Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹிஜ்ராவின்போது தலைமைத்துவப் பண்புகள்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2015 | ,

:::: தொடர் - 16 ::::

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா-மதீனா ஹிஜ்ராப் பயணம் பற்றி இத்தொடரில் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.  காலக் கணக்கு பற்றிய கருத்தாடல்கள் நடந்தபோது, பலரும் பல பரிந்துரைகளை முன்வைத்தனர்.  நபியின் பிறப்பு அல்லது இறப்பு  போன்ற தருணங்களை ஒட்டிக் காலக் கணிப்பு வைக்கலாம் என்றெல்லாம் தோழர்கள் தம் கருத்துகளை முன்வைத்தனர்.  ஆனால், அப்போது இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்  இணைவைப்பில் மூழ்கியிருந்த மக்காவை விட்டு, ஓரிறைக் கொள்கையில் இணைந்துவிட்டிருந்த மதீனாவுக்கு வந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு, காலக் கணிப்பை வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

காரணம், பற்பல தியாகங்களைச் செய்து, அமைதியான அடைக்கலம் தேடி வந்து, இஸ்லாமிய வாழ்வில் இன்பம் கண்ட திருக்கூட்டத் தியாகத்தின் நினைவாகக் காலக் கணக்கெடுப்பைத் தொடங்குவது எத்துணைப் பொருத்தம்?  ‘ஹிஜ்ரா’ நிகழ்வில்தான் தம் அறிவுக்கு முன்னால் தம் இரட்சகனின் நாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் முஸ்லிம்கள்.  அதில்தான் வெற்றியும் ஈடேற்றமும் உண்டு என்று நம்பினர்.  அதில்தானே குலம், இனம், நிறம் என்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறைநம்பிக்கை அடிப்படையில் முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக மாறிய அற்புத நிகழ்வு ஏற்பட்டது?!

நூற்றாண்டுகளாக இருந்த குல வேறுபாடுகள் அழிக்கப்பட்டு, புதிய ஒரு சகோதரத்துவப் பிணைப்பு உண்டான நாட்கள் அவை. அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, நபியவர்களைப் பின்பற்றுதல் ஒன்று மட்டுமே மதீனத்துச் சமுதாயத்தின் முன்னிருந்த கோட்பாடாக இருந்தது.  ஆனால் இன்றோ, முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமியருக்கு உரித்தான ஹிஜ்ராக் கணக்கை விட்டுவிட்டு, அன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் துடைத்தெறிந்த மூடக் கொள்கைகளை எல்லாம் பின்பற்றி வருவது கவலைக்குரியது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  அன்றொரு நாள் பட்டப்பகல் வேளையில் ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.  அவர் என் தந்தையாரை நெருங்கி நின்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  “முஹம்மத் அவசரமான ஒன்றுக்காக அன்றி, இந்தத் தகிக்கும் பகல் வேளையில் வெளிக் கிளம்பி வரமாட்டார்” என்று தந்தையார் சொன்னார்.  வந்தவர் வீட்டுக்குள் நுழைந்த பின்னர், “தயைகூர்ந்து இங்கிருப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுங்கள்” என்றார்.  அதற்கு என் தந்தையார், “இறைத்தூதர் அவர்களே, அவர்கள் உங்கள் குடும்பத்தார்தாம்” என்றார்கள்.

இவ்வாறு கூறுவதற்கு, எவ்வளவு பாசப் பிணைப்பு அவர்களுக்கிடையில் இருந்திருக்க வேண்டும்! ‘உங்கள் வீடுதான் என் வீடும்’ என்று கூறுவதாக இருந்தால், அவர்களுக் கிடையில் எத்துணைப் பாசப் பிணைப்பு இருந்திருக்கவேண்டும்!  இது போன்ற அன்பும் பாசமும் நம்மிடத்தில் படிப்பினையாக இருக்க வேண்டும்?

“மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து புறப்படுவதற்கு எனக்கு என் இரட்சகனின் அனுமதி கிடைத்துவிட்டது” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.  அப்போது என் தந்தையார் கேட்டார்கள்:  “நானும் உங்களுக்குத் துணையாக வரலாமா?”  

“ஆம்” என்றார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.  இதைக் கேட்டவுடன், மகிழ்ச்சிப் பெருக்கால் என் தந்தையாரின் கண்கள் கண்ணீரை உகுத்தன.  மகிழ்ச்சி மிகுப்பால் ஒருவருக்குக் கண்ணீர் வரும் என்று அப்பொழுதுதான் நான் அறிந்துகொண்டேன்.  ஹிஜ்ரா என்பது, அன்றையச் சூழலில் படுபயங்கரமான பிரயாணமாகும்.  இத்தகைய பயணம் எவ்வளவு அபாயம் நிறைந்த ஒன்றாகும் என்பதை அறிந்திருந்தும், என் தந்தையார் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் என்றால், அவர்களுக்கிடையில் இருந்த அன்புப் பிணைப்பு எவ்வாறாக இருந்திருக்கும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம் இரண்டு ஒட்டகங்களை ஆயத்தம் செய்யுமாறு கூற, என் தந்தையார், “எனக்குத் தெரியும், இந்த மக்கத்துக் கொடுமையிலிருந்து உங்களைக் காக்க உங்கள் இரட்சகன் கட்டாயம் அனுமதி தருவான் என்று.  எனவே, நான் இரண்டு ஒட்டகங்களை ஆயத்தம் செய்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.  

“இந்த வாகனங்களுக்கு வாடகையாக நான் பணம் செலுத்துவேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  “உங்களை எது மகிழ்விக்குமோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன்” என்றார்கள் என் தந்தையார்.  இதுதான் இஸ்லாமிய உபசரிப்பின் அடையாளம்.  விருந்தினர் விருப்பத்தையே ஏற்கவேண்டும்;  அவர்கள் மீது அன்பால் எதையும் திணிக்கக் கூடாது.

முன்னதாக, நபியவர்கள் தமது படுக்கையில் அலீ (ரலி) அவர்களைப் படுக்கச் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்த அடைக்கலப் பொருள்களை அவரவரிடம் திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பையும் அலீயிடம் கொடுத்திருந்தார்கள்.  அலீயவர்கள் இதற்கு முழுமையாகச் சம்மதித்தார்கள்.  இதுதான் நபித்தோழர்களின் நற்பண்பு.  அவர்கள் தம் குடும்பத்தைவிட, நபியின் குடும்பத்தையும் அவர்களின் கட்டளைகளையும் மேலாக மதித்தார்கள்.  அவர்களுக்கு இறைத்தூதர் மீது எத்தகைய பாசப் பிணைப்பு இருந்ததென்றால், தம்முடைய உயிரைவிட மேலாக நபியவர்களை நேசித்தார்கள்.  

நபியவர்களும் அருமைத் தோழர் அபூபக்ரும் புறப்படத் தொடங்கி, மக்கா மதீனா வழியை விட்டு மாறி, வேறு திசையில் புறப்பட்டுப் பின்னர் மதீனாவின் வழிக்கு மாறி, எதிரிகளின் பார்வையை விட்டுத் தப்பிக்க, வழக்கமான நெடுஞ்சாலையை விட்டும் தொட்டும் மாறி மாறிச் சென்றுகொண்டிருந்தார்கள்.  பயணத்தின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது தூரம் நபியவர்களின் முன்பாக நடப்பார்கள்; பின்னர் அதை விட்டு அண்ணலின் பின் பக்கமாக நடப்பவர்களாக இருந்தார்கள்.

இதன் காரணமென்ன என்று அவரிடம் கேட்டபோது, “எதிரி நம்மைத் தாக்க வரும்போது முன்னாலிருந்து வரக்கூடும்; அல்லது பின்னாலும் வரலாம்.  எனவேதான் நான் அவ்வாறு செய்கிறேன்” என்று என் தந்தையார் பதில் கூறினார்கள்.  “இதனால் ஆபத்து உமக்கு வருமா?  அல்லது எனக்கு ஏற்படுமா?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.  “எனக்குத்தான் யா ரசூலில்லாஹ்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.  ஒரு வழியாக, இருவரும் மக்காவின் யமன் திசையில் இருக்கும் ‘தவ்ர்’ குகைக்கு வந்து சேர்ந்தார்கள்.  எதிரிகளின் பார்வையை விட்டு வெகு தூரம் வந்துவிட்டதாக ஆறுதல் கொண்டார்கள்.  அன்றிரவை அங்கேயே கழிக்க விரும்பி, அருமைத் தோழர் அபூபக்ர் அவர்கள், தாம் இருவருக்கும் பாதிப்பு ஒன்றும் இல்லாத அளவுக்கு அக்குகையைத் தூய்மைப் படுத்தினார்கள்.  இப்போது இருவரும் மக்கத்துக் குறைஷிகளின் தேடல் முயற்சியைவிட்டு வெகு தொலைவில் வந்துவிட்டார்கள் என்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டார்கள்.  

இருப்பினும், தேடியவர்களின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டிருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.  அடுத்த நாள் காலையில் குகையைச் சுற்றி மனிதர்களின் குரல் கேட்டபோது, தோழர் அபூபக்ர் அவர்கள் குகை வாசலை நோக்கியதும் திடுக்கிட்டார்கள்!  அங்கே தேடி வந்த சிலரின் காலடியைக் கண்டார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே!  நம்மைத் தேடிவந்துள்ள இவர்களுள் ஒருவன் குனிந்து நோக்கினாலும், நாம் அவனுடைய கண்ணில் பட்டுவிடுவோம்!” என்று பதட்டத்துடன் கூறினார்கள்.  அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! நாம் இருவர் மட்டுமன்றி, மூன்றாவதாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று ஆறுதல் படுத்தினார்கள்.

அந்த நிகழ்வை ஒட்டியே சில ஆண்டுகள் கழிந்து, கீழ்க்காணும் இறைவசனம் இறங்கிற்று:  “நம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அவருக்கு யாதொரு இழப்புமில்லை.  இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, திண்ணமாக அவருக்கு அல்லாஹ் உதவி செய்தே இருக்கின்றான்.  இருவரும் குகையில் இருந்தபோது, இருவருள் ஒருவர் தம் தோழரிடம், ‘கவலைப் படாதீர்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்’ என்று கூறிய நேரத்தில், அவர் மீது அல்லாஹ் தன்னிடமிருந்து அமைதியை இறக்கியருளினான்.  மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினான்.  இறைமறுப்பாளர்களின் வாக்கைக் கீழாக்கினான். எப்போதும் அல்லாஹ்வின் வாக்குதான் மேலோங்கும்.  அல்லாஹ் மிகைத்தவன்;  ஞானமுள்ளவன்.”                                                                               (9:40)

நபியவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில், பிறர் பொறாமைப்படும் அளவுக்குச் சிறப்பான பிணைப்பொன்று இருந்தது.  அது அச்சம் மிகுந்தபோதும் துன்பங்கள் ஏற்பட்டபோதும் துணை நிற்கும் தோழர்களுக்கு இடையில் ஏற்படும் ஒன்றாகும்.  இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் இருந்தபோது, சிலர் தமக்கிடையே, அபூபக்ர் – உமர் இவர்களுள் எவர் உயர்ந்தவர் என்பது பற்றித் தர்க்கம் செய்துகொண்டிருந்தனர்.  இதையறிந்த உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் ஒரு நாள் வாழ்க்கையானது, இந்த உமரின் குடும்பத்தார் அனைவரின் வாழ்நாள் முழுவதைவிட மேலானதாகும்” என்று கூறிப் பொதுமக்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.  ஹிஜ்ராவின்போது தோழர்கள் மற்றவர்களைவிட, அபூபக்ரை நபியவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான சான்றுகளுள் இதுவும் ஒன்று.

அவர் இயல்பான தலைவர்; அறிவாளி;  பல சூழல்களில் சிறந்தவற்றை  நபியவர்களுக்குப் பரிந்துரைப்பவர்;   நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இவர்தான் தலைவர் என்று தேர்வு செய்யப்பட்டு, மக்களால் இறைத்தூதரின் பிரதிநிதியாகப் பொறுப்பளிக்கப் பெற்றவர்;  வேறு யாரும் அடையப் பெறாத அளவுக்கு, அல்லாஹ்வின் தூதரின் அனுக்கத்தைப் பெற்றவர்; ‘ஷைக்’ என்னும் முதியவராக மக்களால் மதிக்கப் பெற்றவர்.

‘தவ்ர்’ குகையில் அவ்விருவரின் மூன்று நாள்கள் கழிந்தன.  அபூபக்ர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் தனது பகற்பொழுதை மக்காவில் கழித்துவிட்டு, இரவு முழுதும் இருவருக்கும் துணையாக அக்குகையில் கழிப்பார்.  அவர் மாலையில் குகையைவிட்டுப் புறப்பட்ட பின்னர், அவரின் காலடித் தடத்தை அழிக்கும் விதமாக, அபூபக்ரின் பணியாளர் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவர் தனது ஆட்டு மந்தையை ஓட்டிவந்து, அப்துல்லாஹ் சென்ற காலடித் தடத்தைப் போக்கிவிடுவார்.  அத்துடன் குகையில் இருக்கும் இருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து உணவளிப்பார்.

அதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் என்பவர் இருவருடனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, நபிக்கும் அபூபக்ருக்கும் மதீனாவை நோக்கிய பெருவழியை விடுத்து, மாற்று வழியைக் காட்டி அழைத்துச் செல்வதற்காக அமர்த்தப் பட்டிருந்தார்.

இதற்கிடையில், மக்காவில் குறைஷிகள், முஹம்மதையும் அபூபக்ரையும் கொன்றோ உயிருடனோ பிடித்துத் தருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.  அந்தக் காலத்தில் ஒட்டகம்தான் ஒருவருடைய செல்வாக்கின் அடையாளமாகக் கருதப்பட்டிருந்தது.  

குறைஷிகளின் அறிவித்தலைச் செவியுற்றிருந்த சுராக்கா இப்னு மாலிக் என்பவர் ஒரு நாள் தன் கூட்டத்தாருடன் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வந்த ஒருவர், தான் இருவரைக் கண்டதாகவும், அவர்கள் நபியும் அபூபக்ருமாகத்தான் இருப்பர் என்றும் கருத்தறிவித்தார்.  இப்னு உரைக்கித்தின் மனத்தில் பொறி தட்டியது போன்ற உணர்வு!  ‘நிச்சயமாக அவ்விருவரும்தான்’ என்று தனக்குள் கூறிக்கொண்டு, தான் ஒட்டகப் பரிசைப் பெறவேண்டும் என்று தீர்மாணித்தவராக, செய்தி கொண்டுவந்த ஆளிடம், “நீ கண்டது வேறு யாரோ இருவர்” என்று மறுப்புரைத்தார்.  தன் கூட்டத்தார் அங்கிருந்து பிரிந்து சென்ற பின்னர், தன்னிடம் இருந்த வேகமாக ஓடும் குதிரையையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, வழிப்போக்கன் கூறிய திசையில் பறந்து சென்றார்.

அல்லாஹ்வின் தூதரவர்கள் இறைவசனங்களை ஓதியவர்களாக முன்னால் செல்ல, தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்னால் நடந்துவர, அவர்கள் வலைந்து வலைந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார் இப்னு உரைக்கித்!  அபூபக்ரும் இதைப் பார்த்துவிட்டார்!  நபியவர்களிடம், அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொண்டார்.  மறுபடியும் திரும்பிப் பார்த்தபோது, குதிரையின் கால்கள் மணலில் புதைந்து இருந்ததையும், இப்னு உரைக்கித் கீழே வீழ்ந்து கிடந்ததையும் கண்டார்!  இறைவனைப் புகழ்ந்தவாறு இருவரும் முன்னேறிச் சென்றபோது, மீண்டும் சுதாரித்துக்கொண்டு, சுராக்கா வீழ்ந்த நிலையிலிருந்து தன் குதிரையை எழுப்பி அவ்விருவரையும் பின்தொடர்ந்தார்.

சிறிது தொலைவு சென்ற பின் மீண்டும் குதிரை மணலில் புதைய, சுராக்கா வீழ்ந்தார்!  அவருக்கோ வியப்பு! அடுத்த முறையும் குதிரையை எழுப்பிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, முன்னைப் போன்றே முகம் குப்புற வீழ்ந்தார்!  இது அசாதாரணமான நிகழ்வென்பதை உணர்ந்துகொண்ட சுராக்கா, வேறு வழியின்றி, நபியவர்களிடம் மன்னிப்பை வேண்டி மன்றாடினார்.  

மன்னிக்கும் மாண்பினை இயல்பாகப் பெற்ற மாநபி (ஸல்) அவர்கள், அவர் திருந்தட்டும் என்று கருதி, சுராக்காவை மன்னித்தார்கள்.  தமக்களித்த மன்னிப்பையும் உறுதி மொழியையும் எழுத்தில் தருமாறு வேண்டினார் சுராக்கா.  நபியவர்கள், எழுதத் தெரிந்த அப்துல்லாஹ் இப்னு உரைக்கித்திடம் வாசகத்தை எழுதுமாறு கூறவே, அவரும் எழுதினார்.  எழுத்தைப் பெற்ற சுராக்கா, குறைஷிகளிடம் திரும்பிச் சென்று, நபியவர்களைப் பிடிப்பது முடியாதது என்றும், அது வீண் முயற்சி என்றும் கூறினார்.  நபியும் அபூபக்ரும் வழிகாட்டியும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

பாருங்கள்!  மூன்றுபேர், தகிக்கும் வெயிலில், பாலை வெளியில், அவர்களைப் பிடித்துக் கொலை செய்யத் துடிக்கும் எதிரியால் துரத்தப்படுகின்றனர்!  எத்துணை ஆபத்தான சூழ்நிலை!  ஆனால் இன்றோ, மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதை ஒரே சொல்லில் நாம், ‘ஹிஜ்ரத்’ என்று சொல்லிவிடுகின்றோம். அப்பயணம் எதற்காக மேற்கொள்ளப் பட்டது என்பது பற்றிய ஆய்வோ, சிந்தனையோ, பாராட்டோ, விளக்கமோ நமக்கில்லை. பசி, தாகம், ஆபத்து, சிரமம், பாதுகாப்பின்மை ஆகியவற்றுடன் இப்பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற சிந்தனை கொஞ்சம்கூட இல்லை.  இவற்றுக்கிடையில், அல்லாஹ்வின் தூதருக்கு இருந்த அசைக்க முடியாத அச்சமின்மை!  இதுதான் தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய பண்புகளுள் தலையாயது.  அந்தச் சூழலில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைவிட தைரியசாலி யாருமே கிடையாது.

இனி, அவர்களின் ஹிஜ்ராப் பயணத்தைத் தொடர்வோம்.  அண்ணலும் அபூபக்ரும் அந்தப் பாலைப் பயணத்தின்போது ஓர் இளைப்பாறும் இடத்தை வந்தடைந்தனர்.  அக்காலத்தில் தொலைதூரப் பயணிகள் இளைப்பாறிச் செல்வதற்காகப் பாலைப் பிரதேசத்தின் இடையிடையே வழிதங்கு கூடாரங்கள் அமைந்திருக்கும்.  அவற்றின் உரிமையாளர்கள், கணவன் மனைவி பிள்ளைகள் சகிதம், வழிப்போக்கர்கள் இளைப்பாறும் விதத்தில் தண்ணீர், ஆடு மற்றும் ஒட்டகப் பால், பேரீத்தம்பழம் போன்ற உணவுப் பண்டங்களை வழங்கிப் பயணிகளுக்கு ஆதரவளிப்பது வழக்கம்.  அத்தகைய ஒரு கூடாரம், ‘உம்மு மஅபத் கூடாரம்’ என்ற பெயரில் புகழ் பெற்றதாக இருந்தது.  அதைத் தமது பயண வழியில் கண்டு, பயண இடைநிறுத்தம் செய்தனர் அண்ணலும் அபூபக்ரும்.

அவ்விருவரும் வந்து தங்கிய நேரத்தில், உம்மு மஅபதின் கணவர் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார்.  அவர் இல்லாதபோதும், வருகின்ற பயணிகளை உபசரிப்பது, உம்மு மஅபதின் பொறுப்பாகும்.  “எமக்கு உணவாக ஏதேனும் உங்களிடம் உண்டா?” என்று அப்பெண்ணிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  “என்னிடம் அப்படி ஏதேனும் இருந்தால், நீங்கள் கேட்கும்வரை நான் சும்மா இருந்திருக்க மாட்டேனே” என்று பதில் அளித்தார் அம்மாது.  

பாலைவனத்து அரபுகள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்.  அப்பெண்ணின் ஆடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்ட நிலையில், கூடாரத்தின் மூலையில் ஒரு நோஞ்சான் ஆடு மட்டும் கட்டப்பட்டிருந்தது.  அதனைக் கண்ட பெருமானார் (ஸல்), “அதோ, அந்த ஆட்டில் நாங்கள் கொஞ்சம் பால் கறந்துகொள்ளலாமா?” என்று கேட்டார்கள்.  “அந்த ஆடு உடல் நலத்துடன் இருக்குமாயின், மற்ற ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு அல்லவா சென்றிருக்கும்?  இந்த நோய் பிடித்த நோஞ்சான் ஆட்டில் உங்களுக்கு என்ன இருக்கப்போகிறது?” என்று பதில் அளித்தாள் உம்மு மஅபத்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்கவே, அதற்கு அப்பெண் சம்மதித்தார்.  அந்தக் கூடாரத்தில் இருந்த மிகப் பெரிய பாத்திரத்தை எடுத்துத் தருமாறு கேட்டனர் அண்ணல்.  அப்பெண்ணும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் பாத்திரத்தை எடுத்துக் கொடுத்தாள்.  ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்,  அந்த ஆட்டின் மடியை ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி, வலக்கையால் தட்டினார்கள்.  என்ன ஆச்சரியம்!  அந்த நோஞ்சான் ஆட்டின் மடி புடைத்துப் பெரிதாகிற்று!  பாத்திரத்தில் பால் ஒழுகத் தொடங்கிற்று!  அப்பாத்திரத்தின் விளிம்பு வரை பால் நிறைந்தபோது நின்றது!  

முதலில் பால் பாத்திரத்தை உம்மு மஅபதிடம் கொடுத்து, தேவையான பாலை எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் கூறினார்கள்.  அப்பெண்ணும் தன் வியப்பிலிருந்து விடுபடாத நிலையில், தனக்கு வேண்டிய பாலை எடுத்துக்கொண்டு, எஞ்சிய பாலைத் திருப்பிக் கொடுத்தார்.  நபியவர்கள் அபூபக்ரைக் குடிக்கச் சொன்னார்கள்.  அன்னார் குடித்து முடிந்தபின், வழிகாட்டியிடம் குடிக்கக் கொடுத்தார்கள்.  கடைசியாக, அண்ணலார் (ஸல்) அவர்கள் குடித்துவிட்டு, எஞ்சிய பாலுடன் பாத்திரத்தை உம்மு மஅபதிடம் திருப்பிக் கொடுத்தார்கள்.  பின்னர் அப்பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டுத் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இருள் கவியத் தொடங்கியபோது, அப்பெண்ணின் கணவர் ஆட்டுக் கிடையுடன் கூடாரத்திற்குத் திரும்பி வந்தார்.  அதுவரை, சற்று முன் நடந்த நிகழ்வின் வியப்பிலிருந்து மீளாத உம்மு மஅபத், தன் கணவரிடம், நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினார்:

“இன்று அற்புத மனிதர் ஒருவரைக் கண்டேன்.  அழகிய முகத்தை உடைய ஒல்லியான மனிதர்.  அவருடைய தலை நடுத்தரப் பருமன் கொண்டது.  நேரிய பார்வையுடையவர்.  நீண்ட முடிகளுடன்கூடிய  கண்ணிமைகளை உடையவர்.  அடக்கமான குரலையும் அறிவார்ந்த சொற்களையும் உடையவர்.  நீண்ட முடியையும் நெடிய கழுத்தையும் கொண்டவர்.  அடர்த்தியான தாடியை உடையவர்.  அவர் மவுனமாக இருக்கும்போது, கம்பீரமாகத் தோன்றினார்; பேசும்போது அவரின் அறிவு, இதயங்களில் இடம் பிடித்தது.  அவருடைய பேச்சு கவர்ச்சியாக இருந்தது.  முத்துப் பரல்கள் கொத்துக் கொத்தாகக் கோர்த்தது போன்ற அழகு அதில் இருந்தது.  தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அவரின் தூய்மை தெரிந்தது.  அருகிலிருந்து பார்ப்பதற்கு அமைதி தழும்பியது.  நடுத்தரமான உயரத்தை உடையவர்.  நெட்டையரும் அல்லர்; குட்டையரும் அல்லர். வந்த மூவருள் மிக அழகானவர்.  அவருடன் வந்தவர்கள், அவரின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டனர். சிறந்த உதவியாளர்களையும் பணியாளர்களையும் உடையவர்.  அவர்கள் இவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டனர்; மறுப்பு இல்லாத மாண்பாளர்!”    

இதற்கு அப்பெண்ணின் கணவர் சொன்னார்:  “இந்த மனிதர்தான் இறுதித் தூதர் முஹம்மதாக இருக்கக்  கூடும்.  மக்கத்துக் குறைஷிகள் இவரைத்தான் தேடுகிறார்களாம்.  அந்த மனிதரைச் சந்தித்திருந்தால், நான் அவரிடம் உறுதிமொழி கொடுத்து முஸ்லிமாகியிருப்பேன்.”  

அப்போதுதான், உம்மு மஅபத் அந்த நபியின் கையில் உறுதிமொழி அளித்து இஸ்லாத்தைத் தழுவிய தகவலைத் தன் கணவரிடம் கூறினார்.

எந்தத் திருநகரை நோக்கிச் சென்றார்களோ, அந்த நகரில் வாழ்வாதாரங்களும் வசதிகளும் முஸ்லிம்களுக்கு வேண்டும் எனும் நாட்டம் கொண்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் ௮இவ்வாறு இறைஞ்சினார்கள்:

“அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் மதீனத்த, கஹுப்பினா மக்கா அவ் அஷத்து” (அல்லாஹ்வே!  நாங்கள் மக்காவின் மீது நேசம் வைத்தது போல், அல்லது அதைவிடக் கூடுதலாக மதீனாவின் மீது எங்களை நேசம் கொள்ளச் செய்வாயாக!)

மதீனாவின் வளவாழ்விற்காக இன்னும் இறைஞ்சினார்கள்:  “யா அல்லாஹ்!   மக்காவின் வளவாழ்வைவிட இரு மடங்கு வளவாழ்வை மதீனாவில் ஆக்கித் தருவாயாக!”  யுகவாழ்வின் முடிவுக்கு முன்னால் ‘தஜ்ஜால்’ மதீனாவிற்குள் நுழைவதை அல்லாஹ் தடுத்து வைத்துள்ளான். துன்பங்களின்போது, சகிப்புத் தன்மையை மேற்கொள்பவர் களுக்கு இரு மடங்கு கூலியுண்டு.

முஸ்லிம்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, மாறுபட்ட சூழலால், அங்கு நோய் பரவியிருந்தது.  நபித்தோழர்கள் மதீனாவுக்கு வந்து இருப்பிடங்களை அமைத்துக்கொண்டபோது, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.  அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  அந்தச் சூழலில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “எவரெல்லாம் இந்தக் கடுமையான சூழலைப் பொறுத்துக்கொண்டார்களோ, அவர்களுக்காக மறுமையில் நான் பரிந்துரைப்பேன். எவரெல்லாம் இந்த மதீனாவில் இறந்துபோக விரும்புவார்களோ, அவர்கள் அப்படியே செய்யட்டும்.  ஏனெனில், அவர்களுக்கும் நான் மறுமையில் பரிந்துரை செய்வேன்.”

நன்மனத்துடன் கேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.  இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாபு (ரலி) மதீனாவில் இருக்கும் நிலையில் தமக்கு ‘ஷஹீத் என்னும் வீரத் தியாக இறப்பு நேரிடவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்;  அன்னார் விரும்பியபடியே, ஒரு நாளன்று அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கிருஸ்தவ அடிமை ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு,  அவர்களின் இறப்பு ‘ஷஹீது’டைய நிலையில் மதீனாவில் நிகழ்ந்தது!

ஒருமுறை நபி (ஸல்) கூறினார்கள்:  “மதீனத்து மக்களுக்கு எதிராக எவர் சதித் திட்டம் தீட்டினாரோ, அவரை அல்லாஹ் உப்பு கரைவது போன்று கரைத்து வேதனை செய்வான்.  மதீனா புனிதமான நகராகும்.  இதிலுள்ள பசுமரங்களை வெட்டுவதும், உயிர்ப் பிராணிகளைக் கொள்வதும், போர்க்கருவிகளை வைத்திருப்பதும், போர் புரிவதும் தடை செய்யப்பட்டதாகும்.”  

இந்த ‘ஹிஜ்ரத்’துப் பணத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளுள் ஒன்றிலிருந்தேனும் பாடம் படித்துக்கொள்வது மிக விரும்பத் தக்கதாகும்.  இந்த ‘ஹிஜ்ரா’வையே இஸ்லாமிய நாள் கணிப்புக்கு ஆதாரமாகச் செயல்படுத்தத் தொடங்கியது, இதன் சிறப்புக்குச் சான்றாகும்.  நான் முன்பு குறிப்பிட்டதைப் போன்று,  இந்தப் பயணமானது,  அன்று பல தெய்வக் கொள்கையில் மூழ்கி  நெறியிழந்த மக்காவிலிருந்து, நபிக்கு அமைதியையும் ஆறுதலையும் வழங்கிய மதீனாவுக்குப் புலம்பெயர்ந்ததைத் தொடக்கமாகக்  கொண்ட  ‘ஹிஜ்ரா’தான், இஸ்லாமிய ஆண்டாகக் கொள்ள மிகப் பொருத்தமானதாகும். நபியுடைய பிறப்பு அல்லது இறப்பின் நினைவாகக் கொள்ளத் தக்கதன்று.  இஸ்லாமானது வெற்றுக் கொள்கைகளை விடுத்து, அல்லாஹ்வுக்கு அடிபணிந்த செயலாக்கத்தை அடிப்படையாகக்  கொண்டதாகும்.   

எனவே, ‘ஹிஜ்ரா’ என்பது, அல்லாஹ் விரும்பாதவற்றை விடுத்து, அவன் விரும்பும் ஒன்றின் பக்கம் கடந்து செல்வதாகும்.  புலம்பெயர்ந்து செல்லல் என்பது, மனித வாழ்வின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்யாத, கட்டுப்பட்ட நிலைக்கு மாறிச் செல்வதாகும்.  இத்தகைய ‘ஹிஜ்ரா’தான் நம்மிடத்திலும் ஏற்படவேண்டிய ஒன்றாகும்.  சுருங்கச் சொன்னால், தீமைகள் நிறைந்த இடத்திலிருந்து நன்மைகள் நிறைந்த இடத்துக்குப் புலம்பெயர்ந்து செல்வதாகும்.  இந்தப் பாதையில் ஷைத்தான் குறுக்கிட்டு, ‘எல்லா இடங்களும் தீமைகள் நிறைந்தவையே’ என்று போதித்துக் குறுக்கே நிற்பான்.

அழைப்பியல் வரலாற்றில் ‘ஹிஜ்ரா’தான் உண்மையான நிலையாகும்.  முன் வாழ்ந்த இறைத் தூதர்கள் அவர்களின் வாழ்நாட்களில் அடித்துத் துரத்தப்பட்டார்கள்; கொலையும் செய்யப்பட்டார்கள்!  இறைத் தூதரல்லாத இன்னும் பலர்  தமது அழைப்புப் பணியின் காரணமாக, ஆனவக்காரர்களால் அழித்தொழிக்கப் பட்டார்கள்! இந்த நிலையானது, இக்காலத்திலும் உண்மையின் எதிரிகளால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதுதான், அன்று நபியவர்களுக்கு இறைமறை அருளப்பட்டபோது, வரகா இப்னு நவ்ஃபல் என்ற முதியவரால் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முன்மொழியப்பட்ட உண்மையாகும்.  எதிர்ப்பு, வேதனை, நிந்தனை, ஊரை விட்டுத் துரத்துதல் முதலான சோதனைகளுக்குப் பின்னும், அழைப்பியல் நெறிகள் தொடரும்போது கிடைக்கும் ‘வெகுமதி’களோடு தொடர்புடைய சோதனையாகும்.  இதனால்தான், ‘ஹிஜ்ரா’ என்னும் புலம்பெயர்தல் குறிப்பிடத் தக்க ஒன்றாகின்றது.

குர்ஆனுக்கு, ‘ஃபுர்கான்’ எனும் மற்றொரு பெயரும் உண்டு.  காரணம், இவ்வேதமானது, நன்மையைத் தீமையிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. இதனால்தான் நபியவர்களின் வாழ்நாளில் நடந்த முதல் பெரும்போரான ‘பத்ரு’ப் போரும், நன்மையைத் தீமையிலிருந்து பிரித்துக் காட்ட நடந்த போர்களும் ‘ஃபுர்கான்’ என்ற பெயரைப் பெறுகின்றன.  ‘தஅவா’ எனும் நற்பணிக்கு எதிராக ஷைத்தானும் அவனுடைய தோழர்களும் குறுக்கே நிற்பார்கள்.  இந்த நிலை இன்றும் நடைபெற்றே வருகின்றது.  இஸ்லாம் எப்பொழுதுமே தன்  அடியார்களுக்கு  நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்டி, அவர்களைச் சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகின்றது.

இடையில், இத்தொடரின் மூல நூலாசிரியர் தனது ஹஜ்ஜின்போதான நிகழ்வுகளின் பக்கம் நமது கவனத்தைத் திருப்புகின்றார்.

எனது மக்கா-மதீனப் பயணத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது ‘மஸ்ஜிதுன் நபவி’யின் மினாராக்களையும் பார்க்கின்றேன்.  மக்காவிலிருந்து மதீனாவுக்குச் செல்ல நபியவர்கள் எந்த வழியைத் தெரிவு செய்தார்களோ, அதே வழியில்தான் (‘தரீக் அல்ஹிஜ்ரா’) நாங்களும் செல்லுகின்றோம்.  அன்றைய சஊதி மன்னரின் ஆணைப்படி, எந்த வலைந்து நெளிந்த  பாதையில் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தார்களோ, அதே வழியை அடையாளம் கண்டு, புதிய நெடுஞ்சாலை அமையவேண்டும் என்ற நோக்கில் போடப்பட்ட ஹிஜ்ராவின் வழி என்ற பொருள்படும் ‘தரீக் அல்-ஹிஜ்ரா’வாகும் அந்த நெடுஞ்சாலை. அப்பணியை முடிக்க ஏராளமான பொருட்செலவு ஆகியிருக்கும்.  மலைகளையும் படுபாதாளங்களையும் ஊடுருவிச் சென்று, அமையப் பெற்றதாகும் இப்பெருவெளி.  1400 ஆண்டுகளுக்கு முன் நபியவர்கள் எந்த வழியில் மதீனாவுக்கு வந்தார்களோ, அதே வழியைக் கண்டுபிடித்து,   இன்றும் ஹாஜிகள் அதே வழியில்தான் மதீனாவுக்கு வரும் வகையில் அப்பெருவழி அமைந்துள்ளது!

ஆனால் இன்று நாமோ, புதுமையான வாகனங்களில் ஏர்கண்டிஷன் இணைப்புடன் சுகமாகச் சென்று வருகின்றோம்.  இதற்கு மாறாக, அன்று இறைத்தூதரும் அவர்களுடன் இப்பயணத்தில் பங்குபெற்ற இருவரும் எப்படி மதீனாவுக்குச் சென்றார்கள் தெரியுமா?  சுட்டெரிக்கும் வெயிலில், சுடுமணலிலும் செங்குத்தான மலைகளிலும், அதலபாதாளங் களிலும், மனித சஞ்சாரமற்ற காடுகளிலும் புகுந்து புகுந்து, எதிரிகளின் கண்களில் பட்டுவிடாமல் அஞ்சியஞ்சிப் பயணம் செய்தனர்!

இன்றோ நமக்கு?  ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள், மலைகளைத் தாண்டியுள்ள அதலபாதாளங்கள் எத்தனை அடி உயரம் என்றும், ‘எச்சரிக்கையாகச் செல்லுக’ என்ற அறிவிப்பும், பெருவழியின் ஒரு பக்கத்தில் நமது வாகனத்தை நிறுத்திவிட்டுக் குனிந்து நோக்கினால், அந்தப் பாதாள வழி மயக்கத்தை உண்டாக்கும் விதத்தில் கண்களுக்கு முன்னால் ஆழமாகக் காட்சி தரும்!  இன்றுபோல், அன்றைய வாழ்க்கை இலகுவானதன்று.  தம் உறுதியில் தளராத குணத்தைக் கொண்டவர் மாநபியவர்கள்!  போர் வீரர்!  தமது குறிக்கோளை அடைவதில் சளைக்காத மாமனிதர்!

அன்னாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள் ஒரே வரியில், ‘அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றார்கள்’ என்று படித்துவிடுவார்கள்.  ‘ஹிஜ்ரத்’ சென்றார்கள் என்ற இரு சொற்களில் எதைக் காண்பார்கள்?  எதைச் சிந்திப்பார்கள்?  உடலாலும் உணர்வாலும் ஆன்மிகத்தாலும்  தொடர்பு படுத்திச் சிந்தித்ததுண்டா?  நபி அவர்களைப் பொறுத்தவரை, ‘ஹிஜ்ரத்’ என்பது, சொந்த நாட்டை, பிறந்தகத்தை, உறவினர்களை, முன்னோரின் பதிவுகளைத் துறந்து, நிரந்தரமாக வேறொரு ஊரில் தங்கி வாழும் நோக்கில் செல்வதுதான் ‘ஹிஜ்ரத்’.  

இன உணர்வில் வாழும் நாடோடிச் சமுதாயங்களைப் பொறுத்தவரை, பிறந்தகத்தைத் துறந்து செல்வதென்பது, கடுமையான தண்டனைக்குரியதாகும்!  அந்த நாடோடிச் சமுதாயத்தில் இச்சட்டம், புரிதலில் மட்டும் இருந்ததே தவிர, கொடும் குழப்பத்தை உண்டாக்கிய கயவன் விஷயத்தில்கூட நடைமுறைப் படுத்தப் படாமல் இருந்தது.  ஆனால், எந்தக் குற்றமும் இழைக்காத இறுதித் தூதரின் விஷயத்தில் மட்டும் அது நடைமுறைப் படுத்தப்பட்டது!  விந்தைக்குரியதன்றோ இப்பாகுபாடு!

அந்த நாடோடிச் சமுதாயத்தில், விசுவாசம் என்ற ஒன்று மட்டும் வலுவாக இருந்தது.  அன்று ஒவ்வொரு சமுதாயமும் அந்தச் சமுதாயத்தின் ஆள் தவறிழைத்து இருந்தாலும்கூட, அவனுக்காகப் பரிந்துகொண்டு வாதாடுவது வழக்கமாக இருந்தது.  பல்லாண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வழக்கத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில், ஆனால் புதியதோர் அர்த்தத்தில் கூறினார்கள்:  “உங்கள் சகோதரன் அநீதி இழைத்திருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும், அவனுக்கு உதவி செய்யுங்கள்!”   

இதைக் கேட்ட நபித்தோழர்கள் வியப்புடன் கேட்டார்கள்:  “அல்லாஹ்வின் தூதரே!  அநீதி இழக்கப்பட்டவனுக்கு உதவி புரிதல் சரிதான்.  ஆனால் அந்த அநீதி இழைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?”  

அதற்குப் பெருமானாரின் மறுமொழி என்ன தெரியுமா?  “அநீதி இழைத்தவனை அந்த அநீதியைச் செய்யாமல் இருக்கச் செய்வதுதான் அவனுக்கு உதவுவதாகும்.  நீங்கள் அவனுக்கு உதவாவிட்டால், அவனை அல்லாஹ் தண்டிப்பான்” என்றார்கள்.

ஆனால் இன்றோ, மக்கள் பழைய நிலைக்கே சென்றுவிட்டார்கள்.  அறியாமைக் காலத்தில் இருந்த நீதிக்குப் பகரமாக அநீதி இழைத்தவனுக்கு முழு ஆதரவும் கொடுத்து, நேர்மைக்கும் நீதிக்கும் புறம்பாக நிற்கின்றனர்!  இந்த நிலையின்போதுதான், முஹம்மத் (ஸல்) அவர்கள் வழங்கிய நீதியானது, காரிருளில் வெளிச்சமிட்டது போன்று வெளிச்சத்துடன் இலங்குகின்றது!  நீதியை நிலைநாட்ட வந்த தூதரைக் கொலை செய்வதனால் நீதி நிலைக்கும் என்ற பொய்க் கனவுதான், அன்னாரின் எதிரிகள் கொண்ட நோக்கமாகும்.

‘ஹிஜ்ரா’ என்பது, நபியவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும்.  அன்னார் நேசித்த மக்கப் பதியை விட்டு அவர்களைத் தப்பியோட வைத்த ஒன்றாகும்.  அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டது மக்கா!  அந்த ஊரின் ஒவ்வொரு மலை முகட்டையும் வீட்டையும் விட்டு, அவர்களைத் துரத்தியது கொடுஞ் செயலாகும்.  அந்த ஊரிலேயே பிறந்து, அதில் ஐம்பத்து மூன்றாண்டுகள் வசித்து, அங்கேயே கதீஜா என்னும் மாதரசியை மணமுடித்து, அவர் மூலம் குழந்தைப் பேற்றை அடைந்த ஊர்! எதிரிகள் அவருக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டபோது, மனைவி கதீஜாவின் ஆதரவைப் பெற்றுத் தந்த ஊர்! ஆதரவாக இருந்த இரண்டு ஜீவன்கள் – கதீஜாவும் அபூதாலிபும் – இறந்துவிட்ட நிலையில், அநாதை போன்று ஆகிவிட்ட நபியின் கவலையில் பங்குபற்றிய ஊர்!  நபியவர்களின் பிள்ளைகள் (குழந்தை இப்ராஹீம் தவிர) அனைவரும் பிறந்து வளர்ந்த ஊர்! தொடக்கத்தில் அன்னார் மீது பாசத்தையும் பரிவையும் பொழிந்து, பின்னர் நேர்மாறாக எதிர்ப்பைக் காட்டிய ஊர், இப்போது தொலைவில் ஆகிவிட்டது!  இத்தகைய பிறப்பிடத்தை இறைக் கட்டளையினால் விட்டுச் செல்ல வேண்டிய சூழல்.  நபியவர்களின் பிரச்சாரப் பணியினால் மக்கள் திருந்துவதைப் பொறுக்க முடியாதா மக்கத்துக்
குறைஷியரால் நபி தொல்லை கொடுக்கப்பட்டார்கள்!

இதனால்தான் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:  “நபிமார் அனைவரும் அவரவர் சமூக மக்களால் வதைக்கப் பட்டார்கள்.  அவர்களுள் இறுதியான நான்தான் அதிகமாக வதைக்கப்பட்டவன்!”

சமூக மக்களின் ‘ஹிதாயத்’ என்னும் நேர்வழி நன்மைக்காகத் தூதர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ளாமல் முரண்படும் மக்கள், அக்காலம் தொட்டு இக்காலம்வரை இருந்தே வருகின்றனர்.  முற்காலத்தில் இது போன்ற சேவை செய்த சீர்திருத்தவாதிகளைக் கொலையும் செய்துள்ளனர் அக்கால மக்கள்!  அச்சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் பற்றிய வரலாற்றை நபியவர்கள் தம் தோழர்களுக்குக் கூறிவிட்டுக் கீழ்க்காணும் இறைவசனத்தை எடுத்தோதினார்கள்: “அந்தோ!  அடியார்கள் மீது கைசேதமே!  அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அம்மக்கள் ஏலனப் படுத்தாமல் இருந்ததில்லை.”  (36:30)

‘ஹிஜ்ரா’ எனும் புலம்பெயர்தலின்போது, தன் உற்றார் உறவினரை எந்தப் பாதுகாப்பும், எந்தப் பாதுகாப்பு வாக்குறுதியும் அவர்களுக்குக் கொடுக்காமல், அவர்களை விட்டுவிட்டுச் செல்லும் நிலைதான் நபிக்கும் தோழர்களுக்கும் ஏற்பட்டது!

மக்காவிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, வெறுமனே தப்பியோடுதல் மட்டும் நிகழவில்லை.  மக்காவின் இன்னும் அதன் சுற்றுப்புரங்களின் இனத்தவர்களுக்குக் கூறப்பட்ட செய்தி அது.  நபியவர்களின் தலைக்கு விலை!  நூறு ஒட்டகங்கள்!  ஓரிரு ஒட்டகங்கள் வைத்திருந்தாலே அக்காலத்தில் ஒருவன் பணக்காரனாக மதிக்கப்பட்டான்.  இப்போது நூறு ஒட்டகங்கள் என்பதை அறிவித்தபோது, ஊர் பேர் தெரியாதவர்கள் பலர் உந்தி எழுந்து நான்கு திசைகளிலும் பறந்து சென்றனர்.  பலர் அந்தத் தேடுதல் வேட்டையில் இறங்கியது முதல் நபிக்குப் புதிய பகைவர்களானார்கள்!  

நபித்துவத்துக்குப் பிறகான பதின்மூன்று ஆண்டு கால மக்காவில், நபித்துவ வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்தது, ‘ஹிஜ்ரா’.  நபியவர்களின் உண்மை மார்க்கப் பிரச்சாரங்களின் வழியாகப் பலர் சிந்திக்க மறுத்தார்கள்;  தோல்விக்கு மேல் தோல்வி!  விரல் விட்டு எண்ணத் தக்கவர்களே முஸ்லிம்களானார்கள்.  

ஏமாற்றத்தை ஏற்படுத்தும் இது போன்ற நேரங்களில், நபியவர்கள் தமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுச் சென்ற இறைத்தூதர்களின் வாழ்வைச் சிந்தித்துப் பார்ப்பார்கள். சத்தியப் பிரச்சாரகர்களான முந்தைய நபிமார்கள் தம் இரட்சகனிடம் கொண்டிருந்த இணைப்பின் காரணத்தால், அவர்களின் உள்ளம் உறுதியாயிற்று!  பின்னும் உறுதியாயிற்று!  

நபியவர்களின் அழைப்புப் பணியின் தொடக்க கால மக்கா வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்வியைத்தான் அவர்கள் சந்தித்தார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.  அபூர்வமாக அவ்வப்போது ஓரிரு வெற்றிகளையும் பெற்றதாக அன்னாரின் வரலாற்றில்  காண முடிகின்றது.  வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் உறுதியான உள்ளத்துடனும், வெற்றிக்கான எவ்வித அடையாளமும் காண முடியாத சூழலில், மிக விரைவில் வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இருந்த அண்ணலின் நம்பிக்கையைப் போல், வேறு யாரிடம் நாம் காண முடியும்?

இனி, ஹிஜ்ராவின் முடிவுக்கு வருவோம்.  இன்றைப் போல் உயரமான கட்டிடங்கள் அன்று இருக்கவில்லை.  அதனால், வெகு தொலைவிலிருந்தும் அவர்கள் வருவதைக் காண முடியும்.  பாலைவனச் சோலையாக விளங்கிய அன்றைய ‘எத்ரிப்’ என்ற ஊரில்  அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பினை நாமும் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியும்.  அவ்வூரின் மக்கள் ஆசையுடனும் ஆவலுடனும், நபி வருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் மதீனாவின் மலை முகடுகளில் ஏறி ஏறி எதிர்பார்த்து வந்தனர்.

“அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரியுண்டு...”  என்று இறைவன் கூறும் அந்த முன்மாதிரியை மதீனத்து மக்களின் ஆதரவுடன் உலகம் முழுவதற்கும் பரவச் செய்யும் இனி வரும் நாட்கள் மெய்ப்பிக்கும்.  தற்காலத்தில் நாகரிகமான உலகத்தில் அத்தகைய தலைமைத்துவத்திலிருந்து எத்தகைய முன்மாதிரியைக் காணமுடியும்?  நீதி, நேர்மை, எளிமை ஆகிய தன்மைகள் நமக்குப் பாடம் புகட்டுமா?  புகட்டும் என்றுதான் ஆழமாகப் படிக்க வேண்டிய அன்னாரின் வாழ்வு மெய்ப்பித்துக் காட்டுகின்றது.  

‘சீரா’ எனும் நபி வரலாற்றை நாம் படிக்கத் தொடங்கினால்,  நபியவர்கள் வாழ்ந்த காலமும், அதில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், இன்று நாம் வாழும் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ஏறத்தாழ ஒன்றே.  எனவே, பிரச்சினைகள் ஏற்பட்டால், நபியவர்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டு தீர்வு ஏற்படுத்தினார்களோ, அதையே நாமும் பின்பற்றிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.  பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவை நம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என்பதை அன்னாரின் முன்மாதிரியால் உணர முடியும்.  காரணம், நபியவர்களுக்கு ‘வஹி’ என்னும் தெய்வீகத் தொடர்பும் இருந்ததால், அவற்றை எதிர்கொள்வதிலும் தீர்வு காண்பதிலும் ஒரே நிலைபாடு இருப்பதை உணரலாம்.  அது பொய்யாகாது; வெற்றி நிச்சயம்; இறைப் பொருத்தமும் அதில் உண்டு என்பதைக் காண முடியும்.  இந்த முன்மாதிரியில் நாம் தீர்வைக் காணத் தொடங்கி, அதில் வெற்றியும் காண முடியும்.  அது ஒருபோதும் தோல்வியைத் தழுவாது என்பது திண்ணம்.

அதிரை அஹ்மது

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு