
கட்டுடல் உனக்கு,
மெச்சிடும் பலம்,
மேனியில் திடம்,
அச்சமே தரும்
ஐவிரல் மூர்க்கம்,
உச்சியில் புகழ்
உலகெலாம் பெயர்!!.
கையிலே கேடயம்,
களிப்புடன் நீ..
பையிலே பணம்,
உணவுக் குடற்
பையிலே பசி,
உணவக மேகினாய்,
மையினை யொத்த
மேனியோன் உன்னை
தடுத்தான் வெள்ளைத்
தற்குறி ஒருவன்,
அடுத்ததாய் கண்டாய்
அழகிய சமத்துவம்,
தொடுதோள் தோழமை,
தோல்நிறம் அறியா
நெடியதோர் வரிகளில்
நாயனை தொழுதிடும்
இறைவழி பாட்டினில்
இருப்பவர், எவரவர்?
கருமை நிறத்தவர்
முதன்மை பெறுகிறார்,
மறுமை மட்டுமே
மனதினில் கொள்கிறார்,
அருமை, அருமை !!
அகமகிழ் கொள்கிறாய்.
அகமது முழுவதும்
அலைவந் தடித்தது,
இகமது மீதினில்
இப்படி எப்படி?
முகமது புதிதாய்
முளைத்தவன் போலவே
முகம்மது அலிய்-என
முழங்கினாய் உன்பெயர்.
குத்தினாய் உள்ளத்தில்
குறைவல்ல நிறமென,
குத்தினாய் சமத்துவம்
குலைப்போர் கன்னத்தில்,
குத்தினாய் வெற்றிக்
கொடி மண்மீதிலே!
பொத்தினாய் விழியிரண்டு
புவிவாழ்வு போதுமென்று.
பிறந்தவை யாவுமிங்கு
பிறிதோர் தினத்தன்று
இறந்தே தீருமென்னும்
இறைவனின் திட்டமதில்
வருந்துதற்கு ஒன்றுமில்லை
வரலாற்றில் வாழ்கின்றாய்!
இறந்தும் எம்நினைவில்
என்றும் வாழ்ந்திருப்பாய். !
அதிரை என். ஷஃபாத்
2 Responses So Far:
வருந்துதற்கு ஒன்றுமில்லை
வரலாற்றில் வாழ்கின்றாய்!
இறந்தும் எம்நினைவில்
என்றும் வாழ்ந்திருப்பாய். !
மூன்று முறை உலக சாம்பியன் . பிறப்பால் கிருத்தவர். இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு 1975 - ல் இறைவன் அவருக்கு ஹிதாயத்தை வழங்கினான். போருக்காக வியட்நாம் செல்ல மறுத்த காரணத்தால் ஏகாதிபத்திய அமெரிக்க அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போட்டிகளில் வெல்லும்போது குத்தும் கடைசி குத்து அல்லாஹு அக்பர் என்று முழங்கிக் கொண்டு குத்துவதாக கூறுவார்கள். அல்லாஹு அக்பர்.
தாவாப் பணிக்கு குறிப்பிட்டுச் சொல்லப்படக்கூடிய ஒரு விஐபி யாக உலகெங்கும் சுட்டிக் காட்டப்பட்டவர்.
அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.
Post a Comment