Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை - 2 43

அதிரைநிருபர் பதிப்பகம் | January 07, 2012 | , , , , ,

முன் குறிப்பு:

இத்தொடரின் முதற்பகுதியைக் கண்டவுடனேயே சிலருக்குக் கொதிப்பு?   புரிந்துணர்வில் குறைபாடு!  இத்தகையோரின் புரிந்துணர்வு -  

* ‘நபியின் கவிஞர்’ என்று பாராட்டப் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* கவிஞர் கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* போர்ப்பரணி பாடிப் பொருத அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* கவி பாடிக் களம் புகுந்த மிக்தாத் இப்னுல் அஸ்வது (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* ‘அஹதுன், அஹதுன்’ என்று ஒருமைப்பாட்டை உயிர் போக இருந்த தருணத்திலும் உறுதி செய்த பிலால் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* ‘வேத விரிவுரையாளர்களின் தலைவர்’ எனப் போற்றப்படும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?  அல்லது, 

நேர்வழி நின்ற இமாம்களான:-

இமாம் ஷாஃபிஈ
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
இமாம் இப்னுல் முபாரக்
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்)

போன்றோரின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?  இப்புலமைச் சான்றோரையும் இன்னும் பலரையும் பற்றி இத்தொடரில் அவ்வப்போது எடுத்துக் காட்டுவோம், இன்ஷா அல்லாஹ்.

நானொன்றும் கவிதைதான் சிறந்தது என்றோ, குர்ஆனும் கவிதைதான் (நஊது பில்லாஹ்!) என்றோ, ஒருபோதும் சொல்லவில்லை;  எழுதவில்லை.  இஸ்லாம் கவிதைக்குக் கொடுத்துள்ள இடம், வரம்புகள் பற்றிய ஆய்வே நமது தொடரின் நோக்கம்.  ‘தஅவா’ப் பணிக்குக் கவிதை எவ்வாறெல்லாம் பன்மொழி அறிஞர்களால் பயன்படுத்தப்படுகின்றது என்பதை நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம்.  ஆனால், தமிழில் மட்டும்தான் பின்னடைவு!  அந்தோ பரிதாபம்!  அதைக் களையும் ஒரு சிறு முயற்சிதான் எனது இத்தொடர்.  இன்ஷா அல்லாஹ், இத்தொடர் நூலுருப் பெறும்போது, எதிர்க் குரல் எழுப்பியோரின் வாதங்கள் எல்லாம் தவறாமல் அதில் இடம்பெறும்.  இனித் தொடர்வோம்.....    

அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள்:

“அஸ்தகு கலிமத்துன் காலஹா அஷ்ஷாஇரு கலிமத்து லபீதின்,
‘அலா குல்லு ஷைஇன் மா களல்லாஹு பாத்திலு’
வக்காத உமையத்து இப்னு அபிஸ் சல்த்தி அன் யுஸ்லிம.”

(கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன, ‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக்கூடியவை’ எனும் சொல்தான்.  கவிஞர் உமய்யத் இப்னு ஆபிஸ் சல்த் (தனது கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.”)

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது மிகச் சரியான நபிமொழித் தொகுப்பின் ‘கித்தாபுல் அதபு’ (நற்பண்புகள்) என்ற பெரும் பிரிவின் ‘பாபு மா யஜூஸு மினஷ் ஷஃரி வர்ரஜஸி வல் ஹுதாஇ வமா யுக்ரஹு மின்ஹு’  (கவிதை, யாப்பிலக்கணப் பாடல், ஒட்டகப் பாட்டு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்) எனும்  துணைப் பிரிவில் இத்தொடரை எடுத்தாண்டுள்ளார்கள்.

இஸ்லாமிய இலக்கியத்தில், கவிதைக்கும் ஓர் இன்றியமையாத இடமுண்டு என்பதை இதுவும், இது போன்ற எடுத்துக்காட்டுகளும் மெய்ப்பிக்கின்றன அல்லவா?

(இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்)
- அதிரை அஹ்மது

43 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாய்மொழியை இஸ்லாத்தோடு இணைந்து கவித்துவத்துவத்திலும் வளர்த்திட நல்ல செய்தி!

தொடரட்டும் மேலும்!

KALAM SHAICK ABDUL KADER said...

//நானொன்றும் கவிதைதான் சிறந்தது என்றோ, குர்ஆனும் கவிதைதான் (நஊது பில்லாஹ்!) என்றோ, ஒருபோதும் சொல்லவில்லை; எழுதவில்லை. // அப்படியாக நான் எழுதும் கருத்துரைகட்குத் தவறான அர்த்தம் கற்பிக்க முயன்றதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக.

//யாப்பிலக்கணப் பாடல்// இவ்வரிகட்கு பொருள் விளங்கவில்லை என்று புரிந்தும் புரியாதது போல், “புரிந்துணர்வில்” குறையுடன் கருத்துரை வருவதற்கு முன்னர், தமிழில் பயன்படுத்தப்படும் யாப்பிலக்கணம் , அரபு மொழியில் எவ்வாறுக் குறிப்பிடப்படுகின்றது என்று மாண்புமிகு ஆசான் அவர்கள் உடனுக்குடன் விளக்கி விட்டால் விவாதம் நீண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் கட்டுரையின் நோக்கம் நிறைவேறவும் வசதியாக அமையும்.

//ஆனால், தமிழில் மட்டும்தான் பின்னடைவு! அந்தோ பரிதாபம்! அதைக் களையும் ஒரு சிறு முயற்சிதான் எனது இத்தொடர்.//

தொடரட்டும்

sabeer.abushahruk said...

//இஸ்லாம் கவிதைக்குக் கொடுத்துள்ள இடம், வரம்புகள் பற்றிய ஆய்வே நமது தொடரின் நோக்கம்//

//இஸ்லாம் கவிதைக்குக் கொடுத்துள்ள இடம், வரம்புகள்//

//இஸ்லாம் கவிதைக்குக் கொடுத்துள்ள இடம்//

//இஸ்லாம் கவிதைக்குக் கொடுத்துள்ள வரம்புகள்//


it is crystal clear. And therefore, no comments.

தொடருங்கள், இன்ஷா அல்லாஹ்!

அதிரைக்காரன் said...

கவிதை என்பது சொற்களின் கோர்வை, எதுகை மோனையில் கையாளும் மொழியின் ஓர் பகுதி. சொல்லவரும் விசயத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் கருவி,இஸ்லாத்தின் வரம்புக்குள் வரும் எதுவும் தவறல்ல என்பது கவிதை/மார்க்கம் குறித்த என் புரிதல். அவ்வகையில்,கவிதைக்கு அழகூட்ட இல்பொருள் உவமை தவிர்த்து ஏனைய அணிகளால் எழுதப்பட்ட கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் எழுத்தோவியங்களாகவே கவிதையை நான் கருதுகிறேன்.

மார்க்கம்+தமிழில் பண்டிதரான அஹமது காக்காவின் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

//தமிழில் பயன்படுத்தப்படும் யாப்பிலக்கணம் , அரபு மொழியில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது...//

'ரஜஸ்' என்பது, அரபி மொழியில் கவிதை இயற்றுவதற்கான இலக்கண வரம்பு. ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் இலக்கண வரம்பு உள்ளது போல் அரபியில் உள்ள கவிதை (யாப்பு+இலக்கணம்=யாப்பிலக்கணம்) வரம்பு. தமிழிலக்கணத்தில் யாப்பின் வகைகளும் அதன் முறைகளும் இருப்பது போன்றே அரபியிலும் கவிதைக்கான இலக்கண வரம்புண்டு என்பதை அரபு மொழி கற்கும் மாணவர்கள் அறிவர். இதனை ஜீரணிக்க முடியாதவர்கள், ஒருசில வாக்குகளை மட்டும் படித்துவிட்டு, "கவிதை கூடாது!" எனக் குரலெழுப்புகின்றனர். எனது நிலைபாடும் நோக்கமும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. நான் தொடர்வேன், இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்புலமைச் சான்றோரையும் இன்னும் பலரையும் பற்றி இத்தொடரில் அவ்வப்போது எடுத்துக் காட்டுவோம், இன்ஷா அல்லாஹ்.//

//எனது நிலைபாடும் நோக்கமும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. நான் தொடர்வேன், இன்ஷா அல்லாஹ்.//

இன்ஷா அல்லாஹ் தொடருங்கள்... !

ஒரு நினைவூட்டலுக்காக, கவிதை தமிழில் இருந்தாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதிலிருக்கும் புலமையை அதிகமதிகம் நேசிக்கும் அதன் சொல்லாடல்களை எடுத்தாண்டு என்னோடு விவாதிக்கு ஒரு சகோதரி எங்களிடம் கேட்டது ஏன் அழைப்பு பணிகள் பற்றி எழுதலாமே என்று அவரின் வேண்டுகோளை கவிக் காக்காவிடம் சொன்னேன் அதன் விளைவு கீழே வைத்திருக்கும் அழைப்பு.

நான் மற்றும் எனது நண்பர்கள் தொடர்ந்து அவருக்கு நீண்ட நாட்களாக வைத்த அழைப்பின் பலன் அல்லாஹ்வின் பேருதவியால் நேர்வழியைத் தேர்ந்தெடுத்ததோடு மட்டுமல்லாது தனது குடும்பத்திலிருக்கும் அங்கத்தினருக்கும் அழைப்பை தொடர்ந்து வருகிறார்...

அல்ஹம்துலில்லாஹ் !

//பயணம் ஒன்று... பாதைகள் வேறு!
(ஏன் இஸ்லாம்?)

வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!

படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?

படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?

உலகைப் படைத்தவனே
உன்னையும் என்னையும் படைத்தான்
விண்ணையும் மண்ணையும் படைத்தான்

வணக்கத்துக் குரியவன் ஓருவன்
வழிகாட்டத் தந்தது குர்ஆன்
உறுதியாய் வாழ்ந்து காட்டிடவே
இறுதியாய் வந்தவர் இறைத்தூதர்!

தோளோடு தோள்சேர்ந்துத் தொழுவதே
திருத்தூதர் காட்டிய வழிபாடு
எளியவன் வலியவன் பாராத
ஏற்றமிகு சமன்பாடு இறைஇல்லம்!

ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை

பொறுமை புகட்டும் நோன்பைப்
பிடிப்பதும்
பொருளைப் புரிந்து திருமறை
படிப்பதும்
நல்லறம் கொன்டு ஷைத்தானை
அடிப்பதும்
நன்னீர் ஓடும் நதிகளைக்கொண்ட
சொர்கத்திலோரிடம்
பிடிக்கும்!

ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.

ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.

எத்தனை வழியுண்டு ஈடேற
எதனால் ஏற்கனும் இஸ்லாம்?

இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!

புர்கா என்றொரு திரை எதற்கு?

தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!

பெண்கள் பணிக்குச் செல்ல தடையா?

தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!

அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!

ஒருவனுக்கு ஒருத்திதானே சரி?

பலதார மணம்
கடமையல்ல பெண்டிரே,
சின்னவீடு வப்பாட்டி
கள்ளத்தொடர்பு கண்றாவி...
தவிர்க்கமுடியாவிடில்
மறுபடி நீயும்
மணந்துகொள் என்பது
நேர்வழியல்லவா?

மனைவியர் மட்டுமல்ல,
மதிகெட்டு மாந்தரிடம்
மயங்கிச் சிக்குவரும் பெண்டிரே!
மறுமணம் அவளுக்கு
கவுரவம் அல்லவா?!

ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!

பாதை மாறினால்
பயணம் முடிந்தாலும்
எட்டவியலாது இலக்கை!

கலிமாச் சொல்
கண்ணியம் கொள்
காட்டிய பாதை செல்
காலத்தை வெல்!

- சபீர்
Sabeer abuShahruk
//

ZAKIR HUSSAIN said...

சபீர்...உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அமல்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
சபீர்...உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அமல்.
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இதை அமல் படுத்தினால் சிறப்பு!

Yasir said...

//புரிந்துணர்வில் குறைபாடு! /// அல்லாஹ் உங்களின் இந்த கட்டுரையின் மூலம் இக்குறைப்பாட்டை தேவைப்பட்டவர்களுக்கு நீக்குவானாக !!! மற்ற சந்தேக விசயங்களிலும் உண்மையாக மார்க்கம் என்ன சொல்கிறது என்று விளங்கி நடக்கும் பாக்கியத்தை நமக்கு அல்லாஹ் தருவானாக

Yasir said...

//வா சகோதரி
வந்திங்கு அமர்/// இக்கவிதை அச்சகோதரியின் மனதில் 1% மாற்றைத்தை ஏற்படுத்தி இருக்கும் (மானால்) அந்த நன்மை உங்களையே சாரும்...

Anonymous said...

இந்த ஆண்டு மே மாதம் கல்வி விழிப்புணர்வு மாநாடு அதிரை நிருபர் குழு நடத்த உள்ளனர். அதற்கு பதிலாக இரண்டு நாட்களுக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தி, மொழிக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் இஸ்லாமியர்களின் பங்கு இதுவரை நம் மக்களுக்கு முறையாக எட்டாத செய்திகளை எட்டி வைக்க ஏற்பாடு செய்யலாம்.

= இரண்டு நாட்கள் நடத்தப் படும் மாநாட்டில் 1 - தமிழ் காத்த தற்கோர், 2 - நாடு காத்த நல்லோர் என்ற தலைப்பில் கவியரங்கம், கருத்தரங்கம் நடத்த வேண்டும்.

= இதற்குரிய இஸ்லாமிய இந்து நாவலர்களை அழைத்து பேசவைக்க வேண்டும்.

= கவியரங்கத்தில் கவிபாடும் கவிதை களையும், கருத்தரங்கத்தில் பேசும் கருத்துகளை கட்டுரையாகவும் திரட்டி ஒரு நூல் வெளியிடலாம்.

= அந்த நூல் மறைக்கப் பட்ட இஸ்லாமியர்களின் நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும் எதிர்கால சங்கதியர் எளிதில் அறிய ஏதுவாக இருக்கும்.

பிறை பத்திரிக்கையில் அஹமது காக்கா அவர்கள் எழுதிவந்த இஸ்லாமிய இலக்கிய சிந்தனை என்ற தொடர், இறுதியில் நூலாக வெளி வந்து 1974 ல் எனக்கு பள்ளியில் பரிசாகக் கிடைத்து, அதை படித்து அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றேன். அதுவன்றி 10 ஆண்டுகளுக்கு முன் சவுதியில் அஹமது காக்காவுடன் அந்த நூலைப் பற்றிய சிறு கலந்துரையாடினேன்.

இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் பயனுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தும் பொறுப்பை அஹமது காக்கா அவர்களிடம் ஒப்படைத்தால், அந்த மாநாட்டை, கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து தொகுத்தும் தரும் ஆற்றல் மிக்க அஹமது காக்கா அவர்கள், பணி ஒய்வு பெற்று சமுதாய சேவை ஆற்றிவரும் இந்நேரத்தை நாம் இப்போதே பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிஞர் பெருமகன் வாழும் காலத்தை நாம் நழுவ விட்டு விடவேண்டாம் என இதன் மூலம் நான் கூறிக்கொள்ள ஆசைப் படுகின்றேன்.

பிற - பின்.

நூர் முஹம்மது.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புக்கினியவர்களே!

அதிரைக்கு கிடைத்த அறிவுசார்ந்த அருஞ்செல்வங்களில் ஒருவரான அஹமது காக்கா அவர்களின் கவிதை – ஒரு இஸ்லாமிய பார்வை ஏறெடுத்த பலரின் புருவங்களை இறக்கிய பெருமைக்கு உரியதாகும்.

இதுவும் விவாதப்பொருளாக ஆக்கப்படுவது வியப்பில்லை.

இன்று நம்மில் எதைப்பற்றித்தான் விவாதிக்கவில்லை? விட்டுத்தள்ளுங்கள்.

அஹமது காக்கா அவர்களே ஒரு முடிவு எடுத்து அறிவித்துவிட்டார்கள்.

இனி இன்னும் எதிர்பார்க்கலாம்.

“இஸ்லாத்தின் வரம்புக்குள் வரும் எதுமே தவறல்ல” என்று அதிரைக்காரன் அவர்கள் குறிப்பிட்டிருப்பது பலருக்கும் உடன்பாடே.

கவிதையை வெறுக்க காரணம் என்ன இருக்கபோகிறது?

சொல்ல வருவதை சுவையாக சொல்வதில் எந்த சொத்து கொள்ளை போய்விடும்?

அறிஞர்கள் என்று கூறி சில பேர்கள் ஆறு மணி நேரம் அறுவை மொழியில் அரைத்த மாவு அரைப்பது போல் அரைப்பதை அன்பு மொழியில் அழகு தமிழில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கவிதைகளில் எடுத்துரைப்பதில் என்ன குற்றம் காண முடியும்?

அண்மையில் படித்த செய்தி. மாற்று முகாமிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பாமரர் ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்வி. “ உங்களை இஸ்லாத்தில் சேர உடனடி தூண்டு கோலாக இருந்தது எது?”

அவரது பதில். “ நாகூர் ஹனிபாவின் அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல நபி வரும்போது இன்னல செய்தாள் ஒரு மாது “ என்ற பாடல் .. பகைவருக்கும் அருள்வாய் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு வந்தேன் “ என்பதாகும்.

இப்படி படிக்காத பாமரர் நெஞ்சிலும் பாயும் உரம் கவிதைக்கு உண்டு.

மற்றொரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தின் முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊர்களிலும் புலவர் வீடு என்ற பட்டப்பெயர் கொண்ட வீடு , குடும்பம் நிச்சயம் இருக்கும்.

வடமாநிலங்களில் “ கவி இரவு” என்று சொல்லக்கூடிய முஷைரா என்று இரவு முழுதும் இறையை புகழ்ந்து உருது மொழியில் கவியரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இன்னும் கூட நான் படித்த எங்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் முஷைரா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இன்னும் தாருங்கள் அஹமது காக்கா. ஏக்கத்துடன் காத்து இருக்கிறோம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

சிறிய மட்டுறுத்தலுடன் பதியப்பட்டிருக்கிறது - நெறியாளர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மார்க்க மேதைகள் அநேகரின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா? என்ற கேள்விகளை கவிதை தொடர்பான புரிந்துணர்வில் ஏற்பட்ட குறையை சுட்டிக்காடிய விதம் ஏற்புடையதே என்றாலும் இன்றைய காலகட்டத்தில் கவிதைகளில் உவமை என்ற பெயரில் அநேகம் பொய்யே அதிக இடம்பெறுகிறது என்ற தாக்கத்தாலோ என்னவோ கவிதைகள் என்றாலே சிலருக்கு பிடிப்பதில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அவரது பதில். “ நாகூர் ஹனிபாவின் அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல நபி வரும்போது இன்னல செய்தாள் ஒரு மாது “ என்ற பாடல் .. பகைவருக்கும் அருள்வாய் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு வந்தேன் “ என்பதாகும்.

இப்படி படிக்காத பாமரர் நெஞ்சிலும் பாயும் உரம் கவிதைக்கு உண்டு.

மற்றொரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தின் முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊர்களிலும் புலவர் வீடு என்ற பட்டப்பெயர் கொண்ட வீடு , குடும்பம் நிச்சயம் இருக்கும்.

வடமாநிலங்களில் “ கவி இரவு” என்று சொல்லக்கூடிய முஷைரா என்று இரவு முழுதும் இறையை புகழ்ந்து உருது மொழியில் கவியரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இன்னும் கூட நான் படித்த எங்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் முஷைரா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. //

இப்றாஹிம் அன்சாரி காக்கா...

இது தகவலுக்கு வேண்டுமானால் சொல்லலாமே தவிர... இவைகளை வைத்து கவிதைகளுக்கு சிறிதளவுகூட நியாயம் கற்பிக்கும் சூழல் எக்காலத்திலும் ஏற்புடையதல்ல..

ஹனீபாவில் பாட்டில் இஸ்லாம் வெறுத்த இசை உள்ளது.

பட்டப்பெயர் சூட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இரவு முழுக்க இறைவனை புகழ்ந்து கவியரங்கள் நடத்த வேண்டும் என்பது நிச்சயம் நபி வழியல்ல...

மனத்தில் பட்டது சொல்லிவிட்டேன் காக்கா...

sabeer.abushahruk said...

நான் எழுதிய கீழ்கண்ட அழைப்பு வாசககங்கள் கவிதை என அங்கீகரிக்கப்பட்டு சத்தியமார்க்கம் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதைப் பின்பற்றுதல் நன்மையைத் தராதா?


வரவேற்பு:

இஸ்லாம் என்பது மார்க்கம் - இதில்
இணைபவர் எங்கள் வர்க்கம்
இனிய வாழ்வியல் கற்கும் - இங்கு
இல்லை நமக்குள் தர்க்கம்

வணக்கத்துக்குரியன ஏதுமில்லை - அந்த
வல்லோனைத் தவிர யாருமில்லை
வழிகாட்டித் தந்திட நபியவர்கள் - வந்து
வழங்கிய நெறிகளெம் வழியென்போம்


உள்ளத்துத் தூய்மைக்கு இறையச்சம் - உடலில்
உள்ளவைத் தூய்மைக்கு ஒளூச்செய்தும்
உடலோடு உயிரும் ஒன்றித்தொழ - நாளில்
உனக்கான கடமைகள் ஐவேளை

அருந்தாமல் பருகாமல் பொறுத்திருந்து - உணவு
அண்மையில் தொடும்தூரம் அடுத்திருந்தும்
அருமையான நோன்பை அகம்கொண்டு - மனத்தை
அடக்குவர் அல்லாஹ்வின் அடியாரே

எத்தனை வளங்களைப் படைத்துவைத்தான் - இறை
அத்தனை செல்வமும் நமக்களித்தான்
இத்தனைக் கித்தனை என்றெடுத்து
இல்லார்க்கு தானமாய் ஈந்துவப்போம்

மனிதருள் மாணிக்கம் மீட்டெடுத்த - அந்த
புனிதமிகு கஃபாவை நேசிக்கனும்
கனிவான அல்லாஹ்வின் அருள்வேண்டி- நாம்
புனிதப் பயணமொன்று மேற்கொள்ளனும்

வான்மறையை வானோரை நம்பனும் - புவியில்
வாழ்ந்தபின் வருமறுமை அஞ்சனும்
வழியை முடிவென்று மயங்காது - தீர்ப்பு
வரும்நாளே இறுதியென்று நம்பனும்

சகோதரத்துவம் என்பதெங்கள் பண்பு - என்றும்
சாகாவரம் பெற்றதெங்கள் அன்பு
சச்சரவை ஒதுக்கும் எங்கள் பண்பு - இதுவே
சன்மார்க்க சனங்களின் மாண்பு

மன்னருக்கும் மக்களுக்கும் ஓரிறை - பசும்
மரங்களுக்கும் வனங்களுக்கும் ஓரிறை
பறப்பவைக்கும் பிறப்பவைக்கும் ஓரிறை - பாரில்
படைக்கப்பட்ட மொத்ததிற்கும் ஓரிறை

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஒரு குலம் - இந்த
எளியநல் சித்தாந்தம் எமதே
எல்லாமும் எல்லார்க்கும் நெறிமுறை - இதில்
எந்நாளும் தவறாது தலைமுறை

அடிப்படை அன்பு அதன்மேல் மனிதம் - என
அடுக்கடுக்காய் நற் பண்புகளால்
அமையப்பெற்ற தெம் மார்க்கம் - இதில்
அனைவரும் இணைய வரவேற்போம்!

- சபீர்

Courtesy: www.satyamargam.com

sabeer.abushahruk said...

//அறிஞர்கள் என்று கூறி சில பேர்கள் ஆறு மணி நேரம் அறுவை மொழியில் அரைத்த மாவு அரைப்பது போல் அரைப்பதை அன்பு மொழியில் அழகு தமிழில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கவிதைகளில் எடுத்துரைப்பதில் என்ன குற்றம் காண முடியும்?//

-யதார்த்தமான கருத்து, பக்குவமான வார்த்தைகள், கற்றவர் என்பதற்கான அடையாளமாக அழகான கேள்வி காக்கா.

அதிரைக்காரன் said...

மக்கத்து பாகன் அரபிகளுள் கவிதையில் சிறந்த கோத்திரத்தார் தத்தமது கவிதைகளை வடித்து கஅபாவின் கதவுகளில் தொங்கவிட்டு பெருமை கொண்டு சிலாகித்திருந்த காலகட்டத்தில்,அவர்கள் திகைக்கும் படியான செய்யுள் வடிவில் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டதாக வாசித்துள்ளேன்.

உலகமகா கவிஞர்கள் அனைவரையும் விஞ்சும் வடிவில் எழுதப்படிக்க அறிந்திராத ஒருவர்சொன்ன பொருள்பொதிந்த கவிதைநடை வசனங்கள், அன்றைய அரபுலக இலக்கியவாதிகளை வாய்பிளக்க வைத்ததோடு, நபி முஹம்மது ஸல் தமது வாயால் சொன்னவை இறைவேதமே என்று ஏற்கப்படுவதற்கும் காரணமாக குர்ஆனின் கவித்துவம் இருந்ததை, அரபு இலக்கியம் அறிந்தவர் எவரும் மறுக்க மாட்டர்.

பைபிள்,கீதை உள்ளிட்ட மனிதர்களால் இயற்றப்பட்ட உலகப் புகழ்பெற்ற இலக்கியங்கள் பல,அரபு மொழியாக்கம் செய்யபட்டுள்ளன. எனினும், அரபுலகில் குர்ஆன் ஏற்படுத்திய அதிர்வலைகளையும் மாற்றத்தையும் அவற்றால் ஏற்படுத்த முடியவில்லை.இதற்கு குர்ஆனின் தனித்துவமிக்க தெய்வீக கவிதை நடையும் ஓர் காரணம் என்பதை மறுப்பவர் யாருமிலர்.

அண்ணல் நபியை கவிதைகளால் திட்டிப்பாடுவதற்காகவே நியமிக்கப்பட்ட ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி)அவர்கள் எஞ்சிய தமது வாழ்நாளை நபி ஸல்அவர்களை கவிதைகளால் புகழ்ந்தே கழித்ததோடு,நபியின் ஆஸ்தான கவிஞர் என்ற பெரும்பேறும் பெற்றதாக வரலாறு சான்று பகர்கிறது.

ஆகவே! கவலையற்க அதிரைகவிகளே! உம் வார்த்தைகள் உண்மையை உரைத்துச் சொல்லும்வரை!

கவிதை குறித்த எனது புரிதலை இன்ஷா அல்லாஹ் தனிபதிவாக பகிர்ந்து கொள்வேன்.

நன்றி, வஸ்ஸலாம்

KALAM SHAICK ABDUL KADER said...

//அறிஞர்கள் என்று கூறி சில பேர்கள் ஆறு மணி நேரம் அறுவை மொழியில் அரைத்த மாவு அரைப்பது போல் அரைப்பதை அன்பு மொழியில் அழகு தமிழில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கவிதைகளில் எடுத்துரைப்பதில் என்ன குற்றம் காண முடியும்?//

ஒரு நொடியில் ஒரு கவிதையின் கரு உருவாகும் "
மறுநொடியில் மளமளவென சந்தங்கள் சொந்தங்கள் கொண்டாடி என்னை எதுகையிடு என்று ஆணையிடும்
இக்கல்வியினை எங்கட்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அதுவும், எது கை, எதுகால் என்று அறியும் பருவத்தில் எதுகையும் மோனையும் எங்களுடன் விளையாட வித்தையினை இயற்கையாக எங்களின் உதிரத்தில் ஓடவிட்ட ஓரிறைக்கு நன்றியுடையவனாக இஸ்லாத்தின் வரம்பும், இலக்கணத்தின் மரபு மீறாமலும் பாக்கள் யாத்திட ஆற்றல் மிக்க ஆசானாக அஹ்மத் காக்காவை எமக்கருளிய அல்லாஹ்வுக்கு நன்றி.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி தாஜ்,

எனது கருத்துகளை மிகவும் மென்மையான சொற்களால் தெரிவித்திருக்கின்றீர்கள்; ஜஸாக்கல்லாஹு கைரா!

நல்லவேளை!; நாகூர் ஹனீஃபாவின், "அதிகாலை நேரம் ..." கேட்டவர் "நமனை விரட்ட மருந்தொன்று விற்குது - நாகூர் தர்ஹாவிலே..." கேட்கவில்லை போலிருக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில நபித்தோழர்களுள் நபிக்கவி ஹஸ்ஸான் (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் கவிதைகளில் மூழ்கிப்போய்விடாமல், தங்கள் வாழ்நாளில் அரிதான சூழலில் தங்கள் உணர்வுகளைக் கவியாக வடித்தவர்கள் என்றே அறிந்திருக்கிறேன். பிலால் (ரலி) மக்காவை நினைத்து ஏங்கும் கவிதை அதிலொன்று. மற்றபடி பரணி பாடுவது என்பது அரபியரின் போரில் ஓர் அங்கம். நபிக்கவியின் கவிதைகள் அனைத்தையும் நாற்பது பக்கம் நோட்டில் எழுதினால் பாதியைத் தாண்டுமா என்பதே ஐயம்தான். இமாம்களுள் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் தொடக்கத்தில் கவிதைகளில் மூழ்கிப் பார்த்துவிட்டு, அதை விட்டொழித்து, ஃபிக்ஹில் புகுந்ததாக வரலாறு கூறுகிறது. இன்றுவரை நாம் பேசுகின்ற நபித்தோழர்களதும் இமாம்களதும் கவிதைகள் இஸ்லாமிய உலகில் பெரிதான இடத்தைப் பிடித்துவிடவில்லை. மாறாக, பூஸ்ரியின் புர்தாவும் தமிழில் சீறாவும் [சுட்டி] பீரப்பாவின் பாடல்களும் ஆராதிக்கப் படுகின்றன. 'கவிஞர்' எனத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் ஒரு முஸ்லிம் நண்பரை அவரது ஆக்கம் குறித்து ஒருபோது நான் விமர்சித்து, "நீங்களெல்லாம் கவிதை எழுதவில்லை என்று இங்கு அழுதவர் யார்?" எனக் கேலியாகக் கேட்டேன். "கவிதை எழுதவில்லை எனில் நான் செத்துப் போயிடுவேன்" என்றார்.

கவிதை குறித்த மறுப்புகளுக்கும் எதிர்ச் சொல்லாடல்களுக்கும் இவை பெரிதும் காரணங்கள் என்பதில் ஐயமில்லை.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

எனது பின்னூட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள சரியான சுட்டி : wahhabipage.blogspot.com/search/label/சீறாப்புராணம்

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹு அக்பர்.இந்த இரண்டாம் பகுதி கவிதைக்கே முரணாக அமைந்துள்ளது.எழுத வந்தது கவிதைக்கு சாமரம் வீச.ஆனால் உங்கள் கருத்துக்கள் எல்லாமே,அதற்கு மாற்றமான முறையில்.

சத்தியம் வந்தது,சத்தியம் அழிந்தது.

அல்லாஹு அக்பர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//= இதற்குரிய இஸ்லாமிய இந்து நாவலர்களை அழைத்து பேசவைக்க வேண்டும்.//

???

இப்னு அப்துல் ரஜாக் said...

//இந்த ஆண்டு மே மாதம் கல்வி விழிப்புணர்வு மாநாடு அதிரை நிருபர் குழு நடத்த உள்ளனர். அதற்கு பதிலாக இரண்டு நாட்களுக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தி, மொழிக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் இஸ்லாமியர்களின் பங்கு இதுவரை நம் மக்களுக்கு முறையாக எட்டாத செய்திகளை எட்டி வைக்க ஏற்பாடு செய்யலாம்.//

ரூட்டு மாறுது.

மாணவர்களின் கல்வி விழிப்புணர்வு மாநாடு சில கவிதை விரும்பிகளால்,கவிதை மாநாடாக ஆக்கப்பட்டுவிடுமோ என்றும்,திசை திருப்ப பட்டு விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அர அப்துல் லத்தீப் சொன்னது…
அல்லாஹு அக்பர்.இந்த இரண்டாம் பகுதி கவிதைக்கே முரணாக அமைந்துள்ளது.எழுத வந்தது கவிதைக்கு சாமரம் வீச.ஆனால் உங்கள் கருத்துக்கள் எல்லாமே,அதற்கு மாற்றமான முறையில்.

சத்தியம் வந்தது,சத்தியம் அழிந்தது.

அல்லாஹு அக்பர். //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. அப்துல் லத்தீப், இந்த கருத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விபரமாக விளக்கி சொன்னால் என்னை போன்ற எல்லோரும் தெளிபெற வசதியாக இருக்கும்.

அதிரைநிருபர் said...

//அர அப்துல் லத்தீப் சொன்னது…
//= இதற்குரிய இஸ்லாமிய இந்து நாவலர்களை அழைத்து பேசவைக்க வேண்டும்.//

??? //

இங்கு ஒரு comma விடுபட்டுள்ளது என்பதை உணர்ந்தால் குழப்பமில்லை..

புரிந்துணர்வுடன் கீழே உள்ளபடி வாசிப்பதே அறிவுடமை..

இதற்குரிய இஸ்லாமிய, இந்து நாவலர்களை அழைத்து பேசவைக்க வேண்டும்.

----

// அர அப்துல் லத்தீப் சொன்னது…

ரூட்டு மாறுது.

மாணவர்களின் கல்வி விழிப்புணர்வு மாநாடு சில கவிதை விரும்பிகளால்,கவிதை மாநாடாக ஆக்கப்பட்டுவிடுமோ என்றும்,திசை திருப்ப பட்டு விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. //

சகோதரர்களின் ஆலோசனைகளுடன் கூடிய கருத்துப்பரிமாற்றதை வைத்து அதை மார்க்க தீர்ப்பாகவோ, தீர்மானமாகவோ, முடிவாகவோ எடுத்துரைக்கும் நிலையை, அச்சத்தை சகோ.அப்துல் லத்தீப் தவிர்க்கவும்.

இங்கு யாருடைய கருத்து சிறந்தது என்பதல்ல நோக்கம்.

எல்லோரும் தெளிவு பெறவேண்டும் என்ற நல்லொண்ணத்தில் இங்கு கருத்துப்பரிமாற்றம் நடைப்பெறுகிறது என்பதை கருத்திடும் சகோதரர்கள் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறோம்..

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..

இப்னு அப்துல் ரஜாக் said...

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது என இருக்க வேண்டும்.திருத்தி வாசிக்கவும்.

சகோ தாஜ்,இன்ஷா அல்லாஹ்,பதில் தருகிறேன் விரைவில் ,அதுவரை மற்றவர்களும் படிக்கட்டுமே.

நாம் அனைவரும் சத்திய வழிப்படி நடக்க அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்

இப்னு அப்துல் ரஜாக் said...

பயனுள்ள சுட்டி,நன்றி காக்கா wahhabipage.blogspot.com/search/label/சீறாப்புராணம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சகோ தாஜ்,இன்ஷா அல்லாஹ்,பதில் தருகிறேன் விரைவில் //

ஜஸகல்லாஹ்... தெளிவுபெறும் நல்லெண்ணத்தில் தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறோம்.

Anonymous said...

//சில கவிதை விரும்பிகளால், கவிதை மாநாடாக ஆக்கப்பட்டுவிடுமோ//

தம்பி அர.அப்துல் லத்திஃப்,

சாலமான் ருஸ்டிக்கும், தஸ்லீமா நஸ்றினுக்கும் கவிதை பிடிக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களை வைத்து நடத்தலாம?

விவாதம் செய்வது தெளிவு பெறவே அன்றி உரையாடல்களில் குற்றம் பிடிக்கவல்ல என்பதை சகோதரர் உணர வேண்டும்.

குதர்க்கம் செய்ய எவருக்கும் இயலும் தம்பி. ஆனால், அத்தகைய குதர்க்கம் இறுதியில் பட்டி மன்ற முடிவுகளை ஒத்த நேர விரயமாகவே அமையும்.

அஹ்மது காக்காவின் ஆய்வுக்கட்டுரை நிறைவுறும்வரை தீர்வுகளை எட்டிவிடாமல்... விவாதிப்போமே? என்ன நான் சொல்றது?

sabeer.abushahruk

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர்களே!

"கவிதை - ஓர் இஸ்லாமியப் பார்வை" என்ற அஹ்மது காக்கா அவர்களின் ஆய்வுக் கட்டுரை நம் அனைவருக்கும் கவிதை பற்றி இஸ்லாத்தின் நிலையையும் தெளிவானா புரிதலையும் தரவேண்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்தித்தவனாக... இங்கு இது சம்பந்தமான என் நிலைபாட்டையும், வேண்டுகோளையும் பதிகிறேன்.

என்னைப் பொறுத்தவரை இதை ஒரு வீனா தர்கமாகவே கருதுகிறேன். கவிதை என்பது மொழியின் ஒரு வடிவமே தவிர வேரில்லை. கவிதையோ, கட்டுரையோ, சொல்லோ, எழுத்தோ, எதுவாகினும் இஸ்லாத்தின் வரையரைக் குட்பட்டிருந்தால் அது ஆகுமானதே என்பதும், அதேபோல் மொழியின் எவ்வடிவமானாலும் இஸ்லாத்தின் வரையரையைக் கடக்கும்போது அது விலக்கப்பட்டதாக ஆகிவிடும் என்பதும் உள்ளங் கை நெல்லிக் கனி.

பேசினால் பொய்யே பேசுவான் என்பதை நயவஞ்சகனின் அடையாளமாக அல்லாஹ்வின் தூதர் சொல்லிக் காண்பித்தார்கள். பொய் கலந்த பேச்சு (அது கவிதையாக இல்லாவிடினும்) இஸ்லாத்தின் அடிப்படையில் தவறு என இதன் மூலம் விளங்க முடிகிறது.

இருப்பினும் "கவிஞர்கள் பொய்யர்கள்" "கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்" என்ற சொல்லாடல் இருப்பதனால் கவிதை சம்பந்தமான சர்ச்சைகள் இயற்கையே. தெளிவுபடுத்திக் கொள்ள விளைவதில் தவறேதும் இல்லை. இருப்பினும் இதற்கு பெரிய ஆய்வொன்றும் தேவையில்லை என்பதே என் கருத்து. தர்க ரீதியான சிறிய உரசலே போதுமானது. மேற்சொன்ன வாசகங்கள் "கவிஞர்களை" சாடுகிறதே தவிர "கவிதகளை"யல்ல.

மேலும், "நாம் அவருக்கு கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்கு தேவையுமில்லை" என்கிற இறைவசனம் தொடர்ந்து "இது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேரில்லை" என்று சொல்லுவதிலிருந்தே இக்குர்ஆன் கவிதையைக் கற்றுக் கொடுப்பதற்காக இரக்கப்ட்டதல்ல நேர்வழிகாட்டுவதற்காக என்கிற கூற்றே புலப்படுகிறது. தவிர, கவிதை கூடாது என்பதற்கான பதமேதும் இங்கில்லை.

எதுவாகினும் தெளிவான நீண்ட நெடிய ஆய்வு தேவை என்கிற நிலையில் அஹமது காக்கா-வின் ஆய்வுக் கட்டுரை எவ்வாறு அமைகிறது என்று முடியும் வரை பொருத்திருந்து பார்ப்பதே சாலச் சிறந்தது. கட்டுரையின் விளக்கத்தில் ஏதேனும் புரிதல் தேவைப்படும் போது அதன் விளக்கத்தை கட்டுரையாளரிடமே கேட்டு புரிந்து கொள்ளுதல் நலம். அது தவிர்து ஏனைய பின்னூட்டங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமாக அமையும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

அமைதியின் ஆளுமையாய் இருக்கும் அதிரை நிருபரில் ஆர்பரிப்பை ஏற்படுதும் சைத்தானின் சூழ்சியில் சிக்கிகொள்ள வேண்டாம்.

பின்னுட்டங்களைப் படிக்கும் போது அதில் ஆரோக்கிய மில்லாத நிலையை உணர்ந்ததன் விளைவாகவே இங்கு இதைப் பதிகின்றேன். மற்றபடி யாரையும், எதையும் குறை கூறுவதற்கன்று.

பிழை இருப்பின் பொறுத்தருள்க!

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்

ம அஸ்ஸலாம்

Abu Easa

sabeer.abushahruk said...

//கவிதை குறித்த எனது புரிதலை இன்ஷா அல்லாஹ் தனிபதிவாக பகிர்ந்து கொள்வேன்./

ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்கள் எழுத்து நடையை ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//* ‘நபியின் கவிஞர்’ என்று பாராட்டப் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* கவிஞர் கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* போர்ப்பரணி பாடிப் பொருத அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* கவி பாடிக் களம் புகுந்த மிக்தாத் இப்னுல் அஸ்வது (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* ‘அஹதுன், அஹதுன்’ என்று ஒருமைப்பாட்டை உயிர் போக இருந்த தருணத்திலும் உறுதி செய்த பிலால் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா?

* ‘வேத விரிவுரையாளர்களின் தலைவர்’ எனப் போற்றப்படும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் புரிந்துணர்வைவிட உயர்ந்ததா? அல்லது,

நேர்வழி நின்ற இமாம்களான:-

• இமாம் ஷாஃபிஈ
• இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
• இமாம் இப்னுல் முபாரக்
• இமாம் இப்னுல் கையிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்)//
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே,மேற்கண்ட வரிகளை படியுங்கள்.அத்தைகைய சான்றோர்களை கவிதை பாடிகளாக,கவிதையில் நடை பயின்றோர் போன்ற பதத்தில் எழுதப்பட்டுள்ளது.உண்மை நிலை என்ன?மேற்சொன்ன அனைத்து சான்றோர்களும் - இஸ்லாமிய ஏகத்துவத்துக்காக பாடுபட்ட,பனி செய்த,இன்னுயிர் நீத்த உத்தமர்கள்.அவர்களின் மொத்த வாழ்வில் இஸ்லாம் நூறு சதம் இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்.கவிதைக்கு என அவர்கள் செலவிட்டது அதிக நேரம்,கவிதை பாடியே வந்துள்ளார்கள் என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

உதாரணமாக,சையட்னா பிலால் ரலி அவர்கள் சொன்ன அஹதுன்,அஹதுன் எங்களுக்கு ஏகத்துவமாக ஒளிர்கிறது,பரிதாபம் உங்களுக்கோ அது கவிதை வடிவில் தெரிகிறது.

//அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள்:

“அஸ்தகு கலிமத்துன் காலஹா அஷ்ஷாஇரு கலிமத்து லபீதின்,
‘அலா குல்லு ஷைஇன் மா களல்லாஹு பாத்திலு’
வக்காத உமையத்து இப்னு அபிஸ் சல்த்தி அன் யுஸ்லிம.”

(கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன, ‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக்கூடியவை’ எனும் சொல்தான். கவிஞர் உமய்யத் இப்னு ஆபிஸ் சல்த் (தனது கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.”)//

அதை யார் மறுத்தது?அல்லாஹ் தன தூதரை அனுப்பியது ஏகத்துவ நெறியை போதிக்க.

முன்பு மார்க்கத்துக்கு முரணாக பாடிய அவர்,இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவ நெறி காக்கபாடுகிறார்,,அதை நம் தலைவர் ரசூல் ஸல் அவர்கள் ஆமோதிக்கிறார்கள்.இதற்காக கவிதைக்கோ,புலவர்களுக்கு ரசூல் ஸல் மகுடம் சூட்டவில்லை என்பதை அறியுங்கள்.

ஆக,உங்கள் மொத்த கருத்தும் - கவிதைக்கு எதிராக உள்ளபோது,கவிதையை ஆதரித்து இப்படி உல்டாவாக எழுதுவது ஏற்கும்படி இல்லை.

மற்றபடி,மார்க்க முரண் இல்லாத கவிதையை ஏற்கலாம்,ஆனால் அதில் மூழ்கக் கூடாது,கவிதையை உயர்த்தி பிடிக்க கூடாது,காரணம் கவிதை மூலம் வழி தவற வாய்ப்புண்டு.காலம் கலாமாக உள்ள திருக் குரான் சொல்கிறது,புலவர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்.ஹதீஸ்களில் கவிதைக்கென முக்கியத்துவம் இருந்ததில்லை.

சொல்வதை நேரடியாக-தெளிவாக சொல்லுங்கள் என குரான் சொல்கிறது.

இப்படி எல்லாமும் கவிதையின் முக்கியத்துவத்தை குறைத்துவிடுகின்றன.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை வழிகேட்டிலிருந்து காப்பானாக.

இப்னு அப்துல் ரஜாக் said...

//குதர்க்கம் செய்ய எவருக்கும் இயலும் தம்பி. //


காக்கா,இது குதர்க்கம் அல்ல.நீங்கள் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.
இஸ்லாத்தில் அதற்கென தனியான அந்தஸ்த்து,முக்கியத்துவம் இல்லை என குரான்,ஹதீஸ் வழிகாட்டல் கொண்டு சிந்திக்கிறேன்.அதை பரிமாறுகிறேன்.அந்தக் கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.

hassaan said...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவன்த்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதில் யாருக்காவது சந்தேகம் உண்ட?????????

Anonymous said...

இப்படி சிறு சிறு இஸ்லாம் வலியுறுத்தி சொல்லாத விசயங்களை ஆராய்ந்து ஆராய்ந்து மண்டை குழம்பி, மற்றவர்களையும் குழப்பி.... எத்தனை இயக்கங்களாக பிரிந்து நிற்கிறீர்கள் மனிதர்களா???. இங்கே 99%பேர்கள் தங்கள் கருத்தை ஆதாரத்துடன் பதிந்த பிறகும் வேண்டாமே இந்த விவாதம்..

எனக்கு தெரிந்த / போதிக்கபட்ட இஸ்லாமை மட்டும் நான் கடைப்பிடித்தால் சொர்க்கம் சென்றுவிடுவேன்...ஆகையால் இந்த விவாதத்தை அதிரை நிருபர் பதிந்து அமைதியை குழைக்கவேண்டாம்....மார்க்கத்திற்க்கு முரண் இல்லாத அல்லாஹ்வும் / ரசுலும் “ஹராம்” என்று சொல்லாத கவிதைகளை யாரும் எழுதலாம் ,அதனை யாரும் ரசிக்கலாம்...

தீர்ப்பு எப்படிவந்தாலும் பரவாயில்லை..அல்லாஹ் அறிந்தவன் ... தலைப்பிற்க்கு சம்பந்தம் இல்லாது என்று யாரும் சொல்லாதீர்கள்.... சில பேர் எப்படி ட்ரைனிங் கொடுத்தபிறகும் சேம் ஷாடு கோல் அடிப்பார்கள் இது அந்த மாதிரி ஆள்களுக்கு....இங்குள்ள சேக்கின் மகன் கூட கவிபாடுகிறார் அவருக்கு தெரியாத இஸ்லாமா நீங்கள் விளங்கி இருப்பது அல்லது அவர் செய்யும் நற்கருமங்களில் 0.001 % நீங்கள் செய்துவிட்டு இப்படி பேசுகிறீகளா

மண்ணறைக்கு போகும் வரை செல்வத்தை தேடுவதை அல்லாஹ் விரும்பவில்லை...நம்மவர்கள் கபன் துணி இடும்வரை சம்பாதிக்க விரும்புகிறார்கள்...இது அல்லாஹ் விரும்பாத செயல் இல்லையா ? இப்படியே எல்லாவற்றையும் ஆராய்ந்து கொண்டே போனால் விட்டில் உட்கார்ந்து உலகத்தை மறந்து ஜைத்துன் ஆயிலில் நனைத்த ரோட்டிம் பேசிச்ச்பழமும் திண்டு கொண்டு இஸ்லாத்தை கடைபிடித்தால் முடியும்..ஏனென்றால் நீங்கள் உலகத்தில் பயன்படுத்தி/நடைமுறைபடித்தி கொண்டு இருக்கும் பெரும்பாலான பொருளுக்கும் இஸ்லாமிய வரைமுறை கிடையாது

நீங்கள் கணிப்பொறி / பிரிண்டர் / கூகுள் பயன்படுத்துவதும் “ஹாரம்” ஏனென்றால் அது யூதன் கண்டுபிடித்தது ..ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை உண்டும் அதன் மூலம்தான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.....விவாதம் பண்ண வேண்டும் என்றால் நல்ல அழகான முறையில் அடுத்தவரின் கருத்துக்களை மதித்தும் / அறிந்தும் பண்ணுங்கள் ..

Yasir

சிறிய மட்டுறுதலுக்கு பின்னர் பதியப்பட்டுள்ளது...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ: யாசிர் சொன்னது. // எனக்கு தெரிந்த / போதிக்கபட்ட இஸ்லாமை மட்டும் நான் கடைப்பிடித்தால் சொர்க்கம் சென்றுவிடுவேன்...ஆகையால் இந்த விவாதத்தை அதிரை நிருபர் பதிந்து அமைதியை குழைக்கவேண்டாம்...//

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் சொர்க்கம் செல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.அதனால் தான் இந்த ஆக்கத் தொடரில் நான் தலையை காட்டவில்லை.

Kuthub bin Jaleel said...

Abu Easa சொன்னது .... //கவிதை என்பது மொழியின் ஒரு வடிவமே தவிர வேறில்லை. கவிதையோ, கட்டுரையோ, சொல்லோ, எழுத்தோ, எதுவாகினும் இஸ்லாத்தின் வரையரைக்குட்பட்டிருந்தால் அது ஆகுமானதே என்பதும், அதேபோல் மொழியின் எவ்வடிவமானாலும் இஸ்லாத்தின் வரையரையைக் கடக்கும்போது அது விலக்கப்பட்டதாக ஆகிவிடும் என்பதும் உள்ளங் கை நெல்லிக் கனி.//

மிகவும் சரி.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புடையோரே!

நான் எழுதிய பின்னூட்டத்துக்கு ஜனாப். தாஜுதீன் அவர்களும், தொடர்ந்து ஜமீல் காக்கா அவர்களும் விடுத்த கணைகளுக்கும் பதில்கள் உள்ளன. இருந்தாலும் ,

அபூ ஈசா அவர்களின்

//எதுவாகினும் தெளிவான நீண்ட நெடிய ஆய்வு தேவை என்கிற நிலையில் அஹமது காக்கா-வின் ஆய்வுக் கட்டுரை எவ்வாறு அமைகிறது என்று முடியும் வரை பொருத்திருந்து பார்ப்பதே சாலச் சிறந்தது. கட்டுரையின் விளக்கத்தில் ஏதேனும் புரிதல் தேவைப்படும் போது அதன் விளக்கத்தை கட்டுரையாளரிடமே கேட்டு புரிந்து கொள்ளுதல் நலம். அது தவிர்து ஏனைய பின்னூட்டங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமாக அமையும் என்பது என் அன்பான வேண்டுகோள்.//

//அமைதியின் ஆளுமையாய் இருக்கும் அதிரை நிருபரில் ஆர்பரிப்பை ஏற்படுதும் சைத்தானின் சூழ்சியில் சிக்கிகொள்ள வேண்டாம்.//

என்ற கருத்துக்களுக்கு செவியேற்று அனைவரும் பொறுமை காத்திட கோருகிறேன்.

யாசர் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி தீர்ப்பு வரட்டும்.

அதுவரை சா. ஹமீதின் வண்ணப்படங்களை ரசிக்கலாமே!

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

sabeer.abushahruk said...

//அத்தைகைய சான்றோர்களை கவிதை பாடிகளாக,கவிதையில் நடை பயின்றோர் போன்ற பதத்தில் எழுதப்பட்டுள்ளது//

தம்பி அ.லத்தீஃப்,

சட்டுபுட்டுன்னு எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்களே உங்கள் நிலைப்பாட்டிற்கு முரணாக நிற்பதை கவனிக்கத்தவறி விட்டீர்கள்.

இது உங்கள் கருத்து: "மேற்சொன்ன அனைத்து சான்றோர்களும் - இஸ்லாமிய ஏகத்துவத்துக்காக பாடுபட்ட,பனி செய்த,இன்னுயிர் நீத்த உத்தமர்கள்.அவர்களின் மொத்த வாழ்வில் இஸ்லாம் நூறு சதம் இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்""

கட்டுரையாளர் கருத்து: " கவிஞர்களாகவும் அடையாளம் காணப்பட்ட அத்தகையச் சான்றோர்களைப் பின்தொடர்ந்தால் வழிகேடாக அமையுமா? என்பதாக விளங்கிக்கொள்ளவேண்டும்"

தீர்வாக, நீங்கள் சான்றோர்கள் என்று போற்றுபவர்க்ள் கவிதைகள் பாடியும் உள்ளனர் என்பதற்கான சான்றை கட்டுரையாளர் காக்கா அவர்கள் தந்தால் ஒப்புக்கொள்வீர்களா?

sabeer.abushahruk said...

//,உங்கள் மொத்த கருத்தும் - கவிதைக்கு எதிராக உள்ளபோது,கவிதையை ஆதரித்து இப்படி உல்டாவாக எழுதுவது ஏற்கும்படி இல்லை//

தம்பி, வரிகளுக்கிடையே வாசிக்காதிர்கள். அறிஞர்களின் எழுத்தை வாசிக்கும்போது கவனம் அவசியம். கட்டுரை ஒரு இம்மியளவுகூட கவிதைக்கு எதிராக எழுதப்படவில்லை என்பதே உண்மை.

மாறாக, நாம் ஸாலிஹான இஸ்லாமிய சான்றோர்கள் என்று மட்டும் நாம் அறிந்து வைத்திருந்தவர்கள் கவிதை வெறுக்கவில்லையென்றுதான் இந்த அத்தியாயம் சொல்கிறது.

sabeer.abushahruk said...

//மார்க்க முரண் இல்லாத கவிதையை ஏற்கலாம்,ஆனால் அதில் மூழ்கக் கூடாது,//

மூழ்குதல் என்பதற்கான அள்வீட்டைத் தம்பி தந்தால் உதவியாயிருக்கும்.

ஒரு நாளைக்கு ஒன்றா? ஒரு வார்த்திற்கு ஒன்று?

நான் தங்களின் கருத்துகளுக்கு இயன்றவரை பதில் தருகிறேன். ஆனால், நீங்கள் கவிதை என்றால் என்ன எனும் என் கேள்விக்கு இதுவரை பதில் தரவில்லை என்பது வாதிகளுக்கு ஆரோக்கியமானதா?

ஒன்று மட்டு நிச்சயம். நீங்கள் கவிதை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள தலைப்பட்டால் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கண்டுவிடுவீர்கள்.

வாழ்த்துகள், தம்பி.

KALAM SHAICK ABDUL KADER said...

இணையம் பார்ப்பதும் வாழ்வில் ஒரு பகுதி; இணையத்தில் நல்லவைகளும் உள; தீயவைகளும் உள; இணையத்திலேயே மூழ்குவதும் வாழ்கையன்று. அதுவேப்போல, கவிதை யாப்பதும், பார்ப்பதும் ஒரு பகுதி; கவிதைகளில்- பாடல்களில் நல்லவைகளும் உள; தீயவைகளும் உள; கவிதையிலேயே யாரும் மூழ்குவதும் இல்லை;ஏற்கனவே சொன்னபடி, “ஒரு நொடியில் கவிதையின் கரு சிந்தையில் ஏற்படும் பொறி”;அதனை முழுமைப் படுத்தி விடுவோம் கணிப்பொறியில். ஆக, ஒருநாள் ஒரு கவிதை என்று யாத்தளிக்க யான் எடுக்கும் நேரம் சுமார் 15 நிமிடங்கள்; அல்ஹம்துலில்லாஹ்! பேச்சாளர்களைப் போல் குறிப்பெடுக்கவும், குறித்த நேரத்தையும் தாண்டி பேசவும் “நேரம்” வீணாக்குவதில்லை. எங்களுடைய கவிதைகள் 32 வரிகளுக்குள் அடங்கும் (4xஅரைஅடி=8 வரிகள்x4 பத்திகள்=32 வரிகட்கும் சுமார் மூன்று நிமிடங்கள் ஆகும். அதனாற்றான், இன்றுவரை எனது கவிதைகள் தொலைக்காட்சியில் பதியுமுன்பு நடத்துநர் வேண்டிக் கொள்வார் (3 நிமிடத்திற்குள் பாடும் அளவுக்குக் கவிதை யாத்து வருக என்று)சென்ற வாரம் துபையில் எனது “வயசு வந்து போச்சு” கவிதையினைத் தொலைக்காட்சிக்குப் பதிவு செய்யத் தலைமை வகித்த காப்பியக்கோ இலங்கை ஜின்னா ஷரிஃபுத்தீன் அவர்கள் சொன்னார்கள்: அவர்கள் இயற்றிய யாப்புகளில் “நாயகக் காவியம்” அவர்களின் இதய ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் திருப்திகரமாகவும் வேகமாகவும் யாத்து முடித்தார்கள் என்று. “என்னைப்போல் மரபுப்பாக்கள் யாத்திடும் திறனை அல்லாஹ் உனக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளான்; இன்ஷா அல்லாஹ் நீயும் ஒரு காப்பியம் படைப்பாய்; அதிலும் எண்சீர் கழி நெடிலடியில் விருத்தம் உனக்குக் கை கூடி வருகின்றது” என்றுச் சொல்லி அவர்கள் தீட்டிய “திப்பு சுல்தான் காவியம்” நூலை எனக்குப் பரிசளித்தார்கள். அங்கும் யான் என் கவிதையினை பாட எடுத்துக் கொண்ட நேரம் மூன்றே நிமிடங்கள்; அக்கவிதை எழுதியது சென்ற மாதம் அத்தலைப்பைத் தரப்பட்ட அன்றே பேருந்தில் உட்கார்ந்ததும் எழுதி விட்டேன். அல்ஹம்துலில்லாஹ். அக்கவிதை “வயசு வந்து போச்சு” இங்கும் பதிவாகி உள்ளது. அதனைக் கண்ணுற்ற இணையதள வாசகர் ஒருவர் “வரதக்‌ஷணை” வாங்க மாட்டேன் என்று முடிவெடுத்தேன் உங்கள் கவிதை என் “கல்பை”த் திறந்தது என்று குவைத்திலிருந்து தொலைபேசி மூலம் சொன்னார்.அக்கவிதையினைக் கேட்டுக் கொண்டிருந்த “தொகுப்பாளியினி” (ஹிந்து சகோதரி) அழுது விட்டார்
இணையத்தில் தீமைகள் வருகின்றன; என்பதற்காக நாம் இணையத்தை உள்ளடக்கியுள்ளக் கணினியை தூக்கி எறிவதில்லை; மாறாக, “நல்லவை” மட்டும் எவை எவை என்று பகுத்தறிந்து இணையத்தைக் காண்கின்றோம்.

மருத்துவர்களில் “விஷ ஊசி” மருத்துவர்களும் உளர்; ஆனால், நாம் எச்சரிக்கையாக நல்ல மருத்துவரை நாடுவோமேத் தவிர, “மருத்துவரே வேண்டா” என்று இருப்பதில்லை.

“கவியரங்கம் அம்மாநாட்டில் வேண்டா.” என்று இக்கட்டுரையாளரின் ஆர்வத்திற்கு அணைபோட வேண்டி, இத்துணை நீண்ட விவாதங்கள் உருவாக அடித்தளம் இட்டவர்கள் யார்? விவாதம் என்பதே தொட்டால் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டுகொண்டே போகும் வினோதமான ஒன்று என்றறிந்தும், விவாதத்தைத் துவக்கி வைத்தவர் தான் பொறுப்பாளர்.



-அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

இப்னு அப்துல் ரஜாக் said...

//மூழ்குதல் என்பதற்கான அள்வீட்டைத் தம்பி தந்தால் உதவியாயிருக்கும்.

ஒரு நாளைக்கு ஒன்றா? ஒரு வார்த்திற்கு ஒன்று?//


அன்புக்குரிய காக்கா, இதற்கு பதில்,சாச்சாவின் மூன்றாம் பதிவில் இருக்கிறது,ஹதீஸ் மேற்கோளுடன்.நன்றி காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு