Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள். 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2014 | ,

அண்மைக் காலமாக, நமதூரில் குறிப்பாக திருமண அழைப்பிதழ்களிலும் வேறு சில நிகழ்ச்சிகளின் நிகழ்வுகளின் இடத்திற்கான முகவரிகளிலும் சில புதிய தெருப் பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன. ஊரைச் சார்ந்த பலருக்கு இந்த புதிய தெருக்கள் எங்கே இருக்கின்றன என்பது புரியவில்லை. விபரம் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் பழைய தெருப் பெயர்களே என்றும் சிலருடைய ஆசையின் காரணமாக பேரூராட்சியின் தீர்மானமோ ஒப்புதலோ இல்லாமல் தாங்களே தெருக்களுக்குப் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. குறிப்பிட்ட சில குடும்பத்தார் அதிகம் வாழும் பகுதி என்பதால் இப்போது வழங்கப் படுகிற வரலாற்றுப் பெயர்களை தங்களின் இஷ்டப்படி மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்றும் பரவலாக அறியப்படுகிறது. 

உதாரணமாக ஆசாத் நகர் என்று ஒரு தெருப் பெயர் வருகிறது. விசாரித்தால் அது தரகர் தெரு. அதே போல் ஓ.கே.எம். லைன் என்று ஒரு தெருப்பெயர் வருகிறது. விசாரித்துப் பார்த்தால் அது சாயக்காரத்தெரு.

தெருக்களின் பெயரை தங்களின் இஷ்டப்படி மாற்றுபவர்கள் அடிப்படையில் ஒரு தவறைச் செய்கிறார்கள். அதிராம்பட்டினம் என்பது வரலாற்று சிறப்புடைய ஊர். வரலாற்றில் இடம் பிடித்த ஊர். இந்த ஊரின் தெருக்களின் பெயர்களும் வரலாற்றுத் தொடர்புடையவை. இந்தத் தெருக்களின் பெயர்கள் இன்னும் வரும் காலத்துக் கெல்லாம் நமது சந்ததிகளுக்கும் இந்த வரலாற்றை விளங்க வைக்கும் வல்லமை பெற்றவை. இவை வெறும் வெற்றுத் தெருப் பெயர்கள் அல்ல அவைகள் வரலாற்றின் வெளிச்சங்கள். 

ஊரின் தொடக்கத்தில் கடல்கரைத் தெருவே ஒரு காரணப் பெயர். இன்று ரயில்வே ஸ்டேஷன் அமைந்திருக்கும் இடம் வரை கடல் அலைகள் தொட்டு முத்தமிட்டுச் சென்றனவாம். அதனால் அது கடல் கரைத்தெருவானது. கடல்கரைத் தெருவின் ஒரு சிறு பகுதியிலேயே அன்றைய அதிராம்பட்டினத்தில் ஜீவனாகத் திகழ்ந்த படகு தொழிர்சாலை விளங்கி படகுகளை உருவாக்கியோர், படகுகளை சரி செய்தோர் ஆகியோர் வாழ்ந்த பகுதிக்கு வத்தைக்காரத் தெரு என்று பெயர் வந்தது. கடல் கரைகளில் கிடைக்கும் மட்டிகளின் சிப்பிகளை நீர்த்து சுண்ணாம்பு உண்டாக்கி விற்பவர்கள் வாழ்ந்த பகுதி சுண்ணாம்புக்காரத் தெருவானது. அதோடு ஒட்டிய பகுதிகள் கடல் வாணிகம் செய்து வந்த செட்டியார்கள் வாழ்ந்து வந்ததால் வாணியச் செட்டி தெரு என்று ஆகி பின்னர் வாணியத் தெரு என்று மருவியது. கடல்கரையோரம் வாழ்ந்து வந்த மக்கள் வசித்த பகுதி பெரும்பான்மை மீனவர் பகுதி அது கரையூர் தெருவானது. 

கடற்கரையில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு லேபர் காண்ட்ராக்டர்கள் அதற்காக ஆள்களைத் திரட்டிக் கொடுக்கும் ஏஜெண்டுகள் வசித்த பகுதி அதற்காக கமிஷன் வாங்கியதால் தரகு ஏஜெண்டுகள் புரோக்கர்கள் என்று அழைக்கப்பட்டதால் அதுவே தரகர் தெருவானது. ஏற்றுமதி இறக்குமதி ஆகும் சரக்குகளை பாதுகாப்புடன் வைக்க ஊரெங்கும் கிட்டங்கிகள் இருந்தாலும் ஆறுமுகம் என்பவர் நடத்திவந்த கிட்டங்கி இருந்ததால் ஆறுமுகம் கிட்டங்கித் தெரு என்றானது. ஊரில் நெருக்கடிகள் ஏற்பட்டதால் மக்கள் பல இடங்களில் குடியேற ஆரம்பித்து புதிய தெருக்கள் உண்டாயின அதனால் புதுத்தெருவும் புதுமனைத் தெருவும் ஏற்பட்டன. ஊரின் மேற்குப் புறத்தில் இருந்த காரணத்தால் மேலத் தெருவும் அதற்கு கிழக்குப் புறத்தில் இருந்ததால் கீழத்தெருவும் ஊரின் நடுவில் இருந்ததால் நடுத்தெருவும் முதன்முதலில் அரசு ஆஸ்பத்திரி அமையப்பட்ட தெருவாதலால் ஆஸ்பத்திரி தெருவும் நெசவுத் தொழில் செய்தோர் நிரம்ப வசித்ததால் நெசவுத்தெருவும் பெயரிட்டு வழங்கப் பட்டன. 

இவ்வாறே ஆலடித்தெரு, செக்கடித் தெரு, வாய்க்கால் தெரு, கிட்டங்கித் தெரு, புதுக்குடி, தட்டாரத் தெரு, செட்டித் தெரு, பழஞ்செட்டித் தெரு, பிள்ளைமார் தெரு, ஆப்பக்காரத் தெரு என்கிற அனைத்துத் தெருப் பெயர்களுக்கும் ஒரு வரலாற்றை சுமந்து சுமந்தபடி நிற்கிற பின்னணி உண்டு. 

ஊரின் வளர்ச்சியை முன்னிட்டு காலியாகக் கிடந்த இடங்கள் மனை போட்டு விற்கப்பட்டு சில புதிய நகர்கள் உருவாயின. அந்த நகர்களுக்குப் பெயர்கள் யாவும் அந்தந்த நகர்கள் அமையப்பெற்ற இடத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்களின் பெயரில் வழங்கப் பட்டன. மெயின் ரோடு பகுதியில் முன்னர் ராஜ ராஜேஸ்வரி டூரிங்க் டாக்கீஸ் இருந்த பெரிய திடல், தொழில் அதிபர் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் பெயரால் அவர்களுடைய பிள்ளைகளால் ஏ . ஜே நகர் என்றும் இராஜாமடம் ரோடு பகுதியில் கல்லூரிக்கு எதிரே இருந்த வயல்கள் சூழ்ந்த பகுதியின் புதிய மனைப் பிரிவுகள் அதன் உரிமையாளரான மர்ஹூம் மு.செ.மு. அப்பா அவர்களின் பெயரால் எம்.எஸ். எம். நகர் என்றும் சி. எம். பி. லைனில் மர்ஹூம் மாப்பிள்ளை சம்சுதீன் அவர்களுக்கு சொந்தமான இடத்தின் மனைப் பிரிவு அவர்களின் குடும்ப விலாசமான செ. அ .மு . என்கிற அடையாளத்துக்கு எஸ் . ஏ . எம் நகர் என்றும் வழங்கப் பட்டு வருவது நாம் காணும் காட்சிகள். 

இவைகளைத் தவிர வேறு புதிதாக உருவாக்கப் பட்ட நகர்கள் சில வரலாற்றுத் தொடர்புடைய பெரிய மனிதர்களின் பெயரால் பெயர் சூட்டப் பட்டு பெருமை படுத்தப் பட்டன. உதாரணமாக, தரகர் தெரு பள்ளிக்கும் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்கும் முன்பு பெரிய திடல் இருந்தது. தொடர் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் வருடாவருடம் அங்கு நடத்தப் படும். நாளடைவில் மக்கள் தொகையின் வளர்ச்சியை முன்னிட்டு அந்தப் பகுதியும் ஒரு நகர் ஆனது. அதற்கு அருகில் பன்நெடுங்காலத்துக்கு முன்னரே கட்டப் பட்டு இருக்கும் தர்ஹாவில் அடங்கப் பட்டதாக நம்பிக் கொண்டு இருக்கும் ஹாஜா ஒலி அவுலியா அவர்களின் பெயரை சூட்ட நினைத்த மக்கள் அந்தப் பகுதியை ஹாஜா நகர் என்று பெயர் சூட்டி அழைத்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதே போல் கல்லூரிக்கும் செடியன் குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உதயமான புதிய நகருக்கு பெருமானாரின் தோழரான ஹஜரத் பிலால் ( ரலி ) அவர்களின் பெயரால் பிலால் நகர் என்று மகிழ்வுடன் பெயர் சூட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

ஊருக்கு மட்டுமல்ல மாவட்டத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே தனது ஒட்டு மொத்த சொத்துக்களையும் வாரி வழங்கிய வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்களின் பெயரால் இதுவரை நமது ஊரில் ஒரு நகர் பெயர் கூட சூட்டப்படவில்லை என்பது நாம் எவ்வளவு நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறோம்(!!) என்பதற்கு உதாரணம். அதே போல உயர் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியை உருவாக்கிக் கொடுத்த கல்வித் தந்தை மர்ஹூம் எஸ். எம். எஸ். ஷேக் ஜலாலுதீன் அவர்கள் பெயரிலும் அவர்களைத் தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் பதவிக்கு வந்து பணியாற்றிய மர்ஹூம் எம். எம். எஸ். ஷேக் தாவூது மரைக்காயர் அவர்கள் பெயரிலும் கூட சாலைகளோ, லைன்களோ, நகர்களோ இல்லை. மற்றும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகழ் பெற்ற கவிகள் நமது ஊரில் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பெயரில் கூட நினைவுக்கு ஊர் ஒன்றும் செய்யவில்லை. உதாரணமாக அண்ணாவியார் அவர்கள் தியாகி எஸ். எஸ். இப்ராகிம் அவர்கள். 

வரலாற்றிலோ, இந்திய சுதந்திரப் போராட்டத்திலோ அல்லது தனது சொந்த இடத்தை ஊர் மக்களுக்கு மனை போட்டு விற்ற முறையிலோ இடம் பெறாமல் தனிப்பட்ட அன்புக்காக ஊரின் வரலாற்றோடு தொடர்புடைய சாயக்காரத் தெருவின் பெயர் மாற்றி அழைக்கப்படும் நிலை சரியானதல்ல என்பது நமது கருத்து. 

அதே போல் வரலாற்று சிறப்பு மிக்க தரகர் தெருவின் பெயரை ஆசாத் நகர் என்று மாற்றப் படுவதும் பல வரலாறு விரும்பிகளுக்கு உடன்பாடானதல்ல. மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெயர் மீது ஆசை இருப்பது விருப்பத்துக்குரியது ; வரவேற்கத்தக்கது. அதே நேரம் அப்படிப் பட்ட ஒரு பெருமகனாரின் பெயரை ஒரு வரலாற்றை மறைத்துவிட்டு வைக்க வேண்டாம் என்று கோருகிறோம். வேண்டுமானால் இன்னொரு புதிய நகர் உருவாக்கப் படுமானால் அந்த நகருக்கு ஆசாத் நகர் என்கிற பெயரை வைக்கலாம் என்கிற ஆலோசனையும் பரிசீலிக்கத் தக்கது. 

மறைந்த தங்களின் பெரியவர்களின் பெயர்களை அந்தந்தக் குடும்பத்தினர் சூட்ட வேண்டுமென்று நினைத்தால் ஏ. ஜே. நகர் போல் எஸ் . ஏ. எம் நகர் போல் தங்களின் சொந்த இடத்துக்கு அவர்கள் விரும்பும் பெயர் சூட்டி மனை போட்டு விற்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காது. தனிப் பட்ட குடும்பங்கள் மொத்தமாக வாழும் ஒரு பகுதி என்பதனாலேயே வழங்கிக் கொண்டு இருந்த பெயரை மாற்றி தாங்களே பெயர் சூட்டிக் கொள்ளும் வழக்கம் ஆரம்பமானால் ஒவ்வொரு பகுதிகளிலும் அப்படி சூழ்நிலைகள் உருவாகும். இதனால் எந்தத் தெரு எங்கே இருக்கிறது என்கிற குழப்பம் உண்டாகும்.

மேலும் தெருப் பெயர்கள் அல்லது நகரின் பெயர்கள் சூட்டப் படும்போது அது பேரூராட்சிமன்றத்தின் தீர்மானத்தின்படியே செய்யப்படவேண்டும். ஊரின் வரலாற்று சிறப்புமிக்க பெயர்களுக்கு சில தனி நபர்களின் ஆசையால் பங்கம் வரக்கூடாது என்பதே இப்பதிவின் நோக்கம்.

அதிரையின் வரலாறும் தொன்மையும் அதிரையர்களால் என்றென்றும் கட்டிக் காக்கப் படுமாக! அதே போல் நாகரிக உலகில் நன்கு தழைத்து வளர்ந்திருக்கிற நாம் தெருப் பாகுபாடுகளை மறந்து ஒரே ஊராக இணைந்து ஊருக்கு வேண்டிய பொதுக் காரியங்களில் ஒன்றுபட்டு கை கோர்த்து நிற்போமாக ! 

அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அவர்களின் காலத்தால் அழியாத கவிதையுடன் இந்த சிந்தனையோட்டத்தை நிறைவு செய்வது நலமாக இருக்கும். 

யாதும் தெருவே; யாவரும் கேளிர் !

அனைத்துத் தெருக்களும்
அதிரையின் கருக்கள்
கருத்துச் சூழ்கொண்ட
கண்ணியத்தின்உருக்கள்

அரவணைத்துச் சென்றால்
அத்துணைத் திசையும்
அதிரைக்கு இசையும்

இத்தனை நாட்களாய்
இங்குதான் இருந்தோம்
இன்றுபோல் என்றுமே
இணையாது இழந்தோம்

ஒற்றுமை யிருந்தும்
ஒழுகாது உழன்றோம்
ஒழுகும் குடிசையென
ஊரே நனைந்தோம்

இங்கிந்த இளைஞர்கள்
இல்லாது இருந்தால்
இன்னும் இழுத்திருக்கும்
இணைப்பெனும் இன்பம்

செயல்திட்ட மொன்று
செதுக்கும் இவ்வேளையில்
சிந்தையில் கொண்டிட
சீர்திருத்தங்கள் சில

தெருக்களைப் பெருக்கனும்
தெரு விளக்கெரியனும்
ஈக்களும் கொசுக்களும்
இல்லாமல் பண்ணனும்

நீர் நிலைகளெல்லாம்
தூர்வாரி நிறைக்கனும்
கழிவுநீர் கலக்காத
கால்வாய்கள் ஓடனும்

படிக்கவும் பயிலவும்
போதனை செய்யனும்
படிப்பின்றிப் போனாலோ
தொழில் பயிற்றுவிக்கனும்

மாற்றுக் கருத்தற்ற
மார்க்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்

நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்

ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊராரின் இவ்வமர்வால்
அதிரைக்குக் கிழக்கு

அதிரைக்காரர்களின்
அமீரகக் கூட்டமைப்பு
ஆழ வேர்விடனும்
வளைகுடா உலகமைப்பென
வளர்ந்து வியக்க வைக்கனும்

எல்லா முஹல்லாவையும்
இணைக்கும் நோக்கம்
நானிலம் முழுவதும்
நல்லா வளரனும்
அல்லாஹ் வளர்க்கனும்!

-சபீர்
-Sabeer abuShahruk,

அதிரைநிருபர் பதிப்பகம்

18 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

A detailed article on the streets and their naming and nice poem for unity.

Being proud of the town can be better than being proud of a street.

Simarly

Being proud a full human rather than being proud of a hand or leg.


Actually the town can be considered as full human. But streets are like parts of a same body. We know the hadees related to parts of a body and its harmony to explain the unity of muslims.

Lets think in big circle instead of thinking in mini circles and limited scope.

Thanks and best regards
B.Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

என்ன அது ? சாயக்காரத் தெரு பெயர் மாற்றப் பட்டுள்ளதா?

சாயக்காரத்தெருவைச் சேர்ந்த காதர்ஷா என்பவர் பின்னாளில் குதிரை வண்டி வைத்து பிழைப்பு நடத்தியவர் .

பர்மாவில் நேதாஜி நடத்திய ஐ. ஏன். ஏ யில் பணியாற்றியவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இவருக்கு பட்டயம் வழங்கப் பட்டது. தியாகிகள் பென்ஷன் கூட வாங்கி வாழ்ந்து மறைந்தார்.

சாயக்காரத்தெருவின் பெயரை ஓ கே எம் லைன் என்று மாற்றுமளவுக்கு ஓ கே எம் என்பவர் யார் என்று என் அளவுக்கும் அறிவுக்கும் வயதுக்கும் தெரியவில்லை. விளங்கவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கவும்.

எனக்குத் தெரிந்து கடற்கரைத் தெருவில் இருந்து மர்ஹூம் ஒகேஎம் காக்கா அவர்களின் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் குடியேறி இருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய பகுதிக்கு புதிய பெயர் சூட்டப் படவேண்டிய அவசியம் இருந்தால் அதற்கு காதர் முஹைதீன் நகர் என்றே பெயர் சூட்ட வேண்டும்.

காரணம் அந்த இடங்கள் தரகர் தெருவைச் சேர்ந்த காதர் முகைதீன் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த வயல் வெளிகளாகும். அந்த வயலில் நெல் அறுவடை செய்வதை நான் பார்த்து இருக்கிறேன். இன்று கனரா வங்கி இருக்கும் இடம் வரை அந்த வயல் இருந்தது.

இந்தக் காதர் முகைதீன் அவர்கள் வேறு யாருமல்ல. இந்தத் தளத்தின் பிரபலமான எழுத்தாளர்" படிக்கட்டுகள் ' புகழ் தம்பி ஜாகிர் உசேன் உடைய தாய்வழி அப்பாதான் அவர்கள்.

ஒரு தகவலுக்கு சொன்னேன். மற்றபடி பாரம்பரியமான தெருப் பெயர்களை மாற்றுவது சரியல்ல.

adiraimansoor said...

//அதே போல் நாகரிக உலகில் நன்கு தழைத்து வளர்ந்திருக்கிற நாம் தெருப் பாகுபாடுகளை மறந்து ஒரே ஊராக இணைந்து ஊருக்கு வேண்டிய பொதுக் காரியங்களில் ஒன்றுபட்டு கை கோர்த்து நிற்போமாக ! ///

இதை. மீண்டும் மீண்டும். நாகூர் மக்களுக்கு அழுத்தி சொல்லக்கூடிய வார்த்தை

ZAKIR HUSSAIN said...

நான் தரகர்தெருவைச்சார்ந்தவன். இதுவரை நான் 'ஆசாத் நகர்' என்று குறிப்பிட்டதில்லை. தெருவை வைத்து பெறுமையடிக்கவோ , சிறுமை அடையவோ தெருப்பெயரில் ஒன்றுமில்லை.


எல்லாத்தெருவிலும் மண் இருக்கிறது. எல்லாத்தெருவிலும் மையத்தாங்கரை இருக்கிறது.

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது.

sabeer.abushahruk said...

தெருக்களின் காரணப்பெயர்கள் பற்றிய அலசல் ஒரு புது முயற்சி.

வெல் டன் அ.நி.

sheikdawoodmohamedfarook said...

அ.நி யின் சாய்ஸ் எப்பொழுதும் பசுமரத்தில் அடித்தஆணி போல நச்சென்றுபாயும்!. நல்லதோர் அலசல் கண்டேன்!

sheikdawoodmohamedfarook said...

தமிழ்நாட்டில்தொழில் ரீதியான தெருப்பெயர்கள் மதுரைக்கு அடுத்து அதிரையில்தான் அதிகம் உண்டுயென்று ஒரு முதியவர் என்னிடம் சொன்னார்.எனவே சாயக்காரத் தெருவின் சாயத்தை வெளுக்க வைக்காதீர்கள்.அதன் ஒரிஜினல் சாயம் ஒரிஜினல்லாகவே இருக்கவிடுங்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha Allah, awesome job done by AN here along with the fantastic poem of our sabeer kaka highlighting unity.

Our home town's each street is reflecting it's history as well as it's ancestors. So, let it be as it's without any change.

நடுத்தெருவு நடுவுல ஒரு முடுக்கின் பெயர் அஞ்சு முடுக்கு அது எப்படி?

பெரும்பாலும் ஊரின் முக்கிய நபர்கள் இறந்த பின் தான் ஏதேனும் தெருவுக்கு அவர் பெயர் சூட்டப்படுகிறது. ஆகையால் கம்பன் ரயில் ஓடிய பகுதிக்கு செத்துப்போன கம்பன் நினைவாக கம்பன் தெரு என்று வைக்கலாம்.

ஊரில் ஒற்றுமை செத்துப்போய் விட்டதோ என எல்லோரும் ஆங்காங்கே முணகுவதால் ஏதேனும் தெருவுக்கு ஒத்துமை தெரு என்று வைக்கலாம்.

இப்படி நம் ஊரில் இதுவரை இழந்த பல் பொக்கிஷங்களின் நினைவாக புதிய தெருக்களுக்கு பெயர் சூட்டிக்கொள்ளலாம்.

எனவே நம் ஒவ்வொரு தெருவும் அதனதன் பெருமை,வாசத்துடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அதை நாசம் செய்யும் மனிதர்கள் சிலரையும் தாங்கிக்கிண்டு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தெருக்களின் காரணப்பெயர்கள் பற்றிய அலசல் ஒரு புது முயற்சி.

புதிய மனைகள் உருவாக்கும் போது முக்கியஸ்தர்கள் பட்டியலில் தமிழ் இணைய அறிஞர் மர்ஹூம் உமர்தம்பி அவர்களையும் இணைக்க வேண்டும்.

Ebrahim Ansari said...

தம்பி மு செ மு நெய்னா ! //நடுத்தெருவு நடுவுல ஒரு முடுக்கின் பெயர் அஞ்சு முடுக்கு அது எப்படி?//

நீங்கள்தான் நடுத்தெருவாசி. விசாரித்துப் பதியுங்கள். MAY BE ANOTHER HISTORICAL INTERESTING.

தம்பி ஜகபர் சாதிக் அவர்களின் கருத்து கவனிக்கத் தக்கது. புதிதாக மஸ்னி நகர் என்று ஒன்று விளம்பரப் படுத்தப் படுகிறது. இதன் பொருள் தெரியவில்லை.

இப்படிப் பட்ட புதிய நகர்கள் பெயர் சூட்டப் படும்போது தலையங்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சில பெரியவர்களின் பெயர்களை சூட்டுவது பற்றி முனைவோர்கள் பரிசீலிக்கலாம்.

அப்துல்மாலிக் said...

தொழில் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தெருக்களின் பெயர்கள் தொன்று தொட்டு சிறப்பிக்கப்படுகிறது. நான் நெசவுத்தெருவாசி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையே,

பி.கு. நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் மேலத்தெரு நண்பர்கள் குட்டிமாமா கடை இருக்கும் பகுதியை “ஆஸாத்” நகர் என்று அழைத்தார்கள், இன்னும் அப்படிதான் இருக்கா என்று தெரியவில்லை. பாரம்பரியங்கள் வரும் சந்ததினருக்கும் அறியத்தரவேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முக்கிய விடயம் !

தெருப் பெருமையை போற்ற வல்ல இந்தப் பதிவு ! ஒவ்வொரு தெருவுக்கும் இருக்கும் பாரம்பரியங்களை காக்கப்பட வேண்டும் அதோடு அந்தந்த தெருக்களின் குடியேற்றம் மற்றவைகளுக்கு எவ்வகையில் சலைத்த-தல்ல என்பதை எடுத்துச் சொல்லவே இந்த நோக்கம் !

சமீபத்தில் ஆற்று நீரை ஆளாளுக்கு பங்கீடு செய்ய போட்ட போட்டி அவர்கள் மீது சற்றே எரிச்சல் ஏற்பட்டது, தண்ணீர் வந்த முதல் நாள் வரை யாருமே எடுக்காத முயற்சியை ஒருசாரார் எடுத்தனர் சரி, அதனை மற்றவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அல்லது ஃபோட்டோ போட்டிக்கும், போட்டி அரசியலை உள்ளுக்கிழுத்தது வேதனையே !

Shameed said...

அவங்கதான் வரலாற்றை மறைக்கின்றார்கள் என்றால் இவர்களும் சுய பெயரை தம்பட்டம் அடிக்க ஆளாளுக்கு கெளம்பிட்டா பிறகு அதிரையின் வரலாறு காணாமல் போய் விடும்

Yasir said...

அதிரையின் பலமே அனைத்து தெருக்களின் ஒற்றுமையே.....குலம் கோத்திரம் பார்க்காமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வோம்...வாழும் காலம் குறைவே..அதனை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்வோம்

Yasir said...

தெருக்களின் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் ...முன்னதாக உள்ள பெயர்களை மாற்றுவது அழகில்லை...புதிதாக வரும் நகர்களுக்கு..ஊருக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயர்களை வைக்க வேண்டும்

sheikdawoodmohamedfarook said...

கல்யாண பத்திரிக்கையில்தான் மாமன் மச்சான் பேரே போட்டு அவங்களை கௌரவ படுத்தினோம். இப்போ தெருவுக்கும் அவங்க பேரே போட ஆரம்பிச்சுட்டாங்க. இப்புடியே போனா இனி அதிராம்பட்டினம்என்ற பேருக்கு பதிலா தன் மருமகன் பேரே சூட்டு வாங்களோ? வரலாற்றை வாழவிடுங்கள்.அங்கேதான் நம் வருங்கால தலைமுறையினர் இந்த மண்ணின் மணம் நுகர முடியும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு