Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவர்கள்...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2015 | , , , , ,

பிஸ்மில்லாஹ் !

ஏக இறைவனைத் தொழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால், கட்டப்பட்ட பள்ளி வாசல்கள். அந்தப்  பள்ளியின் பெயர் மாநிலமெங்கும் பரவவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆடம்பர வேலைப் பாடுகள். இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்தக் கல் கிடைத்தாலும் - அதைக் கொண்டு தரைகள், தூண்கள் இத்யாதி இத்யாதிகள்!

"ஒரு காலம் வரும்போது, பள்ளி வாசல்களைக் கட்டி, பெருமைப்பட்டுக் கொள்வார்கள்" என்ற கருத்தில் உள்ள அண்ணல் நபிகளின் `பொன்மொழி இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.

இப்படி பார்த்து, பார்த்து,பள்ளி வாசல் கட்டியாயிற்று ! ஐங்காலத் தொழுகையும் நடைபெறுகிறது. அனைத்தும் அமர்க்களமாய் நடைபெறும் சந்தோஷ தினங்கள் தான் என்றென்றும் ! இறைவனை தியானிப்பதின் மகோன்னதம், அது மிக உயர்ந்த பாக்கியம் அல்லவா ?

எல்லாவற்றையும் செய்து விட்டு, மிக முக்கிய, இஸ்லாத்தின் உன்னத பதவியான,தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தம சஹாபாக்கள் பார்த்த அந்த பணியை செய்யும் "இவர்களை" ஏனோ நம் மக்கள் மறந்து விட்டார்கள். 

ஆம் ! கொடுமையான தண்டனையின் உச்சம் அது ! சுடுமணல்! வெற்றுடம்பு,தீக்காயங்கள், சுடும் பாறை நெஞ்சின் மீது வைத்து, `ஏக இறைவனை மறு` என்று சொன்ன இறைநம்பிக்கை அற்ற அந்த மக்கத்து குரைஷிகளைப் பார்த்து "ஏகன் ஒருவனே ! ஏகன் ஒருவனே! என்று முழங்கிய பிலால் (ரலி) அவர்கள் செய்த அந்தப் பணி அல்லவா? அது !

இரண்டு கண்களும் தெரியாது, சமுதாய அந்தஸ்து கிடையாது. ஆனால், ஈருலக தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - அந்த நல்ல மனிதரை உயரிய பணிக்கு நியமித்தார்கள். அவர்கள் தான் உம்மி மக்தூம் (ரலி). அந்த இரு பெருந்தகைகளும் செய்த பணி "முஅத்தின்" தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் பெரிய பணி. இஸ்லாத்தின் மணி மகுடமாய் விளங்கும் அற்புத பணிஅல்லவா அது!

 பாங்கு சொல்வதற்குள்ள நன்மையையும், முதல் சஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி போட்டு பெற முயற்சிப்பார்கள் என்ற ஹதீசும், பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார் என்ற் ஹதீசும், பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட ஜீவராசிகள் எல்லாம்  அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீசும், பாங்கின் மகிமையை, அதை சொல்லும் "முஅத்தின்"களின் உயர்வை எடுத்துக் காட்டும் வகை அல்லவா ?

அந்த அருமையான பணியை செய்யும், அந்த ஆத்மாக்களின் வாழ்வு சுபிட்சமாக உள்ளதா? இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை ! ஏன்?

அந்த நல்ல பணியை செய்யும் அவர்களை நாம் எந்த இடத்தில வைத்திருக்கிறோம்.நாம் அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

நாம் அந்த உன்னத பணியை விளங்கவில்லை, அல்லது மறந்து விட்டோம்."முஅத்தின்" என்ற பெயரையே மோதினாராக்கி, களங்கப்படுத்திவிட்டோம். அவர்கள் பாங்கு மட்டும் சொல்லவில்லை. அதிகாலையில் எழுந்து , தன் அடிப்படைதேவைகளை முடித்து மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல்,பள்ளிவாசல் கதவு திறந்து லைட் போட்டு, ஹவுளில், கக்கூஸில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொண்டுவிட்டு, பாங்கு சொல்லும் நேரம் வந்ததும் அந்த குறித்த நேரத்தில் பாங்கு சொல்ல வேண்டும்.

ஒவ்வொருவராக தொழவரும் நபர்களின் கண்ணுக்கு ஏனோ ஒன்று உதாரணமாக,தண்ணீர் தேங்கியிருப்பது குறையாகத் தெரியும் (குறைகள் மட்டும்தான் தெரியும்) அதற்கு அந்த பள்ளியின் மோதினாரைத்தான் ஒரு பிடிபிடிப்பார்கள். முத்தவல்லி ,தொழவைக்கும், இமாம், நாற்காலிகளில் தொழும் நல்லவர்கள், ஏன் எல்லோரும் அந்த "முஅத்தினை" கேட்கவேண்டிய கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பார்கள்.நாம் அதை சரி செய்து,உதவலாமே என வருபவர் மிக மிக சிலரே.

தொழுகை முடிந்தவுடன், பள்ளி வாசலை சுத்தம் செய்தல், கழிவறைகளை கண்காணித்தல்  இப்படியான சில வேலைகளில் நேரங்கள் நகரும் !

காலை, பகல்,  இரவு உணவுக்கு தனது அடுக்குச் சாப்பாட்டு செட்டைத்  தூக்கிக் கொண்டு அன்றைய பொழுதிற்கு உணவளிக்கும் வீட்டிற்கு சென்று ,அலைந்து திரிய வேண்டும்.பள்ளிவாசலின் மின்விசிறியை ஜமாத் தொழுகை நேரம் முடிந்ததும்  ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் நிறுத்திவிடுவார்(பள்ளி ரூல்ஸ்), ஜமாத் தொழுகை முடிந்து லேட்டாக தொழவரும் நபர் தன்னிச்சையாக மின்விசிறியை போட்டுக் கொண்டு தொழுது விட்டதை யாரும் பார்த்துவிட்டால அதனை முத்தவல்லியிடம் சொல்லி இவருக்கு திட்டும் வாங்கிக் கொடுக்கும் ஒரு கூட்டமும் பள்ளியில் அமர்ந்துதான் இருக்கும்.

சொந்த் வீடு, மக்களை பார்க்க போதிய நேரம் ஒதுக்க இயலாது, லீவு கிடைப்பது இல்லை, சம்பளமும்  சொல்லிக் கொள்ளும்படியாக பெரும்பாலான பள்ளிவாசல்களில் கிடையாது. இன்றையச் சூழல் விலைவாசியில் அந்த சம்பளத்தைக் கொண்டு 10 நாட்கள்கூட வாழ்க்கையையை ஓட்ட இயலாத சூழல்.

இன்னும், அவர்களுக்கு மன உளைச்சல்கள் , காயங்கள், ஏச்சுப் பேச்சுகள் ஏராளம்.

மார்க்கத்தின் உயர்ந்த பணி செய்யும் அம்மக்களைப் பற்றி, நாம் சிந்தனை செய்தோமா ? நம் அருகில் உள்ள் அப்பள்ளியின், முஅத்தின்களை அரவணைத்திருக்கிறோமா ? இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை !இனியாவது, இன்ஷா அல்லாஹ் அந்த முஅத்தின்களின் தோள்களில் தோழமையுடன் கைபோட்டு, அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகி, அவர்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் அனுசரனையாக விளங்கி, அந்த உயர்ந்த பணி செய்யும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். ஏனெனினில் அவர்கள் நீண்ட கழுத்துடன் மறுமையில் (தனி அந்தஸ்துடன்) வருவார்கள் ! எல்லா ஜீவராசிகளும் அவர்களுக்காக சாட்சி சொல்லும் !

நாம் !?

இப்னு அப்துல் ரஜாக் 

(‘முஅத்தின்’களின் இப்பிரச்சனையை  நாம் எவ்வாறு களைய வேண்டும்?அவர்களின் சம்பள உயர்வுக்கு என்ன செய்ய வேண்டும் ?போன்ற கருத்துக்கள் பரிமாறி,அதை எப்படி முன்னெடுப்பது?அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்கலாம் என கருத்துக்கள் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்,நன்றி)

அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா !? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2015 | , , , ,

மனிதனின் வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மன நிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாய்ப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.

அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவை யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும்.

உதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா.? சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.? பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா..? அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒரு பொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா..? இல்லையா.? என்று சந்தேகப்படுவது. அடுத்துச் சொல்வதானால் சந்தேக நிலையில் உள்ள சில அறியாத விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது, ஆதாரமில்லாத சில செய்திகளைக் கேள்விப்படும்போது சந்தேகத்தோரணையில் கேட்பது இதுபோன்ற இப்படி பலவகையில் ஒருமனிதனுக்கு நடைமுறை வாழ்வில் அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.

ஆனால் சிலரது சந்தேகங்கள் அவசியமற்றதாக நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம்,பேசினாலும் குற்றம் என்று சொல்வதுபோல சதா எல்லாவற்றிற்கும் எல்லா விசயத்திற்கும் சந்தேகப்படுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்பவாழ்வில் திருமண வாழ்வில் ஏற்படும் சந்தேகம்தான் எல்லா சந்தேகங்கங்களை விடவும் மிக மோசமானவையாகவும் பிரச்சனைக்குரியவையாகவும் இருக்கிறது.இந்த சந்தேகம்தான் நிம்மதியைத் தொலைக்கச் செய்து விடுகிறது. இச்சந்தேகம் கொண்டவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை.

சந்தேகம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் குணங்களில் ஒன்றாக இருந்தாலும் . அதேசமயம் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படக் கூடியவையாக இருக்கிறது. இப்படி சூழ்நிலைச் சந்தேகங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பொருத்து அதிகபட்சம் ஏற்றுக்கொள்ள கூடியவையாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சந்தேகங்கள் ஆரோக்கியமானதே அதேசமயம். அர்த்தமில்லா அவசியமற்ற சந்தேகங்கள் சந்தோசத்தைத் தொலைத்து சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.

ஒருவருக்கு அவசியமற்ற சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.

ஆகவே பெற்றோர்களானாலும், கணவன் மனைவி, பிள்ளைகளானாலும், சகோதர,சகோதரி உறவினார்கள் மற்றும் நட்புகளானாலும் புரிந்துணர்வு மிகமிக அவசியம் இருக்கவேண்டும். ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நம்பிக்கை தளர்ந்து வலுவிழந்து விடுமாயின் அந்த இடத்தை சந்தேக நோய் தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு பிரச்சனைகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.

தேவையற்ற சந்தேகத்தினால் எத்தனையோ கணவன் மனைவிமார்களும், குடும்பங்களும், உறவுகளும் நட்புகளும் சிதறுண்டு நாலாபுறமும் பிரிந்து கிடப்பதை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் பல ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிகிறோம். இப்படி அவசியமற்ற சந்தேகத்தினால் ஏற்படும் பிரிவுகளை நினைக்கும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.

குடும்பப் பிரச்சனையில் ஏற்படும் சந்தேகங்கள் கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளினால் சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி வளர்ந்து காரணத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் சந்தேகத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அநியாயத்திற்கு தன்னை மாய்த்துக் கொண்டவர்களும் நிறையபேர் உண்டு.

மற்ற சந்தேகங்களை விட ஒரு மனிதனுக்கு குடும்ப உறவில் சந்தேகம் வந்து விட்டால் அவனிடம் எவ்வளவு செல்வமிருந்தாலும் பணிவிடை செய்ய ஆயிரம் உதவியாளர்கள் இருந்தாலும் மனதில் நிம்மதிமட்டும் இருப்பதில்லை.. நிம்மதியில்லாத வாழ்க்கை நரகவேதனைக்குச் சமம் என்றுதான் சொல்லமுடியும்.நம்பிக்கைதான் வாழ்க்கை இதை நன்கு உணர்ந்தவர்கள் இன்புற்று வாழ்வார்கள். இல்லையேல் துன்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடைபிணமாகத்தான் வாழமுடியும். ஆகவே அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து அவசியமற்ற சந்தேகங்களைத் தவிர்த்துக் கொண்டு நமது இவ்வுலக வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்வோமாக...!!!

அதிரை மெய்சா

வாழ்க்கையின் பதிவேடுகள்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2015 | , ,

முடி நரைத்தும்
மூச் சிரைத்தும்
மூப் பெய்தோர்
முக வரிகளைக்
கண் டெடுத்துப்
காணத் தருவது...


 



S.முஹமது ஃபாரூக்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 004 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2015 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.


''உங்களின் (தொழுகை) அணிவகுப்பை சமப்படுத்துங்கள். (இல்லையெனில்) உங்கள் முகங்களுக்கிடையே அல்லாஹ் வேறுபாட்டை (பிரிவை) உண்டாக்கி விடுவான்''  என்று நபி(ஸல்) கூற நான் நான் கேட்டேன். (அறிவிப்பவர்: (அபூஅப்துல்லா என்கிற) நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).

''நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்:7 )

''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரான் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம்.  தன் சகோதரனின் தேவையை ஒருவன் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)

''மரணித்த நபரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை: குடும்பம், அவனது சொத்து, அவனது செயல் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று தங்கி விடுகிறது. (அதாவது) அவனது குடும்பமும் அவனது சொத்தும் திரும்பி விடுகிறது. அவனது செயல் (அவனுடன்) தங்கி விடுகிறது. '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).

''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு  மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள்(முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:245)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.


எரிகிறது குஜராத் - யார் இந்த பட்டேல்கள்?? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2015 | , , , , ,

கடும் சலசலப்புக்கு உள்ளாகி இருக்கின்றது குஜராத். கலவரம், ஊரடங்கு உத்தரவுகள், பந்த். பல கோடி அரசு சொத்துக்கள் நாசம். இவை அனைத்திற்கும் பின்னணியில் பட்டேல் சமூகம். 


சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக, தலித்கள் ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் மூலம் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்தவர்கள், இன்று, தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று அரசு இயந்திரத்தை முடக்கியுள்ளார்கள். 

1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குஜராத்தின் மொத்த மக்கட்தொகையில் பதினைந்து சதவிதம் பட்டேல் சாதியினர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிரீதியான கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக வலுவானவர்களாக கருதப்படும் பட்டேல் பிரிவினர், 1970-கள் வரை காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்கள் எண்ணங்களுக்கு காங்கிரஸ் செவி சாய்க்க மறுத்ததால் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களாக மாறினர். இன்று வரை அது தொடர்கின்றது. 

இதற்கான பிரதிபலன்களை நாம் கண்கூடாக பார்க்க முடியும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 சதவிதம் பேர் பட்டேல்கள். முதல்வர் மற்றும் ஏழு கேபினட் அமைச்சர்கள் பட்டேல் பிரிவை சார்ந்தவர்களே. 

ஆக, செல்வ செழிப்பான வாழ்வை அனுபவித்து வருவதாக கருதப்படும் இவர்கள், இட ஒதுக்கீடு கேட்பதற்கான மர்மம் என்ன? 

வெளியே ஊதி பெருக்கப்படும் 'குஜராத் மாடல்' மற்றும் 'ஒளிரும் குஜராத்' போன்ற திட்டங்கள் எடுபடாததே இதற்கு காரணம். உதாரணத்திற்கு, இவர்கள் கோலோச்சி உள்ள தொழில்களில் ஒன்றான வைர வியாபாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சுமார் 150 நிறுவனங்கள் வரை சமீபத்தில் மூடுவிழா கண்டுள்ளன. ஆக, தங்களின் எதிர்கால சந்ததிகள், கல்வி மற்றும் அரசு பணிகளில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனை முன்னோக்கியே லட்சக்கணக்கானோர் கலந்துக்கொள்ளும் சமீப கால போராட்டங்கள், அதன் வெளிப்பாடாக கலவரங்கள். 

இவர்களை வழிநடத்துவது ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் என்பது நம்புவதற்கு கடினமானதாக இருக்கின்றது. இவரை கைது செய்த போது தான் கலவரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 

இவர்கள் கேட்பது 27 சதவித இடஒதுக்கீடு. எந்தவொரு மாநிலத்திலும், இட ஒதுக்கீடு என்பது ஐம்பது சதவிதத்தை தாண்டி இருக்க கூடாது என்பது உச்சமன்ற தீர்ப்பு. குஜராத்தை பொருத்தமட்டில், இந்த உச்சவரம்பை ஏற்கனவே எட்டி விட்டது. ஆக, பட்டேல்களுக்கான இந்த இட ஒதுக்கீடு சாத்தியமாக வேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏற்கனவே இருக்கும் ஏனைய சமூகத்தினருக்கான சதவிதத்தை குறைத்து அல்லது பிடுங்கி தான் இவர்களுக்கு தர முடியும். அப்படி நடந்தால் குஜராத் ஸ்தம்பிக்கும் அளவு தங்களின் எதிர்ப்பு இருக்கும் என்று OBC பிரிவில் இருக்கும் சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவிட்டனர். 


இந்த பிரச்சனையானது மற்ற சமூகத்தினரை தூண்டும் அளவு சென்றது/செல்வது தான் பரிதாபமானது. சில தினங்களுக்கு முன்பு, பட்டேல் சமூகம் நடத்திய ஒரு பேரணியில் தலித்துகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது. 

சாதிய பிரச்சனைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இவை அனைத்தும் சுமூகமான தீர்க்கப்பட்டு குஜராத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்போம். 

ஆஷிக் அஹ்மத் அ [http://manithaabimaani.blogspot.com/2015/08/blog-post.html]
படங்கள்: இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி சேகரிக்க உதவியவை: NDTV, CNN IBN, TOI மற்றும் இந்தியா டுடே 

Making Of "படிக்கட்டுகள்" 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2015 | , ,

"படிக்கட்டுகள்" தலைப்பு வைக்கவே எனக்கு 18 பட்டி பஞ்சாயத்தின் விருப்பம் தேவைப்பட்டது. 'முன்னேற்றம், புறப்படு , விழித்தெழு" என்று நிறைய பேர் எழுதி முடித்து விட்டார்கள். இனிமேலும்  இப்படி எழுதினால் போய்ச்சேருமா என்ற சந்தேகம்தான்.

இன்னும் சொல்லப்போனால் நம் ஊர் சார்ந்த மக்கள் இன்றைக்கு அதிக அளவில் வலைப்பூக்கள் நடத்துவதில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது வலைப்பூக்களின் தரத்தை இன்னும் சில நல்ல விசயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அதனால் நான் எழுத எடுத்த சப்ஜெக்ட் Personal Development.

எழுதிய பிறகு இருந்த வரவேற்பு என்னை அந்த தொடருடன் தொடர்பில் இருக்க வைத்தது. அந்த 24 தொடரிலும் நான் எழுதியது வெறும் தலைப்புதான்...இன்னும் ஆழமாக எழுத முடியும். ஆனால்  குழப்பம் வரும். இதை எல்லாம் ஒரு ஒர்க்ஷாப் ஷெசனில்  4 , 5 நாள் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களே அதிகம்.

எனக்கும் அறிவுரை வழங்குவதில் உடன்பாடில்லை, If I can bring some awareness, that itself  can be worth my effort.

நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமையாதலால். அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நான் எழுத எனக்கு ஆதரவாக இருந்த விசயங்கள் நான் இதுவரை கற்றுக்கொண்ட சில பயிற்சிகள். அதில் சில ஒரு தீவுக்கு போய் சூரியன் உதிப்பதற்கு முன் செய்யும் சில தற்காப்பு கலையின் ஆரம்பக் கல்விகளும் / பயிற்சியும் அடங்கும். சில பயிற்சிகள் நமது தொழிலுக்கு நிச்சயம் உதவும். அவைகளில் மரம் ஏறத்தெரியாத எனக்கு ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து செங்குத்தாக பூமியை நோக்கி முகம் வைத்து இறங்கும் பயிற்சியும் அடங்கும். [ஷேஃப்டி விசயங்கள் உண்டு].

இப்படியெல்லாம் செய்வதற்கும் வாழ்க்கையில்  முன்னேறுவதற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று நான் அப்ரானியாக நினைத்தது உண்டு. உடலை சில தடைகளை கடக்க வைப்பதன் மூலம் வாழ்க்கையின் தடைகளை கடக்க பயிற்சிகள் கிடைக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. இவை அனைத்தும் தொழிலில் team building  பயிற்சிகள்.

சமயங்களில் கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்களுக்கு பதில் எழுதும் நான் சாகுல் / இக்பால் / சபீர் ..இந்த மூவருக்கும் பதில் எழுதுவது இல்லை. காரணம் இந்த 3 பேரின் பெயரில் யாரையாவது நான் மைனஸ் செய்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பகுதியை ஒழித்து எழுதியதாகிவிடும்

சாகுல்.. எல்லோருக்கும் கிடைப்பது அவரவர்கள் நட்புதான். எங்கள் இருவருக்கும் கிடைத்தது மூன்று தலைமுறை நட்பு.  எங்களின் இருவரின் பாட்டியிலிருந்து ஆரம்பித்த நட்பு, எங்கள் தந்தையினர் என்று ஆரம்பித்து இப்போது எங்கள் நட்பு என்று இருக்கிறது. சாகுல் சின்ன வயதிலிருந்தே தெரியும், ஆதலால் அவரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விசயமும் எனக்கு தெரிந்தே நடந்தது.   வயதில் என்னைவிட குறைந்தவராக இருந்தாலும்  புத்திக்கூர்மையில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய அனுபவசாலிளை மிஞ்சக்கூடியவர்.

இக்பால்... என் நெருங்கிய நண்பர்களில் இவனும் ஒருவன். அவனது வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் , கூடப்பிறந்தவர்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அவனுக்கு கொடுக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நான் அவன் வீட்டில் முக்கியமானவன். நான் சொல்லும் எந்த விசயத்தையும் விவாதித்து சரி / தவறு என்பதற்கு காரணம் சொல்லி சண்டை போட்டு எப்போதும் என் மீது உள்ள அன்பில் மாறாத குணம் உடையவன். சின்ன வயதில் விவாதிப்பது என்பது சண்டை போடுவதல்ல. கருத்து பரிமாற்றம் என உணர வைத்தவன். மார்க்க விசயங்களில் நமக்கு கிடைத்த ஆன்லைன் ரெஃபரன்ஸ் இவன்.  உண்மையைச்சொல்ல யாராக இருந்தாலும் பயப்படமாட்டான். சிங்கப்பூர் கவர்ன்மென்ட் மாதிரி..தப்புனா தப்புதான்.

சபீர்.... ஸ்கூல் படிப்பு / கல்லூரி என்று தொடர்ந்தாலும் ஏனோ மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒன்றாக தெரியும் ஒற்றுமை எங்களிடம். நண்பனாக இருப்பது என்பது வேறு. நண்பனாகவே ஆகிப்போவது என்பது வேறு. நாங்கள் 2 வது ரகம். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு = நட்பு என்பதின் அடையாளங்கள் நாங்கள். எங்கள் சின்னம்மாவின் [சபீரின் தாயார்] செல்லப்பிள்ளை நான். இரண்டு பேரும் ஒன்றாக கால்பந்தாட்டத்தில் அடிபட்டு வர எனக்கு முதலில் மருந்து கொடுத்த தாய். நிறைய பேர் நினைப்பது நாங்கள் இருவரும் சகோதரர்கள்... எனக்கு அதில் உடன்பாடில்லை.. நண்பனாய் இருப்பதில் அதிகம் சுதந்திரம் இருக்கிறது. என் தவறுகளை இவன் கண்டித்தால் மட்டும் கேட்டுக்கொள்வேன் சின்ன வயது தொடக்கம். என் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் இவன் முடிவுக்காக காத்திருந்திருக்கிறது, அன்றும் இன்றும் எப்போதும்.

படிக்கட்டுகள் எழுத நிறைய நெறியாளுகை செய்திருக்கிறான். கால ஒட்டம் பல விசயங்களை மாற்றிப் போட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அப்படியேதான் இன்னும் மாறாமல்.

படிக்கட்டுகள் எழுத முக்கிய காரணங்களில் ஒன்று , நம்மைச் சார்தவர்கள் யாரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்ற என் பாசிட்டிவ் அப்ரோச்தான். பெரும்பாலும் எழுதும்போது மற்றவர்களை திறமையற்றவர்களாகவும் , ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் அட்வைஸ் அள்ளிக்கொட்டும் எந்திரமாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் பகுதியை சார்ந்த அனைவரும் மிகவும் கடின உழைப்பாளிகள். சரியான வாய்ப்புகள் , வழிகாட்டிகள் இல்லாததும் அவர்களின் பின் தங்கிய நிலைக்கு காரணம்.  May be எனக்கு கிடைத்த அந்த exposure மற்றவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏன் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று முதல் படிக்கட்டுகள் எழுதிய உடன் சகோதரர்கள் அபு இப்ராஹிம் / தாஜூதீன் இருவரும் தந்த ஆர்வம் தொடராக வெளிவர உதவியாக இருந்தது.   அபு இப்ராஹிமின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது. வேலையிடத்தில் உள்ள டென்சன், மற்றும் பல வேலைகளுக்கிடையே தனது அதிரை நிருபருக்கான வேலையை தள்ளிப்போடாமல் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது.  தம்பி தாஜூதீன் அவர்களின் தன்னடக்கமான பண்பு போற்றத்தக்கது.

இதை எழுதுவதற்கு நான் எந்த புத்தகங்களையும் ரெஃபரன்சாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது நம் வழக்கம் / இனம் / மொழி சார்ந்த விசயங்களுடன் ஒத்துப்போகாது.

வெள்ளைக்காரர்களும், வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இதுபோன்ற விசயங்களை தொட்டு எழுத முடியும் என்ற விசயத்தில் உண்மைகள் இல்லை.
 
இந்திய தேசம் இதுவரை கணக்கில் அடங்காத ஞானிகளையும் , அறிவாளிகளையும் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆசியாவில் பிறந்தவர்கள் சொல்லாத பிசினஸ் சைக்காலஜியை மற்றவர்கள் சொல்லியிருப்பார்களா என்பதில் சந்தேகம்தான். மற்றும் வெள்ளைக்காரர்களின் அதிகமான அறிவுரைகள் ஒரு rat race போலத்தான் இருக்கும். ஜெயித்த பிறகு ஜீவன் செத்துப்போயிருக்கும்.

சம்பாத்யம் புருச லட்சனம்,” எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் மாதம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் உனக்கு" என்று சொன்ன  மர்ஹூம் சமது மாமா அவர்கள்.   [ இப்ராஹிம் அன்சாரி அண்ணனின் தந்தை ] ,  எந்த சுழ்நிலை வந்தாலும் தன்மானத்தை ஒரு சதவீதம் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டு என்று எனக்கு அறிவுரை தந்த எங்கள் முகம்மது பாரூக் மாமா [சாகுலின் தந்தை] ,ஆம்பளையா பொறந்தா ஒரு 24 பேருக்கு உணவு கொடுக்கும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும், அதே சமயம் அப்படி உணவளிக்கவும் வேண்டும் என்று சொன்ன எங்கள்  மாமா  [மர்ஹூம்] முஹம்மது யூனுஸ் அவர்கள். [சபீரின் தாய்மாமா].   உழைக்க  துணிஞ்சவனுக்கு கஷ்டம் ரொம்ப நாள் இருக்காதுடா என்று சொன்ன என் தாய். "மேயப்போற மாட்டுக்கு கொம்புலெ எதுக்கு புல்லு??" என கேட்ட படிக்காத என் பாட்டி [தந்தையின் தாய்]

இவர்கள் யாரும் எந்த யுனிவர்சிட்டியிலும் படிக்கவில்லை.இது போன்ற காகிதக்கல்வி படிக்காத மனிதர்களிடம் அதிகம் நடைமுறை அறிவை கற்றுக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
 
இதுவரை இந்த தொடர் எழுத எனக்கு கமென்ட்ஸ்களின் வழி உற்சாகம் தந்த அனைவருக்கும் நன்றி.

அவர்களின் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன். 

இப்ராஹிம் அன்சாரி அண்ணன், ஜமீல் நானா, அதிரை அஹ்மது காக்கா ,  அண்ணன் N.A.S, [சமயங்களில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா ஸ்டேசனும் எடுக்கும் அறிவுஜீவி],   சகோதரர் கிரவுன் [சமயங்களில் டெலிபோனில் அழைத்துபேசுவார்] தம்பி யாசிர் [ஒரு அத்தியாயம் படித்து விட்டு டெலிபோனில் அழைத்து பேசினார்] சகோதரர் கவிஞர் அபுல்கலாம் [மறவாமல் எல்லா அத்யாயங்களிலும் இவரின் கவிதையான கருத்து இருக்கும் ]  

என் பாசமிகு சகோதரர்கள் நூருல் அமீன்.  அப்துல்வாஹித் அண்ணாவியார். அப்துக் ராஜிக், அப்துல் மாலிக் , எம் ஹெச் ஜஹபர் சாதிக், ZAEISA , Ara Ala , Naina [ AlKhobar ] B. Ahamed Ameen, Sister Ameena.A,  Abu Bakar [ amazan ] Abdul Malik , Alaudeen S. uroovaasi ,  Ahamed Irshad, MSM Naina Mohamed [இவரின் எழுத்துக்கு நான் ரசிகன் ],  புதுசுரபி,  LMS AbooBakar , Mohamed Buhari, SS Syed Ibrahim.A [ Dubai], அன்புடன் புகாரி , sekkana M.Nijam,  Hidaayathullah,  Adirai N.Safath,  Noor Mohamed [ My senior in school ] , Ashik Ahamed , N. fathhudeen, ஜாகிர் ஹுசைன் , நட்புடன் ஜமால் .... மற்றும் எனக்கு கல்வி தந்த SKM ஹாஜா முஹைதீன் சார் , வாவன்னா சார் , முஹம்மது அலியார் சார், திரு சீனிவாசன் சார் இன்னும் யாரையாவது எழுதாமல் விட்டிருப்பேன்.. மறதிதான்…. மன்னிக்கவும்.

 படிக்கட்டுகள் இது போன்ற நிறைய பேருடன் என்னை அழைத்துச்சென்று அன்பையும், சகோதரத்துவத்தையும், நட்பையும் எனக்கு பரிசாக தந்திருக்கிறது.

Wish You All the Best,  இறைவன் உதவியால் மீண்டும் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2015 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

உள்ள ஆட்சியிலா? உருவாகப் போகும் ஆட்சியிலா ? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2015 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச் சுற்றியே இருக்கு (மண்வாசனை யோடு) சரி நம்ம கணவு பலிக்குமா? எல்லாவற்றையும் வெளியில சொன்னா ! என்று யோசனையில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட்டது அட ! நம்மவங்க எல்லாத்தையும் பலிக்க வச்சுடுவாங்கன்னுதான் ஒரு கற்பனையாக இப்படி எழுதத் தோனுச்சு !

இன்றைய (உள்ள) ஆட்சியில் சொன்னது அன்று இலவசம் இலவசம் இலவசம் அவைகள் இன்று எவர் வசம் என்று தேடவும் ஆரம்பித்து விட்டனர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய இலவசத்தில் மனவசப்பட்ட மக்கள்.

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தேர்தல் களம் கண்ட அந்த நேரத்தில் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகள் என்று வெளியிட்டதாக எமக்குத் தெரியவில்லை ஒருவேளை இப்படியிருக்கலாமோ தேர்தல் அறிக்கை என்றொரு மரபு உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இல்லாமலிருக்குமோ யாம் அறியோம்!?.

எது எப்படியிருந்தாலும் ! தேர்தல் என்று வந்தால் அறிக்கைப் போர் நடந்தால்தான் அந்தச் சமரில் காரமும் இருக்கும் தும்மலும் இருக்கும் !

சரி அவர்கள்தான் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் சும்மாவா இருக்கமுடியும், ஆதலால் அவர்களின் சார்பாக பேருராட்சி மன்றத் தேர்தல் அறிக்கையை நாமே இங்கே சமர்பிப்போம் மக்களாகிய நீங்கள் தீர்ப்பை சொல்லுங்க பார்க்கலாம் !

- அதிகாலை அதிரை நகரினை அழகுற அனைவருக்கும் எழுந்திருக்க வைக்க வேண்டும் !

- காலைக் கதிரவன் கன்னிக் கதிரை வெளிக் கொணரும்போது எழும் சில்லென்ற புகையோடு கூடிய தெருக்கள் பெருக்கி எழும் புழுதியை ரசிக்க ரசிகர் மன்றங்கள் ஒவ்வொரு தெரு முணைகளில் வைத்திட வேண்டும்.

- இரவில் உறங்காத கொசுக்களை காலை முதல் மாலை வரை தாலாட்டி சீராட்டி உறங்க வைக்க தனி தொண்டர் படை அமைக்க வேண்டும்.

- குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்வரை வரும் காற்றை குழாய் வழியாக எடுத்துச் சென்று வீடுகளில் இருக்கும் மின் விசிறிகளை இயங்க வைக்கும் நவின வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

- கோடு போட்டு ரோடு போடாவிடினும் பாடுபட்டு கட்டிய வீட்டிற்குள் மழைநீரும், சாக்கடையும் நுழையாமல் நீண்டகால திட்டம் தீட்டி வடிகால் அமைத்திட வேண்டும் !

- வீட்டு வரி வசூல் செய்ய வீடுகளுக்கு வருபவர்கள் அது பேரூராட்சி கஜானாவுக்குள் சேர்கிறதா என்று உத்திரவாதம் தந்திட வேண்டும் !

- அதிவேக மின்சாரம் வேண்டாம், அளவான மின்சாரமும் அடிக்கடி அனைக்காத மின்சாரமும் வேண்டும் !

- சுற்றித் திரியும் பன்றிகளுக்கு ஊருக்கு ஒதுங்குப் புறத்தில் சங்கம் அமைத்து தெருவுக்குள் நுழையாமல் இருந்திட நடவடிக்கைகள் அவசியம் வேண்டும்.

- சாக்கடைதான் என்று நூறு சதவிகிதம் ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியும் எது எங்கே இருக்கிறது என்ற நிலை தெரியாமல் தவிக்கும் இன்றைய நிலையில் !

- பிளாஸ்டிக் பைகளின் அராஜகத்தை அறவே அகற்ற முடியாவிட்டாலும் கண்டதும் அதனைச் சுட உத்தரவு போடவேண்டும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற (???) பணியாளர்களை அமர்த்தி கு.பொ.வாரியம் ஒன்று உருவாக்கி அதறகு தகுந்த தலைவரை இன்றைய இளம் தலையை அங்கே அமர்த்தப்பட வேண்டும்.

- இரவில் சுற்றித் திரியும் திருடர்களையும் திருந்தாத தருதலைகளையும் கண்கானிக்க வீட்டுக்கு வீடு வாசலில் ஐ.பி.கேமராவெல்லாம் வைக்காமல் (அரசாங்க பணத்தை வீணடிக்காதீங்க ப்ளீஸ்) உறங்கும் காவல்துறைய தட்டி எழுப்பி நடைபயில அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அவர்களே அந்த பணியை கையில் எடுத்துக் கொண்டால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி அறிவிக்கவும்.

- கடைத்தெருவில் அதிநவின வசதியுடன் (குறிப்பாக வாங்கிப்போகும் மீன், இறைச்சி ஆகியவை கெடாமல் இருக்க ச்சில்லர் வசதியுடன்) கூடிய மெட்ரோ இரயில் நிறுத்தமும் மேம்பாலமும் அமைத்திட வேண்டிக் கொள்கிறோம் யோசனைக்கு இங்கிருக்கும் படத்தைக் மாதிரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


- பிலால் நகரிலிருந்து ஷிஃபா மருத்துவ மனை வரை பறக்கும் இரயில் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கவா போகிறது, ஆதலால் ஒரு யோசனை ஆங்காங்க தொங்கும் மின்சாரக் கம்பிகளை நன்றாக இழுத்துக் கட்டி அருகிலிருக்கும் வீட்டாருக்கு துணி காயப்போடும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் கண்டிஷன் மின்சாரம் தாக்குதல் நடக்கக் கூடாது !


- ஏற்கனவே அகல இரயில்பாதைக்கு போராடிக் கொண்டிருக்கும் அதிரைப் பெருநகர மக்களுக்கு ஆறுதலாக இரண்டு இரண்டாக தனியாக இருக்கும் தடங்களில் போலி விமானம் ஸாரி போயிங்க் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கே நிறுத்தினால் பெருமை பட்டுக் கொள்ளலாம்.


- செக்கடிக் குளத்தின் மேல் தொங்கு பாலம் கட்டித் தாருங்கள் என்று கேட்டால், நீங்களே வசூல் செய்து ஆகாயத்தில் இடத்தை வங்கித்தாருங்கள் அங்கே கட்டுவோம் என்று சொல்லும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இந்த உள்ளாட்சி மன்ற வேட்பாளர்களே, அதற்கான மாதிரியை இங்கே படத்தில் மாதிரி காட்டியிருக்கிறோம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிட்டு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துக் கொள்ளுங்கள்.


 - கடற்கரைத் தெரு பள்ளி அருகே நவீன வசதியுடன் கூடிய பஸ்வசதி நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அங்கே அதிரை மாநகரில் அனைத்து தெருக்களின் வழியாக செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், எதிர் காலத்தில் 4 நிமிடத்திற்கு ஒரு இரயில் / மெட்ரோ நமதூர் இரயில் நிலையத்திற்கு வந்து செல்ல இருப்பதால (!!!???) அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தர வேண்டுகிறோம் !


- மேலத் தெருவிலிருந்து வண்டிப்பேட்டை வரை சுரங்க வழி இரயில் அமைத்திட இங்கே ஒரு மாதிரிப்படம் இணைத்திருக்கிறோம் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தெருக்களையும் ஒன்றினைக்கும் படியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேட்பாளர்களை கெஞ்சி கதறி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்னும் இருக்கிறது கனவுகளாக ! இதேபோல் உங்களிடமும் இருக்கும்தானே ! பகிர்ந்திடுங்களேன் பின்னூட்டத்தில் !

அபுஇபுறாஹிம்

குறை பாடுகள் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2015 | , ,


எங்களூர் இரயிலடியிலும்
பறவைகளின் எச்சங்கள்
மச்சமெனக் கொண்டு
ஒரு சிமெண்ட் இருக்கை
அநாதையாக கிடக்கிறது
அமர்வோர் யாருமின்றி...

கல்யாண வீட்டு பந்திகளில்
உப்போ உவர்ப்போ
எப்படி யாயினும்
கூடியோ குறைந்தோவிடுகிறது

விருந்தினர் வருகை
எதிர் பாராமலிருந்தால்
கைகள் பிசையும்
கிராமத்து ஏழை
பின்வாசல் வழியே
அரிசியோ காய்கறியோ
கடன் வாங்கும் நிலை ..

வேண்டப்பட்டவரின்
கல்யாணம் நிராகரிக்கப்பட்டது
என்னால் - என்
மனைவியின் நகைகள்
வங்கியில் இருப்பதால் ...

பெரியவீட்டுக் கல்யாணத்தில்
பாட்டுக் கச்சேரி - அங்கே
கேமரா
தங்களை நோக்கி வரும்போது
பார்த்தும் பார்க்காததுமாய்
பள்ளிக் கால தோழியைப்
பாவம் காட்டி
நடிக்கும் பார்வையாளர்கள்..

விபரமறிந்த நாளிலிருந்தே
செய்து கொண்டிருக்கும் சாதனை
வாய்க்கு வெளியே
நுரைபடாமல்
பல் தேய்த்ததே இல்லை..

மனதைக் கட்டுப்படுத்தும்
வைராக்கியத்தில் தொழுதாலும்..
ஏதோ ஒரு
சிந்தனையில் தடுமாறாமல்
தடம் மாறாமல்
இதுவரை தொழுததில்லை!

ஆண் அழகனோ
அசத்தும் தோரனையோ
இல்லைதான் - ஆனாலும்
கண்ணாடி முன்னால்
தங்களை அலங்கரித்து
உவப்படையும் எல்லோரும்
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சுவென
நினைவுப் படுத்துகிறார்கள் ..

பந்தலின் வெளியே
வந்திருக்கும் நபர்களில்
சரிபாதி அதிகமாகவே
காணப்படுகிற செருப்புகளின்
எண்ணிக்கை...

நல்ல கவிதைதான்! - எனினும்
பொறுமையின்மை யிலோ
பொருள் மயக்கத்திலோ
கருத்திடாமல் நகர்ந்திடும்
மனதோடும் குறைதான் !

ஷேக் முஹைதீன்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 002 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘’நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?' என்று கேட்டார். 'நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’  (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 90)


அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘’'நரகம், மனோ இச்சைகளால் திரையிடப்பட்டுள்ளது. சொர்க்கம், கஷ்டங்களால் திரையிடப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’ (புகாரி, முஸ்லிம்).  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 101)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்: '(உணவை உண்டு முடித்ததும்) விரல்களையும், தட்டையும் நன்கு சுத்தம் செய்து (சாப்பிட) கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் அந்த உணவில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அறிய மாட்டீர்கள்' என்று கூறினார்கள். (முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறவிப்பில் கீழ்கண்டவாறு ஹதீஸ்கள் உள்ளது:

1) 'உங்களில் ஒருவரின் ஒரு பருக்கை உணவு கீழே விழுந்து விட்டால், அதை அவன் எடுக்கட்டும்! அதில் உள்ள அசுத்தத்தை நீக்கட்டும். பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதை விட்டு விட வேண்டாம். தன் விரலை சூப்பி சுத்தம் செய்யும் முன் தன் கையை துண்டில் துடைக்க வேண்டாம். நிச்சயமாக தன் உணவில் எதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2) நிச்சயமாக ஷைத்தான், உங்கள் ஒவ்வொரு செயலின் போதும் ஆஜராகிறான். இதுபோல் ஒருவர் சாப்பிடும் போதும் ஆஜராகிறான். உங்கள் ஒருவரிடமிருந்து ஒரு பருக்கை விழுந்துவிட்டால், அதில் உள்ள அசுத்தத்தை(தூசியை) நீக்கி விட்டு, சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (ரியாளுஸ்ஸாலிஹீன்: 164)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!' இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. 'எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ' (புகாரி).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 158)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(நூல்: புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன். S.



உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு