Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைவர் யார் ? ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2012 | , ,


1. நானே பெரியவன்..... நானே சிறந்தவன்......என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரனும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3. எதிர்மறையாகச் சிந்திப்பது

4. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5. தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6. அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7. தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8. சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9. மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் வாழ்வது 

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு

நல்லப் பண்புகளாகிய.............

1. எளிமையாக வாழ்தல்

2. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல் ( இஸ்லாம் )

3. வேகமாகச் செயல்படுதல்

4. எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்

5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

6. மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்

7. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

8. தீர்க்கமான முடிவு செய்தல்

9. வீண் விரயத்தைக் குறைத்தல்

10. தரத்தை மேம்படுத்துதல்

11. திட்டமிடுதல்

12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

13. எளியோருக்கு உதவுதல்

போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்.....

நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர். 

மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர். 

அவர் தொடர்ந்தார்.....கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்பைப் பெறுகின்றோம்...... 

நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்ல பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக வருவதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள் ( இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

பழகு மொழி - 11 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 21, 2012 | ,


இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும்.

இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம்.

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். போல வருவது போலி என்றானது.

இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை என்பதையும் தெரிந்து கொள்வதற்குப் போலிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

(1):11 எழுத்துப் போலிகள்
எழுத்துப் போலிகள் மூவகைப் படும்.

(1):11:1 முதற்போலி
ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும்.

(1):11:1:1 ''காராத்துக்குப் பகரமாய், 'அய்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் :யா=அய்யா; ஐயன்மீர்=அய்யன்மீர்

(1):11:1:2 ''காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : வையார் = அவ்வையார்; டதம் = அவ்டதம்

(1):11:1:3 ''கரத்துக்கு ''கரம் போலியாக எழுதப் படும்.காட்டுகள் : யம்பட = யம்பட; நாயிறு=ஞாயிறு

(1):11:2 இடைப்போலி
ஒரு சொல்லுக்கு இடையில் இயல்பான எழுத்தை விடுத்து வேறு எழுத்தைப் போட்டு எழுதுவது இடைப்போலி எனப்படும்.

''கரத்துக்கு ''காரம் போலியாக எழுதப் படும்.

காட்டுகள் : யன் = அரையன்; மை = பழைமை; மை = இளைமை

(1):11:3 கடைப்போலி
ஒரு சொல்லின் கடைசியில் உள்ள இயல்பான எழுத்துக்குப் பகரமாய் வேறோர் எழுத்து இடம் பெறுவது கடைப்போலி எனப்படும்.

(1):11:3:1 மகர ஒற்றுக்கு னகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : அறம்=அறன்; திறம்=திறன் (அறன் அறிந்து வெஃகா அறிவுடையோர்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்) நயம்=நயன் (நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று - குறள்) குலம்=குலன் (இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள - குறள்) நலம் = நலன்; கலம்=கலன்; நிலம்=நிலன்

(1):11:3:2 லகர ஒற்றுக்கு ரகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : குடல்=குடர்; சுவல்=சுவர்; பந்தல்=பந்தர்; சாம்பல்=சாம்பர்

(1):11:3:3 லகர ஒற்றுக்கு ளகர ஒற்றும் போலியாக வரும்.

காட்டுகள் : மதில்=மதிள்; செதில்=செதிள்.

எழுத்தியல் இத்துடன் நிறைவடைகிறது.


சொல்லியலைத் தொடங்குவோம், இன்ஷா அல்லாஹ்.


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

அதிரையில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2012 | , , ,


நெசவுத் தெரு ஜமாத் மற்றும் நெசவுத் தெரு பொது நல அமைப்பு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஏற்பாட்டில், தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்.

நாள் : 21-மே-2012 திங்கள் காலை மணி 9:30 முதல் மாலை 5:00 மணி வரை....


தகவல் : அப்துல் மாலிக் - துபாய்

கல்வி விழிப்புணர்வு மாநாடு - இனிதே நிறைவுற்றது ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2012 | , ,


அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.


அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அமீர் அறிஞர் அதிரை அஹ்மது அவர்களின் தலைமையில், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மூத்த ஊழியர் சகோதரர் ஜமீல் M.சாலிஹ் அவர்கள் மாநாட்டு நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

மாநாட்டின் துவக்கத்தில் நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளின் சிறப்பு நிகழ்சியும் நடைபெற்றது, அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரிவில் தங்களின் திறமைகளை திரளாக கூடியிருந்தவர்கள் முன்னிலையில் செய்து காட்டினார்கள்.

அதன் பின்னர் இளம் மவ்லவி அப்துல் பாசித் அல் புகாரி MBA., அவர்களின் அற்புதமான குரல் வளத்துடன் இனிமையாக ஆரம்பித்த சிறப்பு சொற்பொழிவு பின்னர் "மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்" என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் விதமாக அனைவரையும் உலுப்பி எடுத்தார்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமாக கேட்டனர்.

மஃரிப் தொழுகைக்கான இடைவெளி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இந்த சிறப்பான மாநாட்டை நேரலை செய்து கொண்டிருந்த சகோதரர்கள் மாநாடு ஆரம்பிக்கும்போது மாணவிகளின் திறன் வெளிகாட்டும் சிறப்பு நிகழ்வுகளில் பதியப்பட்ட காணொளியை மீண்டும் வெளிநாடுவாழ் சகோதரர்களின் வேண்டுகோளுக்கினங்க ஒளிபரப்பப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து கல்வி மாநாட்டின் சிறப்பு பேச்சாளார் சகோதரர் CMN சலீம், M.A. அவர்கள் "கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?" என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்கள், வழமையான சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்கள் இதன் காணொளி விரைவில் அதிரை வலைத்தளங்களில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டின் நிறைவாக நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தவறாமல் கலந்து கொண்ட மாணவிகள், நிறைவுநாள் அன்று நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்து மிளிர்ந்த மாணவிகள், மிகச் சிறப்பாக பயிற்சி முகாமை நடத்திய ஆசிரியைகள் மற்றும் பணியாளார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக சான்றிதழுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவில் விழாவும் நபிவழி காட்டிய முறைப்படி இனிதே நிறைபெற்றது.

மாணவிகள் சிறப்பு நிகழ்வுகள், மாநாட்டு சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரை காணொளிகள் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ADT – அதிரை தாருத் தவ்ஹீத் ஊழியர்கள் அனைவரின் கடின உழைப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

-அதிரைநிருபர் குழு

கானல் நீர்.... (Life is a Mirage) 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 18, 2012 | , , , ,


கடும் வெப்பம் நிலவும் பாலைவனப்பிரதேசங்களில் வாழும் மிருகங்கள் தண்ணீருக்காக இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் நீர் இருப்பது போல் கண்களுக்கு காட்சி தரும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் நிசத்தில் அது அனல் பறக்கும் வெறும் மணல் பரப்பாகத்தான் இருக்கும். அது போல் வாழ்க்கையில் பல தரப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வில் வேண்டி விரும்புவது கிடைக்காமல் கடைசி வரை கானல் நீரைப்போன்று காட்சி தந்து வாழ்க்கையும் முடிந்து போகும். அவற்றில் நமக்கறிந்த சிலவற்றை இங்கு பட்டியலிட விரும்புகிறேன்.

ஏழ்மையானவர்களுக்கு வசதி வாய்ப்பான வாழ்க்கை ஒரு கானல் நீர்.

தீராத நோயுடையவர்களுக்கும் அதனால் படுக்கையில் படுத்தவர்களுக்கும் ஆரோக்கிய வாழ்க்கை ஒரு கானல் நீர்.

தட்டந்தரையில் படுத்துறங்குபவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பின் உறக்கம் ஒரு கானல் நீர்.

தன்னிடம் உள்ள சைக்கிளைக்கூட பழுது பார்த்து பராமரிக்க இயலாதவனுக்கு சொந்த இரு சக்கர வாகனப்பயணம் ஒரு கானல் நீர்.

பஞ்சம் தலை விரித்தாடும் ஆப்பிரிக்கக்கண்டத்தின் சில நாட்டு மக்களுக்கு ஒழுங்கான உடை, நல்ல உணவு, தங்க இருப்பிடம் என்ற சாதாரன அடிப்படை தேவை கூட ஒரு கானல் நீர் தான்.

வஞ்சிக்கப்படும் அப்பாவி இஸ்லாமிய சமுதாயத்திற்கு உண்மையான ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு கானல் நீர்.

பாசமுடன் வளர்த்து, பரிவுடன் தான் ஆளாக்கிய பெற்ற பிள்ளைகளே வளர்ந்து ஆளானதும் தாய், தந்தையரை கவனிக்காமல் கை விடுவதால் தாய், தந்தையருக்கு பிள்ளைகளின் உண்மையான பாசமும், நேசமும் ஒரு கானல் நீர்.

போட்டி மிகுந்த இந்த உலகில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரன மனிதன் போல் வாழ நினைக்கும் ஆசை ஒரு கானல் நீர்.

மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் கொத்துக்கொத்தாக அதிகார சக்திகளால் தன் இனம் அழிக்கப்பட்டு இன்று குற்றுயிரும், குலையுயிருமாக இருந்து வரும் பாலஸ்தீன, இலங்கை தமிழ் மக்களுக்கு தனி நாடு, தனி ஈழம் ஒரு கானல் நீர்.

நல்ல அறிவுத்திறன் இருந்தும் வசதி இல்லாத மாணவனுக்கு உயர்க்கல்வி என்பது ஒரு கானல் நீர்.

அரசியல் ஆதாயத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் எதுவும் எப்படியும் விளையாடப்படும் இந்த நாளில் வீட்டில், குடும்பத்தில், தெருவில், ஊரில், மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில், கண்டங்களில், உலகில் அமைதியையும், சமத்துவத்தையும், நீதி, நேர்மையை எதிர்பார்ப்பது இருப்பது ஒரு கானல் நீர்.

பெற்ற தாய், தந்தையரை எதோ காரணத்தினால் இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தை பாசம் ஒரு கானல் நீர்.

உண்மையான நடுநிலையாளர்களுக்கு நல்லதை நாடி செல்லுமிடமெல்லாம் கானல் நீர்.

அடக்குமுறை, அத்துமீறல்களால் உலகில் யாரோ ஒரு சில குறிப்பிட்ட நபர்களால் செய்யப்பட்ட தாக்குதல் சம்பவங்களால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி பொருளாதார ஆதாயத்திற்காக உலகின் ஒட்டு மொத்த ஊடகங்களும் பேசியும், எழுதியும் வருவதால் நடுநிலையான ஊடகத்தை எதிர்பார்ப்பது ஒரு கானல் நீர்.

பழைய காலத்தில் ஆரோக்கியத்துடன் சுகமாய் இருந்து இன்று ஆரோக்கியம் குறைந்து சுகவீனமாய் இருந்து வரும் நம் பெரியவர்களுக்கு அந்தக்காலம் ஒரு கானல் நீர்.

சமுதாயத்தில் எதேதோ காரணங்களுக்காக பிரிந்து ஆளுக்கொரு தலைவன், நாளுக்கொரு இயக்கமாக பல வண்ணக்கொடியில் ஒரு சமுதாயம் பஞ்சாய் பறந்து வருவதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஆசை கொள்ளும் நடுநிலையாளர்களின் முயற்சி ஒரு கானல் நீர்.

செயற்கையான இன்றைய வாழ்வில் இயற்கை ஆர்வலர்களுக்கு இயற்கையான வாழ்க்கை ஒரு கானல் நீர்.

மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி நேர்மையான ஒரு அரசியல் வாதியை தேர்ந்தெடுக்க நினைப்பது ஒரு கானல் நீர்.

மக்கள் நலனே தன் நலம் என சுயநலமின்றி உழைத்து சுற்றித்திரியும் அரசு அதிகாரிகளை காண நினைப்பது ஒரு கானல் நீர்.

ஊழல் இல்லா, இலஞ்சம் வாங்கா அரசுத்துறைகள் நாட்டில் எங்கேனும் இருக்கும் என மக்கள் நினைப்பது ஒரு கானல் நீர்.

மகாத்மா, காமராஜர், அண்ணாவின் பொற்கால ஆட்சிகளை கொண்டு வருவேன் என்று எவரேனும் சொல்லித்திரிந்து அதை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு அவர்களெல்லாம் ஒரு கானல் நீர்.

கடைசியாக, காலமெல்லாம் தன் குடும்ப நலனுக்காக எதேனும் அரபு நாட்டிலோ அல்லது வேறு ஏதேனும் வெள்ளைக்கார நாட்டிலோ தன்னைத்தானே நாடு கடத்தி தஞ்சம் அடைந்து வெளிச்சமின்றி உருகும் ஐஸ் கட்டி போல் இருப்பவனுக்கு குடும்பமும், சுற்றமும் சூழ இன்பமுடன் வாழ நினைக்கும் நம் ஊர் வாழ்க்கை ஒரு கானல் நீர்.

முட்டாள்களுக்கும், சிந்திக்க மறுக்கும் அறிவீனர்களுக்கும் இந்த உலகமே ஒரு கானல் நீர் தான்....

யா! அல்லாஹ்!! உண்மையான, ஹலாலான, அசெளகரியங்கள் இல்லா, போலித்தனமில்லா, அமைதியான நல்ல வாழ்க்கையை எஞ்சியுள்ள எங்களின் மீதி ஆயுட்காலங்களில் நசீபாக்குவாயாக.....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2012 | , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) & அதிரை எஜுகேஷனல் மிஷன் (AEM)

ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கும்

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும்
கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும்

காலம் : 19.5.2012 சனிக்கிழமை மாலை 3 மணி
இடம் : அதிரை அறிஞர், ‘தமிழ் மாமணி’, புலவர் அஹ்மது பஷீர் அரங்கம்
(A.L.M பள்ளி), CMP லைன், அதிராம்பட்டினம்

சிறப்புரைகள்:
·       மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்
வழங்குபவர் : மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரீ, M.B.A

·       கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?
வழங்குபவர் : சகோதரர் C.M.N. சலீம், M.A.
(தலைவர்:  தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ;  நிர்வாகி: அன்னை கதீஜா மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டினம்)

தொடக்கமாக, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியர் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

அனைவரும் வருக!                            அறிவமுதம் பருக!


நிகழ்ச்சி ஏற்பாடு: அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 18 134

அதிரைநிருபர் பதிப்பகம் | May 15, 2012 | , ,

‘இனம் இனத்தைச் சேரும்’ என்பார்கள். இதை, ‘இனம் இனத்தை உவக்கும்’ என்றும் கூறலாம். இது போன்று, கவிஞர் இனம் அவ்வினத்தை நன்மைக்காக உவப்பதில் வியப்பில்லை அல்லவா?

شاعر النبي (நபியின் கவிஞர்) என்ற பெயர் பெற்ற நபித்தோழர் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களுக்கு ஒரு கவலை;  ஏக்கம்.  தம்மைப் போன்ற கவிஞர்களுள் இன்னும் சிலர் இஸ்லாத்தில் இணையவில்லையே என்பதுவே அவரது கவலையும் ஏக்கமும்.  மதீனாவிலிருந்து மிகத் தொலைவிலுள்ள ‘நஜ்ரான்’ எனும் ஊரில் வசித்த தம் தோழர் இப்னு ஜபஅரீ என்பவருக்கு ஈரடிக் கவிதை ஒன்றை இவ்வாறு எழுதினார்:

لا تعد من رجلا أحلك بغضه،
نجران في عيش أحذ لشيم

                                      அங்கே நஜ்ரான் வாசிகளை
                                                அன்புள் ளோராய்க் கருதாதீர்!
                                      இங்கே வாரீர் விரைவாக
                                                இறையின் தூதர் உவந்திடவே.

அகமுவந்த இந்த அழைப்பை ஏற்றார் இப்னு ஜபஅரீ.  பாலை வெளிகளையும் பாறைத் தடைகளையும் கடந்து, மதீனப் பதியை வந்தடைந்து, நபியவர்களின் கைபற்றி, நல்லறத் தோழர்களுள் ஒருவரானார்.  இதனை அடுத்து, அவர் வாய்மொழியாகக் கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

يا رسول المليك إن لساني ، راتق ما فتقت إذ أنا بور
إذ أباري الشيطان في سنن الغي ، ومن مال ميله مشبور
أمن أللحم والعظام لربي ، ثم قلبي الشهيد أنت النذير
إنني عنك زاجر ثم حيا ، من لؤي وكلهم مغرور  

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                      அரசர்க் கரசன் அல்லாஹ்வின்
                                                அருமைத் தூதாய் வந்தவரே!
                                      உரசிப் பேசும் என்நாவோ
                                                ஓட்டுப் போட்ட தாயிற்றே!
                                      தரிசுத் தரையாய் வரண்டேபோய்
                                                தண்ணீ ரின்றி வாடியதே!
                                      விரசக் கவிகள் பாடியநான்
                                                வீணில் வாழ்வைப் போக்கினனே!

                                      செந்தீ ஆறாய் ஓடிவர
                                                ‘செய்த்தான்’ நரகப் படுகுழியில்
                                      முந்தி வீழச் செய்தனனே!
                                                முயன்று பாதை மாற்றிடவே
                                      எந்த வழியும் தெரியாமல்
                                                இருந்த என்னைக் கைதூக்க
                                      வந்த கவிதை அழைப்பொன்றை
                                                வரைந்த ளித்தார் ஹஸ்ஸானே.

                                      இப்போ தென்றன் தசைநாரும்
                                                எலும்பு மெல்லாம் இரட்சகனை
                                      எப்போ தெப்போ தென்றேத்தி
                                                இதய வேட்கை கொண்டுளவே!
                                      தப்பாய்ப் பாவப் படுகுழியில்
                                                தடுக்கி வீழ்தல் சிறுமையெனச்
                                      செப்பும் உங்கள் போதனையால்
                                                செம்மை யுற்றேன் நானின்றே!

                                      நும்மைத் திட்டி வசைபாடி
                                                நுழைந்தி ருந்தேன் பாவத்தில்
                                      செம்மைப் பாதை இதுவென்ற
                                                செய்தி என்னை எட்டியதும்
                                      இம்மை வாழ்வைச் சிறிதாக்கி
                                                என்றும் நிலைத்த மறுமைக்கே
                                      எம்மைப் பெரிதாய் உரித்தாக்கி
                                                ஏற்றம் பெற்றேன் நாயகமே!
(சான்று: சீரத்துன் நபி – இப்னு ஹிஷாம்)

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனும் உயர் நோக்கில், சிறிய ஓர் அழைப்புப் பணியைத்தான் செய்தார் கவிஞர் ஹஸ்ஸான்.  இவ்வழைப்புப் பணியின் பின்னணியில்,

لأن يهدي الله بك رجلا خير لك من حمر النعم

“உம்மைக் கொண்டு அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழியைக் கொடுப்பதானது, உமக்குச் சிவப்பு ஒட்டகம் கிடைப்பதைவிட மேலானது” என்றும்,

لا يومن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه

“தான் உவக்கும் ஒன்றைத் தன் சகோதரனுக்கும் இருக்கவேண்டும் என்று விரும்பாதவரை, உங்களுள் எவரும் உண்மையான இறை நம்பிக்கையாளனாக ஆக முடியாது” (சான்றுகள்: ஸஹீஹுல் புகாரீ / ஸஹீஹ் முஸ்லிம்) என்றும் அறிவுரைகள் கூறி அருள்நெறி பரப்பிய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழமைதான் ‘நபியின் கவிஞர்’ ஹஸ்ஸான் (ரலி) அவர்களை இவ்வழைப்புப் பணியில் இயக்கிற்று என்பது மிகைக் கூற்றன்று.


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கள்ளக்காதல் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 15, 2012 | , ,


ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் அற்ப உடல் இச்சையை தனித்துக் கொள்வதையே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது, ஏன் இதுவும் விபச்சாரமே !

1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்.

2. கணவன் கடல் கடந்தோ அல்லது ஊர்விட்டு ஊர் சென்று எங்கெல்லாம் போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காமுகனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்.

3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். கல்லூரி, ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பஃப்பே, இன்பச்(!!?)சுற்றுலா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” எனும் கர்ம வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னா பின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்.

4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, அலைபேச் எண்கள் பறிமாற்றம், இணையத் தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்.

5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்.

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.

தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து, தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்”  என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிறுத்தும்படி அடிக்கடி ஏவுங்கள், அதனை நினைவூட்டிக் கொண்டே இருங்கள் ”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்” இந்த நபி மொழியை அறியாத அதிரையர் யாரும் உண்டா ? அப்புறம் ஏன் இரட்டை வேடம் !??

பெற்றோர்களே !! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட,

ஈமான் (இறை நம்பிக்கை)
மானம்
மரியாதை 
குடும்ப நலன்

இவைகள் அனைத்தையும் விட தூய்மையான இறையச்சம் அதி முக்கியம். 

அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

படிக்கட்டுகள்.. ஏற்றம்-13. 40

ZAKIR HUSSAIN | May 14, 2012 | , ,



பொதுவாக ஒருவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தவன் என்று ஒரு அளவுகோல் இருக்கும்போது அதை அவன் வைத்திருக்கும் 'பணம்' மட்டுமே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த தவறான அனுகுமுறை என்றால் 'பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்' எனும் பொதுவான கருத்துதான்.

ஆனால் அந்த பணம் படைத்தவர்களின் மனதை ஆய்வு செய்யும் திறமை நம்மிடம் இருந்தால் நமது கருத்து சரியா தவறா என தெரிந்துவிடும் அப்படி என்றால் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை என்ற இன்னொரு இலவச இணைப்பான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது பொறுப்புகளை சுமக்க தயங்குபவர்கள் கண்டுபிடித்த ஃபார்முலா. வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்காமல் பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் போய் வந்தால் கூட வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதும் வாங்கி வராமல் வீட்டுக்கு வந்து "பணமா முக்கியம்..நான் மட்டும் வசதியானவனாய் இருந்தால் ஏழைகளை படிக்க வைப்பேன், ஊருக்கு உழைப்பேன், அநாதை ஆசிரமம் கட்டுவேன், முதியோர்களை அரவணைப்பேன்' என்று அசோக சக்ரவர்த்திமாதிரி பீத்தும் எந்த நடிகர்களையும் இப்போது கின்டர்கார்டன் படிக்கும் பிள்ளைகள் கூட 'என்னா சீன் போடுரான்யா" என கமென்ட் அடித்துவிடும்.

இப்போது கையில் இருக்கும் 50 ரூபாயில் உன்னால் / உங்களால் என்ன தர்மம் செய்ய முடியும் என்பதை செயலில் காட்ட முடிந்தவர்கள்தான் தொடர்ந்து தர்மம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தர்மத்துக்கும் மனதுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது. ஒரு கோடி கையில் கிடைத்து விட்டால் தர்மம் செய்யும் மனம் வந்துவிடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இருப்பினும் மனிதன் ஒரு சில விசயங்களில் மட்டும் வெற்றியடைந்தவனாய் பார்ப்பது "பார்வையில் கோளாறு' . இதை சரி செய்யத்தான் “WHOLE PERSON CONCEPT” என்ற ஒரு விசயம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு மனிதன் வெற்றியாளன் தானா இல்லை வெற்றியாளன் மாதிரி முகமூடி அனிந்தவனா என யார் தீர்மானிப்பது.... நீங்கள்தான்.... யாரை?... உங்களை 'மட்டும்'தான்.  மற்றவனை சரி செய்ய அவனுக்கு தெரியும்... முதலில் நாம் நம்மை பார்ப்போம்

WHOLE PERSON CONCEPT


      1.   Health.
உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது.  குதிரைக்கு கண் கட்டிய மாதிரி பணம் மட்டுமே / வேலை மட்டுமே / விசுவாசம் மட்டுமே என ஒடும் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தேடும்போது கிடைக்காத செல்வம் 'உடல் நலம்'.

தள்ளிப்போட்டு பார்த்துக்கொள்ள இது ஒன்றும் அரியர்ஸ் அல்ல.  'அரியது"..இறைவன் கொடுத்த வரத்துக்கு சில மரியாதைகள் இருக்கிறது. மரியாதை இல்லாமல் போகும்போது அது மாயமாய்த்தான் போய்விடும்.

உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.

உங்கல் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         2.   Family
ஒரு மனிதன் வெற்றியடைய ஒடிக்கொண்டிருக்கிறான் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமைய வேண்டும். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் ஒரு மனிதன் வெற்றியடைய முயற்ச்சி எடுப்பது என்பது 'தினம் தினம் எதிர்நீச்சல்". இதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். தோல்விகளில் ஆதரவாகவும், வெற்றியடையும்போது நிதானத்தையும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் வீட்டுப்பெண்கள் இருக்கும் வரை ஆண்களால் எந்த சவால்களையும் சமாளிக்க முடியும். இப்போதைய கால கட்டத்தில் பொருள்களை தேடி அலையும் இந்த "நவீன பசி"யில் பெண்களிடம் நான் காணும் ஒரு விசயம் கல்யாணம் ஆன பிறகும் தனது தகப்பனின் மகளாக இருக்கும் கதாபாத்திரத்தை விட்டு தனது கணவனின் மனைவியாக வாழும் கதாபாத்திரத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். இது நிச்சயம் மாற வேண்டும். மற்றும் சிலர் கணவனுடன்  ஷாப்பிங் போகும்போது கணவனை ஒரு மொபைல் ஏ.டி.எம் மெசின் மாதிரி நடத்துவதை தவிற்க வேண்டும்.

ஆண்கள் 'சம்பாதிக்கிறேன்" என்ற ஒரே காரணத்துக்காக பெண்களை அடிமைபோல் நடத்திவிட்டு அதற்கு தேவையில்லாமல் ஞானி மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்யாணம் செய்து பல வருடங்கள் ஆன பிறகு சில ஆண்கள் "வெருமனே" மனைவியை குறை சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, இத்தனை நாட்கள் அன்பை வளர்க்காமல் எப்படி குறைகாண மட்டும் தெரிந்து கொண்டார்கள் என்பது ஆச்சர்யம். கல்யாணம் செய்த ஆரம்ப காலத்தில் கணவனின் பல முட்டாள் தனங்களையும், பிடிவாதங்களையும், வறுமையையும் தாங்கிக்கொண்ட மனைவியை சில ஆண்கள் வசதி வந்த பிறகு ' அவளுக்கு அவ்வளவு இன்டலக்சுவல் இல்லை" என்று சொல்லும்போது... இப்போ ஒரு ஃபிளாஷ் பேக் போட்டால் தேவலாம் என தோனும்.


உங்கள் குடும்பத்தில் நீங்கள் மதிக்கப்படுமளவுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்?


.. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

          3. Education
அதான் பள்ளிக்கூடம் எல்லாம் போயிட்டுதானே இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என சொல்லவேண்டாம். "கல்வி என்பது சர்டிபிகேட்டுக்குள் அடங்கும் சர்ப்பம் அல்ல' என்று எழுதினால் இவன்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான்யா என கமென்ட் எழுதக்கூடும் என்பதால் கல்வி என்பது கருவறை தொடங்கி கல்லரை வரை என்ற அந்த ஓல்டு வார்த்தையை எழுதுகிறேன். நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்றால் நாம் 'முடிந்து" விட்டோம் என்று அர்த்தம்.


ஒவ்வொரு நாளும் உங்கள் துறைசார்ந்த விசயங்களை உங்கள் முன்னேற்றம் சார்ந்த விசயங்களை எந்த அளவு படிக்கிறீர்களோ அந்த அளவு முன்னேறலாம். சிலர் வாசிப்பதை தவறாக புரிந்திருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் 'தொடர் கொலைகள்- பாலியல் குற்றங்கள்" போன்ற விசயங்கள் நீங்கள் ஃபாரன்சிக் , போலீஸ், இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' சார்ந்து இருந்தால் பிரயோஜனப்படும்இல்லாவிட்டால் நீங்கள் மேகசினுக்கு கொடுத்த காசு பப்ளிசருக்கு பயன்படும்..அம்புடுதேன்.


நீங்கள் எவ்வளவு நேரம் உங்களை உயர்த்திக்கொள்ளும் கல்வியில் நேரம் செலவளிக்கிறீர்கள்.


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         4.   Career.
நீங்கள் தேர்ந்தெடுத்த வேலை , படிப்பு , தொழில் உங்களுக்கு மனதிருப்தியை தருகிறதா இல்லாவிட்டால் எங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்று எப்போதாவது ஒரு அரைமணி நேரம் அதற்காக ஒதுக்கி உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா... எதிலும் செக்கு மாட்டுத்தனமா இருந்து விட்டால் உழவுக்கு பயன்படாமல் போய்விடலாம் எனும் படிக்காத மேதைகள் சொன்னது இப்போதும் என் காதில் விழுகிறது.


நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில் / துறை உங்களை முன்னேற்ற உதவ வேண்டும்.... முன்னேற்றியதா?... முன்னேற்றாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

5.Service [to Society]
உங்களின் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் ஒரு வெறுமை நிலை நிச்சயம் உருவாகும். ஒருவன் சரியான மனிதம் கற்றிருந்தால் எல்லைகளை மீறிய அன்பு அவன் மனதுக்குள் குடியிருக்கும். மற்றவர்களின் சோகத்தை கேட்கும்போது அழாத கண் இருந்தும் பயனில்லை. தன்னால் முடிந்தால் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் கருவேல முட்கிளையை எடுத்துப்போட உடல் தெம்பு இருந்தும் பஞ்சாயத்து போர்டை வையும் சமுதாயத்தால் சமுதாயத்துக்கு பயனில்லை.
 
சேவை செய்பவர்களைப்பற்றி ' அவனைப்பார்... இவனைப்பார்.. எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கிறான். எவ்வளவு சேவை செய்திருக்கிறான் என்று மற்றவனை உதாரணம் காட்ட பிறந்தவர்களா நீங்கள்?. அப்படி உதாரணம் மட்டும் காண்பிப்பவராக இருந்தால் உங்கள் தாய் உங்கள் எதிர்காலத்துக்காக கண்ட கனவுக்கு என்னதான் மதிப்பு?.


இன்று உங்களை சுற்றியுள்ள சமுதாயத்துக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

6. Financial
கடனில்லாத வாழ்க்கையும், வரும் வருமானத்தை செலவு செய்யும்போது உங்கள் உள் மனதுக்குள் உறுத்தல் இல்லாத ஒரு மனநிலையும் இருந்து விட்டாலே சரியான ட்ராக்கில் இருக்கிறீர்கள் என்பது என் கருத்து.


மற்றவர்களைப்போல் இல்லையே என்று புலம்பாமல் போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உங்களின் வருமானம் எந்த அளவு உயர்ந்திருக்கிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு செக்கிங் வைத்துக் கொண்டால் நலம். போட்டி உங்களுடன் தான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்றவனின் வாழ்க்கையை நீங்கள் வாழ பார்க்காதீர்கள். அது நிச்சயம் முடியாது.

ஒருக்கால் உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் அதற்காக என்ன செய்யலாம்?


நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.


7. Spiritual
இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இறைவனின் கருணையில்லாமல் அவனது உதவியில்லாமல் எதுவும் தன்னால் நடந்து விடாது. காலையில் விழித்ததிலிருந்து அந்த ஏக இறைவனிடம் கையேந்திப்பாருங்கள்... அவன் உங்களின் தாயின் அன்பை மிஞ்சியவன். இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் தன் அன்பால் வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதில் உள்ள சந்தோசம் அவனிடம் பிச்சை கேட்கும் சந்தோசம் எந்த உலக சந்தோசமும் தந்துவிடாது. [ இது பற்றி ஒரு எபிஸோட் எழுத வேண்டும் என்பது என் ஆசை]
 

இன்று உங்களைப்படைத்த கருணைமிகு இறைவனை எத்தனை முறை நினைத்தீர்கள்? அப்படி நினைக்க எது தடையாக உங்களின் அன்றாட வாழ்க்கை "உண்மைநிலை"யை உணராமல் செய்திருக்கிறது. 


நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களான 7ம் வாழ்க்கைக்கு முக்கியம்.இந்த 7 முக்கியமான விசயங்களும் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் வாழ்வது மிக மிக எளிதானது. மறுபடியும் சொல்கிறேன் நான் முஸ்லீமாக பிறந்ததனால் இதை எழுதவில்லை. [தயவு செய்து மாற்று மத சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது] . எந்த சூழ்நிலையிலும் தனிமனிதனின் கெளரவம் காக்கப்படும் வாழ்க்கையை இஸ்லாம் சொல்லியிருக்கிறது என்றுதான் சொல்கிறேன். 

இந்த 7 தலைப்புகளும் ஒரு மனிதனுக்கு சரியான முறையில் அமைய / அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று , இரண்டு மட்டும் கூடுதலாக இருந்து மற்றது குறைவாக இருந்தால் ....மன்னிக்கவும் ...உங்களை உடன் மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

முடிவெடுப்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை we will see in next episode.

-ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு