:::: தொடர் - 14 ::::
தலைமைத்துவத்தில் அண்ணலாரை, பிறரை விட்டுத் தனிமைப் படுத்திக் காட்டும் தன்மைகளுள் சிறப்பான ஒன்று, போராட்டக் களத்தில் அவர்கள் முன் நின்று, தம் தோழர்களை வழிநடத்தும் தலைமைத் தன்மையாகும். மற்றவர்களைப் போராட அனுப்பிவிட்டு, தாம் பின்னணியில் நின்று வேடிக்கை பார்க்கும் தலைவர் அல்லர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். முன்னணியில் நின்று போர்க்கொடி பிடித்துப் போராடத் துணிந்த தலைவர்! அதனால் அன்னாரைப் பின்பற்றிய தோழர்கள் ஆர்வத்துடன் போர்களில் கலந்துகொண்டனர். வெற்றிக் கனிகள் அவர்களின் பக்கம் வீழ்ந்தன. தமக்கு முன்னால் தம் தலைவர் நின்று களத்தில் போராடுகின்றார் என்ற உணர்வால், அவர்கள் மீது மரியாதையும், தலைமைக்குக் கட்டுப்படும் தன்மையும், பற்றும் பாசமும் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டிருந்தன.
மேற்காணும் தன்மைகளின் முன்மாதிரிகளாகப் பல நிகழ்வுகள் நபி வரலாற்று நூல்களில் பதிவு பெற்றுள்ளன. தம் தோழர்களை முன்னணியில் நிறுத்திவிட்டு, பின்னணியில் மறைந்து நின்று வேடிக்கை பார்க்கும் தலைவராக நபியவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. தாயிஃப் நகர மக்களை நேர்வழிப் படுத்தும் முயற்சியில் தாம் மட்டும் தனித்த நிலையில் சென்றார்கள் அல்லவா?
சில ஆண்டுகளின் பின், ‘ஹவாஸின்’ மக்களுக்கு எதிராகப் படை நடத்திச் சென்றபோது, முஸ்லிம்கள் எதிர்பார்த்திராத நிலையில், ‘ஹுனைன்’ பள்ளத்தாக்கில் மறைந்து நின்று எதிரிகள் தாக்கியபோது, முஸ்லிம் படை வீரர்கள் திகைத்துத் திரும்பி ஓடியபோது என்ன நடந்தது? எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டாமல், எதிர்த்து நின்றார்களே செம்மல் நபி என்னும் செயல் வீரர்! தோழர்கள் சிலர், நபியவர்களின் குதிரை மூக்கணாங் கயிற்றைப் பிடித்திழுத்துத் திரும்பியோடச் சொன்னபோது, முன் வைத்த காலைப் பின் வைக்க விரும்பாத நபியவர்களின் துணிச்சல் வேறு எந்தத் தலைவருக்கு வரும்?
புறமுதுகு காட்டித் திரும்பி ஓடியவர்களைப் பற்றி அபூசுஃப்யான் சொன்னார்: “அவர்கள் திரும்பி வரமாட்டார்கள். மேற்கு நோக்கி ஓடுபவர்களுக்குச் செங்கடல்தான் தடை.” அதாவது, அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடினார்கள். மேற்குத் திசையில் ஓடிய அவர்களுக்குச் செங்கடல் மட்டுமே தடையாக இருக்கும். அந்த அளவுக்கு அச்சமூட்டும் எச்சரிக்கை! அத்தகைய சூழலிலும், அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்து நின்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்!
அண்ணலார், அருகில் நின்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) என்ற தோழரைப் பார்த்துக் கூறினார்கள்: “மதீனத்து அன்சார்களைக் கூப்பிடுங்கள்! அவர்களுள் செயல் வீரர்களான ‘பனூ நஜ்ஜார்’ குடும்பத்தவர்களைக் கூப்பிடுங்கள்!” தோழர் இப்னு மஸ்ஊதின் ஓங்கிய குரலைக் கேட்டு, நபியவர்களின் அருகில் வந்து கூடினார்கள் அந்த உதவியாளர்கள். ஏறத்தாழ நூறு பேர் இருந்தனர். அந்தச் சிறு படையின் துணையுடன் ‘ஹவாஸின்’ பெரும்படையை எதிர்த்து, வெற்றிக் கொடியை நாட்டினார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள். அந்தச் சிறு படையைப் பற்றித்தான், அல்லாஹ் தனது திருமறையில் வியந்து பாராட்டிக் கூறியுள்ளான். அந்தச் செயல் வீரர்களால் பார்க்க முடியாத வேறொரு சிறப்புப் படையையும் அனுப்பி, ‘ஹவாஸின்’களைத் தோற்றோடச் செய்தான் அல்லாஹ்!
மக்கா வெற்றியின்போது 7 பேர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பொது மன்னிப்புக் கொடுத்தார்கள் அல்லவா? அந்த ஏழு பேர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அவர்களுள் அப்துல்லாஹ் இப்னு அபீஸர்ஹ் என்பவர் நபியையும் அவர்கள் பரப்பிய இஸ்லாத்தையும் கடுமையாக விமரிசித்தவர்! அத்தகைய கொடும் பாவிகளுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கினார்கள்: “இவர்கள் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கினாலும், இவர்களைக் கொன்றுவிடுங்கள்!”
தன்னைப் பற்றித் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்தவுடன், அபூ ஸர்ஹ் தன் உறவினரான உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம் தஞ்சம் புகுந்தார். பால்குடித் தொடர்பில் இருவரும் உறவினராவர். தன் பால்குடிச் சகோதரரைப் பொது மன்னிப்பில் சேர்ப்பதற்காக நபியவர்களிடம் அழைத்துச் சென்றார் உஸ்மான் (ரலி).
“அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மன்னிப்பைப் பெற்று, உங்களிடம் உண்மை உடன்படிக்கை செய்வதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார் அபூ ஸர்ஹ்.
இறைத்தூதர் மவுனமாக இருந்தார்கள். மேலும் இரண்டு தடவை தனது வேண்டுகோளை வைத்துக் கெஞ்சி நின்றார் அபூ ஸர்ஹ். மாநபியவர்கள் மவுனமாகவே இருந்தார்கள். காரணம், அபூ ஸர்ஹ் இழைத்த குற்றம் அந்த அளவுக்குக் கடுமையானது!
மூன்றாவது முறை, தனது குற்றத்தை மனமார உணர்ந்து கெஞ்சி நின்றபோது, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள். நபியின் மன்னிப்பைப் பெற்ற மகிழ்வுடன் திரும்பிச் சென்றார் அபூ ஸர்ஹ்.
அவர் திரும்பிச் சென்ற பின்னர், தம் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள் நபியவர்கள்: “இரண்டு முறை அவர் மன்னிப்புக் கேட்டும், நான் மவுனமாக இருந்தபோது, உங்களுள் யாருக்கும் அவரைக் கொன்றுவிடத் துணிச்சல் வரவில்லையா?”
அடுத்திருந்த அன்ஸார் தோழர்கள் கூறினார்கள்: “யா ரசூலில்லாஹ்! நீங்கள் சிறிதளவு கண் சாடை காட்டியிருந்தால், நாங்கள் அதைச் செய்திருப்போம்.”
அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வின் தூதர்கள், யாரையும் கண் சாடையால் கொலை செய்யத் தூண்ட மாட்டார்கள்” என்றார்கள்.
இறைத்தூதரின் மன்னிப்பைப் பெற்ற அபூ ஸர்ஹ் (ரலி), உண்மையான தோழர்களுள் ஒருவராகி, இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களில் ஆட்சியின்போதும், மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின்போதும், உயர்வான அரசுப் பணிகளில் நியமனம் பெற்றுச் சேவை புரிந்தார். இறுதியில், ஒரு நாள் ‘சுப்ஹ்’ தொழுகையின் ‘சுஜூதில்’ இருந்தபோது, அவருடைய உயிர் பிரிந்தது!
மேற்கண்ட நிகழ்வில், நபியவர்கள் உண்மையின் மீது தமக்கு இருந்த பொறுப்பை முறையாக நிறைவேற்றிய முன்மாதிரி இருக்கின்றது. அதாவது, கொடிய எதிரி என்று கருதப்பட்டவருக்குக் குறுக்கு வழியில் கொலைத் தண்டனை கொடுக்க விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது அல்லவா?
தலைவருக்கு இருக்கும் பொறுப்பானது சாதாரணமானதன்று. நீதியின் மீது நிற்பதுடன், தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஆற்றலும் அவருக்குத் தேவை. உணர்ச்சி வயப்படுபவர் எவரும் தலைமைக்குத் தகுதியில்லாதவர். தலைவர் என்பவர் துணிச்சல் உடையவராக இருப்பதுடன், கோழைத்தனம் என்பது அவருடைய வாழ்வில் காணப்படாத ஒன்றாகவும் இருக்கவேண்டும்.
தலைமைத்துவம் என்பது, முன்னிருத்தப்படுவதில் முதலாவதாக இருக்கவேண்டும். தலைமையின் கட்டளைகளைவிட, அத்தலைமை எவ்வாறு செயல்படுகின்றது என்பதைத் தொண்டர்கள் பார்க்கிறார்கள். தான் சொல்வதை, தானே செயல்படுத்தாத தலைமையைத் தொண்டர்கள் பொருட்படுத்துவதில்லை. தலைமைக்குக் கட்டுப்படுவதைத் தம் கடமையென உணர்ந்தவர்கள், அந்தத் தலைமை என்ன சொல்கின்றது என்பதைக் கேட்பதைவிட, என்ன செய்கின்றது என்பதையே உற்று நோக்குகின்றார்கள். தலைமையின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தால், அந்தத் தலைமை தனது தகுதியில் தாழ்ந்து போய்விடும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் இதில் மிகக் கவனமாக இருந்துள்ளார்கள். இதனால்தான், “அல்லாஹ்வின் தூதருடைய வாழ்க்கை எப்படி இருந்தது?” என்று ஒருவர் கேட்டபோது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் குர்ஆனைப் படித்ததில்லையா?” என்று கேட்டு, அவர்களின் வாழ்க்கையானது குர்ஆனாகவே இருந்தது என்று சூசகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.
வாசகர்களுக்கு ஒன்றை நான் அழுத்தமாகவும் வலியுறுத்தியும் கூற விரும்புகின்றேன். இன்று பலரின் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோய் இருக்கும் ‘சீறா’ எனும் நபி வரலாற்றை ஆழ்ந்து படியுங்கள். குர்ஆனின் பிரதிபலிப்பாக நின்றிலங்கும் ஒன்றுதான் நபியின் வரலாறாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல் வடிவத்தில் காட்டுவதற்கு ஒரு முன்மாதிரி வேண்டாமா? அதுதான் நபியவர்களின் வாழ்க்கையாகும். கவலைக்குரியது என்ன தெரியுமா? நம்மவர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில்கூட, ‘நபி வரலாறு’ என்னும் முக்கியப் பாடம், பாடத் திட்டத்தில் இடம்பெறுவதில்லை! கவலைக்குரியதல்லவா இது?
இறைத்தூதரின் வாழ்க்கையானது, முழுக் குர்ஆனாக இருந்ததல்லவா? நபி வரலாற்றைப் படிப்பதால், குர்ஆனின் விளக்கத்தைப் படிக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கின்ற தல்லவா? அந்தப் புண்ணிய வாழ்க்கையைத்தான், ‘உங்கள் வாழ்க்கைக்குரிய முன்மாதிரி யாகும்’ என்று இறைவனே நமக்குக் கூறிவிட்டான்? விழித்தெழுங்கள் முஸ்லிம்களே!
அதிரை அஹ்மது
3 Responses So Far:
தலைமைத்துவத்தின்இலக்கணங்களைசெயல்வடிவில்காட்டும்ரசூலுல்லா வின்முன்மாதிரியை பின்பற்றினால் நாடு எங்கேயோ போயிருக்கும். சீறாவைதமிழ்முஸ்லிகள்சீண்டாமல்போனதேன்?நீங்களாவதுஅதுபற்றிஅ.நி.யில்ஒருதொடர்எழுதலாமே!
//தலைமைக்குக் கட்டுப்படுவதைத் தம் கடமையென உணர்ந்தவர்கள், அந்தத் தலைமை என்ன சொல்கின்றது என்பதைக் கேட்பதைவிட, என்ன செய்கின்றது என்பதையே உற்று நோக்குகின்றார்கள். //
உண்மை.
எனவே, எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தத்தம் தலைமையின் தரத்தை நிரூபித்துக் காட்டுவது ஒவ்வொரு தலைவரின் கடமையாகும்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா
//வாசகர்களுக்கு ஒன்றை நான் அழுத்தமாகவும் வலியுறுத்தியும் கூற விரும்புகின்றேன். இன்று பலரின் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோய் இருக்கும் ‘சீறா’ எனும் நபி வரலாற்றை ஆழ்ந்து படியுங்கள். குர்ஆனின் பிரதிபலிப்பாக நின்றிலங்கும் ஒன்றுதான் நபியின் வரலாறாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல் வடிவத்தில் காட்டுவதற்கு ஒரு முன்மாதிரி வேண்டாமா? அதுதான் நபியவர்களின் வாழ்க்கையாகும். //
இந்தக் கரும்பைத் தின்பதற்கு எனக்கு கூலி கிடைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
கற்கிறேன். கற்பிக்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Post a Comment