Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உருகிய எதிர்ப்புகள் - 06 0

அதிரைநிருபர் பதிப்பகம் | April 11, 2016 | , , ,

இமாம் அபூஹனீஃபாவிடம் தனித்தன்மை வாய்ந்த இருபெரும் பண்புகள் குடிகொண்டிருந்தன. ஒன்று, அவரது சுதந்திரமான சிந்தனை. மற்றொன்று, அந்தச் சிந்தனையின் பயனாய் விளைந்த துணிவு. ஒரு பிரச்னைக்கான தீர்வை வழங்குவதற்குமுன், அந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து

அம்சங்களையும் மிகுந்த கவனத்துடன் அலசி ஆராய்ந்து, அதற்கான தீர்வைக் கண்டறிந்து, அதில் அவருக்கு மனநிறைவு ஏற்பட்ட பிறகே தீர்ப்பு வழங்குவார் இமாம் அபூஹனீஃபா. ஞானவான்களின் இரு முக்கியப் பண்புகளை இது அவருக்கு அளித்தது. ஒன்று பொறுமை, மற்றொன்று, தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சுயகட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாடு மற்றொரு பெரும் சிறப்பை அவருக்கு அளித்தது.

தம்மைத் தாக்கும் எவரையும் அவர் கடின வார்த்தைகளால் எதிர் கொண்டது இல்லை. தேவையற்ற, அருவருக்கத்தக்க சொற்பிரயோகங்களில் ஈடுபட்டதும் இல்லை. இன்று நம்மிடம் அரிதாகிவிட்ட விஷயம் இது. நமது கொள்கைக்கு எதிரானவர்களைக் கீழ்த்தரமாகப் பேசுவதும் அதை எதிர்கொள்பவர்கள் அதற்குச் சற்றும் சளைக்காமல் கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசுவதும் அல்லவா இப்போது நடப்பாக உள்ளது.

இமாம் ஹஸன் அல் பஸ்ரி (ரஹ்) ஒரு பிரச்னைக்கு தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்தக் கருத்து அபூஹனீஃபாவுக்குச் சரியானதாகப் படவில்லை. எனவே, ‘ஹஸன் தவறிழைத்துவிட்டார்’ என்றார். அதைக்கேட்ட ஒருவர், ‘ஹஸன் தவறிழைத்து விட்டார் என்கிறாயா நீ, பரத்தையின் மகனே’ என்று ஆபாசமான வார்த்தைகளில் ஏசிவிட்டார். எத்தகு இழி சொல் அது? பழிக்கப்படுபவருக்கு எவ்வளவு கோபம் வரும்?

ஆனால் அபூஹனீஃபா முகம் சிவக்கவில்லை; ஆத்திரம் அடையவில்லை. ஹஸன் அல் பஸ்ரியின் கருத்துக்கு எதிராக அவ்விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து இருக்கிறது. அந்தக் கருத்துதான் சரியானது என்பது இமாம் அபூஹனீஃபாவின் கருத்து. எனவே அமைதியாக, ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஹஸன் பிழை செய்துள்ளார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் கருத்தே இவ்விஷயத்தில் சரி’ என்று மட்டும் பதில் சொன்னாரே தவிர வேறு எதிர் பேச்சு, தர்க்கம், பதிலுக்கு ஏச்சுப்பேச்சு? ம்ஹும்! ஒரு வார்த்தை கிடையாது.

‘யா அல்லாஹ்! என்னால் ஒருவருக்கு எரிச்சலோ, கோபமோ ஏற்பட்டிருக்குமாயின் என் இதயம் அவருக்காகத் திறந்தே இருக்கிறது’ என்பது அவர் அடிக்கடி உரைக்கும் வாசகம். ஒருமுறை இமாம் அபூஹனீஃபாவிடம் வாக்குவாதம் புரிந்துகொண்டிருந்த ஒருவர், இமாம் அபூஹனீஃபாவை இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணானவர், இஸ்லாத்திற்குத் தொடர்பே இல்லாத விஷயங்களையெல்லாம் கண்டுபிடித்துப் புகுத்துபவர் என்று குற்றம் சுமத்தி, உச்சக் குரலில், ‘பித்அத்வாதியே! வழிகெட்டவனே!’ என்று கத்திவிட்டார்.

‘அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக. ஏனெனில், நீர் சுமத்திய குற்றங்களை நான் புரிவதில்லை என்பதை அவன் அறிவான். அவனை எப்பொழுது அறியத் தொடங்கினேனோ, நான் எனது நம்பிக்கைகளில் வரம்பு மீறியதில்லை. அவனது மன்னிப்பைத் தாண்டி எதையும் நான் விரும்புவதில்லை; அவனுடைய தண்டைனைக்கு மட்டுமே நான் அஞ்சுகிறேன்’ என்று பதில் அளித்தவர், இறைவனின் தண்டனையைப் பற்றிக் கூறும்போது விம்மி அழுதுவிட்டார்.

அதைக் கண்டு நெகிழ்ந்து, தமது தவறை உணர்ந்த அந்த மனிதர் ‘நான் சொன்னதைக் குறித்து என்னை மன்னியுங்கள்’ என்றார்.

'யாரேனும் அறியாமையால் என்னை ஏதாவது சொல்வார்களாயின் நான் அவர்களை மன்னித்து விடுகிறேன். ஆனால் மார்க்க அறிவுள்ளவர்கள் என்னைப் பற்றி ஏதேனும் கூறினால், அவர்கள் பாவமிழைத்தவர்கள். ஏனெனில் அத்தகையவர் சுமத்தும் பழி அவர்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும்’ என்றார் அபூஹனீஃபா.

அவரது அமைதி உணர்ச்சியற்ற ஒருவரின் ஜடத்தன்மை போலன்றி இறையச்சத்தில் ஏற்பட்டிருந்த சாந்தமாகும். அல்லாஹ்வைக் குறித்து ஞானமற்றுப் பேசுவதில்தான் அவருக்கு அச்சமும் தவிப்பும் இருந்ததே தவிர, மக்கள் அறியாமையினால் உதிர்க்கும் வார்த்தை அழுக்குகளை அவர் பொருட்படுத்தியதில்லை.

அவருடைய ஆசிரியரான ஹம்மாத், தம்முடைய மாணவர் அபூஹனீஃபாவின் சுதந்திரச் சிந்தனையையும் அதில் அவர் கொண்டுள்ள உறுதியையும் கவனித்தார். அதனால் தம்மிடம் அளிக்கப்படும் எந்த ஒரு பிரச்னைக்கான தீர்வு குறித்தும் அவருடன் கலந்து ஆலோசிக்கத் தொடங்கினார்.

இமாம் அபூஹனீஃபா அனைத்துக் கேள்விகளையும் ஆழமாக உற்று நோக்குவார். எந்தவொரு கருத்தையும் குர்ஆன், சுன்னாஹ் அல்லது நபித்தோழர்களின் கருத்துகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, பிறகுதான் ஏற்றுக்கொள்வார். இவற்றைத் தாண்டி தாபியீன்களின் கருத்துகளுக்கு அதே அளவிலான முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என்பது அவரது கருத்தாக இருந்தது.

இறை வசனங்களிலும் நபிமொழிகளிலும் அதலுள்ள வெளிப்படையான அர்த்தங்களை மட்டும் அணுகுவது என்று அவர் வரம்பு நிர்ணயித்துக் கொள்ளவில்லை. வெளிப்படையான அர்த்தம், பொதிந்திருக்கும் உள்ளர்த்தம் இரண்டையும் அறிவதே அவரது தேடலாக இருந்தது. அவரது கூர்மதி அனைத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள விழைந்தது. எனவே, ஒரு ஹதீஸை படிக்கும்போதே அது ஏதேனும் சட்டத்திற்கு அடிக்கோடிடுகிறதா என்று தேடுவார். இந்தத் திறனெல்லாம், இரு விஷயங்களுக்கு இடையே உள்ள அம்சங்களை ஒப்பிட்டு நோக்கும் திறமையை அவருக்கு அளித்து, தேவைப்படும் தருணங்களில் அந்தத் திறமையைப் பிரமாதமாகப் பயன்படுத்தியுள்ளார்.

தம்முடைய கருத்துகளை மிகத்தெளிவாக விவரிப்பதும் எக்காரணத்துக்காகவும் அதிலிருந்து திசை மாறாமல் இருப்பதும் அவரது பண்பாக இருந்து. ஆனாலும், தமது முடிவுகள், கருத்துகள் தவறாக அமைந்திருக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள அவர் தயங்கியதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதை அவர் வலியுறுத்தியே சொல்லியிருக்கிறார். அடிக்கடி தம்முடைய மாணவர்களிடம், “நான் சொல்வதெல்லாம் நான் முடிவுக்கு வந்துள்ள சிறப்பானவற்றுள் இருந்து தெரிவிக்கும் ஒரு கருத்து மட்டுமே. ஒருவர் இதைவிடச் சிறப்பானதை கொண்டு வருவாராயின், அவர் தமது கருத்தின் உண்மையை உறுதிப்படுத்துவதற்கு அவருக்கு உரிமையுள்ளது” என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.

இவை அவரை அறிந்தவர்கள் மத்தியில் அவரது நன்மதிப்பையும் மரியாதையையும் சரசரவென உயர்த்தின. அதே நேரத்தில் இமாம் அபூஹனீஃபா உருவாக்கிய இந்த அணுகுமுறை பலரிடம் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவை ஈராக்கின் எல்லையைத் தாண்டி மக்கா, மதீனாவிலிருந்த அறிஞர்களின் செவிகளையும் எட்டியிருந்தன. ஏற்கெனவே ஈராக்கில் பல தரப்பட்ட குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், இதுவும் சேர்ந்து அபூஹனீஃபா குறித்த தவறான பிம்பத்தையும் தவறான எண்ணத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அவையெல்லாம் அவர்கள் அவரை நேரடியாகச் சந்திக்கும்வரை மட்டுமே இருந்தன.

மதீனாவுக்கு வந்திருந்த இமாம் அபூஹனீஃபா, அல்-பாகிர் எனப்படும் அபூஜஅஃபர் முஹம்மது இப்னு அலீயைச் சந்தித்தார். இவர் அலீ இப்னு ஹுஸைனின் மைந்தர். ஸைது இப்னு அலீயின் சகோதரர். அனைவரும் அலீ (ரலி) அவர்களின் வழித்தோன்றல்கள். முஹம்மது அல்-பாகிருக்கும் அபூஹனீஃபாவின் மீது அதிருப்தியும் கோபமும் இருந்ததாகவே தெரிகிறது. இந்நிலையில் நிகழ்ந்த அந்த முதல் சந்திப்பில் பாகிர் அவரிடம் கேட்டார். ‘நீர்தான் என் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்களின் மார்க்கத்தைத் திருத்தியும் அவர்களுடைய ஹதீஸ்களை ஒப்பீட்டாலும் மாற்றுபவரா?’

‘நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று பதில் அளித்தார் அபூஹனீஃபா.

‘நீர் மாற்றிவிட்டீர்’ என்றார் முஹம்மது பாகிர்.

‘தாங்கள் அமருங்கள். தங்களுடைய பாட்டனார் (ஸல்) உயிருடன் இருந்தபோது அவர்களிடம் தோழர்கள் எங்ஙனம் மரியாதை கொண்டிருந்தனரோ அங்ஙனம் நான் தங்களை மதிக்கிறேன்.’

பாகிர் அமர்ந்ததும் அபூஹனீஃபா அவரிடம், ‘நான் தங்களிடம் மூன்று கேள்விகளைச் சமர்ப்பிக்கிறேன். தாங்கள் பதில் அளியுங்கள். யார் பலவீனமாவர்? ஆணா அல்லது பெண்ணா?’

‘பெண்’ என்றார் பாகிர்.

‘பெண்ணின் பங்குரிமை என்ன?’

‘ஆணுக்கு இரண்டு பங்கு. பெண்ணுக்கு ஒரு பங்கு.’

‘இதுதான் தங்கள் பாட்டனாருடைய அறிவிப்பு. என்னுடைய ஒப்பீட்டின் மூலம் நான் தங்களுடைய பாட்டனாரின் மார்க்கத்தை மாற்றியிருந்தால், ஆணுக்கு ஒரு பங்கு, பெண்ணுக்கு இரண்டு பங்கு என்று கூறியிருப்பேன். ஏனெனில் பெண் ஆணைவிடப் பலவீனமானவள் அல்லவா.’

அடுத்தக் கேள்வியைக் கேட்டார் அபூஹனீஃபா. ‘எது மேம்பட்டது? தொழுகையா, நோன்பா?’

‘தொழுகை’ என்று பதிலளித்தார் பாகிர்.

‘இதுதான் தங்கள் பாட்டனாருடைய அறிவிப்பு. என்னுடைய ஒப்பீட்டின்படி நான் தங்களுடைய பாட்டனாருடைய மார்க்கத்தை மாற்றியிருந்தால், தொழுகை மேம்பட்டது என்பதால், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்கியதும் விட்டுப்போன தொழுகையை அவள் தொழ வேண்டும், விட்டுப்போன நோன்பை நோற்கவேண்டாம் என்பதாக அல்லவா கூறியிருப்பேன்.”

அடுத்த கேள்வியைக் கேட்டார் அபூஹனீஃபா. ‘எது அசுத்தமானது? சிறுநீரா, விந்தா?’

‘சிறுநீர்தான் அதிகமான அசுத்தம்’ என்றார் பாகிர்.

‘நான் தங்களுடைய பாட்டனாருடைய மார்க்கத்தை என்னுடைய ஒப்பீட்டால் மாற்றியிருந்தால், சிறுநீருக்கு குளியலைக் கடமையாக்கி, விந்து வெளியேறினால் ஒளு போதும் குளிக்கத் தேவையில்லை என்றிருப்பேன். தங்கள் பாட்டனாரின் மார்க்கத்தை நான் என்னுடைய ஒப்பீட்டால் மாற்றுகிறேன் எனும் பழியிலிருந்து நான் ஆண்டவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.’

முஹம்மது பாகிர் எழுந்து நின்று அபூஹனீஃபாவை ஆரத்தழுவி அவரது நெற்றியில் முத்தமிட்டார். அவர்கள் இறைவனின் திருப்தியை மட்டுமே மனத்தில் உள்ளடக்கியிருந்த ஞானமுகில்கள்.

(தொடரும்)

நூருத்தீன்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு