Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெந்நீர் ஒத்தடம் III 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 01, 2015 | , ,

‘பூமழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது’ என்ற திரைப்படப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது பேண்ட் வாத்திய ஊர்வலத்திலோ பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்ஸிலோ சலூனிலோ ச்சாயாக் கடையிலோ அல்ல, தியேட்டரில்! ‘இதிலென்ன ஆச்சரியம்? தியேட்டரில் பாட்டுப் போடாமல் பஜனையா போடுவாங்க?’ என்று ‘முந்திரிக்கொட்ட’ வேண்டாம். நான் சொல்வது சினிமா தியேட்டரில் அல்ல ஓய், ஆபரேஷன் தியேட்டரில்! “மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரிலா?” “ஆமாங்கானும்! கதையைக் கேளும்.”

அரைகுறையாய் அலங்கரிக்கப்பட்ட அவுலியாவைப் போல பச்சை கவுன் அணிவிக்கப்பட்டு அந்த தியேட்டரின் அறுவை சிகிச்சை மேசையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது வேறு யாரும் அல்ல, ஷாட்சாத் நானேதான். தலையில் கெஜ்ரிவால் தொப்பி வேறு. எனக்கருகில் சந்தணம் பூச உள்ளே போய் செத்துத் தொலைந்த பட்டத்து லெப்பை இல்லாததால் நான் இன்னும் ‘அடங்கவில்லை’ என்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் அந்த டாக்டர் சர்வ அலட்சியமாக பாடலை ரசித்துக் கொண்டிருந்தது எனக்கு வினோதமாகவே பட்டது. பிடரியை பெயர்த்தெடுக்கும் பின்னணி இசையில் காசுக்காக கவலையை ஓவர் ஆக்ட் செய்யும் கதாபாத்திரங்களுக்கு நடுவே நடக்கும் ஆபரேஷன்களையே கண்டு கண்டமாகிப் போயிருந்த எனக்கு அந்தச் சூழல் ஏதோ காற்று வாங்க வந்த மாதிரி மிகமிக சாதாரணமாகவே தோன்றியது. லேசான பயம்கூட ஜகா வாங்கிப் போய் விட்டிருந்தது. அந்த ஆபரேஷன் தியேட்டரில் என்னை ஏன் கிடத்தினர்? எங்கே இருக்கிறது அந்த ஆஸ்பத்திரி? யார் அந்த டாக்டர்? என்ன ஆபரேஷன்? போன்ற உப்புச்சப்பில்லாத கேள்விகள் உங்களுக்கு எழலாம். எழவேண்டும். எழவில்லையென்றால் இந்த கட்டுரை இந்த பத்தியோடு முடிந்து போய்விடும் என்பதால் எழுந்தே ஆகவேண்டும். அப்படி எழவில்லை எனில் நானே கேள்வி எழுப்புகிறேன். கேள்வி எழுப்பும் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கேட்டு மெரசலாகிப்போய்த்தான் நானும் கேள்வி எழுப்புகிறேன். (கேள்வி கேட்பதற்கும் கேள்வி எழுப்புவதற்கும் என்ன வித்தியாசம் என்பது தெரியுமா உங்களுக்கு? சாதாரண ஆள் கேட்டால் கேள்வி கேட்பது. அரசியல்வாதியோ அமைச்சர் பெருமக்களோ கேட்டால் அது கேள்வி எழுப்புவது.) ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே என் மச்சான் கவலையோடு காத்திருக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் இந்தச் சூழலின் பின்னணியைப் பார்த்து விட்டால் வாசகர்களுக்கான மெஸேஜ் என்ன என்று விளங்கிவிடும். மெஸேஜ் இல்லேன்னா நலம் விசாரிக்கும் கடிதங்களைக்கூட வரிகளை ஸ்கிப் பண்ணி வாசிக்கும் வம்சாவழிக்கான முன்மாதிரியல்லவா நாம்?

இந்த அசாதாரணமான நாளிலிருந்து 6-7 மாதங்களைக் கழித்துவிட்டால் ஈவு இல்லாமல் கிடைக்கும் மீதி நாட்களுக்கு முன்பு, இறக்கம் இல்லாமல் என் இடது கையின் மோதிர விரல் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்ட மனைவி மாதிரி மற்ற விரல்களோடு ஒத்துழைக்காமல் தனித்து சோம்பி தலை குணிந்து நிற்க ஆரம்பித்தது. முதலில் புதுக் கல்யாணப் பெண்ணைப்போல லேசாக நிலம் பார்த்ததால் நான் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. தவிர, வலி ஏதும் இல்லையென்றால் ஒரு கையையே வெட்டி எடுத்தாலும் காலதாமதமாகக் கண்டுகொள்ளும் அளவுக்கு பிஸியான மனிதர்களாகிப் போனோமல்லவா நாமெல்லாம்? தொடர்ந்து அடிக்கடி ஒத்துழையாமல், இயக்கத்தைக் குறைத்துக்கொண்ட என் மோதிர விரலை என் பெருவிரல் வருடியும் தடவியும் தேய்த்தும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பெருவிரலின் பேச்சைக் கேட்காமல் மோதிர விரல் முரண்டு பிடித்தது. வேறு வழியில்லாமல் பெருவிரல் மற்ற மூன்று விரல்களின் உதவியோடு பை தூக்குவது, கார் ஓட்டுவது, பேண்ட் போடுவது போன்ற வேலைகளை அட்ஜெஸ்ட் செய்து நிறைவேற்றினாலும், என்ன ஏது என்று அறியும் முயற்சியில் நான் இறங்கலானேன்.

ஷார்ஜாவில் சம்பாதித்து அஜ்மானிலும் அமீரகம் முழுவதிலும் செலவு செய்யும் வர்க்கத்தில் வாழும் எனக்கு இங்கிருக்கும் மருத்துவர்களிடம் ஏற்கனவே பலமுறை மரண அடி கிடைத்திருந்ததால், மேற்கொண்டு அவதிப்பட விருப்பமில்லாததால் ஊர் போகும் நாள் வரைக் காத்திருந்தேன். காத்திருப்பு நாட்களில் மோதிர விரலுக்கு மோதிரத்தைத் தவிர களிம்பு, க்ரீம், தைலம், வெந்நீர் ஒத்தடம் என்று எல்லாம் செய்தும் மசக்கையான மங்கையரைப்போல் அது மயங்கியே கிடந்தது.

ஒரு வழியாக ஊருக்குப் போகும் நாளும் வர, அரபாபுவோட கடுப்பில்; ஒரு மாத விடுப்பில் ஊருக்குப் போனேன். சபுராளிச் சடங்குகளில் சில நாட்கள் கடந்துவிட சில விசாரிப்புகளுக்குப் பிறகு பெரும்பான்மை சிபாரிசோடு எங்கூருக்குப் பக்கத்து ஊரில் உள்ள அந்த எலும்பு முறிவு மருத்துவமனைக்குச் சென்றேன். சம்பிரதாயங்கள் முடிந்து மருத்துவரைக் காணும் கூட்டம் அவர் அறையில் மொய்த்திருக்க ஓட்டை ஒடிசல்களான நோயாளிகளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதில் சிலர் என்னைப் பார்வையாலேயே ஸ்கேன் செய்து ‘இவனுக்குக் கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு?’ என்று புருவம் உயர்த்த நான் மெல்ல எழுந்து விலகி நடந்து அந்த மருத்துவமனையைச் சுற்றலானேன். மாவுக்கட்டு இல்லாத மனிதரைக் காண்பதே அரிதாக இருந்தது. பெரும்பாலான நோயாளிகள், பெற்றெடுத்த பிள்ளையைப் போல தத்தம் கையை தூளியில் தொங்கவிட்டிருந்தனர். எல்லா உள்நோயாளிகளுக்கும் ஏதாவது எலும்பு முறிந்து போயிருந்தது. போதையில் விழுந்த பார்ட்டி, பைக்கில் சீன் காட்டிய பார்ட்டி, அடிதடி பார்ட்டி என்று நிறைய பேருக்கு எலும்பு ஒட்டவைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

நான் என் முறைக்காகக் காத்திருக்க, மருத்துவரைத் தனியே சந்தித்துப் பழக்கப்பட்ட எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நான் அழைக்கப்பட்டபோது என்னோடு சேர்த்து மூன்று சகனுக்கான ஆட்களும் அழைக்கப்பட்டார்கள். உள்ளே நுழைந்தால் அந்த மருத்துவரைச்சுற்றி இன்னும் சிலர் நின்றிருக்க, நெருக்கியடித்துக்கொண்டு கூட்டமாக நிற்க நேர்ந்தது. ‘மே...மே...’ என்கிற சப்தம் இல்லாததைத் தவிர அது ஆட்டு மந்தை அல்ல என்று சொல்லிவிட வேறு எந்த முகாந்திரமும் இல்லை. அவரும் ஆடு மேய்க்கும் இடையர்தான் என்பதற்கு அந்த ஸ்டெத்கோப்பைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களும் பொருந்திப் போயிருந்தது.

கைக்கு வாகாய்க் கிடைதத் ஆளைப் பிடித்து எதிரே ஸ்டூலில் உட்கார வைத்து, ‘என்ன பிரச்னை?’ என்று விசாரிக்க அந்த நோயாளி சொல்லிக்கொண்டிருக்க இவர் மற்றுமொரு நோயாளிக்கான பிர்ஸ்கிரிப்ஷன் எழுதிக்கொண்டோ சோதித்துக்கொண்டோ இருந்தார். அவர் சொல்லி முடித்ததும், அவர் வலிப்பதாகச் சொன்ன எலும்பு மூட்டை வளைத்தும் நிமிர்த்தியும் பரிசோதித்துவிட்டு (அம்மா, ஆத்தா, வலிக்குதே) ‘ஜவ்வு கிழிஞ்சி போயிருக்கு. அந்த மூட்டிலேயே ஊசி போடனும். அதற்கு முன், ஒரு வாரம் மருந்து தர்றேன். சாப்பிட்டுட்டு வாங்க. ஊசி போட்டுக்கனும் என்றால் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதான் போடுவோம் இப்பவே சொல்லி வச்சிடுங்க” என்று சொன்னார். அந்த நோயாளி மேற்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே அடுத்த நோயாளியை ஸ்டூலில் உட்கார வைத்து விசாரித்தார். செம பிஸி. எனக்கு ஏனோ ஏலம் போடும் இடங்கள் நினைவுக்கு வந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் ஒரே வைத்தியத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு அலை என்னையும் அடித்துச் சென்று அவர் எதிரே இறுத்தியது. நான் வெகு வேகமாக மேற்சொன்ன மேட்டரையெல்லாம் ஒப்பித்தேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனக்கும் அதே ட்ரீட்மெண்ட்தான். கொஞ்சம் மாற்றி, ‘நரம்பு சுருண்டிருக்கு. ஊசி போட்டால் சரியாயிடும். அதற்கு முன் 10 நாளைக்கு மருந்த சாப்பிட்டுப் பாருங்கள். களிம்பு எழுதியிருக்கேன் தேய்த்து வாருங்கள். சரியாக வில்லை என்றால் ஊசி போட்டுடலாம்.’ என்றார். நான் என் நிலைமையைச் சொல்லி, "முயற்சி செய்து பார்க்க நாட்கள் இல்லை. எதுவாக இருந்தாலும் உடனே செய்துவிடுங்களேன்" என்றேன். அவர், ‘ஊசி தேவைப்படாது. மருந்திலேயே குணமாகிவிடும்’ என்று சொல்லி என்னை அப்புறப்படுத்தினார். இருந்தாலும், 10 நாட்கள் கழித்து ஊசி போட்டுக்கொண்டு அமீரகம் திரும்ப மேற்கொண்டு 10 தினங்கள் இருந்ததால் ஒத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

பத்து நாட்களும் பச்சப்புள்ளையைப் போல என் விரலைக் கவனித்து வந்தாலும் ஒரு சிறிய முன்னேற்றம்கூட இல்லாமல் மோதிர விரல் அடம்பிடித்து முடங்கியே கிடந்தது. இதற்கிடையே நண்பர்கள் மற்றொரு எலும்புநோய் அறுவை சிகிச்சை நிபுணரைச் சந்திக்கச் சொன்னதால் அதே ஊரைச்சேர்ந்த அவரைப் போய்ப் பார்த்தேன். அங்கே அந்தச் சூழல் எனக்குப் பிடித்திருந்தது. நாகரிகமான காத்திருப்பு, முறையான வரிசையான கவனிப்பு, ஒவ்வொருவராக அழைத்து பரிசோதித்த பாங்கு, பவ்யமான உரையாடல், அக்கறையான அறிவுரை என்று அந்த டாக்டர் என்னைக் கவர்ந்தார். மேலும், அவர் ஒரு தமிழ் ஆர்வலர் என்பது ஆங்காங்கே பளிச்சிட்ட அறிவிப்புகளில் இருந்து தெரிந்தது. என் பிரச்னையைப்பற்றி தெளிவாகக் கேட்டுக்கொண்டு, ‘பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. மோதிர விரலுக்கான நரம்பு ஏதோ ஒரு அசம்பாவிதமான தருணத்தில் சுருண்டு கொண்டது. எக்ஸ்ரே எடுத்து உறுதி செய்து கொள்வோம். அப்படி சுருண்டிருப்பது உறுதியானால் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்று உறுதியாகச் சொல்லி எக்ஸ்ரே எழுதிக்கொடுத்தார். எக்ஸ்ரேயைப் பார்த்துவிட்டு, "நரம்பு சுருண்டுதான் இருக்கிறது. வெளிநாடு செல்ல இருப்பதால் தாமதிக்காமல் நாளையே அபரேஷன் செய்துகொள்ளுங்கள். பயப்படத் தேவையில்லை" என்று சொல்லி மற்றவற்றை அங்கிருந்த நர்ஸ்களிடம் சொல்லி அடுத்தநாள் காலை 7 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும் என்று அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை சரியான நேரத்திற்குப் போக தொடர்ந்து நடந்தவைதான் நான் துவக்கத்தில் சொன்னது.

ஆபரேஷன் துவங்கியது.

ஆடல் இல்லாத பாடல்களோடு அறுவை சிகிச்சைத் துவங்கியது. என் மணிக்கட்டில் போட்ட ஊசியால் என் இடது கை முழுவதையும் டாக்டர் தனதாக்கிக்கொள்ள, எனக்கு உள்ளங்கையில் படம் வரைவதுபோல் ஏதோ ஓர் உணர்வு மட்டும் இருந்தது. தலையை வலது பக்கம் திரும்பி என் கை கீறப்படுவதைக் காண சகிக்காமல் கண்களையும் இறுக்கி மூடிக்கொண்டிருந்த என்னிடம், ‘ நீங்கள் தாராளமாக இந்தப் பக்கம் திரும்பி ஆப்ரேஷனைப் பார்க்கலாம் என்றார் டாக்டர். வேண்டா வெறுப்பாய் நானும் பார்க்கலானேன்.

மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட ஆப்ரேஷன் அது. என் உள்ளங்கையில் வெட்டிய வடு தெரியக்கூடாது என்பதற்காக உள்ளங்கை ரேகையோடு கீறி உள்ளே நரம்பை நெருடினார். மெளன வீணையாக மீட்டப்பட்ட என் நரம்பு டாக்டரோடு ஒத்துழைக்க, என்னிடம் விரலை அசைக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! டெர்மினேட்டரில் அர்னால்ட் அசைப்பதுபோல் என் விரல்களை நான் இயக்க என் மோதிர விரலும் ஒத்து அசைந்ததைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. 40 நிமிடங்களில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிய, என் கைக்கும் ஒரு தொட்டில் கட்டித் தொங்க விட்டு 5 நாட்கள் கழித்து வந்து தையலைப் பிரித்துக்கொள்ளச் சொல்லி அனுப்பி வைத்தார். அந்த ஐந்து நாட்களும் வலது கையையே கையுறை அணிந்து இடது கையாகவும் கையுறை அகற்றி வலது கையாகவும் உபயோகித்தாலும் சாப்பிடும்போதெல்லாம் ஏனோ லேசாக குமட்டவே செய்தது.

ஆச்சு, ஐந்தாவது நாள் சர்க்கரைப் பொட்டலத்தின் சணல் பிரிக்கும் அலட்சியத்தோடு தையல் பிரிக்கும் நர்ஸ்களிடம் சொல்லாமல் டாக்டரே ஒரே நிமிடத்தில் உள்ளங்கையில் ஒரு சிறிய கிச்சுகிச்சு மூட்டுவதுபோன்ற உணர்வைத்தந்து தையலைப் பிரிக்க, உம்மாவிடம் இங்குதான் ஆபரேஷன் செய்தார் என்று சொன்னபோது உம்மா நம்ப நேரமானது. அந்த அளவு காஸ்மெடிக் சர்ஜன் போல் ரேகையோடு வெட்டி ஜமாய்த்திருந்தார். இந்த கட்டுரையில் நான் சொல்லவில்லையென்றால் என் உள்ளங்கையைப் பார்த்து நீங்கள்கூட நம்ப மாட்டீர்கள்; எந்த வடுவோ தழும்போ இல்லை.

டாக்டருடனான உரையாடலின்போது, “ ஏன் டாக்டர் இப்படி ஆனது?” என்ற கேள்விக்கு, “இது நடந்த ஆரம்பத்திலேயே தினமும் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்திருந்தால் இந்தளவுக்கு சுருண்டிருக்காது” என்ற வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

19 Responses So Far:

Anonymous said...

ஆஸ்பத்திரி ஆப்பறேசென் தியேட்டரில் சினிமா பாட்டு போட்டு பேசண்டை குஷிபடுதுராங்களா? பரவா இல்லையே.

இந்தியாவிலும் கஸ்ட்டமர் சர்வீசு நல்லாத்தான் ஈக்கிது.

இனிமே ஆஸ்பத்திரி ஆப்பறேசென் தியேட்டரிலே டிஸ்கோ டான்ஸும் பாக்கலாம் போல தெரியுது.

முஹம்மது ஃபாருக்

Iqbal M. Salih said...

சாதாரண விரல் மேட்டர்,இத்தனை சுவாரஸ்யமாகவா! குட்!

ஆனால், இதற்கு முன்பு வேறு ஒரு விரல் மேட்டர் இதைவிட சுவையாக வாசித்த ஞாபகமாக இருக்கிறதே?

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,

ஆப்ரேஷனின்போது பாடல் போடுவது பேஷண்ட்டை குஷிப்படுத்த என்றா நினைக்கிறீர்கள்? டாக்டரையாக்கும்!


தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், சபீர் காக்கா..

என்னுடைய ஓட்டு வெந்நீர் ஒத்தடத்துக்கே.

நல்ல அனுபவம் பேசி இருக்கு.

காக்கா... டாக்டர் முரளி கிட்டத்தானே நீங்கள் அந்த சர்ஜெரி செய்தீர்கள்?

sabeer.abushahruk said...

இக்பால்,

என்ன விரல் மேட்டரை 'சாதாரண' என்று சொல்லிவிட்டாய்?

விரலைச் சுழற்றி 'ஒரு தடவை சொன்னால் நூறு தடவை' தலையாட்ற தமிழ் நாட்டவர் நாம்.

ரெண்டு விரலைக் காட்டி ஆட்சியைப் பிடித்தது,

அஞ்சு விரலைப் பிரித்துக் காட்டி தமிழ்நாட்டை ஆண்டது,

அதே ஐந்து விரலை சேர்த்துக் காட்டி மத்தியில் ஆண்டது,

அண்ணா சாலையில் இன்றைக்கும் வழிகாட்டுவதுபோல் சுட்டு விரலைக் காட்டி நிற்பது என்று

விரலாலேயே "ஓ" போட்டு வாழ்ற சமுதாயம் நம் தமிழ்ச் சமுதாயம்.

தவிர, நீ கேட்கும் மற்ற விரல் கட்டுரைக்கு மேலே லிங்க் கொடுக்கப்பட்டிருக்கு.

sabeer.abushahruk said...

தம்பி தாஜுதீன்,

ஆமாம். அதுவும் நீங்கள் சொல்லித்தான் நான் போனேன் என்று நினைக்கிறேன்.

(அல்லது நான் சொல்லி நீங்கள் போனீர்களா என்பதும், டாக்டர் பெயர் முரளியா ரவியா என்பதும் சரியாக நினைவில்லை. ஆஸ்பத்திரி பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை ரோடில் இருக்கிறது. சர்ஜரி நடந்தது டாக்டர் பாலகிருஷ்ணன் (ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்) மருத்துவமனையில்.)

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம், தாஜுதீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சபீர் காக்கா.. டாக்டர் ரவியே தான்.. என்னோட முதுகுவலிக்கு நல்ல டிரிட்மெண்ட் கொடுத்த நல்ல டாக்டர்

sheikdawoodmohamedfarook said...

கண்பார்வவைஅற்றவர்கள்புத்தகம்படிப்பதுவிரலால்;தொழுகையில்அத்தஹயாத்துஓதும்போதுநீட்டுவதுஅல்லதுஆட்டுவதுவிரலால்;பத்திரத்தில் ரேகைவைப்பதுவிரலால்;ஊறுகாயேதொட்டுநக்குவதுவிரலால்; ;பள்ளிகூடத்தில்சிலேட்டுபலகையில் எழுதியதை எச்சி தொட்டுஅழித்ததுவிரலால்;களரிகறிவெந்துபோச்சான்னுநசித்துபாப்பது விரலால்.

sheikdawoodmohamedfarook said...

திண்ணையில்மண்ப்பரப்பிஆனா-ஆவன்னா எளுதுனது விரலால்;பிறந்தகுழந்தைதாயிடம்பால்கேக்கவாயில்வைத்தது விரலை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மசக்கையான மங்கையராக்கி, புதுக் கல்யாணப் பெண்ணாக்கி பாவித்த அந்த விரல் பற்றிய வருணனை அருமை! அந்த பெண் இன்னும் அழகும் ஆரோக்கியமும் பெற என் துஆ!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மசக்கையான மங்கையராக்கி, புதுக் கல்யாணப் பெண்ணாக்கி பாவித்த அந்த விரல் பற்றிய வருணனை அருமை! அந்த பெண் இன்னும் அழகும் ஆரோக்கியமும் பெற என் துஆ!

ZAKIR HUSSAIN said...

//அந்த மூட்டிலேயே ஊசி போடனும். அதற்கு முன், ஒரு வாரம் மருந்து தர்றேன். சாப்பிட்டுட்டு வாங்க. ஊசி போட்டுக்கனும் என்றால் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதான் போடுவோம் இப்பவே சொல்லி வச்சிடுங்க” என்று சொன்னார். //

இங்கேயும் 'கெழமெ ராத்திரியா.....தர்ஹா மாதிரி'

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,

விரலைப் பற்றிய விரல்வாரியான...ஐ மீன்... விலாவாரியான விளக்கங்களுக்கு 'தெரிமா கசி'

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

தங்கள் துஆவுக்காக மிக்க நன்றி.

முகநூல் மோகத்திலிருந்து எம்மக்களை மீட்டெடுக்க ஏதேனும் மார்க்கம் கண்டு பிடிக்கனும்.

காரணம், முகநூல் பிரபல்யமான பிறகு மக்கள் அரட்டையிலும் பொழுதுபோக்கும் அம்சங்களிலும் நேரம் செலுத்துகிறார்களே ஒழிய ஆக்கபூர்வமாக எழுதவோ வாசிக்கவோ நேரம் ஒதுக்குவது அரிதாகிவிட்டது.

முகநூலுக்கென்று நேரத்தைப் பகுத்து ஒதுக்கிக் கொள்ளாவிடில் நாம் தொலைந்துபோய்விட்டோம் என்பதை உணரக்கூட நேரம் இல்லாமல் போய்விடும்.

தற்போது எங்கே இருக்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

sabeer.abushahruk said...

ஜாகிர்,

அவர் ரொம்ப சல்லிசான டாக்டரோ என்னவோ... அம்புட்டு கூட்டம். ஒரே மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கவா இம்பூட்டு படிப்பு படிக்கனும்?

நீ இருந்திருந்தா பேஜாராகிப் போயிருப்பே.

இப்னு அப்துல் ரஜாக் said...

மசக்கையான மங்கையராக்கி, புதுக் கல்யாணப் பெண்ணாக்கி பாவித்த அந்த விரல் பற்றிய வருணனை அருமை! அந்த பெண் இன்னும் அழகும் ஆரோக்கியமும் பெற என் துஆ!

Yasir said...

இது எப்ப காக்கா ...சுவாரஸ்யம் மிகுந்த ஆப்ரேஷன் சாரி ஆக்கம்....நலம் பெற துவாக்கள் காக்கா

sabeer.abushahruk said...

தம்பிகள் இப்னு அப்துர்ரஸாக் / யாசிர்,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

(யாசிர், இது பழங்கத. கண்டிப்பாக உங்களிடம் சொல்லியிருப்பேன். மறந்திருப்பீர்கள்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு