நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறக்க முடியாத மருத்துவர்கள்...! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், அக்டோபர் 27, 2014 | , ,

மருத்துவம், மருத்துவமனை பற்றிய கருத்தாய்வும் கருத்துக் கணிப்புகளும் நமதூரில் பேசப்படும் தருணமிது.  இந்நேரத்தில், நம்மூரின் பழமை பற்றியும் ஓர் ஆய்வு தேவைதானே?

கலந்தர் மரைக்காயர்:  (இவர்களைப் பற்றி ஏற்கனவே 'அதிரை வரலாறு' வலைப்பூவில் தனிக் கட்டுரை இடம்பெற்றுவிட்டது.  அதில் இடம்பெறாத சில தகவல்கள் மட்டும் இங்கே:)

கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார்.  கலந்தர் மரைக்காயரின் இளைய மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்.  அவரும் சில நேரங்களில் 'தொப்பிக்குள் செந்தூரம் இருக்குது; தருகிறேன்' என்பார்.  மக்கள் பைத்தியத்திடம் எப்படி வாங்குவது என்று தயங்குவார்கள்.  அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது.

செந்தூரம் எனும்போது, சில தனித்தனி வீடுகளில் செந்தூரம் விற்பனையும் நடந்ததை அறிவேன்.  அவற்றுள் 'செந்தூரக்கார வீடு' என்று பெயர் பெற்றது, இப்போதுள்ள எனது அண்டை வீடு.  'கூனா வீட்டு செந்தூரம்' என்பதும் நடுத்தெருப் பகுதியில் பெயர் பெற்ற ஒன்றாகும்.  அன்றைக்கு வந்ததோ, ஒரு சில நோய்கள்தாம்.  அவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து, சென்தூரம்தான். 

பெத்தையன்:  இவர் ஒரு நாட்டு வைத்தியர்.  இந்துவாக இருந்தாலும், நமதூர் முஸ்லிம் மக்களுடன், குறிப்பாக நமதூரின் சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.  நாடி பிடித்து நோயைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்.  மடியில் ரெடியாகச் சில மருந்துகளை வைத்திருப்பார்.  சற்று முதிர்ந்த நோய்களாயிருந்தால், அடுத்த நாள் செய்துகொண்டு வருவதாகச் சொல்லிப் போவார்.  கழுவித் துவைத்துப் பெட்டி போட்டு மடிப்புக் கலையாத வெண்மையான உடையுடன், தோளில் அங்கவஸ்திரத்தொடு காணப்படும் அந்தக் கருமைத் தோற்றமுடைய வைத்தியர் பெத்தையன், காசில்லா ஏழைகளுக்கும் காசுள்ள பணக்காரர்களுக்கும் தன மருத்துவச் சேவையைப் பாகுபாடின்றிச் செய்து பயன் விளைவிப்பார்.

இவர் அதிரை முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்ததன் பிரதிபலனோ என்னவோ, அல்லது இவரால் பயன் பெற்ற நல்லடியார் ஒருவரின் துஆவினாலோ  என்னவோ, அவருடைய மகன் இஸ்லாத்தைத் தழுவி, இன்று முஸ்லிமாக வாழ்ந்துவருகின்றார்.  இப்போது அவரும் நாட்டு வைத்தியத் தொழிலை மேற்கொண்டு, தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

இக்ராம் டாக்டர்:  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலாக அதிரைக்கு வந்த ஆங்கில மருத்துவர் இவர்தான்.  அக்காலத்தில், அதிரையில் இவரிடம் மட்டுமே 'அம்பாசிடர்' கார் இருந்தது.  இப்போது இருக்கும் 'மக்தூம் பள்ளி'யின் இடத்தில்  அன்று 'ரிஜிஸ்டர் அபீஸ்' இருந்தது.  அந்த வரிசையின் கடைசிப் பகுதியில் டாக்டரின் மருத்துவமனை இருந்தது.  இக்ராம் டாக்டர் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  உருது தாய்மொழி.  அதிரையில் குடும்பத்தோடு குடியேறி வாழ்ந்து வந்தார்.  மிகவும் கண்டிப்பான ஆள்.  ஆனால், 'கைராசிக்காரர்' என்று பெயரெடுத்தவர்.  அதிரையின் செல்வந்தர் வீடுகளுக்கும், அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் முதிர் நோயாளிகளுக்கும் மட்டும், அழைப்பின் பேரில் காரில் வந்து சிகிச்சையளிப்பார்.  வீட்டு வருகைக்காகக் கூடுதல் கட்டணம் ரூபாய் ஐந்து சேர்த்துக் கொடுக்கப்படும்.  அவரிடம் கம்பவுண்டராகப் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் இப்போதும் உள்ளார், செக்கடி மேட்டில் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு.  டாக்டரும் அப்துர்ரகுமானும் திரும்பி வந்த பிறகுதான், மருத்துவமனை மீண்டும் இயங்கத் தொடங்கும்.  அதுவரை நோயாளிகள் பொறுமை காப்பார்கள்!  இந்த டாக்டரை விட்டால் வேறு டாக்டர் இல்லை என்ற நிலைக்காக அன்று; இவர் கைராசிக்காரர் என்பதால்!

நாங்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளி நாட்களில் நடுத்தெருவில் 'இக்பால் நூல் நிலையம்' என்றொரு நூலகம் நடத்திவந்தோம்.  அந்த நேரத்தில்தான் அல்லாமா இக்பால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது.  இளைஞர்களான இல்லை, சிறுவர்களான எம் உள்ளங்களில் நமதூரில் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா நடத்தினால் என்ன? என்ற உதிப்பு!  களத்தில் இறங்கிவிட்டோம்!  இடம்: மரைக்காபள்ளி முக்கூட்டு முனை!  பெரிய பந்தல்!  பேச்சாளர்கள்:  டாக்டர் இக்ராம் (உர்து).  'இறையருட்கவிமணி', பேராசிரியர் கா. அப்துல் கபூர் M.A. (தமிழ்).  மாநாட்டுத் தலைவர்:  அ. இ. செ. முஹிதீன் B.A.  இன்னும் உள்ளூர் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்ற, மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது!

டாக்டர் நெடுங்காடி:  மருத்துவ வசதிகள் குறைவாயிருந்த அந்தக் காலத்தில், நமதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வந்து சேர்ந்தார் டாக்டர் நெடுங்காடி.  இவருடைய பொதுநலச்  சேவையின் மூலம் அரசு மருத்துவமனை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மிகக் குறைவு.  அவற்றை வைத்துக்கொண்டு, அவர் தரும் சிகிச்சைகள் அபாரமானவை.

நான் மிகச் சிறிய வயதுடையவனாக இருந்தபோது, என் தாயாருக்கு உள்ளங்கையில் ஒரு சிறிய கட்டி.  அதை டாக்டரிடம் காட்டியபோது, ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்.  இப்போது இருப்பதைப்போல், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.  ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்துத் தம் பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினார் டாக்டர்.  என் கண்கள் நீர் வடிக்க, என் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  கத்தி வைத்தாரோ இல்லையோ, கத்தத் தொடங்கிவிட்டார்கள் என் தாய்.  "ஐயா!  உட்ருங்கோ!" என்று கத்தியபோது பிஞ்சுப் பருவத்தினன் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?  என்னைத் தடுத்துப் பிடித்து நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் பக்கத்தில் நின்றவர்கள்.  அந்தக் காலத்தில் ஆபரேஷன் எல்லாம் தியேட்டரில் நடக்காது.  ஒரு விதமான rude treatmentதான்!  அப்படி இருந்தும், நோய்கள் குணமாகின!  டாக்டர் நெடுங்காடியும் கைராசிக்காரர்தான்.  அப்போதிருந்த dedication, kindness, concentration எல்லாம் மருத்துவர்களிடம் இப்போது குறைவு.   

ஜெர்மன் டாக்டர்:  இந்தப் பெயரில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூறிக்கொண்டு நமதூர் தட்டாரத் தெருவில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் 'தொழிலை' ஆரம்பித்தார்.  ஒரு நாள் திடீரென்று குழந்தையாக இருந்த என் மருமகளுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.  நானும் என் நண்பர் அப்துல் கபூரும் தூக்கிக் கொண்டு ஓடினோம், இந்த ஜெர்மன் டாக்டரிடம்.  எடுத்த எடுப்பில், அந்தப் பச்சிளங்குழந்தையின் நெஞ்சில் குத்தினாரே ஓர் ஊசி!  அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்!  குழந்தை அலறவே, அவளைத் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.  நடந்ததை வீட்டில் சொன்னபோது, வீட்டாரும் துடித்துப் போனார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை!  பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது!  கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?

மற்றவை, பின்னூட்டக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.       

அதிரை அஹ்மது
இது ஒரு மீள்பதிவு

22 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…

கரையூர்தெருவைசார்ந்தஇன்னொருநாட்டுவைத்தியர்உத்தண்டி.இவரிடம் சிலமருந்துகளேகைவசம்இருக்கும்.மற்றமருந்துகளுக்காஸுகொடுத்தால் இரண்டொருநாளில்தயாராகிவரும்.உத்தண்டி.பெத்தயன்இருவரும் சிலகேஸ்களை கைபிடித்துபார்த்தே முடியும்-முடியாது என்று சொல்லி விடுவார்கள் . சொன்னது சொன்னபடி நடக்கும். அன்றையடாக்டர்கள்எல்லாம்அல்லா/தெய்வத்திற்க்குபயந்தேநடந்தார்கள்.இன்றைக்குபெருபாலானடாக்டர்கள்எல்லாம்மாத்திரை யாபாரிகளாக மாறிவிட்டார்கள். .கைபிடித்துபார்க்கும்டாக்டர்களில்இரண்டுவகைஉண்டு.முதல்வகை 'கைராசி' டாக்டர்.இரண்டாம்வகை 'கைக்காசு' டாக்டர்.

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Respected brother Mr. Ahamed,
Thanks for sharing details on olden golden days' doctors.

I heared about Iqram doctor. All of your genration's doctors I have never seen but I heard about them.

The most charismatic personality I have seen is Dr. Ebrahim. My favorite doctor is Dr. Selvarajan. But our community doctors Dr. Haneef, Dr.Meera Shaheb, Dr. Raju, Dr. Hakeem, Dr. Haja Mohideen and new generation doctors are having their own talent and experience which are preferred by our people.

May Allah bless all of our community doctors for their noble services of curing people.

Thanks and best regards

B.Ahamed Ameen from Dubai.

Jafar hassan சொன்னது…

எனக்கு சரிவர நினைவில்லை.. (நான் வெளி நாடு வரும் முன்பு) நாட்டு மருத்துவர் பெத்தையன் என்றுதான் நினைக்கிறேன் (பிற மதத்தை சேர்ந்த நமதூர் வாசி என்பதால் அவராகத்தான் இருக்கும்)

ரெயிலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது எனக்கு வயிற்று பிரச்சனை இருந்தது. அவரிடம் பேச்சு வாக்கில் சொன்னபோது, உடனே அவரிடம் இருந்த இரும்புப் பெட்டியைத் திறந்து, இரண்டு பட்டைகளை என்னிடம் தந்து தேனில் கலந்து சாப்பிடுமாறு சொன்னார். காசு வாங்கவில்லை.

மனித நேயமிக்க மருத்துவர்

Jafar hassan சொன்னது…

தேள் உள்ளிட்ட சிலவகை விஷக்கடிகளுக்கு பச்சிலை மருந்து போடும் சிலர் நடுத்தெருவில் இருந்தனர். (பட்டப்பெயர் சொன்னால் சிலர் கோபித்துக் கொள்ளலாம் என்பதால் தவிர்த்துவிட்டேன்) கணவர் மனைவி இருவருமே அதில் எக்ஸ்பர்ட்.. கடைத்தெருவில் கடையும் வைத்திருந்தார் (கடைத்தெரு வழியாக புதுத்தெருவுக்கு போகும் வழியில்) அவர்கள் மரணித்துவிட அந்த குடும்பத்தில் இந்த பச்சிலை மருந்து இடும் பழக்கமும் இல்லாமல் போய்விட்டது.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

'ஆரோக்கிய'மானப் பதிவு.

உடலின் /மனத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும்/நிலைபாட்டிற்கும் தனித்தனி மருத்துவர்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் மருத்துவம் சேவையல்ல தொழில் என்றே மாறி விட்டது.

உத்தண்டி செந்தூரம் உட்கொண்ட நினைவுண்டு. அக்காலத்தில் பாதிக்குமேல் வியாதியை பேய் பிடித்தது என்றும் செய்வினைக் கோளாறு என்று பகுத்துப்போட்டதால் அதிகம் படித்த மருத்துவர்களின் தேவை அவசியமற்றுப் போனது.

இக்காலத்தில் மருத்துவப்படிப்பை வாங்கி வைத்தியமாக விற்க வேண்டிதிருப்பதால் எந்த டாக்டரையும் மனதாற நினைவில் வைக்க நாட்டமில்லாமல் போய்விடுகிறது.

நல்ல அசை!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//இக்காலத்தில் மருத்துவப்படிப்பை வாங்கி வைத்தியமாக விற்க வேண்டிதிருப்பதால்//

மிகச் சரியே !

sheikdawoodmohamedfarook சொன்னது…

நம்ஊர்அரசுமருத்துவமனைக்குஎதிரில்இருக்கும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள வீட்டில் வெளியூரிலிருந்துவந்த ஒருநாட்டுவைத்தியர் இருந்தார்.இவரும்ஒரு 'கைராசி'க்காரடாக்ட்டரே! அதிகம் சார்ஜ் செய்யமாட்டார். இவரைசாமியார் என்றே அழைப்பார்கள். எட்டுமுழவேஸ்டியும்சிவந்துதடித்தமேனியில்ஒருதூயவெள்ளைதுணிமேஇவர்அடையாலம்.பூணூல்மேனியில்குறுக்கேஓடும்.பின்னாளில்அவர் எங்கேபோனார்என்றுதெரியவில்லை.அவர்தங்கிஇருந்தவீட்டில்அரசு நூலகம்நுழைந்துகொண்டது.

Ebrahim Ansari சொன்னது…

பழஞ்செட்டித் தெருவில் சண்முகத் தேவர் என்ற ஒருவர் இருந்தார் . அவரும் மருத்துவர்தான். ஊரில் நடைபெறும் அனைத்து பொது காரியங்களுக்கும் அவரைத் தவறாமல் அழைத்துவிடுவார்கள். அவரும் கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஆஜராகிவிடுவார்.

மேலும் தைக்கால் ரோட்டில் சின்னையாப் பிள்ளை என்று ஒரு ஹோமியோபதி டாகடர் இருந்தார். இவரது மனைவி ஒரு அரசு செவிலியராக இருந்தவர். எங்கே எந்நேரம் கூப்பிட்டாலும் குதிரை வண்டியில் வந்து சிகிச்சை செய்வார்.

நல்ல நினைவூட்டல் .

அது சரி இந்த வாரம் அகமது காக்கா வாரமா?

ZAEISA சொன்னது…

//கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார் அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது./////
இல்லை இல்லை....மர்ஹும் சேகப்துல்லாஹ் அவர்களின் CMP லைனில் உள்ள வீட்டில் இப்பவும் சண்டமாருத செந்தூரம்,வாதசெந்துரம்,சாம்ப்ராணி பஸ்பம்,மற்றும் கனைமாதிரைகளும் கிடைக்கிறது.அனேகம்பேர்கள் வாங்கி நிவாரணம் பெறுவதோடு வெளிநாடுகளுக்கும் வாங்கி அனுப்புகிறார்கள்.மேலும் எந்த ஒரு விஷக்கடியானாலும்99%(பாகி1%அல்லாஹ்) நிவாரணம் பெறக்கூடிய மருந்தும் கிடைக்கிறது இது இலவசமாக கிடைக்கிறது.என்பதை தெரிவிக்கிறேன்.

ZAKIR HUSSAIN சொன்னது…

இக்ராம் டாக்டரிடம் நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது வைத்தியம் பார்த்ததாக வீட்டுப்பெரியவர்கள் சொல்வார்கள்.எனக்கு பெயர் வைக்க அவரிடம் ஆலோசனை கேட்டதாகவும் சொல்வார்கள் .

பின்னாளில் எனக்கு தெரிந்த விசயம்..எனக்கு 'சாதிக் ஷான்" என்று ஏதோ பீகார் பக்கம் கிடைக்கும் காரபோண்டா பெயர் மாதிரி வைக்க இருந்தார்களாம்.....நல்ல வேலை இக்ராம் டாக்டர் ஆலோசனையில் நான் தப்பித்தேன்.

ZAKIR HUSSAIN சொன்னது…

//மேலும் தைக்கால் ரோட்டில் சின்னையாப் பிள்ளை என்று ஒரு ஹோமியோபதி டாகடர் இருந்தார்//

அவரிடம் வைத்தியம் பார்த்ததில்லை...அவர் கிளினிக் முன்னால் இருக்கும் தண்ணீர் கேனில் சங்கிலி கட்டிய அலுமினிய டம்ளர் இன்னும் மறக்காமல் ஞாபகம் இருக்கிறது.

நம்மை நம்பி தண்ணீர் தரும் ஒருவருக்கு பொதுமக்கள் நன்றி சொல்லாமல் திருடிக்கொண்டு போவதால்தான் இது போன்ற ஏற்பாடுகள் எல்லாம்..

Yasir சொன்னது…

//மேலும் தைக்கால் ரோட்டில் சின்னையாப் பிள்ளை என்று ஒரு ஹோமியோபதி டாகடர் இருந்தார்// அந்த சர்ச்சும்/ அலுமினிய டம்ளரும் எனக்கும் ஞாபகம் இருக்கு....

Yasir சொன்னது…

எங்கள் தெருவில் செவுட்டு டாக்டர் என்ற ஹோமியபதி டாக்டர் இருந்தார் நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போது..நிறைய பேர் வந்து மருத்துவம் குறிப்பாக ஊசி போட்டு செல்வார்கள்....குல் முகம்மது மாமா அவர்களின் பக்கத்துவீட்டில் தங்கி இருந்தார்...அவர் எந்த ஊர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை..

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ebrahim Ansari சொன்னது…

தம்பி ஜாகிர் !

நமதூர் அரசு மருத்துவமனையில் திருவையாறைச் சேர்ந்த சுபத்ரா என்ற மகளிர் மருத்துவர் வேலை செய்தார்.

அவர் நீண்ட நாட்கள் நமதூரில் இருந்தார். அவரது முகம் எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. மிகவும் அன்பானவர்.

இதை நான் உனக்கு எழுதக் காரணம் உங்கள் பெரியவாப்பா - என் தோழவாப்பா அவர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் அண்ணன் தங்கையாகப் பாசத்துடன் பழகியவர்.

அந்த டாகடர் நமது ஊரை விட்டு மாற்றல் ஆகிப் போன பின்பும் நீண்ட காலம் தோழவாப்பா அவர்களின் குடும்பத்துடன் உறவு வைத்து இருந்தார்.

தோழவாப்பா அவர்கள் அன்புள்ள தங்கை சுபத்ரா என்று கடிதங்களில் குறிப்பிடுவார்கள். O M Z பிரதர்ஸ் வீட்டு அனைத்து வைபவங்களுக்கும் அவர்களுக்கு அழைப்புப் போகும்.

எனக்கு அந்த நினவுகள் வருகின்றன. உன் வாப்பா அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

Ebrahim Ansari சொன்னது…

இக்ராம் டாகடர் மற்றும் அவர்கள் மகன்கள் அஸ்லம், முர்துஜா, அப்சர் ஆகியோருடன் காரில் ஜும் ஆ தொழ வருவார்கள். எல்லோருக்கும் பட்டாணிகள் போடுவது போல் குர்தா ஜிப்பா அணிவிக்கப்பட்டு இருக்கும்.

இவர்களில் அப்சர் எனது வகுப்புத் தோழன்.

அப்போது காரில் ஜூம் ஆவுக்கு வரும் குடும்பங்கள் - ஊரில் இருந்த குடும்பங்கள்- இரண்டுதான். ஒன்று இக்ராம் டாகடர் உடையது மற்றது நமது கல்வித் தந்தை எஸ் எம் எஸ் அவர்களுடையது.

crown சொன்னது…

Yasir சொன்னது…

எங்கள் தெருவில் செவுட்டு டாக்டர் என்ற ஹோமியபதி டாக்டர் இருந்தார் நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போது..நிறைய பேர் வந்து மருத்துவம் குறிப்பாக ஊசி போட்டு செல்வார்கள்....குல் முகம்மது மாமா அவர்களின் பக்கத்துவீட்டில் தங்கி இருந்தார்...அவர் எந்த ஊர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை..
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நலமா? யாசர் கடைசி வரை அவர் எந்த ஊர் என்பது விளங்காமலேயே போனதுக்கு காரணம் அவர் செவிட்டு டாக்டர் என்று அழைக்கபட்டதாலேயா இருக்குமா?விளங்கினால் சொல்லவும்!!!!

crown சொன்னது…

Yasir சொன்னது…

//மேலும் தைக்கால் ரோட்டில் சின்னையாப் பிள்ளை என்று ஒரு ஹோமியோபதி டாகடர் இருந்தார்// அந்த சர்ச்சும்/ அலுமினிய டம்ளரும் எனக்கும் ஞாபகம் இருக்கு....
-----------------------------------------------
டம்ளர் வைத்த(தியர்)தமிழர்!

crown சொன்னது…

ZAKIR HUSSAIN சொன்னது…

இக்ராம் டாக்டரிடம் நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது வைத்தியம் பார்த்ததாக வீட்டுப்பெரியவர்கள் சொல்வார்கள்.எனக்கு பெயர் வைக்க அவரிடம் ஆலோசனை கேட்டதாகவும் சொல்வார்கள் .

பின்னாளில் எனக்கு தெரிந்த விசயம்..எனக்கு 'சாதிக் ஷான்" என்று ஏதோ பீகார் பக்கம் கிடைக்கும் காரபோண்டா பெயர் மாதிரி வைக்க இருந்தார்களாம்.....நல்ல வேலை இக்ராம் டாக்டர் ஆலோசனையில் நான் தப்பித்தேன்.
----------------------------------------------------
மருத்துவர் காக்காவை பார்த்த வைத்தியர்!பெயரும் வைத்திட(யம்)உ(பயம்)தவி!ஆரோக்கியமான நட்புடன் பழகியுள்ளார் சிலர் மருந்துக்குகூட நல்ல பெயர் வைக்கத்தெரியாதவர்களாய் எப்பொழுதும் இருப்பது என்ன வென்பது???

Ahamed Ameen சொன்னது…

//மருத்துவர் காக்காவை பார்த்த வைத்தியர்!பெயரும் வைத்திட(யம்)உ(பயம்)தவி!ஆரோக்கியமான நட்புடன் பழகியுள்ளார் சிலர் மருந்துக்குகூட நல்ல பெயர் வைக்கத்தெரியாதவர்களாய் எப்பொழுதும் இருப்பது என்ன வென்பது???//

Its a matter of trusting the consultation(not only for diseases) of a highly educated personality for meaningful names.

Yasir சொன்னது…

வ அலைக்க முஸ்ஸலாம் சகோதர் கிரவுனே..நலம் உங்கள் நலம் காண ஆவல்...உங்கள வார்த்தை மழைகளில் நனைந்து இன்பம் காண்பதில் உள்ள சுகமே அலாதிதான்......

Ebrahim Ansari சொன்னது…

இப்ராஹீம் டாகடர் அவர்களை மறக்க முடியுமா?

முதலில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஆஸ்பத்திரித் தெருவின் முனை வீட்டில் இருந்து மாலை நேரங்களில் வைத்தியம் பார்ப்பார்.

அவரது பூனைக் கண் மறக்க முடியாதது. அன்பாகப் பேசுவார். அவரிடம் வைத்தியம் பார்த்தவர்களை சாலியில் பார்த்தாலும் உடம்பு இப்போது எப்படி இருக்கிறது என்று விசாரிக்கும் நல்லியல்புடையவர் என்பது என் அனுபவம். அதனால்தான் இன்னும் நினைவு கூறுகிறோம்.

அதன்பின் செய்து அம்மாள் நர்சிங் ஹோம் என்று ஆஸ்பத்திரி ரோட்டில் தனியாக கிளினிக் வைத்தார். அதற்காக அரசு வேலையை இராஜினாமா செய்தார்.

இராமநாத புரத்தில் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர்.

அவரது சகோதரர் டாக்டர் அப்துல்லா அவரகளும் ஒரு டாக்டர் மட்டுமல்ல. மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். பெரும் புள்ளி.

இப்ராஹிம் டாகடர் நமதூரில் பிராக்டிஸ் செய்யும் போதே இராமநாத புரத்தில் செய்து அம்மாள் உயர் நிலைப் பள்ளி என்று அவரது சகோதரர் தொடங்கிய கல்வி நிலையம் இன்று பல்வேறு வளர்ச்சி அடைந்து இன்று செய்யது அம்மாள் கல்வி அறக்கட்டளையாக உருவாகி, ஒரு பொறியியல் கல்லூரியும் ஒரு கலை அறிவியல் கல்லூரியும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. சேவையே இவர்களின் குறிக்கோள்.

இந்தக் குடும்பத்தின் வாரிசுகள் சின்னத்துரை அப்துல்லாஹ் மற்றும் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கல்விக்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.

கலை அறிவியல் கல்லூரியில் நமது கா. மு. கல்லூரியிலேயே படித்து அங்கேயே பேராசிரியராக பணியாற்றிய எங்களது நண்பர் அமானுல்லாஹ் ஹமீது முதல்வராகப் பணியாற்றுகிறார்.இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+