Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உண்மைக்கு ஒரு சான்று உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் தொடர்  : 7

உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் மதீனாவின் பனூ நஜ்ஜார் குலத்தைச் சார்ந்த 'உத்தமப் பெண்மணி உம்மு சுலைம் (ரலி)' அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஆவார். மில்ஹான் அவர்களின் பெண்மக்களான இந்த இருவரும் அண்ணல் நபி(ஸல்) அவர்களால் 'நம்பிக்கைக்குரிய சகோதரிகள்' என்ற பெரும் பாராட்டைப் பெறும் அரும்பேறு பெற்றவர்கள் ஆவர்! 

இவர், இருளில் நிலவாக வந்த  இறுதி நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் உடைய (மதீனாவில் வாழ்ந்த)  அன்னை சல்மாவின் பேர்த்தியாவார்!  

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் குடும்பத்தாருடன் பெருமானாருக்கு இயல்பாகவே முக்கியமான நெருக்கம் உண்டாகிடக் காரணம் யாதெனில், உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடிச் சிற்றன்னை ஆவார்! அதாவது, அண்ணலாரின் அன்னை ஆமினா அவர்களுக்குப் பாலூட்டிய அதே செவிலித் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர் சிறப்பிற்குரிய ஸஹாபிப் பெண்மணி உம்மு ஹராம் (ரலி) அவர்கள். எனவே, உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் நபியவர்களுக்கு தாய்க்குச் சமமான உறவும் உரிமையும் இயல்பாகவே ஒன்றிப் போயிருந்தது. 

அண்ணலின் வாழ்க்கை வெறும் வாழ்வுக் கதையல்ல! மாறாக, அண்ணலாருடன் தொடர்புடைய ஸஹாபிகளுடன் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவமும் உலக மாந்தருக்கு மாபெரும் எடுத்துக்காட்டும் படிப்பினையுமாகும்! 

வம்பர்களுக்கிடையே போர்க் களத்தில் சளைக்காது போராடும் ஒரு வெற்றி வீரராகத் தோன்றும் அண்ணலார், அதே வேளையில் சாந்தியைப் பெற அழைக்கும் சமாதானச் சுடர்விளக்காய்  எப்படித் திகழ்ந்தார்களோ,

ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய சாதனையாளராகத் திகழும் அதேவேளையில் தம் உம்மத்துகளுக்கு உண்மை வாழ்வு நெறியை விளக்கும் ஓர்  அறிவாலயமாக  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சரித்திரத்தில் மிளிர்ந்தார்களோ,

அசைக்க முடியாத ஒரு வல்லரசு நாட்டின் அதிபராகக் கோலோச்சும் அதே வேளையில், வெறும்  ஈச்சமர இலைகளால் திணிக்கப்பட்ட ஒரு தோல் பையைத் தலையணையாகக் கொண்டு உறங்கி எழும் ஓர் எளிதினும் எளிய மனிதராக எங்ஙனம் வாழ்ந்து காட்டினார்களோ,

போரில் வென்றெடுத்த வெற்றிப் பொருட்கள் அனைத்தும் மஸ்ஜிதுன் நபவீயின் முற்றத்திலே ஒரு மலைக் குன்றுபோல் குவிக்கப் பட்டிருக்கும் சூழலிலும்  அல்லாஹ்வின் தூதராகிய தம்   வீட்டின்  தானியமில்லாத  அடுப்பங்கரை  எப்படிப் புழக்கமில்லாமல்  ஒரு  பூனை படுத்துறங்கும் இருப்பிடமாய் மாறிப்போயிருந்த ஓர் எளிய குடிலை மட்டும் கொண்டிருந்தார்களோ,

வெற்றியின் விளைவாய்ப் பிடிபட்டுப்போன எதிரிகள், போர்க் கைதிகளாய் மதீனாவாசிகளிடம் அடிமைகளாய் அளிக்கப் பட்டுகொண்டிருந்த அதே நிலையில்,  

மாவரைக்கும் கல் தேய கோதுமையை அரைத்தும் மாண்பான கரம் வலிக்கத்  தண்ணீரை இறைத்தும் கைகளிரண்டும்  கொப்பளித்துப் போய்  நின்ற கண்மணி மகள் ஃபாத்திமா (ரலி) விடம், 

'பொறுமை கொள் கண்மணியே, என் மகளே இவ்வுலகில்! மறுமையில் நீ மங்கையரின் தலைவியன்றோ!' 

என அழகிய ஓர் அறிவுரையை மட்டுமே பரிசாய் அளித்த பாசமிகு தந்தையாய் போதனை செய்து உயர்ந்தார்களோ, 

அதுபோலவே, 

தூது வந்த வேத நபி (ஸல்) அவர்களின்  அன்பான வளர்ப்பு மகன் ஸைத் இப்னு ஹாரிதா (ரலி) வுக்கு எவ்வாறு உயிரினும் மேலான உவப்பான வளர்ப்புத் தந்தையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்களோ,  அதே நேரத்தில் தம் பால்குடிச் சிற்றன்னை உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களுக்குச் சிறப்பான, பாசமான 'ஓர் அருள் நிறைந்த அருமை மகனாகவே' முழுவதும் அவர்கள் தோன்றினார்கள்!

முதல் அகபா உடன்படிக்கையில் முக்கியமானவரும் புனித பத்ரு யுத்தத்தில் பங்கு பெற்றவருமாகிய வீரம்  நிறைந்த  நபித் தோழர் உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களே உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களை மணமுடித்திருந்தார்கள்.

அவர்களின் வீடு குபா நகரில்  ஈச்சமரத் தோப்புகளுக்கிடையே இயற்கையான சூழலில் அமைந்திருந்தது.

சத்தியம் போதித்த சன்மார்க்கத் தூதர்  (ஸல்) அவர்கள் புனித ஹிஜ்ரத் மேற்கொண்டபோது நிர்மாணித்த 'குபா பள்ளி'க்கு வாரந்தோறும் தவறாமல் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். குபா பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து உணவுண்டு, சற்று இளைப்பாறிச்  செல்லும் வழக்கமும் இருந்தது.

அதுபோல ஒருநாள், எல்லோரும் போற்றிடும் இனிய நபி (ஸல்) அவர்கள் குபா நகர் வந்தபோது, வழக்கம்போல் உம்மு ஹராம் (ரலி) வீட்டில் உணவுண்டு அசதியில் சற்றுக் கண்ணயர்ந்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த உத்தம நபி (ஸல்) அவர்கள் திடீரென உறக்கம் கலைந்தார்கள். உடனே சிரித்தார்கள்.

“உடனிருந்த உம்மு ஹராம் (ரலி), அண்ணல் நபியே! வண்ணச் சுடரே! தாங்கள் சிரிக்கும் காரணம்  நான் அறியலாமா?” என்று வினவினார்.

'ஓ, உம்மு ஹராம்! என் உம்மத்துகளில் சிலரை நான் சற்றுமுன் கனவில் கண்டேன். மன்னர்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல அவர்கள் கடலின் மீது கப்பலில் மிதந்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் கடற்போரில் வெற்றி வாகை சூடினார்கள். அது எனக்கு மனமகிழ்வளித்தது!' என்றுரைத்தார்கள்.

உடனே, உம்மு ஹராம் (ரலி) அவர்கள்,  “யா ரசூலல்லாஹ்! அந்தப் போராளிகளில் நானும் ஒருத்தியாக இணைந்துகொள்ள வேண்டி, தாங்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்” என்று கோரினார்.

அவரின் கோரிக்கைக்காகப் பிரார்த்தித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர்களில் நீரும் ஒருவராக இருப்பீர்” என்றார்கள்.

மீண்டும் ஒருமுறை, நல்லுரை கூறிடும் நம் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து அமர்ந்தவாறு கண்ணயர்ந்தார்கள். பின், விழித்தெழுந்து சிரித்தார்கள்.

முன்பு வினவியதைப் போலவே,  உம்மு ஹராம் (ரலி), “அருள் நிறைந்த அண்ணலே! தாங்கள் இப்பொழுது மீண்டும் ஏன் இப்படி நகைத்தீர்கள்?” என்று வினவினார்.

'ஓ,  உம்மு ஹராம்! என் சமூக மக்களில் சிலரைக் கனவில் மீண்டும் கண்டேன். அரசர்கள் தங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று அவர்கள் அமர்ந்து கடலின் மீது மிதந்து கொண்டிருந்ததை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது' என்று நவின்றார்கள்.

'ஓ, எங்கள் நபியே! சங்கை நிலவே! நானும் ஒருத்தியாக அவர்களுடன் இணைந்து செல்ல இறைவனிடம் இறைஞ்சுங்கள்' என்று கோரினார் உம்மு ஹராம் (ரலி).

'அப்படியல்ல! அவர்களில் நீர் முதலில் செல்லும் அணியினருள் தான்  இருப்பீர்’ என்று உரைத்தார்கள் இதயங்களைக் கவர்ந்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்.

வருடங்கள் பல உருண்டோடின. சொல்லும் செயலும் சோபிக்க வாழ்ந்த சத்தியத் தூதர்  (ஸல்) அவர்கள் தலைமையில்  போருக்குப் புறப்பட்டுச் செல்வது போலவே, அவர்தம் கணவர்  உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் புனிதப் போருக்குப் புறப்படும்போதெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஆர்வம் குறையாமல் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கூடவே சென்று அந்த நிலையான நன்மையில் பங்கு பெற்றார்.

பணியின் நிமித்தமாக, தம்பதியினர் ஷாம் தேசத்தில்  கலாச்சாரங்களின் கலவையான திமிஷ்க் எனும் டமாஸ்கஸ் நகரில்  குடியேறினர். 

எளிமையில் இனிமை கண்ட இல்லறத்தில் இருந்துகொண்டே மக்களுக்கு நல்லறத்தைத் தங்களால் இயன்றவரைப் போதித்தனர் தம்பதியினர்.

எனினும் எங்கு சென்றபோதும் அவருக்கு, ‘உதயநிலவின் குளிராக உலகில் தோன்றிய உண்மை நபியவர்கள்’ அன்றொரு நாள் கண்ட அற்புதக் கனவையும் புன்னகை முகத்துடன் கண் விழித்தபின் இவருக்காக சிறப்பாக இறைஞ்சியதையும் அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டிருப்பதுவே உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வழக்கமாய்ப் போனது.

திராட்சை ரசத் தீவு 'சைப்ரஸ்': 

சிந்துபாத்துக்கு ஒரு கன்னித்தீவு போல, அற்புதமான ஒரு கனவுத்தீவு சைப்ரஸ். நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க  வரலாற்றுக்குச் சொந்தமான சைப்ரஸ் மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும்.

பைஸாந்தியர்களான, கிரேக்க, ரோமப் பேரரசுகளின் ஆளுமையின்கீழ் பல்லாண்டு காலம் சீர்கெட்டுப் போயிருந்த சைப்ரஸுக்கு நேர்வழி நின்று ஆட்சி செய்த 'நம்பிக்கையாளர்களின் தலைவர்' உதுமான் இப்னு அஃப்பான்  (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்தான், ஒரு 'விடியல்' பிறந்தது.

அது ஹிஜ்ரீ 28 ஆம் ஆண்டு. முக்கியமான நபித்தோழர்கள் முஆவியா இப்னு அபுசுஃப்யான் (ரலி), அபூதர் கிஃபாரி (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி), அபூதர்தா (ரலி), கர்ளா இப்னு அப்தி அம்ர் (ரலி) போன்றோர் குடும்பத்தினருடன் உபாதா இப்னு ஸாமித் (ரலி) குடும்பத்தினரும் அந்தப் படையணியில் தம்பதி சமேதராய் இணைந்து கொண்டனர். எதிரிகளை வெல்லும் ஆயத்தங்களை ஏற்று நின்றனர். போர்ப்படைக் கப்பல்  புயலெனப் பாய்ந்து புறப்பட்டுச் சென்றது  திராட்சை ரசத் தீவை நோக்கி!

காற்றும் கடலலையும் கைகோர்த்தவாறு கம்பீரமான அக்கப்பலைத் தொடர்ந்து வந்து  முத்தமழை பொழிந்து, பைஸாந்தியர்களின் படைக்களம் முஸ்லீம் வீரர்களால் முற்றிலுமாக முறியடிக்கப்படும் முழுமையான ஒரு வெற்றிச் செய்தியை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருந்தன!

மாசற்ற தெளிவான காற்று கடலில் மெதுவாக அலையாட வைத்தது! அந்த அலை முழங்கும் கடலில் ஒரு கம்பீரமான சிம்மாசனத்தைப்போல் மிதந்த முஸ்லீம்களின் போர்ப்படைக் கப்பல் மெதுவாக அசைந்தாடத் துவங்கியது! வான் மறை கொண்டுவந்த வள்ளல் நபியின் வர்ணனை  அட்சரம் பிசகாமல் உம்மு ஹராமின் கண்ணெதிரே தெள்ளத் தெளிவாய் விரிந்து நின்றது! விவரிக்க முடியாத மனவுணர்வுகள் சிற்றன்னை உம்மு ஹராமின் இதயத்தைக்  கனக்க வைத்தன! அண்ணல் நபியின் புன்னகையின் பொருள் கடலில் நனவாக நிறைவேறி நின்றது!

கண்களில் கண்ணீர்  பீறிட்டுத் ததும்ப, பரந்து விரிந்ததாய், விண்ணகத்தையே இணைத்து நின்ற அந்தப் பசுங்கடலை நோக்கி  நின்றவர் இவ்வாறு  கூறினார்:

"இடர் வென்று பவனிவந்த மனம் ஒளிரும் மாநபியே! உண்மையின் ஒளிச்சுடரே! வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்)வின் தூதரே! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்!" 

நீர் நிறைந்த கண்களுடன்... நெஞ்சம் நிறைந்த பாசத்துடன்... மாறாத ஈமானுடன்... மனமெல்லாம் உருகி நெகிழ்ந்தவராக...ஆங்கே போர்க் கப்பல்  விளிம்பின்  நிலையில், உண்மைக்கு ஒரு சான்றாக உயர்ந்து நின்றார் அன்னை உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ரலியல்லாஹூ அன்ஹா.

o o o 0 o o o 

ஆதாரம்:
புஹாரி 2877: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

இக்பால் M. ஸாலிஹ்

1 Responses So Far:

sabeer.abushahruk said...

அண்ணல் நபி (ஸல்)அவர்களின் சிரிப்பில்கூட அர்த்தம் பொதிந்திருக்கும், அந்த அர்த்தத்தில் சத்தியம் நிச்சயம் இருக்கும் என்பதை அடுக்கடுக்கானச் சம்பவங்களைக் கொண்டு தேன் தமிழில் தீன் சொல்லித் தரும் தொடர் வாழ்க, வளர்க.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா- டா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு