Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உத்தமப் பெண்மணி உம்மு சுலைம் (ரலி) 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 05, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 5

இஸ்லாம் என்பது வெறும் காற்றை ஆதாரமாக வைத்துக் கட்டப்பட்ட கற்பனைக் கட்டடமல்ல!

அது தியாகம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட இறை நம்பிக்கை எனும்  இரும்பால் எழும்பிய ஓர்  எஃகுக் கோட்டை!

அதை முழுதும் அறிய வேண்டுமானால் அங்கே வாழ்ந்து இருக்க வேண்டும். அந்தச்  சுவர்க்கத்தின் தென்றலைச் சுவாசித்திருக்க வேண்டும். தியாக வேள்வியில் புகுந்து வெளிவந்து இருக்க வேண்டும். சுவனம் வரை சென்று திரும்பிய அந்த மாமனிதரைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போதுதான், மங்காப் புகழ் பெற்ற அந்த தங்கத் தலைவரை முன் மாதிரியாகக் கொண்டு, மிகமிகச் சாமான்ய மானிடர்கள் எத்தகைய புண்ணிய சீலர்களாக, பாவக் கறை படியாத பளிங்கின் தூய்மை கொண்டவர்களாக, இகத்திலும் பரத்திலும் தூய வாழ்வைத் தேடிக்கொண்டவர்களாக, அல்லாஹ்வுக்கு அடிபணிதலும் அதற்காகவே உயிர் வாழ்தலும் எப்படி என்ற அற்புதத் தத்துவத்தை அறிந்து கொண்டவர்களாக எங்ஙனம் மாறிப் போனார்கள் என்ற விந்தையை நாம் முற்றிலும் புரிந்துணர முடியும்!

இத்தகைய மேன்மக்கள் ஆண்கள் மட்டுமல்ல. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சில பெண்களும் ஈமானில் எப்படிப்பட்ட இமாலய உறுதி பெற்றுத் திகழ்ந்தார்கள் என்பதை இதோ இந்த வீரத் தாயின் அரிய வரலாற்றில் நாம் அறியலாம்:

உத்தமப் பெண்மணி உம்முசுலைம் (ரலி) அவர்கள் மதீனாவின் பனூ நஜ்ஜார் குலத்தைச் சார்ந்தவர்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார், அப்துல் முத்தலிபின் அன்னை சல்மாவின் பேர்த்தியாவார்! இவர்தான் புகழ்பெற்ற ஸஹாபி அனஸ் இப்னு மாலிக் (ரலி) உடைய அன்னையுமாவார்! 

இஸ்லாத்தின் தூய ஒளி  மதீனாவைச் சென்றடைந்தபோது, முதலில் அதனை ஏற்றுக்கொண்டவர்களுள் முக்கியமானவர் அன்னை உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.

வல்லவன் அருளால் நல்லறம் பேணி வாழ்ந்த நற்குண நங்கை, தன் கணவர் மாலிக்கை அல்லாஹ்வின் மார்க்கம் நோக்கி அனுதினமும் அழைத்து வந்தார். ஆனால், அறியாமைக் கால அனுஷ்டானங்களை விட முடியாத மாலிக், மனைவி மீது வெறுப்புற்று சிரியா சென்று அங்கு ஒரு பழைய பகைவனால் கொல்லப்பட்டு இறந்தார்.

அதன்பிறகு, நல்லொழுக்கமும் கூர்மையான அறிவும் நிறைந்த உம்மு சுலைமை மணக்கச்  செல்வமும் சிறந்த தோற்றமும் கொண்ட  ஸைத் இப்னு சஹ்ல் என்ற அபூ தல்ஹா முன்வந்து பெண் கேட்டபோது, "அபிசீனியத் தச்சனால் செய்யப்பட்ட மரச் சிலையை வணங்கும் மடையனாகிய உம்மை, முஸ்லிமாகிய என்னால் மணந்து கொள்ள முடியாது" என்று முகத்துக்கு நேராகவே தைரியமாக பதிலளித்தார்  உம்மு சுலைம்.

மஞ்சளும் வெள்ளையும் (தங்கமும் வெள்ளியும்) மஹராக எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாக அபூ தல்ஹா தயாரானபோது கூட, "மனப்பூர்வமாக இஸ்லாத்தைத் தழுவினால், அதையே மஹராக ஏற்றுக்கொள்கிறேன்; வேறு எதுவும் தேவையில்லை" என்று உறுதியாய் நின்று, அதில் வெற்றியும் கண்டார் உண்மை விசுவாசி உம்மு சுலைம்! அபூ தல்ஹா அல்லாஹ்வின் அருளால் அக்கணமே இஸ்லாத்தை ஏற்றார். அந்த உன்னதச் செயலே, உம்மு சுலைமுக்கு மஹராகவும் ஆனது.(1) இந்த இனிய தம்பதிகளுக்கு அபூ உமைர், அப்துல்லாஹ் என்ற இரு ஆண்மக்கள் பிறந்தனர்.

நெஞ்சம் நிறை பாசம் கொண்ட நேச நபி (ஸல்) அவர்கள், இத்தம்பதியரின் இல்லத்திற்கு அடிக்கடி வருகை தருவார்கள். அப்பொழுது அவர்கள் குழந்தை அபூ உமைருடன் சிரித்து விளையாடுவார்கள். 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்: 

நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ஒரு தம்பி இருந்தான். அப்போது அவன் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தான். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எம் வீட்டிற்கு வந்தால், 'அபூ உமைரே! பாடும் உன் நுகைர் (சின்னக்குருவி) என்ன செய்கிறது?' என்று சிரித்துக் கொண்டே செல்லமாகக் கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராகிவிடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டுத்  தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்.(2)

ஒருநாள், ஏந்தல்  நபி (ஸல்) அவர்கள், மதிய வேளையில் ஓய்வெடுப்பதற்காக எங்கள் இல்லம் வந்து ஒரு தோள் விரிப்பில் படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அண்ணலார் அவர்களின் பொன் மேனியிலிருந்து வியர்வை பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தது. என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள், வியர்வை வேர்த்துக் கொட்டும் பகுதியில் நின்று, அதைத் துடைத்து எடுத்து, ‘கண்ணாடிக்குடுவை’ ஒன்றில் சேகரம் செய்தார்.

விழித்து  எழுந்த அன்புள்ளம் கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தங்களின் வியர்வையை நறுமணப்பொருளில் சேர்க்கின்றேன் யா ரசூலுல்லாஹ்! என்றார். இதைக் கேட்டதும் பாந்தம் மிகும் பாசம் கொண்ட பண்பு நபி (ஸல்) அவர்கள், என்  அன்னை உம்மு சுலைமின் அச்செயல் கண்டு அன்பாய்ச் சிரித்தார்கள்!(3)

இப்போது  நாம் "கண்ணாடிக் குடுவைகள்" என்ற தொடரைத்  தொட்டு வருவோம். அந்த இறுதி வரிகள் இவ்வாறு நிறைவடைகின்றன: 

"ரசூலுல்லாஹ் அவர்கள் யாரையாவது ஏசினால், அது மறுமை நாளில் அவருக்கு பாவப் பரிகாரமாகவும் மேலும் அவரை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக ஆக்கி வைப்பதற்கான முன்னேற்பாடாகவும் ஆகிவிடும் என்பதையும் இது விஷயத்தில் என்ன மாதிரியான உடன்படிக்கையை இறைவனிடம் வேந்தர் நபி (ஸல்) அவர்கள் வேண்டி வைத்திருந்தார்கள் என்பதையும் நாம் விரிவாகக் காண்போம்.

அந்தச்  சம்பவத்தை, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்:

எங்கள் வீட்டில் வளர்ந்த ஒரு சிறுமியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே கண்டார்கள். ஆச்சர்யத்துடன் "ஓ. அந்தச் சிறுமியா நீ? மிகவும் பெரியவளாக வளர்ந்துவிட்டாயே! இனிமேலாவது உன் வளர்ச்சி அதிகரிக்காமல் போகட்டும்!" என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

அந்தச் சிறுமியோ, அழுதுகொண்டே உம்மு சுலைம் (ரலி) இடம் சென்றாள். 

மகளே! உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் அழுகிறாய்?” என்று வினவினார் உம்முசுலைம் (ரலி).

அவள் அழுகையை நிறுத்தாமல், "அல்லாஹ்வின் தூதர், என் வயது இனிமேல் அதிகரிக்காமல் போகட்டும் என்று எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனிமேல் ஒருபோதும் என் வயது அதிகமாகாது!" என்றாள்.

உடனே உம்முசுலைம் (ரலி), தம் முக்காட்டுத் துணியைத் தலையில் சுற்றிக் கொண்டு நபியைக் கண்டுவர பரபரவென்று கிளம்பி விட்டார்.

அல்லாஹ்வின் நபியே! என் வீட்டில் வளரும் அனாதைச் சிறுமி அழுகின்றாள் தெரியுமா!” 

ஏன் அழுகின்றாள்? என்ன விஷயம் உம்மு சுலைமே?

"அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அதாவது, அவளுடைய ஆயுள் கூடாமல் போகட்டும்" என்று தாங்கள் பிரார்த்தித்து விட்டீர்களாமே?"

இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனித்துளிகள் சிதறியதுபோல் பவள வாய் திறந்து சிரித்தார்கள்!

பின்னர் அவர்கள், "உம்மு சுலைமே ! என் இரட்சகனிடம் நான் கொண்டிருக்கும் கோரிக்கையை நீ அறிவாயா?" எனக் கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்கள்:

என் இறைவா! நான் மனிதரில் ஒருவன். எல்லா மனிதர்களும் மகிழ்ச்சி அடைவது போன்றே நானும் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா மனிதரும் கோபப்படுவது போன்றே நானும் கோபப்படுகிறேன். எனவே, என் சமூகத்தாரில் யாரேனும் ஒருவருக்கு எதிராக நான் பிரார்த்தித்து, அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், நான் செய்த அந்தப் பிரார்த்தனையையே அவருக்கு பாவப்பரிகாரமாகவும் மறுமையில் உன்னிடம் நெருக்கமாக்கி வைக்கும் அம்சமாகவும் மாற்றி வைத்து விடுவாயாக! என்ற உடன்படிக்கையை நீ அறிவாயா உம்மு சுலைமே!” 

என்று உரைத்தார்கள் அருள் வடிவான அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (4) 

இவ்வாறாக, ஏந்தல் நபி அவர்கள் எந்தக் காலத்திலும் எந்த ஜீவனையும் சோகத்தில் ஆழ்த்திடக் கருதியதே இல்லை! அதற்கு மாறாக, சுகப்படுத்தவே முயன்றார்கள். தம் வாழ்வில் சந்தித்த அனைத்துத் துன்பங்களையும் தொல்லைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு அவற்றையெல்லாம் தம் உம்மத்துகளுக்கு இன்பமாகவும் இனிமையாகவும் மாற்றித் திருப்பி அளித்தார்கள் நம்  திருத்தூதர் (ஸல்) அவர்கள்.

ஒருநாள் உம்மு சுலைமின் கணவர் அபூ தல்ஹா (ரலி) நோன்பு நோற்றிருந்தார். நோய்வாய்ப் பட்டிருந்த சிறுவன் அபூ உமைருக்கு இறைவனின் நாட்டப்படி இறப்பு வந்துவிட்டது! இதனைக் கணவரிடம் தெரிவித்தால், இஃப்தாருக்கு உணவு ஏதும் உண்ண மாட்டார் என்பதை உணர்ந்த உம்மு சுலைம் (ரலி) குழந்தையைக் கபனிட்டு ஓரிடத்தில் மூடிவைத்து, உணவு சமைத்து, நறுமணம் பூசி கணவரை வரவேற்கத்  தயாராக இருந்தார். கணவர் வீட்டிற்கு வந்ததும், மகன் இப்போது எப்படி இருக்கின்றான் என்று நலன் விசாரித்தார். "நேற்றைவிட இன்று அமைதியாக இருக்கின்றான்" என்று உம்மு சுலைமிடமிருந்து பதில் வந்தது! கணவர் திருப்தியாக உணவு உண்டதும் அன்றிரவு இல்லறச் சோலையில் இருவரும் இணைந்தனர்! 

அதிகாலையில் குளித்து முடித்து, கணவரைக் கண்டதும்,

"ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவல் கொடுத்தான். இரவல் கொடுத்தவன் பின்னர், அதைத் திருப்பிக் கேட்டால், உரியவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமல்லவா?" என்று வினவினார் கணவரிடம்!

ஆம். கண்டிப்பாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்” என்றார் அபூ தல்ஹா (ரலி).

பிள்ளையை நமக்குத் தந்தவன் திரும்பவும் அதனைப் பெற்றுக் கொண்டான்” என்று குழந்தையின் இழப்பை அப்போதுதான் உரைத்தார் உம்மு சுலைம்.

அதிர்ந்துபோன அபூ தல்ஹா சோகத்துடன் அண்ணலாரிடம் போய் ஆறுதல் தேடியபோது, "உங்களின் நேற்றைய இரவில் அல்லாஹ் அருள் செய்வானாக" என்று பிரார்த்தித்தார்கள் எம் பெருமானார் (ஸல்). அன்றிரவு கருவுற்ற உம்மு சுலைம் அவர்களுக்கு, அண்ணல் நபியின் துஆவை ஏற்றுக் கொண்டு, அப்துல்லாஹ் என்ற அழகிய மகவை அந்த ஆண்டு அல்லாஹ் அருளினான்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதிலும் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் மட்டும் தம் பணியைச் சுருக்கிக் கொள்ளவில்லை! உஹத் யுத்தத்திலும் ஹுனைன் யுத்தத்திலும் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு, நெருக்கடியான அந்த இரு போர்களிலும் வில்லும் அம்பும் கொண்டு எதிரிகளின் மீது தாக்குதலும் நடத்தினார் இந்த வீராங்கனைத் தாய்!

கைபர் போரில் உம்மு சுலைம், இடையில் வாளோடு நிற்பதைக் கண்ட கணவர் அபூ தல்ஹா (ரலி) ‘அல்லாஹ்வின் தூதரே, அதோ பாருங்கள் உம்மு சுலைமை!’ என்று சுட்டிக் காட்டியபோது, 

"உம்மு சுலைமே! உன் வாள் கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம்" என்ற அண்ணலாரின் கேள்விக்கு, 

"உருவ வணங்கிகளில் எவனாவது என்னருகில் நெருங்கும் வாய்ப்பு வந்தால், அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விடுவதற்காகத்தான் இந்தப் போர்வாள் அல்லாஹ்வின் தூதரே!"(5)

என்ற உம்மு சுலைமின் பதில் கேட்டு, “அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல” தம் சிற்றன்னையைப் பார்த்துச் சிரித்தார்கள் நம் செம்மல் நபியவர்கள்.

"நான் சுவனம் சென்றேன். அங்கு ஒரு மெதுவான குரலைச் செவியுற்றேன். அது எவருடைய குரல் எனக் கேட்டேன். அதுதான் உம்மு சுலைம் என்று கூறப்பட்டது" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளியதிலிருந்து, உம்மு சுலைம் (ரலி) அவர்களின்  உயர்வினை நாம் அறியலாம்.

அணங்குகளின் உண்மையான அணிகலன் அறப் பண்பாகும்’ என்ற அமுதமொழியை, வாழ்வாகவே நமக்கு வாழ்ந்து காட்டிய உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், அபுபக்ரு  (ரலி) அவர்களின் கிலாபத்தின்போது மரணம் எய்தினார்கள்.

o o o 0 o o o
ஆதாரங்கள்:
(1) நஸாயீ 4389 : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(2) புஹாரி 6203: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(3) நஸாயீ 5276 : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(4) முஸ்லிம் 5073: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(5) அல்இஸாபாஹ் 8/229

இக்பால் M. ஸாலிஹ்

3 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//ஒருவன்தன்பொருளை மற்றொருவனுக்கு இரவல்கொடுத்தான்......// இந்தவரிகளை வாசித்தபோதுஎன்னிருகண்ணிலும் வந்தது நீர். இன்றையபெண்குலம்படித்துபாடம்பெறஇங்கேநிறையவேசெய்திகள் இருக்கிறது. சொல்லும்விதத்தில்சொன்னால் கேளாரும் கேட்டுநடப்பார்! இஸ்லாமியபெண்மணிகளின்மாண்பினைஎளியஇனியதமிழில் தரும் தம்பி இக்பாலுக்குவாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

//"நேற்றைவிட இன்று அமைதியாக இருக்கின்றான்" //

கணவரிடம் மகன் இறந்ததை மறைக்க பொய்யுரைத்தாக வேண்டுமே எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற என் குழப்பத்திற்கு மேற்சொன்ன வாக்கியம் ஆச்சரியத்தைத் தந்தது.

'அமைதியாக' சலனமற்று இருக்கிறான் என்கின்ற பொருள் மரணித்துவிட்டான் என்ற உண்மையையும் சொல்வதை என்னவென்று பாராட்டுவது.!

அற்புதமான இஸ்லாமிய வரலாற்றின் செம்மொழித் தொடர் இடரே இல்லாமல் வளர வாழ்த்துகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு