எப்படியும் மரணம் முடிவாகி விட்டது!!!


இப்பக்கமிருந்தால் போரால் மரணம்
அப்பக்கம் சென்றால் (கடல்)நீரால் மரணம்
எப்பக்கம் செல்வேன்? எனதருமை உலகே?

கல்நெஞ்சர்களிடம் கேட்டார் என் தந்தை
வாழ கொஞ்சம் இடம் தாருங்கள்
வாழ்ந்து விட்டு போகிறோம் வல்லோன் 
அழைக்கும் வரை வழிசெய்து தாருங்களென்று!

சுற்றுலா என நினைத்து குடும்பத்துடன்
பெரும் காசு கொடுத்து கடல் பயணம்
குடியிருக்க யாரேனும் இடம் தருவர்
என்ற நம்பிக்கை கப்பலில் ஏறினோம்!

இறுதியில் கடல் அலைகள் கவ்வியது
என் தாயையும் அண்ணனையும்
அவர்களோடு என்னையும் சேர்த்தே
எங்களுக்காக குரல்கொடுக்க என் தந்தையை 
மட்டும் விட்டது உலகம் உணரவே!

ஆழ்கடல் அசுர சுறா கூட
பசியிருந்தும் என்னை புசிக்கவில்லை
மிதந்து வரும் என்னுடலை
முத்தமிட்டே சென்றனவே!

கரையில் என் பிஞ்சு மேனியை
தொட்டு தொட்டு துக்கம் விசாரித்து
கண் சிமிட்டி மறையும் கடலலை போல் 
நானும் பிரியா விடைபெறுகின்றேன்!

ம்மா என்றாலும் அம்மா என்றாலும்
உம்மா என்றாலும் உம்மி என்றாலும்
மம்மி என்றாலும் எல்லாம் தாயே!
பிஞ்சுகளின் வலி நிவாரணி நீயே!

அகதிகள் உலகில் ஈழத்தமிழினமும்
பாலஸ்தீன, சிரியா வளைகுடா பேரினமும்
ஒன்றுக்கொன்று தொப்புள் கொடி உறவுகளே 
அழித்தொழிக்கும் எதிரிகள் முன்!

கடல் நீருக்காக நீல நிறமும்
போரில் சிந்திய செங்குருதிக்காக
சிவப்பு நிறமும் கொண்ட இரு வர்ண
உலககொடி ஒன்றை உருவாக்குங்கள்!

அதன் நடுவே என் உயிரற்ற உடலை
அகதிகளின் அல்லல் சின்னமாக பொரித்திடுங்கள்
பிஞ்சுகள் காற்றில் உதிர்வது இயல்பே
நானும் உதிர்ந்து விட்டேன் விண்ணுலகம்
சென்று விட்டேன் உங்களுக்கு முன்னரே!

இனியாவது கொஞ்சம் மனம் இறங்கி வாருங்கள்
அலைக்கழிக்கும் கடல் அலை போலில்லாமல்
அரவணைக்கும் தாய் போல் வாழ்ந்து 
விட்டுப்போகட்டும் அந்த வாயில்லா மனித நேயம்.

நாம் கல்நெஞ்சம் கொண்டவர்களல்லர். எங்கே சென்றீர்கள் ஈழத்தமிழினம் இறுதிக்கட்ட போரில் சிங்கள இனவெறியால் அழித்தொழிக்கப்படும் பொழுது? என கேட்கிறார்கள் எம் தொப்புள் கொடி உறவுகள். ஆம், அவர்கள் கேள்வியில் நிச்சயம் நியாயம் நிறைந்தே இருக்கின்றது. நாம் உள்ளுக்குள் புழுங்கி கண்ணுக்குத்தெரியாமல் கண்ணீர் சிந்திய நிகழ்வுகள் ஏராளம், ஏராளம். ஈழத்தமிழினமும், குஜராத், மத்திய தரைக்கடல் இனமும் வேதனைகளில் வேறுபடுவதில்லை. அராஜகமும், அமைதியும் ஒன்றுக்கொன்று உலகில் முற்றிலும் வேறுபட்டாலும் மரணத்தில் இரண்டும் மண்டியிட்டு ஒன்று பட்டே ஆக வேண்டும். அந்த மரணமே வெல்லும்.

திடீரென என் உள்ளத்திற்குள் உதித்ததை இங்கு ஓரு கவிதை போல் எழுதி இருக்கிறேன். ஒரு புகைப்படம் உலகின் உள் மனதை எப்படி ஆட்டி அசைத்துப்பார்க்க முடியும் என்பதற்கு சமீபத்தில் துருக்கி கடல் கரை ஒதுங்கிய அந்த அஹ்லன் குர்தி என்ற பிஞ்சு குழந்தையின் பிரேதமே சாட்சி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

4 கருத்துகள்

sabeer.abushahruk சொன்னது…

எம் எஸ் எம்,

வாசிக்க வாசிக்க வலிக்கிறது!

Shameed சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Shameed சொன்னது…

//கடல் நீருக்காக நீல நிறமும்
போரில் சிந்திய செங்குருதிக்காக
சிவப்பு நிறமும் கொண்ட இரு வர்ண
உலககொடி ஒன்றை உருவாக்குங்கள்!//

சிந்திக்க வைத்த வரிகள்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

வலிக்கிறது