Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்... 83

அதிரைநிருபர் | June 07, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !


அதிரையில் நேற்று இரவு (06-06-2012) யாருமே எதிர்ப்பாராத அளவுக்கு பலத்த சத்தம்கூட்டி காற்றுடன் கூடிய மழை பெய்தது, அன்றைய இரவு சற்றே வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்று காலை (07-ஜூன்-2012) முதல் வெயில் தன் கடமையை வழக்கம்போல் காட்டத் தொடங்கியுள்ளது.

நேற்று வீசியதோ சூறைக் காற்று அதன் தாக்கம் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து கிடந்தது, கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் இருந்த ஒரு சில விளம்பர பேனர்கள் தூக்கி வீசப்பட்டன. இது கட்அவுட் மற்றும் வீண் தம்பட்ட விளம்பரங்கள் செய்யும் ஊதாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று சொன்னால் மிகையாகாது.

நேற்றிரவு மின்னல் வெட்டியதும் மின்சாரம் இருட்டுக்குள் ஒழிந்தே விட்டது இதனால் அதிரை மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் (இது என்ன புதுத் தகவலா என்று முகம் திருப்ப வேண்டாம்) என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் கந்தூரி போதையர்களின் 'காட்டு'க்கத்தல் (ஒலிபெருக்கி) சத்தத்திலிருந்து விடுபட்ட மக்களுக்கு, மின்சாரத் தடை ஏற்பட்ட நேற்றைய இரவு கோவில் திருவிழா மற்றும் பிறமத திருமண விழா என்ற பெயரில் சி.எம்.பி. லைன் மற்றும் புதுமனைத் தெரு பகுதியில் விடிய விடிய சினிமா பாட்டுக்களை ஒலிபெருக்கி வாயிலாக சத்தம் எழுப்பி நாங்களும் உங்களைச் சார்ந்த கந்தூரி போதை பார்ட்டிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தார்கள். 


இரவு முழுவதும் அந்தப் பகுதி பொது மக்களை தூங்கவிடாமல் ஒலிப்பெருக்கிச் சத்தம் மூலம் தொந்தரவு செய்பவர்களை தடுப்பதற்கு நாதியில்லை. கேட்கச் செல்பவனை போதை தலைக்கேறி ஆள்வைத்து அடிப்பவர்களின் வீடுகள் ஊரின் 'நடு'பகுதியில் இருப்பதாலோ என்னவோ !

இந்த இலட்சனத்தில் இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய கோமாளிகளின் துண்டு பிரசுரம் ஒன்று அதிரையில் ஊர் பெரியவர்கள் மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடும் புகழ்பெற்ற பள்ளிவாசலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மாவட்ட ஜமாத்துல் உலமா(!!??) சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற துண்டு பிரசுரங்களை அனுமதித்த உலமாக்களும், ஊரில் இருக்கும் மார்க்க அறிஞர்களும், பெரும் தலைகளும் எப்படி முன் வருவார்கள் மேற்சொன்ன கேடுகெட்ட போதைப் பார்ட்டிகளின் அலுச்சாட்டியத்தை தடுக்க? முன்னேறவேண்டிய சமுதாயம் பின்னோக்கி போகிறது என்ற வருத்தம் நன்னோக்கு கொண்ட ஒவ்வொருவரின் மனதில் அழுத்தமாக பதிவதை மறுக்க முடியாத உண்மை.

ஒரு காலத்தில் பிறமதக் கலாச்சாரமான 'சபரிமலை சீசனில்' மட்டுமே ஒலிப்பெருக்கி சத்தங்கள் காதில் விழுந்த காலம் கரையேறிவிட்டது, ஆனால் இன்றோ ஊரில் நான்கு திசைகளிலும் 50க்கு (!!?) மேற்பட்ட பிறமத வணக்கஸ்தலங்கள் உள்ளது இவைகளில் சில கோவில்கள் மாதக்கணக்கில் ஒலிப்பெருக்கியை வைத்து இரவு நேரங்களில் சினிமா பாடல்களும், அதிகாலை நேரங்களில் அவர்களின் பக்திப்(!!!???) பாடல்களையும் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருப்பதால் சகோதரத்துவத்தை மட்டுமே போதிக்கும் இஸ்லாமியர்களிடமிருந்து நன்மதிப்பை இழக்கிறோம் என்பதும் அம்மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவைகளின் தாக்கம் போதையாக தலைக்கேறி அவைகளின் பின்விளைவுகள் அறியாது உள்ளார்கள் அக்கம்பக்கத்தில் கோவில்களை கொண்டுள்ள நம் மக்கள்.

“அறிவை மழுங்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெரியவே நான் வந்துள்ளேன்” என்று சொன்ன நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா இல்லையா என்பதை இசைக்கு கொஞ்சமாகவோ கூடுதலாகவோ அடிமையாகியுள்ள மனசாட்சியுள்ள நற்சிந்தனைகளுக்கு காது கொடுக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை பின் வரும் இறைவசனமும் அதற்கான விளக்கமும், மற்றும் தொடர்ந்து வரும் நபிமொழியை நிதானமாக வாசித்து பருங்கள்..

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6


இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.


என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும், பாட்டையும், மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
சர்வசாதாரணமாக  உலாவரும் இஸ்லாம் வெறுத்த இசை குறிப்பாக சினிமா இசை இன்று ஒவ்வொரு வீடுகளிலும், பள்ளிக்கூடம் செல்லும் வாகனங்களிலும், ஆட்டோக்களிலும், பயனம் செய்யும் பிற வாகனங்களிலும், அலைப்பேசிகளிலும் ஒலிக்கிறதே…. இப்படியிருக்க மலக்குமார்கள் நமக்காக நல்ல பிரார்த்தனைகளை செய்வார்கள் என்று தப்புக்கணக்கு போடுவது தவறு. (இசை தவறு என்று சொன்னால், கோபப்படுவதில் முன்னனியில் இருப்பவர்கள் முஸ்லீம்களே அதிகம். அதற்கு அவர்கள் தவறான விளக்கங்களும், மலுப்பல் பதில்களும் தந்து சமாளிப்பார்கள்).

ஒலிப்பெருக்கி வைத்து விடியவிடிய இசைக்கச்சேரி நடத்துவது, கோவில் பாட்டிகளிலிடமிருந்து கந்தூரி பார்ட்டிகள் கற்றுக்கொண்டார்களா? அல்லது கந்தூரி பார்ட்டிகளிடமிருந்து கோவில் பார்ட்டிகள் கற்றுக்கொண்டார்களா?
இவைகளை தடுப்பது யார்?
-அதிரைநிருபர் குழு.

பழகு மொழி - 13 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 07, 2012 | ,

தலையாய 'பகுதி'யும் 'விகுதி' உடல் உறுப்புகளும்

(2) 2. இருவகைப் பதங்கள்
காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, "இடுகுறிச் சொற்கள்" என்பர். இடுகுறிச் சொற்களைப் பிரித்துப் பொருள் சொல்ல இயலாது. அவை முழுமையாக நின்றே பொருள் தருபவையாகும். இவ்வாறான இடுகுறிச் சொற்களைப் "பகாப் பதம்" எனக் கூறுவர். பகாப் பதங்கள் குறைந்த எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

குறைந்த எழுத்துகளைப் பெற்றிருந்தாலும் வயிறு, முக்காலி, நாற்காலி, காற்றாடி போன்ற காரணப் பெயர்கள் பகாப் பதங்களாகா.

(2) 2.1. பகாப் பதங்கள்
பெயர், வினை, இடை, உரி எனப் பகாப் பதங்கள் நான்கு வகைப்படும்:

பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி

முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற

பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்-நன்னூல் 131.


(2) 2.1.1. பெயர்ப் பகாப் பதம்
பெயர்ப் பகாப் பதங்கள் பெயர்ச் சொற்களாக வரும்.
காட்டுகள் : மண், மழை, நிலா, பலா.

(2) 2.1.2. வினைப் பகாப் பதம்
வினைப் பகாப் பதங்கள் பெரும்பாலும் ஏவல் வினைகளாக வரும்.
காட்டுகள் : எழு, நில், நட, செய்.

(2) 2.1.3. இடைப் பகாப் பதம்
பெயர்ச் சொல், வினைச் சொல் தவிர்த்து, இடைச் சொற்களாக வருபவை இடைப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள் : மற்று (மற்ற), ஆதல், போல், தான், உம், முன், பின், இனி, , ஓ போன்றவையும் வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, ன், அது, கண் ஆகியனவும் இடைப் பகாப் பதங்களாகும்.

(2) 2.1.4. உரிப் பகாப் பதம்
பெரும்பாலும் 'மிக்க' எனும் ஒரு சொற்பொருளைப் பல சொற்களாகப் பயன்படுத்த உதவும் உரிச் சொற்கள், உரிப் பகாப் பதங்களாகும்.
காட்டுகள்: சால, உறு, தவ, நனி, கூர், கழி.
இவற்றுள் 'சால' எனும் உரி, சொல்லின் முன்னும் பின்னும் முறையே, பகுதி ("சாலச் சிறந்தது") ஆகவும் தொகை ("அன்புசால் நண்பர்களே!") ஆகவும் இடம் பெறும்.


இவை தவிர, சேர்ந்து வரும் சொற்களைப் பொருத்து, வேறுபட்ட பொருள்களைத் தரத்தக்க, 'கடி' எனும் ஓர் உரிச் சொல்லும் உண்டு: கடிமணம் = புதுமையான திருமணம்; கடிவேல் = கூர்மையான வேல்; கடிமுரசு = ஆர்க்கும் முரசு; கடிவந்தான் = விரைந்து வந்தான். 'கடி' உரி, பகுதியாக வரும்.

மேற்காணும் காட்டுகளில் குறிப்பிட்டுள்ள பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரிக்க முடியாது; பிரித்தால் அவை பொருள் தரா.
பகுக்கத் தக்க ஒரு பெயர்/வினைச் சொல் எத்துணை நீளமானதாக இருந்தாலும் அதன் பகாப் பதமே அச்சொல்லின் தலையாய பகுதிஆகும். தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும் - நன்னூல் 134.

காட்டு : வா+த்+த்+அன்+அன் = "வந்தனன்" எனும் வினைச் சொல்லின் தலையாய் உள்ள "வா" எனும் வினையடிதான் இச்சொல்லின் பகுதியாகும். (எடுத்துக் காட்டில் எழுத்துப்பிழை ஏதுமில்லை). வெகு அரிதாக இடை/உரிச் சொற்கள் பகுதியாக அமைவதுண்டு. அவை பற்றி அடுத்து வரும் பாடங்களில் படிக்கலாம்.

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

-ஜமீல் M.சாலிஹ்

கொசு(றுச்) செய்தியானாலும் இது உசுரு மேட்டரு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2012 | , , , , ,

“விடாமல் துரத்திக்கடிக்கும் கொசுக்களை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும்போது இருக்கும் சுகமே அலாதிதான்“

ஆம்....தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

1. கொசு(க்) கடித்தவுடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன் ? 
2. மேலும் அந்த இடம் வீங்குவது ஏன் ?
3. கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும் ?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாக...............

மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் ஒன்றரை மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக “ஏடிஸ்” இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். 

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு தடுப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்
.
2. சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.

3. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும். 

எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் ஓரளவு தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்யவேண்டும். 

செயற்கையாக கொசுக்களின் “கடி” யை தடுப்பது எப்படி ?

1. சீன தேசத்தில் உள்ள Ningbo, Foshan, Shunde போன்ற மகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிற Electronic Insect Killer Machine, Insect Killer Bat மற்றும் இன்றைய காலக்கட்டங்களில் வந்துள்ள பல நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.

2. மேலும் Electronic Spray, Insect Killer Liqued, Coil போன்றவைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்ற ஒரு கருத்தும் மருத்துவத்துறையில் நிலவுகிறது.

மேலும் கொசுத்தொல்லையை ஒழித்திட, நமது பேருராட்சியை அணுகி அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்ளலாம்.

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

படிக்கட்டுகள்... ஏற்றம் - 14 29

ZAKIR HUSSAIN | June 04, 2012 | , , , , ,


முடிவு எடுக்கும் விசயம் என்பது நம் வாழ்க்கையின் இலக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானது. சிலர் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து விட்டு பிறகு சில வருடம் ஆன பிறகு' அப்போதே செய்திருக்கனும்" என வருந்துபவர்களாத்தான் இருக்கிறார்கள்.


கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் முடிவெடுக்க சின்ன வயதிலிருந்து மனிதர்களை பழக்குவதில்லை.

சின்ன வயதை சார்ந்தவர்கள் தனியாக எதுவும் முடிவு எடுத்துவிட்டால் பெரியவர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படலாம் என்று பயந்தே முடிவெடிடுப்பதில்லை. 
பிள்ளைகளை முடிவெடுக்க எப்படி பழக்க வேண்டும் என்று என் வாழ்க்கையில் நடந்த விசயம் ஒன்று உதாரணமாக சொல்லலாம். என் முதல்மகன் 11 வயதாக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் டூர் போக இருப்பதாக சொல்லி அனுமதி கேட்டான். அது இங்கிருந்து ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர். விமானத்தில்தான் போக வேண்டும். நான் அவனிடம் சொன்னது " நீ ஏன் போக வேண்டும் என்று பாயின்ட், ஏன் போகக்கூடாது என்று 5 பாயின்ட் எழுதி வா" என்று சொன்னவுடன் போவதால் அதிகம் நன்மை இருப்பதாக எழுதிய அவன் , போகாமல் இருந்தால் ஏற்படும் நன்மையை அதிகம் எழுத வில்லை. கடைசியில் அவனிடமே முடிவெடுக்க சொல்லி போய் வந்தான்.  

பொதுவாக பசங்க ஊர் சுற்றத்தான் ஆசைப்படுவார்கள், எனவே உங்கள் மகனின் முடிவு ஒன்றும் அதிசயம் இல்லை என நினைக்கலாம். அதே மகன் தனது 12 வது வயதில் ஒரு அருவிக்கு பக்கத்தில் கேம்ப் போக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யும்போது அதே மாதிரிதான் நான் சொன்னேன். பிறகு அவன் அந்த கேம்ப் போகவில்லை. இன்னும் இறுதி தேர்வுக்கு 2 மாதம் இருந்தும் அப்படி போகாததற்கு  அவன் சொன்ன காரணம் ' ரிவிசன் செய்ய நிறைய பாடம் இருக்கிறது"...ஆக முடிவெடுக்க நாம் பழக்குவதுடன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்களாகவே கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பு தருகிறோம்.

முடிவு எடுக்கப்படுவதற்க்கும் நேரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. சில சமயங்களில் எடுக்கப்படாத முடிவு நேரம் தாண்டி எடுத்தபிறகு எந்த பயனும் தராது. நான் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்..' முன்பு அங்கே மனை 25000 தான்...அப்பவே வாங்கிபோட்டிருக்கனும்- முன்பு எனக்கு நல்ல காலேஜில் சீட் கிடைத்தது, வீட்டில் உள்ள பெரியவங்கனாலே அங்கு போக முடியலெ- அந்த வியாபாரம் செய்ய நல்ல சான்ஸ் கிடைத்தது..இப்போ அவன் நல்லா செய்ரான்.. நான் வேடிக்கை பார்க்க வேண்டியாபோச்சு..இப்படி நிறைய பேர் புலம்ப காரணம் சரியான சமயத்தில் எடுக்காத முடிவுதான். சிலர் பெர்சனல் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்காமல் தொடர்ந்து "நொந்துபோன" வாழ்க்கை வாழ்வதும் பரிதாபத்துக்குறியது. நீங்கள் எந்த விதமான "மனச்சிறை"யில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் இருந்தால் யாரும் உங்களுக்கு உதவி செய்து வெளிக் கொண்டுவர முடியாது. உங்களின் மனச்சிறை எது என்று நீங்கள்தான் அடையாளம் காட்ட வேண்டும்.

Time and Tide will not wait for anybody.

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தூரம் உங்களுக்கு எது தெரியும் என்பதற்கும்- எதைசெய்கிறோம் என்பதற்கும் உள்ள தூரம்தான்.

உங்களின் பலம் எதிலும் இருக்கலாம் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை நிச்சயம் வசப்படும். எனக்கு அப்படி ஒன்றும் தெரியாதே என்று சொல்கிறீர்களா?... நான் உங்களை கேட்கிறேன்... நீங்கள் நல்லவர்தானே?--- அதை ஏன் உங்களின் பலமாக நினைக்க தோன்றவில்லை.  "அது சரி ...நல்லவன் எல்லாம் முன்னேரிட முடியுமா..அநியாயம் செய்கிறவன், கெட்டவன் கையிலதானே கோடிகள் புரள்கிறது'... எப்போது இப்படி நினைக்க ஆரம்பித்து விட்டீர்களோ.. உங்களுக்கு ஒரு "ஆன்டி-வைரஸ்-ஸ்கேன்: நிச்சயம் தேவை. நீங்கள் பார்த்த சின்ன வயது படங்களின் வில்லன் எல்லாம் செத்து மடிந்து விட்டாலும் உங்கள் மனதில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

முடிவெடுக்க பல பேர் தயங்க காரணம் நாம் எடுக்கும் முடிவு சரியாக இல்லாவிட்டால்?" என்ற எல்லாருக்கும் தோன்றும் கேள்விக்குறிதான். வாழ்க்கை என்பது கியாரன்டி கார்டுடன் இணைத்து வரும் எலக்டிரிக்கல்பொருள் அல்ல. ஒரு சமயம் கெட்டுப்போய்விட்டால் கடைக்காரரிடம் போய் நிற்க. வாழ்க்கை என்பது அடுத்த நிமிடத்தின் முடிச்சு எப்படி அகற்றப்படும் என்ற வித்தை இறைவன் ஒருவனிடம் மட்டும்தன்உள்ளது. தோல்வி என்பது கற்று வெற்றியடைய கட்டப்படும் உறுதியான படி.

சிலர் முடிவெடுத்ததுடன் தனது முடிவுக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்க்கொள்ளாமல் பழைய மாதிரியே இருந்து புதிய பயனை எதிர்பார்ப்பார்கள். இது இயற்கையின் விதிகளுக்கு முரண். ஊருக்கு வந்தபோது சில விசயம் கவனித்தேன். சிலர் கடை திறக்கும் நேரத்தை தனது இஷ்டத்துக்கு மாற்றிவைத்து கடை திறக்கிறார்கள். சில வெற்றியடைந்த நிறுவனங்களை பார்த்தால் சில விசயம் தெரியும். அவர்களின் கடை / பிஸ்னஸ் திறக்கும் நேரம் மிகவும் சார்ப் பன்ச்சுவாலிட்டி இருக்கும். தமிழ்நாட்டை பொருத்தவரை சரவணபவன் உணவகம் இதற்கு உதாரணம் சொல்லலாம். ஜப்பானில் டொயோட்டோ தொழிற்சாலையில் வேலையாட்கள் சரியான நேரத்துக்குள் வந்து லைட் எக்ஸர்சைசில் கலந்து கொண்டு வேலையை ஆரம்பிக்கிறார்கள். இவ்வளவு வெற்றியடைத்தும் ஏன் இவர்கள் இன்னும் இந்த விசயத்தை கடைபிடிக்க வேண்டும். அதுசரி நம்ம சின்ன ஊருக்கு எல்லாம் அது சரிப்படாது என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சின்ன முன்னேற்றம் வேண்டுமானால் கிடைக்கலாம். இந்த சின்ன விசயத்தில் ஒரு முடிவெடுத்து செயல் பட முடியாதவர்கள் . பெரிய முடிவுகள் என்று வரும்போது உடல்/மனம் இரண்டும் வளையாது.

நீங்கள் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சினை..அதன் தீர்வு உங்களுக்குள் தான் இருக்கிறது. மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் ஒன்று மட்டும் மிக மிக நிதர்சனம். தனி மனித முன்னேற்றம் = தனி மனித முடிவு


எப்போது உங்களின் வாழ்க்கை / தொழில் சம்பந்தமான முடிவுகளில் "என்னை விட என் தகப்பன் / அண்ணன்/ மச்சான்/ மாமன் முடிவு எடுத்தால் சரி...எனக்கு ஒன்னும் தெரியாது" என்று சொல்கிறீர்களோ அப்போதே உங்களின் வாழ்க்கை உங்கள் கன்ட்ரோலை இழந்து விட்டது. மற்றும் உங்களைப்பற்றி இன்னும் சரியாக உங்களுக்கே மதிக்க தெரியவில்லை. இப்படி இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களும் உங்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.அப்படியே மதித்தாலும் அது போலியானது. 


வாழ்க்கையின் வெற்றிக்கு Manhood என்ற ஒரு விசயம் இருக்கிறது. இதைத்தான் "சரியான ஆம்பளையா இருந்தா...என்று" நம் ஊர் பக்கத்தில் பேசப்படும் விசயம். இது மீசை/ வெள்ளைக்கைலி /பெண்களிடம் வெட்டி பந்தா செய்யும் திறமை போன்ற விசயங்களில் இல்லை. . கொடுத்த வாக்குக்கும் / எடுத்த முடிவுக்கும் சத்தியம் தவறாமல் கட்டுப்பட்டு சாதித்து காட்டுவதுதான் அது.

முடிவெடுக்க தெரிந்தவர்கள் மட்டும்தான் தலைவர்கள் ஆக முடியும். நான் சொல்வது அரசியல் தலைவர்கள் அல்ல. உங்கள் குடும்பத்தில் கூட நீங்கள் முடிவெடுக்க தள்ளி போடுபவராக தெரிந்தால் மரியாதையின் மீட்டர் முள் கீழே இறங்குவதை பார்க்கலாம். [சிலர் வெளிநாட்டில் இருந்து வந்தும் தர்ஹாவில், Railway stationல், படுத்துகிடந்து விட்டு "காத்துக்காக' படுத்து கிடக்கிறேன் என சொல்வதின் behind the scene மரியாதை மீட்டர்முள் தான் காரணம்.]

நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் புதிய செயல்பாடு உலகுக்கு உணர்த்த வேண்டும். முடிவு எடுத்து விட்டேன் என்பது மைன்ட் சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல.

இதில் படிக்கும் மாணவர்கள் முக்கியம் பார்க்க வேண்டியது "இந்த வருடம் முக்கியமான பரீட்சை இருக்கிறது- எப்போதும்ம் போல் இந்த வருடம் மெத்தனமாக இருக்க முடியாது எனவே நான் நன்றாக படிக்க போகிறேன் என்று முடிவு எடுத்து விட்டு அடுத்த நாளே வழக்கம்போல் நண்பர்களுடன் வெட்டிப்பேச்சு, பாடல் / திரைப்படம் டவுன்லோட் போன்ற காசுக்கும் நேரத்துக்கும் ஆப்பு வைக்கும் வெட்டி வேலைகளில் ஈடுபட்டால் நல்ல மார்க் எடுத்து வெற்றிபெற முடியுமா?. தொழில் முன்னேற்றத்தை பொருத்தவரை நீங்கள் எடுத்த நல்ல முடிவுக்காக உங்களை எந்த அளவு தயார்படுத்தி / ஈடுபடுத்தி வருகிறீர்கள்?. 

அல்லது சொந்தமாக தொழில் தொடங்க நினைத்திருக்கிறீர்களா? அதற்காக உங்களின் செயல்பாடு என்ன?. பக்கத்தில் இருக்கும் சென்னைக்கும், திருச்சிக்கும் போவதற்கே மற்றவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தால் எப்போது வெற்றியடைவது?. இது உங்கள் வாழ்க்கை நீங்கள் மட்டும்தான் கதாநாயகன். செகேன்ட் ஹீரோ இல்லாதது உங்கள் சரித்திரம்.

-ZAKIR HUSSAIN

கந்தூரி மாயை..... 25

அதிரைநிருபர் | June 04, 2012 | , , , ,

என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?


அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?


ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே


ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி


தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா


கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்


போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்


அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்


இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்


அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


- சபீர்



காணொளி -- அதிரைநிருபர் குழு

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? - அலசல் தொடர் 2 20

அதிரைநிருபர் பதிப்பகம் | June 03, 2012 | , , ,

அலசல் தொடர் : இரண்டு.

திருவள்ளுவர் தொட்டு உலகப்புகழ்பெற்ற அறிஞர்களாக இருந்தாலும் சரி பிறப்பால் அவர்கள் பிராமணர்களாக இல்லாவிட்டால் அவர்கள் தொடக்கூடத்தகாதவர்கள் என்கிற கருத்தை பறைசாற்றும் மனுநீதியின் மண்ணாய்ப்போன நீதியை முன் அத்தியாயத்தில் கண்டோம்.

அறிஞர்கள் மட்டுமல்ல அரசர்களாக இருந்தாலும் கூட அவர்களும் தீண்டத்தகாதவர்களே. இததகைய அரசர்களுக்கு சூத்திர அரசர்கள் என்று பெயர் – அவர்கள் ஆண்ட நாடுகளுக்கு சூத்திர நாடுகள் என்று பெயர் சூட்டப்பட்டது . இவர்கள் சூத்திரர்கள் என்று அறியப்படவேண்டி இவர்கள் பூணூல் அணிவது தடுக்கப்பட்டது. நாலுவகை சாதியில் சூத்திரருக்கு மட்டும் பூணூல் அணிய உரிமை இல்லை.

மனு நூல் தர்மத்தின்படி மனிதர்கள் ஒரே பிறவியில் இரு பிறவி பிறந்தாக வேண்டும் . முதல் பிறவி தாய்வயிற்றில் இருந்து பிறக்கும்பொழுது ஆகும். இரண்டாம் பிறவி அறிவு நூல்களை ( அதாவது வேதப்பொய்களை) கற்று பூணூல் அணியும்போது ஆகும். அரசர்கள் சூத்திரர்கள். ஆகையால் அவர்கள் இரண்டாம் பிறப்புக்கு தகுதி படைத்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் பூணூல் அணியக்கூடாது. அரசர்கள் வேதம் படித்து பூணூல் அணியத் தகுதி இல்லாததால் அவர்களுக்கு அரசியல் ஆலோசனை சொல்லி வழி நடத்த ( அதாவது வழிகெடுக்க)  ஒரு ராஜரிஷி – பிறப்பால் பிராமணர்- கூடவே இருப்பார். கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக்கட்டியதுபோல்தான் இதுவும்.

அத்துடன் இந்த வர்ணங்களுக்குள்ளேயே கோத்திரங்கள் உண்டு. அந்த கோத்திரங்களின் பெயர்கள் பெரும்பாலும் வட இந்திய ஆரிய முனிவர்களின் பெயர்களை ஒட்டியே இருக்கும். உதாரணமாக விஸ்வமித்திரர் கோத்திரம், கவுஷ்ய கோத்திரம், வசிஷ்ட கோத்திரம், காஸ்யப கோத்திரம் இப்படிப்பல. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் வடநாட்டில் கி. பி ஏழாம் நூற்றாண்டில் வந்து புகுந்த ஆரியக்கூட்டம் ( இது பற்றி விரிவான வரலாற்று சம்பவங்கள் பின்னர்) அங்கு ஆண்டாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்களை – ஆதி திராவிடர்களாக்கி  இடத்தை பிடுங்கிக்கொண்டு விரட்டிவிட்டு ஆரிய சிலந்திவலையை அகலமாகப்  பின்னிவிட்டது.

ஆதாரம்: It was in 7th c.A.D. after the demise of Harsha, the last great Dravidian Emperor, the invading groups joined together at Mount Abu in Rajasthan and formed a United Front against Indian Dravidians under the leadership of Persians, the fire worshippers, who later on claimed that they are the Brahmins. Because of their united efforts, they were able to capture political power from the Dravidians in North India and they formed 'Aryavardha', the Kingdom of the Aryans.(  HISTORY OF INDIA PROF. G. K. MISRA)

அதன்விளைவுதான் இப்படிப்பட்ட கோத்திரங்களின் பெயர்களில் வட இந்திய வாடை அடிக்கிறது. இந்த கோத்திரங்கள் ஒன்றில் கூட தமிழ் முனிவர்களின் பெயர்கள் காணப்படுவது இல்லை. ஏனென்றால் இவைகள் இறக்குமதி சரக்குகள். இந்த மண்ணில் மலர்ந்த தொல்காப்பியத்தில் இந்த கோத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை.

அப்படி நாடும் வீடும் பறிகொடுத்து ஓடிவந்த இந்த மண்ணின் சொந்த மக்களே “தலித் என நாடு முழுதும் அழைக்கப்படுகின்றனர். தலித் என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு அடிமட்ட, ஒடுக்கப்பட்ட , நசுக்கப்பட்ட, துண்டுகளாக நொறுக்கப்பட்ட என்று பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் இவற்றை "ground", "suppressed", "crushed", or "broken to pieces" என்றும் கூறி விளக்கலாம். இப்படி மக்களை அடிமட்டமாக்கி, ஒடுக்கி, நசுக்கி, துண்டு துண்டுகளாக நொறுக்கிய பெருமை மனு நீதிக்கே சென்று சேரும். இதை தனது ஆராய்ச்சி  நூலில் குறிப்பிடும் அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் “பொதுக் குள‌ங்களில் நாய், ஆடு மாடுகள் கூட தாகத்திற்காக தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்லும் இந்தப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் நான் ஒரு மிருகமாக பிறந்திருக்கக் கூடாதா? “ என புலம்பி அழுகிறார்.

இந்த தாழ்த்தப்பட்டோருக்கு – தலித்துகளுக்கு ஒரு சிறப்பு பெயர் கொடுக்க நினைத்த காந்தி அடிகள் அவர்களை ஹரிஜன் அதாவது கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கச் சொன்னார். அவர் கூற்றுப்படி ஏற்றுக்கொண்டாலும் ஹரி என்பவர் மட்டும் கடவுள் அல்லவே . இன்னும் பல பெயர் கொண்ட கடவுள்கள் இருக்கிறார்களே. அப்படியானால் இந்த தலித்துக்கள் எந்தக் கடவுளின் குழந்தைகள்? ஹரியின் குழந்தைகள் என்றால் சிவனின் குழந்தைகள் என்று இல்லாமல் ஆகிவிடுமா? அப்படியானால் கடவுளின் பெயர் என்ன ஹரியா? சிவனா? ஹரியும் சிவனும் ஒண்ணு  அதை அறியாதவன் வாயில் மண்ணு என்று புருடாவெல்லாம் விடக்கூடாது. இரண்டும் ஒன்றென்றால் ஏன் தனிப்பெயர்கள்? பெயர்கள் மட்டுமா தனி? ஸ்தல விருட்சங்கள் என்கிற மரங்களில் இருந்து- வழிபடும் முறைகளில் இருந்து – ஊற்றும் எண்ணெயில் இருந்து- நெற்றியில் போடும் நாமத்தில் இருந்து – படைக்கும் நைவேத்தியத்தில் இருந்து கடவுளின் முன் பாகுபாடுகள் ஏன்?

மனுதர்மத்தின் அத்தியாயம் ஒன்றில் வசனங்கள் ( CHAPTER: 1)

93. As the Brahmana sprang from (Brahman's) mouth, as he was the first-born, and as he possesses the Veda, he is by right the lord of this whole creation.

96. Of created beings the most excellent are said to be those which are animated; of the animated, those which subsist by intelligence; of the intelligent, mankind; and of men, the Brahmanas;

99. A Brahmana, coming into existence, is born as the highest on earth, the lord of all created beings, for the protection of the treasury of the law.
100. Whatever exists in the world is, the property of the Brahmana; on account of the excellence of his origin The Brahmana is, indeed, entitled to all.
ஆகியவைகள் வியப்பின், வினாக்களின், விந்தைகளின் உச்சகட்டமாகும்.

இந்த 93,96,99, 100  ஆகிய சுலோகங்களின்  கருத்துப்படி வேதங்களை உச்சரிக்க தகுதி படைத்தவனும், பdaiடைக்கப்பட்ட உயிர் இனங்களில் எல்லாம் மிக மிக  உயர்ந்தவனும், அறிவுச்செழுமை நிறையப்பெற்றவனும், ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதற்கென்றே ஸ்பெஷலாக  ஆண்டவனால் படைக்கப்பட்டவனும், நாட்டின் சொத்து சுகங்களை பாதுகாக்கவும் ,பராமரிக்கவும், தகுதி படைத்தவனும் மொத்தமாக சொல்லப்போனால் படைப்பின் அர்த்தமும், படைக்கப்பட்ட அனைத்து சுகபோகங்களுக்கும் சொந்தக்காரனும் “அவாளைத் தவிர வேறு “எவாளும் இல்லை. “இவாளைத்தவிர மற்ற அனைவரும் உப்புக்கு சப்பாணிதான். ஆகவே இப்படி ஸ்பெஷல் சலுகைகளோடு படைக்கப்பட்ட பிராமணர்கள் அனைவரும் கை கோர்த்து “  ஆண்டவன் படைச்சான்- என்கிட்டே கொடுத்தான்- அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் “ என்றும், “ உலகம் பிறந்தது எனக்காக- ஓடும நதிகளும் எனக்காக – மலர்கள் மலர்வது எனக்காக “ என்றும் கும்மாளமிட்டுப் பாடலாம்.  இப்படிப்பட்ட போதனைகளை நிலை பெறச்செய்து  ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டத்தின் சமூக அந்தஸ்தை இடுப்பொடித்துப்போடும் மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? கடவுளின் பெயர் சொல்லி இப்படி ஒரு கர்மாந்திரக் கருத்தைப் பரப்பி ஒரு சிறு கூட்டம் நாட்டை சுரண்டுவது முறையா? சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திக்கவேண்டியவை இவை. சிந்திக்க வைப்போம்.
இனியும் இருக்கின்றன ஏராளம்.

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...



-இபுராஹீம் அன்சாரி

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 20 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2012 | , ,

‘தீவான்’ (ديوان) என்ற சொல் அரபியில் தற்காலத்தில் அலுவலகம், பணியிடம், அரசாணை போன்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டாலும், அரபி இலக்கியத்தில் பொதுவாகத் ‘தொகுப்பு’ என்ற பொருளில் ஆகி, கவிதைகளின் தொகுப்புக்கே குறிப்பாக்கப் பெற்று விளங்குகின்றது.  இவ்வடிப்படையில், ‘தீவான்’ எனும் கவிதைத் தொகுப்புகள் அரபி இலக்கியத்தில் பலவற்றைக் காண்கின்றோம்.

‘தீவான் அலி’, ‘தீவான் ஹஸ்ஸான்’, தீவான் இப்னுல் முபாரக்’, தீவான் அஷ்ஷாஃபிஈ’ முதலான தீவான்கள் அவற்றுள் குறிப்பிடத் தக்கவை. அவற்றில் பொதிந்துள்ள சிந்தனைக் கருவூலங்கள், அவற்றை ஆழ்ந்து படிப்போரை அறிவுச் செல்வர்களாக ஆக்குபவை என்பது மிகைக் கூற்றன்று.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும், அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் அன்புக் கணவருமான அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் நபிவரலாற்றில் எத்தகைய உயர்விடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் நம்பத் தக்க நபிமொழிகள் மூலம் உண்மைப் படுத்தப்பட்டுள்ளன.



இளமையில் இஸ்லாத்தை ஏற்று, வாலிபப் பருவத்தில் போர்க்களங்களில் தம் வீரத்தை உண்மைப்படுத்தி, ‘நுபுவ்வத்’ எனும் நபித்துவக் கல்வியை நபியவர்களின் அண்மையில் இருந்து கற்று, அறிவுச் செல்வராகப் புகழ் பெற்றுத் திகழ்ந்த அலீ (ரலி) அவர்களைப் பார்த்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
أنت مني وانا منك
(நீர் என்னைச் சேர்ந்தவராவீர்; நான் உம்மைச் சேர்ந்தவனாவேன்)
(சான்று: சஹீஹுல் புகாரீ – 3700)

அலீ என்னும் அறிவுச் செல்வரிடமிருந்து, அவரின் அறிவுப் பெட்டகத்திலிருந்து கவிதைகள் ஊற்றெடுத்து வரவர, அவரின் தோழர்கள் அவற்றைப் பதிவு செய்தனர். அவற்றின் தொகுப்புதான் ‘தீவான் அலீ’ எனும் கவிக்கோவையாகும். அந்தப் பெருங்கடலில் மூழ்கி எடுத்த முத்துப் பரல் ஒன்று வாசகர்களின் பார்வைக்கு:

النَفسُ تَبكي عَلى الدُنيا وَقَد عَلِمَت ،  إِنَّ السَلامَةَ فيها تَركُ ما فيها
 إلاالَّتي كانَ قَبلَ المَوتِ بانيها لا دارَ لِلمَرءِ بَعدَ المَوتِ يَسكُنُها،
وَإِن بَناها بَشَرٍّ خابَ بانيها فَإِن بَناها بِخَيرٍ طابَ مَسكَنُها،
 حَتّى سَقاها بِكَأسِ المَوتِ ساقيها أَينَ المُلوكُ الَّتي كانَت مُسَلطَنَةً،
وَدورُنا لِخرابِ الدَهرِ نَبنيها أَموالُنا لِذَوي الميراثِ نَجمَعُها،
أًمسَت خَراباً وَدانَ المَوتُ دانيها كَم مِن مَدائِنَ في الآفاقِ قَد بُنِيَت،
مِنَ المَنيَّةِ آمالٌ تُقَوّيها لِكُلِّ نَفسٍ وَإِن كانَت عَلى وَجَلٍ،
 وَالنَفسُ تَنشُرُها وَالمَوتُ يَطويها فَالمَرءُ يَبسُطُها وَالدَهرُ يَقبُضُها،

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                             இலையே எனக்கோர் உறைவிட மென்றே
                                      ஏங்கித் தவிக்கும் ஆன்மாவே!
                             உலகை விட்டுப் போகும் போதோ
                                      உடைமை எல்லாம் போய்விடுமே
                             பலநாள் சேர்த்த செல்வம் உனக்குப்
                                      பயனில் லாது போய்விடுமே
                             நிலையா யிருக்கும் மறுமை வீட்டை
                                      நினைவில் கொண்டு சீர்படுவாய்!

                             நன்மை களினால் கட்டும் வீடு
                                      நாளை மறுமைக் கருவூலம்
                             புன்மைச் செயலால் நிறைந்த வாழ்வோ
                                      புகுத்தும் நரகப் படுகுழியில்
                             என்னா னார்கள் உலகை ஆண்டோர்
எங்கே போனார் அறிவாயோ?
                             இன்மைக் குவளை வெந்நீர் மாந்தி
                                      இறப்பை அடைந்து போய்விட்டார்!

நமது செல்வம் நம்மோ டிணைந்து
          நம்மைத் தொடர்ந்து வாராமல்
தமதாய்க் கொள்ளக் காத்தே நிற்கும்
          தகுதி பெற்ற உறவோர்க்கே!
மமதை கொண்டு விண்ணை முட்டும்
          மாளிகைப் பேரூர் அமைத்தோர்கள்
திமிரு மடங்கி இறப்பை அணைத்துத்
          தேடிப் போனார் நரகத்தை.

ஆன்மா வெல்லாம் உலகிலி ருந்தே
          அழிந்து போகும் உண்மையினால் 
வான்மழை போன்று மரணம் இறங்கி
          வருமென நம்புக மனிதர்களே!
கான்போல் வளரும் மனித இனத்தைக்
          கட்டிப் பிடிக்கும் இறப்பாலே
ஆன்மா மீண்டும் மறுமை வாழ்வில்
          அளவைப் பெறவே  சென்றுவிடும்.

‘யாக்கையின் நிலையாமை’ பற்றியும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது பற்றியும், ‘தன்வினை தன்னைச் சுற்றும்’ என்பது பற்றியும் அழகுற விளக்கும் அலியாரின் கவிதையும்  நமது சிந்தனைக்கும், அதனைப் பின்தொடரும் நற்செயலுக்கும் உரமூட்டுவதாகும்.

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

நொங்கு வண்டியிலே.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2012 | , ,


நம்மூரில் வறண்ட கோடை காலத்தை வரவேற்க பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் சுற்று வட்டார கிராமப்புறங்களில் தக்க பருவத்தில் வெட்டப்பட்ட நுங்குகள் குலைகுலையாக கொண்டு வந்து ஊரின் முக்கிய முச்சந்திகளில் இளம் பனை ஓலையுடன் பவ்வியமாய் வந்திறங்கும்.

தலை சீவப்பட்ட இளம் நுங்கில் கைப்பெருவிரல் கடப்பாறை போல் உள் சென்று நுங்கை வெளிக்கொண்டு வந்து வாயிற்குள் இலகுவாக உட்செலுத்தும். அப்பொழுது பீறிட்டு அடிக்கும் நுங்கின் நீர் முகம், சட்டையை வேதனை ஏதுமின்றி நன்கு பதம் பார்க்கும். (ஒன் மேன் சோ அடிக்கும் உங்களுக்கு அதுவும் ஆசைக்கு ஸ்ப்ரே செய்யும் ஊட்லெ போயி நல்லா சட்டையெ கழுவிக்கிடுங்க.....இல்லாட்டி கரைபுடிச்சிடும்.....)

சீவப்பட்ட நுங்கின் கண் போன்ற இளஞ்சுளைகளை பனை ஓலையில் வாங்கி வந்து துவர்க்கும் அதன் வெண் தோலை சேதாரம் ஏதுமின்றி அகற்றி பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு பசும்பால் ஊற்றி அதற்கு சுவை கூட்ட பன்னீரும் கொஞ்சம் இட்டு, இனிப்பு சுவை கூட்ட சீனியும் கொஞ்சம் சேர்த்து அதற்கு குளிரூட்டி நல்ல உச்சி வெயில் வரும் சமயம் (உச்சி உரும நேரம்) ஒரு கிளாஸ் பருகினால் உடலுடன் உள்ளமும் குளிர்ச்சியடையும். (கரண்டு போனாலும் வந்த தூக்கம் கலையாது....அப்படி ஒரு சுகம் பருகியதும்)

நல்ல இளம் நுங்காக பார்த்து வாங்க வேண்டும். முற்றிய கடுக்காயை வாங்கி சாப்பிட்டு விட்டால் பிறகு வயிறு கடுக்க ஆரம்பித்து விடும். பிறகு காலைக்கடனை செலுத்த வேண்டிய இடத்திற்கு கண்ட நேரத்திலும் செல்ல வேண்டி வரும்.


ரசாயன பொருட்கள் கலந்த செயற்கை குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா, சவன்அப் போல் பருகும் சமயம் இதமான சூழலை தந்து பிறகு பக்க விளைவுகள் (கேன்சர், சிறுநீரக, இதயக்கோளாறுகள்) ஏராளம் தராத இயற்கையாக பருவ மாற்றங்களுக்கு ஏற்ப இறைவன் மனித குலத்திற்கு மருத்துவ குணங்கள் அடங்கிய காய்கறி, பழவர்க்கங்கள் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபட்டு நமக்கு தடையின்றி அளித்துக்கொண்டிருக்கிறான். (எல்லா மரங்களும் மக்கள் பெருக்கத்தைக்காரணம் காட்டி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வெட்டப்பட்டு மெல்லமெல்ல அழிக்கப்பட்டு வருவதால் இனி வரும் காலங்களில் மாம்பழம், பலாப்பழம், நுங்கு திண்ண கூட விமானம் ஏறி அமேஜான் காட்டிற்குத்தான் செல்ல வேண்டும்)

பனை மரத்தில் நன்கு முற்றிய நுங்குகள் பனம் பழமாக ஆகி அதை நம் மக்கள் வாங்கி அடுப்பில் சுட்டு பனம்பழமாக சாப்பிடுவர். (காக்கை உக்காந்தாலும் உக்காராட்டியும் நேரம் வந்துடுச்சிண்டா பனம்பழம் ஆட்டோமேட்டிக்கா கீழே விழுந்துடும். உடனே வேணும்டா மரத்துலெ ஏறித்தான் ஆக வேண்டும்)

பனை மரத்தின் இளம் பாளைகளை சீவி அதிலிருந்து வடியும் சுனை நீர் தான் பதநீர் என்றழைக்கப்படுகிறது. அதில் கொஞ்சம் சுண்ணாம்பிட்டு பானையில் கிராமப்புறங்களிலிருந்து கொண்டு வந்து நம்மூரில் விற்பர். அதுவும் உடலின் உஷ்ணம் போக்கும் நறுமணம் வீசும் நல்ல இயற்கை பானம். (இப்போ எங்கே கெடக்கிது பதநி? இனி வரும் காலங்களில் பெரிய சூப்பர் மார்க்கட்டில் டின்களில் அடைத்தாவது பதநி கிடைக்குமா? என்று தெரியவில்லை. பதநி எடுத்த ஆட்களெல்லாம் இன்று பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எப்படி கிடைக்கும்?)

பிறகு பனங்கொட்டைகளை தரையில் ஊன்றி அதிலிருந்து வரும் வேர்களே தக்க சமயத்தில் பிடுங்கப்பட்டு நமக்கு பனங்கிழங்காக விற்கப்படுகிறது. அதை வாங்கி வெண்ணீரில் அவித்து தோல் நீக்கி (சம்சாப்பையில்) சுரண்டி அத்துடன் கொஞ்சம் தேங்காய் துருவி போட்டு இனிப்புக்கு சீனியும் சேர்த்துக்கொண்டால் நல்ல கமகமக்கும் இனிப்பு உணவாக அது மாறிவிடுகிறது. (இதன் சுவையை மறக்க முடியாத, தவிர்க்க முடியாத நம் மக்கள் எத்தனையோ பேர் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் அரபு நாடுகள் போன்ற உலகின் எந்த பிரதேசத்தில் இருந்த போதிலும் பருவமறிந்து ஊரிலிருந்து வரும் ஆட்கள் மூலம் தருவித்து அதை முறையே உண்டு ஊரிலிருக்கும் உணர்வை அங்கேயும் பெற்றுக்கொள்கின்றனர். முன்னாடி எல்லாம் ஊரிலிருந்து பனியான் சுட்டு வந்தது. அதை திண்டு திண்டு சலித்து விட்டது. எனவே எங்கிருந்தாலும் பருவ கால இயற்கை உணவுகளை விரும்பி உண்ணத்தொடங்கி விட்டனர் மக்கள்).

எல்லாம் முடிந்து இறுதியில் சிறுவர்கள் பக்கம் வருவோம். முக்கண்கள் தோண்டப்பட்ட இரண்டு நுங்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு இன்ச் தடிமனுள்ள ஒரு அடி கம்பு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். கம்பின் இரு நுனிகளையும் கிட்டிக்கம்பு போல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு இரண்டு நுங்கின் மையப்பகுதியில் சீவிய கம்பின் இரு முனைகளையும் ஒரு முனைக்கு ஒரு நுங்கின் மையப்பகுதி என சரிசமமாக செருகிக்கொள்ளுங்கள். பிறகு வீட்டின் கொல்லையில் உள்ள முருங்க மரத்தில் ஏறி நுனியில் அட்டபில் கவை போன்று இரண்டு, மூன்று அடிகள் உள்ள கம்பை உடைத்துக்கொள்ளுங்கள். பிறகு நொங்கு வண்டி ரெடி. ஒடித்த கம்பின் இரு பிளவாக உள்ள பகுதியை நொங்கு வண்டியின் மையப்பகுதியில் வைத்து நகர்த்துங்கள். மெல்லமெல்ல நகர்த்தி ஊரைச்சுற்றி வந்து உல்லாசத்தை இலவசமாய் அனுபவியுங்கள். (வெலெவாசி கூடுதலா இருக்கும் இந்நேரத்தில் வாப்பா, உம்மாட்டெ அது வேனும், இது வேனும் என வாங்கி கேட்டு அடம் பிடிக்காதீர்கள்.......நல்ல பிள்ளைகளாக வளர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் கண்குளிர்ச்சியைத்தாருங்கள்.......)

திடீர்ண்டு நொங்கு நெனப்பு வந்துச்சா அதான் இப்புடி.........

படிச்சிட்டு சுவையான உங்கள் கருத்துக்களை இங்கு பதிய மறக்காதீர்....

-மு.செ.மு. நெய்னா முஹம்மது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு