Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்!] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2015 | , , ,

ஒருமுறை நான் மலேசியா சென்றபோது முன்பு வேலை செய்த கடையில் மீண்டும் வேலைசெய்ய மனமில்லை. காரணம் ஜில்லா வாரியான [மாவட்ட அளவில்] தஞ்சாவூர் காரர்களுக்கு ராமநாதபுர காரர்களை பிடிக்காது. அதுபோலவே ராமநாதபுர காரர்களுக்கும். ஊர்வாரியான, ஜில்லாவாரியான வேற்றுமைகள் கொடி கட்டி பறக்கும். இருந்தாலும் தஞ்சை மாவட்டத்துk காரர்களிடம் வேலை செய்வது மிக கடினமே. அமரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை கருப்பர்கள் பட்ட துயரத்தை எல்லாம் இவர்கள் தரும் துயரம் தூசு ஆக்கிவிடும். இது பற்றி நிறையவே எழுதலாம். இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை அதை காண்போம்.

வேலை தேடி ஒரு வாரம் காத்திருந்தேன்.

ஒரு நாள் ஒரு புத்தக கடையில் மேனேஜராக இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் கூப்பிடவிட்டார். “தைபிங்கில் இருக்கும் எங்கள் கடையில் வேலை செய்யப்போகிறாயா? சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ்!” என்றார்.

‘சரி’ என்றேன்.

தமிழ் முஸ்லிம்கள் கடையில் போனஸ் என்பதற்கும் Working partner என்பதற்கும் அர்த்தமே வேறு. அதன் முழுபொருள் Stick and Carrot. ஒரு நீண்ட கம்பின் நுனியில் கேரட் கிழங்கை கைற்றில் கட்டி குதிரை அல்லது ஒட்டகத்து மீதுயேறி ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாய்பேச தெரியாத  பசி கொண்ட அந்த ஜீவன்களின் கண்களுக்கு முன்னே இந்த கம்பில் கட்டிய கேரட் கிழங்கை தொங்க விடுவார்கள். 


பசி கொண்டபோது புசிக்க கிடைக்காத அந்த அப்பாவி ஜீவன்களும் மனிதனின் ‘தந்திரம் அறியாமல்’ கரட் நமக்கு அருகில் தானே இருக்கிறது! திங்கலாம்! பசி தீரதிங்கலாம்’’! என்ற ஆசையோடு வேக வேகமாக எட்டு மேலே எட்டு வச்சு நடக்கும். நடக்க-நடக்க கம்பில் கட்டிய கேரட்டும் அந்தவாயில்லா ஜீவன்களின் வாய்க்கு எட்டாமல் நகர்ந்து நகர்ந்து போகும். அது போல்தான் மலேசியாவில் தொழில் நடத்திய தமிழ் முஸ்லிம் முதலாளிகள் தங்களிடம் பணிந்து பணிபுரிந்த loyal  (விசுவாசமான) வேலையாட்களுக்கு கொடுத்த போனஸ் அல்லது பங்கு. இந்த கானல் நீரை நம்பி கண்ணீரும் விட்டு கடையையும் விட்டு காணாமல் போனவர்கள் பலர். நான் இந்த மேனேஜர் சொன்ன போனஸை நம்பவில்லை. ஆனால் சும்மா இருந்து பொழுதை போக்க விரும்பாமல் ரயில் ஏறினேன்.

பகல் முழுதும் ரயில் பயணம். இரு பக்கங்களிலும் பசுமை கம்பளங்கள் போர்த்தது போல் புல்வெளிகள். அடர்ந்த மரங்கள் மலாய்காரர்களின் முற்றிலும் மரத்தினால் கட்டிய பாரம்பரிய வீடுகள். ரப்பர் தோட்டங்கள் மலையில் பிறந்து மண்ணில் நெளிந்து கடலில் கலக்கும் நதிகள் இவை எல்லாம் கண்ணுக்கு காட்சியாய் இருந்தது.மாலை மணி ஐந்துக்கு தைபிங் நிலையத்தில் வண்டி நின்றது. பெட்டி படுக்கையுடன் இறங்கினேன். அங்கு நின்ற டேக்ஸியில் ஏறி அட்ரஸை சொன்னேன். பத்து நிமிஷத்தில் டேக்ஸி கடை முன் நின்றது.

அடுத்த நாள் கடையில் நிர்வாகி நான் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். [பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகளில் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன வேலை  யென்று ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டாலும் இட ஒதுக்கீட்டை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடெல்லாம் சம்பளத்தை குறைத்து பேச தூண்டிலில் கோர்க்கும் பூச்சியே.. முதலாளிக்கு சொந்தக்கார மாமன் மச்சாங்கள் தப்பு செஞ்சால்கூட வேறு எவனாவது ஒருத்தன்தான் முதலாளிக்கு ஜவாப் சொல்ல வேண்டும். இது எழுதப்படாத சட்டம்.] Formalityக்காக மேனேஜர் சொன்னதை Formalityக்காக நானும் ஒப்புக் கொண்டதாக டும்டும் மேல தாளத்திற்கு தலையாட்டும் கோயில் மாடுபோல் தலையாட்டினேன். மாதங்கள் ஓடியது.

ஒரு நாள் முதலாளிக்கும் மேனேஜருக்கும் சண்டை வந்தது! மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா?’ என்று அவர் போர்க் கொடிதூக்கினார். கடையில் வேலை செய்த பையன்கள் எல்லாம் என் பின்னே நின்றார்கள். ஒரு மாதம் கழித்து அவரும் கடையே விட்டு எக்ஸிட்’ வாங்கினார். கடையில் எனக்கு வயதில் மூத்த ஒருவரும் இருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு யென்று எதையும் கண்டும் காணாமல் இருந்தார்.

TAIPING என்னும் இந்த சீன மொழி சொல்லுக்கு [PEACE] அமைதி என்று பொருளாம். பெயருக்கு ஏற்றாற் போல் ஊரே ஒரே அமைதி பூங்காவாகவே இருந்தது. மலேசியாவின் முதல் ரயில்பாதை 1885-ஜூன் மாதம் முதல் தேதி தைபிங்கிலிருந்து Port Weld. வரை போடப்பட்டது.

மலேசியாவில் பல பழங்கள் விளைந்த போதிலும் இந்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது துரியான் [DURIAN] பழமே! ’தூறி’ என்ற மலாய் சொல்லுக்கு ’முள்’ என்பது தமிழ். முக்கனிகளில் ஓன்றான பலா பழவகையை சார்ந்தது. ஆனால் பழமோ நம்ம ஊரு தேங்காய் அளவில் இருக்கும். இதை முன்பின் தின்று ருசி காணாதவர்கள் இதன் கிட்டே நெருங்கினால் குமட்டலும் வாந்தியும் வந்து காத தூரம் காலெடுத்து ஓடுவார்கள்.

இவர்களுக்கு தாம்பாளம் நிறைய பொன்னும் மணியும் குவித்துக் கொடுத்து “சாப்பிடுங்கள்! சாப்பிடுங்கள்!” என்று என்னமாத்தான் கெஞ்சினாலும் ஊஹும் “கல்லசை! என்னசை!” என்று அசைச்சு கொடுப்பார்கள். நெருங்கவே மாட்டார்கள். அதன் வாசம் அப்படி!. ஆனால், இதை மனதைக் கட்டுப்படுத்தி மூக்கை பொத்திக் கொண்டு  ஒருமுறை இருமுறை தின்று ருசி கண்டு விட்டார்களேயானால் அடுத்தமுறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சமாவதும் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.

ருசியும் வெட்கம் அறியாது. ஆனால் இனிப்பு நீர்காரர்களுக்கு இது நஞ்சு. ஆண்மை விருத்திக்கு கைகண்ட மருந்து. விடுதிகளில் தங்கி ஆண்மை விருத்திலேகியம் கொடுக்கும் டாக்டர்களை தேடி விடுதிப்படி ஏற வேண்டியதில்லை. இந்த பழசீசனிலிருந்து சரியாக பத்து மாசம் சென்றதும்  பிறசவ வார்டில் இடநெருக்கடியும் ‘குவா-குவா’ சத்தமும் அதிகமாகும். Duriyan jatoh sarong naik இது இந்தோனேசியா  பழமொழி. தமிழில் “துரியான் பழம் விழுந்தால் கைலி உயரும்”.

தைபிங் நகரில் துரியான் சீசன் ஆரம்பமானது. ரோடுகளின் இருபக்கமும் பழங்கள் குவிந்தன. ஒரு இரவு நாங்கள் எல்லாம் துரியன் பழம் வாங்க கிளம்பினோம். எங்கள்திட்டம் எல்லோருக்கும் மொத்தமாக வாங்குவது எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது. விலையில் எல்லோரும் சரிசமமாக ஈவிச்சு கொள்வது. எங்களில் அந்நாட்டில் பிறந்து ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்த ஏழை குடும்பத்து பையனும் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான் [குறிப்பு: குறைவான சம்பளத்துக்கு நிறைய வேலை செய்வோர்களை தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு ரெம்ப பிடிக்கும்] அவன் திண்ணும் பழத்திற்கு அவனிடம் காஸு வாங்குவதில்லை அவனுக்கு நல்ல  பழம் எது, பூச்சி பழம் எது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவன் நாட்டுபுற மலாய் மொழி Slang நன்றாக பேசுவதால் அதை இதை சொல்லி விலை குறைத்து வாங்கி விடுவான். மலாய்காரர்களுக்கு மலாய்மொழியை அவர்களைப் போல் பேசுபவர்களை பிடிக்கும். அது ஒன்றையே மூலதனமாக கொண்டு பல காரியங்களை சாதித்து விடலாம்.


நாங்கள் துரியான் பழ பஜார் நோக்கி துரிதமாக நடந்தோம். அங்கே மலை மலையாய் பழம் குவித்திருந்தது Mari-marilah Tuan! buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே! நல்ல பழம்! ருசியான பழம்! விலையோ மலிவுதான்]’’. ஒவ்வொரு குவியலாக பார்த்துக் கொண்டே போனோம். அந்த நாட்டுப்புற தெலுங்கு பையன் ஒருகுவியல் அருகில் போய் உட்கார்ந்து கவனமுடன் பார்த்து பார்த்து பலபழங்களை பொறுக்கி சேர்த்து விலைபேசினான். கொஞ்ச நேரம் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் நடந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் பேரம் முடிந்தது.

காசை கொடுத்த பையன் “சாயாசூடா பிள்ளி”, [நான் உன்னிடம் வாங்கி விட்டேன்].

பழம் விற்றவன் பதில் சொன்னான் “சாயாசூடா ஜூவால். செலாமத் மாக்கான் திரிமாகஸி” [நான் விற்று விட்டேன். நல்லபடியாக சாப்பிடுங்கள்.நன்றி.]

இது அந்த சின்னஞ் சிறிய நாட்டின் பண்பாடு. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியான நம்மைவிட எவ்வளவோ பின் தங்கியவர்களின் பண்பாடு இப்படி. நம்நாட்டின்நிலைஎப்படி?

நம் ஊர்  மெயின் ரோட்டில் ஒருபத்திரிகை கடைக்கு சென்று கைற்றில் தொங்கிய ‘ஆனந்தவிகடன்’னை எடுத்தேன் “ஆஆஆஆ… அதை எடுக்காதீர்கள்! என்னிடம் கேட்டால் நானே தருவேனே!” என்று அதட்டலாக சொன்னார்.

“சரி! கொடுங்கள்” என்றேன். உள்ளே இருந்த ஒரு பிரதியை எடுத்து அங்கிருந்தே தூக்கி மேஜைமீது வீசினார். அது வெளியே வந்து மண்ணில் விழுந்தது. கல்லாவில் இருந்த முதலாளி இந்த மரியாதை கெட்ட செயல் கண்டு கொஞ்சங்கூட கவலையில்லாமல் யாரோ ஒருவருடன் சுவாரசியமாக,தன்னை மறந்து கருணாநிதி-versus ஜெயலலிதா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.

விகடனுக்கு. விலைRs15 போட்டிருந்தது. இருபது ரூபாய்கொடுத்து “பாக்கிகாஸு தாங்க!” என்றேன்.

நோட்டை வாங்கியவர் அதை மேஜை மேல் வைத்து காற்றில் நோட்டு பறந்து விடாமல்இருக்க கையை நோட்டின் மேல் வைத்துக் கொண்டார். இப்பொழுது அவர் கையே நோட்டுக்கு பேப்பர் வெய்ட்.

“பாக்கி கொடுங்கள் போகனும்! பாக்கி கொடுங்கள் போகனும்!” என்று நான் ’பலமுறை’ கத்தியும்கூட கடைகாரர்காதில்.அது ஏறவேஇல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அங்கே சேர்ந்து வந்து இந்த இருவர் வாதங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பா..ஆஆஆக்கி கொடுங்கள்” என்று ஏழுருக்கு அப்பாலும் கேக்கும்படி சத்தம் போட்ட பின்பே கடை முதலாளி கருணாநிதி ஜெயலலிதாவை விட்டு விட்டு தன் சுயநினைவுக்கு வந்தார்.

“இன்னும் பாக்கி வாங்கலையா?” என்று அவர் என்னையே கேட்டுக் கொண்டு அஞ்சு ரூவா நோட்டைஎடுத்து வீசினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்லாந்திலிருந்து வெளிவந்த Psychologist என்ற மாத இதழில்  Herbert Cason என்பவர் எழுதினார் ’ஒரு வாடிக்கையாளர் உன் கடையிலிருந்து திருப்தியுடன் வெளியானால் அதுவே நூறு வாடிக்கையாளர்களை உன் கடைக்குள் கொண்டுவரும்’’ என்றார். இங்கே பாக்கிகாசைத் தூக்கி வீசுகிறார்கள். கொடுத்த காஸுக்கு பாக்கி கேட்டு பிச்சைகாரன் போல் ஒத்தைக் காலில் நிற்கவேண்டிய திருக்கிறது. [‘’இவர்கள் என்ன Psychologist-டா படித்தார்கள்? ஹெர்பர்ட்காசன் சொன்னது போல்செய்ய’’ என்று நீங்கள் கிசுகிசுப்பது காதில் விழுகிறது].

இப்பொழுது பேசு பொருளுக்கு திரும்புவோம். வாங்கிய பழங்களை எல்லாம் தூக்கி கொண்டு அருகிலுள்ள தனியிடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.பெரியவர் மட்டும் உட்காராமல் நின்றார்.

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன்!” என்றேன்.

’’நான் தனியாக ஒரு இடத்தில் போய் சாப்பிடுகிறேன். என் பங்குக்கு உள்ள பழத்தை கொடுங்கள்!’’ என்றார்.

பையன்கள் எல்லோருமே என்னை பார்த்தார்கள். ‘பழம் வாங்க வரும் போது பேசியது ஒன்று. இப்பொழுது இவர் மட்டும் ஏன் மக்கர் பண்ணுகிறார்? என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“ஏன்? என்ன விஷயம்? வரும் போது இப்படித்தானே பேசி வந்தோம். இடையில் யாரும் ஏதும் தவறாக சொல்லி விட்டார்களா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை! எனக்கு எல்லோர் கூடவும் ஒன்றாக இருந்து சாப்பிட பிரியமில்லை” என்றார்.

அங்கிருந்த எல்லோரும் என்னைப் பார்தார்கள். அவர்கள் என்னை நோக்கிய நோக்கம் ‘அங்கிருந்தவர்களில் நானும் அந்தப் பெரியவரும்தான் முஸ்லிம்கள். மற்ற அனைவரும் இந்துக்கள்’. ‘இந்துக்களோடு ஒன்றாக இருந்து நான் சாப்பிடமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாரோ என்பதே அந்தப் பார்வையின் பொருளாய் எனக்கு பட்டது.

"எல்லோரும் அண்ணன் தம்பிகளாய் ஒன்றாக இருந்து வேலை செய்யும் போது நீங்கள் மட்டும் குழப்பம் செய்வதில் பல பிரச்சனைகள் வரும். அப்புறம் கடை வேலைகளிலும் அது எதிரொலிக்கும். அது எனக்கு தலைவலியை கொண்டு வரும். அதனால் விஷயம் என்னவென்று கூறுங்கள் அது எதுவானாலும் உங்கள் விருப்பபடியே செய்யலாம் என்றேன்"

“ஒன்றுமில்லை! நீங்கள் எல்லாம் இளம் வயதுகார்கள். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுவீர்கள். நான் மெதுவாதான் சாப்பிடுவேன். நான் ஒன்னு சாப்பிட்டு முடிப்பதற்குள் நீங்கள் லெல்லாம் ரெண்டு மூனை முடித்து விடுவீர்கள். காசு கொடுத்தும் எனக்கு கெடைக்க வேண்டிய பங்கு கெடைக்காது அதனால் என்பங்கை தனியே கேட்டேன்’’ என்றார்.

உள்ளம் திறந்துவிட்டார். அவர்உள்ளத்தில் சைத்தான் குடிகொண்டான். அங்கிருந்தவர்களில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் பொருள் “இதுதான் உங்கள்இஸ்லாமா?” என்று கேட்பது போல் இருந்தது. 

அவர் அப்படி நினைத்தால் அவர்பங்கை அவருக்கு கொடுத்துடலாமே!’’ என்று ஒரு பையன் சொன்னான்’’ முதலில் பழத்தை அவரையே சாப்பிட சொல்லுங்கள். மீதியை நாம் சாப்பிடலாம்’’ என்று இன்னொரு பையன் சொன்னான்.

“என் பங்கைத்தான் நான் கேட்டேன்! யாரும் எனக்கு தர்மம் கொடுக்க வேண்டாம்’’என்றார்.!

‘சரி! இதற்கு மேல் கெஞ்சினால் குரங்கு மரத்துக்கு மேலே ஏறும்’’! என “எத்தனை பழம் இருக்கிறது’ என்று எண்ணும்படி சொன்னேன். ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வீதம் வந்தது போக.ஒரு பழம் மீத மிருந்தது.

‘’ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வருகிறது. உங்கள் பங்கை நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அவரே நன்றாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு சற்று ஒதுங்கிபோய் உட்கார்ந்தார். மீதமிருந்த அந்த ஒரு பழத்தையும் அவரிடம் கொடுத்தேன். 

“வேண்டாம் !ஒருபழம்தானே? நீங்கள்தான் அதிகம் பேர் இருக்கிறீர்கள். உங்கள் பங்கிலேயே இருக்கட்டும்!’’ என்று பெரும்தன்மையுடன் சொன்னார். செய்த்தான் வேதம் ஓதியது!

‘’பரவாயில்லை! எங்களிடம் நிறைய பழம் இருக்கிறது. அதில் ஒன்று பூச்சிப் பழமானால் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு பழம் பூச்சியானால் மிஞ்சுவது இரண்டுதான். அதிலும்கூட பூச்சி இல்லாத பழம் கிடைப்பது அல்லாவின் நாட்டம். கைகாவலுக்கு இதையும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டார்.

பழங்களை உடைத்து திண்ண ஆரம்பித்தோம். ஒரு பழத்திற்கு நாலு compartment-இருக்கும். ஒரு  compartment-டில் மூனுசுலை இருந்தால் அதில் ருசி அதிகமும் விதை சிறிதாகவும் இருக்கும். விதையைச் சுற்றிலும் வெண்ணைபோல் மெல்லிய இலேசான மஞ்சள் நிற க்ரிம் பத்தை போல் படிந்திருக்கும்.இது பழத்தின் கீரிம் compartment-டில் ஒட்டாமல்அப்படியே எடுத்துசாப்பிட அல்லாஹ் படைத்திருக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று அவன் படைப்பின் ஓவ்வொன்றிலும் உற்று நோக்கினால் இதைக் காணலாம்.

நாங்கள் பழங்களை ருசித்து-ருசித்து சாப்பிட்டோம். பக்கத்தில் இருந்த பையன் “அண்ணே! அங்கே பாருங்கள்!’’ என்றான். 

இலேசாக அந்தப் பெரியவர் பக்கம் பார்வையை போகவிட்டேன். ஒரு பழம் முழுதும் பூச்சி. அது ஒரு ஓரத்தில் தூக்கி வீசிக் கிடந்தது. மற்றொரு பழத்தில் பாதி பூச்சி. பாதியை ருசித்துக் கொண்டிருந்தார். ஆக உடைத்த இரண்டில் ஒன்னரை பழம் பூச்சி. பூச்சியில்ல பாதியை ருசிதுக் கொண்டிருந்தார். அவரிடத்தில் பாக்கி இருந்தது அவர் பங்குக்கு கிடைத்த ஒன்று, துண்டு விழுந்ததில் நாங்கள்கொடுத்தஒன்று.ஆக இரண்டு உடைக்காமல் வெய்டிங் லிஸ்ட்டில் இருந்தது. எங்கள் பழங்களிலும் இரண்டு பழத்தில் பாதிபூச்சியும் ஒன்று முழுதும் பூச்சியாய் போனது. அவரும் நாங்களும் துரியான் தின்று எழுந்த போது அவர் துரியானில் ஒன்னரை பூச்சியும் எங்களில் ரெண்டு பழ நட்டதிற்க்கும் எழுந்தோம் எங்களில் ஆறுபேர். அவர் ஒருவர் மட்டுமே.! 

நாங்கள் எல்லோரும் கடைக்கு நடந்தோம். தனித்து போனவரும் கூடவே வந்தார். யாரும் யாருடனும் பேசவில்லை. மௌனத்தின் ஆட்சி சிம்மாசனம் ஏறியது. மறுநாள் வேலைகள் வழக்கம் போல் நடந்தது. அவர் யாருடனும் ஏதும் பேசாமல் தன்வேலைகளை செய்து கொண்டிருந்தார். எப்பொழுதும் பேச்சும் சிரிப்பும் கிண்டலும் நையாண்டியுமாக ஓடியபொழுது சோகமாய் ஓடியது. ஒரு வெள்ளிகிழமை மாலை பினாங்கு தலைமை நிலையத்திலிருந்து டெலிபோன் வந்தது” அவர் கடையை விட்டு நின்றுகொள்கிறேன்” என்று டெலிபோன் போட்டார். நாளைக்கு அவர் கணக்கை பார்த்து பாக்கியே கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிடு! ’போனஸ் கீனஸ்’ என்று ஏதெனும் ’’கிக்கிரிபுக்கிரி’’ என்றால் என்னிடம் பேசிக்கிடசொல்’’ என்றார்.

அந்த முதலாளிக்கு பிடிக்காத ஒரே ஒருவார்த்தை ’’போனஸ்’ தான் அந்தக் கடையில். வேலைபார்த்த அத்தனை பேருக்கும் அவர்கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான். பினாங்கு தொடங்கி சிங்கப்பூர் வரை கிளைகளை நிறுவி ’ஓகோ! ஹோ’வென்று ஆலமரம் போல விழுதுகள் விட்டு வளர்ந்த இந்த விருட்சம் வீழ்ந்தது உழைத்துஉழைத்து ஓடாய்போன தொழிலாளிகளின் சாபமே.

இவைகளுக்கு காரணம் தலைமை நிலையத்தில் ஒருசெய்த்தான் மேனேஜராக இருந்து கெடுத்தான். துரியான் பழ செய்தானிடம் விஷயத்தை சொன்னேன் ’’அவன் நாசமாய் போகட்டும் என்று பாக்கிகாசை வாங்கி கொண்டு போய் விட்டார். நானும் அங்கிருந்து விலகியபோது எனக்கும் அந்த செய்த்தான் ஓதிய வேதம் ‘போனஸ் இல்லை! ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே! வேதம் ஓதிய அவர்கள் கடைகளில் எல்லாம் இப்பொழுது YALE-பூட்டு தொங்குகிறது.!

S.முஹம்மது ஃபாருக்

19 Responses So Far:

Ebrahim Ansari said...

நிறைய ஷைத்தான்கள் இந்தப் பதிவில் வருவதால் சில நேரங்களில் சில ஷைத்தான்கள் என்று தலைப்பு வைத்து இருக்கலாம் .

Ebrahim Ansari said...

இந்தப் பதிவு தொடர் பதிவானால் அஞ்சடி யில் படுத்து ஊரில் அடுக்கு மாடி வீடு கட்டிய தியாகசீலர்களைப் பற்றியும் எழுதுங்கள். பினாங்கில் நமதூர்வாசிகள் தங்கி இருந்த இடத்தைப் பார்க்கும் போது துபாய் தமிழ் பஜார் எவ்வளவோ தேவலை.

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா அவர்களின் இந்தத் தொடரில் நம் பெற்றோர் மற்றும் மூத்தோர்களின் பிழைப்பு, வாழ்வியல், கலாசாரம் போன்றவை அடங்கியிருப்பதால் நாம் இதை ஆவணப் படுத்த வேண்டும்.

ஜாகிர், மிஸஸ் ஜாகிர், சிறுவன் அஸார் (தற்போது டாக்டர்), நான் மற்றும் என் மனைவி ஆகியோர் கே எல்லிலிருந்து பினாங் சென்ற வழி நெடுக விதவிதமான பழங்கள் குவித்து விற்கப்பட பழங்களின்மீது தீராகாதல் கொண்ட நான் வண்டியை நிறுத்தி நிறுத்தி அவற்றைச் சுவைத்துக்கொண்டே சென்றேன்.

துரியான் உண்மையிலேயே ஒரு யுனிக் பழம்தான்.

sabeer.abushahruk said...

அதிரையில் ஐஸோபி சட்டையும் அத்தருமாக வலம்வந்த பல நண்பர்களின் பெற்றோர் பினாங்கில் ஆப்பம் விற்றும், டீ ஆத்தியும், ஐஸ் விற்றும், போர்ட்டில் கூலிகளாகவும் வேலை செய்துவிட்டு நடைபாதையில் தூங்குவதைக் கண்ணால் கண்டு உள்ளம் நொந்தேன்.

அவர்கள்தம் பனியன்கள் மஞ்சள் பூத்தும் ஆங்கேங்கே கிழிந்தும் ரப்பர் செருப்புகள் அடிப்பாதத்தின் மேடுபள்ளங்களை பதிந்தும் ஒரேஒரு டெட்ரெக்ஸ் சட்டையோடும் கஷ்டஜீவிதம் நடத்தியதை எண்ணிப்பார்த்தால் இப்போதும் கண்கள் ஈரமாகும்.

அரபு நாடுகளும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் வாய்த்திராவிடில் என்ன ஆகியிருக்குமோ என் சமூகம்!

ZAKIR HUSSAIN said...

நீ மலேசியா வந்த போது [ 1992 ] , நாம் பினாங்கு சென்ற அந்த பழைய ரோட்டில் இன்னும் பயணிக்கும்பொதெல்லாம் நீ மலாய் மொழியில் பேசி டீ குடித்த டீக்கடையும், துரியான் பழம் வாங்கி சாப்பிட்ட ஏரியாவும் இன்னும் எப்போது போனாலும் நானும் என் மனைவியும் மறவாமல் அந்த இடம் வந்தால் பழைய பயணத்தைப்பற்றி பேசுவோம்.

நான் பாட்டுப்பாடிக்கொண்டு வர நீ காரின் டாஸ்போர்டில் தாளம் போட்டு வந்ததும் மறக்க முடியாதது.

இருக்கமான இந்த வாழ்க்கையில் நம்மிடம் அதிகம் வசதிகள் இல்லாத காலத்தில் இருந்த மன அமைதி பெரும்பாலனவர்களுக்கும் மிஸ்ஸிங்.

Ebrahim Ansari said...

//ஜாகிர், மிஸஸ் ஜாகிர், சிறுவன் அஸார் (தற்போது டாக்டர்), நான் மற்றும் என் மனைவி ஆகியோர் கே எல்லிலிருந்து பினாங் சென்ற வழி நெடுக விதவிதமான பழங்கள் குவித்து விற்கப்பட பழங்களின்மீது தீராகாதல் கொண்ட நான் வண்டியை நிறுத்தி நிறுத்தி அவற்றைச் சுவைத்துக்கொண்டே சென்றேன்.//

நாங்களும்தான். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். கோலாலம்பூரிலிருந்து பினாங்குக்கு பகல் நேரங்களில் சாலை வழியாகப் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள் வாய்க்கு ருசியாகவும் சாப்பிடலாம். மனதுக்கு இனிமையாகவும் காட்சிகளைக் காணலாம். மாஷா அல்லாஹ் மலேசியா.

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு.....

நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் எனக்கும் தெரியும். அவர்களுக்கு இன்ஸ்டால் செய்யப்பட்ட ப்ரோக்ராமிலேயே வாழ்க்கையை கடத்தி மறைந்துவிட்டார்கள்.

தைப்பிங் சமீபத்தில் சென்று வந்தேன். [ ஹைவே வந்த பிறகு நாம் பயணிக்க மறந்த ஊர்களுக்குள் திடீர் என்று உள் நுழைந்து பழைய ஞாபகங்களை புதுப்பித்துக்கொள்வதில் எனக்கு ஒரு சந்தோசம்.

Changat Jering / Taiping எல்லாம் சுமாரான அளவு மாற்றம் கண்டு விட்டது.

நீங்கள் இருந்த Jalan Kemuja அப்படி ஒன்றும் மாற்றம் இல்லை.

Ebrahim Ansari said...

//அதிரையில் ஐஸோபி சட்டையும் அத்தருமாக வலம்வந்த பல நண்பர்களின் பெற்றோர் பினாங்கில் ஆப்பம் விற்றும், டீ ஆத்தியும், ஐஸ் விற்றும், போர்ட்டில் கூலிகளாகவும் வேலை செய்துவிட்டு நடைபாதையில் தூங்குவதைக் கண்ணால் கண்டு உள்ளம் நொந்தேன்.//

100/100.

இன்றும் வளைகுடா நாடுகளில் தங்களின் வாழ்வை தியாகம் செய்து தங்களின் குடும்ப நலனுக்காக உழைக்கும் வர்க்கத்தை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன.

ஆனால்

ஊரில் உள்ள பிள்ளைகளோ இதைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்களா?

அன்று ஐசொபி சட்டை இத்யாதி. இன்றோ பைக், சாம்சங்க் கலாக்ஸி இத்யாதி.

நாடுதான் மாறி இருக்கிறது. நிலைகளும் மனித மனங்களும் மாறவில்லையே!

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான்,

நீங்கள் தைபிங்கில் இருக்கும்போது எனக்கு அனுப்பிய ஒரு கிளப் மேன் பிங்க் கலர் அரைக் கை சட்டையை நான் இன்றும் நினைவு கூர்கிறேன்.

Ebrahim Ansari said...

நிறைய பழைய நினைவுகளை கிளறிவிட்ட பதிவு .

உப்பிட்டவரை உள்ளளவும் மறக்காதே என்பது பழமொழி. நமக்கு சோறு போட்டு கல்வி தந்து ஆளாக்கிய மலேசியாவை மறக்க முடியுமா?

Ebrahim Ansari said...

நீங்கள் குறிப்பிடும் அந்த ஷைத்தான் நமது மாவட்டத் தலைநகரில் இருந்து மலேசியா சென்று தனது தவறான ஆலோசனைகளால் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. நான் மலேசியாவுக்கு செல்ல இருந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்து தனது மகனுக்கு வழங்கியது. பின்னாளில் நான் பட்ட பல கஷ்டங்களுக்கு அது முதற்காரணமாக விளங்கியது.

sheikdawoodmohamedfarook said...

இந்தியமுஸ்லிம்செய்தான்கள் தான்மலேசியாவில்அதிகம் .மருமகன்சபீர்!ஊருக்குவந்தால்இந்தபாருக்குநிறையபொய்கலக்காதமெய்கலந்தகதைசொல்லுவான்.கண்பிரச்சனைகாரணமாகமடிக்கணணியில்மனம்திறக்கமுடியவில்லை.மன்னிக்கவும்.இப்போஎழுதியதுகோடியில்ஒன்றே! We Dig our own grave in malaysia.[Self Help Mentality]

Ebrahim Ansari said...

//இந்தியமுஸ்லிம்செய்தான்கள் தான்மலேசியாவில்அதிகம்//

அடடா! இது ஏற்கனவே தெரிந்து இருந்தால் நண்பர் பகுருதீன் ஷைய்த்தான்களை அங்கிருந்து வரவழைத்து இருப்பாரே! மலேசிய நாட்டின் மருமகனான பகுருதீனுக்கு இவை கண்ணில் படவில்லையே!

sheikdawoodmohamedfarook said...

.//தமிழ்முஸ்லிம்செய்த்தான்கள் தான்அதிகம்// வேலையாட்களுக்குசம்பளம்மாதம்Rm.150//மூன்றுவருஷம்தொடர்ந்து வேலைசெய்தால்வருஷத்துக்குஇரண்டுமாதசம்பளம்போனஸ். பசியின்கொடுமை,அக்காதங்கசிகளைஎவனாவதுஒருவன்கையில்பிடித்துகொடுக்க வேண்டு மென்ற கடமை உணர்வு.Etc.etc. மாடாய் உழைத்து மம்மட்டியாதேய்வான்.மூனுவருஷம்நெருங்கும்போதுமேனேஜர்கூப்பிட்டு''நீ முதலாளி மருமகன் வரும்போது எந்திரிச்சு நிண்டு மரியாதை கொடுக்காமேஉக்காந்து ஈந்தியாம். இன்னையோட வேலையே உட்டுநிண்டுக்கோ.சம்பளபாக்கிபத்துனதுபோக135வாங்கிகிட்டுபெட்டி படுக்கையேஎடுத்துகிட்டுபோ!''உழைத்தவன்வியர்வைஉலருமுன்சம்பளம்கொடுத்தாச்சே!இனிமேஎன்ன?ஹாஜியார்பள்ளியாசல்திறப்புவிழாவில் மேடையில்வீற்றிருப்பார்!உழைத்தவன்வயறுகொல்லன்உலையாய்எறியும்.

sheikdawoodmohamedfarook said...

உழைத்தவன்காசிலேயும்பங்காளிக்குதுரோகம்செய்தகாசிலேயும்ஹஜ்செயதவருக்குஹஜிலிருந்துவந்தஇரண்டேவாரத்தில்ஒன்னரைஇலட்சம்நட்டம். வியாபாரம்Zero degree யைதாண்டியது.

இப்னு அப்துல் ரஜாக் said...

Very horrible story.
பாடம் படிக்க வேண்டும் நம்மவர்கள்
Jasakkallah Khair for farook kaka
Insha Allah மலேசியா செல்ல ஆவல் பிறக்கிறது

sheikdawoodmohamedfarook said...

//மலேசியாசெல்லஆவல்பிறக்கிறது// அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிஇப்னுஅப்துல்ரசாக்.நிச்சயம்நீங்கள்மலேசியாசென்றுஒருமாதம்சுற்றிப்பார்த்துவிட்டுவாருங்கள்.விமானம்விட்டுஇறங்கிஇம்மிகிறேசென்கஸ்டம்ஸ்அதிகாரிகளைகண்டதுமேநீங்கள்வருத்தப்படுவீர்கள்''நான் ஏன்இந்தியாவில்பிறந்தேன்?''என்று.நான்அந்தநாட்டைவிட்டுபிறிந்தபோது கண்ணீரோடுதான்பிறிந்தேன்.அந்தநாட்களைஎண்ணும்போதுஎன்கண்ணிலேகார்காலம்.

Iqbal M. Salih said...

படிப்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் சுவையான ஞாபகங்கள்!
அருமையாக எழுதப்பட்ட கட்டுரை!

Yasir said...

தூரியானின் சுவை எழுத்துக்களில் ...அதன் நாத்தம் நீங்கள் விவரித்த மனிதர்களை பற்றி படிக்கும் போது...நீங்கள் நீண்ட் ஆயுளுடன் வாழ துவாக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு