தொடர் – 7
பொதுவான வார்த்தை பிரயோகங்களில் ஒரு நண்பர் கூட இன்னொருவர் எதிர்பாராமல் வந்தால், "என்னப்பா குஞ்ஞாலி மரைக்காரும் கூடக் கூடவா?" என்று கேலி தொனிக்க கேட்பது வழக்கம். இந்த குஞ்ஞாலி மரைக்காயர் என்பவர் யார் என்று நாம் தெரிந்து கொண்டால் இப்படி ஒரு கேலியான வார்த்தைப் பிரயோகத்துக்கு இந்தப் பெயரை பயன்படுத்த மாட்டோம். அந்த அளவு வீரமிக்க ஒரு வரலாற்றின் வேந்தர் அவர். ‘அலைகடல் அரிமா’ என்று சரித்திரங்களின் பக்கங்கள் சான்று பகரும் ஒரு பெயராகும் அது. இன்றும் கூட கேரளத்தின் பல மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெருமையுடன் சூட்டப்படும் பெயர் அது. குஞ்ஞாலி மரைக்காயர் என்கிற பெயர் சூட்டப்பட்ட ஆண்மக்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைக்கும் மந்திரப் பெயர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாக , இந்திய வரலாற்றில் பூனைகளை புலி என்று கூறி சித்தரித்து உயர்த்துபவர்கள் உண்மையான இந்த ஆண் சிங்கத்தை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. வாருங்கள் தோழர்களே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரன் ஒரு முஸ்லிம் என்கிற பெருமையுடன் இந்த உண்மையான மாவீரன் மற்றும் அவரது வம்சங்களின் வரலாற்றை நாம் கண்டு வரலாம்.
ஆரம்பமாக, இந்த வரலாற்று நாயகனின் பெயரில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மரைக்காயர் என்கிற பெயர் பற்றி நாம் விளக்கம் பெற வேண்டிய கடமை இருக்கிறது. காரணம், நாம் பிறந்த மண்ணின் வாசம் இந்தப் பெயரின் பிற்பகுதியில் ஒளி வீசுகிறது. இதைப் பற்றிய விளக்கம் ஓரளவுக்கு உலகறிந்ததே. கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த முஸ்லிம்களின் ஒரு பிரிவினருக்கான அடையாளப் பெயர் இது. மரத்தைக் கொண்டு கப்பல்கள் செய்து அதை உலகெங்கும் ஓட்டிச்சென்று திரைகடலோடி திரவியம் தேடிய ஒரு உழைப்பாளர் கூட்டத்துக்கான பெயரே மரைக்காயர் என்பதாகும். இந்தப் பெயருடைய வர்த்தகப் பிரிவினர் இந்தியாவின் தென் பகுதி கடற்கரை ஓரங்களிலும் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் விரவி வாழ்ந்து வருகின்றனர். இதே கடல் வணிகம் செய்து வந்த ஒரு சிறப்பான கேரளக் குடும்பத்தில் பிறந்த தனால்தான் முஹம்மத் குஞ்ஞாலி என்கிற பெயரோடு மரைக்காயர் என்கிற பெயரும் ஒட்டிக் கொண்டது. அத்துடன் அன்றைய அரசனால் கடற்படைத்தளபதியாக நியமிக்கப் படும்போது வழங்கப் பட்ட பெயர் அது.
குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களுடைய வரலாற்றை அறியும் முன்பு நமது கவனத்தை சற்று வரலாற்றின் இரத்தக் கரை படிந்த பக்கங்களை நோக்கி சற்று திருப்ப வேண்டி உள்ளது. வாஸ்கோடகாமா என்கிற போர்த்துகீசிய வஞ்சகன், நடுக்கடலில் வைத்து ஹாஜிகளை குடும்பத்தோடு கொலை செய்து அவர்கள் வந்த கப்பலைக் கொள்ளையடித்த சம்பவம் தான் அது. இதை ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் விவரித்து இருக்கிறோம். குஞ்ஞாலி மரைக்காயருடைய சரித்திரம் வாஸ்கோடகாமா என்கிற இந்த வஞ்சகனோடும் அவனுடைய போர்ச்சுகீசிய கொள்ளைக்காரக் கூட்டத்துடனும் தொடர்புடையது.
வாஸ்கோடகாமா கி பி 1498 மே மாதம் 17- ஆம் நாள் இரத்தக் கரை படிந்த கரங்களுடன் கள்ளிக் கோட்டை என்கிற கோழிக்கோட்டின் கடற்கரையில் வந்து கால்பதித்தான். இந்திய மண்ணில் பதிக்கப் பட்ட முதல் அந்நியனின் காலடித்தடம் அவனுடையது. அந்த நேரம் இந்தியாவில் விஜய நகர சாம்ராஜ்யம் வலுப்பெற்று இருந்தது. விஜய நகரப் பெரிசு வாஸ்கொடகாமாவின் வெள்ளைத் தோல் கண்டு மயங்கி கொச்சி மற்றும் கண்ணனூர் ஆகிய அரசுகளுடன் சேர்ந்து வாஸ்கோடகாமாவுக்கு வரவேற்பு வளைவுகள் வைத்து வாசனைத்திரவியங்களுக்கு நல்ல விலைதர வந்த வணிகன் என்று அவனை அங்கீகரித்து தங்களது வணிக வாசல்களை அவனுக்காக திறந்து வைத்தன. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் கள்ளிக் கோட்டை என்கிற கோழிக் கோட்டை ஆண்டு வந்த மன்னரின் பெயர் சாமுத்திரிமான விக்ரமன் என்பதாகும். இவர் மட்டுமே ஒற்றை ஆளாக போர்த்துகீசியரை எதிர்த்து வந்தார். அவர்களை தந்து ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
இந்த சாமுத்திரி மன்னருக்கு உற்ற துணையாக அதாவது பின்னாளில் கட்டபொம்மனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்த வெள்ளையத்தேவன் போல் துணை நின்றவர்தான் இந்த அத்தியாயத்தின் நாயகர் குஞ்ஞாலி மரைக்காயர். இந்த சாமுத்திரி மன்னுடைய மருமகன் அந்தோணி என்பவனும் கோழிக் கோட்டில் வாசனைத்திரவியங்களை வெளிநாட்டினருக்கு விற்று வந்த வணிகர்களும் வாஸ்கோடாகாமாவின் பொன் பொருளைக் கண்டவுடன் , அவன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போல் போனார்கள். சரித்திரம் இப்படிக் குறிப்பிடுகிறது.
The Portuguese dominated trade in the Malabar after Vasco da Gama set foot in Kozhikode. The Samoodiri of Kozhikode (Premji) opposed the Portuguese. But the foreigners were supported by the local merchants and the Samoodiri's wicked nephew (P. J. Antony). Mohammed (Kottarakkara), a brave warrior and merchant supported the Samoodiri in his fight against the Portuguese. The Samoodiri honoured Mohammed by making him his naval chief and renaming him ‘Kunjali Marakkar'.
கோழிக்கோடு ராஜ்ஜியத்தின் சாமுத்திரி மன்னனின் கடற்படை தலைவர்களுக்கு வழங்கப் பட்ட பெயர் குஞ்ஞாலி மரைக்காயர் ஆகும். குட்டி முகமது அலி – இவரே முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் ( 1520- 1531) இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் ( 1531- 1571) பட்டு குஞ்ஞாலி மரைக்காயர் – மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் ( 1571-1595) முகமது அலி – நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் (1595- 1600) ஆகிய மாவீரகளைப் பற்றிய சுருக்கமான ஆனால் இறுக்கமான அறிமுக வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களின் இந்தியா மண்ணில் அன்னியருக்கெதிரான ஆரம்பகாலப் போராட்டத்தையும் கண்டும் காணாதோர் காணவே இந்தப் பதிவு.
சாமுத்திரி மன்னனின் கடற்படைத் தளபதியாக முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி ஏற்றுக் கொண்டபோது இப்படி முழங்கினார். "அந்நியரை நமது மண்ணில் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் சிந்தப் பட வேண்டுமென்றாலும் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்" என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தவர் குஞ்ஞாலி மரைக்காயர்.
சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார். இக்காலகட்டத்தில், கடற்படையைக் குறித்து எவ்வித போர் தொடர்பான அறிவோ திட்டங்களோ சாமுத்திரி மன்னர் உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாஸ்கோட காமா, வலது காலை எடுத்து வைத்து நுழைந்தது முதல் சாமுத்திரி மண்ணுக்கும் போர்த்துகீசியருக்கும் தொடர்ந்து போர்கள் நடை பெற்றன. அத்துடன் சனியனுடன் ஒரு “பாரச்சனியன்” சேர்ந்து கொண்டது. அந்த பாரச்சனியனின் பெயர் அல்புகர்க்கின் என்பதாகும். இவனே போர்த்துகீசிய கடற்படையின் தளபதியாவான். கிரிக்கெட் விளையாட்டில் ஒபனிங்க் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சிக்சர் அடிப்பதைப் போல் இந்த அல்புகர்க்கின், தனது முதல் கொடூரச் செயலாக கோழிக் கோட்டில் இருந்த ஒரு முஸ்லிம்களின் இறை இல்லத்தை இடித்துத் தரைமட்டமாக்கினான். இந்தக் கொடூரச்செயலைக் கண்டு கொதித்தெழுந்த பொது மக்களை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினர். இப்படி அந்நியருக்கு எதிராகத் திரண்டு, அவர்களால் வரிசையாக வாங்கப் பட்ட முதல் உயிர்ப் பலிகள் முஸ்லிம்களுடையது என்பதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கொடுமையான நிலையில்தான் இதை தட்டிக் கேட்க குஞ்ஞாலி மரைக்காயர் உடைய அணி களத்தில் இறங்கியது. கொரில்லாத் தாக்குதல் என்கிற மறைந்திருந்து தாக்குதல் எனும் முறையைப் பயன் படுத்தி அல்புகர்க்கின் என்கிற அரக்கனின் படையை கோழிக்கோட்டின் பகுதிகளில் இருந்து கோவாவுக்கு விரட்டி அடித்தது. குஞ்ஞாலி மரைக்காயரின் வீரமிக்க இந்த வியூகத்தால் ஐநூறு போர்ச்சுகீசிய வீரர்கள் கொன்று சாய்க்கப் பட்டனர். அல்புகர்க்கின் தனது காலில் குண்டு பாய்ந்து செயல் பட இயலாத சேர்மன் ஆனான்.
குஞ்ஞாலி மரைக்காயாரின் கொரில்லாப் படையால் கோவாவுக்கு விரட்டப் பட்ட போர்ச்சுகீசியர்கள் மரைக்காயருக்கு ஆதரவாக இருந்து ஆக்கமமும் ஊக்கமும் தந்துகொண்டிருந்த மன்னர் மானவ விக்கிரம சாமுத்ரியைக் கொல்லத் திட்டம் போட்டனர். அதற்காக அவர்களுக்கும் ஒரு எட்டப்பன் கிடைத்தான். அவன் ஒரு நம்பூதிரி பிராமணன். உலக வரலாறுகளின் பக்கங்களில் அரண்மனைகளில் நடந்த சதிகளுக்குப் பஞ்சமில்லை. அப்படி ஒரு சதியில் சாமுத்ரி மன்னன் அடுத்துக் கெடுத்த நம்பூதிரிப் பிராமணனால் உணவில் விஷம் வைக்கப் பட்டுக் கொல்லப்பட்டார்.
மன்னரின் மரணத்துக்குப் பிறகு அரசாள வந்த அடுத்த சாமுத்திரி மன்னனுக்கு போர்த்துகீசியரை எதிர்த்து நிற்க “ தில் “ இல்லை. தான் குடிக்கும் சோமபானத்துக்கும் சுறா பானத்துக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற கவலையே அரசனுக்கு. இதனால் போர்ச்சுகீசியருடன் 1513 – ல் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு சமாதானமாகிவிட்டான். இதனால் குஞ்ஞாலி மரைக்காயர் அரசின் ஆதவின்றி தனித்து விடப்பட்டார். ஆனால் அவருடைய நெஞ்சில் போர்ச்சுகீசியருக்கு எதிரான நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.
இப்படி அணையாத அந்த சுதந்திரத் தீ தந்த உத்வேகத்தில் 1523 ஆம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட கப்பல்களை போர்ச்சுக்கீசியரை எதிர்க்க தயார் செய்தார். போர்ச்சுக்கீசியர்கள் கள்ளிக்கோட்டையில் கிட்டங்கிகளை நிறுவினார்கள். தேவாலயங்களை நிறுவினார்கள். மூன்றாம் முறையாக இந்திய மண்ணில் அடி எடுத்து வைத்த வாஸ்கோடகாமா அவர்களை பாதுகாக்கவும் குஞ்ஞாலி மரைக்காயரை அடக்கிவைக்கவும் டிசோசா என்ற இன்னொரு பாரச்சநியனை படைத்தளபதியாக நியமித்தான்.
அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க எண்ணி குஞ்ஞாலி மரைக்காயர், குட்டி அலியின் தலைமையில் படையை நியமித்தார். குட்டி அலியின் படைக்கும் டிசோசாவின் படைக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான தலைகள் உருண்டன. குட்டி அலியின் படையை தாக்குபிடிக்கமுடியாமல் போர்ச்சுக்கீசியர் கவர்னர் மெனிசிஸ் பெரிய கப்பற்படையை குஞ்ஞாலியின் கப்பற்படை முகாமான பொன்னானி துறைமுகத்தை தாக்க 1525 ஆம் ஆண்டு 26ந்தேதி நாள் குறிக்கப்பட்டு பொன்னானி துறைமுகத்தை தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க குஞ்ஞாலியின் படை கள்ளிக்கோட்டையில் இருந்த போர்த்துகீசியரின் பொருட்கள் குவித்து வைக்கப்பட்ட கிட்டங்கி மீது தாக்குதல் நடத்தினார்கள். தங்களின் மதிப்புமிக்க விற்பனைப் பொருள்களின் கிட்டங்கி அழிவை சந்தித்துக் கொண்டு இருப்பதைக் கண்ட போர்ச்சுக்கீசிய தளபதி மெசினிஸ் மேலும் படைத்தளபதிகளை அனுப்பி, இன்னும் ஏழு மாதங்கள் கடுமையாக போராடி இறுதியில் 1525 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் குஞ்ஞாலி படையை தோற்கடித்தனர். அன்னியருக்கெதிரான குஞ்ஞாலி மரைக்காயரின் படை முதல் தோல்வியைக் கண்டது.
கோழிக் கோட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும் குஞ்ஞாலி மரைக்காயர் பயன்படுத்திய போர் கருவிகளின் அருங்காட்சியகம்.
தோல்வியடைந்த குஞ்ஞாலி மரைக்காயர் கேரளத்தின் ஏதோ பாக்குத் தோப்புக்குள் தலைமறைவானார். ஆனால் அவரின் நெஞ்சில் மூண்ட சுதந்திரக் கனல் தலைமறைவாகவில்லை. எனவே, மீண்டும் மூன்று ஆண்டுகள் கழித்து படைகளைத் திரட்டி, 1528 ஆம் ஆண்டு பர்கூர் என்ற இடத்தில் வந்த போர்ச்சுக்கீசிய கப்பல்களை அழித்தார். எதிர்த்து வந்த போர்ச்சுகீசியர்களையும் கண்ட துண்டமாக வெட்டினார். இதில் பல போர்ச்சுக்கீசிய மாலுமிகள், படைவீரர்கள் அனைவரும் சமாதி ஆனார்கள். அன்றொருநாள் நடுக்கடலில் வைத்து வெட்டப் பட்டு துடிதுடித்து செத்த ஹாஜிகளின் சாவுக்கு இவ்விதம் பழி வாங்கப் பட்டது. இவ்வெற்றிதான் மரைக்காயரின் மாபெரும் வெற்றி என்று சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தப் பழிவாங்கும் கொலை விழா வெற்றி அடைந்த பின்னர் இந்த எதிரிகள் ஆக்கிரமித்துள்ள இதர இடங்களையும் தன்னுடைய கடல் தொடர்பான அறிவால் கண்டு அறிந்து, இவர்களின் வாசம் இலங்கையில் வீசுகிறது என்கிற செய்தி அறிந்து தனது கடற்படையை இலங்கையை நோக்கி செலுத்தினார் ‘அலைகடல் அரிமா’ வான குஞ்ஞாலி மரைக்காயர்.
1537 ஆம் ஆண்டு எஞ்சியுள்ள கப்பல் படைகளுடன் இலங்கையை நோக்கிச் சென்று போர்ச்சுக்கீசியர்களை கண்ட இடத்தில் கொன்று குவித்தார். இலங்கையில் வாங்கிய உதையில் தப்பித்த பலர் தூத்துக்குடியை நோக்கி ஓடினர் . அப்படிப் போகும்போது குஞ்ஞாலி மரைக்காயர் மீது இருந்த கோபத்தில் தூத்துக் குடியில் முத்துக் குளித்துக் கொண்டு இருந்த 800 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை உடைய முஸ்லிம்களை 28.1.1538 அன்று தங்களது கட்டாரிகளுக்கு இரையாக்கி இனப் படுகொலை செய்தனர். இதனை அறிந்த குஞ்ஞாலி மரைக்காயர் தூத்துக்குடி சென்று போர்ச்சுகீசியரை தேடித்தேடி கொன்று குவித்தார். (Studies in Missionary History – S. Manickam.).
துரோகிகளை வெட்டிச் சாய்த்த திருப்தியில் ஓய்வு எடுப்பதற்காக இலங்கையில் உள்ள வேதாளையில் தங்கினார். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த பரங்கித் தலையர்கள் 1538 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி, டிசோசா தலைமையில் குஞ்ஞாலியின் படையை திடீரென்று தாக்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத மரைக்காயர் படை பெரும் பின்னடைவை சந்தித்தது. இறுதியில் மீண்டும் மரைக்காயர் தலைமறைவானார். தலைமறைவான இந்த சிங்கம் உறங்கி ஒய்வு எடுக்கவில்லை. அதன்பின் கொழும்பு சென்று அங்கு போரைத் துவக்கினார். இறைவனின் நாட்டம் வேறுவிதமாக இருந்தது. பரங்கியரின் குண்டு ஒன்று குஞ்ஞாலி மரைக்காயரின் வீர நெஞ்சில் தனக்கும் ஒரு இடம் வேண்டுமென்று தேடிச் சென்று சேர்ந்தது. கடலின் மூலம் வந்த அந்நியனை விரட்ட கடற்படை அமைத்து தீரமாகப் போராடிய மாவீரர், தனது இறுதி மூச்சை இறைவனின் பெயரை சொல்லியவண்ணம் உலக வாழ்வை நீத்தார்.
இந்திய நாட்டின் மீது அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய முதல் போராளியே குஞ்ஞாலி மரைக்காயர். அவரே அந்நிய சக்திகளிடமிருந்து நமது மண்ணைக் காக்க நடந்த வீர இயக்கத்தின் முன்னோடியும் முதல் நபரும் ஆன முஸ்லிம் ஆவார். வேறு எவராக இருந்தாலும் எல்லோரும் இவருக்குப் பின்னால்தான் இந்த சுதந்திர உணர்வைத் தூண்டியவர்கள் ஆவர். இந்தியக் கடல் எல்லையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் அந்நியரான போர்ச்சுக்கீசியரின் கண்களில் தனது வீர விரலை விட்டு ஆட்டிய முதலாம் குஞ்ஞாலி மரைக்காயரின் வீர சகாப்தம் முடிவுக்கு வந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் புதைக்கப் பட்டார் இனி நிம்மதி என்று என்று போர்ச்சுக்கீசியர் நினைத்தனர். ஆனால் அவர் புதைக்கப் படவில்லை ; மாறாக, அவர் விதைக்கப் பட்ட விபரம் இரண்டாம், மூன்றாம், நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர்கள் விஸ்வரூபம் எடுத்தபோதுதான் அவர்களுக்கு விளங்கியது.
அவைகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் காணலாம்.
இப்ராஹீம் அன்சாரி



















