Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 041 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 03, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

நற்குணம் :

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்;. (அல்குர்ஆன்: 68:4)

அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள்.(அல்குர்ஆன்: 3:134)

''நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக இருந்தார்கள்" (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 621)

'நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையானதாக பட்டையோ, பட்டு ஆடையையோ, நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் வாடையை விட மிக நறுமணமான வாடையை அறவே நான் நுகர்ந்ததில்லை. நான் நபி(ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் ஊழியம் செய்துள்ளேன். ''சீ ''என எப்போதும் அவர்கள் என்னிடம் கூறியதில்லை. நான் செய்த எதையும் ஏன் இப்படிச் செய்தாய்? என அவர்கள் கேட்டதும் இல்லை. நான் செய்யாத ஒன்றிற்காக ''ஏன் இப்படி செய்யவில்லை?'' என்று கேட்டதுமில்லை. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 622)

'நன்மை பற்றியும், தீமை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ''நல்லது என்பது, நற்குணம்தான். தீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப் பார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 624)

'மறுமை நாளில் ஒரு மூஃமினின் தராசில் அதிக கனம் ஏற்படுத்துவது நற்குணம் தான். நிச்சயமாக அல்லாஹ், கெட்டப் பேச்சுக்களை பேசுபவனை, தீய செயல்கள் செய்பவனை (க் கண்டு) கோபப்படுகிறான் என்று  நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுதர்தா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 626)

'சொர்க்கத்தில் மக்களை நுழையச் செய்வதில் மிக அதிகமானவை எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இறையச்சமும், நற்குணமும்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நரகத்தில் மக்களை அதிக அளவில் நுழையச் செய்வது எது? என்று கேட்கப்பட்டது. ''நாவும், மறைவுறுப்பும் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ)       (ரியாளுஸ்ஸாலிஹீன்: 627)

''மூஃமின்களில் இறைநம்பிக்கையில் முழுமையானவர், அவர்களில் குணத்தால் மிக அழகியவராவார். தங்களின் மனைவியரிடம் சிறந்தவர் தான் உங்களில் சிறந்தவர் ஆவார்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ)       (ரியாளுஸ்ஸாலிஹீன்: 628)
                                        
'நிச்சயமாக ஒரு மூஃமின், தன் அழகிய குணத்தின் காரணமாக, நின்று வணங்கி நோன்பு நோற்கக் கூடியவரின் தகுதியை அடைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (அபூதாவூது)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 629)

பொறுமையாக இருத்தல், அவசரப்படாதிருத்தல், மென்மையுடன் இருத்தல்:

அல்லாஹ் கூறுகிறான்:

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 3:134)

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக! (அல்குர்ஆன்: 7:199)

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (அல்குர்ஆன்: 41: 34)

பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு  இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர(மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41:35)

யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.(அல்குர்ஆன்: 42:43)

'நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் ஆவான். ஒவ்வொரு காரியங்களிலும் அவன் மென்மையையே விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 633)

'மென்மை, இடம்பெறுகின்ற எந்தக் காரியமும், அது அழகாக்கி விடுகிறது. மேலும் அது இடம் பெறாத எதுவும், சேதப்படுத்தி விடுகிறது'' என்று  நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 635)

'நீங்கள் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடக்காதீர்கள். (மக்களை) வாழ்த்துங்கள். (அவர்களை) வெறுக்காதீர்கள்.'' என்று  நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 637)

'மென்மையாக நடந்து கொள்ளத் தவறியவர், அனைத்து நன்மைகளையும் தவறவிட்டவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 638)

''ஒரு மனிதர், நபி(ஸல்) அவர்களிடம் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ''நீர் கோபப்படாதீர்!''என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 639)
                                        
'நிச்சயமாக அல்லாஹ் அனைத்திலும் நல்லது செய்வதை கடமையாக்கி உள்ளான். நீங்கள் (தீங்கு தருபவற்றை) கொன்றால், கொல்வதைக் கூட அழகாக்குங்கள். நீங்கள் (ஒரு பிராணியை) அறுத்தால், அறுப்பதை அழகாக்குங்கள். உங்களில் ஒருவர் தன் கத்தியைத் தீட்டட்டும்! தான் (அறுக்கும்) பிராணிக்கு (விரைவாக அறுப்பதன் மூலம்) நிம்மதி தரட்டும்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூயஹ்லா என்ற ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 640)

'நபி(ஸல்) அவர்கள் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் கொடுக்கப்படும் போது, பாவமானதாக இல்லாதவரை அவ்விரண்டில் மிக இலகுவானதையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமானதாக இருந்தால், அதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தூரமாக ஒதுங்கி விடுவார்கள். நபி(ஸல்)அவர்கள் எந்த விஷயத்திலும் தனக்காக எப்போதும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் சேதப்படும் போது, அல்லாஹ்வுக்காக அவர்கள் பழிவாங்காமல் இருந்ததில்லை.
(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 641)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸக்கல்லாஹ் ஹைர் காக்கா !

Unknown said...

மீண்டும் எங்கள் நோய் தீர்க்கும் அருமருந்தை அள்ளித்தெளிக்க A. N. வலை தளத்திற்கு திருக்குர்ஆன் என்னும் மருத்துவர் மீண்டும் விஜயம்.
மருந்தை பயன் படுத்துவோர் பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்று அலாவுதீன்
அவர்களின் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

அல்ஹம்து லில்லாஹ்.

என்ன அற்புதமான வாழ்க்கை , நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை.
ஒருமுறை நபி (ஸல்) தன்னைப்பற்றி சொல்லும்போது "நான் நற்குணத்தின் மீது அனுப்பப்பட்டுள்ளேன் " என்று சொன்னார்கள்.

பெருமானாரின் குணம் எப்படி இருந்தது என்று ஆயிஷா நாயகியிடம் வினவப்பட்டபோது, " பெருமானாரின் குணமே குரான் ஆகத்தான் இருந்தது"
என்று வினவினார்கள். நடமாடும் குரானாகவே வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.

மக்கமா நகரின் அந்த இருண்ட காலத்தில் அந்த வேளையி

இருளைக்கிழித்து அஹமது , பிறந்தார்கள்
அண்ணல் முஹம்மது (ஸல்) பிறந்தார்கள்
இரவில் ஹீராக்குஹையில் தனியே தவமே புரிந்தார்கள்

சந்திரன் தன்னை வென்றது போன்ற ஒளியைக்கண்டார்கள்
அதில் உருவம் கண்டார்கள் . தன் சிந்தையில் ஒரு வித
திடுக்கம் கண்டு கூர்ந்து நின்றார்கள்.

வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) வந்து "ஓதுவீர் " என்று
மும்முறை சொன்னாரே
இறை வேதம் சொன்னாரே

ஞானக்கடலாம் எம்நபினாதர் எழுந்தே சென்றார்கள்
மனம் துணிந்தே சென்றார்கள். இந்த ஆலம் படைத்த
இறைவனுக்கினையே இல்லைஎன்றார்கள்
நான் அவன் தூதர் என்றார்கள்.

இதனை கேட்ட குறைஷியரெல்லாம் சொல்லால் அடித்தார்கள்
நபியை கல்லால் அடித்தார்கள் . உடல் உதிரம் சிந்த அண்ணல் அவர்கள்
மதினா சென்றார்கள் அங்கே உயர்வை கண்டார்கள்.

உதயமானது இஸ்லாம் என்னும் வெற்றியும் கண்டார்கள்
மக்கள் ஒன்றாய் திரண்டார்கள்
தம் உற்றார் மற்றோர் யாவரும் சூழ மக்கா சென்றார்கள்
புனித மக்கா சென்றார்கள்.

போலிக்கடவுள் பொம்மைகள் யாவும் தரையில் வீழ்ந்தனவே
யாவரும் தீன் கொடி ஏந்தினரே, மது பானைகள் மக்கா வீதிகளெங்கும்
ஆராய் ஓடியது உடைந்து ஆராய் ஓடியது.

ஜீலம் நிறைந்த இறைவன் ஒன்றே , மக்கள் ஓர் குலமே
என்ற செய்தியை தாங்கி இஸ்லாம் மர்ர்க்கம் உலகில் பேசியது
எங்கும் சாந்தம் வீசியது

அடிமைகள் யாவும் விடுதலை கீதம் அழகாய் பாடினாரே
சகோதர வணக்கம் கூறினாரே, கொடிய ஆண்டான் அடிமை
பேதங்கள் யாவும் மாண்டே மடிந்தனவே , பாலை மணலில் புதைந்தனவே.

உடமைகள் தம்மை ஒழுங்காய் செய்து உயிலும் செய்தனரே
மக்கள் உண்மை உணர்ந்தனரே . இந்த உலகின் கண் முன்
தாய்க்குலம் வாழ உரிமை கிடைத்ததுவே
உரிய பெருமை கிடைத்ததுவே

எல்லாம் வல்ல இறைவன் ஆணையை இனிதே முடித்தார்கள்
வாழ்வின் இருத்திப்பயண வேலையில் நபிகள் இதனை சொன்னார்கள்
" செல்வங்கள் இரண்டை விட்டுச்செல்கிறேன் தெளிவீர் "என்றார்கள் .
ஒன்று திருமறை, மற்றொன்று என் வழி " என்று திருவாய்
மலர்ந்தார்கள், இறைவனை நோக்கி பயணம் செய்தார்கள்.

உள்ளங்களெல்லாம் உடைந்தன , அங்கே கடலில் கலந்தனவே
கண்ணீர் கடலில் கலந்தனவே

சோக உருவாய் உற்றார் உறவினர்
அன்பாம் ஆயிஷா, பண்பாம் பாத்திமா, அறிவாம் அலியே!

அருமை பேரக்குழந்தைகள் ஹசன், ஹுசைன்.

( இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் )

sabeer.abushahruk said...

அலாவுதீன்,
அருமருந்து தருவதாய்ச் சொல்லிக்கொண்டு ரத்தமின்றி கத்தியின்றி ஓர் அருவை சிகிச்சையே செய்து கொண்டிருக்கிறாய்.

அஸருக்குப் பிறகான தஹல்லிம்களைப் போல, வெள்ளிக்கிழமைகளில் உன் அருமருந்துப் பதிவுகள் வாசிக்கப் பழக்கிவிட்டாய்

ஜஸாக்கல்லா க்ஹைர்.

Adirai pasanga😎 said...

நற்குணங்களின் அவசியம் பற்றிய தொகுப்பு அருமை. அல்லாஹ் நமது நற்குணங்களின் தாயகம் நபியகள் நாயகம் அவர்களின் மூலம் இந்த வையகம் சிறக்க அருள் புரிந்தான். அவர்களின் அடிச்சுவட்டைப்பின்பற்றிய சத்திய சஹாபக்கள் அத்தகைய நற்குணங்களைபெற்றிருந்ததால் இஸ்லாம் உலகெங்கும் பரவக் காரணமானது. இஸ்லாத்தின் மீது மாற்றார் சேற்றை வாரித்தூற்றுவதற்க்கு நம்மில் இறைதூதர் அவர்கள் காட்டித்தந்த வழிமுறை வெகுவாகக் குறைந்ததும் ஓர் காரணமாகும்.

நற்குணம் இஸ்லாமிய ஒளியில் இருந்தால் அகிலத்தில் சாந்தி சமாதானம் எனும் நறுமணம் வீச அது ஒரு மிகச் சிறந்த மீடியாவாகும்.

ஜஜாகல்லாஹு கைர்.

Ebrahim Ansari said...

சிந்திக்கும் உறுப்பு செயலற்றுப் போகாமல் தடுக்கும் இந்த அருமருந்து. அற்புத சிகிச்சை தரும் அருள் தூதரின் மொழிகள். ஜசக் அல்லாஹ்.

Unknown said...

எவன் ஒருவன் இரண்டு தாடைகளுக்கு இடையில் ( நாக்கு ) இருப்பதற்கும்
இரண்டு தொடைகளுக்கு இடையில் (மர்ம உறுப்பு ) இருப்பதற்கும் பாவத்திலிருந்து பாதுகாக்க பொருப்பேற்றுக்கொல்கின்றானோ, சுவனத்திற்கு அவனுக்கு நான் பொருப்பேற்றுக்கொல்கின்றேன் " என்று பெருமானார் (ஸல்)
அவர்கள் பகர்ந்தார்கள்.

கெட்ட சொற்களை பேசுவதிலிருந்தும், விபச்சாரம் புரிவதிலிருந்தும் ஒவ்வரும் முஸ்லிமும் தன்னை காத்துக்கொள்ளவேனும் .

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

Shameed said...

ஜஸக்கல்லாஹ் ஹைர் காக்கா !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு