நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவதூறு...! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, அக்டோபர் 31, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

திண்ணைப் பேச்சாளர்களின்
புலம்பல்கள்!
உனக்கு தெரியுமா?
சோற்றுக்கு வழி இல்லாமல்
அலைந்தானே இன்று
அவனுக்கு வீடு என்ன?
கார் என்ன?


அவன் மனைவியை பார்த்தியா?
கருகமணிக்கு வழி இல்லாமல்
இருந்தாளே அவள்தான்!
அவள் மணிக்கட்டு முதல்
முழங்கை வரை தங்கம்
தங்கமா? தங்க வளையல்
கழுத்து முழுதும் மாலைகள்
ஹூம்.... நானும்தான் இருக்கேன்
கையில் கழுத்தில் எதுவும் இல்லாமல்!


தெரியுமா? சேதி
அந்த வீட்டில் ஒரே சண்டையாம்
சண்டைக்கு என்ன காரணமாம்
அதை ஏன் கேட்கிறே
அது பெரிய கதை
நானே சுவற்றில் காதை
வைத்து கேட்டேன்!

அவன் அவளை பார்த்தானாம்
இவள் அவனை பார்த்தாளாம்!
நானும் கேள்விப்பட்டேன்!
இப்ப அவனோடு
அவள் ஓடி விட்டாளாமே!


என்ன கொடுமை!
இப்படி அவதூறு பேசும்
திண்ணை கூட்டங்களிடம்
ஒரு மூட்டை அரிசியை கொடுத்து
மூட்டையில் எத்தனை அரிசி
உள்ளது என்று எண்ணி சொல்லுங்கள்
என்ற வேலையை கொடுக்கலாம்!


சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு
அவதூறை பரப்பிக் கொண்டு
இருப்பவர்கள்
குர்ஆனிலும் , நபிமொழியிலும்
உள்ள எச்சரிக்கையை
மனதில் வைக்கட்டும்!


ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை என்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் : 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 24: 23)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். 

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)' 

என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்(ஸஹீஹுல் புகாரி: 2766

'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர். 

அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' ' என்றார்கள். 

நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)'

என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

அலாவுதீன் S.

5 Responses So Far:

Shameed சொன்னது…

அப்போது திண்ணையில் பேசப்பட்டது இப்போது மொபைல் போன்களிலும் வாட்ஸ் அப்களிலும் நவீனமாக பேசப்படுகின்றது அதன் பாவங்கள் அறியாமல்

ZAKIR HUSSAIN சொன்னது…

முன்பு நான் வேலை பார்த்த கம்பெனியின் பக்கத்தில் ஒருவர் இருந்தார். அவர் பெயர் முஹம்மது சாலேஹ்...தஞ்சாவூர் பக்கத்தில் அவரது ஊர். [ may be குடவாசல் ..]

அவரிடம் யாராவது மற்றவர்களை பற்றி தவறாக பேசினால் உடனே ' "...அப்புறம் ....சட்டை எங்கு வாங்கினீங்க..நல்ல மெட்டீரியலா தெரியுது....சாப்ட்டாச்சா....உங்களுக்கு எத்தனை புள்ளைங்கன்னு சொன்னீங்க.?"..என்று கேள்விகளை கேட்க ஆரம்பித்து விடுவார்.

நான் இதற்கு அவரிடம் விளக்கம் கேட்டதற்கு...இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை. இப்படி கேள்வி கேட்டதால் அவர் அவதூறு பேசுவதை விட்டு இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிப்பார்.

அவரும் நாமும் பாவத்திலிருந்து தப்பிக்கலாம்.என்றார்..

நல்ல உக்தி நாமும் பயன்படுத்தலாம்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//ஹும்!நானும்தான்இருக்கேன்கையில்கழுத்தில்ஏதுமில்லாமல்//இதுபரவாஇல்லேங்க''நான்புளியங்கொம்பை புடிக்கவல்லோ புவிமேல் தவங்கெடந்தேன்!நாம் பாவிபுடிச்சகொப்பு முருங்க கொப்போ? புடிச்ச கொப்பு முருங்க கொப்போ?''ன்னுஒருத்தி மெட்டுபோட்டுபாட்டுபடிச்சாங்க!

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

அவதூறு சொல்பவர்கள் இந்த எச்சரிக்கையை உணர்ந்து திருந்தினால் நல்லது.இல்லையெனில்,மாஹ்ஷரில் அவரவர் சட்டையை பிடிக்கும் படி வரும்.அல்லாஹ் நம்மைக் காப்பானாக

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நீங்கள் த த ஜ வாக இருங்கள்,அல்லது ADT யாக இருங்கள்.எந்த இயக்க முத்திரை வேண்டுமானாலும் குத்திக் கொண்டு வலம் வாருங்கள்.

ஆனால்,சாதாரண மக்களாகிய நாங்கள்,எங்களை "முஸ்லிம்கள்"என்ற பேனரில் மட்டுமே இன்ஷா அல்லாஹ் அழைத்துக் கொள்வோம்.மேலும்,முஸ்லிம்களாகவே இன்ஷா அல்லாஹ் மரணிப்போம்,எந்த இயக்க தொண்டன் என்று அல்ல.

யா அல்லாஹ்,எங்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக - ஆமீன்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+