Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்றைய நோன்பும், இன்றைய வீம்பும்... 34

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2016 | , , , ,


ஒரு காலத்தில் புனித ரமளான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி காய்ச்ச தேவையான மளிகைக்கடை சாமான்கள் மற்றும் காய்கறி, இறைச்சி, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே இருந்து வந்த போதிலும் (அப்பொழுது மாத சம்பளமும் குறைவாகவே இருந்து வந்தது. ஊரில் 1000 ரூபாயும், சவுதியில் 300 ரியால்கள் அல்லது 400 ரியால்கள் தான் மாத சம்பளம். இன்றைக்கு மாத டெலிபோன் செலவே இதையும் தாண்டி விடுகிறது சிலருக்கு) நமதூரில் எல்லோர் வீட்டிலும் ஒவ்வொரு நாளும் நோன்பு கஞ்சி காய்ச்ச போதிய பொருளாதார வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனால் முஹல்லாப்பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் வசதிபடைத்தோரின் பங்களிப்பில் காய்ச்சப்படும் கஞ்சிகளையே ஒவ்வொரு வீட்டின் சிறுவர்களும் அதற்குரிய பாத்திரங்களை கையில் எடுத்துக்கொண்டு அஸர் தொழுகைக்குப்பின் பள்ளியில் வரிசையில் ஊற்றப்படும் கஞ்சிகளை வாங்கி வந்து அதன் மூலம் வீட்டினர் நோன்பை திறந்து கொண்டனர். குளக்கரையில் கொண்டு வந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு சிறுவர்கள் போடும் சப்தம் எதோ அங்கு பெரும் கச்சேரியே நடப்பது போல் இருக்கும். பிறகு பெரியவர்களின் அடிகளும் விழும். கடைசியில் கஞ்சியுடன் கலந்த குளத்தின் மண்ணும் வீடு வந்து சேரும்.

நோன்பு திறக்க வீட்டில் சர்பத் கலக்க வேண்டுமென்றாலும் ஐஸ் பெட்டி வசதிகள் எல்லோர் வீட்டிலும் இல்லாமல் இருந்தது. தெருவில் ஏதேனும் கொஞ்சம் வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் குளிர்சாதனப்பெட்டி வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு தங்கள் தேவை போக ஐஸ் கொடுத்துதவினர்.

ஊரில் நோன்பு கால மாலை நேரக்கடைகள் ஆங்காங்கே திறக்கப்படும். வாடா, சம்சா வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் (அது என்னா கலர் கொடி என்று கேட்டு விடாதீர்கள்). நம் சொந்த பந்தங்கள் கூட கொஞ்சம் லாபம் சம்பாதிப்பதற்காக இரவு நேரங்களில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, கடல்பாசி, கல்கண்டு பால், வாழைப்பழம் போன்றவற்றை தெருவில் தற்காலிக கடையமைத்து விற்று வந்தனர். இரவு நேர சேட்டைகள் அரங்கேறும். அது கேரம் போர்ட் விளையாட்டு மூலம் ஆரம்பமாகும். 

நோன்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே நமதூர் பள்ளிகளும், வீடுகளும் ஒட்டடை அடித்து, கழுவி சுத்தம் செய்யப்படும். சில பள்ளிகளில் சாந்தடித்து வர்ணம் பூசப்படும். (வீட்டுப்பெண்கள் அதற்கென ஒரு பிரத்யேக மாதங்கள் வைத்துள்ளனர். விராத்து, இடையத்து.......)

வீட்டினர் தன் சொந்த பந்தங்களின் உறவுகளை பலப்படுத்தவும், சம்மந்தி வீடுகளை மகிழ்விக்கவும் வாடா, சம்சா, முட்டை ரொட்டி, கடல்பாசி போன்றவற்றுடன் சில சிறப்புச்சாமான்கள் சேர்க்கப்பட்ட (ஆட்டுக்கறி, ஆட்டுத்தலை, நெஞ்செலும்பு) சுவை கூடிய நோன்பு கஞ்சி வீட்டில் சிரத்தை எடுத்து செலவுகள் பார்க்காது பெண்கள் காய்ச்சி அதை முறையே பங்கிட்டு ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்தனர். விவாகரத்து, மவுத்துக்கும் ஹயாத்துக்கும் ஒன்னும் கிடையாது போன்ற பெரும் பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்காது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உறவு முறை பேணி நல்லபடி பராமரித்து வந்தனர். எடுத்தேனா, கவிழ்த்தேனா என்பதெல்லாம் பெரும்பாலும் இல்லாமல் இருந்த நேரம் அது. 

தொன்று தொட்ட சில மூட நம்பிக்கைகள் தொற்றி இருந்த போதிலும் மார்க்க விசயங்களில் பரவலாக எல்லோரும் பெருங்குற்றங்கள் செய்யாது பேணுதலாகவே இருந்து வந்தனர். சுற்றுவட்டார மாற்றுமதத்தினர்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். 

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆளும் பொழுது கூட பாராளுமன்றத்தில் இயற்றப்படாத ஒரு சட்டத்தை பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு கட்சி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்து மாற்றுமதத்தினர்களுடன் அமைதியாக வாழ்ந்து வரும் அதிரையில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படக்கூடாது என ஒரு புது சட்டம் இயற்ற நினைப்பது சங்கடப்படுத்துவதற்காகவேயன்றி யாரையும் சகோதரத்துவத்துடன் வாழ வழிவகை செய்வதற்காக அல்ல.

ஓட்டு வீட்டில் இருந்து வந்தாலும் குடும்ப கண்ணியங்களும், மார்க்க வரைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. எதுவும் எளிதில் எல்லை மீறி கண்டம் தாண்டி சென்று விடுவதில்லை. 

சிறுவர்கள் பெரியவர்களை மதித்து மரியாதை செலுத்தினர். பள்ளிக்கூட படிப்பிற்குப்பின் தெருதோறும் திருக்குர்'ஆன் பயிலும் பள்ளிகளுக்கு/வீடுகளுக்கு காலை, மாலை சென்று வந்தனர். 

உண்மையில் வருத்தப்பட்டு வேதனை பட வேண்டிய விசயமான வீட்டு ஆண்களின் வருடங்கள் பல ஆகும் வெளிநாட்டு பயண பெரும் பிரிவை அறியாது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் பயணக்காசிற்கு ஆசைப்பட்டு குதிரை வண்டியில் குதூகலமாய் ரயிலடி சென்று தன் பிரியமானவர்களை கையசைத்து கம்பனில் ஏற்றி தனிமையாய் வீடு திரும்புவர். கை பேசிகளும், இன்டர்நெட் தொடர்புகளும் இல்லாத அக்காலம் தராத வேதனைகளை எல்லா வசதி வாய்ப்புகள் இருக்கும் இக்காலம் ஏதேனும் வழியில் நமக்கு தந்து விடுகிறது. 

ஊரில் எப்பொழுதாவது யாரும் எதிர்பாராமல் எங்கேனும் சில விசமிகளால் சிறு சலசலப்பு/கலவரம் ஏற்பட்டால் அது உடனே சம்மந்தப்பட்டவர்களால் அமைதிக்குழு (பீஸ் கமிட்டி) ஏற்படுத்தப்பட்டு பரஸ்பரம் பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும். ஆனால் இன்றோ சின்னஞ்சிறு விசயங்களை கூட ஊதிப்பெரிதாக்கி உலகிற்கே ஊடகத்தின் மூலம் விருந்து வைக்க துடிக்கிறது சில துரு பிடித்த இதயங்கள். 

ஐங்கால தொழுகைக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒலிக்கப்படும் பாங்கின் ஒலியோ அல்லது மார்கழி மாதம் ஊரின் எல்லைக்கோவிலில் ஒலிக்கப்படும் அவர்களின் பக்திப்பாடல்களோ யாருக்கும் இடைஞ்சல் தருவதாக இருந்ததில்லை. அவரவர் மார்க்கம் அவரவருக்கு என வரம்புக்குள் இருந்து வந்தனர். இன்று உள்ளங்கள் குறிகிவிட்டதால் ஊரில் எங்கேனும் சைக்கிள் டயர் வெடித்து விட்டால் கூட ஏதேனும் வெடிகுண்டாக இருக்குமோ என பதறிப்போகும் சூழ்நிலை உள்ளது. 

இன்று போட்டி போடும் கணக்கிலடங்கா மொபைல் போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் சமுதாயத்தில் பல இயக்கங்களும் ஊரில் ஆங்காங்கே உருவாகி ஒருவருக்கொருவர் பல தயக்கங்களையும், தள்ளுமுள்ளுகளையும் ஏற்படுத்தி விட்டன. 

ஊரில் நோன்பு வெயில் காலத்தில் வந்தாலும் குளங்கள் கொஞ்சம் நீரை தன் மடியில் ஏந்தியே நின்றன. ஆனால் இன்றோ மழைக்காலங்களில் கூட கடும் தாகம் கொண்ட ஒரு வழிப்போக்கனைப்போல் ஊர்க்குளங்கள் மழை நீரை தானே குடித்து தீர்த்து விடுகின்றன ஆழ்துளை குழாய் கிணறுகளின் அத்துமீறல்களால். 

என்றோ வர இருக்கும் சமுதாயத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கறிந்து அவர்களுக்காக இன்றே தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் இன்றிருக்கும் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதியான வாழ்விற்கும் இன்னும் விழிப்புணர்வுகள் அந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. 

அன்றோ அழுக்கு சட்டைப்பைக்குள் ஐந்து ரூபாய் இருந்தாலே போதும். இன்றோ அழகிய வெள்ளைச்சட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தாலும் அந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பதில்லை. எதுக்குமே பத்தமாட்டிக்கிது..... 

அன்று ஒரே ஊசியில் ஓடிப்போன ஓராயிரம் நோய்கள் இன்றோ ஓராயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்து உண்டாலும் போகாமல் மல்லுக்கட்டி உடலுக்குள் பாய் விரித்து மல்லாக்கப்படுத்து கிடக்கிறது. 

சவுரு பக்கிர்சா அடித்து வந்த தப்ஸின் சப்தம், அவருடன் கையில் அரிக்களாம்பு கொண்டு வந்த சிறுவனுடன் அக்கால இன்பமும் சேர்ந்தே சென்று விட்டனவோ? என்னவ்வோ தெரியவில்லை. 

புது வேட்டி எடுத்து அதை தையல்காரர் ஒன்று சேர்த்து கூட்டி தைக்கப்படும் பொழுது அதில் எம் உற்சாகமும் இணைத்து வைத்தே தைக்கப்படும். ஆனால் இன்றோ என்ன தான் பணங்காசுகள் பெருகி இருந்த போதிலும் அன்று கிடைத்த இன்பம் இன்று வர மறுக்கிறது. மறைந்த நம் அப்பாக்களின் கைத்தடிகளை பிடித்துக்கொண்டு அதுவும் அவர்களுடன் கப்ருக்குழிக்குள் சென்று விட்டதோ? என்னவ்வோ? 

ஒரு காலத்தில் நம் ஊர் பள்ளி வாசல் தோறும் பெரியவர்களின் ஆட்சியும், கம்பீர நிர்வாகமும் எம்மை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும். இன்றோ நாமும் மெல்ல, மெல்ல பெரியவர்களாகி விட்டதால் அந்த அப்பாக்கள் போல் இன்று வயதானவர்களின் ஆளுமையை காணுவது அரிதாகிவிட்டது. சின்னஞ்சிறு வயதிலேயே உலகை விட்டு மறையக்கூடிய சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.  

நம் இளமைக்கால நோன்பு நினைவுகளை பல கட்டுரைகளாக ஏற்கனவே எழுதி இருந்த போதிலும் அவற்றில் சிலவற்றை நினைவூட்டலுக்காகவும், கூடுதல் தகவலாகவும் மேற்கண்டவற்றை உங்களின் பார்வைக்கும் மேலான கருத்துரையாடலுக்காகவும் இங்கு சமர்ப்பிக்கின்றேன். 

இன்ஷா அல்லாஹ் இன்னுமிருப்பின் தொடருவோம்...... 

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

34 Responses So Far:

Noor Mohamed said...

காலத்திற்கேற்ற கன்னியான கட்டுரை. தம்பி நெய்னா கோடிட்டுக் காட்டும் கருத்துகள் பல. இருப்பினும் இன்றைய நடை முறை;

//ஐங்கால தொழுகைக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒலிக்கப்படும் பாங்கின் ஒலியோ அல்லது மார்கழி மாதம் ஊரின் எல்லைக்கோவிலில் ஒலிக்கப்படும் அவர்களின் பக்திப்பாடல்களோ யாருக்கும் இடைஞ்சல் தருவதாக இருந்ததில்லை. அவரவர் மார்க்கம் அவரவருக்கு என வரம்புக்குள் இருந்து வந்தனர். இன்று உள்ளங்கள் குறிகிவிட்டதால் ஊரில் எங்கேனும் சைக்கிள் டயர் வெடித்து விட்டால் கூட ஏதேனும் வெடிகுண்டாக இருக்குமோ என பதறிப்போகும் சூழ்நிலை உள்ளது. //

வெளிப்படையான உண்மை. எதிர்கால நம் பிள்ளைகளுக்கு, இது பற்றி என்னவென்றே தெரியாத நிலையே இன்றைய நிலை.

//அன்று ஒரே ஊசியில் ஓடிப்போன ஓராயிரம் நோய்கள் இன்றோ ஓராயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்து உண்டாலும் போகாமல் மல்லுக்கட்டி உடலுக்குள் பாய் விரித்து மல்லாக்கப்படுத்து கிடக்கிறது. //

ஆம்! இன்று மாதம் தவறாமல் மளிகை கடை பில்லைவிட மருந்துக் கடை பில்லுக்கு பணம் செலுத்தப் படுகிறது. எங்கு பயணம் சென்றாலும் எல்லாவற்றையும் விட முதலில் மருந்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாய வாழ்விலேதான் பலர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கின்றன.

ZAKIR HUSSAIN said...

To Bro MSM Naina Mohamed,

நீங்கள் சொன்ன மாதிரி ஊரில் பணம் பெருகிடுச்சு...மனசு சின்னதா போய்விட்டது.

மக்கள் தொகை பெருகிவிட்டது....மக்களுக்கிடையே அன்பு குறைந்து விட்டது.

வீடுகள் பெருகிவிட்டது...கூடவே மனிதர்களுக்கிடையே தூரமும் அதிகமாகிவிட்டது.

தொலைத்தொடர்புகள் அதிகமாகிவிட்டது...அது ஒற்றுமைக்கு உதவ தவறி சண்டைகளை உருவாக்க உதவியாகிவிட்டது.

இன்னும் காத்திருக்கிறேன் ....நவீனம் வளர்ந்த இந்த நிமிடங்களில் நாகரீகம் தேயுமா?,...தேறுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n), ரமளான் - நினைவுகளை அசைபோடுவதில் நிகர் MSM(n)தான் !

தலைப்பிறைக்கு முன்னர், தலைகளின் பினக்குகள் இறங்கி...

தர்க்கம் தவிர்த்து
மூர்க்கம் குறைத்து

"மைக்" பிடிப்பதில் போட்டி தவிர்த்து, பிடி "my கையை" என்று கரம் நீட்டினால்...

பேச்சில் இருக்கும் காரம் குறைந்து ஒற்றுமையாக இருக்க வழி பிறக்குமே !

அப்படின்னா... இவங்களுக்குள்ள நோம்பு கஞ்சி பறிமாற்றம் ஒரு மாற்றத்தை கொண்டு வருமா ?

வருமென்று நம்புவோமாக !

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன். மிக்க நன்றி அன்புச் சகோதரர் மு.செ.மு. நெய்நாஅவர்கட்கு. “நான் கண்ட அதிரை” என்ற தலைப்பில் என்னிடம் ஓர் ஆக்கம் வேண்டினார் விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம். என் உள்ளத்தில் ஓடிய அத்தனை உணர்வுகளையும் ஓர் ஆக்கத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்; எனவே, எனக்கு அவ்வாக்கம் எழுதும் பணி மிச்சமாகி விட்டது! இருப்பினும் பின்னூட்டங்களில் என் கருத்துரைகளை இடுவேன்

மேலை நாடுகளில் சம்பாதித்தவர்கள் தன் பிள்ளைகளைக் கண்காணிக்க இயலாமற் போனதால் அப்பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஒழுக்கத்தில் சீர்கேடு ஏற்பட்டு விட்டதை உணர்ந்து அம்மேலை நாட்டின் வேலை வேண்டாமென்று ஊரில் வந்து பிள்ளைகளைக் கண்காணிக்கும் நிலை வந்து விட்டது!

சீருடை அணிந்து செல்லும் பள்ளிச் சிறார்கள் காலணி அணிவதில்லை?!

‘இண்டெர்நெட் ப்ரோசிங்க் செண்டர்களில்” விடலைப் பையன்கள் கெட்ட படம் பார்க்கின்றனர்; அதிர்ச்சியாக உள்ளது!!!

முன்னாள் ஆசிரியர்களிடம் நான் உரையாடிய பொழுது நான் அவர்களிடம் வைத்துள்ள மரியாதை மற்றும் அவர்கள் எமக்குக் கற்று கொடுத்த அடிப்படைகள் தான் எங்கள் வாழ்வின் அடிப்படிகள் எனும் பேருண்மையை விளக்கும் பொழுது அவர்களின் கண்கள் குளமாகி கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய என்னை ஆரத்தழுவி நன்றி கூறினர். உண்மையில் நாம் அவர்கட்கு இன்னமும் நன்றி எனும் கடன் பட்டுள்ளோம்!

Saleem said...

///ஊரில் நோன்பு கால மாலை நேரக்கடைகள் ஆங்காங்கே திறக்கப்படும். வாடா, சம்சா வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் (அது என்னா கலர் கொடி என்று கேட்டு விடாதீர்கள்). நம் சொந்த பந்தங்கள் கூட கொஞ்சம் லாபம் சம்பாதிப்பதற்காக இரவு நேரங்களில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, கடல்பாசி, கல்கண்டு பால், வாழைப்பழம் போன்றவற்றை தெருவில் தற்காலிக கடையமைத்து விற்று வந்தனர்///

கபாப் கடைகளும் உண்டு (ஒரு இளம் மௌலவி என்னிடம் சொன்னார் நோன்பில் சவாபை தேட சொன்னால் மக்கள் கபாபை (கடை) தேடுகிறார்கள் என்று நகைச்சுவையாக சொன்னது நினைவிருகிருக்கின்றது)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
// நோன்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே நமதூர் பள்ளிகளும், வீடுகளும் ஒட்டடை அடித்து, கழுவி சுத்தம் செய்யப்படும். //

நெய்னா இன்று காலையில் நான் தனி நபரா நின்று என் வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் பண்ணியதால்.முதுகு வழி பட்டையை கேளப்பிடுச்சு

sabeer.abushahruk said...

ஒரே மூச்சில் வாசிக்க வைக்கும் வசீகர நடை எம் எஸ் எம்மின் எழுத்துக்கு பலம்.

இந்த பலம் தன்னை பயன்படுத்தி இங்கு பதியும் கட்டுரைகளில் கட்டுண்டு கிடக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

நோன்பை எதிர்நோக்கிய எங்களுக்கு ஒரு பந்தி இந்தப் பதிவு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அக்கால நோம்பின் மகத்துவத்தை இக்கால நோம்போடு ஆங்காங்கே தட்டி குட்டி விளக்கியமை அருமை மச்சான்!

//தர்க்கம் தவிர்த்து
மூர்க்கம் குறைத்து

அப்படின்னா... இவங்களுக்குள்ள நோம்பு கஞ்சி பறிமாற்றம் ஒரு மாற்றத்தை கொண்டு வருமா ?//

இன்சா அல்லாஹ் வரனும்! அல் முஹல்லா தலைவர் ஆரம்பித்து,சேர்மன் இணைந்து,செய்யதாக்கா பங்கெடுத்து உங்களுக்குள் ஏற்படும் கஞ்சி பரிமாற்றமும் கை இணைதலும் கச்சிதமா நடக்கனும், அது முதல் கசடுகள் மறைந்து களங்கமில்லா ஆட்சி நடக்கனும் அதுவே என் ஆசை! செய்வீர்களா தலைகளே!

//அமைதியாக வாழ்ந்து வரும் அதிரையில் மாடு//

இங்கேயும் மாடு வந்துருச்சா!
காலம் உள்ளவரை அந்த கறி கிடைக்கும் கவலை வேண்டாம். இன்சா அல்லாஹ்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு சமயம் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது செக்கடிப்பள்ளியில் அஸருக்குப்பின் "பார்லா" அப்பாவால் ஊற்றப்படும் நோன்பு கஞ்சிக்கு வரிசையில் முறையே நின்று கண்பார்வை குறைந்த அவர்களிடம் உங்க ராத்தா ஊட்டு பேரன் என்று சொல்லி கொஞ்சம் கூடுதலாக நோன்பு கஞ்சி வாங்கி வந்த நினைவு இன்றும் எவ்வித வைரஸ் தாக்கமின்றி மனதில் பதிந்து கிடக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்....

ஒரு முறை நான் புனித மதீனாவில் வேலை செய்து கொண்டிருந்த சமயம் ஜித்தாவிலிருந்து மதீனாவிற்கு ஜியாரத்திற்காக வந்த நண்பன் ஒருவன் பிரமாண்ட மதீனா மஸ்ஜிதுந் நபவி பள்ளியை பார்த்து இப்படி கேட்டான் என்னிடம் "இவ்ளோவ் பெரிய பள்ளியை எந்த பார்லாக்கா தான் நிர்வகிக்கிறார்களோ?" என்று கேட்ட‌ நினைவும் இங்கு வந்து செல்கிறது.

இது போன்ற பழைய நினைவுகளை அசைபோட இன்று நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமும் இல்லை; நேரமும் இல்லை. பழையதை நினைப்பதால் என்ன பயன்? என்று கேட்டுவிடுவார்க‌ளோ என‌ அஞ்ச‌ வேண்டியுள்ள‌து. இது ஒரு பொழுது போக்கா? அல்ல‌து பொக்கிஷ‌மா? என‌ என‌க்கும் விள‌ங்க‌வில்லை.

sabeer.abushahruk said...

//பழைய நினைவுகளை அசைபோட இன்று நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமும் இல்லை; நேரமும் இல்லை//

அப்ஜக்க்ஷன் யுவர் ஆனர்!

பழைய நினைவுகளைச் சொல்லி வருகையில் அதில் படிப்பினை இல்லையா? நல்லது கெட்டதைப் பகுத்து அறிய குறிப்புகள் இல்லையா?

புதியவை சொத்து எனில், பழையவை பொக்கிஷம்!

பழையவைதான் கழியனும்; பழைமை அல்ல.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): பெரும்பாலோருக்கு நினைவுகளை அசைபோட ஆவலகாத்தான் இருக்கும், என்ன செய்வது அவரவர்களின் நேர கால அவகாசமும், வேலைப்பளு, பணியிடங்களில் இருக்கும் பிணிகள், இப்படி ஏராளமான சூழல்கள் இருக்கலாம்.

நினைவுகள் பொக்கிஷமே ! அவைகளைக் கொண்டு விரண்டோடும் பொழுதுகளை இழுத்து வைத்து அசைபோடுகிறோம். இதில் எத்தனை பேருக்கு(த்தான்) உடண்பாடு என்பது கேள்விக் குறியே !

நாம் நினைவுகூறும் சூழலகள் அனைத்தும் பதிவுகளாக்கப் படுவதால் என்றைக்காவது ஒரு நாள் இது ஒரு குறிப்பேடாக அன்றைய தலைமுறைக்கு பயன் தரலாம். :)

இறப்பெய்துவம் வரை தளாராத அப்பாக்களோடு இருந்தவர்கள் நாம் தளரவே கூடாதே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//புதியவை சொத்து எனில், பழையவை பொக்கிஷம்!

பழையவைதான் கழியனும்; பழைமை அல்ல.//

அதே அதே ! அதெப்படி நான் சொல்ல் வந்ததை ஊரிலே இருந்து கொண்டு இப்படி !?

sabeer.abushahruk said...

telepathy Abu Ibrahim!

Time of posting is also exactly at 2.08 pm!!!!!

ZAKIR HUSSAIN said...

//பழைய நினைவுகளை அசைபோட இன்று நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமும் இல்லை; நேரமும் இல்லை//

இதை என்னால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஒரு சின்ன உதாரணம் ..சமீபத்தில் நான் ஊர் வந்தபோது தெருவில் ஒரு இடத்தை க்ராஸ் செய்யும்போது ஒரு இடிந்த பழைய வீட்டை பார்த்தேன். அந்த இடத்தின் அருகில் நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது...அந்த இடத்தில் சைக்கிள் ஒட்டி விழுந்தது....படிக்காத பசங்க "லாக்கு" விளையாடியதை பார்த்ததற்கு பின்னாடியே வந்து என் மாமா காதை பிடித்து இழுத்துப்போய் என் உம்மாவிடம் அடி வாங்கிகொடுத்து சந்தோசப்பட்டது. இப்படி எதுவுமே சந்தோசமில்லாத நினைவுகளாக இருந்தாலும் [ அடி வாங்கியது நான் ] அந்த பழைய கட்டிடத்தை தொட்டுப்பார்க்கும் அளவுக்கு சந்தோசம் தந்தது.

என்னையே மறந்து எனக்குள் புதிய ரத்தம் ஊற்றெடுத்ததுபோல் உணர்ந்தேன்.

இப்போது சொல்லுங்கள்....பழையவை பொக்கிசம்தானே...

MSM....முதலில் உங்கள் ஸ்டேட்மென்டை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) ஒரு உண்மையச் சொல்லட்டுமா ! நான் மறந்தே போன நிறைய விஷயங்களை உமது பொக்க்கிஷப் புதையல்களை ஏராளமாக ஞாபகப் படுத்தியிருக்கிறது !

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//MSM....முதலில் உங்கள் ஸ்டேட்மென்டை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள்.//

இல்லையேல் நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டி வரும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

காக்காமார்களா!!!

இதுவரை என் முகம் பார்க்காத உங்களைப்போன்ற எத்தனையோ நல்ல காக்காமார்கள் என் கருத்திற்கு இங்கு மறுப்புமொழி தெரிவித்திருப்பதற்கு ரொம்ப சந்தோசம். என்னுடன் ஓடியாடி விளையாண்ட, தெருவில், பள்ளியில், பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் பயின்ற, கட்டுரையின் கருவாக திகழும் எத்தனையோ என் பால்ய நண்பர்களில் பலர் அமெரிக்க, ஆஸ்திரேலிய, அரேபிய நாடுகளிலும் மற்றும் தாய் நாட்டில் நல்ல மற்றும் சுமாரான பணிகளில்/சூழ்நிலையில் இருந்து வந்தாலும் அவர்களில் இதுவரை ஒரு கை விரல் விட்டு எண்ணி நிரப்பும் அளவுக்கு கூட இணையத்தில் கருத்துப்பரிமாற்ற நண்பர்கள் இல்லாமல் போனதற்கு அவர்களின் விருப்பமின்மையா? நேரமின்மையா? பணிச்சூழலா? பணத்தை டாப் கியரில் விரட்டிப்பிடிக்க சென்றதாலா? இல்லை இதிலெல்லாம் பரிச்சயம் இல்லாதவர்களா? குறைகாண விரும்பவில்லை. எங்கிருந்தாலும் நிறைவோடு நலமுடன் இருந்தால் நலமே.............

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பழைய நினைவுகளை அசைபோட இன்று நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமும் இல்லை; நேரமும் இல்லை. பழையதை நினைப்பதால் என்ன பயன்? என்று கேட்டுவிடுவார்க‌ளோ என‌ அஞ்ச‌ வேண்டியுள்ள‌து. இது ஒரு பொழுது போக்கா? அல்ல‌து பொக்கிஷ‌மா?//

ஏன்நெய்னா இப்புடி சொல்லிப்புட்டா?

//புதியவை சொத்து எனில், பழையவை பொக்கிஷம்!
பழையவைதான் கழியனும்; பழைமை அல்ல.//

ரெண்டு பேரும் சொன்னது மிகச்சரி நெய்னா!

வைரஸ் அறவே பாதிக்காத உன் மெமரியிலிருந்து வருவதை அடுத்தவருக்கும் அறியத் தர தயக்கம் வேண்டாம்.

அசைபோட பலரும் இருக்கார்கள். செரித்ததை வெளிக்காட்ட பலரின் தயக்கம் அல்லது பல சூழ்நிலைகள் அவ்வளவுதான்.

பல்வேறு நிலைகளால் மழுங்கிப்போன மாண்பு மிகு நினைவுகளை நீ எடுத்துவுட அதை புதுப்பித்து நினைவுக்கடலில் குளிக்க அரிய வாய்ப்பு நெய்னா!

இது என்னால் முடியாது நெய்னா! உன்னால் மட்டுமே முடியும்!

Noor Mohamed said...

//பழைய நினைவுகளை அசைபோட இன்று நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமும் இல்லை; நேரமும் இல்லை//

தம்பி நெய்னா, எனக்கு இதில் அதிகம் விருப்பம் உண்டு. ஒய்வு கிடைக்கும் நேரத்தில் அசைபோடுவேன். எண்ணற்ற என் பழைய நினைவுகளை இன்றும் இடம்சுட்டி பொருள் விளக்குவேன்.

ஊரில் சில நேரங்களில் ஆசிரியர் ஹாஜி ஹாஜா முஹைதீன் சார் அவர்களை சந்திக்கும் போது, அவர்கள் கணிதம் புகட்டிய பாட முறைகள், மேலும் கதை, வசனம், டைரக்ஷன் செய்து அரங்கேற்றிய பல நாடகங்கள் இவைகளையெல்லாம் அவர்கள் வியப்படையும் வண்ணம் நினைவு படுத்தியுள்ளேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//எண்ணற்ற என் பழைய நினைவுகளை இன்றும் இடம்சுட்டி பொருள் விளக்குவேன்.//
நாவலர் நூர்முஹம்மத் அவர்களின் இக்கருத்துரை நிதர்சனமான ஒன்று. இவ்விடுப்பில் ஊரில் என் உறவினர் வீட்டுத் திருர்மண வரவேற்புத் தருணத்தில்
அலியார் சார், ஹாஜாமுகைதீன் சார், வாவன்னா சார் மற்றும் இரமதாஸ் சார் ஆகியோர்களிடம் பள்ளிப் பருவ காலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்; அக்கால ஆசிரியர்-மாணவர் நல்லுறவு, அதனால் எங்கட்கு இன்று கிடைத்து உள்ள பதவி, அங்கீகாரம், புகழ் அனைத்துக்கும் ஆசிரியர்களான அவர்களின் “தியாக” உணர்வுடன் கூடிய பாடம் நடத்தும் திறனால் நாங்கள் வளர்த்துக் கொண்ட திறமையும் ஆசிரியர்கள் போதித்த நல்லொழுக்கம், இறைநம்பிக்கை காரணமாக அல்லாஹ்வின் அருளும் கிடைத்தது தான் அடிப்படை என்று நான் சொன்னதும் அவர்களின் கண்களில் நன்றியுடன் கலந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்டேன்.

Noor Mohamed said...

நினைவில் நிற்பவை:

நம் காதிர் முகிதீன் உயர்நிலைப் பள்ளியில் 1969 - 1970 ஆண்டுகளில் நவம்பர் டிசம்பர் மாதங்களில், அதாவது நோன்பு மாதம் முழுதும் விடுமுறை விடப்பட்டு, படித்தவர்கள் பலன் பெற்றனர். நம் கல்வித் தந்தை மர்ஹூம் ஹாஜி SMS அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குனரிடம் சிறப்பு அனுமதி பெற்று, இந்த சிறப்பு விடுமுறையை எங்களுக்கு பெற்றுத் தந்தார்கள். பிற்காலத்தில் இதுபோன்ற தொடர் விடுமுறைக்கு முயற்சித்தும் அரசு அனுமதி கிடைக்கவில்லை.

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மலரும் நினைவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரமலான் காலங்களில் அன்றும் முதல் பிறை பார்த்ததும் மக்கள் கூட்டம் முதல் நாள் பள்ளிவாயில்கள் நிரம்பி வழியும். படிப்படியாக அடுத்தடுத்த நாட்களில் குறைந்து கொண்டே வந்து பிறை பதினேழு அன்று மீண்டும் அதிகரிக்கும் பின் 27 அன்று த்மாம் விடும் பள்ளிகள் நிறைந்து விடும்.

எனக்கு பழைய தக்வா பள்ளியில் சிட்டியில் நோன்பு கஞ்சி குடித்தது நினைவுக்கு வருகிறது. தராவீஹ் தொழுகை மர்ஹும் அசனா தம்பி மரைக்காயர் அவர்கள், மீராலெப்பை மரைக்காயர், மஹ்மூது காக்கா போன்ற ஹாபிழ்கள் நடத்துவார்கள். அவர்கள் பின்னே தொழுததும் மறக்கமுடியாதவைகளாகும்.

crown said...

சம்மந்தி வீடுகளை மகிழ்விக்கவும் வாடா, சம்சா, முட்டை ரொட்டி, கடல்பாசி போன்றவற்றுடன் சில சிறப்புச்சாமான்கள் சேர்க்கப்பட்ட (ஆட்டுக்கறி, ஆட்டுத்தலை, நெஞ்செலும்பு) சுவை கூடிய நோன்பு கஞ்சி வீட்டில் சிரத்தை எடுத்து செலவுகள் பார்க்காது பெண்கள் காய்ச்சி அதை முறையே பங்கிட்டு ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்தனர்
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். மேற்குரிப்பிட்டுள்ள கருத்துப்படி இப்பொழுது சீர் விசயம் இல்லாதது என்னைப்பொறுத்தவரை சீர்செய்யபட்டுள்ளது என கொள்வேன்.இது இக்காலத்தில் முன்புபோல் இல்லாதது நல்ல மாற்றமே! மற்றபடி மண்ணின் மைந்தன் நைனா குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் நாம் இழந்து தவிப்பது உண்மையிலும் உண்மை.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ நெயனாவின் கட்டுரையும்,எல்லா கமேன்ட்டுக்களும் அக் மார்க் முத்திரை.

அசை போட வைக்கின்றன

Yasir said...

சகோ.நெய்னாவின் நினைவுட்டல்கள் என்னை நோன்புக்கஞ்சி வாங்கும் இடத்திற்க்கு அழைத்து சென்று வேப்பமர அடியில் கஞ்சி வாங்குவதற்க்கு முன் நாங்கல் ஈடுபடும் விளையாட்டுக்களை மீண்டும் அசைபோட வைத்துவிட்டன

Shameed said...

Yasir சொன்னது…

//சகோ.நெய்னாவின் நினைவுட்டல்கள் என்னை நோன்புக்கஞ்சி வாங்கும் இடத்திற்க்கு அழைத்து சென்று வேப்பமர அடியில் கஞ்சி வாங்குவதற்க்கு முன் நாங்கல் ஈடுபடும் விளையாட்டுக்களை மீண்டும் அசைபோட வைத்துவிட்டன //

அசை போட்டப்போ நான் அங்கே காஞ்சி ஊத்த சில்வர் தம்ளரோடநின்றேனே பார்த்தியலா !

Yasir said...

//சில்வர் தம்ளரோடநின்றேனே பார்த்தியலா !// மறக்கமுடியுமா ? கச்சலவேர தூக்கி கட்டிகொண்டு மல்யுத்த வீரனாக நிப்பியல

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சாகுலாக்கா "தெரிஞ்ச ஊட்டு புள்ளெயா இருந்தா கஞ்சியெ கொஞ்சம் நெறையா ஊத்துறது....தெரியாத ஊட்டு புள்ளையா இருந்தா அதட்டுறது....என்னா இது?"

பயலுவோ போடுற அட்டகாசமும் தாங்க முடியாது நோன்பு நேரத்துலெ......

Ebrahim Ansari said...

அன்பு தம்பி நெய்னா அவர்களே!

அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

ஏக்கப்பெருமூச்சை தூண்டிவிட்டது.

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//சாகுலாக்கா "தெரிஞ்ச ஊட்டு புள்ளெயா இருந்தா கஞ்சியெ கொஞ்சம் நெறையா ஊத்துறது....தெரியாத ஊட்டு புள்ளையா இருந்தா அதட்டுறது....என்னா இது?"

பயலுவோ போடுற அட்டகாசமும் தாங்க முடியாது நோன்பு நேரத்துலெ//


அப்படியெல்லாம் கூட கொரச்சி நோம்புலே பண்ண கூடாது வாப்பமார எல்லாருக்கும் ஒரு கப்புதான் காஞ்சி ஊத்துறது ஆனா எடைலே வந்து பூந்து யாரும் டிப்பான் பாக்ஸ் வஞ்சா அந்த டிப்பான் பாக்ஸ் பறந்து போய் புளியமரத்துல தொங்கும் அந்த அளவுக்கு கட்டுப்பாடா இருக்கும் காஞ்சி ஊத்தும் இடம்

Shameed said...

இரு இடத்தில் எழுத்துப்பிழை

காஞ்சி என்பதை கஞ்சி என்று திருத்தி வாசிக்கவும் (அப்போதான் ஒரு கப் கஞ்சி கூடுதலா ஊத்துவோம் )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கஞ்சி குடிச்சு முடிச்சப் பொறவு சொல்லிறீயலே....

crown said...

Shameed சொன்னது…

இரு இடத்தில் எழுத்துப்பிழை

காஞ்சி என்பதை கஞ்சி என்று திருத்தி வாசிக்கவும் (அப்போதான் ஒரு கப் கஞ்சி கூடுதலா ஊத்துவோம் )
--------------------------------------------------------
நோம்புல குடல் காஞ்சி(காய்ந்து)போயிருக்கும் என்பதை நினைத்ததால் வந்ததா? இல்லைனா அவாள பத்தி அன்சாரி இபுறாகிம் காக்கா எழுதற நினைப்புல(அதாங்க அந்த காஞ்சி பெரியவாள்????)வந்ததா? என்ன இருந்தாலும் அன்சாரி காக்கா காச்சுற கஞ்சி ரொம்ப சூடாத்தான் இருக்கு. நாமதான் சூட ஆறாம பாத்து செயல் படனும்.

KALAM SHAICK ABDUL KADER said...

//அன்றோ அழுக்கு சட்டைப்பைக்குள் ஐந்து ரூபாய் இருந்தாலே போதும். இன்றோ அழகிய வெள்ளைச்சட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தாலும் அந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பதில்லை. எதுக்குமே பத்தமாட்டிக்கிது...//
ஆம். அன்புச் சகோதரா நெய்நா! விடுப்பில் வந்து நான் கண்ட பேருண்மை!
காசு என்னமா பறக்குது!!! ஆனாலும், உடுப்பின் மீது ஒரு மரியாதை காண்கின்றேன்; எங்க உம்மா சொல்லுவாக “உண்ணாமல் போனாலும் உடுத்தாம போகாதே; நாகூர் நடையழகு; முத்துப்பேட்டை முகவழகு; அதிரை ஆடையழகு” விடலைப் பையன்கள் எல்லாம் நமதூரில் ‘அப்டேடட்” ஆடைகள் அயனிங்க் கலையாமல் உடுத்தும் அழகே அழகு!
முதுமை எட்டும் என்னைக் கூட இளமைக் கோல உடையில் கண்டதும் நிறையபேர் “கண் போட்டு விட்டாரகள்”(மாஷா அல்லாஹ் ஓதிக் கொண்டேன்)

ஆனால், “எப்ப வந்திங்க? எப்ப போறிங்க” என்ற வினாக்கட்கு மட்டும் விடையை எமிக்ரேசனில் சொல்வதற்கும் அதிரையர்கட்குச் சொல்வதற்கும் மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு