சீ.

நம் கண்முன்னே கட்டப்பட்ட கபுரையே நம்மால் உடைக்க முடியவில்லை. கையாலாகாத நம்மால் எப்படி பாப்ரி மஸ்ஜிதை காப்பாற்றியிருக்க முடியும்?

என்னத்த கருத்த சொல்லி என்னத்த சாதிக்க?

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

Eventhough if we exile this man to Guantanamo bay (prison), he will construct a small graveyard (kabur) in side the prison and he will tell the jailer that john Kennedy came in my dream yesterday and requested me to make a small graveyard as well as Vundiyal there to collect dollars for week end celebration. Why they are not considering our beloved prophet Muhammad Rasool (P.B.U.H)'s graveyard which is even to the ground level?

Ebrahim Ansari சொன்னது…

//ஹஸன் ஹார்ட்வேர்'// அவரது கடையா அல்லது மனமா?

மயில் இறகை தானாகப் போடாது.

ஆனாலும் உணர்ச்சி பூர்வமான இந்த பிரச்னையை அறிவு பூர்வமாக அணுகி இருக்கிறீர்கள்.

தெருவின் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும்வரை இப்படியெல்லாம் பழம் பழுக்காது. தீவிர பிரச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

நீங்கள் கொடுத்துள்ள இத்தனை பக்கங்கள் கொண்ட மார்க்க ஆதாரங்களை ஒழுங்காகப் படித்தார்களா? படிக்க முடியுமா? படித்தாலும் புரியுமா? புரிந்தாலும் ஏற்பார்களா?

என்பவை விடை தெரியாத வினாக்கள்.

மீண்டும் பதிவு செய்கிறேன் மயில் தானாக இறகு போடாது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

"ADT" யின் தொடர் முயற்சி விரைவில் இன்சா அல்லாஹ் பலன் கிடைக்கட்டும்.

கேள்விக்கான பதில் ரொம்ப சுவராஸ்யமா அதே சமயம் நம்மவர்களின் விளங்கும் தன்மை (ஈமான்) கவலைக்கிடமாயிருக்கு!

இப்படி விளங்கும் ஆற்றல் இல்லாமையால் இவங்களுக்கு கனவிலாவது எந்த முன்னோராவது வந்து தடை உத்தரவு போடனும்.

adiraimansoor சொன்னது…

///கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு என்று நோட்டீஸ் போட்டீர்களே என்ன நடந்தது? நோட்டீஸைப் படித்துவிட்டு, நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் நிறைய பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.///
ஹா.......ஹா..... இது மடமையின் உச்சகட்டம்

نتائج الاعداية بسوريا சொன்னது…

ஜமீல் காக்கா,

நூஹு நபி 950 வருடங்கள் ஏகத்துவத்தை போதித்து வெறும் 80 பேர்தான் , இந்த ஓரிறைக்கொள்கையை நோக்கி வந்தனர் எணும்போது

ஹிதாயத் என்னும் நேர் வழி இறைவன் கையில் இருக்கின்றபோது,
உங்கள்களின் இந்த முயற்சி, நபிமார்களின் முயர்ச்சியினைத்தான் ஞாபக படுத்துகின்றது.

இன்ஷா அல்லாஹ் உங்கள்களின் முயற்சி வீண்போகாது.

தட்டப்படும் கதவு ஒருநாள் திறக்கும் என்று எதிர்பார்ப்போம்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

\\ "கந்தூரி கமிட்டியார் யார் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "இதுவரைக்கும் யாரெனத் தெரியவில்லை. என்னிடம் வந்து பர்மிஷன் கேட்பார்கள். நான் சரி என்பேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.\\


\\"தர்கா என்பது இறைவனை வணங்கும் இடம்" என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். "\\


பேரறிஞர்களின் குறுக்கு விசாரணையில் மாட்டிக் கொண்ட குறுமதியின் உளறல்களால், “அறியாமை” என்னும் இருளை இந்த ஆக்கத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதால், இன்னும் |”அறியாமை” இப்படி எல்லாம் இருக்குமா என்று வியக்கவும் நம்மைச் சிந்திக்கவும் வைத்து விட்டது.

ஃபிர் அவ்னிடம் சென்று வாதாடிய மூஸா(அலை) அவர்களின் வீர நெஞ்சைத் தங்கட்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்; அல்ஹம்துலில்லாஹ்!

ZAKIR HUSSAIN சொன்னது…

பல வருடங்கள் ஊரிப்போன நம்பிக்கை. கொஞ்சம் கஷ்டம்தான். நாம் அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அவர்கள் மீது வெறுப்புடன் நடந்துகொள்ளாமல் அன்புடன் எடுத்துசொன்னால் ஒருகாலம் அவர்கள் சத்தியமார்க்க வழிக்கு வருவார்கள்.

தவறுகள் செய்தாலும் அவர்களும் நம் சகோதரர்கள்தான் என்ற நபிவழியின் எண்ணம் நமக்கும் இருக்க வேண்டும்.

கபுர் வணக்கத்தின் காரணம்...' வர்ர வருமானத்தெ ஏன்பா கெடுக்கிறீங்க?" என்ற ஆதங்கமே தவிர... மற்றபடி அவ்லியாவின் மீது உள்ள இவர்களின் பற்று எல்லாம் ஜீவகாருண்யம் பேசும் வீட்டில் ஆட்டிறைச்சி ஆனத்து வாசனைதான்.

Unknown சொன்னது…

அதிரை உலமாக்கள் சபை தலைவரின் ஆதரவு இருப்பதால்தான் இதுபோன்று வழிகேட்டில் இருப்பவர்கள் திமிராக பேசுகிறார்கள்.அவரை கேரளாவிற்கு விரட்டுவதற்கு இளம் ஆலிம்களும் இளைஞர்களும் முயற்சிக்கவேண்டும்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

நல்ல முயற்ச்சி[மாஷா அல்லாஹ்] இம்முயற்ச்சி விடா முயற்ச்சியாய் இருந்து எப்படியாகிலும் கந்தூரி எனும் கெட்ட நிகழ்வு நின்றிடல் வேண்டும் உங்களது இப்பணியை அல்லாஹ் ஒப்புக்கொண்ட தாவா வாக ஆகட்டுமாக
///// "ஆலிம்கள் பெருத்த ஊர்; ஆறு குத்பா நடக்கும் ஊர். யாருமே வாய் திறந்து பேசாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் குதிப்பது ஏன்?"////
இப்படி அவர் கேட்டிருந்தாலும் இவ்வாசகம் இங்கு நீக்கப்பட்டு இருக்களாம் காரணம் உங்களுக்கு முந்தைய காலங்களில் நிறையதடவை கந்துரி கமிட்டிகளிடம் கெஞ்சலாக, மார்க்க உத்தரவாக சொல்லி இருக்கிறார்கள் அவர்கள் கேட்பதாய் இல்லை ஆனால் ஆலிம்கள் தளர்ந்துவிட்டார்கள் [குறைதான்]
ஒருமுறை மேலத்தொரு கந்தூரியில் அப்பதுல்காதர் ஆலிம் அவர்கள் கந்துரி சம்மந்தமாக அவர்களிடம் பேசும்பொழுது சூது கடை பற்றி பேச்சு வரும்பொழுது மேலத்தெரு பெரும்புள்ளி சொன்னார் அவர்கள்[சூது கடை நடத்துபவர்கள்]பெரும் தொகை தர்காவிற்க்கு தருகிறார்கள் அந்த தொகையை நீங்கள் தாருங்கள் கொட்டை கடை வைக்காமல் கந்தூரி நடத்துகிறேன் என்று நக்கலாக பதில் தந்தார்
அல்லாஹ் அவர்களுக்கு மேலான தீனை தந்தவன் தௌபீக்கையும் அருள்வானாக

அதிரை தாருத் தவ்ஹீத் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

முதலாவதாக, அ.நி.க்கு நன்றி!

இரண்டாவதாக, தம்பி அபுல் கலாமுக்கு அன்பான நினைவூட்டல்:
யாரையும் தகுதிக்கு மீறிப் புகழாதீர்கள். அது புகழ்பவருக்கும் புகழப்படுபவருக்கும் தீமை பயக்கும். நான் மிகவும் எளிய பாமரன்.

மூன்றாவதாக, சகோ. மு.செ.மு. சபீர் அஹ்மது (திருப்பூர்) அவர்களுக்கு:
கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்ட்டின் செயலாளர் அபுல் ஹஸன் காக்கா அவர்கள், ஒரு பெண் கண்ட கனவின்படி கபுருக் கட்டிக் கொடுப்பது பற்றி சிலாகித்துப் பேசும்போது குறுக்கிட்ட நான் "கனவுகள் மார்க்கமாகாதே காக்கா" என்றேன். அதற்கவர், "யாருமே எங்களிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை; நீங்கள் மட்டும் 'கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு' என்று நோட்டீஸ் போடுகிறீர்கள்" என்று குற்றம் சாட்டினார்.

அவர் கூறிய "யாருமே" என்பதில் பொதுமக்கள் மட்டுமின்றி மார்க்க அறிஞர்கள் எனப்படுபவர்களும் அடங்குவர்.

இதில் பேசுபொருள், நம் சமகாலத்தில் தர்காவிலுள்ள பெண்கள் வளாகத்தில் பெண்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த மணல் தரையில் நம் கண்ணெதிரே கல்லடுக்கிக் கட்டப்பட்ட போலிக் கபுரு எனும் பெருங் கொடுமையாகும். மாறாக, காட்டுப்பள்ளிக் கந்தூரியோ சூதுக் கொட்டையோ அல்ல.

ஒரு சமூகத்தில் பெருந்தீமைகள் நடக்கும்போது, அல்லாஹ் அந்தச் சமூகத்தவரை தண்டிக்க நாடினால், அதைச் செய்பவர்களை மட்டும் தண்டிப்பதில்லை. அந்தத் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிக்கும் நல்லவர்களையும் சேர்த்தே தண்டிப்பான் என்பதை இறைமறையின் 2:65 & 4:47 வசனங்கள் விளக்குகின்றன.

சமாதி வழிபாடுகளைப் பற்றிக் கடுமை காட்டி எச்சரிக்கும் ஹதீஸ்களை ஆலிம்சாக்கள் தம் ஜிப்பாப் பைகளில் பத்திரமாய் வைத்திருப்பதும் வெளிக்கொண்டு வருவதும் அவரவர் விருப்பம். ஆனால், சமாதியே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் போலிக் கப்ரு மோசடி பற்றி நமதூர் ஆலிம்களின் எதிர்வினை என்பது இதுவரை ஸீரோதான்.

மறுமை விசாரணையில் அல்லாஹ் இதைப் பற்றி ஆலிம்சாக்களிடம் கேள்வியே கேட்காமல் விட்டுவிடுவான் என்பதுபோல் ஆலிம்சாக்களுக்குப் புனிதம் கற்பிக்கலாகாது; அவர்களுடைய மௌனத்தை நியாயப்படுத்துதல் சரியன்று. ஆலிம்சாக்கள் என்றால் அவர்கள் விமரிசனத்திலிருந்து விதிவிலக்குப் பெற்றவர்கள் என்ற நினைப்பும் பிழையானது.

நன்றி!

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அன்பின் முஹம்மத் ஜெமீல் பின் முஹம்மத் ஸாலிஹ் காக்கா, வ அலைக்கும் ஸலாம்.

//நூஹு நபி 950 வருடங்கள் ஏகத்துவத்தை போதித்து வெறும் 80 பேர்தான் , இந்த ஓரிறைக்கொள்கையை நோக்கி வந்தனர் எணும்போது//

இதே போன்றது தான் என் கருத்துரையும், பொதுவாக, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணிகள் நபிமார்களின் பணிக்கு ஒப்பாகவே சொல்லப்படுவதை வைத்து யானும் அவ்வண்ணம் எழுதி விட்டேன்; தவற்றினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.