Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமார்களின் அழைப்புப் பணி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 06, 2015 | ,

:::: தொடர் - 13 ::::
நமது சமகாலத்தில் பல அமைப்புகள் எல்லா வழிகளையும் பயன்படுத்தி, இஸ்லாத்தின் பக்கம் அழைப்புப் பணிகளைச் செய்கின்றன. அவற்றுள் சில பாராட்டத் தக்கவை; வேறு சில, முறையற்றவையாக இருக்கின்றன. எனவே, இத்தருணத்தில், இறைப் பொருத்தத்தை நாடியும், மக்களிடம் எவ்விதப் பலனையும் நாடாமலும், நம் முன்னோர்களான இறைத் தூதர்களின் அழைப்புப் பணியைப் பற்றியும், அதன் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் சிறிது தெரிந்துகொள்வது நன்று என்று கருதுகின்றேன்.

தன் நேசர்களான இறைத்தூதர்களைப் பற்றி, “இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான். ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக! (என்று கூறி,) இதற்காக நான் உங்களிடம் எவ்விதப் பிரதிபலனையும் கேட்கவில்லை. (குர்ஆனாகிய) இது, அகிலத்தாருக்கு ஓர் அறிவுரையே அன்றி வேறில்லை” என்று கூறுமாறும் அறிவுறுத்துமாறும் கூறுகின்றான் அல்லாஹ்.                   (6:90)

நபிமாருக்கு அல்லாஹ் நேரடியாக வழிகாட்டுதலைக் கொடுத்து, அவர்கள் அதன்படி நடந்து காட்டியதால், அவ்வழியையே சமுதாயத்தார் பின்பற்றினார்கள். அவ்வழிகாட்டுதல், கீழ்க்காணும் தன்மைகளைக் கொண்டதாகும்:
  • தெளிவான, நேரடியான, எவருக்கும் எதற்காகவும் பணிந்து கொடுக்காத தன்மை.
  • இதில் புரியாததும் குழப்பமானதுமான கோட்பாடுகளில்லை.
  • அல்லாஹ்வின் வல்லமையைப் பிரதிபலிக்கும் தன்மையது.
  • அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பது. 
  • மனிதர்களிடத்தில் கூலியை எதிர்பார்க்காத தன்மையது.
  • அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.
அது என்ன அற்புதச் செய்தி?

1447 ஆண்டுகளுக்கு முன்பு சுவனத்துச் சாளரத்தைத் திறந்து, பேரருளாளன் அல்லாஹ் மனிதருடன் பேசத் தொடங்கினான்! வேதக் கட்டளைகளைக் கொணர்வதற்காக அமர்த்தப்பட்ட வானவத் தலைவர் ஜிப்ரீல், தனிமைத் தியானத்தில் இருந்த முஹம்மதிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். முஹம்மதோ, “எனக்கு ஓதத் தெரியாதே!” என்றார். 

அப்போது ஜிப்ரீல் முஹம்மதைக் கட்டித் தழுவினார்! அதன் பின்னரும், ஓதத் தெரியாது என்ற மறுமொழியே அவரிடமிருந்து வந்தது. மீண்டும் இருமுறை கட்டித் தழுவல். அதன்பின், சலனமற்ற நெஞ்சில் சாந்தி பரவிற்று!

           “படைத்த வல்லவன் அல்லாஹ்வின் பெயரால் ஓதுவீராக!
            அவன் மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.
            கண்ணியம் மிக்க அவ்விறைவன் பெயரால் ஓதுவீராக!
            அவன்தான் எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்பித்தான்.
            அதுவரை அறியாதிருந்த மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தான்.”

என்ற ஐந்து வசனங்களை ஜிப்ரீல், அண்ணலாருக்கு ஓதிக் காட்டினார். அவையே திருமறை குர்ஆனின் ( ‘அல் அலக்’ எனும் அத்தியாயத்தின் ) முதல் வசனங்களாகும். உலகம் அனைத்தையும் படைத்த இறைவன் தன் இறுதித் தூதருக்கு அறிவித்த – அவருடன் உரையாடிய – முதல் வசனங்களாகும் இவை. 

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இது ஒரு புதிய, புதுமையான அனுபவம்! படைத்த இரட்சகனிடமிருந்து, வானவத் தூதர் வழியாக, மானிட இனத்தின் இறுதித் தூதருக்கு வந்த முதல் இறைவசனத் தொடர்பு. இந்தப் புதுமையான அனுபவம் நபியை அதிர்ச்சியடைய வைத்ததில், நடுங்கச் செய்ததில் வியப்பொன்றுமில்லை. 

இதன் பின், அஞ்சி நடுங்கியவராகத் தமது வாழ்க்கைத் துணையும் ஆறுதலுமான கதீஜாவிடம் விரைந்து சென்றார்கள் நபியவர்கள். தமக்குப் பாதகம் விளைக்கும் ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டது என்ற உணர்வினால், நடுக்கத்துடன், “என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்!” என்று கூறினார்கள். 

பின்னும் பெருமானாரின் அச்சமும் நடுக்கமும் தீர்ந்தபாடில்லை! தமக்கு முன் தோன்றிய உருவம் ‘ஜின்’ இனத்ததாக இருக்குமோ என்று அஞ்சினார்கள். ஏனெனில், தம்மை ‘ஜின்’ இனம் சூழ்ந்துகொண்டு தீமை விளைப்பதையும், சூனியக்காரர்கள் தீமை ஏற்படுத்துவதையும் அஞ்சினார்கள். இதை கதீஜாவிடம் வெளிப்படுத்தியபோது, அந்த மாதரசியின் ஆறுதல் மொழி இவ்வாறு இருந்தது:
  • உங்கள் இரட்சகன் உங்களைக் கைவிட மாட்டான். 
  • ஏனெனில், தேவையுடையவர்க்கு நீங்கள் உதவி புரிகின்றீர்கள்.
  • ஏழைகளுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள்.
  • விருந்தினரை கண்ணியப் படுத்துகின்றீர்கள்.”
மனைவி கதீஜாவின் ஆறுதல் மொழியில், அண்ணலாரின் நற்குணமும், அவர்கள் மக்களை அன்புடனும் இரக்கத்துடனும் நடத்தும் பாங்கும் மக்காவில் பலரும் அறிந்த ஒன்றாகும். இத்தகைய பண்புதான் இன்று நம்மிடத்தில் குறைவாக உள்ளது. இதனால்தான் இக்காலத்தில், நம் பண்புப் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. உலகம் முழுவதற்கும் நாம் பண்பால் முன்மாதிரிகளாக இருப்பதற்கு மாறாக, நம் மதிப்பும் மரியாதையும் வலுவிழந்து காணப்படுகின்றது. இத்தகைய தன்மைகளை நாம் உலகிற்குக் காட்டித் தராமல் இருப்பதால், உலகெங்கிலும் மதிப்பிழந்து நிற்கின்றோம். உலகில் மற்ற மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் நிலையை விட்டு, உலகத்திலிருந்து எடுப்பதையே நாடுகின்றோம்! அதனால் மதிப்பிழந்து நிற்கின்றோம்.

நபியவர்களும் அவர்களை முழுமையாகப் பின்பற்றிய தோழர்களும் விட்டுச் சென்ற அந்த முன்னுதாரணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் நாம், சீர்கெட்டு வாழ்கின்றோம். நபியவர்களையும் நல்லறத் தோழர்களையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நாம், அவர்களின் நற்குணங்களில் மிகத் தாழ்ந்தவர்களாக இருக்கின்றோம். இத்தகைய இழி நிலைக்குக் காரணமென்ன? மறுமையில் அந்த நல்லோர் நமக்கு எதிராகச் சாட்சி கூறுவதற்கு முன் விழித்துக் கொள்வோமாக!

நல்லவர்களாகவும், நேசமும் இரக்கமும் உள்ளவர்களாகவும், நம் எதிரிகளை மன்னிப்பவர்களாகவும், பிறருக்கு உதவும் பண்பாளர்களாகவும், உண்மையும் நம்பிக்கையும் தாராளத் தன்மையும், ஏழைகளுக்கும் வலுவிழந்தவர்களுக்கும் உதவும் பண்பும் இல்லாதவர்களாக இருக்கும் நிலையில், நாம் எவ்வாறு நபியவர்களை நேசிக்கும் இனத்தவர்களாக மாற முடியும்? மேற்கண்ட நற்குணங்கள்தாம் தலைமைத் தனத்தின் அடிப்படைக் காரணிகளாகும்.

தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய தன்மைகள்தாம், நாம் மேற்குறிப்பிட்ட நற்குணங்களாகும். அவையே தலைமைக்கு வரவிருக்கும் ஒவ்வொருவரின் தன்மைகளாகும். அவைதாம், தலைமையை விரும்பும் ஒவ்வொருவரின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கும் காரணிகளாகும். 

முஹம்மத் (ஸல்) அவர்களிடம் அவை இயல்பாக இருந்தன. அவை மட்டுமன்றி, அவை ஒவ்வொன்றின் முன்மாதிரியாக அவர்களே இருந்தார்கள். அதனால்தான் அந்தச் சமூகத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களை, ‘அஸ்ஸாதிக்குல் அமீன்’ (உண்மையாளரும் நம்பிக்கைக்குரியவரும்) என்ற பட்டத்தைக் கொடுத்துச் சிறப்பித்தார்கள். இதுவே ஓர் இனத்தவர்களின் பார்வையில் உயர்வுக்கும் தலைமைத்துவத்திற்கும் சான்றாகத் திகழும் தன்மையாகும். இளமை முதல் இத்தன்மைகள் இயல்பாகவே பெருமானாரிடம் இருந்ததால்தான், சிறு வயது முதல் அம்மக்கள் அவரை நேசித்தார்கள்; அவரிடம் ஆலோசனை வேண்டி நின்றார்கள்.

நம் ஒவ்வொருவரின் சுய வாழ்விலும், இது போன்ற மதிப்பு வாய்ந்த தன்மைகள் பட்டப் பெயர்களாகி, வாழ்க்கை முழுமைக்கும் உறவினர் நண்பர்களுக்கிடையே நிலைத்தவையாகிப் போய்விடுவதை நாம் காண முடிகின்றது. எனினும், நம் கிராமியச் சமுதாயத்தில் தீய பட்டங்கள் மரண தண்டனைக்கு இட்டுச் செல்லும் காரணிகளாகிப் போய்விடுவதையும் நம்மால் காண முடிகின்றது. சமூகத்தில் ஒருவர் ‘பொய்யர்’ என்ற பட்டத்திற்கு உரியவராகிவிட்டால், அது அவர்மேல் விழுந்த சாபமாகிப் போய்விடும். மிகப்பெரிய தொகைக்கான வணிக ஒப்பந்தங்களில்கூட, நம்பிக்கை என்பது அமைந்துவிட்டால், எழுதப்படாத சட்டங்களாகிவிடுகின்றன. வாக்குறுதிகள் மீறப்பட்டால், அங்கு நிலவும் எழுதப்படாத சட்டத்தின் அடிப்படையில், அவை தண்டிக்கத் தக்கவையாகிவிடும்.

‘ஹிஜாஸ்’ மாகாணம் உள்ள அரபுத் தீபகர்ப்பத்தில், இஸ்லாம் அறிமுகப் படுவதற்கு முன்னாலிருந்து இவ்வழக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் மாறுபாடு நிகழ்ந்துவிட்டால், பொய் களந்துவிட்டால், அந்தந்தக் கிராமியச் சூழலில் அது கொலைத் தண்டனையைவிட மோசமானதாகிப் போய்விடும். 

முஹம்மத் (ஸல்) அவர்களிடம் நபித்துவத்திற்கு முன்னால் இயல்பாக அமைந்திருந்த அந்த நற்குணங்கள்தாம், மக்கத்துக் குறைஷியரை அவர்கள் மீது நன்னம்பிக்கை கொள்ளச் செய்தன. அதன் அடிப்படையில்தான், “என்னைப் போர்த்துங்கள்! போர்த்துங்கள்!” என்று அதிர்ச்சி நிலையில் வீட்டுக்கு வந்த இறைத்தூதருக்கு ஆறுதல் கூறிய அன்னை கதீஜாவின் வாய்மொழியாக, அந்த நற்குணங்களின் பட்டியல் நீண்டிருந்தது.

அதற்கும் மேலாக, அன்னையார் அவர்கள், உண்மையில் தம் கணவருக்கு நேர்ந்ததைக் கண்டுபிடிக்க, தம் ஒன்றுவிட்ட சகோதரரும், முன் வேதங்களின் ஈடுபாடுள்ளவருமான ‘வரக்கா இப்னு நவ்ஃபல்’ என்ற விற்பன்னரின் கருத்தை வேண்டிச் சென்றார்கள். முஹம்மதுக்கு நிகழ்ந்ததை விளக்குமாறு கேட்டறிந்த வரக்காவை, “மூசாவிடம் வந்த அதே ‘நாமூஸ்’தான் வந்து வேதத்தைப் படித்துக் கொடுத்துள்ளார்” என்ற நற்செய்தியைக் கூற வைத்தது. “நான் இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! மக்கத்துக் குறைஷிகள் உம்மை மக்காவிலிருந்து விரட்டியடிக்கும்போது, நான் உமக்கு உதவி செய்வேனே” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தச் செய்தது. 

அதைக் கேட்ட அருள் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த மக்கத்து மண்ணின் மைந்தனாகிய என்னையா இந்த ஊரைவிட்டுத் துரத்துவார்கள்?!” என்று வியப்பு கலந்த ஏக்கத்துடன் வினவினார்கள். அன்னாருக்கு ஏற்பட்ட வியப்பிற்கும் வேதனைக்கும் காரணம், அவர்கள் நாற்பது வயதை அடையும்வரை, நபியை அந்த அளவுக்கு மக்கத்து மக்கள் உயர்வாக வைத்திருந்தார்கள். அந்த மக்களின் வரலாற்றில் ஒருவரைக்கூட மக்காவை விட்டு விரட்டியதாக ஓர் எடுத்துக்காட்டையும் காண முடியாது! ஆனால், இங்கு வரகா என்ற அறிஞர் திட்டவட்டமாகக் கூறுகின்றார், மக்கத்து மக்கள் முஹம்மதை அன்னாரின் பிறந்தகமான மக்காவை விட்டு விரட்டுவார்கள் என்று! அந்த மக்களின் வழக்கத்திற்கு மாற்றமாக எவரேனும் செய்தால், அல்லது சொன்னால், அவரைக் கண்டிப்பாக எதிர்த்துத் துரத்துவார்கள் என்று!

‘தஅவா’ எனும் நேர்வழிக்கான அழைப்பு எதிர்கொள்ளும் இயல்பு இதுதான். அதுதான் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான போராட்டம். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதல். இறைத்தூதருக்கும் ஷைத்தானுக்கும் இடையிலான சண்டை. இப்போராட்டம் இறுதிவரை தொடரும். அதன் விளைவு, இறுதி நாளில் அல்லாஹ்வின் தீர்ப்பானது சத்தியத் தூதர்களுக்குச் சார்பானதாக அமையும். 

இதை நாம் இன்றும்கூடப் பார்க்க முடியும். ஒருவர் தான் அறிந்த மார்க்கத்தைத் தனக்குள் வைத்துச் செயல்பட்டுவந்தால், அவருக்கு எவ்வித எதிர்ப்பும் இருக்காது. ஆனால், அவரே தன்னிடம் உடையால், தாடியால், பெண்கள் ‘ஹிஜாப்’ போன்ற மார்க்க அடையாளங்களை அமைத்துக்கொண்டால், அப்பொழுது உருவாகும் கடுமையான எதிர்ப்பு! அவரையும் பிறரையும் நரகை விட்டுத் தடுத்து, சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் அந்த வாழ்க்கையை அறிமுகம் செய்யும்போதுதான், கடுமையான கல்லடியும் சொல்லடியும் தொடங்கும்.

முஸ்லிம், தனக்கும் பிறருக்கும் நிலையான நன்மையை விரும்பியே இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றான். பசித்த ஒருவனுக்கு ஒரு வேளைக்கான உணவளிப்பவனைப் பார்த்து உலகம் பாராட்டுகின்றது. ஆனால், மாறாத வேதனையை விட்டுத் தடுத்து, மணமான வாழ்க்கைக்கு அழைப்புக் கொடுக்கத் தொடங்கினால், அப்போது தொடங்கும், எதிர்ப்பும் அடியும் அவமதிப்பும் கொலை மிரட்டலும்! இவையனைத்தும் முந்தைய இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட உண்மை நிலையாகும். அந்த இறைத்தூதர்களுக்கு ஏற்பட்டதைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அன்னாரின் உறவினர்கள் மூலம் அனைத்தும் ஏற்பட்டன!

இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற சோதனைகள் ஏற்படத்தான் செய்யும். அவர்கள் இந்த எதிர்ப்பலைகளைச் சந்திக்க ஆயத்தமாக இருக்கவேண்டும்! தன்னையும் பிறரையும் நரகத்தை விட்டுத் தடுக்க முயலும் ஒவ்வொருவரும், இது போன்ற ஷைத்தானியச் சக்திகளுக்கு எதிராகப் போராடத்தான் வேண்டும்!

இன்று பொதுவிடங்களில் விளம்பரத்துக்காக மருந்துகள், உணவுப் பொருள்கள், கல்வி போன்றவைக்கான பிரச்சாரம் நடப்பதை மக்கள் ஆதரிக்கிறார்கள்.  ஆனால், எப்பொழுது இஸ்லாமிய இறைநெறி அழைப்பாளர் பொதுவில் தனது தூய பணியைத் தொடங்குகின்றாரோ, அப்பொழுது தொடங்கும், கல்லடியும் சொல்லடியும்! அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், இது மிகத் தூய்மையான பணி என்று. இந்த உண்மையைத் தெரிந்து வைத்திருந்ததனால்தான், நபியவர்கள் தமக்குக் கிடைத்த இறைச் செய்தியை எடுத்துரைக்கத் தொடங்கியவுடன், எதிர்ப்புக் கணைகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் என்று வரகா உறுதியாகக் கூறினார். இறைத்தூதரின் பணி இலகுவானதன்று என்பதை எடுத்துரைத்தார். 

முன்வந்த இறைத்தூதர்களைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் நேரடியான பார்வையில் இறைச் செய்தியைப் பெற்றிருந்ததால், தமக்கு நெருங்கிய உறவினர்களில் இருந்து பிரச்சாரப் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். “(நபியே!) உம் நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்ற இறைவாக்கு (26:214) அருளப்பட்டது.

நெருங்கிய உறவினரை அவர்களின் பல தெய்வ வழிபாட்டிலிருந்தும், மார்க்கம் என்ற பெயரில் மானங்கெட்ட செயல்களை விடுத்து, அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக் கொள்கைக்கு வருமாறு அழைப்புக் கொடுத்த அடுத்த நிமிடத்திலிருந்து தொடங்கின, எதிர்ப்புகளும் ஏச்சுப் பேச்சுகளும்! அந்த நிகழ்வை, இத்தொடரின் முந்தையப் பதிவில் கூறியுள்ளேன்.

முந்தைய இறைத்தூதர்கள் தமக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்திகளை மாற்றாமல், மறைக்காமல், கூட்டாமல், குறைக்காமல், அவற்றின் உண்மையான வடிவில் எடுத்துரைத்தார்கள். இதே முறையைத்தான் அண்ணலாரும் கடைப்பிடித்து, பிரச்சாரப் பணியைத் தொடங்கினார்கள். பொருள்வாதக் கொடுக்கல் வாங்கலிலும், சிந்தனையற்ற சிலை வணக்கத்திலும், மானக் கேடான வாழ்க்கையிலும் மூழ்கிக் கிடந்த மக்கத்து மக்கள், மறுமை என்றும், சொர்க்க-நரகமென்றும், நற்கூலி-தண்டனை என்றும் போதனை செய்த முஹம்மதின் (ஸல்) நல்வாக்குகள், மக்கத்துக் குறைஷிகளை, ‘இந்த ஆள் பைத்தியக்காரராக இருப்பாரோ’ என்று நினைத்து எதிர்ப்புக் காட்ட வைத்தன! பொருள்வாத வாழ்க்கையில் மூழ்கியிருந்த அம்மக்களிடம் எவராவது வந்து, உலக வாழ்க்கையில் மரணத்தின் மூலம் முடிவு உண்டென்றும், மறுமை என்ற நிலையான வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைத்தால், அம்மக்கள் எதிர்ப்பைக் காட்டி வதைக்கத்தான் செய்வார்கள். இன்றும் - பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னும் - இதுதான் உண்மை நிலை! 

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் தொடக்க காலம் தொல்லைகளின் மிகைப்பிலும், எதிர்ப்பின் ஏற்றத்திலும்தான் இருந்தது. அத்தகைய எதிர்ப்புச் சூழலில், தொல்லைகளால் துவண்டு போய்விடாமல் பொறுமையைக் கடைப்பிடித்தால், வலிமை கூடத்தானே செய்யும்? அண்ணலாரின் வாழ்க்கையிலும் உண்மை நிலை அப்படித்தான் இருந்தது. எதிர்ப்பின் வலிமை கூடக்கூட, பொறுமையின் அளவும் நபியிடம் கூடிக்கொண்டே வந்தது. உடற்பயிற்சி செய்யும்போது வலுத் தூக்கும் எடைகள் கூடுவதால், உடலின் தசையில் வலிமை உறுதிப்படுவது போன்று, அண்ணலாரின் அழைப்புப் பணியின் உறுதிப்பாடு உயர்ந்துகொண்டே சென்றது. அழைப்புப் பணியினால் மக்களின் எதிர்ப்பு மிகைத்தபோதெல்லாம், ஈமானும் உறுதிப்பட்டு உயர்ந்துகொண்டே சென்றது. தொடக்க கால முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் இந்த உண்மைதான் நிகழ்ந்தது. அண்ணலாரும் அருமைத் தோழர்களும் இதைத்தான் எதிர்கொண்டு ஏற்றம் பெற்றார்கள். அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள்; குறைஷிகளால் கொலையும் செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் அவர்களின் ஈமானில் உறுதியும் உயர்வும் ஏற்பட்டன. 

அன்றைய மக்கத்துச் சமூகத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஓர் அங்கமாகத்தான் இருந்தார்கள். அந்தச் சமூகத்தில் முன்னிலை வகித்த ‘பனூ ஹாஷிம்’ குலத்தின் உறுப்பினராகத்தான் இருந்தார்கள். அவ்வாறு இருந்தும், அந்த உயர்குலத்தவரே முஹம்மதைக் கொடுமை செய்வதில் முன்னிலை வகித்தார்கள்! நிந்தனை, ஏச்சுப் பேச்சு, மிரட்டல், உடல்வதை ஆகிய அனைத்தும் பொய்த்துப் போன பின்னர், ஆட்சித் தலைமை பற்றியும் பொருளாதார மேம்பாடு பற்றியும் அண்ணலாருக்கு ஆசை காட்டினார்கள் மக்கத்துக் குறைஷிகள். 

அடங்கிப் போனார்களா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்? குறைஷிகளின் சார்பில் தூது வந்த உத்பாவிடம், அமைதியாகவும் உறுதியாகவும் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதராக மட்டுமே நான் அனுப்பப்பட்டுள்ளேன். உங்களுக்கு நற்செய்தி கூறுபவனாகவும், அதை நீங்கள் கேட்காவிட்டால், அதற்காக உங்களை எச்சரிப்பதற்காகவும்தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். நீங்கள் எனது தூதுத்துவத்தை ஏற்றுக்கொண்டால், அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்குத்தான் நல்லது. அதற்கு நீங்கள் இணங்காவிட்டால், அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் இடையில் தீர்ப்புச் செய்யும்வரை நான் காத்திருப்பேன்.”

அதற்கு, சமாதானம் பேச வந்தவர் கேட்டார்: “அப்படியானால், நீர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. இல்லையா? மக்கத்து மலைகளை எல்லாம் அகற்றிவிட்டு, ஷாம், இராக் போன்ற நாடுகளில் ஓடும் ஆறுகளை ஓடச் செய்து, இந்த மக்கத்து மண்ணை வளமானதாக ஆக்குமாறு உன் இரட்சகனிடம் கேட்டுப்பார். மறைந்த குறைஷிக் குலத்துத் தலைவர்களை மீண்டும் பிறக்கச் செய்து, அவர்கள் உம்மைப் பற்றி உறுதிமொழி கூறினால், நாங்கள் உம்மை நபியாக ஏற்றுக்கொள்வோம்; நீர் கூறும் அந்த அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தொடங்குகின்றோம்.”

“இதற்காகவெல்லாம் நான் தூதனாக அனுப்பப்படவில்லை. எதற்காக நான் அனுப்பப்பட்டேனோ, அந்தச் செய்தியை நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு அதுதான் நல்லது. மாறாக, நீங்கள் மறுத்தால், உங்களுக்கும் எனக்கும் இடையில் என் இரட்சகனான அல்லாஹ் தீர்ப்புச் செய்யும்வரை நான் பொறுமையாகக் காத்திருப்பேன்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இந்த உறுதியான பேச்சைக் கேட்ட குறைஷித் தூதுவர், “முஹம்மதே! நீர் கூறுவது உண்மைதானா? இதை உறுதிப் படுத்துவதற்காக வானவர் ஒருவரை வரச் செய்யுமாறு உம் இரட்சகனிடம் கேளும். மேலும் எங்களுக்குக் கோட்டை கொத்தலங்களை ஏற்படுத்தித் தந்து, தங்கம் வெள்ளிகளையும் தந்து, எங்களைச் செல்வச் செழிப்பில் ஆக்குமாறு உம் இரட்சகனிடம் கேளும். நீர் உழைக்காமல் உண்டு வாழுமாறும், செல்வச் செழிப்பில் திளைத்து வாழுமாறும், எங்களைவிடப் பணக்காரராகவும், புகழ் பெற்று வாழச் செய்யுமாறும் உம் இரட்சகனிடம் கேளும். இவையெல்லாம் சாத்தியமில்லை அல்லவா? அதனால், உமது கோரிக்கைக்கு நாங்கள் இணங்க மாட்டோம்” என்று மறுப்புரைத்துக் கிளம்பிச் சென்றார். 

‘முஹம்மதிடம் இனிமேல் பேசிப் பயனில்லை’ என்று முடிவெடுத்த குறைஷித் தலைவர்கள், அவர்களுள் முஹம்மதுக்குப் பாதுகாப்பளிக்கும் அபூதாலிபிடம் சென்று முறையிடுவதுதான் தமது அடுத்த முயற்சி என்று முடிவெடுத்து, அவரிடம் சென்று தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

தனது அழைப்புப் பணியை நிறுத்தவேண்டும் என்று, தன் தம்பி மகனுக்கு அறிவுரைத்தார் அபூதாலிப். ஆனால் முஹம்மதோ, தமது அந்தப் பணியானது இறைவன் தமக்கு அளித்த பொறுப்பாகும் எனக் கூறிவிட்டு, “சூரியன் உதிப்பதை நீங்கள் நிறுத்த முடியுமா? அதைப்போல்தான் என் மீது சாட்டப்பட்டுள்ள அழைப்புப் பணியும்” என்று கூறினார்கள்.

தம் தம்பி மகனின் கொள்கை உறுதிப்பாட்டை அறிந்த அபூதாலிப், “மகனே, உமது பணி தொடரட்டும்” எனக்கூறி, தன் சகாக்களிடம் தனது இயலாமையை வெளிப்படுத்தி ஒதுங்கிக்கொண்டார். ஆனால், நபிக்குத் தான் அளித்துவந்த பாதுகாப்பை மட்டும் நிறுத்தவில்லை.

உண்மை மார்க்கத்தின்பால் அழைக்கும் தமது பொறுப்பை விட்டுவிட்டு, எப்படித் தம்மால் இறைவனின் தூதராகவும், அவனது உவப்பிற்கு உரியவராகவும் இருக்கமுடியும் என்ற தம் நிலைபாட்டில் – அழைப்புப் பணியில் – உறுதியானார் முஹம்மது (ஸல்). இங்குதான் இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கம் தெளிவாக விளங்குகின்றது.

தமது உள்ளத்தில் உறுதியாக இருக்கும் அழைப்புப் பணியில் சற்றேனும் ஆட்டம் கண்டுவிடக் கூடாது; அப்படிச் சிறிய பலவீனம் தோன்றினால், தம் தலைமையில் ஒன்றிணைந்த தோழர்களிடம் பெரிய பின்னடைவையும், உறுதிப்பாட்டில் தளர்வையும் உண்டாக்கிவிடும் அல்லவா? ஒரு தலைமையைச் சுமந்தவர் மிகக் கடுமையான சோதனையையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தால்தான், அவருக்குக் கீழே இருக்கும் கொள்கைத் தோழர்களிடம் நம்பிக்கை உறுதிப்படும். இல்லாவிட்டால், அவர்களின் நம்பிக்கையிலும் நடத்தையிலும் மிகப்பெரிய பாதிப்பையும் மாற்று விளைவையும்  உருவாக்கிவிடும்!    

தலைவர் எதை எப்படிச் சொல்கிறார் என்பதைத் தொண்டர்கள் கண்களால் பார்க்கிறார்கள். அவர் சொல்வதை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறார்கள். சுய வாழ்க்கையில் தலைவர் என்ன செய்கின்றார் என்பதைப் பெரும்பாலும் பார்ப்பார்களே தவிர, என்ன சொன்னார் என்பதை எடை போட்டுப் பார்க்க மாட்டார்கள். அவர் சொன்னதன்படி நடந்தால், அவர் சொன்னதை மதிப்பார்கள். அதற்கு மாற்றமாக நடந்தால், அவர் சொன்னதில் மதிப்பில்லாமல் போய்விடும். தலைவர் சொன்னதன்படி நடந்து, அதில் விளையும் நன்மைகளைத் தொண்டர்கள் கண்கூடாகக் கண்டால், தலைவர் சொல்வதை முற்ற முற்ற நம்புவார்கள்; அப்போது அவர்களின் நன்மைகளும் நம்பிக்கையும் கூடிக்கொண்டே போகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தன்மை இப்படித்தான் இருந்தது. அன்னாரின் தன்மைகளை, குணாதிசயங்களை அவர்களின் எதிரிகள்கூட, அவர்களின் உயர் தன்மைக்குச் சான்றாக நின்றுள்ளார்கள் என்பதை இதற்கு முன் இத்தொடரின் இன்னொரு பகுதியில் கண்டுள்ளோம்.  அவற்றுள் ஒன்றுதான், இதற்கு முன் நாம் எடுத்துக்காட்டிய, ரோம பைசாந்திய ஆட்சியாளர் ஹிராக்லியசின் அவையில் அபூசுஃப்யான், தமது இஸ்லாமிய மத மாற்றத்திற்கு முன், முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி அளித்த உண்மைத் தகவல் ஆகும். 

மக்கத்துக் குறைஷியருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ‘ஹுதைபிய்யா’ எனும் இடத்தில் நிகழ்ந்த சமாதான ஒப்பந்தத்தின் பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்புக் கொடுத்து மடல்கள் எழுதியனுப்பினார்கள். அந்த நேரத்தில் தம் தோழர்களை விளித்து, “என்னருமை நண்பர்களே! நான் உங்களுள் சிலரை முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களிடம் இஸ்லாமியத் தூதனுப்பப் போகிறேன். பனீ இஸ்ராயீல் மக்கள் ஈசாவுடன் கொள்கை முரண்பாடு கொண்டதைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட தோழர்கள், “யா ரசூலில்லாஹ்! நாங்கள் ஒருபோதும் அதைப் போன்று கருத்து மாறுபாட்டைச் செய்யமாட்டோம். இப்போதே புறப்படுமாறு எமக்குக் கட்டளையிடுங்கள்! புறப்படுகிறோம்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். அந்நிய நாட்டு ஆட்சியாளர்களிடம் போய், இஸ்லாமியத் தூதுச் செய்தியைக் கொடுப்பது மிகவும் தொல்லை தரும் பணியாகும். ஏனெனில், அவர்கள் எப்போதுமே இஸ்லாத்தின்பால் எதிர்ப்பு உணர்ச்சியுடையவர்கள். ஆனால் நபித் தோழர்களோ, அத்தகைய முஸ்லிம் தூதுப் பணியில் பங்களிப்புச் செய்வதற்குத் தாம் பாக்கியம் பெற்றிருக்கவேண்டும் என்று கருதினார்கள். 

இதில் முதல் பாக்கியம் நபித்தோழர் திஹ்யா பின் தலீசா அல்-கல்பி (ரலி) என்ற நபித்தோழருக்குக் கிடைத்தது. ரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியான பைசாந்தியத்தின் ( Byzantine ) அரபுப் பகுதிக்குத் தூதராகச் செல்லும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அப்பகுதியின் தலைநகரமாகத் துருக்கியின் இஸ்தம்பூல் ( Constantinople ) இருந்தது. 

அதே நேரத்தில், கிழக்கில் இருந்த பாரசீகப் பேரரசு பைசாந்தியருக்கு மாபெரும் எதிரியாக இருந்து, அவர்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்துத் தோற்றோடச் செய்துவந்தது. அவர்களை எப்படியேனும் தோற்கடிக்கவேண்டும் என்று காய்களை நகர்த்தி வந்தனர் பைசாந்தியர். பாரசீகரோ, பைசாந்தியரை வெல்லும் முயற்சியில் முன்னேறிக்கொண்டே வந்தனர். முதலில் கி.பி. 613 இல் டமாஸ்கஸ், பாரசீகர்களிடம் வீழ்ந்தது. அதன் பின், அடுத்த ஆண்டே பாலஸ்தீனத்தைப் பாரசீகர்கள் வென்றெடுத்தார்கள். 

முன்னர் வலுவான ரோமப் படைத் தளபதியாக இருந்து வெற்றிகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்த ஹிராக்லியஸ் என்பவருக்கு பைசாந்தியத்தின் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து, வெல்ல முடியாமல் இருந்த பாரசீகரை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்கள் ரோமத் தலைவர்கள். கி. பி. 621 இல் ஹிராக்லியஸ் பாலஸ்தீனை வென்றெடுத்தார். மீண்டும் கி. பி. 630 இல் ஜெரூசலத்தை நோக்கி வெற்றுக் கால்களுடன் புனிதப் பயணத்தை மேற்கொண்டார் ஹிராக்லியஸ். அவருக்கு மக்கள் வழி நெடுக மலர்களைத் தூவி மரியாதை செய்தனர். அந்த நேரத்தில்தான் நபி (ஸல்) அவர்களின் கடிதம் ஹிராக்லியஸிடம் போய்ச் சேர்ந்தது.

முதலில் முஸ்லிம் தூதுவரை வரவேற்ற ஹிராக்லியஸ், அப்போது அங்கிருந்த அபூசுஃப்யானிடம் பல கேள்விகள் கேட்டு உண்மை நிலையை அறிந்த பின்னரும், இறுதியில் நபியின் அழைப்பை மறுத்துவிட்டான்! அதன் விளைவாக, எகிப்து, சிரியா, பாலஸ்தீன், ஜோர்தான், லெபனான் ஆகிய நாடுகளைத் தனது ஆளுகையிலிருந்து இழந்தான்!

ஹிராக்லியஸின் இந்த முழு நிகழ்விலும் கிடைக்கும் பாடம் என்ன தெரியுமா? அவனுக்கு இஸ்லாம் பற்றிய செய்தி போய்ச் சேர்ந்திருந்தும், அவன் தனது ஆட்சியதிகாரத்தைத் தேர்ந்தெடுத்து, இஸ்லாம் பற்றிய செய்தியைப் புறந்தள்ளிவிட்டான். இன்றுகூட, ஒருவன் எத்தனையோ உண்மைகளை, அவற்றால் ஏற்படும் நன்மைகளை அறிந்திருந்தும், இறைச் சட்டங்களைச் செயல்படுத்தும் நல்வாய்ப்பை இழந்துவிட்டு, மறுமை என்ற ஒன்று உண்டு என்பதை மறந்து, ஷைத்தானுக்கு அடிபணிந்துவிடுகின்றான்.

இந்த நிகழ்விலிருந்து கிடைக்கும் இரண்டாவது பாடம், தலைவர் தனது பொறுப்பில் உறுதியாக இருந்தால், அத்தலைவரின் எதிரிகூட, வேறு வழியின்றி, அவருக்குச் சார்பான உண்மையையே எடுத்துரைப்பார். இது முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து தெளிவாகக் காணப்படுகின்றது. அன்னாரின் எதிரிகள்கூட, அவரைப்பற்றிக் கூறும் பொய்க் காரணங்கள் வலுவற்றவையாகி, மதிப்பிழந்து போய்விடுகின்றன. அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளும், அவற்றின் இயல்பிலேயே வலுவிழந்து, பொய்யின் உடன்பிறப்புகளாகிவிடுகின்றன.

இந்த நிலையில், நடுநிலையாளர்கள்கூட, உண்மை தெளிவாகி வரும்போது, உண்மையில் தடுக்கி விழுந்துவிடுகின்றனர். முடிவில், தாமே நபியைப் பின்பற்றுவோராக மாறிவிடுகின்றனர். நாளடைவில் அவர்கள்கூட, ‘அல்லாஹ்வைத் திருப்தி படுத்த வேண்டும்’ எனும் உயர் நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். அவர்களுக்குப் பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடுகள் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

அண்ணலாரின் மக்கத்து நபித்துவ வாழ்வின் முதல் 23 ஆண்டுகளில் குறைஷிகள் பட்டம் சூட்டிய ‘பொய்யர்’ என்ற சொல், நபியை உண்மையும் நேர்மையும் உடையவர் என்ற மாற்றுப் புகழ்ச்சிக்குப் பொருத்தமானவராக்கி, அவர்களை மக்கள் மனங்களில் இடம் பிடித்தவராக உயர்த்தி, அன்னார் புகழின் உச்சிக்கு உயர்வைப் பெற்றுவிட்டார்கள். இப்பதவியைப் பெற இருபத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பொறுமை என்பது இலேசான காரியமில்லை. எனினும், பொறுமைதான் வெற்றியை ஈட்டித் தரும். 

அதிரை அஹ்மது

2 Responses So Far:

Iqbal M. Salih said...

//"பொறுமை என்பது இலேசான காரியமில்லை. எனினும், பொறுமைதான் வெற்றியை ஈட்டித் தரும்."//

"நிச்சயமாக."

sabeer.abushahruk said...

படித்துத் தலைவராக சிறந்த வழிகாட்டுதல்கள்

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு