கடும் வெப்பம் நிலவும் பாலைவனப்பிரதேசங்களில் வாழும் மிருகங்கள் தண்ணீருக்காக இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் நீர் இருப்பது போல் கண்களுக்கு காட்சி தரும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் நிசத்தில் அது அனல் பறக்கும் வெறும் மணல் பரப்பாகத்தான் இருக்கும். அது போல் வாழ்க்கையில் பல தரப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வில் வேண்டி விரும்புவது கிடைக்காமல் கடைசி வரை கானல் நீரைப்போன்று காட்சி தந்து வாழ்க்கையும் முடிந்து போகும். அவற்றில் நமக்கறிந்த சிலவற்றை இங்கு பட்டியலிட விரும்புகிறேன்.
ஏழ்மையானவர்களுக்கு வசதி வாய்ப்பான வாழ்க்கை ஒரு கானல் நீர்.
தீராத நோயுடையவர்களுக்கும் அதனால் படுக்கையில் படுத்தவர்களுக்கும் ஆரோக்கிய வாழ்க்கை ஒரு கானல் நீர்.
தட்டந்தரையில் படுத்துறங்குபவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பின் உறக்கம் ஒரு கானல் நீர்.
தன்னிடம் உள்ள சைக்கிளைக்கூட பழுது பார்த்து பராமரிக்க இயலாதவனுக்கு சொந்த இரு சக்கர வாகனப்பயணம் ஒரு கானல் நீர்.
பஞ்சம் தலை விரித்தாடும் ஆப்பிரிக்கக்கண்டத்தின் சில நாட்டு மக்களுக்கு ஒழுங்கான உடை, நல்ல உணவு, தங்க இருப்பிடம் என்ற சாதாரன அடிப்படை தேவை கூட ஒரு கானல் நீர் தான்.
வஞ்சிக்கப்படும் அப்பாவி இஸ்லாமிய சமுதாயத்திற்கு உண்மையான ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு கானல் நீர்.
பாசமுடன் வளர்த்து, பரிவுடன் தான் ஆளாக்கிய பெற்ற பிள்ளைகளே வளர்ந்து ஆளானதும் தாய், தந்தையரை கவனிக்காமல் கை விடுவதால் தாய், தந்தையருக்கு பிள்ளைகளின் உண்மையான பாசமும், நேசமும் ஒரு கானல் நீர்.
போட்டி மிகுந்த இந்த உலகில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரன மனிதன் போல் வாழ நினைக்கும் ஆசை ஒரு கானல் நீர்.
மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் கொத்துக்கொத்தாக அதிகார சக்திகளால் தன் இனம் அழிக்கப்பட்டு இன்று குற்றுயிரும், குலையுயிருமாக இருந்து வரும் பாலஸ்தீன, இலங்கை தமிழ் மக்களுக்கு தனி நாடு, தனி ஈழம் ஒரு கானல் நீர்.
நல்ல அறிவுத்திறன் இருந்தும் வசதி இல்லாத மாணவனுக்கு உயர்க்கல்வி என்பது ஒரு கானல் நீர்.
அரசியல் ஆதாயத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் எதுவும் எப்படியும் விளையாடப்படும் இந்த நாளில் வீட்டில், குடும்பத்தில், தெருவில், ஊரில், மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில், கண்டங்களில், உலகில் அமைதியையும், சமத்துவத்தையும், நீதி, நேர்மையை எதிர்பார்ப்பது இருப்பது ஒரு கானல் நீர்.
பெற்ற தாய், தந்தையரை எதோ காரணத்தினால் இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தை பாசம் ஒரு கானல் நீர்.
உண்மையான நடுநிலையாளர்களுக்கு நல்லதை நாடி செல்லுமிடமெல்லாம் கானல் நீர்.
அடக்குமுறை, அத்துமீறல்களால் உலகில் யாரோ ஒரு சில குறிப்பிட்ட நபர்களால் செய்யப்பட்ட தாக்குதல் சம்பவங்களால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி பொருளாதார ஆதாயத்திற்காக உலகின் ஒட்டு மொத்த ஊடகங்களும் பேசியும், எழுதியும் வருவதால் நடுநிலையான ஊடகத்தை எதிர்பார்ப்பது ஒரு கானல் நீர்.
பழைய காலத்தில் ஆரோக்கியத்துடன் சுகமாய் இருந்து இன்று ஆரோக்கியம் குறைந்து சுகவீனமாய் இருந்து வரும் நம் பெரியவர்களுக்கு அந்தக்காலம் ஒரு கானல் நீர்.
சமுதாயத்தில் எதேதோ காரணங்களுக்காக பிரிந்து ஆளுக்கொரு தலைவன், நாளுக்கொரு இயக்கமாக பல வண்ணக்கொடியில் ஒரு சமுதாயம் பஞ்சாய் பறந்து வருவதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஆசை கொள்ளும் நடுநிலையாளர்களின் முயற்சி ஒரு கானல் நீர்.
செயற்கையான இன்றைய வாழ்வில் இயற்கை ஆர்வலர்களுக்கு இயற்கையான வாழ்க்கை ஒரு கானல் நீர்.
மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி நேர்மையான ஒரு அரசியல் வாதியை தேர்ந்தெடுக்க நினைப்பது ஒரு கானல் நீர்.
மக்கள் நலனே தன் நலம் என சுயநலமின்றி உழைத்து சுற்றித்திரியும் அரசு அதிகாரிகளை காண நினைப்பது ஒரு கானல் நீர்.
ஊழல் இல்லா, இலஞ்சம் வாங்கா அரசுத்துறைகள் நாட்டில் எங்கேனும் இருக்கும் என மக்கள் நினைப்பது ஒரு கானல் நீர்.
மகாத்மா, காமராஜர், அண்ணாவின் பொற்கால ஆட்சிகளை கொண்டு வருவேன் என்று எவரேனும் சொல்லித்திரிந்து அதை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு அவர்களெல்லாம் ஒரு கானல் நீர்.
கடைசியாக, காலமெல்லாம் தன் குடும்ப நலனுக்காக எதேனும் அரபு நாட்டிலோ அல்லது வேறு ஏதேனும் வெள்ளைக்கார நாட்டிலோ தன்னைத்தானே நாடு கடத்தி தஞ்சம் அடைந்து வெளிச்சமின்றி உருகும் ஐஸ் கட்டி போல் இருப்பவனுக்கு குடும்பமும், சுற்றமும் சூழ இன்பமுடன் வாழ நினைக்கும் நம் ஊர் வாழ்க்கை ஒரு கானல் நீர்.
முட்டாள்களுக்கும், சிந்திக்க மறுக்கும் அறிவீனர்களுக்கும் இந்த உலகமே ஒரு கானல் நீர் தான்....
யா! அல்லாஹ்!! உண்மையான, ஹலாலான, அசெளகரியங்கள் இல்லா, போலித்தனமில்லா, அமைதியான நல்ல வாழ்க்கையை எஞ்சியுள்ள எங்களின் மீதி ஆயுட்காலங்களில் நசீபாக்குவாயாக.....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது
16 Responses So Far:
//முட்டாள்களுக்கும், சிந்திக்க மறுக்கும் அறிவீனர்களுக்கும் இந்த உலகமே ஒரு கானல் நீர் தான்....//
நச்
அஸ்ஸலாமு அலைக்கும் .
கானல் நீர் . தூரத்தில் நீர்போல் தெரியும் ,காணும் நீர்தான் கானல் நீர்!
இங்கு நீர்( நைனா) கண்டிருக்கும் கானல் ஒவ்வொன்றும் ஊற்றாகி பெருக்கெடுப்பது வினோதமான முரன். ஆனாலும் இல்லாத ஒன்றை இருப்பதாய் பாவிக்கும் ,சீவிக்கும் மனிதர்களின் நிராசையை இப்படி அழகாய் வடிக்க மண்ணின் மைந்தன் உன்மை போல் சிலரால்தான் முடியும். கானல் நீ நல்லதொரு பாடம்.
அருமையான ஆக்கம் ! வாழ்த்துகள் சகோ. நெய்னாவுக்கு.......
ஊரிலே கரண்ட் இல்லை ! மாலை ஐந்து மணிக்குதான் வருமாம் ? ! பராமரிப்பு பணியாம் ? ! அதனாலே நீண்ட பின்னுட்டம் இக்கட்டுரைக்கு பதிய முடியவில்லை !
அருமை நெய்னா..
கடும் கோடை காலத்தில் வறட்சியான பகுதிகளில் நா வறட்சியுடன் சொட்டு குடிநீருக்காக அலை மோதும் மனிதனுக்கு அருவிக்குளியல் ஒரு கானல் நீர்.
எது தற்காலத்தில் நம்மிடம் இல்லையோ அவற்றிற்காக ஏங்கித்தவிப்பவனுக்கு அவை ஒவ்வொன்றும் கானல் நீர் தான்.
ஒவ்வொரு யூனிட்டிற்கும் அரசின் மின்கட்டண உயர்வைத்தாண்டி மக்கள் பல சிரமங்களைத்தாண்டி செலுத்த தயாராக இருந்தும் தடையற்ற மின்சாரம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் ஒரு கானல் நீர் தான்.
இழந்த கம்பனை மீட்டுக்கொண்டு வர எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம்.
வசதி வாய்ப்புகள் குறைந்திருந்த போதிலும் அந்தக்காலத்தில் கண்ட இன்பம் இந்தக்காலத்திலும் ஒரு நேரம் வரும் என எதிர்பார்த்திருப்பது ஒரு கானல் நீர்.
10% முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என தேர்தல் சமயத்தில் எல்லோராலும் பரவாலாக அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளும், அதை நம்பி வாக்களிக்கும் அப்பாவி பொது ஜனங்களுக்கும், வென்றதும் 10% சதவீதத்தை எதிர்பார்த்திருப்பதும் ஒரு கானல் நீர்.
இப்படி வாழ்வில் ஏமாற்றப்படப்படும் ஏகப்பட்ட விசயங்களை கானல் நீர் என்ற அட்டவணையில் வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.
அதிரையர்களின் வாழ்க்கை கடல் கடந்து கனவோடு கானல் நீராகிப் போனது முதல் அடுத்தடுத்து அப்படியே அட்டவணைப் படித்திய கானல் அருமை நெய்னா!
//சமுதாயத்தில் எதேதோ காரணங்களுக்காக பிரிந்து ஆளுக்கொரு தலைவன், நாளுக்கொரு இயக்கமாக பல வண்ணக்கொடியில் ஒரு சமுதாயம் பஞ்சாய் பறந்து வருவதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஆசை கொள்ளும் நடுநிலையாளர்களின் முயற்சி ஒரு கானல் நீர்.//
“நெய்னா உங்கள் நா ஒரு நெய்நா” என்று வர்ணித்த என் அன்பு நண்பரும் கனடா கவிஞருமான புகாரி அவர்களின் கணிப்பு இதிலும் சரியே!
குழப்பவாதிகளின் கூடாரங்களில் இருந்து கொண்டு குதர்க்கம் பேசி தன்னை இமாமாக நினைத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இளைஞர்களை தன் வயப்படுத்தி வைக்கும் சமுதாயத் தலைகட்கும் அவர்களை ஆசிரியர் பிதற்றிக் கொள்ளும் “பிள்ளைப் பொடியன்கட்கும்” “நச்” என்ற நெத்தியடி நெய்னா!
எட்டாக்கனி ..முடவனின் கொம்புத்தேன் ஆசை ..
எல்லாம் கானல் நீர் தான் .இல்லாததை எண்ணி கொண்டு இருப்பதை விட ...
இருப்பதை கொண்டு இன்பம் பெறுவோம்
குறையில்லா மனிதன் உலகில் இல்லை ..பொறுமையை கொண்டும்
தொழுகையை கொண்டும் இறைவனிடம் துஆ செய்வோம்
இறைவன் கானல் நீரை கூட காலடியில் ஊரும் நீரூற்றாக
இறைவன் மாற்றி தருவான் ...
அஸ்ஸலாமு அலைக்கும்.
கானல் நீர் ஆவியாகி போய் இறைவன் நாட்டத்தால் மலை பொழிவது போல்.
நீ சுட்டிக்காட்டிய கொதிக்கும் நீர்கள் இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் பொங்கி பெருக்கெடுத்து குளிர்ச்சிதரும் அருவியாக கொட்டும் என்று நன்பிக்கை கொள்வோம்.
நெய்னா. சபீர் காக்கா இல்லத் திருமணம் சிறப்பாக முடிந்தது.இப்ராகிம் அன்சாரி காக்கா,ஜாகிர் காக்காஆகியோரை சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.சகோ யாசிரும் வருவதாக இருந்ததாம்.ஆனால் இறைவனின் நாட்டம் இல்லை.
சும்மா சொல்லக் கூடாது கானல் நீரை போல் சுட சுட ஆவி பறக்க அருமையான பிரியாணி.இரண்டு வகை ஊறுகாய் தாளிச்சா சுவீட் இவைகளோடு.
கானல் நீர் “கனல்” கக்கும் கண்ணீர்.....சகோ.நெய்னா உங்கள் பாணி எப்போதும் தனிதான்
//சகோ யாசிரும் வருவதாக இருந்ததாம்.ஆனால் இறைவனின் நாட்டம் இல்லை.// தங்கள் அன்புக்கு நன்றி....ஆமா சகோதரரே...பணிபிணையின் காரணமாக வர இயலவில்லை...இன்ஷா அல்லாஹ் ஊர் வரும்போது உங்களை சந்திக்க தவறமாட்டேன்
கவிவேந்தர் சபீர் அவர்கள் இல்லத் திருமண விருந்து எங்கட்குக் கானல் நீராய்த் தென்படாமல் கடல் கடந்து உள்ளோம்! இருப்பினும், சபீர் அவர்கள் மீது நான் வைத்துள்ள அன்புக்கு மரியாதையாக என் சார்பாக என் மகனாரைக் கலந்து கொள்ளச் சொன்னேன்; அவரும் என் கட்டளைக்குக் கட்டுப்பட்டுக் கலந்து கொண்ட செய்தி அறிந்தேன்.
அன்புச் சகோதரர் ஜாஹிர் ஹூசைன் அவர்களைக் காண வேண்டும் என்ற பேரவா. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் ஊரில் இருப்பீர்களா?
நெருப்பான வெயிலைக் கண்டு வெறுப்புடன் விரண்டு ஓடி விடுவீர்களா?
நெய்னா,
கல்யாண வேலைகளால் பல பதிவுகள், ஏன, கல்வி மாநாட்டில்கூட கலந்துகொள்ள முடியவில்லை. இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.
மேலும் தொலைபேசியில் தங்களின் அன்பு விசாரிப்புகளுக்கும் மிக்க நன்றி.
மேலும், என் மகள் திருமணத்தை நேரிலும் மனத்தளவிலும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.
அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
//அன்புச் சகோதரர் ஜாஹிர் ஹூசைன் அவர்களைக் காண வேண்டும் என்ற பேரவா. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் ஊரில் இருப்பீர்களா?
//
வரும் வியாழன் 24/05/12 அன்று ஜாகிர் அவர்கள் புறப்பட இருக்கின்றார்
//மேலும் தொலைபேசியில் தங்களின் அன்பு விசாரிப்புகளுக்கும் மிக்க நன்றி.//
கவிவேந்தர் சபீர் அவர்களின் அலைபேசி (இந்தியா) இலக்கம் அறியாமல் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை; இருப்பினும் என் சார்பாக என் மகனார் என் கட்டளைக்குப் பணிந்து கலந்து கொண்ட திருப்தியே உங்கள் மீது நான் வைத்துள்ள அளவற்ற அன்புக்கு மரியாதை என்று மிக்க மகிழ்ச்சியில் உள்ளேன்; அன்புச் சகோதரர் ஜாகிர் வெயிலின் கொடுமைக்கு முன்பாகவே புறப்பட முடிவு செய்து விட்டதால் நான் நேரில் காணும் பேறு கிட்டாதவனாகி விட்டேன்; இன்ஷா அல்லாஹ் சிங்கை/ மலேசியா செல்லும் வாய்ப்புக் கிட்டினால் கண்டிப்பாக ஜாகிரைப் பார்ப்பேன்!
Post a Comment