Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2015 | , , , , ,

நான் மலேசியா புறப்படும்போது பதினோரு ஃபக்கிர்மார்களை.

வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம்.. இதில் நேத்திக்கடன் கீத்திக்கடன் அது இது என்றெல்லாம் ஏதுமில்லை.

இப்படிச் செய்வதில் ஏதோ எனக்கொரு இனம் புரியாத மனச்சாந்தி! அவ்வளவே! 

ஃபக்கிர்மார்களும் சொன்னபடி பதினோரு பேர் வருவார்கள் .தபுசு அடித்து பாட்டுப் பாடுவார்கள். அவர்கள் பாடும் பாடல்களில் கவிதை நயமும் இசை நயமும் இருக்கும்.     பாடிமுடிந்தபின் விருந்து உண்டு துவா ஓதுவார்கள். 

அவர்கள் புறப்படும்போது ரூவாய் நூற்று ஐம்பத்துது ஒன்று பெரியவரிடம் கொடுத்து “மற்றவர்களுக்குக் கொடுப்பதைக் கொடுத்து நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி விடுவேன். அதோடு. தெருவாசிகளில் ’பொறுக்கினால்போல’ சிலரையும் நண்பர்களையும் அடுத்தவீடு அண்டுன வீடுகளையும் சொந்தங்கள் பந்தங்களையும் கூப்பிட்டுக் கொள்வது வழக்கம்..பல பயண காலங்களில் இது  சுமுகமாக தொடர்ந்தது.

ஒரு முறை நண்பர்’ ஒருவர் ’இதை விட்டும் விட்டு சலவாத் நாரியா ஓது! முஸிபத் கழியும்’’என்றார். பக்கிர்மார்களுக்கு வழக்கமாக கொடுக்கும் விருந்தை நிறுத்த மனம் இடம் கொடுக்கவில்லை. சலவாத்நாரியா என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது.

ஒஸ்தாதிடம் போய் விசயத்தைச் சொன்னேன். 

"இது மூனு-நாலு  பேர் மட்டும் ஓத முடியாது. பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ஓதக்கூடிய விஷயம்" என்றார். மேலும் நம் ஊரில் இருக்கும் மதர்சாவின் பெயரைச் சொல்லி ’’அதன் தலைமை இமாமிடம் சொல்லுங்கள். அவர்கள் ஓதுகிற பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள்" என்றார்.

"மதர்சா தலைமை இமாமுக்கு என்னைத் தெரியாதே!" என்றேன். என் நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லி ’’அவரைக் கூட்டிச் செல்லுங்கள் அவருக்குத் தெரியும்’’என்றார்.

நண்பரிடம் சொன்னபோது "அசருக்குப் பிறகு போகலாமே!" என்று சொன்னார்.

நானும் நண்பரும் மதரஸாவுக்குப் போனோம். தலைமை இமாம் அங்கே இருந்தார்கள் .என்னோடு வந்த நண்பர் இமாம் அவர்களிடம் வந்த விஷயத்தைச் சொன்னார். ’’இப்பொழுதுதெல்லாம் பிள்ளைகளைச் சலவாத்நாரியா ஓத அனுப்புவதை நிறுத்தி விட்டேன். ‘மதரஸாவில் ஒதவந்த பிள்ளைகள் யெல்லாம் ஓதுவதை விட்டுவிட்டு வாரா வாரம் வீட்டுக்கு வீடு சலவாத் நாரியா ஓதக் கிளம்பி விட்டார்கள்!’’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்’’ .என்றார்கள்.

கொஞ்ச நேரம்  நானும் நண்பரும் ஒருவரை யொருவர் பார்த்து மௌனமாக அங்கேயே நின்றோம். பின்பு என்னைப் பார்த்து பேர் என்ன?" என்றார்கள். 

‘முஹம்மது பாரூக்” ’என்றேன்.

“தெரு?” 

“கடல்கரைதெரு”

’’முன்பு ஓதி இருக்கிறீர்களா?’’ 

‘’இல்லை இதுதான் முதல் தடவை! வழக்கமாக தைக்கால் பக்கிமார்களை அழைத்து விருந்து கொடுத்து மலேசியா புறப்படுவது வழக்கம். அதை நிறுத்தி விட்டு சலவாத்நாரியா ஓதுங்கள் என்று ஒரு நண்பர் சொன்னார் அதனால்தான்..........’’ 

என்று இழுத்தேன். 

கொஞ்சம் யோசித்து விட்டு

’’அப்போ இந்த தடவை பக்கிர்மார்களை கூப்பிடவில்லையா?’’ என கேட்டார்கள்.

’’இன்ஷா அல்லாஹ்! நாளைக்கு வெள்ளிக்கிழமை சலவாத் நாரியா ஓதினால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களை அழைத்து விருந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றேன்.

.’’சரி! நாளைக்கு பதினாறு பேர்கள் அசருக்குப் பின் வந்து ஓதுவார்கள். மஹ்ரிபுக்கு முன்னதாகவே அவர்களை இங்கே அனுப்பிவிட வேண்டும்’’ என்றார்கள்.

கூட வந்தந ண்பரிடம்,

’’எத்தனை பேருக்குச் சாப்பாடு அனுப்பவேணும் என்று கேளுங்கள்’’ என்றேன். 

அவர்கேட்டார்.

’’முப்பது பேருக்கு அனுப்பினால் போதும். அதோடு இனிமேல் பிள்ளைகளை ஒதக்கூப்பிட வேண்டாம்’’ என்றார்கள்.

வெள்ளிக்கிழமை காலை ஒஸ்தாதிடம் விஷயத்தை சொல்லி சலவாத்நாரியாய ஓத வரும்படி கூப்பிட்டேன்.’

"வருகிறேன்" என்று சொன்னவர் இன்னொரு லெப்பையின் பெயரையும் சொல்லி ’’அவரையும் கூப்பிடுங்கள்! இல்லை என்றால் நான்தான் அவரை கூப்பிட வேண்டாம் என்று சொன்னதாக ’ என் தலையில் பழிபோடுவார்" என்றார்.

அவரையும் போய் கூப்பிட்டு விட்டு எங்கள் தெரு கடையில்இறைச்சி வாங்கப் போனேன்.         வெள்ளிக்கிழமை எறச்சி கடையில் கூட்டம் கொஞ்சம் கூடவே நின்றது. என்னுடைய பொல்லாப்பான காலமோ என்னமோ அவ்வழியே வந்த ஒருவரின் கண்ணில் நான் பட்டுவிட்டேன். அவர் ஒரு விடாகண்டர். ’எறச்சிகறி சோறு’ என்றால் நாக்கில் ஜலம் ஊறும். இங்கிதம் பண்பாடு எல்லாம் கிலோ என்ன விலைதான்! எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் அவருக்கு இல்லை. என்னைக் கண்ட அவர்.

’’பாரூக்! ஏன் இறைச்சிகடையில் நிக்கிறா?’’ என்றார். 

நான் ஒரு முட்டா பய! இவரை பற்றி முன்னமேயே எல்லாம் தெரிந்திருந்தும்.

‘எறச்சி வாங்க வந்தேன்’’ என்றேன். 

இந்த நேரம் பார்த்து இறைச்சி கடைகாரர் "காக்கா எத்தனை கிலோ வேண்டுமென்று சொன்னீர்கள்" என்றார். 

சொன்னேன்.

"கொஞ்ச நேரம் நில்லுங்கள்! இன்னொரு கடா வரும். அதில் தருகிறேன்" என்றார்.

நான் சொன்ன எறச்சி என் வீட்டு தேவையை விட கூடுதலாக இருப்பதை கேட்ட அந்த விடாகண்டர்

"ஏன் இன்றைக்கு எறச்சி கூட வாங்குகிறாய்?" என்றார்.

விஷயத்தை சொன்ன பாவி நான் இதையும் தெரியாத்தனமா சொல்லி விட்டேனா? அது ஒன்னே அவருக்குப் போதும், என் கழுத்தை அறுக்க.

"ஓதஎத்தனை பேர் வாறராஹ?" என்றார். 

சொன்னேன்

"பிரியாணியா? இல்லே எறச்சிகறி  சோறா?"

"எறச்சிகறி சோறுதான்"

"தெருவில் எத்தனை பேரை கூப்பிடுறா?"

"யாரும்மில்லே! ஒதுற பிள்ளைகள் மட்டும்தான்" என்று சொன்னதும்! 

இவர் இன்னொரு கேள்வி கேட்கு முன்னே இறைச்சி கடைகாரர்

"காக்கா! நீங்க சொன்ன ஆடு வந்துடுச்சு. அதுக்கு இப்போ வயசு நாலரை! .இவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி முடிச்சு ஆடுஅறுக்குறதானா ஆட்டுக்கு வயசு ஆறரை ஆயிடும்!. கறி நாக்குக்கு ருசியா இருக்காது!" என்றார்.

எறைச்சி கடைக்காரரை அந்த விடாகண்டர் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு போய் விட்டார். இவ்வளவு அநாகரீக கேள்விகள் கேட்டதை அங்கு நின்றவர்கள் கேட்டு முகம் சுளித்தார்கள்.

"ஏன்டா தம்பி! நீ பெத்தமவ அவரு ஊட்டுலே ஈந்தா வாலுது?. என்னேனமோ அதுகேக்குது! நீயும் நிண்டுகிட்டு. எல்லாத்துக்கும் ’பதல் சொல்றியே மூஞ்சிலே அடிச்ச மாதிரி ஒரு பதலே சொன்னா அவன் ஊட்டுலே’ வாளுற ஓம்மவளே திருப்பியா அனுப்பிடுவான்?" என்று கேட்டார்கள்.

வீடு வந்து எறச்சிகடையில் நடந்ததை என் மனைவி இடம் சொன்னேன்.

"ஆஹா? அவருக்கு தெரிஞ்சு போச்சா? எறச்சிகறி சோறுண்டா மசக்கைக்காரி மாங்காயே பாத்த மாதிரிலோ வாய் ஊறும். கூப்பிடலேன்டா ஊரெங்கும் தண்டோரா போட்டு கொறை சொல்லிக்கிட்டு இருப்பார். போய் கூப்பிடுங்கள்.. கொள்வினை கொடுப்பினை இல்லாததால் ரத்த உறவு விட்டு போச்சு!" என்றது.

"யாரையுமே கூப்பிடவில்லையே! இவரை மட்டும் கூப்பிட்டா மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்றேன்.

’’ஒன்றும் நினைக்க மாட்டார்கள்! போய் கூப்பிடுங்கள்!’’ என்றதும்

போய் கூப்பிட்டேன்.

’’வேறு  யார்றெல்லாம் வருகிறார்கள்?’’ என்றார்.

‘’யாருமில்லை மதரஸா பிள்ளைகள் மட்டுமே!’ என்று சொன்னேன். எப்படித்தான் மரியாதை கொடுத்தாலும் அதை பெற்றுக் கொள்ளும் பக்குவம் சிலருக்கு இருக்காது. அதில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். அவருக்கு வேண்டிய இரண்டு மூன்று நபர்களின் பேரை சொல்லி அவர்களையும் ’’கூப்பிடு!’’ என்று கட்டளை போட்டார்.

’’உங்களை கூப்பிட்டால் நீங்கள் போங்க. இல்லாட்டி வாயே பொத்திக்கிட்டு சும்மா வீட்டுக்குளே கெடங்க! அவரே கூப்புடு! இவரே கூப்புடு!’’ ன்டு சொல்லி நச்சறிப்பு செஞ்சு கொடுக்குற மரியாதியே கொலச்சுகிடாமே’’ அல்லா’ண்டு ஊட்டுலே படுத்து தூங்குங்க’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அதுஅவர் மனைவின் குரலேயன்றி வேறு யாருடைய குரலுமல்ல. 

’’இவர் வந்தா வரட்டும்! வராட்டி போவட்டும்! நீங்க போய் உங்க வேலையே பாருங்க காக்கா!”என்று மீண்டும் அந்தக்குரல் ஒலித்தது. ’தப்பித்தோம்-பிழைத்தோம்’’ என்று ஓடிவந்துவிட்டேன்.  

அன்று அசருக்கு பிறகு ஒதுகிற பிள்ளைகள் வந்து விட்டார்கள். ஒஸ்தாதும் அவர் கூப்பிடச் சொன்ன லெபையும் வந்து விட்டார்கள். ஒதுதல் தொடங்கியது. ஒதி முடிந்த பின் மதரஸாபிள்ளைகள் போய் விட்டார்கள். மஹ்ரிப் தொழுகை முடிந்ததும் நானும் என் நண்பரும் சோற்றை ஒரு வண்டியில் ஏற்றி மதர்சாவுக்கு கொண்டு போனோம். தூக்க-எடுக்க உதவியா இருக்கு மென்று ஒரு பையனையும் கூடவே கூட்டி சென்றோம்.

சோத்து வண்டியை பார்த்த மதரஸா சமயல்காரருக்கு ’மூஞ்சி’ சரி இல்லை! 

‘’சோறுகறி சட்டிகளை இறக்கி எங்கே வைப்பது?’ என்று கேட்டதற்கு

’’எங்கேயாவது ஏறக்கி போடுங்கள்!’’என்று.கொஞ்சம் காட்டமாகசொன்னார். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. நாங்களே சோறுகறி சட்டிகளை தூக்கி வந்து ஒரு ஓரத்தில் வைத்து முடித்ததும் வேகமாக சமையல்காரர் ஓடி வந்து எல்லா சட்டிகளையும்திறந்து-திறந்து பார்த்துவிட்டு’படார்-படார்’மூடினார். ஏனோ அவர் மூடு [mood] சரியில்லை! ‘’ என்று நினைத்தேன்.

’’எத்தனை பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறீர்கள்?’’ என்றார்.

’’முப்பது பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறோம்!’’ என்றேன். 

’’ஹும் இது முப்பது பேரு திங்கிற சோறா இது? இருபது பேருக்கு கூட பத்தாதே! பாக்கிபேர் எதைத் திம்பார்கள்?’’என்றார்.

வீட்டில் சோறு ஆக்கிய சமையல்காரர் சட்டியில் சோறு வைத்தபோது ’’இது முப்பது பேருக்கு போதுமா?’’ என்று கேட்டேன்.’’

இதில் நாப்பது பேருக்கு மேலே சாப்பிடுறது சோறு இருக்கு. போற இடத்தில் கூடகொரச்ச இருக்கும். சோறு கொறஞ்சுட கூடாதேன்டு கூடவே வச்சு இருக்கேன். பயப்புடாமே கொண்டு போங்க!’’ என்றார்.

இங்கே இவரோ சோறு பத்தாது என்று வம்புக்கு வர்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் என் நண்பரும் யோசனை பண்ணினோம். ‘கூட வந்த பையனையும் துணைக்கு வைத்து நாமே சோறு பறிமாறுவோம்’ என்ற முடிவுக்கு வந்தோம்.            இடையில் இந்த விவகாரங்களை எல்லாம் பக்கது வீட்டுககாரர் கவனித்துக் கொண்டிருந்தார்.

"நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம் .நீ அங்கே போய் வாயே மூடிகிட்டு சும்மாகெட!" என்றேன்.

’’சோறு திண்ட தட்டையும் கழுவி வச்சுட்டு போகணும்’’ என்று சமையல்காரர் அதட்டலாக சொன்னான். 

எங்கள் கூட வந்த பய கொஞ்சம் மொரட்டு பய. ’’சொல்லுங்க காக்க! 

‘மூஞ்சி-மூஞ்சி’ண்டு நாலு குத்து வுட்டு அவன் மூக்கை ஒடைக்கிறேன்!’’ என்றான்.

’’வேண்டாண்டா வாப்பா! அப்பொறம் இந்தக் கடக்கரை தெருவான் வந்து மதறஸா ஆளுகளை அடிச்சு போட்டுட்டு போயிட்டானுவோ!’’ண்டு ஊரு முழுக்க செய்தி பறவிடும். ஒங்காலு ரெண்டையும் புடிக்கிறேன். கொஞ்ச நேரம் சும்மா இரு!’’ என்றேன். என் சொல் பேச்சு கேட்டு புள்ளே ’பதுவுஷசா ’கம்’முன்னு’ இருந்துட்டான்.

எதிர்த்த வீட்டிலிருந்து இங்கு நடப்பதைம் கவனிதுக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து மதர்ஸா வாசலில் நின்று எங்களை வெளியே கூப்பிட்டார்.

’’இவன் ஏன் உங்களிடம் வம்பு பண்ணி ஆத்திரப்படுகிறான் தெரியுமா?’’ என்றார்.

’’சலவாத் நாரியா ஒதுகிறவர்கள் பிள்ளைகளுக்கு சோறு சமைத்து கொடுக்கு பொறுப்பை இவனிடமே ஒப்படைத்து விட்டு இவன் போடும் சிட்டைப்படி பணத்தை கொடுத்து விட்டு போய் விடுவார்கள். அதில் பாதிக்குமேல் பணத்தை இவன் அடித்து விட்டு ஓதுகிற பிள்ளைகள் வைற்றில் அடித்து விடுவான். நீங்களே சோறு கொண்டு வந்து விட்டதால் உங்கள் மீது ஆத்திரப்பட்டு இப்படி நாய்போல் சீறுகிறான். அவனுக்கு அம்பதோ அறுபதோ கையில் திணித்து விட்டால் வாயே பொத்திகிட்டு வேலையே பார்ப்பான்!’’ என்றார். 

‘இதை முன்பே ஒழுங்கா சொல்லி இருந்தால் போனால் போகிறதென்று நூறே கொடுத்திருக்கலாம்..இப்பொழுது அம்பது தருகிறேன். கொடுதுப்பாருங்கள்! வாங்கினால் சரி! முரண்டு பண்ணினால் நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம்’’என்றேன். பணத்தை வாங்கி கொண்டு போய் அவனிடம் ஏதோ சொன்னார்.அவர் திரும்ப வந்து

‘’நீங்கள் வீட்டுக்கு போங்கள்! நாளை காலை வந்து சட்டியே எடுத்து கொள்ளுங்கள். அவனே எல்லாத்தையும் பார்துக் கொள்வான்’’ என்றார்.

இஷா தொழுகை முடிந்ததும் ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத் நாரியா ஓதிய லபையும் விடாகண்டரும் வந்தார்கள். மூவரையும் ஒரு சகனில் வைத்து நானும் என் நண்பரும் பரிமாறினோம்.

’’சோறு வேணுமா? சோறு வேணுமா?’’என்று கேட்டுகேட்டு பரிமாறினோம். ’கறிவேணுமா?/கறிவேணுமா?’’ என்று கூவிகூவி கேட்டு பரிமாறினோம்.

’’போதும் போதும்’’என்றே பதில் வந்தது. குறிப்பாக அந்த விடாகண்டரிடமும் கேட்டேன்

’’போதும்!’’என்றார்.

அல்லாஹ் உதவியினால் எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது. மறுநாள் காலை மதர்சாவுக்கு வண்டி அனுப்பி சோத்து சட்டி எடுக்க விட்டோம். சட்டிகள் நெளிந்துபோய் இருந்தது. இது சமையல் காரனின் கைவரிசை. இதோடு விட்டதா பிரச்னை? இன்னும் கேளுங்கள். காலை பத்து மணி சுமாருக்கு எங்கள் தெரு பட்டிமன்றத்திற்கு [தர்கா] போனேன். அங்கே ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது வந்தாரையா விடாகண்டர். 

’’பாரூக்! ராத்திரி எனக்கு வந்த எறச்சி எல்லாம் ஒரே ஜவ்வா இருந்துச்சுப்பா! நல்ல எறச்சியை எனக்கு  கெடைக்கலேப்பா!’’ என்றார்.

‘’அல்லாஹ் ஆட்டையும் மாட்டையும் படைத்தபோது அவைகளுக்கு ஜவ்வு முள்ளு எல்லாத்தையும் வைத்துத்தான் படைத்திருக்கிறான். யார்யாருக்கு எதை கொடுக்க நாடினானோ அவர்களுக்கு அதை கொடுப்பான். அவன் கொடுப்பதை தடுப்பார் யாருமில்லை கிடைத்தவரை லாபம் என்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறு!’’என்றேன். 

‘’அதுக்கு சொல்லலேப்பா அடுத்த வாரம் பாக்கிர்மார்களுக்கு சோறு கொடுக்கும்போது, அவனிடம் எறச்சி வாங்காதே! ஒரே ஜவ்வும் எலும்பும் தண்ணியும் போட்டு  ஏமாத்தி காஸு வாங்கிடுறான்’’ என்றார்.

எறச்சிகாரருக்கும் இவருக்கும் எப்போதும் ஒத்து வராது. என்னை இவர் தன்னுடைய கட்டுபாட்டுக் கோட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் என்பது புரிந்தது. ‘’நரிக்கு இடம் கொடுத்தால் கெடைக்கு ரெண்டு ஆடு கேக்கும்’’ என்று நான் வேலை செய்த கடை முதலாளியின் வாக்கு என் காதுக்குள் ஒலித்தது. இனியும் இந்த நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடுஅல்ல ஒரு கெடையை கேக்கும் என்று நினைத்தேன். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் முற்றியபின் ஆபத்து நமக்கே என்று என் உள் மனம் சொன்னது 

’’பாக்கிர்மார்கள் விருந்துக்கும் அவனிடமே இறைச்சி வாங்குவேன்! உன் கட்டளைபடியெல்லாம் நான் பணிந்து நடக்க முடியாது. நீ வந்தா வா! வரலேண்டா கவலை இல்லை’’ என்றேன்! 

இதைக் கேட்ட அவர் மூஞ்சி சுருங்கிப்போச்சு .அங்கிருந்து ’விசுக்’கென்று போய் விட்டார். இத்தோடு பிரச்சனை ஓய்ந்ததென்று நினைத்தேன்.அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு தர்காவுக்கு காற்றுவாங்க வந்தேன். ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத்நாரியா ஓதிய இன்னொரு லபையும் மற்றும் இரண்டொரு லபைமார்களும் ஜாமாத்காரர்களும் தர்கா எதிரே [பழைய ]புறாகூடு பக்கம் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

நான் வருவதை பார்த்த ஒஸ்தாத்

’’அதோ! பாரூக் வருகிறார்!’’ என்ற ஒஸ்தாத்

’’பாரூக்! கொஞ்சம் இங்கே வாரியளா?’’என்றார்.

கூப்பிட்ட தொனியும் அங்கே நின்ற ஆட்களின் முகபாவங்களையும் வைத்து நான் மனக்கணக்கு போட்டு பார்த்த வகையில் வந்த விடை ‘நான் சாட்சி சொல்லும்’ அளவுக்கு ஒரு குற்றம் நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன். நான் அவர்கள் கிட்டே நெருங்கியதும் என்னை பார்த்து ஒஸ்தாத் 

’’ஆமாம்! சலவாத்நாரியாக்கு இவரை கூப்பிடாதீர்கள்’’ என்று நான் உங்களிடம் சொன்னேனா?’’என்றார். 

பிரச்னை என்ன என்பது எனக்கு புரிந்து விட்டது

’’யாஅல்லாஹ்! சோதனைமேல் சோதனை என்னை தொடர்ந்து வருதேன்னு?’’ என்னையே நொந்துகொண்டு

’’இல்லையே! நான் உங்களை கூப்பிட்டபோது நீங்கள்தானே ’அவரையும் கூப்பிடுங்கள்’ என்று என்னிடம் சொன்னீர்கள்’ என்று சொன்னேன் 

’’அவரை கூப்பிடாதீர்கள் என்று நான் உங்களிடம் சொன்னதாக நீங்கள்தான் அவரிடம் சொன்னீர்களாம்.’’என்று ஒஸ்தாத் சொன்னார்.

"ஏங்க! நான் அப்படி உங்களிடம் சொன்னேனா?’’என்றேன். பதில் இல்லை. தலை குனிந்து நின்றார். எனக்கு திருமணம் நடக்கும் தருவாயில் கடல்கரைதெரு லபைமார்களுக்கும் ஜமாதுக்கும் வக்கூப் போர்டு சம்பந்தமான ஒரு பிரச்சனையில் லபைமார்களை ’நீக்கி’ வைத்தார்கள். வழக்கமாக நிகாஹ் செய்து வைக்கும் லபைக்கு பதிலாக இவர் என் முன்னே உட்கார்ந்து ‘’இப்போ சொன்ன மஹருக்கு...... என்று ஆரம்பித்து எதை எதையோ சொல்லி ‘ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்!’’ என்று சொல்லுங்கள்’ என்றார். மாப்பிள்ளையாகிய நானும் ஒரு கிளிப்பிள்ளையாகி’’ ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்!  ஒப்புக் கொண்டேன்!’’ என்றேன். ஆனால் அப்பொழுது சொன்னதுபோல இப்பொழுது இவர் சொன்ன இந்த படுதூறான செய்தியை நான் ’’ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை!’’ என்றதும் அங்குநின்ற எல்லோரும் சிரித்தார்கள் - பந்தி முடிந்தது!

S.முஹம்மது ஃபாரூக்

குறிப்பு : ஸலவாத் நாரிய என்பது புதினங்களில் (பித்அத்) ஒன்று இது நபி வழியல்ல, பழைய நினைவுகளை பகிர்ந்தளிக்கும்போது அதனைப் பற்றிய சுட்டல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

6 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அனுபவம் புதுமை.
கட்டுரையின கீழ் சலவாத் நாரியா ஒரு பித் அத் அதை ஓதுவது வழி கேடு, வழி கேடு நரகில் சேர்க்கும் என எச்சரிக்கவும்

Iqbal M. Salih said...

கொயட் இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி.
இது ஃபாரூக் காக்கா அவர்களின் ஒரு 'யாதோங்கி பாராத்'. அதாவது அந்தக் காலத்தின் 'நினைவுகளின் தோரணங்கள்'.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஃபாரூக் மாமா,

அந்த காலத்தில் நாலு பேருக்குச் சோறு கொடுப்பதற்குள் இத்தனை இம்சைகளா?

சடங்கு சம்பிரதாயங்கள் யாவற்றுக்கும் வேர் பணம் பண்ணுவதுதான். ஒன்னு ஒன்னா கட் பண்ண கட் பண்ண அந்த விடாக்கண்டன்கள் வேறு வழியில்லாமல் உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இல்லேன்னா இன்றும்கூட எறச்சிகறி சோற்றுக்காக அழைய வேண்டியதுதான்.

இன்னும் நிறைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

//இப்பொழுது இவர் சொன்ன இந்த படுதூறான செய்தியை நான் ’’ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை!’’ என்றதும் அங்குநின்ற எல்லோரும் சிரித்தார்கள் - பந்தி முடிந்தது!//

சமயோஜிதமான பதிலடி.

மூஞ்சி செத்துப் போயிருக்குமே?

sheikdawoodmohamedfarook said...

/இல்லேன்னாஎறச்சிகறிசோற்றுக்குஅலைய வேண்டியது தான்// மருமகன்சபீருக்கு.அவருக்குஇறைச்சிசோறுஇரண்டாம்பட்சமே.அவரின் மனோபாவம்யார்அவரைமதிக்கிறார்களோஅவர்களைஎல்லாம்இவரின் கட்டு பாட்டுவளையத்துக்குள்கொண்டுவந்துஆட்டிவைப்பதேஇவரையும் அறியாமல்இவர்மனதுக்குள்ளேபுகுந்தசெய்த்தான்.பிறரைஆட்டிவைக்கும் திறன் இவருக்கு எள் அளவும் இல்லை. பொது அறிவில் பூஜ்யம். ஆனால் ஆளநினைப்பதோ ராஜ்ஜியம்.

sheikdawoodmohamedfarook said...

/மூஞ்சிசெத்துபோயிஇருக்குமே//போயிருச்சே!டாக்டர் நாடிபாத்து உதட்டை பிதிக்கிட்டரே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு