Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு மீண்டும் சாத்தியமா? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2015 | , , ,


அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டுமென்று பலதரப்பிலிருந்தும்  குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சில அரசியல் கட்சிகள் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ தமிழகத்தின் பல பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மதுக்கடைகள் ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் ஆதரவைத் திரட்ட முற்பட்டார். பல இஸ்லாமிய இயக்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்திக் காட்டின. பல மகளிர் அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தின. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திரு. சக்தி பெருமாள் என்ற ஒரு பெரியவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சாகும் நிலையில் கைது செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். இவைகளைத் தொடர்ந்தும் கண்ணால் காணும் காட்சிகளின் அவலங்களையும் முன்னிட்டு முழுமதுவிலக்கை தமிழ் நாட்டில் மீண்டும் அமுல் படுத்த வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.  இந்த பிரச்னை பற்றி நாமும் சற்று விவாதிக்கலாம்.



ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நீதிக் கட்சியும் பிறகு காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. அப்போது கூட திருட்டுத்தனமாக சிலர் மறைவான இடங்களில் சாராயம் போன்றவற்றைக் காய்ச்சி அச்சத்துடன் குடித்து வந்தார்கள். அந்தப் பழக்கம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு பேரூராட்சி என்று எடுத்துக் கொண்டால் அங்கு அதிகபட்சமாக  ஐந்து பேர்கள் மட்டுமே அப்படி இருப்பார்கள். சில நேரங்களில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வார்கள். எனக்கு சிறுவயதாக இருந்த போது இப்படி சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்து  சேது ரோடு வழியே கையைக் கட்டி காவல்துறை இழுத்துச் சென்றதை ஊரே கூடி  வேடிக்கை பார்த்தது நினைவில் நிற்கிறது.  

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. அந்நேரம் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்தபோது “ அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வது  மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது “ என்று கூறினார். இந்த நேரத்தில் அண்ணா மறைந்தார்.

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அண்ணாவின் இதயத்தைக்  கடனாகக் கேட்டு இரங்கற்பா எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவை புகழ்ந்து பாடியபோது  

“ஆந்திரத்து பிரம்மானந்த ரெட்டிகாரும் 
ஆஹா நீதானே அசல் காந்தியவாதி என்று 
ஆராதனை செய்திட்டார் 
மதுவிலக்கை தீவிரமாய் ஆக்குகின்றீர்! 
பல மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே என்று 
கிரி என்றால் மலையன்றோ! 
அந்த மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா”

என்று  குறிப்பிட்டு  கவி பாடிவிட்டு அண்ணாவுக்குப் பிறகு தானே  முதலமைச்சராக வந்த பிறகு ஒரு சுப முகூர்த்தநாளில் மதுவிலக்கை தமிழ் நாட்டில் ரத்து செய்து மதுக்கடைகளை திறந்துவிட்டார். மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று தி மு க ஆட்சிக்கு வருவதற்கு துணையாக நின்ற முஸ்லிம் லீக் மற்றும் இராஜாஜி ஆகியோர் விடுத்த கோரிக்கைகள் கலைஞரின் காதுகளில் விழவில்லை.

கலைஞர் கருணாநிதியின் மீது ஏற்பட்ட கருத்துமாறுபாடுகளால் தி மு க வை விட்டு விலகி தனிக் கட்சி கண்டு வென்று ஆட்சியைப் பிடித்த எம் ஜி ஆர் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்படுமென்று நன் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ “ தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? இல்லை!  நீதான் ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம்! “என்ற திரைப் பாட்டுக்கு வாயசைத்துவிட்டதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி மதுக்கடைகளை தனது ஆட்சிக் காலம் முழுதும் தொடர்ந்தார். அத்துடன் வெறும் சாராயக் கடைகளாக இருந்தவை ஒயின் ஷாப் என்று அழைக்கப்படும்  சீமைச்சாராயம் விற்கும் கடைகளாகவும் அப்பனே! ராமச்சந்திரா ! என்று கோஷம் போட்டுத் துவக்கப்பட்டன.

அதன்பின் கருணாநிதி முதல்வராகி பின் ஜெயலலிதா அம்மையார்  முதல்வரானாலும் எத்தனையோ மாற்றங்கள் கண்டாலும் மதுவிலக்கு மட்டும் மீண்டும் அமுல் படுத்தப் படவில்லை. மாறாக, ஜெயலலிதா ஆட்சியில்  மது விற்பனைக்காக   டாஸ்மார்க் என்ற அரசின் நிறுவனத்தை ஏற்படுத்தி , படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அரசே சொந்தமாக மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அந்த மதுக்கடைகளை ஒட்டி அரசே “ பார்” என்று அழைக்கப்படும் மதுபானம் அருந்தும் வசதிகளைக் கொண்ட விடுதிகளையும் நடத்த ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. 

1983 ஆம் ஆண்டில் வெறும்  139 கோடி ரூபாய்களாக இருந்த மதுக்கடைகளின் ஏலத்தின் மூலம் இருந்த அரசின் வருமானம்  2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த அரசு மதுக்கடைகள் மூலம்    2,800  கோடி ரூபாய்களாக வானுக்குயர்ந்தது.  இந்த வருமானம்   2013ஆம் ஆண்டில்  25,000 கோடி ரூபாய்களாக இன்னும் உயர உயர்ந்து இருக்கிறது.  

இப்படிப்  பல ஆயிரம் கோடிகளாக மதுவிற்பனை மூலம் தமிழக அரசு கொட்டிக் குவித்திருக்கும் வருமானத்துக்குக் காரணமாக இருப்பது செல்வந்தர்கள் தரும் வரிகளல்ல. இந்த வருமானத்தின் பின்னணியில் இருப்பது ஒரு சமூக அவமானம். அரசு தனது வருமானத்தைப் பெருக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் இப்படி சாராயக்கடைகள் மூலம் பெறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதற்கு ஈடானது. 

கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலான ஏழைத் தமிழர்கள் , கூலித் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் , பள்ளி கல்லூரி மாணவர்கள், சொல்வதற்கு வெட்கக்கேடாக இருந்தாலும் உண்மையில் பல பெண்கள் ஆகியோர் மதுவின் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்வையும் தாங்கள் குடும்பத்தினரின்  வாழ்வையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவுரவத்தையும் துயருக்குள்ளாக்குகின்றனர்.  

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்  போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணமாக அமைந்து இருக்கிறது.  

அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் குடிப்பழக்கத்தின் காரணமாகவே நிகழ்வுறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

குடும்ப வன்முறையை கோலோச்சி  நிற்கச்செய்வதும் குடிப்பழக்கமே. குடிகாரக் கணவன்மார்களால் கொடுமைப் படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெற்ற குழந்தைகளை பேணாமல் அவர்களுக்கு கல்வி யறிவு தருவதில் சிந்தை செலுத்தாமல் இள வயதிலேயே அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்களின் கூலியைக் கூட தனது குடிப்பழக்கத்துக்கு பறித்துக் கொள்ளும் பாவிகளாக பெற்றோர் மாறும் சமூக அவலம் சந்தி சிரிக்கிறது. 

குடிக்கும் நிகழ்ச்சி இல்லாத சமுதாய நிகழ்ச்சிகளை சந்திக்க முடியவில்லை. பிறந்தநாள், கருமாதி செய்யும் நாள் முதல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட குடிப்பதற்கும் குடிப்பவர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் செய்து வைப்பது சமூகப் பழக்கத்தில் தொத்து வியாதி போல்  குடியேறிய குஷ்டரோகமாகிவிட்டது. 

மனிதனுடைய ஒரு சில மணித்துளிகளின் சிறிய மகிழ்ச்சிக்கான விலை பண்பாட்டுச் சீரழிவு என்று ஆகிவிட்டது. 

படிக்கும் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு வரும்போதே குடித்துவிட்டு வரும் பழக்கத்துக்கும், தொழிலாளர்  கொஞ்சம் ஊத்தாமல் வந்தால் வேலை  செய்ய முடியவில்லை என்கிற நிலைமைக்கும் ஆளாகிவிட்டார்கள்.   

அரசியல் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வாடகைக் கொலையாளிகளுக்கு வழங்கப்படும் இன்றியமையாதவைகளில் மது பாட்டில்கள் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன. மது குடித்த மயக்கத்தில் அடையாளம் காட்டப் படுபவர்களை வெட்டவும் குத்தவும் பின் விளைவுகளை சிந்திக்காமல் தலைப்பட்டுவிடுகிறார்கள். மது உள்ளே போனதும் மதி வெளியே வந்துவிடுகிறது.  மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகனையும், மதுப்  பழக்கத்துக்காக பணம் இல்லாமல் பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனையும், மது போதையில் மருமகளை பெண்டாள நினைத்த மாமனாரையும், மதுக்கடைகளில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்களையும் சமீப கால  சரித்திரம் சந்தித்துவருகிறது.  

மாலை நேரங்களில் குடும்பங்களுடன் பொதுப் பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை. அருகில் வந்து அமர்பவர்கள் அடித்துவிட்டு வருவதால் ஒரு ‘சக்தி பிறக்குது நம் மூச்சினிலே. ‘

கோயில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள்  பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை அமைந்திருக்கும் இடங்களுக்கு நெருக்கமான இடங்களில் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்பது விதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்  இந்த விதிகள் நடைமுறையில் விடைகொடுத்து அனுப்பப்பட்டு விட்டன.  

நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல்  இப்படி இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்?   மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் தலையாய  காரணங்கள் (1) கள்ளச்சாராயமும் கள்ளச்சாராய சாவுகளும் அதிகரிக்கும் என்பதும் (2) குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் அயல் மாநிலங்களுக்குச்  சென்றுவிடுகிறது என்பதுமேயாகும். 

கள்ளச்சாரயத்தைக் கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க அதிகாரம் பெற்ற அரசு இயந்திரம் தனக்குத்தானே நாங்கள் ஒரு வேஸ்ட் என்று ஒப்புக்கொள்ளத்தான் இந்த விவாதம் உதவும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு இப்படிச்  சொல்வது கையாலாகத்  தனம்  என்றுதான் வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழித்துவிட  முடியாது என்று அரசே நினைத்து  சாராயக் கடைகளை திறந்து வைத்திருப்பது போல் கொலை, கொள்ளை குற்றங்களை முழுதுமாக ஒழிக்க முடியவில்லை என்று இந்திய தண்டனை சட்டத்தை இரத்து செய்துவிடலாமா? 

தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம்  அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. குடிக்கும் எல்லோரும் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸை எடுத்துக் கொண்டு அடிமடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்கு  தினசரி போய் குடிப்பதில்லை.  அந்தந்த மாநிலங்களின் எல்லை ஓரங்களில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே போய் வர முடியும். மொத்த மக்கள்தொகையில்,  இப்படிப் போவோரின் அளவு, கடலில் கரைக்கப்பட்ட  பெருங்காய அளவே. மேலும் வருமானம் என்பதைப் பார்க்கும் அரசு தனது மாநில மக்களின் மானம் போவதை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது?  வருமானத்துக்காக மானத்தை இழக்க அரசுகள் தயாராக இருக்குமானால் மானம் தொடர்பான வேறு தொழில்களையும் அரசே விடுதிகள் தொடங்கி வியாபாரமாகச் செய்யலாமே.  அத்துடன் கஞ்சா முதலிய போதைப் பொருள்களையும் அனுமதித்து கல்லூரி வாசல்களில் அரசின் சார்பில் கடை திறந்து நடத்தலாமே!  இவையெல்லாம் கண்துடைப்புக் காரணங்கள். 

உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இரு அரசியல் கட்சிகளே முதன்மைக் கட்சிகள். இந்த இரு முதன்மைக் கட்சிகளில் மாறி மாறி ஒன்று ஆளும் மற்றது எதிர்க் கட்சியாக மக்கள் மன்றத்தில் இருக்கும்.  இந்த இரு கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சாதியைச் சேர்ந்த சக்தி படைத்த மோகனர்களும் பாலர்களும் ரட்சகர்களும் உடனுறைத் தோழிகளும் தோழர்களும் இளவரசிகளும் மொடாக்குடியாக்கும் மிடாசுகளும்  மிகப் பெரிய அளவில் மதுபான ஆலைகளை ஏழைத்  தமிழ் மக்களை நம்பியே நடத்தி வருகிறார்கள். இவர்களில் விஜயம் செய்யும் யாரையாவது அழைத்து ஐயா! சொல்லய்யா! என்று கேட்டால் இல்லைய்யா! என்று சொல்லிவிடுவார்கள்.   இந்த அரசு நடத்தும் மதுபான விடுதிகளின் ‘சாக்கனாங்கடை’ என்று அழைக்கப்படுகிற உள்ளுறை உணவுக்கூடங்களை நடத்துபவர்களும் இந்தக் குறிப்பிட்ட  சமூகத்தினர்  அல்லது இவர்களின் பங்காளிகளே.  தவிரவும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் வார்டு கவுன்சிலர் வரையும்  மாவட்டச் செயலாளர்கள், வட்டங்கள்  ஒன்றியங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களே  டெண்டர் என்ற பெயரில் கூத்தடித்து கொள்ளையடிக்கிறார்கள்.  இந்த உள்ளுறை உணவு விடுதிகளுக்காகவே ஆட்சி மாறும்    போதெல்லாம் கட்சி மாறுபவர்களும்  இருக்கிறார்கள். மதுக்கடைகளை அரசு மூட முடியாமல்  இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம் . யாராலும் தொட முடியாத சக்திகள் படைத்த சாம்ராஜ்ஜியம் இந்த சாராய சாம்ராஜ்ஜியம். இது நமக்கு சொல்ல முடிந்த கதை நெருக்கத்தில் இருக்கும்  அரசுக்கோ சொல்ல முடியாத கதை.   

மதுபான ஆலைகளாலும் மதுபானக் கடைகளாலும்  அரசுக்கு கணக்கில்  வருவது ஒரு வகை வருமானமாகக் காட்டப்பட்டாலும் அரசுக்  கணக்குக்கு வராமல் அரசாளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நிதிகளுக்காக ஆலை அதிபர்களால்   வழங்கப் படும் பெரும் தொகையான  கட்சி நிதிகள் கட்சிகள் தேர்தல்களில் அதிகாரம் பெற்று மீண்டும் ஆட்சிக்கு  வர   வாக்காளர்களுக்கு வழங்கவே பயன்படும் என்பதும் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் உடைக்கவேண்டிய  ஊரறிந்த சிதம்பர ரகசியம். 

அரசின் தரப்பில் வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதம் அரசு ஏழைகளுக்கு வழங்கும் இலவசம் அல்லது விலை இல்லாப் பொருள்கள் மற்றும் இலவச சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மதுக் கடைகளால் வரும்  வருமானம் பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை என்று கூறப்படுகிறது.  “ கண்ணிரண்டும்  விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ ? ” என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது.  குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால் ,  ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை ஒரு இலட்சத்து இருபத்து ஆறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு  பதினாறு ஆயிரம்  ரூபாய் மட்டுமே. குரங்கு ஆப்பம் பங்குவைத்த கதை போலத்தான் இருக்கிறது இந்தக் கதை.  ஏர் ஓட்டுபவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் என்று கூப்பிடுமாம். அப்டித்தான் இந்த அரசுகள் இலவசம் என்று சின்ன மீனைப் போட்டு ஏழைகளின் உழைப்பின் வருமானம் என்கிற  பெரிய மீனை  ஒரேயடியாக தட்டிப் பறிக்கின்றன.  

குடிப்பவர்கள் தரப்பில் வைக்கப்படும் விவாதம் குடிப்பது அவரவர் தனி மனித உரிமை . இதில் அரசு தலையிடக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நல்லதை கற்பித்து தீயவற்றில் இருந்து விலகி இருக்கும்படி போதிப்பதும் அரசின் கடமை. குடிப்பது தனிமனித சுதந்திரம் என்றால் விபச்சாரம் செய்வது மட்டும் தனி மனித சுதந்திரம் இல்லை என்று ஆகிவிடுமா? காசுவைத்து சூதாடும் உரிமையையும் இந்தப் பட்டியலில் செர்த்துவிடலாமா? சுதந்திரம் கருதி அனுமதித்துவிடலாமா? பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று அரசு போட்ட சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா? பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஏன் பூங்காக்களில் எழுதிவைக்கவேண்டும்? இந்த இடத்தில் சிறு நீர் கழிப்பவர்கள் தண்டனைகுள்ளாவார்கள் என்று ஏன் அறிவிப்புகள் தொங்குகின்றன?  மக்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துவது அரசின் கடமை. பொது அமைதிக்காக தனிமனித சுதந்திரத்தை கிள்ளிப் பார்ப்பது  தவறில்லை.  

அடுத்து அரசே நடத்தும் கடைகளாக இருப்பதால் நல்ல சரக்கு கலப்படமில்லாமல் கிடைக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மது குடிப்பது உடலுக்கும் உடமைக்கும் கேடு விளைப்பது என்பது மருத்துவம் நிருபித்த உண்மைகள்.  இதில் அரசு தரும் மது மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணுவது அறியாமையின் அரிச்சுவடி.   அரசே தன் பொறுப்பில் நடத்துவதால் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரசாங்கமே குடிக்கச் சொல்லி கடை நடத்துகிறது  என்கிற ஒரு மன தைரியம் வருகிறது. இதனால் குடிப்பது சமுதாயத்தின் முன்னால்  நல்ல மரியாதையைத் தராது என்று தெரிந்தும் புதிய புதிய குடிகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு தேசிய அளவிலான புள்ளி விபரம்  நூற்றுக்கு தொண்ணூறு ஓட்டுனர்கள் குடிப்பழக்கம் உடையவர்கள்  என்று கூறுகிறது. ஆனால் மதுபானக்கடைகள் யாவும்  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே அமைந்திருப்பது ஒரு ஆபத்தை கைகாட்டி அழைக்கும் செயலாகும். அத்துடன் ஒரு ஊரின் எல்லையில் நான்கு திசைகளிலும் மதுபானக் கடைகள் திறக்கப் பட்டு ஜெகஜோதியாக ஒளிவீசிக் கொண்டு இருக்கின்றன. எல்லா நேரமும் அங்கு கூட்டம் அலை மோதிக்கொண்டு இருக்கிறது. 

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த அல்லது துவக்கி வைத்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டார்கள். அண்ணா பெயரில் ஆசியாவிலேயே பெரிய நூலகம் திறக்கப் பட்டதை மூடிப் போட்டு அதை திருமண மண்டபமாக முயற்சிக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை அங்கு செயல் பட விடாமல் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றி விட்டார்கள். கலைஞர் பெயரில் காப்பீட்டுத்திட்டம் உட்பட பல திட்டங்களை அனாதையாக விட்டுவிட்டார்கள்.  அதே முறையைப் பின்பற்றி  கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின்  காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட மதுக்கடைகளையும் மூடினால் இந்நாள் முதல்வரை மக்கள் அம்மா என்று அழைப்பதற்கு ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும். பெண்கள் எல்லாம் இந்த அம்மையார்  இருக்கும் திசை நோக்கி திருப்புகழ் பாடுவார்கள். 

அரசு நினைத்தால் இந்த தற்கொலைப் பாதையை நோக்கி தமிழக மக்கள் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியும். அரசு நினைத்துத்தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; இராஜ மானியம் ஒழிக்கப் பட்டது; வங்கிகள் தேசியமயமாகப்பட்டன. இன்றைய முதல்வர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப் பட்டது. இன்றைய முதல்வர்தான் கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் இயற்றினார்; கட்டைப் பஞ்சாயத்துக்கள் காவல் நிலையத்தில் கூட நடைபெறக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.  இதனால்தான் இவரை தைரிய லட்சுமி என்றும்  புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தமிழக சரித்திரத்தில் இலவசக் கல்வி தந்ததற்காக  காமராசரின் பெயர் நிலைத்து நிற்கிறது. தமிழக சரித்திரத்தில் சத்துணவு தந்தற்காக எம் ஜி ஆர்  புகழ் நிலைத்து நிற்கிறது. அதே போல் மதுவிலக்கை மீண்டும் துணிச்சலுடன் அறிமுகப் படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் என்றென்றும் நிலைக்கும் பெருமையும் புகழும் பெறவேண்டும்.  பெண்களின் பிரதிநிதியாக இவர் இதைச் செய்ய வேண்டும்.  எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தில் தமிழகம் முழுமைக்கும் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா? 

இபுராஹீம் அன்சாரி

12 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அற்புதமான கட்டுரை. விலாவாரியாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. மதுவிலக்குக் கொள்கையின் ஆணிவேரிலிருந்து ஆராய்ந்து எழுதியிருப்பது கட்டுரையின் தாக்கத்தைக் கூட்டுகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

தவிர,

நாங்கள் இலவசமாக எங்கே கொடுக்கிறோம், விலையில்லா பொருட்களையல்லவா கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

தலை சுற்றுகிறது.

Yasir said...

அருமையாக அலசி எழுதப்பட்ட கட்டுரை மாமா...மது விலக்கை கொண்டு வர நடத்தபடும் போரட்டத்தை நாமும் முழுமையாக ஆதரிக்க வேண்டும் ....எல்லா பயல்வோலும் மத வேறுபட்டின்றி இப்ப ஊரில் குடிக்க ஆரம்பிச்சாட்டனுவோ

Ebrahim Ansari said...

இன்று மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட தொடங்கி விட்டார்கள்
சசி பெருமாள் அவர்களின் உடல் பிணக்கிடங்கில்
அவரது குடும்பமே போராட்டக் களத்தில்
மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஆபத்தின் அறிகுறி

Ebrahim Ansari said...

இன்று மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட தொடங்கி விட்டார்கள்
சசி பெருமாள் அவர்களின் உடல் பிணக்கிடங்கில்
அவரது குடும்பமே போராட்டக் களத்தில்
மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஆபத்தின் அறிகுறி

Ebrahim Ansari said...

சசி பெருமாள் அவர்களின் உயிர் தியாகம் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறது

தமிழகமெங்கும் போராட்டங்கள்

வீதிகளில் உடைக்கப்படும் மதுபாட்டிலகள்
மாணவர்களும் மாணவிகளும் திரள் திரளாக

Ebrahim Ansari said...

சசி பெருமாள் அவர்களின் உயிர் தியாகம் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறது

தமிழகமெங்கும் போராட்டங்கள்

வீதிகளில் உடைக்கப்படும் மதுபாட்டிலகள்
மாணவர்களும் மாணவிகளும் திரள் திரளாக

Ebrahim Ansari said...

இது ஒரு மீள் பதிவு

இந்தப் பதிவை காலம் கருதி பதிவிட்ட நெறியாளருக்கு நன்றி

Ebrahim Ansari said...

இது ஒரு மீள் பதிவு

இந்தப் பதிவை காலம் கருதி பதிவிட்ட நெறியாளருக்கு நன்றி

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு

வ அலைக்குமுஸ்ஸலாம்

இணைய வசதிகள் பிரச்னை

ஒருமுறை கருத்திட்டால் இருமுறைகள் பதிவாகின்றன

இன்்று காலை குடிப்பதற்கு பூஸ்ட் கிடைத்து தம்பி ஜாகிர் அலைபேசியில் பேசினார்

Ebrahim Ansari said...

காந்தியவாதி சசிபெருமாள் உயிரோடு இருந்தவரை போராடினார

இன்று அவரது சடலம் அடக்கம் செய்யப்படாமல் போராடிக்கொண்டிருக்கிறது

Ebrahim Ansari said...

இந்தப் போராட்டத்தை மாணவர்கள் தங்களின் கரங்களில் எடுக்கத் தொடங்கிவிட்டனர்

வெள்ளையம்மா காளைக்கு ஆபத்து

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு