Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2012 | ,

தொடர் - 4

மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் அளித்த தனிச் சிறப்புத்  தன்மைகளில் தலையாயது நகைச்சுவை! (Sense of Humor).

"நகைச்சுவை என்ற ஒன்று இல்லை எனில், எப்போதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் இந்தியாவின் காந்தி!

நகைச்சுவை என்பது உப்பைப்போல என்பர். நகைச்சுவை வாழ்வில் அறவே இல்லை எனில் வாழ்க்கை என்பது சுவாரஸ்யம் இல்லாமல் சோகம் ததும்பும்! அதுவே, அளவுக்கு மீறும்போது சகிக்க முடியாத விளைவுகளையும் பாவங்களுடன் கொண்டு வந்து சேர்க்கும்!

மனிதனின் உடல், மன ஆரோக்கியத்தில் நகைச்சுவை முக்கியப் பங்கு வகிப்பதால்  வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பர். "ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 100 முறை சிரித்தால், அவன் 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டிய புத்துணர்வும் சக்தியும் பெறுகிறான்" என உடற்கூறு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாளைக்கு ஏறக்குறைய 300 தடவை சிரிக்கும் புதிதாய்ப் பிறந்த குழந்தையின் சிரிப்பு, அது வளர வளர 17 தடவையாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் புள்ளி விவரங்களை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் நபிமணியின் நகைச்சுவையைக் காண்போம்.

கண்ணாடிக்குடுவைகள்:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தை மேற்கொண்டிருந்தபோது, அன்ஜஷா எனும் பெயருடைய ஒட்டக ஓட்டி ஒருவரும் உடன் சென்றிருந்தார். 

அவரது முக்கியமான பணி என்னவென்றால், ஒட்டகச்சிவிகைக்குள் நபி (ஸல்) அவர்களின் மனைவியரை அமர வைத்துப் பாதுகாப்பாக ஓட்டிச்செல்வதுதான். பிரயாண வேகத்தை விரைவுபடுத்த வேண்டி, பாலைவனப் பாடல்கள் சிலவற்றைப்  பாடி ஒட்டகத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்து ஓடச்செய்து வந்தார் அவர். ஒட்டகமும் பாட்டைக்கேட்டு வேகமாக ஓடத் துவங்கியது! இதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

அண்ணல் அவர்களின் சிரிப்பு அவருக்கு மேலும் உற்சாகமளிக்கவே இன்னும் ஒட்டகத்தை விரைவாக ஓடச்செய்தார். ஒட்டகமும் அதி விரைவாக ஓடத்துவங்கவே, ஒரு கட்டத்தில் அந்த ஒட்டக ஓட்டி சிவிகையுடன் சேர்ந்து கீழே விழுவதைப்போல ஒருபக்கமாகச் சாய்ந்தார்! அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  "ஓ அன்ஜஷா! உனக்கு நாசம்தான்.[1] நிதானமாகப்போ! உள்ளே சிவிகைக்குள் இருக்கும் கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே!" என்றார்கள். 

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்), "பெண்கள் மென்மையானவர்கள் எனும் கருத்தில் அவர்களைக் கண்ணாடிக் குடுவைகளாக உவமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிலேடையாகக் குறிப்பிட்டிருகின்றார்கள்" என்று கூறுகிறார்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சிலேடையாகவும் சிரிப்பாகவும் பேசத்தெரியாது என்று யார் சொன்னது???

ஆதாரம்:  அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்க இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்திருக்கின்றார்கள் எண் 6211. இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களும் முஸ்னதில் 12300 ஹதீஸாக இந்நிகழ்வைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

குறிப்பு: [1] ஓ அன்ஜஷா! உனக்கு நாசம்தான்!:  (ரசூலுல்லாஹ் அவர்கள் யாரையாவது ஏசினால், அது மறுமை நாளில் அவருக்கு பாவப் பரிகாரமாகவும் மேலும் அவரை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக ஆக்கி வைப்பதற்கான முன்னேற்பாடாக ஆகிவிடும் என்பதையும் இது விஷயத்தில் என்ன மாதிரியான உடன்படிக்கையை இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் வேண்டி வைத்திருந்தார்கள் என்பதையும் வேறொரு சம்பவத்தில் நாம் விரிவாகக் காண்போம், இன்ஷா அல்லாஹ்!)
தொடரும்...
இக்பால் M.ஸாலிஹ்

14 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ் நல்ல பதிவு.

// உள்ளே சிவிகைக்குள் இருக்கும் கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே!" என்றார்கள்.//

அன்று வைக்கப்பட்ட இடத்தில் கன்னாடிகுடுவைகள் பத்திரமாக இருந்தது.இன்று பெரும்பாலும் தானாகவே விழுந்து சிதறக்கூடிய கண்ணாடி குடுவைகளாக அதிகம் காணப்படுகிறது.

அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்.

நபிமணியின் கண்மணிகள் பற்றிய பொன்மொழிகள் கண்களில் உணர்சிகளை சொல்லும் விழி நீர்ச்சொட்டு ஒன்றிரண்டு என் கம்யூட்டர் கீபோர்டில் விழுந்தது.

ஜஸாக்கல்லஹ் ஹைர் சகோதரர் அவர்களே!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக் கூடாத இடங்களில் சிரிப்பதைத் தடை செய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதைப் போல் சிலர் காட்டிக் கொள்கிறார்கள். கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலைமை புரியாமல் சிரிப்பவர்களும் உண்டு. பொருத்தமற்ற இந்தச் சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்குப் பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்தி விடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.

நாம் சொல்லும் நகைச்சுவையினால் எப்போது எல்லோரும் மகிழ்கிறார்களோ அப்போதே நாம் சரியான அடிப்படையில் பிறரை சிரிக்க வைத்திருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உள்ளத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனதில் இறுக்கத்தையும் மூளைக்குத் திரையையும் ஏற்படுத்தி விடக் கூடாது.

பொய் சொல்லி சிரிக்க வைக்கக் கூடாது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல்: திர்மிதி 2237

அல்ஹம்துலில்லாஹ் அருமை இப்பதிவின் சிறப்பம்சம் நபி(ஸல்)அவர்களின் சிரிப்பாற்றல் மேலும் மேலும் படிக்க தூண்டும் சாதாரணமாகவே நபி(ஸல்)அவர்களை பற்றி சொன்னாலே பலருக்கு கேட்க/படிக்க ஆவலாக இருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்.

Yasir said...

சகோ.இக்பால் M.ஸாலிஹ் காக்கா அவர்கள் “மணி,மணி”யான ஹதீஸ்களுடன் விளக்கும் கண்மணி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை இன்னும் கேட்க மனம் விரும்புகின்றது....

Shameed said...

அற்புதமான விளக்கங்கள் அழகிய ஹதிஸ்கள் தொடரட்டும் உங்கள் அற்புத பணி.

சிவிகை என்றால் என்ன கொஞ்சம் விளக்குங்களேன்

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இக்பால் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

வியாழக்கிழமையை எதிர்பார்க்கவைக்கும் தொடர் பதிவு. பாராட்டுக்கள்.

ஊரில் இருப்பதாக அறிந்தேன். வீட்டுக்கு வாருங்களேன். மைத்துனர் ஜலீல் அழைத்து வருவார்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சூவாரஸ்யமான தகவல், நபி (ஸல்) அவர்கள் எது சொன்னாலும் அதில் பல நன்மையான அர்த்தங்கள் இருக்கும் என்பது வரலாற்று உண்மை.

தொடருங்கள் காக்கா, உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

sabeer.abushahruk said...

முன்பென்றுமே கேட்டிராத அற்புதமான ஹதீஸ்கள். அதை சுவாரஸ்யமாக சொல்லிச்செல்லும் எழுத்து நடை என்று அருமையாக அமைந்திருக்கிறது இந்த அத்தியாயமும்

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, இக்பால்.

ஹமீது: சிவிகை என்பது ஒரு வகை பல்லக்கு. ஒட்டகத்தின்மேல் அமையப்பெறும் பல்லக்கை சிவிகை என்பர்.


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நகைச்சுவை ,சிரிப்பு, ரசனை இவை அளவோடு தேவை என்பதை நபி வழி முறையில் அறிய முடிகிறது.
அறியத்தந்த சகோ. இக்பால் அவர்களுக்கு நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

//பாலைவனப் பாடல்கள் சிலவற்றைப் பாடி ஒட்டகத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்து ஓடச்செய்து வந்தார் அவர். ஒட்டகமும் பாட்டைக்கேட்டு வேகமாக ஓடத் துவங்கியது! இதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.//

அன்புத் தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களிடமிருந்து நிரம்பக் கற்றுக் கொள்ளலாம். கவிதையின் தாக்கம் ஒட்டகத்தின் வேகத்தை அதிகரித்தது;கண்மணியான நபிகளார் (ஸல்) அவர்களையும் ஈர்த்தது என்ற உண்மையை இந்த ஹதீஸ் வழியாக அறியத் தந்த அன்புத் தம்பிக்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

Iqbal M. Salih said...

டாக்டர் அவர்களுக்கும் அன்பிற்கினிய சகோதரர் அபுல்கலாம் அவர்கட்கும் நண்பன் சபீருக்கும் மரியாதைக்குரிய சகோதரி ஆமினா அவர்களுக்கும்

தம்பிகள்: ஜஃபர்ஸாதிக்,சாவண்ணா,தாஜூதீன்,யாஸிர்,அதிரைத்தென்றல்,லெமுசெ.அபுபக்ரு ஆகியோருக்கும் மிக்க நன்றி. அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும், இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே எனக்கு புதுசான தகவல் காக்கா !

ஜஸாக்கல்லாஹ் ஹைர்..

புல்லாங்குழல் said...

நபிமொழிகளின் பன்முக பரிமாணத்தில் நகைசுவை எனும் அதிகம் எழுதப்படாதா கோணத்தை முன் வைக்கும் அருமையான முயற்சிக்கு நன்றியும், வாழ்த்துகளுகளும்!இக்பால்.

அது என்ன இந்தியாவின் காந்தி?

காந்தி என மொட்டையாக போட்டால் மரியாதைக்குறைவு, காந்திஜி - செச்சே வடசொல், காந்தியடிகள், காந்திமஹான், தேசத்தந்தை என ஒன்றும் ஒத்துவராமல் இந்தியாவின் காந்தி என்ற வார்த்தைகளை நீ அடைதிருப்பாயோ என்ற ஊகம் உன்னைப்பற்றிய பழைய நினைவுகளைத் தூண்டி சிரிக்க வைத்தது.

Jahir said...

first time i seen this .... So Nice good sir
_Jahir Chennai

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு