Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

2015- 2016 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்- ஒரு பார்வை 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 03, 2015 | , , ,

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், முதன் முதல் ஒரு முழுமையான நிதி நிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சமர்ப்பித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டுகளில் இந்த நாட்டை ஆண்டு, ‘குப்பை கொட்டியதை’ மாற்றி புதிதாக ஒரு கட்சிக்கு வாய்ப்புக் கொடுத்தால் புதிதாக பல வளர்ச்சித் திட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும், நமது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுமென்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கை என்ற முறையில் இந்த அறிக்கையின் மீது பரவலாக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நாடெங்கும் பலதரப்பு மக்களிடையும் இருந்தன. அவைகளை இந்த நிதி நிலை அறிக்கை எந்த அளவு வெளிப்படுத்தி இருக்கிறது என்கிற அடிப்படையில்தான் இந்த நிதி நிலை அறிக்கையை நாம் பார்க்க வேண்டும்.

எந்த அரசு நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தாலும் , பொருளாதாரம் தெரிந்தவர்கள் முதன் முதலில் பார்க்க விரும்புவது ஒரு குறிப்பிட்ட அடிப்படை அம்சமாகும். அது என்னவென்றால் அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வருமானத்தை அரசு எப்படிப் பங்கு வைக்கப் போவதாக அரசு நிதி நிலை அறிக்கையில் திட்டமிட்டு இருக்கிறது ( Allocation of Revenue ) என்பதே அந்த அம்சம்.

அந்த வகையில் வரும் ஆண்டில் அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வருமானத்தில் இருபது பைசா அரசு பட்டிருக்கும் கடனுக்காக, வட்டியாக சென்று விடும். மீதி எண்பது பைசாவில் பதினொரு பைசா மட்டுமே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மிச்சமிருக்கும் அறுபத்தொன்பது பைசா அரசின் செலவுகளுக்கும் மானியங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும். இதை நாம் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இந்த நிலை அவ்வளவு ஆரோக்யமான பொருளாதார நிலையல்ல. 

அதாவது நாட்டின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு வட்டியாகப் போய்விடும் நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்படும். நிதியமைச்சர் இந்த நாட்டுக்காக எதையும் நல்லதாக செய்ய வேண்டுமென்றால் அவரால் ஒதுக்க முடிந்த பதினோரு சதவீதத்துக்குள்தான் செய்ய இயலும். அப்படி நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பதினோரு பைசா வருமானத் தொகையில் ‘கள்ளனுக்குப் பாதியும் கறிக்குப் பாதியும்’ பங்கு வைக்கும் குரங்குகளுக்கும் போனது போக மிச்சம்தான் மக்களுக்கு சென்று சேரும் என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள்வோம். ஆகவே, ‘முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் ரெண்டு குழம் பாழ்; ஒண்ணிலே தண்ணியே இல்லே’ என்கிற நிலைதான் தொடர்ந்து நிலவும். 

அருண் ஜெட்லி அளித்துள்ள நிதிநிலை அறிக்கையின் சில முக்கிய அம்சங்களைக் காணலாம். 
 • வருமான வரி வரம்பில் உயர்வு இல்லை. 
 • கறுப்புப் பணத்தைப் பதுக்கினால் பத்து ஆண்டுகள் சிறை.
 • சேவை வரி இரண்டு சதவீதம் உயர்வு.
 • ஒரு லட்சம் மதிப்புள்ள எந்தப் பொருள் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம்.
 • வீடு வாங்க முன்பணத்தை ரூ. 20000/= க்கு மேல் ரொக்கமாகத் தரத் தடை.
 • இன்னும் ஏழு ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு.
 • இளைஞர் மற்றும் முதியோருக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்.
 • 8, 000 கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைகள்.
 • 23, 000 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகைகள்.
 • செல்வ வரி ரத்து.
 • விருப்பப்படும் ஊழியர்களுக்கு மட்டுமே பிராவிடன்ட் பண்ட் திட்டம்.
 • ரூ. 12 கட்டினால் ரூ. 2 இலட்சத்துக்கு விபத்துக் காப்பீடு.
 • கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி நான்கு ஆண்டுகளுக்கு 30.
 • சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக் குறைப்பு.
 • கறுப்புப் பணத்தை ஒழிக்க புதிய சட்டம்.
 • நேரடி அன்னிய முதலீட்டை ஈர்க்க பலவித சலுகைகள்.

நிதி நிலை அறிக்கையின் பல அம்சங்கள் , பாஜக வின் தேர்தல் அறிக்கை போன்றே தோன்றுவதாக அரசியல் ஆய்வாளர்களும் பொருளியல் அறிஞர்களும் சொல்கிறார்கள். 

ஆர். கே. சண்முகம் செட்டியார், டி.டி.கே, மொரார்ஜிதேசாய், ஆர். வெங்கட்ராமன், சி. சுப்ரமணியம் பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா, ப.சிதம்பரம் போன்ற பல நிதியமைச்சர்கள் தயாரித்து அளித்த நிதிநிலை அறிக்கைகள் அனைத்திலும் காணப்படும் பொதுவான பல அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையிலும் காணப்பட்டாலும் தனித்துவமாகத் தோன்றும் சிலவற்றை மட்டுமாவது நாம் விவாதிக்க வேண்டி இருக்கிறது. 

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் நடுத்தர மற்றும் மாதச் சம்பளம் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியவர்கள் எதிர்பார்ப்பது வருமான வரியின் உச்சவரம்பின் மாற்றம்தான். காரணம், மாதச்சம்பளம் பெறுபவர்கள்தான் வருமான வரியை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள். கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் வரி ஏய்ப்புத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் இதர மாதச் சம்பளக் காரர்கள் அவ்வாறு செய்ய இயலாது. காரணம் TDS (Tax Deduction at Source) என்கிற முறையில் அவர்களின் வருமானம், உடனுக்குடன் பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்படும். 

இப்படிப் பட்ட இக்கட்டான நிலையில் இருக்கும் அரசு ஊழியர்கள், மற்றும் மாதச்சம்பளம் பெறுவோர்களின் கனவு, இந்த நிதிநிலை அறிக்கையால் தரைமட்டத்துக்குக் தகர்க்கப்பட்டு இருக்கிறது. இன்றுள்ள விலைவாசி ஏற்றம் போன்ற பல துன்பங்களைத் தாங்கும் நடுத்தர வர்க்கத்தினர், வருமான வரியில் ஏதாவது சலுகை வருமா என்று ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் அவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார் அருண் ஜெட்லி. வருமானவரியை ஒழுங்காகக் கட்டுபவர்களுக்கு அரசு வழங்கி இருக்கும் இந்த தண்டனையை எதிர்த்துக் கிட்டத்தட்ட (பொருளாதார மேதை நடிகர் சரத் குமாரைத் தவிர) எல்லா எதிர்க் கட்சித்தலைவர்களும் கண்டித்து இருக்கிறார்கள்.

அடுத்து, சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஒரு மரண அடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் நடுத்தர வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு தாக்குதல்தான். இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொடுக்கத் தடை விதித்து இருப்பது ஒருவகையில் கறுப்புப் பணத்தை கட்டுப் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாத் தோன்றினாலும் நடைமுறை சாத்தியமற்ற இந்த முறையால் நடுத்தரவர்க்கம் வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கினால் வரியின் வலையில் விழுந்து விடுவோமோ என்று அச்சம் கொள்ள இடமளிப்பதுடன் அவர்களின் முயற்சிகளை இடறிவிடும் செயலாகவும் இந்த அறிவிப்பு இருக்கிறது. 

அடுத்தபடியாக, சேவை வரியை உயர்த்தி இருப்பதுடன் சேவைகளுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறையும் ஊக்குவிக்கப் பட்டு இருக்கிறது. சேவை வரியின் உயர்வால்விமானபயணம், சுற்றுலா, சரக்குப் போக்குவரத்து போன்ற பல சேவைகளின் விலைகள் உயரும். விலைவாசியைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த அரசு விலைவாசிகளை உயர்த்த வழிவகுத்து இருப்பது வேடிக்கையான விஷயமென்று மக்கள் உணரத்தலைப் பட்டுவிட்டனர்.

கார்பரேட் நிறுவனக்களின் மீது கரிசனம் காட்டும் அரசு என்று இந்த அரசுக்குப் பெயர். காரணம் கார்பரேட் நிறுவனங்களின் தயவின் மூலமே ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அவர்களுக்கு உதவும் வகையில் அந்த நிறுவனங்களுக்கான வரியை ஐந்து சதவீதம் குறைத்து நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறது. 

கார்பரேட் துறையின் மீது கவனம் செலுத்தி இருப்பது போலவே காப்பீட்டுத் துறையிளும் இந்த அரசு மிகவும் கவனம் செலுத்தி இருப்பது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில திட்டங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை ஈர்க்க ஆர்வம் காட்டும் நரேந்திர மோடி அரசு, அமெரிக்கா முதலிய நாடுகளில் தோற்றுப் போய் இற்றுப் போன நிறுவனங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆரம்பம் முதலே இந்த அரசு ஆர்வம் காட்டி வருவதை நாம் உணர்ந்திருக்கலாம்.

அத்தகைய காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு காலூன்றும் விதத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் பிராவிடன்ட் பண்ட் திட்டத்தை அந்த ஊழியர்களின் விருப்பத்துக்கே விட்டு இருக்கிறது. அரசின் திட்டத்தில் சேராதவர்கள் தனியார் துறையில் முதலீடு செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மியூச்சுவல் பண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யட்டுமென்ற எதிர்பார்ப்பும்தான் இதற்கும் காரணம். தனியார் துறையை ஊக்குவிக்கும் இந்த அரசின் முயற்சிகளுக்கு இந்த அறிவிக்கள் ஆலவட்டம் சுற்றும். 

மேலும் 18 வயது முதல் 50 வயதுவரை உள்ளவர்களுக்கு புதிய காப்பீட்டுத்திட்டமும் ஆண்டுக்கு 12 ரூபாய் கட்டினால் விபத்துக் காப்பீடாக ஏழைகளுக்கு 2 இலட்சம் கிடைக்குமென்ற திட்டமும் அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் காலூன்றி, தங்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்ள அரசு உதவும் யுக்திகள்தான். இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் மக்களைக் காப்பாற்றுமா என்பது காத்திருந்து பதிலளிக்க வேண்டிய விஷயம். 

சொத்துவரியை முழுக்க முழுக்க இரத்து செய்திருக்கிறார் அருண் ஜெட்லி. 110 கோடி மக்கள் வாழும் நாட்டின் 70% சொத்துக்கள் 6 ஆயிரம் குடும்பங்களிடம்தான் இருக்கின்றன. ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ரெம்ப நல்லவர்களான ‘ அவர்களுக்கெல்லாம் எந்த வரியும் இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் கூறிவிட்டு இது ஏழைகளுடைய அரசு என்று சொல்ல இவர்களுக்கு அருகதையுள்ளதா என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு புதிதாக சட்டம் கொண்டு வரப்படுமென்று நிதியமைச்சர் கூறி இருக்கிறார். எல்லாவற்றிலும் இதுவே பெரிய வேடிக்கை. காரணம், ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு, பங்கிடப்பட்டு ஒவ்வொரு இந்தியர்களின் கணக்கிலும் செலுத்தப்படுமென்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு ஒன்பது மாதங்கள் கழித்து இனிமேல்தான் சட்டம் கொண்டுவருவோமென்பது நவரசங்கள் நிறைந்த இந்த நிதி நிலை அறிக்கையின் நகைச்சுவைக் கட்டம். அதே நேரம் கறுப்புப் பணத்தை பதுக்குவோருக்கு ஆறுமாதம் கெடு விதித்து இருப்பதும், பத்து ஆண்டு சிறை என்று எச்சரிக்கை விடுத்து இருப்பதும் 300 சதவீதம் அபராதம் என்ற அச்சுறுத்தல்களும் வரவேற்க வேண்டியவையானாலும் இவற்றில் எந்த அளவு அரசியல் செல்வாக்குள்ளவர்களை கண்டுகொள்ளாமல் சலுகைகள் வழங்கப்படுமென்பதையும் வேண்டாதவர்களைப் பழிவாங்கும் அரசியலுக்கு பயன்படுத்தபடுமென்பதையும் பார்த்தே சொல்ல இயலும். 

வருமானவரி வரம்பில் உயர்வு என்பதை எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் பெரிதும் எதிர்பார்த்தது, நதி நீர் இணைப்புத் திட்டமாகும். ஆனால் அது பற்றி எந்தப் பேச்சு மூச்சும் இல்லை. ஆனால் கடல்வழி நீர்ச்சாலைகள் என்ற ஒரு கருத்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்றைய நிலையில் இந்தத் திட்டம் ஒரு கானல் நீர்தான். அதே நேரம் கிடப்பில் கிடக்கும் சேது சமுத்திரத்திட்டம் பற்றியும் நிதிநிலை அறிக்கை குறிப்பிடவில்லை. கடலில் கொட்டப்பட்ட பலகோடி ரூபாய் மக்களின் பணம் என்ன ஆகுமென்று சேது சமுத்திரத் திட்டம் பற்றிய ஒரு நிலைப்பாட்டை எதிர்பார்த்த தென்னகத்து மக்களுக்கு ராமேஸ்வரம் கோயிலிருந்து திருநீறு எடுத்து பட்டை நாமம் சாத்தப்பட்டு இருக்கிறது. 

நாட்டின் மின் தேவையை நிறைவேற்ற ஐந்து புதிய மின் திட்டங்கள் வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைய நிலையில் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் அரசின் மனதில் இருக்கும்போது இந்த ஐந்து மின் திட்டங்கள் யானைப் பசிக்கு சோளப்பொறி என்றுதான் சொல்ல வேண்டும். 

விவசாயிகளை ஊக்கபடுத்தும் விதத்தில் உருப்படியான எந்த அறிவிப்புமில்லை. 8.5 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன் தொகையின் அளவை உயர்த்தி இருக்கிறார்கள். ஆனால் விலை பொருள்களுக்கு நல்ல விலை, உரமானியம், ஏற்றுமதி வாய்ப்பு, நீர் ஆதார வளர்ச்சி , நிலம் கையகப் படுத்தும் முயற்சிகளைக் கைவிடுவது, விவசாயம் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிப்பது மட்டுமே கிராமியப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதை விட்டுவிட்டு கடன் தொகையை அதிகரித்து இருப்பது இன்னும் விவசாயிகளைக் கடனில் ஆழ்த்துவதற்கும் தற்கொலை முயற்சிகளைத் தேடிக் கொள்வதற்குமே வழிவகுக்கும்.

ஏழைகளுக்குத் தரும் மானியங்கள் முறைபடுத்தப் படுமென்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்திதான். இதனால் பொது விநியோகத்திட்டத்தில் இப்போது ஏழைகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பொருள்களின் மேல் அரசு கை வைத்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக இருக்கிறது. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக அரசு தனக்குத் தானே வெட்டிக் கொள்ளும் அரசியல் மரணக் குழி என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ற அறிவிப்பு சென்ற நிதிநிலை அறிக்கையிலும் வந்தது. ஆகவே இப்போது இதில் மகிழவோ மல்லந்துவிடவோ ஒன்றுமில்லை. அரசியல் காய் நகர்த்தலுக்கு , இது ஒரு காய் என்பது மட்டும் உண்மையாக இருக்கலாம். 

ஏதாவது ஒரு அம்சத்தை பாராட்ட இயலுமா என்று இந்த நிதிநிலை அறிக்கையை ஆழ்ந்து படித்த போது ஒரு அம்சம் தென்பட்டதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். வேலை வாய்ப்பை உயர்த்தும் வகையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு பல வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருள்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை ஒரு பக்கம் பார்த்தால் கார்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்று எடுத்துக் கொண்டாலும் , அருண் ஜெட்லி அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதுடன் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலையும் ஏற்படும் என்பதையும் மறுக்க இயலாது.

மொத்தத்தில் இந்த பாச்சா எப்படிப் பலிக்கப்போகிறது என்றும் இந்தப் பருப்பு எப்படி வேகப்போகிறது என்பதையும் பார்க்கலாம்!

இபுராஹிம் அன்சாரி

1 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அருமையான அலசல். பட்ஜட் பற்றிய செய்திகளைக் கேட்டபோது விளங்காத பல விஷயங்களைப் புரிய வைத்தது இக்கட்டுரை. மேலும், 'அட நல்லாருக்கே! ' என்று நினைத்த அம்சங்களின் உள்குத்துகளை நீங்கள் சொல்லித்தான் உணர்கிறேன்.

என்னைப் போன்றோருக்கு பொருளாதாரன் சொல்லித் தருவதில் மேன்மக்கள் மேன்மக்கள்தான்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு