Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அணு அணுவாய் அச்சம்!! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2011 | , , , ,

உலகிற் சிறியது
அணு,
உலையில் கொடியது
அணு,
உடைக்கும் பொழுதினில்
பிழை நடப்பின்
உலகில் ஏது மனு?

அறிவியல் வளர்ச்சியில்
அணுவினைக் கண்டது
'ஆக்குதல்' வழியில்
நலம்.
'அழித்தலின்' வழியில்
இரத்தக் களம்.
பின்னதை எண்ணி
பீதியில் வாழுது
கூட்டமாய் ஒரு குலம்.
அது எம்
கூடங்குளம்.

அஞ்சுவது அஞ்சாமை
பேதமை.
நெஞ்சம் இதில்
அஞ்சுவது மேதமை.
கொஞ்சமது என்றாலும்
தீங்கு
கொடிதென்னும் நிலை,காரணம்
அது அணு உலை.

அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்தது
வள்ளுவம்.

அணுவைப் பிளந்து
மனுவை இழந்து
மின்வளத்தை பெருக்குதலில் என்ன
புண்ணியம்?

அறிவியல் வளர்ச்சியில்
அணுவில் மின்
ஆக்குதல் ஒரு கலை.
அச்சம் போக்கிடும்
அறண்வழி சொல்லாமல்
ஆலையைத் துவக்குதல் பிழை!

அரசியல் பானையில்
அணுவினைச் சமைத்து
ஆதாயச் சட்டியில்
வடித்திடும் உலை,
வாக்குகளிட்ட மக்களின்
வாழ்க்கைக்கு ஆபத்து நிலை.

பட்டபின் உணரும்
பாங்கு இதிலே
பலிக்காது, காரணம்
பட்டபின் பாடம் கற்க
பசும்புல் கூட உயிருடன்
இருக்காது.

வீட்டினை எரித்து
விளக்குகள் செய்யும்
விசித்திர நிலை
நீக்க வேண்டும்.
சட்டென இதற்கு
தீர்வு காணும்
சாத்தியக் கூறுகள்
ஆக்க வேண்டும்.

எதிர்ப்புடன் இருக்கும்
மக்களின் பயம்
எம்மை ஆளுவோர்
போக்க வேண்டும்.
கதிர் வீச்சில் காயப்படா
தலைமுறை இனி
பூக்க வேண்டும்.

- அதிரை என்.ஷஃபாத்

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பட்டபின் உணரும்
பாங்கு இதிலே
பலிக்காது, காரணம்
பட்டபின் பாடம் கற்க
பசும்புல் கூட உயிருடன்
இருக்காது.//

அணு அணு வாய் ! பாடம் நடத்தும் வரிகள் !

அணுவினால் கிடைக்கும் ஆக்க சகிதியைவிட அதன் பின்னால் ஏற்படும் அழிவுகளை அழகுற வடித்த அற்புதமான கவிதை !

சொல்பவர்கள் சொன்னால்தன் செவிக்குள்ளும் செல்லும் அந்த வகையில் தம்பி ஷஃபாத் cool ! (அருமை)

என்னளவில் தனிப்பட்ட கருத்து:

அறிவியல் வளர்ச்சியில் இப்படியான மாற்றங்களை ஏன் தடுக்கிறார்கள் எதிரிக்கிறார்கள் என்று கோபம் இருக்கிறது... காராணம் கூடங்குளம் என்றொரு இடத்தில் அணு உலை ஆரம்பிக்க ஆயத்தங்கள் ஆரம்பத்தில் செய்யும்போது எவரும் எதிர்க்க வில்லை, அங்கே அனைத்து கட்டமைப்பு வசதிகள் வந்ததும் எங்கிருந்துதான் திடீரென்று தூங்கி எழுந்தார்காளோ தெரியவில்லை தேவையான வசதிகள் ஊருக்குள் வந்ததும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சதியில் விழும் மக்கள் மதியால் விழித்துக் கொள்வதில்லை !
விதிதான் என்றும் இருந்திட்டு வென்றிடவும் மனமில்லை !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அணுவின் விளைவு பற்றி அழகாய்ச்சொன்ன விதம் அருமை ஷஃபாத்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

அதிரை என் ஷஃபாத்,

அருமை அருமை…!

அதிரை ‘என்’ ஷஃபாத்தை அதிரை ‘எங்கள்’ ஷஃபாத் என்று கூப்பிட வேண்டும் போலுள்ளது. ஆதங்கம் என்னை முழுதும் கவலை கொல்லச் செய்தாலும், கவித்துவமான கவலையில் என்னை பிரமிக்க வைத்தன கீழ்கண்ட வரிகள்:

//(அறிவியல் வளர்ச்சியில்
அணுவினைக் கண்டது
'ஆக்குதல்' வழியில்
நலம்.
'அழித்தலின்' வழியில்
இரத்தக் களம்.))//

//பின்னதை எண்ணி
பீதியில் வாழுது
கூட்டமாய் ஒரு குலம்.
அது எம்
கூடங்குளம்//


இதில் இரண்டு விதமாக அர்த்தம் காணலாம். ஆக்குதல் முன்னது எனில் அழித்தல் பின்னது எனக்கொண்டு, அந்தப் பின்னதை எண்ணி பீதி...என்றும்; முதலில் சும்மா இருந்துவிட்டு ‘பிறகு அதை’ என்பதை ‘பின் அதை’ ‘பின்னதை எண்ணி பீதியில்...’ என்றும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார் கவிஞர்.

//அரசியல் பானையில்
அணுவினைச் சமைத்து
ஆதாயச் சட்டியில்
வடித்திடும் உலை//


வாவ்...வாவ்...!

இதை ஷஃபாத்தின் ஒலி வடிவில் கற்பனை செய்தேன், அகமகிழ்ந்தேன். எங்கேயா இருந்தே நீ இத்தனை நாளும்?

நிறைய எழுதுங்க ஷஃபாத்.

//வீட்டினை எரித்து
விளக்குகள் செய்யும்
விசித்திர நிலை
நீக்க வேண்டும். //


வல்லாஹி சூப்பர்!!!

முண்டாசு கட்டாத பாரதியே, உமது கோபமும் அக்கறையும் வெளிப்படுத்தப்பட கவிதைகளே ஆயுதமாகக் கொள்ளவும்…வெல்லவும் (கிரவுன் எங்கே?)

உங்க கவிதையைப் படித்ததும் எனக்கும் உத்வேகம் வர… வரிகளும் இப்படி வந்து விழுந்தன. தொடருவோமா?

கதிர் வீச்சொன்றும்
கல் வீச்சல்ல
களிம்பு தடவவும்
காயம் ஆறவும்,
வாழும் உயிரையும்
வருங்கால உறவையும்
வகிந்து போடும்
வாள் வீச்சு!

அபு இபுறாஹீம், நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருந்தாலும் கவிஞன் எப்போதும் “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிக்கும்” குணமுள்ளவன். ஜகத்தையும் ஜகத்தின் அணுக்களையும் விட மனித உயிர்தான் பெரிது அல்லவா?

(உங்கள் ‘தனிப்பட்ட’ கருத்துக்கு என் கருத்து ‘தண்ணிபோட்ட’ கருத்து மாதிரி இருக்கா?:))

sabeer.abushahruk

அப்துல்மாலிக் said...

அனு உலைக்கு அடிக்கல் நாட்டும்போதே எதிர்த்திருக்க வேண்டும், தும்பை விட்டு வாலை பிடித்திருக்கோம்.. சொல்வதற்கு ஒன்னுமில்லை

வார்த்தையை கோர்த்தவிதம் அருமை ஷாஃபாத் சகோ வாழ்த்துக்கள்

Yasir said...

அணுவைப்பிளப்பதால் பவர் வருவதை நான் பார்த்ததில்லை...ஆனால் உங்கள் கவிதையை படித்தவுடன் அணுவைப்பற்றி ஒரு வித பயம் வருவதை உணர்ந்தேன்......கூடங்குளத்துக்கு அனுப்பிடாதீங்க இதனை தேசிய கீதமாக ஆக்கி அதற்க்கு ஒரு டீயூன் போட்டு...போராட்டத்தை பூதாகரமாக்கிவிடப்போகிறார்கள்......முன்கூட்டியே சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டிய விசயம்....எனர்ஜி சோர்ஸ் எங்கேட கிடைக்கும் என்று வாய்பிளந்து இருக்கும் இந்தியா ,சைனா போன்ற நாடுகள் அணு உதவி இல்லாவிட்டால் அவதிப்பட வேண்டியதுதான்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பாசத்திற்குரிய தம்பி ஷஃபாத் நீ அதிரை நிருபரில் உலையை வைத்தாய்.ஆனால் எங்கள் மனம் என்றொரு
பானையில் வேகமாக கொதிக்கிறதே! அந்த கூடங்குளம் உணர்வுகள்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

ஷஃபாத்தின் கவிதையில் உணர்ச்சி பொங்கி வருகிறது, வாழ்த்துகள்!

***
பாமரனின் 'புத்தர் சிரித்தார்'நூலை யாராவது வாசித்திருக்கின்றீர்களா?

http://pamaran.wordpress.com/
அந்த நூலின் பெயரின் மூலம் யாருக்காவது தெரியுமா?

Yasir said...

அதிரை நிருபர் டெய்லி ஏதேனும் "பியூட்டி பார்லர்" போய்ட்டு வர்றீங்களா.....வர வர அழகாக தெரியுரிங்க வாழ்த்துக்கள் மென்மேலும் மெருகு கூட்ட

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி ஷஃபாத்,

உணர்ச்சி பூர்வமான கவிதை,

கூடங்குளம் விவகாரத்தில் நெருடல் என்னவென்றால், அணுமின் நிலையாம் வரப்போகுது என்று அரசு அவ்வூரை வளப்படுத்தியது, அவற்றை எல்லாம் அனுபவித்துவரும் அம்மக்கள் இன்று ஆணு உலையை மூடச்சொல்லுவது தான் வேடிக்கை.

இதில் ஏதோ மிகப் பெரிய சூழ்ச்சி நடைப்பெறுகிறது என்பது மட்டும் சந்தேகமாகவே உள்ளது.

எது எப்படியோ வருமுன் காப்பதே சிறந்தது என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.

மீண்டும் தம்பி ஷஃபாத்துக்கு வாழ்த்துக்கள்.

Shameed said...

கண்டு பிடிப்புக்கள் அனைத்திலும் நன்மை தீமை உண்டு நாம் தீமையை மட்டும் பார்க்காமல் நன்மையையும் பார்க்க வேண்டும் ,பஸ் விபத்துக்களும் விமான விபத்துகளும் நடகின்றது என்று நாம் பயணம் செய்யாமல் இல்லை. அது அதுக்கு தகுந்த பாதுகாப்புகள் செய்து விட்டு பலனை அடைய வேண்டிய கால கட்டாயம் தற்போது நிலவுகின்றது

அணு உலை தொடங்கியபோது வாய் திறக்காது இருந்தவர்கள் பலகோடி டாலர் செலவு செய்து திறக்கும் தருவாயில் வாய் திறப்பதேன்.

நாக்கு அணுஉலையை விட மோசம் அதை நாம் நம் வாய்க்குள் வைத்து பாதுகாத்து வைத்துள்ளோமே அதுபோல் அணு உலையையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்

Muhammad abubacker ( LMS ) said...

//நாக்கு அணுஉலையை விட மோசம் அதை நாம் நம் வாய்க்குள் வைத்து பாதுகாத்து வைத்துள்ளோமே அதுபோல் அணு உலையையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் //

சபாஸ் ஹமீது காக்காவின் கண்டு பிடிப்பான நாவுலை ஷ ஃபாத்தின் அணு உலையையும் அழித்துவிடும்.வல்லமை மிக்கது.
அந்த நாவுலைக்கு அஞ்சிக் கொள்வோம் .

ZAKIR HUSSAIN said...

அதிரை என். ஷஃபாத் கவிதை வரிகள் அனேகமாக மக்கள் டி வி யிலும் வாசிக்கப்படலாம்.

ZAKIR HUSSAIN said...

///“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிக்கும்” குணமுள்ளவன். ///

ஜகத்தினை அழித்தால் உணவு கிடைச்சுடுமா?

சுத்த கப்பித்தனமா இருக்கு !!

ZAKIR HUSSAIN said...

கண்ணகி தன்னுடைய புருசனைக்கொன்றது மதுரை அரசன் என்பதால் மதுரையயை எரித்ததற்க்கு காரணம் என்னவாக இருக்கும் என கேட்டதற்க்கு என் சீனியர் சொன்னது "தூக்க மாத்திரை அதிகம் கண்டுபிடிக்கபடவில்லை. அல்லது அனஷ்தடிக் மருந்தும் கிடைக்கவில்லை."

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
கண்ணகி தன்னுடைய புருசனைக்கொன்றது மதுரை அரசன் என்பதால் மதுரையயை எரித்ததற்க்கு காரணம் என்னவாக இருக்கும்


இப்படி இருக்குமோ கண்ணகி மதுரையில் அடுப்பு எரிச்சதை தப்ப மதுரையை எரிச்சதா இட்டு கட்டி புட்டாங்க போலோ!!

அதிரை என்.ஷஃபாத் said...

ஜமீல் காக்கா,

உங்கள் கேள்விக்கு பதில் சின்னதாய் ஒரு கூகிள் தேடலில் சிக்கியது.

/*.புத்தர் சிரிக்கிறார் என்ற வார்த்தை 1974 இல் அறிவியலாளர்கள் முதல் அணுகுண்டுவை சோதனை செய்து அதன் வெற்றியை பிரதமருக்கு கூற பயன்படுத்த பட்ட சங்கேத சொல்*/

Good to know !!

அதிரை என்.ஷஃபாத் said...

வாசித்த எல்லோருக்கும், வாழ்த்திய நெஞ்சங்கட்கும் நன்றி !!
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!

அதிரை என்.ஷஃபாத் said...

/*தொடங்க திட்டமிடும் போது எதிர்க்காமல், துவக்குதல் நேரத்தில் எதிர்ப்பது ஏன்?*/

எல்லோரின் ஆதங்கமும்/ஆத்திரமும்/விடை தெரியா வினாவும் இது தான். போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், அப்பாவி மக்களுக்குள் பயம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மை. அணு உலையால் என்ன பாதிப்பு வரக்கூடும், அதை தடுக்கும் வண்ணம் என்னென்ன/எத்தகு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கி அவர்களது அச்சம் போக்கும் வழியை கையாள அரசு ஏன் இவ்வளவு யோசிக்கின்றது என்பதும் வினா எழுப்புகின்றது. பிரயோசனப்படாத உண்ணாவிரதங்களுக்கு காட்டப்பட்ட, ரத யாத்திரைகளுக்கு காட்டப்பட்ட அக்கறையும் விளம்பரமும் உயிர் விஷயத்திலும் (அதே அளவிற்கு) காட்டுவதற்கு ஊடகங்கள் ஏன் முன் வரவில்லை என்பதும் கேள்வி எழுப்புகின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அணு மின் நிலையம் தொடங்கப்பட்டபோது யாருமே எதிர்க்கவில்லை எனும் கருத்தாடல் தவறு என்பதைச் சுட்டவே பாமரனின் எழுத்துகளை இங்குச் சுட்டியாக வைத்தேன். அவற்றை யாரும் படிக்கவில்லை எனத் தெரிகிறது.

//ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மற்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது கூடங்குள மக்களது வாழ்க்கையில். 90 களில் இம்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அநேகம் பேர் ஓசையின்றி காணாமல் போனார்கள். (அதில் நானும் ஒருவன்). தமிழ்ச் சமூகத்திற்குத்தான் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றனவே…. சமூக நீதி, சாதீயம், ஈழம் என…… அதில் ஏதோ ஒன்றில் ஒன்றிப்போயிருக்கலாம் நம்மவர்கள். அவற்றைப் போலவே இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கூடன்குள மக்களது அவலமும்//

மேலும் வாசிக்க > http://pamaran.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/

தொடர்புடைய சத்தியமார்க்கம்.காம் பதிவு :http://www.satyamargam.com/1781

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சத்தியமார்க்கம்.com தளத்தில் விரிவான அலசலும், 20 வருடத்திற்கு முன்னால் கிளம்பிய புயல் எப்படி ஆடி அடங்கியது என்றும் மிகத் தெளிவாக பதிந்திருக்கிறார்கள்...

அதில் சில எனக்கு புதுசு (தகவல்கள்)... நாம சொன்னதைத்தான் நல்லக் கண்ணும் சொல்லியிருந்தார் ஒரு பேட்டியில் ஆனால் அப்போது இந்த உள்குத்து தெரியாமலிருந்தது, பாமரனின் அலசல் அருமை அதனை மிள்பதிவு செய்த சத்தியமார்க்கம்.com தளத்திற்கும் நன்றிகள் !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அதிரை நிருபர் டெய்லி ஏதேனும் "பியூட்டி பார்லர்" போய்ட்டு வர்றீங்களா.....///

சகோதரர் யாசிர் : தொழில்நுட்ப இளைமை(யான)குழு வருடல் தொடர்வதால்.. மேலும் தரம் உயர்ந்த மெருகேற்றம் புலப்படும் அவ்வப்போது இன்ஷா அல்லாஹ்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே எப்படி கண்ணகி வந்தாள் !? அழிவை நினைவு படுத்தவா ? / இல்லை மீட்டெடுக்கவா ? அதிரையிலிருப்பவங்க ஏன் மதுரையை நினைச்சு பார்க்கிறாங்க !?

KALAM SHAICK ABDUL KADER said...

புதிராகிப் போன நிலை
கதிர் வீச்சு அணு உலை

அனைத்து உயிர்களின் விலை
அணு மின் உலை

மக்கள் பக்கம் நிற்கும்
“தோழர்கள்” எங்கே?
இக்கணம் எதிர்ப்பது
இவ்வுலை ரஷ்யாவுடையது என்பதாலா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு