மெளலித் !?

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். எவர் ஒருவர் தன் பிள்ளை, பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது. 

தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி ஸல் அவர்களை உண்மையில் நேசிக்காதவரை நாம் உண்மையான முஃமீனாக முடியாது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. சரி தலைப்புக்கு வருவதற்கு முன்பு ஓரிரு வரிகளை இங்கு பதிவு செய்கிறேன். இந்த பதிவின் நோக்கம் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நாம் இருக்கும் கொள்கை சரியா? தவறா? என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.

மெளலித், மீலாத் நபி என்ற வார்த்தை கடந்த சில நூற்றாண்டுகளாக முஸ்லீம்களிடம் மிகவும் பிரபல்யமான வார்த்தை. 

ஆனால்,

மெளலித் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? 

மெளலித் பாடல்களின் தோற்றம் வடிவம் பற்றிய வரலாறு என்ன? 

மெளலித் கீதங்கள் நபி ஸல் அவர்களை உண்மையில் நேசிப்பதற்காக உருவாக்கப்பட்டதா? 

மெளலித் புகழ்பாடலில் உள்ள அர்த்தங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனவா? 

அல்லாஹ்வின் தூதர் கற்றுத்தந்த்தா இந்த மெளலித் பாடல்கள்? 

நபி ஸல் அவர்களை அச்சுப்பிசகாமல் பின் பற்றிய சத்திய சஹாப்பாக்கள் இந்த மெளலித் பாடல், மீலாத் விழாக்களை உண்டாக்கினார்களா? 

என்ற இது போன்ற கேள்விகளைக் கேட்காமலே நம் சமூகத்து மக்கள் அறியாமையில் மூழ்கி நபி ஸல் அவர்கள் காட்டித்தராத ஒரு புதிய கொள்கையின் அடிப்படையில் நபி ஸல் அவர்களை மிதமிஞ்சிய புகழ்ச்சியின் உச்சத்தினால் மெளலித் பாடல்களை உருவாக்கி வருடந்தோரும் ரபியுல் அவ்வல் மாதம் பாடி வருகிறார்கள். இது சரியா? தவறா? 

மெளலித் அர்த்தம் என்ன?

மெளலித் என்றால் பிறப்பை குறிக்கும் நாள், வலத் (ஆண் குழந்தை) என்ற அரபி வார்த்தையின் மூலம் வந்த சொல் மெளலித். மேலும் மீலாத் (பிறப்பு) என்ற ஃபார்ஸி வார்த்தையின் மூலம் வந்த சொல்லாகவும் மெளலித் வரலாற்றில் அறியப்படுகிறது. மேலும் மிலாத் என்ற ஃபார்ஸி பெயர்சொல் ஈரானி பழங்கால புராணக் கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயர், அதாவது சூரியனின் மகனாக வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரே மீலாத் என்றும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இதுவே மெளலித் என்ற சொல்லின் பின்னணி. ஆனால் நம் மக்கள் மெளலித் என்ற வார்த்தையின் உண்மை அர்த்தம் தெரியாமல், அதற்கு தெய்வீக அர்த்தம் கொடுத்து நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துகிறோம் என்று அறிந்தோ அறியாமலோ சொல்லி, ஏகப்பட்ட இணைவைப்புச் சொற்கள், அண்ணல் நபி ஸல் அவர்களைப் பற்றி எண்ணிலடங்கா பொய் கப்ஸாக்களை வைத்து வருடந்தோரும் பாடிவருகிறார்கள்.. நவுதுபில்லாஹ்.

மெளலித் பாடல்களை முதலில் அரங்கேற்றியவர்கள் மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த பாதினிய்யா கூட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமியின்கள் என்பவர்கள்தான். இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார்கள்.

ஃபாத்திமியீன்கள் யார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். இவர்கள் பாதினிய்யா (பல தவறான கொள்கைகளை உள்ளடக்கியவர்கள் என்பது இவ்வார்த்தையின் பொருளாகும்) என்னும் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ள யூத பரம்பரையைச் சேர்ந்த அப்துல்லா இப்னு மைமூன் அல் கத்தாஹ் என்பவனின் வம்சாவழியாவார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். இஸ்லாமியப் போர்வையிலே இஸ்லாத்தை அழிக்க முற்பட்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாமியப் பெயரில் இஸ்லாத்தினுள் நுழைத்தவர்கள். அலி(ரலி) அவர்களை இறைவனென்றும் அல்லது நபித்துவத்திற்கு தகுதியுள்ளவரென்றும் வாதிடக்கூடியவர்கள். நபித்தோழர்களை (அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), முஆவியா (ரலி) போன்ற நல்லோர்களை ) ஏசுபவர்கள். மறுமையை மறுப்பவர்கள், காபிர்கள், நெருப்பு வணங்கிகள். தவறான வம்சாவழியில் உள்ளவர்கள் என்ற பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது இஸ்லாமிய அறிஞர்கள் பலர் கூறுகின்றார்கள். இவர்களைப் பற்றி சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருமாறு.

இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மனிதர்களில் மிகக் கெட்டவர்களும் மிகவும் அல்லாஹ்வை நிராகரிப்பவருமாவார்கள். யாராவது இவர்கள் ஈமான் உள்ளவர்கள் என்றோ அல்லது இறையச்சம் உள்ளவர்கள் என்றோ அல்லது நல்ல வம்சாவழியில் உள்ளவர்கள் என்றோ கூறினால் அவர்கள் பற்றிய அறிவில்லாமல் அவர்களுக்கு சான்று கூறுவதேயாகும். அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)

அல் காழி அபூபக்ரில் பாகில்லானி(ரஹ்) அவர்கள் ‘இரகசியத்தை வெளிப்படுத்தி முகத்திரையை கிழிப்பது’ என்ற தனது பிரபல்லியமான புத்தகத்தில் கூறுகின்றார்கள்:

நெருப்பு வணங்கிகளின் வம்சா வழிகள், இவர்களின் கொள்கை யூத கிறிஸ்தவர்களின் கொள்கையைவிட மிக மோசமானது. அலி(ரலி) அவர்களை கடவுளென்றும் அல்லது அவர்கள் தான் நபியென்றும் வாதிடுபவர்களைவிட மிகவும் கெட்டவர்கள்.

அல் காழி அபூ யஃலா(ரஹ்) அவர்கள் தனது ‘அல் முஃதமது’ என்னும் புத்தகத்தில குறிப்பிடுகின்றார்கள்.

‘மறுமையை மறுப்பவர்கள், இறைநிராகரிப்பாளர்கள்’

இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்களும் இவர்கள் முனாஃபிக்குகள், மறுமையை மறுப்பவர்கள் இஸ்லாத்தை வெளியில் காட்டிகொண்டு உள்ளே குஃப்ரை மறைத்து வைப்பவர்கள், இவர்கள் யூத மற்றும் நெருப்பு வணங்கிகளின் வம்சாவழியினர் என்ற ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

இவர்கள், ஹிஜ்ரி 362 ரமளான் மாதம் பிறை 5ல் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள் மீது பிறந்தநாள் (மீலாது) கொண்டாடுவதை முதலில் ஆரம்பித்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது மாத்திரம் இவர்கள் மீலாது விழாவை ஆரம்பிக்கவில்லை அவர்களின் குடும்பத்தாரான ஃபாத்திமா(ரலி), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) இன்னும் ரஜப் முதல் இரவு மற்றும் அம்மாதத்தின் நடு இரவைக் கொண்டாடுவது, அவ்வாறு ஷஃபான் முதல் மற்றும் நடுஇரவு இன்னும் இது போன்ற பல கொண்டாட்டங்களை இவ்வுலகிற்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார்கள் மீதும் மீலாது விழா நடத்தியது இஸ்லாத்தையோ நபி(ஸல்) அவர்களையோ நேசித்ததற்கல்ல! இஸ்லாமியப் போர்வையில் இஸ்லாத்தை அழிப்பதற்காகவும் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் உண்மையான அகீதாவை (கொள்கையை) விட்டும் தூரமாக்குவதற்குத்தான்.

மீலாது விழாக்களுக்காக பல இலட்சக்கணக்கான தொகையை உணவுக்காகவும் இனிப்பு பண்டங்களுக்காகவும் அன்பளிப்புகளுக்காகவும் அரசு பணத்தில் செலவு செய்து அன்றைய தினத்தை அரசு விடுமுறையாகவும் பிரகடனம் செய்தார்கள். இவ்வாறு செய்ததினால் அதிக மக்களின் உள்ளங்களிலே அவர்கள் பற்றிய நல்லெண்ணங்களைப் பெற்றுக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய ஆட்சியும் நீண்டது. அவர்களின் கொள்கையும் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவியது. இதற்காகவே இந்த மீலாது நாடகத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள்.

அவர்கள் எகிப்தின் ஆட்சியைக் கைபற்றிய போது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நெருப்பு வணங்கிகளுக்கு அவர்களின் அரச சபைகளிலும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் இடமளித்தார்கள். மந்திரிகளாகவும் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரான முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தினார்கள். மேலும் அவர்களைத் தங்களின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அரசாங்க வேலை வாய்ப்பு பெறுவதற்கு அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொள்வதை நிபந்தனையாக்கினார்கள். இதனால் பல யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஷீஆ (ஷியா) கொள்கையைத் தங்களின் கொள்கையாக (மத்ஹபாக) ஏற்றுக் கொண்டார்கள். அரசாங்க தொழிலிலுள்ள அனைவரும் அவர்களின் கொள்கையை எஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். நீதிமன்றத்திலுள்ள நீதியரசர்களையும் அவர்களின் கொள்கைப்படியே தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தார்கள்.

ஹிஜ்ரி 372ல் எகிப்தை ஆட்சி செய்த பாத்திமிய்யீன்களின் மன்னரான அபுல் மன்சூர் நஸார் இப்னுல் முஇஸ் இப்னுல் காயிம் இப்னுல் மஹ்தி அல் உமைதி என்பவர் ரமளான் மாதத்தில் தொழப்படும் தராவிஹ் தொழுகையைத் தடைசெய்தார். ஹிஜ்ரி 393ல் லுஹா தொழுத 13 பேரை மூன்று நாட்கள் சிறையிலடைத்து தண்டனையும் வழங்கினார். ஹிஜ்ரி 381ல் முஅத்தா இமாம் மாலிக் என்னும் ஹதீஸ் கிரந்தம் ஒருவரிடத்தில் இருந்த காரணத்தினால் அவரை ஊரைச்சுற்றவைத்து அவமானப்படுத்தி அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஹிஜ்ரி 395ல் எல்லாப் பள்ளிவாசல்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் பள்ளியின் கதவுகளிலும் இன்னும் மண்ணறைகளிலும் முன்னோர்களான நபித்தோழர்களையும் நல்லடியார்களையும் அவமதிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டுமிருந்தது. அவர்களின் கடைசி மன்னரின் ஆட்சி காலம்வரை நபித்தோழர்களை அவர்களின் மிம்பர்களிலும் மேடைகளிலும் ஏசுவது அவர்களின் சின்னமாக காணப்பட்டது.

இத்தோடு அவர்களின் ஆணவத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் மன்னர்களில் ஒருவரான மன்சூர் இப்னு நஸார் என்னும் அல் ஹாகிம் என புனைப் பெயர் சூட்டப்பட்டவர் தன்னை கடவுள் நிலைக்கே கொண்டு வந்துவிட்டார். மிம்பரில் குத்பா பிரசங்கம் செய்யும் இமாம், இவருடைய பெயரை கூறிவிட்டால் இவரை கண்ணியப்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் எழுந்து நின்று விடுவார்களாம். இவரின் பெயர் கூறப்பட்டால் இவருக்காக சுஜுது செய்யும்படி மிஸ்ர் நாட்டு மக்களுக்கு அவர் கட்டளையும் இட்டிருந்தார், அவ்வாறே அம்மக்களும் செய்தார்கள். எந்தளவுக்கென்றால் ஜும்ஆத் தொழுகைகூட தொழாதவர்கள், இவரின் பெயர் கேட்டு அவர்கள் கடைவீதிகளில் இருந்தால் கூட சுஜுதில் விழுந்து விடுவார்களாம்.

அவர்களின் ஆட்சி காலத்தில் மிம்பரிலும் வேறு மேடைகளிலும் நபித்தோழர்களை ஏசினார்கள், சபித்தார்கள். குறிப்பாக மூன்று கலீபாக்களையும் (அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) உத்மான்(ரலி)) விமர்சித்தார்கள், இம்மூவரும் அலி(ரலி) அவர்களின் பகைவர்கள் எனக் கூறினார்கள்.

ஆறாம் நூற்றாண்டின் கடைசி அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இர்பில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் முளஃப்பர் அபூ ஸயீத் கோக்பூரி என்பவர் இவர்களுக்குப் பின் மக்கள் மத்தியில் இந்த மீலாது மேடையையும் மெளலிது ஷரீபையும்? மிக பிரபல்யப்படுத்தினார்.

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் ‘அல்பிதாயா வன்னிஹாயா’ என்னும் வரலாற்றுக் குறிப்பில் ‘அபூ ஸயீத் கோக்பூரியின்’ வரலாற்றைக்கூறும் போது..

ரபீவுல் அவ்வல் மாதத்தில் மெளலிது ஓதி மாபெரும் மீலாதுவிழாக் கொண்டாடுவார். இவர் ஏற்பாடு செய்யும் மெளலிது விருந்துபசாரத்தில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளும் பத்தாயிரம் கோழிகளும் ஒரு இலட்சம் தயிர்க்கோப்பைகளும் முப்பது ஆயிரம் ஹல்வாத் தட்டுக்களும் ஏற்பாடு செய்வார் என்று, இவர் ஏற்பாடு செய்த சில மெளலிது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் கூறினார்கள். இன்னும் ளுஹர் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரம் வரை ஸுஃபியாக்கள் பாட்டுப்பாடுவதற்காக ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் சேர்ந்து இவரும் நடனமாடுவார்.ஆதாரம்: அல்பிதாயா வன்னிஹாயா

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இதுதான் மெளலித் என்ற மீலாது விழாவின் லட்சணம்! இவர்கள்தான் மீலாது விழாவை உலகிற்கு இறக்குமதி செய்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறையா? நிச்சயமாக இல்லை. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதுதான் அவர்களைப் நேசிப்பதற்கு உண்மை அடையாளமாகும்.

வரையறை மீறிப்புகழ்தல்!

நபி(ஸல்) அவர்களை போற்றிப்புகழ்கிறோம் எனக்கூறி புராணங்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு எங்கோ சென்றுவிட்டார்கள் நமது முஸ்லிம்கள். நவுதுபில்லாஹ். இதோ நம் கவனத்திற்கு சில:-

1. நபி(ஸல்) ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். முதல் மனிதன் ஆதத்தை இறைவன் களிமண்ணால் படைத்தான் என்பதற்கு 32:7, 35:11 போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களை ஆராய்ந்தால் மனிதனின் துவக்கமே களிமண்தான் என தெளிவாகிறது. இவ்வாறிருக்க முதலில் அல்லாஹ் முஹம்மதின் ஒளியை படைத்தான். அதிலிருந்தே எல்லாப்படைப்புகளையும் படைத்தான் என்பது குர்ஆனுக்கு மாற்றமாகும். அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்பதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. முஸ்னது அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் குறிப்பிடப்பட்டதாக பரலேவி ஆலிம்கள் கூறுவது ஆதாரமற்ற பொய்யாகும்.

2. நபி(ஸல்) அவர்கள் இருட்டில் நடந்தால் ஒளி வீசும்

3. நபி(ஸல்) அவர்கள் பிறக்கும் போதே கத்னா செய்யப்பட்டே பிறந்தார்கள்.

4. நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது.

5. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கொட்டாவி விட்டதே இல்லை.

6. நபி(ஸல்) அவர்களின் உடம்பில் ஒரு ஈ கூட உட்கார்ந்தது இல்லை.

7. நபி(ஸல்) அவர்கள் நடந்தால் அவர்களின் பாதம் தரையில் பட்டதில்லை.

8. நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னால் கப்ரிலிருந்து பதில் வரும்.

9. நபி(ஸல்) அவர்களின் புகழ் பாடினால் அவர்கள் அங்கே ஆஜராவார்கள்.

10. நபி(ஸல்) அவர்களின் மலஜலம் சுத்தமானது. (அசுத்தம் – நஜீஸ் – அல்ல)

11. நபி(ஸல்) அவர்கள் பிறப்பு உறுப்பு வழியாக பிறக்கவில்லை.

12. நபி(ஸல்) அவர்களை கருவ்வுற்றபோது அவர்களின் தாயின் வயிறு பெருக்கவில்லை.

13. நபி(ஸல்) அவர்களின் தாய் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பெற்றார்கள்.

14. நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்தவாறே பிறந்தார்கள்.

15. நபி(ஸல்) அவர்களிடமே நம் தேவைகளை (துஆ) கேட்பது.

நவுதுபில்லாஹ்.

இவ்வாறு வரம்பு மீறிப்புகழ்வதற்கோ, அபரிமிதமான அந்தஸ்த்தை கொடுத்துப் போற்றுவதற்கோ குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமுமில்லை..

நாம் நபி(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிப்பது?

வல்லான் அல்லாஹ் வான்மறை மூலம் மிகத்தெளிவாகக் கூறுகிறான்:-

(நபியே! நீர் மக்களிடம்) கூறுவீராக! நீங்கள்(உங்களைப் படைத்த) அல்லாஹ்வை நேசிப்பதாக இருந்தால் என்னை (முழுமையாகப்) பின்பற்றுங்கள். (அப்போது தான்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். (3:31).

அவர்களை உயிரினும் மேலாக மதித்து, இதயபூர்வமாய் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வழுவாது பின்பற்றுவதில் தான் உண்மை முஸ்லிமாக, சரியான உம்மத்தாக நாம் ஆக முடியும் அவர்களை உண்மையாக நேசித்தவர்களாவோம். 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியின்படி வாழ்கிறோமா? அல்லது வேறு வழியில் நம் அன்றாட வாழ்வு கழிகிறதா? என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நபி ஸல் அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் மெளலித், மீலாத் என்று வருடத்திற்கு ஒரு முறை நபி ஸல் அவர்களை நினைவுப்படுத்துவதை காட்டிலும், ஒவ்வொரு நாளும் நபி ஸல் அவர்களின் கட்டளைப்படி வாழ்வை அமைத்துக்கொள்வதே அறிவார்ந்த முஸ்லீம்களின் நற்செயலாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஹிதாயத் – நேர் வழி – பெற்ற நன்மக்களாகவும், பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டிய பெரு நெறியில் இறுதி மூச்சுவரை தூய வாழ்வு வாழும் பெருமக்களாகவும் ஆக்கி அருள்வானாக.

தாஜுதீன்

நன்றி;-

11 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ஏன் கூடாது என்பதற்கு ஏகப்பட்ட விளக்கம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

நல்லதெளிவானகண்திறக்கும்.rகட்டுரை.அன்றுசுமார்75ஆண்டுகளுக்கு முன்புகடல்கரைதெருதர்காவில் லபைமார்கள் மௌலுது ஓதுவார்கள். அன்றுயாராவதுஒருசாதாரணகுடும்பம்நார்ஸாகொடுக்கும்.நார்ஸா வாழைப் பழம். நடுத்தர குடும்பம் தேங்காசோறு கறிகோப்பையில்அள்ளிஎங்கள்கைலியில்கொட்டுவார்கள். நாட்டாமை றுகொட்டும்பாணிஅவர்வீட்டுசொத்தைஏதோபசியாளிபக்கிர்சாக்கு.தர்மம் செய்வதுபோல்தோனும்.மௌலுது பாடல்கள் ஏதோ ஒருராஹத்தில் பாடப்படும். அது என்னராகம் என்று செம்மாங்குடி சீனிவாசஐயங்காருக்கோ அரியக்குடி ராமானுஜஐயங்காருக்கோ, குன்னக்குடி வைதியனாதனுக்கோ, லால்குடிஜெயராமனுக்கோதெரியவேதெரியாது. மௌலுது என்றால் சோறு அல்லது வாழைப்பபழம் என்பதே தெரியும் [தொடரும்]

sabeer.abushahruk சொன்னது…

இதைப் புரிந்துகொண்டு ஷிர்க்கிலிருந்து விலகுவதே அறிவுடைமை!

நான்கூட மவுலித் ஓதியிருக்கிறேன். எங்கள் கழிசற சீனியர்கள் மவுலிதை 'தம் ஹரே தம்' ராகத்திலேயெல்லாம் பாடியிருக்கிறார்கள்.

சுதியேறி குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு 'போடு' 'இந்தா' எல்லாம் செறுகி பாட சிறுசுங்க எங்களுக்கு ஸ்செம்ம ஜாலியா இருக்கும்.

ஷிர்க் என்று விளங்கியதும் விட்டுட்டோம்ல!

கூட் ஒர்க், தம்பி.

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
adiraimansoor சொன்னது…

மவ்லவி தேங்கை சர்புத்தீன் அவர்கள் தமிழாக்கம் செய்த மவ்லூதின் வரிகள் குரானுடன் எப்படி மோதுகிறது என்பதை பாருங்கள்


1 மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே! சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்:
(நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 39:53)
"எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!" (அல்குர்ஆன் 3:193)

2 மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்! புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்:
கூறும்: “அல்லாஹ்வின் பிடியிலிருந்து எவராலும் என்னைக் காப்பாற்ற முடியாது. மேலும், அவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் பெற முடியாது. (அல்குர்ஆன் 72 : 22)

மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

adiraimansoor சொன்னது…

4 மவ்லித் வரிகள்

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்:
கூறும்: "உங்களுக்கு ஏதேனும் தீமையோ, நன்மையோ செய்திடும் ஆற்றல் எனக்கில்லை." (அல்குர்ஆன் 72:21)

ஒருவனைக் குழப்பத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டானாகில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்ற உம்மால் முடியாது. இவர்களுடைய உள்ளங்களைத் தூய்மை செய்ய அல்லாஹ் நாடவில்லை. இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான்; மறுமையிலும் கடும் தண்டனைதான் இருக்கின்றது. (அல்குர்ஆன் 5:41)

5: மவ்லித் வரிகள்

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்:
திண்ணமாக "மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்" என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள். (நபியே!) அவர்களிடம் நீர் கூறும்: "மர்யத்தினுடைய மகன் மஸீஹையும் அவருடைய அன்னையையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்திட நாடினால் அவனைத் தடுத்திட யாருக்குத் துணிவு உண்டு? வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது." (அல்குர்ஆன் 5:17)

6 மவ்லித் வரிகள்

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்:
மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் இறைஞ்சுவார்கள்: "எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக! அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியதாக இருக்கின்றது." (அல்குர்ஆன் 25:63)

adiraimansoor சொன்னது…


7 மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்:
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)

மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: "அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள்! திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது." (அல்குர்ஆன் 7 : 128)

8 மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்:
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத் தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8 மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:
துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்! (அல்குர்ஆன் 27: 62)

9 மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:
நீர் கூறும்: "இத்துன்பங்களில் இருந்தும் மற்றும் எல்லாவிதமான இடர்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்தான். இதற்குப் பின்னரும் நீங்கள் அவனுக்கு இணை வைக்கின்றீர்களே!" (அல்குர்ஆன் 6:64)

இவர்கள்தாம் (இந்த நபியின் அழைப்பை) ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன! (அல்குர்ஆன் 13:28)

10 மவ்லித் வரிகள்

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்:
அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை. (அல்குர்ஆன் 17:56)

Iqbal M. Salih சொன்னது…

தம்பி தாஜுத்தீன் அவர்கள் பயனுள்ள வகையில் இந்த விழிப்புணர்வைத் தொகுத்து அளித்தமைக்காக அல்லாஹ் அவருக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கப் போதுமானவன்!

ஃபாரூக் காக்கா அவர்களின் கீழ்க்கண்ட பரிந்துரை சீரியசாகக் கவனிக்கப் படவேண்டியதாகும்!

//மரைக்காவலசுவருவாயே ஏழை இஸ்லாமியர்களின் கல்விவளர்ச்க்குதிருப்பினால்ஏழைகுடிசைகளில்குடிகொண்டஅறியாமை பேரிருள் அகன்றுஅறிவொளிச்சுடர்அதிரைஎங்கும்பரவும். //

நண்பன் மன்சூர் மறுபடியும் வருகையளிப்பது மகிழ்வளிக்கிறது! மீண்டும் ஒரு நல்ல 'கண்ணான' ஒரு தொடர் எழுதத் தூண்டுகின்றேன்!Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear Tajudeen

An in depth information on Maulid. May Allah reward for your efforts to make awareness about unnecessary rituals in the name of religion.

Islam is not a set rituals to be done blindly. But a continuous God consciousness, knowledge based day to day practice that results in harmony oneself with all others in this life and winning paradise hearafter.

May Allah show us the straight path.

B. Ahamed Ameen from Dubai.

sheikdawoodmohamedfarook சொன்னது…

அந்தக்காலத்தில்மௌலுதுஓதியதுதங்கள்செல்வசெழிப்பையும்கௌரவத்தைகாட்டவேஓதினார்கள்.பனைஓலைகுட்டானில்ஒவ்வொருவீட்டிற்கும் கொடுத்தசோறுபலஏழைகுடும்பங்களின்காலைபசியாறுதலின்பிரச்சனையேபோக்கியது.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்கள், வாசித்த அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா,