நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 17 11

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், நவம்பர் 13, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய பதிவில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களான அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் பற்றிய சிறப்புகள் குறித்து அல்லாஹ்  குர்ஆனில் கூறியதைப் போன்று நபி(ஸல்) அவர்களுக்கும் அந்த தோழர்கள் குறித்து சிறப்பித்து கூறியதில் சிலவற்றை நாம் பார்த்தோம். இந்த வாரம் முதல் ஒவ்வொரு நபித்தோழர் பற்றியும் அன்றைய சூழலின் சம்பவங்களின் மூலம் நாம் எவ்வகை படிப்பினைகளைப் பெறுகிறோம் என்பதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ் !

இஸ்லாம் மதீனாவுக்கு வருவதற்கு முன்பு மதீனத்து வாசிகளுக்கும், யூதர்களுக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்துள்ளது. மதீனாவாசிகள் யூதர்களோடு நெருங்கிய தொடர்போடு இருந்த காரணத்தால் இறை மார்க்கம் பற்றிய அறிவு அவர்களிடம் ஏற்பட ஒரு நல்ல வாய்ப்பாக இருந்துள்ளது. காரணம் யூதர்கள் மறுமையை நம்புகிறவர்கள், நபிமார்களைப் பற்றி பேசுவார்கள், மலக்குகளைப் பற்றி பேசுவார்கள், வேதங்களைப் பற்றி பேசுவார்கள், இறுதி நபி வருவார் என்ற முன்னறிவிப்புகள் பற்றி பேசுவார்கள். இஸ்லாம் வருவதற்கு முன்பு மதீனா வாசிகள் யூதர்களைப் படித்தவர்களாக கருதிக் கொண்டிருந்தார்கள், யூதர்களோடு நல்ல தொடர்போடு இருந்துள்ளார்கள் மதினாவாசிகள் என்பது ஒரு தனி வரலாறு.

மதீனாவில் ஏரளமான கோத்திரங்கள் இருந்துள்ளது, ஆனால் அவுஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள் தான் அதிக எண்ணிக்கையில் சமமாக இருந்துள்ளார்கள். அவுஸ் கோத்திரத்தின் தலைவராக ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள். கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவராக ஸாஃத் இப்னு உபாதா (ரலி) அவர்கள். இதில் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் மிக முக்கியமானவராக இருந்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது ஹஜ் செய்வதற்காக வரும் அந்த ஜாஹிலிய்யா காலத்து மதீனாவாசிகளிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். அல்லாஹ் அந்த அன்சாரிகளின் வென்மையான மனதில் இஸ்லாத்தை எளிதில் நுழையச் செய்தான். வந்தவர்களில் ஒரு சாரார் நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தில் இணைந்து மதீனா திரும்பினார்கள். பின்னர் இஸ்லாமிய அழைப்பு பணி செய்ய வேண்டும் என்பதற்காக மதீனாவாசிகளின் வேண்டுகோளை ஏற்று நபி(ஸல்) அவர்கள் முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்களை மதீனாவுக்கு அனுப்பி இஸ்லாத்தை மதீனாவாசிகளிடம் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். முஸ்ஹப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் அவுஸ் கோத்திரத்தின் தலைவர் ஸாஃத இப்னு முஆத் அவர்களின் சொந்தமான அஸ்அத் இப்னு ஜுராரா (ரலி) அவர்கள்.

ஸாஃத் இப்னு முஆத் அவர்களுக்கு ஒரு தகவல் வருகிறது, அவருடைய சொந்தம் அஸ்அதுக்கு எதிராக மதீனாவில் அவர் வசிக்கும் பகுதி மக்கள் பிரச்சினை செய்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைக்கிறது. தன்னுடைய கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரச்சினையா? அதனை என்னவென்று பார்க்க வேண்டும் என்று அவுஸ் கோத்திரத்தின் தலைவர் ஸாஃத் இப்னு முஆத் அவர்கள் அங்கு சென்றார்கள். ஆனால் மதினாவில் அஸ்அத் அவர்களின் வீட்டருகே ஒரு அமைதியான சூழல் மற்றும் முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்களின் இனிமையான குரலினால் திருக்குர்ஆன் ஓதப்படுகிறது. அந்த குர்ஆன் வசனங்கள், அவுஸ் கோத்திரத்தின் தலைவரின் மனதை உருக்குகிறது. வெள்ளை மனம் கொண்ட மதீனத்து அன்சாரி அல்லவா அந்த ஸாஃத் இப்னு முஆத், மனதை உருக்கும் அந்த குர்ஆன் வசனத்தைக் கேட்டவுடன் மனமாற்றம் அடைந்து, முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்களின் இரு கைப்பிடித்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்கள் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.

இஸ்லாத்தை ஏற்றவுடன், ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் அவுஸ் கோத்திரத்தின் பெரும்பான்மை மக்கள் முன்பு சென்று, அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள்.

“நீங்கள் எல்லோரும் என்னை மதிக்கிறீர்களா? என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறீர்களா?” 

“ஆம்” என்றார்கள் அந்த மக்கள். 

“அப்படியானால், உங்கள் ஆண்களோடும், பெண்களோடும் நான் பேசுவது ஹராம், நீங்கள் இஸ்லாத்திற்கு வரும் வரை” என்று ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் சொல்லுகிறார்கள்.

உடனே அந்த மக்கள் சொன்னார்கள் “நீங்கள் ஏற்ற மார்க்கத்தை புறக்கணிக்க எங்களுக்கு எந்த தேவையும் இல்லை, நாங்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்கிறோம்” என்று கூறியவர்களாக அவுஸ் கோத்திரத்தின் மிகப்பெரிய பிரிவான ‘பனு அப்துல் அஸ்கல்’ மக்கள் அனைவரும் தூய இஸ்லாத்தில் இணைந்தார்கள். 

ஸாஃத் இப்னு முஆத் அந்த மக்களுக்கு ஒரு சிறந்த தலைவராக நன்மதிப்போடும் அந்த கோத்திரத்திடம் திகழ்திருந்தார்கள், அதனால் அவர் சொல்லுக்கு மக்கள் கட்டுபட்டு இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். இந்த கட்டம் தான் இஸ்லாம் மதீனாவில் வலுப்பெற ஒரு காரணம் என்று சொன்னால் மிகையில்லை. அல்லாஹு அக்பர்!.

இஸ்லாத்தைப் பகிரங்கமாக பிரச்சாரம் செய்ய அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பொருத்தமான இடமாக மாறுகிறது மதீனா. ஸாஃத் இப்னு முஆத் போன்ற முக்கிய கோத்திர தலைவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு மதினா மாநகரில் பாதுகாப்பு அளிப்பதாக வாக்களிக்கிறார்கள். ஒரு மிகப்பெரிய கோத்திரத்தின் தலைவராக இருக்கும் ஸாஃத் இப்னு முஆத் நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்தார்கள். தான் தலைவாரக இருந்தாலும் தனக்கு தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே என்பதில் உறுதியாக இருந்து விரைவில் மரணத்தை எதிர்ப்பாத்தவராகவே வாழ்ந்துள்ளார்கள். இதனால் அவர்கள் வீரம் செறிந்த மாவீரராக மக்காவிலும் மதீனாவிலும் வலம் வந்தார். இதோ ஓர் உதாரணம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு ஒருமுறை உம்ரா செய்வதற்காக மக்கா சென்றார்கள் ஸாஃத் இப்னு மூஆத் (ரலி) அவர்கள். அங்கு உமையத் இப்னு கலப் என்ற மக்கத்து குரைஷி, இவருக்கு வியாபார ரீதியான நண்பர். அவரோடு தஃவாப் செய்து வந்தார். 

அப்போது அபுஜகல் கேட்கிறான், “நீ ஸாஃத் தானே?”

உடனே ஸாஃத் இப்னு முஆத்(ரலி) அவர்கள் “ஆம் நான் ஸாஃத்”. 

“முஹம்மதுக்கு அங்கு அடைக்கலம் கொடுத்து விட்டு இங்கு வந்திருக்கிறீரோ” என்றான் அபூஜகல். 

“ஆம் நான் அடைக்கலம் கொடுத்துள்ளேன்” என்றார் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.

குரைஷிகளின் கோட்டைக்குள் ஒரு இஸ்லாமியரின் தைரியம் அந்த நிகழ்வை கேட்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். தான் மதீனாவாசியாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் மக்காவில் தன்னுடைய வீரத்தனமான பேச்சை அந்த மக்கத்து குரைஷி காஃபிர்களிடம் நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வெகுச் சிலரில் ஸாஃத் இப்னு முஆத்(ரலி) அவர்களும் தான்.

தனக்கு ஷஹீத்துடைய அந்தஸ்து கிடைக்கவில்லையே என்று ஏங்கினார். இறைத்தூதரின் அன்புத் தோழர் ஸாஃத் இப்னு முஆத்(ரலி). உஹது யுத்தத்தில் பல தலைவர்கள் போர் களத்திலிருந்து சிதறுண்டு ஓடினார்கள், அதில் ஸாஃத் இப்னு முஆத்(ரலி) அவர்களும் ஓடினார்கள். அப்போது அனஸ் இப்னு நழ்ர்(ரலி) அவர்கள் முஆத்(ரலி) அவர்களிடம் சொன்னார்கள் “நான் உஹது மலையின் வாசத்தை நான் உணர்கிறேன்” நான் போருக்கு போகிறேன் என்று சொல்லி அந்த உஹதுப் போரில் ஷஹீதானார்கள் அனஸ் இப்னு நழ்ர்(ரலி) அவர்கள். நடந்த சம்பவத்தை ஸாஃத் இப்னு முஆத்(ரலி) பின்னார் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லி “அனஸ் இப்னு நழ்ர்(ரலி) அவர்கள் போன்று என்னால் செய்ய முடியவில்லையே யா ரசூலுல்லாஹ்” என்று சொல்லி வருத்தப்பட்டுள்ளார் அந்த அவுஸ் கோத்திரத்தின் தலைவர் ஸாஃத் இப்னு முஆத் (ரலி).

யூதர்கள் ஒப்பந்தத்தை மீறியதால் ஏற்பட்ட அஹல் யுத்தம் தான் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்களுக்கு மிகவும் மன நிம்மதியற்ற நிலையை உருவாக்கியது. இந்த யுத்தத்தில் ஸாஅத் இப்னு முஆத் அவர்கள் காயமடைகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸாத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் காயத்திற்கு அவர்களே மருத்துவம் செய்தார்கள். ஒப்பந்தத்தை மீறிய யூதர்களின் மேல் அதிக வெறுப்புணர்வோடு போர் காயத்துடன் இருந்த ஸாஃத் இப்னு முஆத்(ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்தார்கள் “யா அல்லாஹ் அந்த துரோகக் கூட்டம் பனு குரைலாவின் வீழ்ச்சியை நான் பார்க்க வேண்டும் என்னை மரணிக்க செய்துவிடாதே” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். 

பின்னர் நடைபெற்ற யுத்தத்தில் கைதிகளாக பிடிக்கப்பட்ட பனு குரைலா கோத்திரத்திற்காக தீர்ப்பு சொல்லும் பொறுப்பை நபி(ஸல்) அவர்கள் ஸாஃத் இப்னு முஆத்(ரலி) வாழங்கினார்கள். அதன் அடிப்படையில் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுக்க முன்வந்த பனு குரைலா கோத்திரத்தின் ஆண்கள் கொலை செய்யப்பட வேண்டும், பெண்கள் கைதிகளாக பிடிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள். அந்த தீர்ப்பை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார்கள்.

அகல் போரில் ஏற்பட்ட காயத்தில் பாதிக்கப்பட்டிருந்த  ஸாஃத் (ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அடிக்கடி வந்து விசாரித்து விட்டு ஸாஃத்தின் நிலையை நினைத்து கண்ணீர் வடித்துச் சொல்வார்களாம். இது போல் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களும் ஸாஃத்(ரலி) அவர்களின் நிலையைக் கண்டு அழுவார்களாம். இறுதியில் போரினால் ஏற்பட்ட காயம் ஆரவில்லை, ஸாஅத்திற்கு மரண வேதனை அதிகமான செய்தி கேள்விப்பட்டு நபி(ஸல்) அவர்கள் என்னுடைய ஸாஃத்திற்கு என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டவர்களாக அவரைச் சந்திக்க வந்தார்கள். ஸாஃத்(ரலி) அவர்கள் உடம்பில் கழுத்துப் பகுதில் உள்ள நரம்பு வெடித்து இரத்தம் பீரிட்டு பாய்ந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் தனக்கு விருப்பமான அந்த தோழரைக் கட்டி அனைத்தார்கள். நபி(ஸல்) அவர்களின் தாடியை ஸாஃத் அவர்களின் இரத்தம் நனைத்தது. பின்னார் கலிமா சொல்லியவர்களாக நபி(ஸல்) அவர்களின் மடியில் இருக்கும் அந்த உத்தம தோழர் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் உயிர் பிரிந்தது. ரலியால்லாஹு அன்ஹு வ ரலு அன்ஹு..

ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வுடைய அர்ஸ் குலுங்கியது என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மேலும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான ஒரு அடியார் இந்த உலகைவிட்டு பிரிந்து விட்டார் என்று ஜிப்ரியீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தார்கள்.

அல்லாஹ்வுடைய அர்ஸ் குலுங்கியது என்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. அதுவும் ஒரு நல்லடியாருக்காக என்றால், அது எவ்வளவு பெரிய விசயம். அந்த நல்லடியார் ஸாஃத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் வெறும் தனிமனிதராக இஸ்லாத்திற்கு வரவில்லை. ஒரு பெரும் பட்டாளத்தையல்லவா இஸ்லாத்தின்பால் இணைய காரணமானவராக இருந்துள்ளார். ஸாஃத் இப்னு முஆத்(ரலி) அவர்கள் மரணமானபோது அவர்களின் வயது 37.

ஸாஃத் இப்னு முஆத்(ரலி) போன்று இறை நம்பிக்கையுடைய ஒரு கோத்திரத் தலைவரை இவ்வுலகில் எடுத்துக்காட்ட முடியுமா?

இன்று தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்தை இரண்டாந்தரமாக வைத்து தங்களின் சுய வெறுப்புக்காக இஸ்லாத்தைப் பயன்படுத்துகிறார்களே, இந்த ஸஃஆத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு முறையாவது ஆராய்ந்து வாசித்திருப்பார்களா?

அற்பமான இவ்வுலக வாழ்வுக்காக ஆளுக்கொரு இயக்கம் வைத்து, ஆளுக்கு ஒரு சட்டதிட்டங்கள் வைத்துக் கொண்டு, உள்ளொன்றும், புறம்மொன்று பேசி வீண் விதண்டாவாதம் செய்து வரும் பெயர் தாங்கி முஸ்லீம் இயக்கத் தலைவர்கள் ஸாஃத் இப்னு முஆத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்றேனும் வாசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு முஸ்லீமுக்கு வார்டு உறுப்பினர் என்ற பதவி கிடைத்து விட்டால், பலர் ஏதோ எல்லா ஆட்சி அதிகாரங்களும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக எண்ணி உண்மையைப் பொய்யாக்கி தலை கால் புரியாமல் இஸ்லாமிய சிந்தனை இழந்து ஆடுகிறார்கள். ஆனால் தான் ஒரு மிகப்பெரிய கோத்திரத்தின் தலைவராக இருந்தாலும் தனக்கு இஸ்லாம் தான் உண்மை என்று தெரிந்திருந்ததும் தன்னுடைய கோத்திரத்தின் தலைவர் பதவியைக்கூட தூக்கி எறிய துணிந்த ஸாஃத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் இறை நம்பிக்கையின் உயர்ந்த நிலை! அற்பக் காரணங்கள் சொல்லி தூய இஸ்லாமிய சட்டங்களைப் புறக்கனிக்க, இல்லாத பொல்லாத சாக்கு போக்கு சொல்லும் நம்முடைய ஈமானிய நம்பிக்கை என்ன நிலை!? ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

யா அல்லாஹ் நம் எல்லோரையும், சத்திய சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் எப்படி வாழ்ந்தார்களோ அது போல் நம் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன்

11 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

அன்புத் தம்பி தாஜுதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முன்னர் அதிகம் அறியப் படாத ஹதீஸ்கள். பெரும்பாலான தஃவா பேச்சாளர்கள் ஒரே ஹதீஸையே பலமுறை மேற்கோல் காட்டுவர்;சற்றே சலிப்பு ஏற்படும்.

இப்படி அரிதான ஹதீஸ்களை வாசிக்கவே ஆர்வம் ஏற்படும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, தம்பி.

نتائج الاعداية بسوريا சொன்னது…

இதுவரை அறிந்திராத வரலாற்று தியாக சம்பவங்கள்

தொடர்ந்து தரவேண்டும் சகோ . தாஜுதீன் அவர்களே

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ஸாஃத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் பற்றிய தியாக சம்பவங்களை படிப்பினையாக அறியத்தந்தமக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

adiraimansoor சொன்னது…

ஒரு முஸ்லீமுக்கு வார்டு உறுப்பினர் என்ற பதவி கிடைத்து விட்டால், பலர் ஏதோ எல்லா ஆட்சி அதிகாரங்களும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக எண்ணி உண்மையைப் பொய்யாக்கி தலை கால் புரியாமல் இஸ்லாமிய சிந்தனை இழந்து ஆடுகிறார்கள்.

நீங்கள் ஏன்? வார்டு உருப்பினருக்கு போரீங்க, சிலபேர் சங்கத்துடன் உறுப்பினராகவும் இன்னும் சிலபேர் ஜமாத்து தலைவர்களாகவும் ஆகியபின்னர் இவர்களுக்கும் மேற்கூறப்பட்ட வார்த்தைகள் பொறுந்தும்

adiraimansoor சொன்னது…

உதாரணத்திற்கு சமீபத்திய நிகழ்வுகள் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் & தக்கவாறு பள்ளி ஜமாஅத்

Ebrahim Ansari சொன்னது…

அன்றைய வாழ்வின் வரலாற்று நிகழ்வுகளை இன்றைய அவலங்களுடன் தரும் இந்த ஒப்பீட்டுத் தொடர்
எப்படிப்பட்ட மனிதர்களோடு ஆரம்பித்த இந்த மார்க்கம்

இன்று எப்படிப்பட்ட மனிதர்களின் பின்னால் சிதறுண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.

தம்பி தாஜுதீன் அவர்களின் இந்தப் பணி மகத்தானது.

தாஜுதீன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட. அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரா..

Yasir சொன்னது…

இந்த சிறப்பான ஈமானுக்கு தீனி போடும் தொடரை எழுதும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குபவனாக ஆமீன்....

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

//இன்று தலைவர்கள் என்று சொலிக்கொண்டு........//

தங்களுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்த்து வரவம் அதன் மூலம் புகழையும் பொருளையும் தேடி வீதியிலே ஏறுநடை போட்டு நடக்க ஒரு ஏணி தேவை! அந்த ஏணிதான் ''இஸ்லாம்''!

இஸ்லாம் அவர்கள் வியாபாரத்திற்கு ஒரு Brand மட்டுமே!

தன் பெயருக்கு முன்னாள் 'ஹாஜி' என்றோ அல்லது பெயருக்கு பின்னால் ''ஹாஜியார்'' என்றோ ஒரு பட்டம்! அது போதும் மற்றதெல்லாம் தூக்கமுடியாத சுமை! Less luggage more comfort !

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்

Unknown சொன்னது…

விருத்தாசலம் பகுதி மக்களின் வாழ்த்துக்கள்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு