Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெயில் காலத்தில் நம்ம ஊர்.. 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 21, 2015 | ,

காலைக்கதிரவன் கண் விழிக்கும் முன்னே அதிகாலைத் தொழுகை அமைதியாய் நிறைவேறும்.

உலகக்கல்விக்கு செல்லும் முன்னர் சிறார்கள் இறைக்கல்வி பெற பள்ளிக்குச்செல்வர். நன்கு பாடம் படிப்பர்.

சிலர் குளக்கரைக்கு சென்று உடல் குளியலுடன் உள்ளக்குளியலும் பெறுவர்.

காலைப்பசியாற சிலசமயம் காத்திருக்கும் நல்ல தயிர்க்கஞ்சி.

கடைத்தெருவுக்கு செல்ல கண்கள் கடிகாரத்தை நோக்கும்.

நல்ல கிளக்கன்,கொடுவாவை எண்ணி உள்ளம் விரைந்து ஓடும்.

இடையே வீட்டு சில்லரை வேலைகளை செல்லமாய்த்தரும் உம்மா.

ஆயிரம் சடைவுகளுடன் சில்லரை காசுக்கு உள்ளம் அதை ஏற்றுக்கொள்ளும்.

விளையாட நண்பர்கள் வீட்டு வாயிலில் வந்து நிற்பர்.

வீட்டில் வேண்டாவெறுப்பாய் ஏற்றுக்கொண்ட வேலைக்கு பெரும் வேட்டு வைப்பர்.

காய வைத்த கருப்பு சட்டையின் மேல் கருங்காகம் வெள்ளை எச்சம் போட்டு வேடிக்கை பார்க்கும்.

வீட்டு முற்றத்தில் உலர வைக்கப்பட்ட முறுக்கு வத்தலுக்கு கயிற்றில் கட்டப்பட்ட காகத்தின் இறகே காவல் காக்கும்.

கோடையில் வறண்ட குளங்கள் தன் சேற்றில் கேக் வெட்டி ஜோக்கு கொண்டாடும்.

கொய்யாவும், மாங்கனியும், தேறிய நெல்லிக்காயும், தித்திக்கும் பலாச்சுளையும்.

வெள்ளனமே வந்த வெள்ளரிப்பழமும், திண்ண வேண்டிய யாவும் தெரு ஆச்சியின் கூடையினில் திரண்டு கிடக்கும்.

மிளகாய்ப்பொடிபோட்ட கொத்து மாங்காய் கூடையில் காத்துக்கிடக்கும்.

பனை நொங்கு வண்டி சந்துபொந்தெல்லாம் வந்து போகும்.

அருமையான உணவுகளை அன்புத்தாய் ஆசையுடன் அள்ளித்தந்தாலும்

தெரு ஆச்சியின் திண்பண்டம் என்னவோ தித்திக்கும் எப்பொழுதும்

ஐவர் சேர்ந்து சகன் விருந்துண்டு நல்ல ஆறஅமர உறங்கி எழுந்து

சாய்ங்கால கால்பந்து போட்டி காண சக நண்பர்களுடன் சேர்ந்து சென்று எவனோ அடித்தக்கோலுக்கு கைத்தட்டி வாய்ப்புகழும்.

பொழுது சாந்து போன ராஜாமடபாலம் ஊர்த்திரும்ப உள்ளம் மறுக்கும்.

அங்கு சிறு ஓடையில் துள்ளும் மீன் திமிங்கிலமாய் உள்ளத்தில் தெரியும்.

கொண்டு வந்த கடலையும், சுண்டலும் நண்பர்களை கிண்டல் செய்ய வைக்கும்.

காசில்லாமல் இயற்கை ஏசிக்காற்றைத்தந்து கோடையின் புழுக்கம் தீர்க்த்து நம் உள்ளத்தை மல்லாக்க படுக்க வைக்கும்.

கடலின் உப்புக்காற்று கருவேல மரங்களை ஆட்டிப்படைக்கும்.

காட்டுப்பூனையின் சப்தம் இடையே பயத்திற்கு பாய் விரிக்கும்.

காணாமல் போன கம்பனை எண்ணி ரயில் நிலையம் காத்துக்கிடக்கும்.

அந்திமாலைப்பொழுது அந்த இரவுக்கு வழிவிட்டு நிற்கும்.

மின்வெட்டு வந்து ஊரை இருளில் மூழ்கடிக்கும்.

காத்தாடி நின்று போய் உடலில் வியர்வை ஊற்றெடுக்கும்.
குத்து விளக்கு மூலம் குடும்பமே வெளிச்சம் பெறும்.

குத்து விளக்கு சுடரோ காற்றில் தானே நடனம் ஆடும்.

ஏரிப்புறக்கரையின் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு ஊருக்கே கேட்கும்.

இட்டலிக்கார அம்மாவின் வியாபாரம் கொடி(பொடி)கட்டிப்பறக்கும்.

உம்மாவின் வயிறு பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி நன்கு நிறைந்திருக்கும்.

இடையே கொட்டாவி வந்து உறக்கத்திற்கு இருக்கை அமைக்கும்.

கையில் முடைந்த பாய் நாம் உறங்கு முன் அது படுத்துறங்கும்.
ஆந்தையின் சப்தம் இரவின் உச்சத்தை குறிக்கும்.

நாயின் ஊழை உறக்கத்தில் அச்சத்தை கொடுக்கும்.

உம்மாவின் அரவணைப்பு ஒட்டு மொத்த அச்சத்திற்கும் அரண் அமைத்து நிற்கும்.

இன்று இருப்பதையும், சென்று மறைந்ததையும் சேர்த்தே இங்கு எழுதி இருக்கிறேன். எங்கோ இருக்கும் உங்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கா? அப்படி இருந்தால் உங்கள் பின்னூட்டம் மூலம் தொடருங்களேன்....

இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

10 Responses So Far:

sabeer.abushahruk said...

நன்னாரி சர்பத்துக்கு மனம் ஏங்கும்

மண்பானைத் தண்ணீரில் மனம் லயிக்கும்

Shameed said...

நொங்கை பெருவிரல் கொண்டு நோன்டும்போது பீச்சி அடிக்கும் நீர்

Shameed said...

//கோடையில் வறண்ட குளங்கள் தன் சேற்றில் கேக் வெட்டி ஜோக்கு கொண்டாடும்.//

MSM மின் முத்திரை

Shameed said...

கொடுவா மீன் போட்டோ போடத நெறியாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்!!!!!

Anonymous said...

//கொடுவா மீன் போட்டோ போடத நெறியாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்!!!!!//

புதுசா புடிச்சு தாங்களேன்.... ! வலையில் சிக்காமல் இருப்பவர்களையும் சேர்த்து... இந்த வலைக்குள் (முன்னாள்) சிக்குண்டவர்கள் அனைவரையும் ! :)

sheikdawoodmohamedfarook said...

மோர்பானையும்மூக்குகுவளையோடுதிறியும்மோர் விக்கிறமுத்தம்மாவைகாணோமே ?

sheikdawoodmohamedfarook said...

கோடையிலேவரண்டநாவுக்குதண்ணீ கொடுத்த தண்ணி பந்தலையும்குயவன்செய்தமண்பானையையும்காணோமே?

sheikdawoodmohamedfarook said...

கோடையிலேஇளைப்பாறரோட்டோரம்சர்க்காருநட்டமரம்காணோமே?

sheikdawoodmohamedfarook said...

சாலையிலேநின்ன மரம்; சர்க்காரு வச்ச மரம்; கோடையிலேகுளிர்தரவேகுழிதோண்டிநட்டமரம்; காலையிலேகண்டமரம்,மாலையிலே காணலையே!

ZAKIR HUSSAIN said...

பதனியையும் ஐஸ்மோரையும் எதிர்பார்த்து ஊருக்கு வந்தால்....அவனுக என்னை இறக்கிவிட்டது என்னவோ தந்தூரி அடுப்பில்...

தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும்போதே [ குளிக்கும்போது ] கால் வியர்க்கிறது. ..காலில் தண்ணீர் ஊற்றும்போது தலை வியர்க்கிறது.

பெருத்துப்போன வட்டியும், சுயநலமும், நன்றி கெட்ட மனிதர்களும் பிரபஞ்சத்தின் க்ளைமேட்டையே மாற்றிவிடுவார்கள் என்று எனக்கு தெரிந்த இலங்கை நண்பர் சொல்வார்.


80 களின் தொடக்கத்தில் இருந்த உலகத்திற்கும் இப்போதைய உலகத்திற்க்கும் தட்ப வெட்ப நிலையில் மிகப்பெரிய மாற்றம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு