Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அந்தரத்தில் சுதந்திரம் ! அரசியல் கட்சிகளின் தந்திரம் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2015 | , ,


கடந்த   ஆகஸ்டு பதினைந்தாம் தேதி வழக்கம்போல் மற்றொரு  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு இருக்கிறது. அந்நியனிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த அந்த நாளை நினவு படுத்தி எழுச்சிமிகு உரைகள், சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள், வாழ்த்துக்களின் பரிமாற்றங்கள், இராணுவம் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்புக்கள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் , பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் இத்யாதி இத்யாதி சடங்குகள் சம்பிரதாயங்கள் ஒருநாள் மகிழ்ச்சி ;  ஊரெங்கும் எழுச்சி. . 

இந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மீறி எதார்த்தங்களை நாம் சிந்தித்துப் பார்ப்போமானால் மூளையை கசக்கி கசக்கி நம் சிந்தனையை  செலவிட்டபிறகு நம்மிடம் மிஞ்சுவது இழப்பும் ஏமாற்றமுமே. 

நாம் சுதந்திரம் பெற்று அறுபத்தி எட்டு  ஆண்டுகள் கடந்துவிட்டன என்று நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது. நாம் பெற்ற சுதந்திர தினத்தை ஒரு பச்சிளம் குழந்தையின் பிறந்த நாளைக்கு ஒப்பிட்டால் இந்த அறுபத்தி எட்டு வயது நிறைவான நிலையில் அந்தக் குழந்தை தனது வாழ்நாளில் பல சாதனைகளை செய்து இருக்கும். ஆடையின்றிப் பிறந்த அந்தக் குழந்தை இன்று ஒரு கோடீஸ்வரானக் கூட உருவெடுத்து சாதனைகளைப் புரிந்து இருக்கலாம்.  ஆனால் நாம் பெற்ற சுதந்திரக் குழந்தை,  அப்படி எதையாவது குறிப்பிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளும்படி சாதித்து இருக்கிறதா? பெருமைகள் என்று நாம் எண்ணிக் கொண்டிருப்பவற்றை சிறுமைகள் சிறைப்படுத்திவிட்டனவா? 

எடுத்த எடுப்பிலேயே இந்தியா பெற்ற சுதந்திரம் எதையுமே சாதித்துவிடவில்லை என்று பொசுக்கென்று போட்டு உடைத்துவிட இயலாதுதான். தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தையும் பற்றியும் மட்டும் யோசிக்காமல் தனது தலைமுறையைப் பற்றி கவலைப்பட்டு காரியமாற்றிய தலைவர்கள் திட்டமிடும் பொறுப்பிலும் , தீர்மானம் செய்யும் பொறுப்பிலும் ஆளும் பொறுப்பிலும்  இருந்தவரை இந்த நாட்டுக்கு அடிப்படையாகத் தேவையான கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டுக் காரியமாற்றப்பட்டதென்னவோ உண்மைதான். 

அது ஒரு அழகிய நிலாக்காலம் !  கட்டாயக்கல்வி , அரசு மருத்துவமனைகள், அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், மின் திட்டங்கள், மதிய உணவு, மதுவிலக்கு , அறிவியல் வளர்ச்சி போன்ற  பல மக்கள் நலத் திட்டங்கள் தொகுக்கப்பட்டும் வகுக்கபட்டும் செயல்படுத்தப்பட்டும் சுதந்திரத்தின் தேன் சுவை,  மக்களின் நாவில் தடவப்பட்டதும் உண்மைதான்.  இதெற்கெல்லாம் காரணம் தலைவர்களின் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு , கண்ணியம் ஆகியவை. 

அனைவருக்கும் சமஉரிமை, வாக்குரிமை நாடெங்கும் நடைபோடும்   உரிமை, பெண்களுக்கான தனி உரிமை ஆகியவை  சட்டப்படி வழங்கப்பட்டதும், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்காக இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் ஆகியவையும்   சுதந்திர இந்தியா கொண்டுவந்த  சீதனங்கள் என்பதும்   உண்மைதான்.  

ஆனால் மக்கள் நலனைவிட ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களின் அதிகாரமமதைக்கே முதலிடம் என்கிற நிலை ஏற்பட்ட காலத்திலிருந்து – குறிப்பாக சொல்லப்போனால் – அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்திலிருந்து சுதந்திரம் என்பதும் ஜனநாயகம் என்பதும் அந்தப் பெயர்களைச் சொல்லி அதிகாரக் கட்டிலில் அமர்ந்தவர்களின் கைப்பாவைகளாக செயல்படத் தொடங்கிவிட்டன என்பதை நடுநிலையாளர்களால் மறுக்க இயலாது. 

பெருமைப்படத்தக்க சில சீதனங்களைக் கொண்டுவந்த சுதந்திரம் இத்தனை வருடங்களாகியும் பல சவால்களையும் பிரச்னைகளையும் இந்த இந்தியக் குடும்பத்தில் ஏற்படுத்தி வைத்திருப்பதையும் நாம் வேதனையுடன் குறிப்பிடத்தானே வேண்டி இருக்கிறது. 

சுதந்திரம் பெற்ற தினத்தில் இந்த நாட்டின் மக்கள் அடைந்த மகிழ்ச்சி ,  அவர்களது அன்றைய கனவுகள் , எதிர்பார்ப்புகள்   செயலளவில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேறி இருக்கின்றனவா  நிறைவேற்றி இருக்கிறோமா என்ற ஒற்றைக் கேள்விக்கு அரசுகட்டிலில் அமர்ந்து இருப்போர் சிந்தித்து பதில் அளிக்க வேண்டும் . 

கல்வியறிவு இல்லாத ஒரு கணிசமான மக்கள்தொகை, கழிப்பிட வசதி இல்லாத வீடுகள், மின்சாரம் இல்லாத கிராமங்கள், மருத்துவ வசதிகள் எட்டிப்பார்க்காத இருப்பிடங்கள், இளம்பிஞ்சுகளான குழந்தைத் தொழிலாளர்கள், பொது இடங்களில் கண்களில் சோகத்தோடு கையேந்தும் பிச்சைக்காரர்கள், அனாதைகளாக தெருவில் திரியும் முதியோர்கள், கால்களில் செருப்பின்றி காததூரம் நடந்து சென்று கல்வி மற்றும் வாழ்க்கை வசதிகளைத் தேடிச் செல்லும் மலைவாசிகள்,  இரட்டைக் குவளை முறைகள் போன்ற சாதிப் பாகுபாடுகள், காதலித்த காரணத்துக்காக கருணைக் கொலைகள்  இப்படி அன்றாடம் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கும் மக்கள் இன்னும் இருக்கும் இந்த நாட்டில்  இத்தனை ஆண்டுகளாகியும்  சுதந்திரம் சாதித்தது  யாவை? 

“அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு “ என்று கூக்குரல் விடும்படி காலிக்குடங்களை சாலைகளில் வைத்து தவிக்கிற வாய்க்குத் தண்ணீர் கேட்டு   சாலைமறியல் செய்யும் மக்களின் நிலையை இத்தனை ஆண்டு சுதந்திரம் மாற்றிவிட்டதா? 

காடுகளை அழித்து,  மழைபொழிவதை தடுத்து மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளை அரசியல் காரணங்களுக்காக ஊதிப் பெருக்கவிட்டு ஒவ்வொருவரும் அரசியல் அதிகார இலாபம் அடையத்தான் சுதந்திரம் பயன்பட்டு வருகிறதா? கழிவுநீரை கால்வாய்கள் மூலம் ஜீவ நதிகளில் கலக்கவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கத்தான் இத்தனை ஆண்டு சுதந்திரம் பயன்பட்டு இருக்கிறதா?   

விற்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில் தனது உடலைவிற்றுப் பிழைப்பு நடத்தும் பாலியல் தொழிலாளர்களை நாட்டின் வணிகத்தலைநகரான பம்பாயிலும்  அரசியல் தலைநகரான டில்லியிலும் சில மாநிலங்களிலும் இன்னும் அனுமதித்துக் கொண்டு இருப்பதுதான் இத்தனை ஆண்டுகளாக நாம் பெற்ற நல்ல சுதந்திரத்தின்   அடையாளமா? மக்களின் மானத்தைக் காக்காத சுதந்திரத்தையா மக்கள் வேண்டி நின்றார்கள்? 

அரசர்களையும் ஜமீன்தார்களையும் ஒழித்துவிட்டு மன்னர்களுக்கு வழங்கப்பட்ட மான்யத்தையும் ரத்து செய்துவிட்டோம் என்று மார்தட்டி நிற்கின்ற அதே வேளையில்,  இற்றுப் போன செருப்புக்கு  பதில் வார் வாங்கிப் போட வகையற்றிருந்த  வட்டங்களும் மாவட்டங்களும் ஊரை அடித்து உலையில் போட்டு  இன்னோவா காரில் பயணிக்கும் நிலையை ஏற்படுத்தத்தான் இத்தனை வருட சுதந்திரம் பயன்பட்டதா? முதல்வர் முதல் அடித்தட்டிலிருக்கும் அமைச்சர்வரை தங்கள் பெயர்களிலும் பெரியவீடு மற்றும் சின்ன வீடுகளின் பெயர்களிலும் அவர்களது வாரிசுகளின் பெயர்களிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொள்ளத்தான் சுதந்திரம் பயன்பட்டதா? 

வங்கிகளை தேசியமயமாக்கிவிட்டோமென்று வாய்கிழிய வக்கணை  பேசிவிட்டு ஏழை விவசாயி வாங்கிய பயிர்க் கடனுக்காக அவனது வாழ்வாதாரமான நிலத்தையும் ஏரில் பூட்டும் மாட்டையும் ஜப்தி செய்துவிட்டு கோடிக்கணக்கில் ஏமாற்றிய பெரும் கம்பெனிகளுக்குக் கொட்டிக் கொடுத்த கோடிக்கணக்கான வராக்கடன்தொகைகளை வசூலிக்க திராணியற்று இருக்கத்தான்  இத்தனை ஆண்டு சுதந்திர பூமி பயன்பட்டதா? 

குப்பனும் சுப்பனும் கூலியாகப் பெறும் இருநூறு முன்னூறையும் மூலைக்கு மூலை சாராயக்கடைகளைத் திறந்து   பிடுங்கிக் கொண்டு அவர்களது குழந்தை குட்டிகளை வறுமையில் வாடவிடவும் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களின் வேலைக்கு உலைவைத்து அவர்களின் வீட்டில் எரிந்து கொண்டிருந்த உலையைத் தடுக்கவும்தான் இத்தனை ஆண்டு சுதந்திரம் வழிவிட்டதா? இவ்வளவும் போதாதென்று அவர்களிடமிருக்கும் நிலங்களையும் கையகபடுத்தும் சட்டம் போட்டுப் பிடுங்கத்தான் சுதந்திரம் வழி சொல்லிக் கொடுத்ததா? 

மாட்டுத் தீவனக் கொள்ளை,   மணற்கொள்ளை, கணிமவளக் கொள்ளை, கிரானைட் கொள்ளை, அரசுத் திட்டங்களின் பெயரில் பினாமிகள் அடிக்கும் கொள்ளை, சிமிண்ட் இறக்குமதிக் கொள்ளை, காமன்வெல்த் விளையாட்டுக் கொள்ளை, நிலக்கரிக் கொள்ளை, இராணுவத் தளவாடக் கொள்ளை என்று குறிப்பிட்ட சிலர் கொள்ளை அடிக்கத்தான் சுதந்திரம் பயன்பட்டதா?

சாதிக்கொரு நீதி; ஆளுக்கொரு நீதி என்று தாழ்த்தபப்ட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை மட்டும் தூக்கில் போடவேண்டும் மற்றவர்களுக்கு பதவி கொடுத்துப் பவிசில் வைத்து பல்லக்கில் ஏற்றிடவேண்டுமென்று இந்த சுதந்திரம் சொல்லிக் கொடுத்து இருக்கிறதா? 

கடலுக்குச் செல்லும் மீனவன் கரை திரும்புவது  நிச்சயமில்லை; அப்படியே அவன் திரும்பினாலும்  தான் பாடுபட்டுப் பிடித்த மீன்களை படகுகளுடன் பறிகொடுத்துவிட்டுத் திரும்பும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத்தான் இத்தனை ஆண்டுகளாக நாம் பெற்ற சுதந்திரம் வழி செய்ததா?

தலைநகர் டில்லி முதல் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் அடிப்படை வசதிகள் அறவே அற்று சாக்கு மறைப்புகளையும் தகரக் கூரைகளையும் அட்டைப்பெட்டி அறைகளையும் வீடுகளாக வைத்துக் கொண்டு வாழ்வோர் எத்தனை கோடி மக்கள்? கல்கத்தா போன்ற நகரங்களில் நடைபாதைகளில் படுத்து உறங்கும் பரிதாபத்துக்குரியவர்கள் எத்தனை இலட்சம்? இவையாவும் இத்தனை ஆண்டுகளாக சுதந்திரமும் ஜனநாயகமும் வழங்கி பரிசுகள்தானே! 

இன்றென்ன நிலைமை?

சுதந்திரப் போராட்டத்தில் தங்களது உடல் பொருள் ஆவிகளை ஈந்து தியாகம் செய்த பலரது தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு யாரெல்லாம் சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்டு ஆங்கில அரசின் அடிவருடிகளாக இருந்தார்களோ அவர்களது அறிவுரையின்படி அடியெடுத்துவைக்கும் அரசு ஆட்சி செய்யும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. 

யாரை தேசத்தந்தை என்று இந்த நாடு கொண்டாடுகிறதோ அந்த மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவனுக்கு தேசபக்தன் பட்டம் கட்டி அவனுக்கு சிலைவைக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் பேசும் கொடியவர்களின் கரங்களில் நாட்டை ஆளும் பொறுப்புத் தரப்பட்டு இருக்கிறது. இதனால் ஜனநாயகம் என்கிற பூக்காட்டில் திரியும் அத்தகைய குணம் கெட்ட குரங்குகளை எண்ணி,  இந்தப் பூக்காட்டுக்காக இரத்தம் சிந்திய எண்ணற்ற இந்து, முஸ்லிம், சீக்கிய , கிருத்தவ தியாகிகளின் வரலாறுகளை தெரிந்தவர்கள் அச்சம் கொள்கிறார்கள். 

அந்நியராட்சியில் கருத்து சுதந்திரத்துக்காக போராடிய நாட்டில்,  கருத்து மாறுபாடு உடையவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறலாமென்று அறிவிப்பவர்களின் அடுத்த நாற்காலியில் அமர்ந்திருப்பவர்தான் இன்று இந்த நாட்டின் பிரதமர். அதேபோல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வாய்திறக்க அனுமதி மறுப்பு , மக்கள் மன்றத்தில் பேசினால் அடுக்கடுக்கான அவதூறு வழக்குகள் என்பதெல்லாம் நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்தோமா என்றுதானே நினைக்க வைக்கிறது. 

தவறாகப் பேசுபவர்களைத் தட்டிக் கேட்டால் தனது பதவி நாற்காலி தட்டிப் பறிக்கப்படுமென்ற நிலையில் இந்த நாட்டின் அடிப்படையான                           ‘ வேற்றுமையில் ஒற்றுமை’  என்கிற பன்முகத்தன்மை கொண்ட பார்போற்றும் தத்துவம் கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள்  சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சி  இந்த நாட்டின் அடிப்படைத் தன்மையான பன்முகத்தன்மையையே தட்டிப் பறிப்பதற்கு ஒத்து ஊதுவதுதானா? 

டில்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கோடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திரதாஸ் மோடி எழுச்சியுரையாற்றுகிறார். தனது உடையமைப்பில்   பிரதமர் காட்டும் ஆர்வத்தை , அவரது பேச்சின்  உண்மையில் காட்டுவதில்லை.  பாராளுமன்றம் போன்ற பேச வேண்டிய இடத்தில் பேச ஓடி ஒழியும்  பிரதமர்,  செங்கோட்டையில்   ஆற்றிய உரையிலேயே குறிப்பிடத்தக்க அம்சம் , அவர் செய்த ஒரு சத்தியம்தான். 

தான் ஏற்றிய தேசியக் கொடியின் சாட்சியாக கடந்த பதினைந்து மாதங்களில் ஒரு ஊழல்கூட நடக்கவில்லை என்று ஓங்கி குரலெழுப்பிக் கூறினார். . கடந்த பாராளுமன்றக் கூட்டத் தொடர்  முழுதுமே முடக்கப்பட்டதற்குக் காரணங்கள் யாவை  அமைச்சர்கள் ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்த விவகாரமா?
  • சுஷ்மா சுவராஜ் என்கிற மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் பொருளாதாரக் குற்றங்களுக்காகத் தேடப்படும் லலித் மோடி என்பவருக்கு வரம்புகளை மீறி உதவினார் என்பதாலும்,
  • மத்திய பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கு ஆள் அமர்த்திய விவகாரத்தில் கோடிக்கணக்கான் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதாலும், 
  • பிஜேபி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின்    முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அவர்கள் குடும்பத்தினரும் செய்த  நிதி முறைகேடுகளாலும் தானே.
ஆனால் பிரதமரோ  தேசியக் கொடியை சாட்சியாக வைத்து ஊழலே நடக்கவில்லை என்று சாதிக்கிறார் என்றால் மக்கள் கோயபல்சை இன்னுமா நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்  என்கிற அவரது குருட்டு  மனதைரியம்தானே காரணம்?  

சுதந்திர தினப் பேருரையில், இங்கு சாதி மத வாதத்துக்கு இடமில்லை. ஒற்றுமை, சகோதரத்துவம்தான் நமது வலிமை. நமது ஒற்றுமை குலைந்தால் நாமும் உடைந்துவிடுவோம்என்று பேசி இருக்கிறார் (தி இந்து – 16/08/2015). 

இந்த வார்த்தைகள் அவரது உள்ளத்தின் வெளிப்பாடா அல்லது ‘ சிந்தையில் கள் விரும்பி சிவ சிவா என்பது போல்’  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உருவகத்தின் வெளிப்பாடா? ஏன் இதைக் கேட்கிறோமென்றால் பிரதமர் இப்படிப் பிளந்து கட்டுவதற்கு ஒரு வாரத்துக்கு  முன்புதான் பிரதமரின் இதயத்துடிப்பாக இருக்கும் பிஜேபியின் தலைவர் அமித் ஷா , மதுரையில் நடைபெற்ற ஒரு சாதி மாநாட்டில் சாதி சங்கங்களை வாழ்த்திப் பேசிவிட்டுப் போயிருந்தார். ஆகவே மதகலவரங்களையும் சாதிப் பாகுபாடுகளையும் வளர்க்கத் துடிக்கும் தனது கட்சிக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒற்றுமை,  சகோதரத்துவம் என்றெல்லாம் பிரதமர் பேசுவது ஒரு பம்மாத்து வேலை என்பது பச்சைக் குழந்தைக்குக் கூட பசுமையாகத்  தெரியும் உண்மை. இவர்  இப்படிப் பேசியது அவரது ஆர். எஸ். எஸ்  முதலாளிகளுக்கும் அதானிக் குழுமத்துக்கும் தெரியுமா என்பது தெரியவில்லை. 

இந்த வருட சுதந்திரதினப் பேருரையில் “ ஸ்டார்ட் அப் இந்தியா; ஸ்டாண்ட் அப் இந்தியா ”  என்கிற கோஷத்தையும் பிரதமர் முன் வைத்து இருக்கிறார். கடந்த வருடம் தூய்மை இந்தியா என்று முழங்கினார். ஷாரூக் கானும் சல்மான்கானும் கமலஹாசனும் ஒரே ஒருநாள் துடைப்பத்தை எடுத்துக் குப்பைகளைக் கூட்டி கூட்டாக வீடியோ எடுத்துக்கொண்டதோடு  அந்த கோஷம் குப்பைக்கே  போய்விட்டது. அரசு அலுவலகங்களில் கூட அந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதை இந்த அரசால் கண்காணிக்க இயலவில்லை. 

அடுத்து “மேக் இன் இந்தியா”  என்று ஒரு கோஷம் வந்தது . ரிசர்வ் பேங்கின் கவர்னரின் எதிர்ப்பில் அந்த கோஷம் இருந்த இடம் தெரியாமல் பதுங்கி விட்டது. ஏற்கனவே முந்தைய ஆட்சிகளில் முழங்கப்பட்ட ‘ ஜெய் ஜவான் ஜெய் கிசான்’  என்கிற கோஷத்தையும் ‘ இந்தியா ஒளிர்கிறது ’  என்கிற கோஷத்தையும் இந்த தொடர் மின்வெட்டில் மக்கள் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

நிறைவாக, வெளிப்படைத்தன்மையற்ற வேற்று கோஷங்களால் அல்லது ஒருமணிநேரம் மேடைகளில் முழங்கும் வீர வசனங்களால் மட்டும் நாட்டை வழிநடத்திச் செல்ல இயலாது என்பதை ஆளும் பொறுப்பில் உள்ள அனைவரும் உணர வேண்டும். வெறும் புகழ்ச்சிகளும் செயல்திரன்ற கோஷங்களும்  நாட்டு மக்களுக்கு சுபிட்சத்தை  தந்துவிடுமென்று நம்பினால் ஏமாந்து போவார்கள். 

பொறுமை இழந்த மக்கள் எழுச்சி கொண்டால் அரியணைகளும் அரசுக்கட்டில்களும் அதிகாரங்களும் ஆணவ நடைமுறைகளும் குப்பைமேட்டுக்குப் போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகள் அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட  மக்கள் தங்களுக்காக அமைத்துக் கொண்ட ஆட்சி,  வெறும் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டே காலத்தைக் கழித்துவிடலாமென்றால் அது காலத்துக்கும் நடக்காது. இருப்பவன் தராதவனாகிவிட்டால் இல்லாதவன் விடமாட்டான் என்கிற தத்துவத்தை உணரவேண்டும்.  

“நள்ளிரவில் பெற்றோம்.  அதனால்தானோ இன்னும் விடியவே  இல்லை “ என்று சுதந்திரம் பற்றி பாடப்பட்ட கவிதையின் கருத்துக்கு  இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் இருக்கபோகிறது என்பதுதான் இன்றைய கேள்விக்குறி. மக்கள் ஆத்திரம் கொள்ளும்வரைதான் இது சுதந்திரம் அதுவரை இது  அந்தரத்தில் தொங்கும் சுதந்திரம்தான். 

இபுராஹிம் அன்சாரி

10 Responses So Far:

ismail***** said...

இன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .
இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள் ,சமூகஉறவுகள் ,சர்வதேசஉறவுகள், கல்வி , தொழில் ,நட்பு ,இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .
ஆனால் இந்த முதலாளித்துவம் காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை,போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .
தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது தான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்!! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரை ஏமாற்றப்படுவோம் !! -

Ebrahim Ansari said...

பெரிய அளவு மக்கள் தொகை கொணடுள்ள நாடுகளை முதலாளித்துவம் பேணும் நாடுகள் தங்களின் சந்தைகளாக மாற்றி பொருளாாதார சுதந்திரத்தை பறிக்கவே ஆட்சியாளர்களை கைப்பாவைகளாக பயன்படுத்துகிறார்கள்
கருத்திடலுக்கு நன்றி

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

எத்தனைக் கேள்விகள்!!!
விடை அறிய முயற்சிக்காத அரசாங்கங்களின் கைகளில் சிக்கி சுதந்திரம் சின்னாபன்னமாகிவிட்டது.

சுறுசுறுவென இருக்கிறது கட்டுரை. ஓர் இந்தியனாக எனக்கு உறைக்கிறது.

அல்லாஹ் ஆத்தி ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்.

ஊருக்கு வந்து பேரனைப் பார்த்ததில் இந்த தாத்தாவை மறந்துவிடாதீர்கள்,

அன்பான கருத்துக்கு நன்றி.

Ebrahim Ansari said...

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69th சுதந்திர தினப் பரிசு.

விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் செய்த கோயில் தேர் தீ வைத்து எரிக்கபட்டது . பல குடிசைகள் சாம்பல். பெண்கள் உட்பட பலர் கைது.

இந்நிலை இப்படியே தொடருமானால் நாங்கள் மதம் மாறுவோம் என்று திருமாவளவன் அறிவித்து இருக்கிறார்.

இஸ்லாத்துக்கு வரும்படி அழைக்கிறோம்.

ZAKIR HUSSAIN said...

இந்தியர்களுக்கு ஒரு "சீக்கு" இருக்கிறது.

வெளிநாடுகளில் உள்ள நல்ல விசயங்களை உதாரணம் காட்டிணால்...." இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு.....அதெல்லாம் இங்கு சரிப்படாது" என்று 'கேட்" போடுவதுதான் அந்த சீக்கு.

கட்டுப்பாடற்ற ஜனநாயகம் எப்போதும் முன்னேற்றத்துக்கு தடைதான். ...

இதை யாரும் சொல்லவில்லை...சொன்னால் அதற்கும் ஒரு வியாக்யாணம் வைத்திருப்பார்கள்.

திருமண வீடுகளிலும், அரசியல் மேடைகளிலும் அரசியல் வாதிகள் அடுக்கு மொழி பேசியே 10 வருட காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டார்கள்.

ZAKIR HUSSAIN said...

//கடலுக்குச் செல்லும் மீனவன் கரை திரும்புவது நிச்சயமில்லை; அப்படியே அவன் திரும்பினாலும் தான் பாடுபட்டுப் பிடித்த மீன்களை படகுகளுடன் பறிகொடுத்துவிட்டுத் திரும்பும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத்தான் இத்தனை ஆண்டுகளாக நாம் பெற்ற சுதந்திரம் வழி செய்ததா?//

உங்களுக்கு தெரியுமா....தமிழ்நாட்டுக்குத்தான் அந்த கதி. கேரளாவில் உள்ளவனை தமிழ்நாட்டில் சுட்ட இத்தாலியனை சிறை பிடித்தது கேரள அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் எத்தனையோ பேர் இன்னும் அவதிப்படுகின்றனர்....நமது மத்திய அரசு இந்த விசயத்தில் அப்படி ஒன்றும் உடனே ஒன்றும் செய்யாது....இது நமக்கு தெரிகிறதோ இல்லையோ...இலங்கைக்கு நன்றாக தெரியும்.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்

மீனவர் பிரச்னையையும் இலங்கை பிரசனையையும் வைத்துத்தான் தமி்ழ்நாட்டில் சில கட்சிகள் உயிர்வாழ்கின்றன

கேரளத்தில் இலங்கை பிரசனையை சீண்டுவார் இல்லை இங்கோ இது இல்லாவிட்டால பல சீமான்கள் வீரவசனம் பேச இயலாது

தங்களின் கருத்துக்கு நன்றி

sheikdawoodmohamedfarook said...

//இங்குசாதிமதவாதத்துக்குஇடமில்லை.ஒற்றுமைசகோதரதுவம்தான்நமது வளிமை//மோடிஒருசிறந்தஅரசியல்வாதி.மக்களின்மறதியேஒருசிறந்த அரசியல்வாதியின்மூலதனம்.''தாய்மதத்துக்குதிரும்புங்கள்''என்றதைமக்கள்நினைத்துக்கொண்டாஇருப்பார்கள்என்பதுஅவர்நம்பிக்கை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு