பர்மா தேக்கு வீட்டுக்காரர்

ஞாபகம் வருதே - [4] part - 1

ஒரு முறை மலேசியா புறப்பட சென்னைக்கு ரயில் ஏறினேன். என் நண்பர் ஒருவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். எழும்பூரில் ஒரு விடுதியில் தங்கி வாங்க வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டு அன்று இரவு விமானத்தில் புறப்பட எண்ணி இருந்தேன். 

"மண்ணடியில் என் ரூமிலேயே தங்கிவிட்டு புறப்படலாமே! கொஞ்சநேரம் தானே! எதற்கு விடுதிக்கு வேறு வீண் செலவு?" என்று வற்புறுத்தினார்.

"சரி" என்று அங்கே சென்றேன். 

மண்ணடியில் எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருந்தார். ‘அவரையும் போய் பார்த்து விட்டு வரலாமே! ’ என்று அங்கே சென்றேன். மூன்றாவது மாடியில் அவர் அலுவலகம் இருந்தது. மேலே போக லிஃப்ட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது. லிஃப்ட் ஆப்பரேட்டர். முகமும் தொங்கிக் கொண்டிருந்தது. லிஃப்டில் போகலாம் என்று எண்ணிய எனக்கு தொங்கும் முகம் கண்டதும் லிஃப்டில் போக மனமில்லை. அதில் ஏறினால் வம்பு தும்பு வருமோ என்ற அச்ச உணர்வு வந்தது .அதனால் படி ஏறியே மேலே போகலாம்  என்று  ’வலது காலை எடுத்து முதல் படியில் வைத்தேன். அடுத்த கணம்,

"யாரது? நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள்?" என்ற அசரீரி போல் ஓசை கேட்டது.  இந்த அதட்டல் போட்டது  லிஃப்ட் ஆப்பரேட்டரே யன்றி வேறு யாருமல்ல.

"மூன்றாவது மாடிக்குப் போகிறேன்!"என்றேன்.

"யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?" என்றார். பதில் சொன்னேன். "எந்த ஊர்?" என்றார். இந்தக் கேள்வியை கேட்டதும் கண்ணதாசன் எழுதிய "எந்த ஊர் என்றவனே! இருந்த ஊரைச் சொல்லவா?" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.’ அதைப் பாடலாமா?’ என்று நினைத்தேன். வந்த இடத்தில் வம்பு எதற்கென்று விட்டு விட்டேன். இப்பொழுது இந்தப் பாடல் உருவான ஊற்றுக்கண் பற்றி  சுவையான செய்தி ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு ‘கரு’கொடுத்தவர் அண்ணா என்றால் நம்புவீர்களா? ‘அண்ணா முதல்வராய் இருந்தபோது கரூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அண்ணாவைச் சந்திக்க வந்தார்கள். வந்தவர்கள் "வணக்கமுங்கோ! நாங்கள் கரூரிலிருந்து வருகிறோம்!" என்றார்கள். அதைக் கேட்ட அண்ணா `நானும் கரூரிலிந்து வந்தவன் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார். இதைக் கேட்ட கரூர்காரர்களும் மற்றும் அங்கிருந்த நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன் கண்ணதாசன் ஆகியோரும். புருவத்தை உயர்த்தினார்கள்.

"என்ன அண்ணா உளறுகிறார்? காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா கரூரில் பிறந்தேன்’ ’ என்று சொல்கிறாரே”? என்று ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  கரூர்காரர்களில் ஒருவர் குழப்பத்தோடு அண்ணாவை பார்த்து "நீ...ங்....க....ள்.....கா...ஞ்....சி......" என்று இழுத்தார். அவர் முடிக்கு முன்னே அண்ணா சொன்னார்.

"நான் காஞ்சிபுரத்தில் பிறந்தவன்தான். ஆனால் நான் என்தாயின் ‘கரு’ஊரில் உருவாகி வந்து காஞ்சிபுரத்தில் பிறந்தேன்.               அதனாலேதான் நானும் கரூரிலிருந்து வந்தவன்” என்று சொன்னேன் என்றார். இதைக்கேட்ட கரூர் ஆசாமிகள் கலங்கி போனார்கள்-அண்ணாவின் சொல் வண்ணம் கண்டு சொக்கிப் போனார்கள். ‘தூண்டில் காரனுக்கு மிதப்பு மேல் கண்!’ என்பது போல் அங்கிருந்த கவிஞர் கண்ணதாசனும் காரியத்தில் கண்ணா இருந்தார். வாய்ப்பு வந்தபோது அண்ணா கொடுத்த டிப்சை வைத்தே." எந்தஊர் என்றவனே? இருந்த ஊரைச்சொல்லவா? இருந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!" என்ற பாடலை எழுதினார்.’ வல்லவன் கையில் புல்லும் ஓர் ஆயுதம்’ என்று சொல்வார்கள். அதை அண்ணாவும் கண்ணதாசனும் மெய்ப்படுத்தினார்கள். இப்பொழுது நாம் கரூரிலிருந்து மண்ணடிக்கு  வருவோம். 

கரூரிலிருந்து மண்ணடி வந்தவர்கள் எல்லாம் மீண்டும் ஒரு நாள் ‘மண்ணடிப் போகத்தானே வேண்டும்!? . நான் சொல்லும் மண்ணடி அந்த இறுதிப் பயணம் போகும் மண்ணடி அல்ல: சிங்காரச் சென்னையின் கடலோரமிருக்கும் மண்ணடி. மீண்டும் மண்ணடிக்கு வருவோம்.

"எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" மண்ணடி லிஃப்ட் கேட்டது.

"அதிராம்பட்டினம்!"

"தெருவு?"

"கடல்கரை தெரு”

"பேரு?" 

"முஹமது பாரூக்!" [கேட்ட கேள்விகளைப் பார்த்தால் மண்ணடிக்குப் பதிலாக பாஸ்போர்ட் ஆபிஸுக்கு. வந்துவிட்டோமோ?’ என்ற சந்தேகமும் எனக்கு வந்தது.]

"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?" என்றார்.

அவர் என்னை மதரஸா-அல்லது குமர் காரியமாக வந்த வசூல் பேர்வழி என்று எண்ணினாரோ என்னவோ? இப்படிக் கேட்டார்.

"அதையெல்லாம் சொல்ல முடியாது! விட்டால் விடு! இல்லையென்றால் நான் திரும்பிப் போய் விடுகிறேன்...........

அவர் வரச் சொன்னார் வந்தேன். விடமுடியாதென்றால் போய் விடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குடி மூழ்கி விடப் போவதில்லை" என்றேன். 

இப்படி நான் சொன்னதும் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார். டெலிபோனை தட்டி மேலே கேட்டார். பின்பு,

"நீங்கள் லிஃப்ட்டிலேயே போங்கள்" என்றார்.

இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது. ’நீங்கள் லிஃப்ட்டிலேயே போகலாம்" என்றார். 

அதட்டல் இல்லாத மரியாதை தொனி அவர் குரலில் ஒலித்தது. இதுவரை தொட்டிலில் துயில் கொண்ட மனித குணம் இப்பொழுது விழித்துக் கொண்டது. அங்கே ஒருவரை  லிஃப்டில் போக அனுமதிப்பது என்பது ஒரு வெளிநாட்டுத் தலைவர் இன்னொரு நாட்டுக்கு வரும்போது சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுப்பது போல! இது ஒரு[ Royal Salute] ‘ராஜமரியாதை!?’

**********************************************************************************
நான் மலேசியா புறப்படத் தயாரான போது என் நண்பர் இரண்டு கைலி ஒரு சந்தன சோப் ஒரு Vicco பல்பசை இவற்றை நம் ஊர்காரர் ஒருவரின் பேரைச் சொல்லி அவரிடம் கொடுத்து விடும்படி தந்தார். அவர் பெயர் உச்சரிக்கப்பட்டபோது’ என் நெஞ்சுக்குள் ஒரு எச்சறிக்கையுணர்வு மையம் கொண்டது’ இதனால் அவருக்கும் உனக்கும் ஒரு Ego போர் தொடங்கும்!.

"அதை வாங்காதே!" என்று என் உள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

அந்த நபரிடம் பழகுவதிலும் பேசுவதிலும் ஒருவர் எப்படித்தான் முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் அதில் எப்படியாவது ஒரு குறை அல்லது தவறு கண்டு அடிபட்ட நாகம்புபோல சீறுவார். உப்புக்குக் கூட பிரயோஜனமில்லாத ஒரு தவறு, நாம் சொல்வதில் கண்டுபிடிப்பார். அதை வைத்தே நம்மைத் தாழ்த்துவார். தலையில் குட்டுவார். அதோடு அல்லாமல் அவரை அவரே ஒரு தூக்கு தூக்கி உச்சாணிக் கொப்பின் உயரத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்வார். 


அவரே உயர்ந்தவர்; அவரினும் உயர்ந்தவர் யாருமில்லை. அவர் சொல்வதெல்லாம் சரி;! அவர் போட்டிருக்கும் சட்டையே விலை உயர்ந்த சட்டை; அந்த விலை கொடுத்து அதை யாராலும் வாங்கிப் போட முடியாது. அவர் வீட்டு ஜன்னல், கதவு தூண் எல்லாமே "பர்மாவில் இருந்து விமானத்தில் அவர் பூட்டனுக்கு பூட்டன் காலத்தில் கொண்டு வரப்பட்டது” என்பார்.

கையில் கிடந்த ஒரு பவுன் மோதிரம் கீழே விழுந்தாலும்கூட அதை குனிந்து எடுக்காத குடும்பம் எங்கள் குடும்பம் என்பார்’ பர்மா தேக்கிலேயே அடுப்பு எரித்துச் சோறு பொங்கி திண்ட குடும்பம் எங்கள் குடும்பம்’ என்று சொல்ல மறந்து விட்டார் போலும். அவர் "பூட்டன்-,பூட்டன்’ என்று என்றோ போய் சேர்ந்தவர்களின் சாதனைகளையும் பெருமைகளையும் திரும்பதிரும்பச் சொல்லியதைக் கேட்டவர்களுக்கு ஆரம்ப பள்ளியில் படித்த வாய்ப்பாடு போல் மனப்பாடமாகி விட்டது வேறு-சிலருக்கு இந்த பூட்டன்! பூட்டன்" என்ற சொல் அவங்களெல்லாம் பழைய பூட்டுக்களைப் பழுது பார்க்கும் தொழில் செய்தவர்களோ?" என்ற எண்ணத்தை உண்டாக்கியது. 

அவர்கள் விமானத்தில் பர்மா `தேக்கு` கொண்டு வந்த காலத்தில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதர்களின் உம்மாக்கும் வாப்பாக்கும் கல்யாணமே ஆகலேங்கிற சங்கதி அங்குள்ள கிணற்று தவளைகளுக்கு தெரியாது. தெரிந்தவர்களும். "எதற்கு வீண்வம்பு?" என்று ‘செட்டி ஜாடையில்’ கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். இவரின் குணங்களில் ஒன்றை மட்டும் உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் அவரை வேண்டு மென்றே எல்லை கடந்து அதிகம் விமர்சிப்பதாக எண்ண வேண்டாம். அவர் இடக்கு-முடக்காக ஏதேனும் பேசுவாரே தவிர யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.

நண்பர் அந்த சாமான்களை என்னிடம் தந்தபோது நான் அதை கைநீட்டி வாங்கியபோதே ‘அவருக்கும் எனக்கும் ஒரு Ego போர் தொடங்கப் போகிறது’ என்ற உள் மனம் என்னை என்னை எச்சரித்தது. இது போன்ற எச்சரிக்கையை உள் மனம் தரும் போது `NO` என்றவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். `yes` என்றவர்கள் தூண்டிலில்  சிக்கிய மீன் ஆனார்கள். இது என் வாழ்நாளின் பெரும்பகுதியில் நான் செய்த தவறு. I wanted to say NO but I said YES! NO என்று சொல்ல நினைத்ததை No என்று சொல்லாமல் Yes என்று சொன்னேன். என் வாழ்வின் தேன் நிலவுகாலங்கள் வீண் நிலவுஆனது.

அப்படி சொன்னவர்கள் எல்லாம் தங்கள் சொந்தச் செலவில் தங்களுக்கே சூணியம்வைத்துக் கொண்டவர்களுக்கு சமம். போர் பிரகடனம் ஒன்றை எதிர் நோக்கத் தயாரானேன். காரணம் இவரோடு Deal செய்வது மிகமிக கடினம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேறு ஒருவர் கடையில் Working Partner-ராக இருந்தபோது மாதம்  இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றை  அதன் உரிமையாளர் மலேசிய தீபகற்பத்தின் பெரும்பகுதிக்கு விநியோகம் செய்ய எங்களுக்கு தந்தார். அதன் விற்பனை ஏறத்தாழ ஒரு இலட்சம் பிரதிகள். மாதம் இருமுறை என்றால் இரண்டு லட்சம் பிரதிகள். அந்த  இதழின்ஆசிரியரும் உரிமையாளருமான மலாய்க்காரர் மாலை நேரங்களில் வேலை  முடிந்ததும் எங்கள் கடைக்கு இரண்டு-அல்லது மூன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து சஞ்சிகை விற்பனை சம்பந்தமாகவும் மற்ற பத்திரிக்கைகள் எப்படி ஓடுகிறது என்றும் மற்றும் பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசிச் செல்வார். இது அவர் வாடிக்கையான பொழுது போக்கும்-ஒரு ரிலாக்சும் கூட. 

இதை வழக்கமாக்கி கொண்ட அவர் ஒன்னரை மாதமாக வரவே இல்லை. ஆளைக் காணோம். ஒரு நாள் மாலை திடீரென வந்தார். நான்கேட்டேன்

"எங்கே ரெம்ப நாளா ஆளைக் காணோம். ஏதாவது புது Girl friend எதையாவது பிடித்துக்கொண்டு ஹனிமூன் போய் இருந்தாயா?" என்றேன்.

"ஹும்! என்ன முயற்சி செய்தும் ஒன்னும் கிடைக்கலே!" என்றார்.

இது  போன்ற பேச்சுக்கள் மலாய்க்காரர்களுக்கு ரெம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் கொஞ்ச நாள் பழகியதும் கேலி கிண்டல் செய்யலாம். நம் நாட்டு முதலாளிகளுக்கு இருக்கும் Ego போல் மலாய்கார முதலாளிகளுக்கு இல்லை. ஆனால் மலேசியாவில் கடை வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம் தஞ்சை மாவட்ட முதலாளிகளுக்கு கெளரவம் ஈகோ எல்லாம் இங்கேயும் [மலேசியாவில்] உண்டு. இது ரத்தத்தோடு கலந்தது அல்ல; ரத்தமே அதுதான். கண் மூடிய பின் அவர்களை மண் மூடி போட தூக்கியபோது ego சொன்னது"you go ! I stay!

மலாய்கார முதலாளிகளிடம் மூஞ்சியை ‘உம்’மென்று வைத்து டீல் பண்ணினால் தகர டப்பா ரெங்கு பெட்டி பாக்கட்டை தோளில் தூக்கி கொண்டு ஜப்பான் காரன் செய்த கித்தா செருப்பை வரட்வரர்ட்டென்று காலில் போட்டு இழுத்துக் கொண்டு ஊர் வந்து சேர வேண்டியதுதான். ரைபன் மூக்கு கண்ணாடி அத்தர் பூசிய டெர்லின் சட்டை, ஓடிகுலான் பாட்டால் ஹார்லிக்ஸ் போட்டல் யார்ட்லி புட்டாமாவு, யார்ட்லி சவ்வுக்காரம் 555 சாப் ரோக்கோ (சிகரெட்) கோபுர சாப்பு பணியன் ONE MAN SHOW சென்ட் பாட்டில்Etc. Etc ஏதுமில்லாமல் கோஷப்பெட்டி(empty]யோடு ஊர் வந்து எறங்க   வேண்டியதுதான்.   

வயதுக்கு வந்து கல்யாணத்துக்கு நிக்கிற தன் மகள் பாத்துமுத்துக்கு மாப்பிளைகேக்க நினைச்சிருந்த தாயோடு கூடப்பிறந்த மூத்த மாமாவே கூட வீட்டுப்படி மிதிச்சு உள்ளே வந்து, "சொவமா வந்தியலா?"-ன்டும் ஒரு வா[ர்]த்தை கேக்க மாட்டார். "மவளுக்கு மாப்புளே தாங்கோ!"-ன்டும் கேக்க மாட்டார்.! பெண் கொடுப்பதும்,மாப்பிளை எடுப்பதும் பினாங்கிலிருந்து வரும் சபுராளியின் பெட்டியின் வெயிட்டை பொறுத்தே அது அமையும்.

ரெம்ப நாள் கழித்து கடைக்கு வந்த அந்த மலாய்காரரிடம்…

"எங்கே ரெம்ப நாளா காணோமே!” என்றேன்.

"பிரிண்டிங். மெசின் வாங்கலாமென்று ஜெர்மனி சென்றிருந்தேன். அதான் வர வில்லை!" என்றார். அவர் கையில் வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்று பளிச்சிட்டது. அதை நான் கவனித்ததை  கண்ட அவர் அதை என்னிடம் காட்டி..

"இதை அங்கே வாங்கினேன். விலை மலேசியன் ரிங்கிட் இருபத்தி அஞ்சாயிரம்" என்றவர் ‘இதை பார்த்த` என் மனைவி

"இதுபோல் எனக்கும் ஒன்று வேண்டும்!" என்று அடம் பிடிக்கிறாள்!’” என்றார். 

"உனக்கு தெரிந்த வைர வியாபாரம் செய்யும் ’மாமா’* யாராவது இருந்தால் சொல்! பத்து பணி ரெண்டு ஆயிரரிங்கிட்க்குள் ஒன்று வாங்கலாம்!’ என்றார் 

[*தமிழ் முஸ்லிம்களை மலாய்காரர்கள் ’மாமாக்’ என்று அழைப்பது வழக்கம்] மேற்சொன்ன பாட்டன் பூட்டன் பரம்பறை பெருமை பேசும் நபர் கொஞ்ச நாளாக "நான் வைர யாவாரம் செய்கிறேன்! நான் வைர யாவாரம் செய்கிறேன்”! என்று சொல்லிக் கொண்டு இருந்தார். ’அவரை இந்த மலாய்காரரிடம் காட்டி விடுவோம் ’ஏதாவது அஞ்சோ பத்தோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு டெலிபோன் போட்டேன். 

"எனக்கு தெரிந்த மலாய்க்காரர் ஒருவர் வைரம் வாங்க வேண்டுமாம்! உங்களிடமிருக்கும் வைரங்களை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா"? என்றேன்.

"அவர் என்ன வேலை செய்கிறார்?"என்றார்.

"அவர் ஒரு மலாய் மொழி பத்திரிக்கையின் எடிட்டரும் உரிமையாளரும்" என்றேன்.

"என்னிடம் இருக்கும் வைர மெல்லாம் வெறும் முன்னூறு நானூறு வெள்ளி விலை யுள்ள மலிவான வைரமல்ல! ஆயிர வெள்ளியிலிருந்து ஐயாயிரம் வெள்ளி வரை விலையுள்ள வைரங்கள். அவரால் அந்த விலை கொடுத்து அதை வாங்க முடியுமா?" என்றார்

"அந்த விலையில் நிச்சயமாக அவரால் வாங்க முடியுமென்றால் மட்டுமே நான் அங்கே வருவேன். இல்லையென்றால் வெட்டித்தனமாக வந்து என் டயத்தை வேஸ்ட்டு பண்ண விரும்பவில்லை" என்றார்.  

நான் பதில் கொடுத்தேன் "இப்போ அவர் கை விரலில் கிடக்கும் மோதிரத்தில் பதித்த வைரத்தின் விலை 65 ஆயிரம் மலேசியன் ரிங்கிட் மதிப்புள்ளவை. இப்போ அவர் Girl friendடுக்குவாங்க நினைப்பது இருபது ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை. நீங்கள் வைத்திருக்கும் மலிவான வைரங்கள் அவர் வீட்டு வாசல் படிக்கு பதிக்க தேவைபட்டால் சொல்லுகிறேன்! கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டு டெலிபோன் ரிசிவரை ’டக்’கென்று போட்டேன். சற்றுநேரத்தில் டெலிபோன் மணியடித்தது.

நான் எடுக்கவில்லை. 

அடுத்த பகுதியிலும் தொடரும்… 

S.முஹம்மது பாருக்

28 கருத்துகள்

ZAKIR HUSSAIN சொன்னது…

//கையில் கிடந்த ஒரு பவுன் மோதிரம் கீழே விழுந்தாலும்கூட அதை குனிந்து எடுக்காத குடும்பம் எங்கள் குடும்பம் என்பார்’ //

குடும்பத்துக்கே இடுப்பில் சுளுக்கா?....என்ன கொடுமை இது!!

ZAKIR HUSSAIN சொன்னது…

அவரே உயர்ந்தவர்; அவரினும் உயர்ந்தவர் யாருமில்லை. அவர் சொல்வதெல்லாம் சரி;! அவர் போட்டிருக்கும் சட்டையே விலை உயர்ந்த //சட்டை; அந்த விலை கொடுத்து அதை யாராலும் வாங்கிப் போட முடியாது. அவர் வீட்டு ஜன்னல், கதவு தூண் எல்லாமே "பர்மாவில் இருந்து விமானத்தில் அவர் பூட்டனுக்கு பூட்டன் காலத்தில் கொண்டு வரப்பட்டது” என்பார்.//


நிறைய பேர் இருந்த இடம் தெரியாமல் போனதின் அடிப்படை காரணம் இது.

ZAKIR HUSSAIN சொன்னது…

//சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேறு ஒருவர் கடையில் Working Partner-ராக இருந்தபோது //

காலம் தந்த சுவடுகள்...

இங்கு இருக்கும் வரை நிறைய விதைத்தீர்கள்...

அறுவடை தான் களவு போனது உங்கள் கைக்கு எட்டாமல்...

Ebrahim Ansari சொன்னது…

அனுபவங்கள் இவ்வளவு அழகாகப் பேசுமா?

ஒருவருக்கு அனுபவம் அடுத்தவருக்குப் படிப்பினை.
அருமையான தொடர். இந்தத் தொடர் நீண்டகாலம் வாரம் ஒருநாள் என்ற முறையில் தொடர்ந்து விருந்து படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

Ebrahim Ansari சொன்னது…

எந்த ஊர் என்பவனே இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா?

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் . நினைவூட்டியமைக்கு நன்றி.

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்துவிட்டு
கடலூரில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி சென்றுவிட்டாள்.
கீழஊரைப் பார்ப்பதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கும்
வேலை வரவில்லையடாஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நல்ல வெவரமான,விளக்கமான,அருமையான,பாடம் படிக்கும் வண்ணம் உள்ள அனுபவம்.வர்ணனைகள் நலம்,சூப்பர் காக்கா

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது//

இது போன்றதுகளை தவிர்க்கலாம்

Ebrahim Ansari சொன்னது…

தவிர்க்கலாம் என்று குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை நீக்கினாலும் சுவை குன்றாது. நீக்கலாம்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//குடும்பத்துக்கே இடுப்பில்சுளுக்கா? என்னகொடுமைஇது// மருமகன்ஜாஹிர்சொல்லிவருத்தப்பட்டது./ஆமாம்.குடும்பவியாதிஇது. அந்தக்காலத்தில்''வெல்லாட்டி''வைத்து வேலைவாங்கிய செல்வக் குடும்பங்களின் குடும்பவியாதி இது. அன்று நம்ஊர் சீமான்கள் வீட்டு சீமாட்டிகள்சுமந்ததெல்லாம்அவர்கள்வைற்றில்பத்துமாசம்வளர்ந்த குழந்தைகளை மட்டுமே.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//இப்போ பூஸாரிமணியடித்தார்.சாமியும் வரங்க்கொடுத்தது// இதுபோன்றவைகளைதவிர்த்திருக்கலாம்/தம்பி இப்னு அப்துல் ரசாக்சொன்னது//ஒருமொழியில் எழுதும் போது அந்த மொழியின் பண்பாடு மண்வாசனைசார்ந்தசொல்லாடல்களையும்சேர்த்து எழுதுவதுஎழுத்துக்குஅணிசேர்க்கும்!படிப்போர்க்குசுவைஊட்டும். என்பதனாலேயே இப்படிஎழுதுகிறார்கள். நெருப்பென்றுசொன்னால்நாக்கு வெந்துபோவதில்லை!

sheikdawoodmohamedfarook சொன்னது…

நான் மலேசியாவில்வேறு மாவட்ட இஸ்லாமியர்களை சந்திக்கும் போது ''தம்பிக்குஎந்தஊர்?''என்பார்கள்.அதிராம்பட்டினம்என்பேன்!''அதிராம்பட்டினமா?அப்துல்காதர்ஆலிம்சாவைதெரியுமா?''என்பார்கள்.''ஏன்தெரியாது! நன்றாகதேரியுமே!''என்பேன்.நான்உங்ககளூர்வந்திருக்கிறேன்.பலதடவை தப்லிக்கில்பலஊர்சென்றுக்கிறேன்.அவர்கள்பெரியசீதேவி!உங்களூருக்கு அல்லாகொடுத்தபாக்கியம்என்பார்கள்.அவர்கள்சொன்ன'சீதேவி'''என்ற சொல்[இந்துக்கள்நம்பிக்கைபடி]இந்துக்கடவுளின்இரண்டாவதுமகள். செல்வத்துக்குஅரசி.அவர்கள்அப்துல்காதர்ஆலிம்சாவைசீதேவிஎன்று சொன்னது தப்பு ''என்றுவாதிடுவது நாகரீகமாகுமா? அவர்கள் அப்துல்காதர் ஆளிம்சாமீதுமிகுந்தமரியாதைவைத்திருக்கிறார்கள் என்பதேஅந்த வார்த்தையின்பொருள்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

இந்தோனேசியஒருஇஸ்லாமியநாடு.உலகில்அதிகம்இஸ்லாமியர்களையும்இஸ்லாமியப்பேரறிவாளர்களையும் கொண்டநாடு. நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பிள்ளளையார் படம்போட்டகரன்சி நோட்டை வெளியிட்டது.இந்தோனேசியாவிலிருந்துஹஜ்ஜுக்குசென்றவர்கள் கொண்டுபோனார்கள்.இந்தோனேசியாஇஸ்லாமிய மேதைகளோ சவூதி அரபியாவோமூச்சுவிடவில்லை!

Ebrahim Ansari சொன்னது…

ஒரு விஷயத்தை நீண்ட நாட்களாக மனதில் போட்டு வைத்திருக்கிறேன். வெளிப்படுத்த அல்லது கேள்விக்கனைகழ்த் தொடுக்க இன்றே சந்தர்ப்பம் வந்தது.

பதிவாளர்கள் எழுதும்போது அறிந்தோ அறியாமலோ சில வழக்குச் சொற்களை அல்லது கலாசார உதாரணங்களை சுட்டி எழுதிவிட்டால் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது தொடர்ந்து சிலரது பழக்கமாக இருக்கிறது. ஒரு வகையில் இது தவறுகளை சுட்டிக் காட்டும் மனப்பான்மை என்று எடுத்துக் கொண்டாலும் பலவகையில் இது
பதிவாளர்களை மனமோடியச் செய்யும் செயலாகவே கருத வேண்டி இருக்கிறது.

தொடர்ந்து வந்த எனது பதிவுகள் இப்போது வராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு பெரிய காரணம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்.

இஸ்லாத்தின் விழுமியங்கள் நமது இரத்தத்தில் கலந்தவை. அதேநேரம் இஸ்லாமியர்கள் வாழும் மண்ணின் விழுமியங்களையும் நமது முதல் கடமைக்கு நமது எண்ணத்தில் பங்கமில்லாமல் எடுத்துச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அதே நேரம் இப்படிப்பட்ட எழுத்தில் குறை காண்பவர்களின் கண் முன்னே

பொய்யான தகவல்களைச் சொல்லி அயல்நாடுகளுக்கு விசா பெறுபவர்கள் பற்றியோ
மார்க்கத்துக்கு விரோதமாக மகர கொடுக்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் பற்றியோ
மாமனார் வீட்டில் வீடு மற்றும் பொருள்களை வாங்கிக் கொள்வது பற்றியோ
மாமனார் வீட்டில் தேரா அடித்து சாப்பிடுபவர்களை/ அப்படியே சாப்பிட்டாலும் அதற்கு பற்றாகுறையான பணத்தை மாதப்பணம் என்று கொடுப்பவர்கள் பற்றியோ
வெளிநாடுகளில் வேலை செய்கிறேன் என்ற பெயர்களில் மதுக்கடை அல்லது பார்களில் மது ஊற்றிக் கொடுப்பவர்களைப் பற்றியோ
தகுந்த காரணமின்றி கோபத்தால் தலாக் சொல்லிவிடுபவர்களைப் பற்றியோ
மூச்சுக் கூட விட முடியவில்லையே அது ஏன்?

மார்க்கம் நிலைநிறுத்தப் படவேண்டியது இத்தகைய பதிவுகளில் மட்டும்தானா அல்லது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலுமா?

கண்முன்னால் நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் விடுவது அல்லது அதுபற்றி ஆள்பார்த்து பேசுவது கண்டிப்பது கண்டனம் தெரிவிப்பது சரியா?

தவறுகளைத் தட்டிக் கேட்பவர்கள் எல்லா நிலையிலும் அந்த நிலையை எடுக்க வேண்டும். SELECTIVE நோக்கம் இருக்கக் கூடாது.


sheikdawoodmohamedfarook சொன்னது…

//அறுவடைதான் களவுபோனது உங்கள்கைக்கு எட்டாமல்// மருமகன் ஜாகிர் சொன்னது. அந்த[அறு]வடைகாக்கைக்குகூடகிடைக்காமல்கூரியரில் நரிவாய்க்கு போய் விட்டது.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பினாங்லேர்ந்து லீவெடுத்து (பெரும்பாலும் லொத்தர் அடித்து) ஊர் வந்தவர்களிடம் வாப்பாவைப் பற்றி சேதி கேட்க உம்மா போகும்போது உடன் சென்ற நினைவுண்டு.

ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ் மணக்க, குஸ்னியிலிருந்து வரும் முட்ட மொளவுதணி வாசத்தில் லயித்து அவர்கள் சொல்லும் சேதிய கேட்க கேட்க பிரமிப்பா இருக்கும்.

ஃபாரூக் மாமாவின் எழுத்தை அப்படித்தான் ஓர் ஈர்ப்போடு வாசித்தேன்.

என்ன ஓர் எதார்த்தமான எழுத்து நடை, மாஷா அல்லாஹ்!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா.

sabeer.abushahruk சொன்னது…

ஃபாரூக் மாமாவின் பதிவிற்காக, நான் சமீபத்தில் கோலாலம்ப்பூர் சென்றபோது ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் எடுத்த செல்ஃபிகளிலிருந்து என்னையும் என் நண்பர்களையும் மிகவும் நேர்த்தியாக நீக்கிய 'டெக்னிக்கல் பூச்சாண்டி' அபு இபுவுக்கு ஒரு ஸலாம்.

ஃபாரூக் மாமா,

ஹனீஃபா டெக்ஸுக்குள் போய் அங்கிருந்த பினாங் ஜாமான்களை பார்த்ததும் எனக்கு யூனூஸ் மாமா பொட்டி பிரித்து அள்ளித் தந்த தினங்கள் நிழலாடியது.

sabeer.abushahruk சொன்னது…

நேற்று என் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்,

கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் கடவுள் வாழ்த்துக்கு 10 மார்க்:

திருவடி தொழுவோம் அன்புடன்
திருவடி தொழுவோம்

தருமம் தழைக்கவே
சத்தியம் ஓங்கவே....

பாதம் பணிதல் ஷிர்க்கென்று படித்துக் கொடுக்காமல் போனால் ஃபயிலாயிடுவான், பரவால்லையா?

ஈமானின் ஸ்திரத்தன்மையை சுய நடவடிக்கைகளில் காட்டி உதாரண முஸ்லிம் மனிதனாக வாழ முயழும் என் போன்றோர்க்கும் தம்பி இப்னு அப்துர்ரஸாக்கின் சுட்டல் கொஞ்சம் ட்டூ மச்சாகவே படுகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அனுபவங்கள் அழகான எழுத்து நடையில் அருமை!

sabeer.abushahruk சொன்னது…

I, further reiterate on Ebrahim Ansari kaka' justification

அதிரை.மெய்சா சொன்னது…

Artikel ini adalah besar. Tahniah.

Shameed சொன்னது…

சாதரணமா சாமி பூசாரி என்று வருவதற்கு கூட தடைபோடசொன்னால் இன்றைக்கு தமிழக அரசின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி நிதியை பெற்றுதருவது சாராய விற்பனை இந்தசாராய விற்றுவரும் நிதியில் இருந்து தமிழக அரசு நிறையசலுகைகளை அளித்து வருகின்றது இதற்க்கு நாம் என்ன செய்ய முடியும் தமிழ்நாட்டைவிட்டு காலிசெய்துவிட்டு வேறுமாநிலம்போய் விடுவோமா அங்குபோனாலும் பாங்கில் கிடைக்கும் வட்டியை வைத்து எதாவது உதவியை நாட்டுமக்களுக்கு செய்வார்களே

Yasir சொன்னது…

மாஷா அல்லாஹ்...படிக்க படிக்க சுகம்தரும் எழுத்துநடை....அடுத்த எபிசோடுக்காக ஆவலுடன் காத்திருப்போம்

Unknown சொன்னது…

'அதிரைமணம்' திரட்டியில் தலைப்பைப் பார்த்தவுடன், அது ஃபாரூக் காக்காவின் ஆக்கமாகத்தான் இருக்கும் என்று guess பண்ணினேன். நிருபரைத் திறந்து பார்த்தபோது, நான் நினைத்தது 100% சரியாகிவிட்டது!

ஃபாரூக் காக்கா! இது ஓர் இலக்கியம்! தொடருங்கள்! கைத்தடியை விட்டுவிட்டுக் கொஞ்சம் நிமிர்ந்து நில்லுங்கள்! நம்மைப் போன்றவர்களை இது போன்ற ஊக்கிகள்தாம் இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன, அல்லாஹ் உதவியால்.

தொடர் முடிந்தபின், கொ....ஞ்....ச....ம் touch பண்ணி நூலாக வெளியிடலாம். அதற்கான தகுதிகள் அனைத்தும் இத்தொடரில் உள்ளன.

குறிப்பு:
இந்தக் comment எழுதி முடிக்கும்வரை, மேலிருக்கும் எந்தப் பின்னூட்டத்தையும் நான் வாசிக்கவில்லை...! நம்புங்கள்...!

sheikdawoodmohamedfarook சொன்னது…

இத்தனைநாள்மௌனத்தின்காரணம்விளக்கிமனம்திறந்து விட்டார் மைத்துனர்இப்ராஹிம்அன்ஸாரி!நாமெல்லாம்ஒருவீட்டுக்குவாக்கப்பட்டு வந்தமருமகள்தான்.மருமவஒடச்சா பொஞ்சட்டி! மாமியா ஒடச்சா மஞ்சட்டிநீதிதான்.நம்மைபடைச்சஅல்லாஅப்படிநம்மதலைமேலே எழுதி இருக்கும்போது தலைதாழ்த்திபோக வேண்டியதுதான். வென்றவன்சொன்னதெல்லாம்வேதமல்லால்வேறு என்ன?

Unknown சொன்னது…

//இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது//

//இது போன்றதுகளை தவிர்க்கலாம்// - அர அல

மற்றுமோர் இலக்கியம் உருவாவதற்கான challenge இது!

sheikdawoodmohamedfarook சொன்னது…

அதிரைஅஹமத்காக்க கம்மேண்டில்உள்ளஎழுத்துக்கள் எல்லாம்எழுத்துக்கள்அல்ல! அதில்காணும் வொவ்வொரு எழுத்தும்ஒருசத்துமாத்திரையெனஎன்நெஞ்சக்குபடுகிறது! உங்கள்போன்றவர்களின்வாழ்த்தும்வரவேற்ப்பும்இஸ்லாமியஎழுத்தாளர் களைஎதிர்காலத்தில்ஈன்றுபுறம்தரும்-சான்றோனாகவும்ஆக்கும் .நன்றிஅஸ்ஸலாமுஅலைக்கும்

Unknown சொன்னது…

வ அலைக்குமுஸ் ஸலாம் !

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear Uncle,

I see your thoughts in the article are vibrant and steady in flow with useful lessons for life.

I remember the previous unforgetable meeting on 9th Sep 2015 evening with you in your home. I observed from you so many insights, your keen observation, judging the flow of other's thoughts, and your blessings and dua. Most valuable time spent with you on that day around 2:45 hours!!!

Keep writing here please... with your usual unique style. We all love your thoughts and writings. Take care of your health.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.