நேற்று முன்தினம் (11-04-’15) எனது Routine check-up க்காகத் தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் நரம்பியல், தண்டுவடம், மூளை முதலான உறுப்புகளின் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் இராமசாமியிடம் சென்றிருந்தேன். வழக்கமாக மாலை ஆறு மணிக்கே வரும் டாக்டர், இன்று ஏழரை மணிக்கு வந்தார்.
இந்த மருத்துமனையின் முக்கியப் புள்ளி, இந்த டாக்டர். பரிதாபத்திற்குரிய நோயாளிகளுடன் வந்த நாலைந்து உறவினர்கள் புடைசூழ, வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் நிரம்பி வழிந்தது. தஞ்சையில் இருக்கும் மருத்துவமனைகளுள், இந்த வினோதகன் மருத்துவமனைக்கே அதிகமான விபத்துக்குள்ளானோர் ‘ஆம்புலன்ஸ்’ மூலம் கொண்டு வரப்படுகின்றனர். இதன் காரணம் தெரியவில்லை.
“என்ன பாய் சவுக்கியமா?” என்று கேட்டுக்கொண்டு, என்னருகில் வந்தமர்ந்த ஒருவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஒரு கால், ஒரு கை விளங்காத நிலையில் இருந்தார். வலிப்பு நோயாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், “என்ன ஆச்சு?” என்று கேட்டு வைத்தேன்.
“ஆறு மாசமா இந்த டாக்டரிடம்தான் வைத்தியம் செய்யுறேன்....” என்றவரை இடைமறித்து, “ஏன் இன்னும் குணமாகலையா?” என்று கேட்டேன். “என்ன பாய் இப்டிக் கேட்டுட்டீங்க?” என்றவர், தொடர்ந்தார்: “ஒரு நாள் வீட்ல சாப்பாடு சாப்டுக்கொண்டு இருந்தேன். திடீல்னு வலது பக்கக் காலும் கையும் இழுத்துக் கொண்டது. கூட இருந்த என் பசங்க, ‘அப்பா! அப்பா!’ன்னு கதறினாங்க. அப்போது நான் நினைவிழந்தேன். வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த அரசாங்க ஆஸ்பத்திருக்கு என்னை – என் பாடியெக் கொண்டுபோய் இருக்காங்க. அங்கே இருந்த டாக்டர், ‘இந்தக் கேசைப் பார்க்க முடியாது. இன்னும் ஆறு மணி நேரத்துக்குள்ளே முறையான ட்ரீட்மென்ட் குடுத்தாத்தான் ஆள் பிழைக்கும்; இல்லாட்டா ஆளைப் பார்க்க முடியாது!’ என்று கூறிவிட்டார். எங்க ஊர், நன்னிலத்துக்குப் பக்கத்திலே ஒரு கிராமம்.
“என் பாடியே, அதாவது என்னெத் தூக்கிக்கிட்டு, நன்னிலம், திருவாரூர், நாகப்பட்ணம், பாண்டிச்சேரி – எல்லா இடத்தும் போய்ட்டுக் கடைசிலே இங்கே வந்திருக்காங்க. இந்த மகராசன் என்னென்னமோ செஞ்சு, என்னெப் பொழக்க வச்சுட்டாரு. எனக்கி ரெண்டு மகனுவோ. ஒர்த்தேன் 10th. மூத்தவன், +2. இந்த சம்பவத்துக்குப் பின், ரெண்டு பேரும் படிப்பே நிறுத்திட்டானுக. அப்பா நல்லானாத்தான் இனிப் படிப்பு. இல்லாட்டி, எங்கேயாவது போய் வேலை செஞ்சு, குடும்பத்தேக் காப்பாத்தணும் என்னுட்டாணுக.”
சோகக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தவரைப் பார்த்து நான் கேட்டேன்: “இன்னும் குணமாகலேயா?”
“என்ன பாய் இப்டிக் கேட்டுட்டீங்க? ஒரு கால் ஒரு கை வெலங்காட்டாலும், நான் மன்சனா நடமாடுறேன்” என்றவரைப் பார்த்து, நான் கேட்டேன்: “அது சரி... குடிப் பழக்கம் உண்டா”
“நான் உண்மையே மறைக்கலெ; நான் ஒரு வக்கீல்ட்டே குமாஸ்தாவா வேலை செய்யிறேன். கேஸ் கேஸ்னு வர்ரவங்கல்லாம் எனக்குத் ‘தண்ணி’ வாங்கித் தந்து, என்னெ மொடாக் குடியனாக்கிட்டாங்க. வீட்ல சாப்டுக்கொண்டு இருக்கும்போது ‘தண்ணி’ ஞாபகம் வந்தா, அன்னிக்கு சாப்பாடு பாழ்தான். ‘அப்பா! எங்க போறே? குடிக்கத்தானே?’ என்று தடுக்கும் மக்களைப் பாத்து, ‘டே சும்மா இருங்கடா!’ என்று அதட்டி அடங்க வைப்பேன்.”
நான் பேச்சைத் திசை திருப்பினேன். “அது சரி, இதுவரை ஆன செலவு எவ்வளவு?” என்று கேட்டேன். “ஆறு லட்சம்” என்று அசால்ட்டாக பதில் சொன்னவரைப் பார்த்துப் பரிதாபப் பட்டேன். இந்தக் கதை, குடிப் பழக்கத்தால் வந்த வினை.
இன்னொன்று, ‘குதிப்பழக்கம்’. அதான், நம்ம பசங்களின் ‘பைக்’ ஓட்டம். அங்கு உறவினர்கள் சூழ அமர்ந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டேன். ஒருவருக்குக் கன்னத்தில் அடி. பல்லெல்லாம் நொறுங்கிக் கொட்டி விட்டது! இன்னொருவர், கண்ணுக்கும் காதுக்கும் இடையில் பட்ட அடியால், வானத்தைப் பார்த்தவண்ணம் இருந்தார். ஒருவருக்குக் கண்ணே ‘பூத்துப்போய்’ இருந்தது! இன்னொருவருக்கு நெற்றியில் பட்ட அடியால், புலம்பிக்கொண்டே இருந்தார்! வேறொருவருக்கு, skull injury – மண்டையில் பலத்த அடி! மற்றும் ஒருவருக்குப் பின் மண்டையில் அடி! இப்படி, அனைவரும் பாதிக்கப்பட்டது, ‘பைக் ஆக்ஸிடென்ட்’ என்ற குதிப் பழக்கத்தால்! இவர்களிடமிருந்து விவரங்கள் சேகரித்தால், இன்னும் படு பயங்கரமான உண்மைகள் வெளிவரும்.
தஞ்சையிலிருந்து பஸ்ஸில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, bank employee ஒருவர் அகப்பட்டார். “ஏங்க, உங்க பேங்கிலே ‘பைக் லோன்’ கொடுக்கிறீங்களா?” என்று கேட்டேன். “ஓ எஸ். நெறையக் கொடுக்கிறோமே” என்றார். “12% வட்டிக்கு லோன் கொடுக்கிறோம். இன்னொரு பேங்கும் கொடுக்குது. அங்கே 14% வட்டி. அரசாங்கமும் பைக் கம்பெனிகளும் தரும் அனுமதியையும் விளம்பரத்தையும் பயன்படுத்தி, தாராளமாக் கடன் கொடுக்கிறோமே” என்றார்.
இப்போது, நம்மூர் ‘மாற்றுத் திறணாளி’ கீழத்தெரு அகமதுவின் கணீர்க் குரல் காதில் வந்து மோதியது: “மகத்தான லோன் மேளா! (ஒரு பேங்கின் பெயரைச் சொல்லி) இலகுவான தவணையில் கடன்! கடன்! கடன்! அடுத்த நிமிடம், நீங்கள் ஏறி சவாரி செய்யும் (பைக் கம்பெனியின் பெயர் சொல்லி) சொகுசான ஏறு வாகனத்தின் சொந்தக்காரர் நீங்கள்!”
வங்கிகளும் வாகனக் கம்பெனிகளும் நடத்தும் ‘கூடா நட்பு’களின் கொண்டாட்டம்! நம்மூரில் புதிது புதிதாக ‘பைக் கம்பெனிகள்’ தினம் தினம் தோன்றி, நம் இளைய சமுதாயத்தை இன்பத்தில் திளைக்க வைக்கின்றன. விளைவு, ‘பைக் ஆக்ஸிடென்ட்’கள்! உற்றார் உறவினரைக் கதறி அழவைக்கும் கோரக் காட்சிகள்! வழி நெடுக வேகத்தடை அமைத்தாலும், அதெல்லாம் ஒரு பொருட்டல்ல நம் விடலைகளுக்கு.
பைக் நிறுவனங்களின் விளம்பரத்தாலும், வட்டி வங்கிகளின் கடைவிரிப்பாலும், மது அருந்தாமலே மயங்கிப் போய்விடுகின்றனர் நம் வாலிபர்கள். தெருவில் என்ன சப்தம்? என்று எட்டிப் பார்த்தால், ‘பைக் ஆக்சிடென்ட்’!
இதற்கிடையில், வெளியூர்களுக்கு பைக்கில் இன்பப் பயணம். அடுத்துள்ள பட்டுக்கோட்டைக்குப் போய்க்கொண்டிருந்த நம் பிள்ளைகள், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை, சென்னை என்று தூரத்தை நீட்டிக்கொண்டே போகின்றனர்! விளைவு? விபத்துகள் – நம் கண் முன்னே!
பைக் கம்பெனிகள் – வங்கிகளின் ‘கூடா நட்பால்’ கவரப்படும் நம் இளைஞர்கள் தங்கள் பதின்ம வயதிலேயே (Teenage) தடியூன்றி நடக்கும் அவலக் காட்சிகள்! வெளிநாட்டில் வாப்பா காக்காமாரின் வருமானத்தில் பேரிழப்பு! அல்லாஹ்வை அஞ்சித் திருந்துமா இளைய சமுதாயம்? திருந்தத்தான் வேண்டும்! இன்றைக்குத் திருந்தாவிட்டால், நாளைக்குப் படு பயங்கரமான ‘ஆக்சிடென்ட்’...! அல்லாஹ் காப்பாற்றுவானாக!
அதிரை அஹ்மது
10 Responses So Far:
இளமையில் இருப்பதை(யும்) இழப்பது கொடுமையிலும் கொடுமை !
//பேரிழப்பு! அல்லாஹ்வை அஞ்சித் திருந்துமா இளைய சமுதாயம்? திருந்தத்தான் வேண்டும்! இன்றைக்குத் திருந்தாவிட்டால், நாளைக்குப் படு பயங்கரமான ‘ஆக்சிடென்ட்’...! //
அல்லாஹ் காப்பாற்றுவானாக!
எவ்வளவு மார்க்கம் தர்க்கம் புரிபவர்களும் கூட இந்த "வட்டி" விடயத்தில் மிகவும் அசட்டையாகவே இருக்கின்றனர்.
அல்லாஹ் தான் காப்பாற்றனும் ...
அஹ்மது சாச்சா அவர்களின் நேரமறிந்து வெளியிடப்பட்ட சமூக அக்கறைப்பதிவு (சாச்சா, அக்கறை சரியா? அக்கரை சரியா? இவ்விடத்தில் ற,ர, பயன்பாட்டில் இன்னும் எனக்கு கண்ஃபூயூஸ்இருக்கிறது. தெளிவு படுத்துங்கள் ப்ளீஸ்.)
சமீப காலமாக நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் (இரு, மூன்று, நான்கு சக்கர) வாகனங்களின் பெருக்கத்தால் அன்றாடம் கோர விபத்துக்களும் பெருகிக்கொண்டே போகின்றது. வானத்தில் பறந்த விமானத்தை காணவில்லை; கடலில் மிதந்த கப்பல் கரை வந்து சேரவில்லை; கடைத்தெருவுக்கு சென்ற மகனோ காலொடிந்து எங்கோ கிடக்கின்றான். இதுவே அன்றாடம் நாம் பார்க்கும், கேட்கும் தகவலாக இருக்கின்றது.
மற்றும் புதிதாக நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு செய்தி என்னவெனில் "மூளைச்சாவு". விபத்தில் தலையில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த மூன்றாமாண்டு பொறியியல் துறை மாணவனின் உடல் உறுப்புக்கள் 6 நபர்களுக்கு தானம் செய்யப்பட்டது. அம்மாணவனின் பெற்றோர்களை கண்ணீர் மல்க எல்லோரும் பாராட்டினர். இது போன்ற செய்திகள் தினம், தினம் வந்த வண்ணம் உள்ளன.
அல்லாஹ் நம் எல்லோரையும் மற்றும் மானிட வர்க்கம் அனைத்தையும் இது போன்ற கோர சம்பவங்களிலிருந்து கடைசி மூச்சு வரை பாதுகாத்தருள வேண்டுமாய் து'ஆச்செய்த வண்ணம் இருப்போம்.
நீண்ட நாட்கள் படுக்கையில் கிடந்து மரணித்து நம்மை விட்டு நிரந்தரமாய் பிரியும் நம் வீட்டு பெரியவர்களின் இழப்புக்களை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் நினைக்கும் பொழுதெல்லாம் உள்ளம் தவிக்கிறது. துல்லிக்குதிக்கும் பருவத்தில் வீட்டில் முடங்கும், இறக்கும் பிரியமான பிள்ளைகளின் உடல், உறுப்பு இழப்புக்களை எப்படித்தான் தாங்கும் இந்த இளகிய இதயங்கள்? அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. ஆமீன்.
9 ம் வகுப்பு போனால்தான் சைக்கிள் அதுவும் ரெண்டாம்தரம் வாங்கித்தருவேன் என்ற பெற்றோரின் கண்டிப்பு போய் கால் எட்டும் அளவு வளர்ந்தவுடன் பைக் சவாரிதான் என்ற காலகட்டம் ஆகிவிட்டது... காசு இல்லாவிட்டாலும் இளைஞர்களாகவே வட்டிக்கு வாங்கி ஓட்டும் அந்தோ பரிதாபநிலை.. இறுதியில்????
'அக்கறை' என்பதே சரி.
'அக்கரை' என்பதை, அந்தக் கரை என்று பிரிக்க வாய்ப்புள்ளதாலும், 'அக்கரைக்கு இக்கரை பச்சை' என்று முதுமொழி இருப்பதாலும், முன்னதே சரி என்றறிக.
குடிப்பழக்கம் மெல்லச்சாகடிக்க குதிப்பழக்கம் பொட்டென்று போட்டுவிடும்.
காக்கா அவர்கள் நேரில் கண்டறிந்த, கேட்டறிந்த குடி மற்றும் குதிப்பழக்கங்களின் விபரீதம் பயங்கரமானது.
நல்ல குட்டு!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
காலத்திற்கு ஏற்ற அவசியமான பதிவு.
தறிகெட்டுத் தடுமாறி அலையும் இளஞர்களுக்கு
இந்த எச்சரிக்கைக் குரல் காதில் ஏற வேண்டும்.
அலட்சியப் படுத்தினால் ஒருவேளை சந்தூக்கில் ஏற்றப் படுவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்!
அவசியமான
பதிவு
காலத்திற்கு ஏற்ற அவசியமான பதிவு.
தறிகெட்டுத் தடுமாறி அலையும் இளஞர்களுக்கு
இந்த எச்சரிக்கைக் குரல் காதில் ஏற வேண்டும்.
Post a Comment