நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

‘ஹிஜாஸ்’ பகுதியும் அதன் மக்களும் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஏப்ரல் 03, 2015 | ,

:::: தொடர் - 17 ::::

இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் மக்கா எந்த நிலப் பகுதியில் அமைந்துள்ளதோ, அந்தப் பகுதியின் நிலை எவ்வாறு இருந்தது என்பது பற்றிச் சில விவரங்களைத் தர விரும்புகின்றேன்.  அந்த ஹிஜாசில்தான், மக்காவும் அதனுள் இருக்கும் இறையில்லமான கஅபாவும் எந்த நிலையில் இருந்தன என்பதைப் பற்றியும் சிறிது விளக்க நினைக்கிறேன்.  

முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறப்பின்போது, அங்கிருந்த முதல்தரக் குடிமக்களாயிருந்த குறைஷிகளும், தாயிஃப் நகரத்து ‘தகீஃப்’ கோத்திரத்தாரும் மிகப்பெரும் வணிகர்களாகவும் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் வலிமை பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர்.  அதற்குக் காரணம், மக்காவுக்கு வடக்கிலிருந்த இன்றைய நாடுகளான சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், லெபனான் ஆகியவை அடங்கிய ‘ஷாம்’ என்ற நாட்டுடனும், தெற்கே இருக்கும் ‘யமன்’ நாட்டுடனும் வாணிபம் செய்து, அம்மக்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தனர்.  அரபுத் தீபகற்பத்தின் இதரக் கோத்திரங்கள் தமது ஏழ்மையினால், ‘ஹிஜாஸ்’ மக்கள் மீது பொறாமை கொண்டிருந்தனர்.  

மக்கா - தாயிஃப் மக்களுக்கு மதம் என்பது தம் வணிகத்தைப் பெருக்குவதற்காகவும், அதன் மூலம் வலிமையையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்வதற்காகவுமே பயன்பட்டது.  அன்றி, அனைவருக்கும் நீதியும் மனிதாபிமானமும் கொண்ட வாழ்வை அமைத்துக் கொடுக்க  வேண்டும் என்ற நோக்கமே இல்லாதிருந்தது.   பல இனத்தாருக்குச் சொந்தமான 360 குலதெய்வச் சிலைகள் கஅபாவில் இருந்ததால், மக்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்து கஅபாவில் கூடியதாலும், அவர்களின் வருமானம் மிதமிஞ்சி இருந்தது. உண்மையில், அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களால் கட்டப்பட்டதே அந்தக் கஅபா ஆலயம்.

அன்றைய உலகில் இரண்டு அரசுகள் பெரிதாகவும் வலிமை பெற்றவையாகவும் இருந்தன.  அவை, பைசாந்தியப் (Byzantine) பேரரசும் பாரசீகப் (Persian) பேரரசுமாகும்.  இவ்விரண்டுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இருந்துவந்தன.  இவ்விருவருக்கும் இடையில் போர் மூள்வதில், மாறி மாறி வெற்றியும் தோல்வியும் கிடைத்துவந்தது.  இவ்விரு சாராருக்கும் அரேபியாவை ஆளவேண்டும் என்ற எண்ணமே எழவில்லை.  காரணம், பெரும்பாலும் பாலைவனங்களே நிறைந்து, வாழ்க்கை சோதனைக்குரியதாக ஆகிவிடும் என்ற கருத்து இவர்களிடம் இருந்தது. பாலைவனத்தில் வாழ்ந்த மக்கள் நாடோடிகளாகவும், விளைச்சல் இல்லாத கட்டாந்தரை நிலத்தைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.  மக்காவும் தாயிஃபும் தவிர, வேறு பெருநகர்கள் இல்லாதிருந்தது.  ‘இவர்களைப்போய் வெற்றிகொண்டு, என்னதான் சாதிக்கப்போகிறோம்?’ என்று எண்ணினார்களோ என்னவோ, அரபுத் தீபகர்ப்பத்தின் மீது கவனம் செலுத்தாமலே இருந்தனர்.   அதனால், இப்பிரதேசத்து மக்கள் அச்சமற்று வாழ்ந்துவந்தனர்.  

இந்த மண்ணில் இஸ்லாம் அருளப்பெற்ற பின்னர்தான், நாடோடிகளிடம் நாகரிகம் தழைக்கத் தொடங்கிற்று.  அம்மக்கள் விழிப்புணர்வைப் பெற்றார்கள்.  இவ்வாறு சிந்திக்கத் தொடங்கிய சிறுபான்மை மக்களை மாற்ற, அந்த நிலத்தின் ஆளுகையைப் பெற்ற பெரும்பான்மை மக்கள் அடக்குமுறையைக் கையில் எடுத்தனர்! பதவியில் பங்குபோட வந்துவிட்டனர் என்று தப்புக் கணக்குப் போட முனைந்தனர்!   

முதலாவதாக அவர்களின் எதிர்ப்புக்குக் காரணமானது, ‘தவ்ஹீத்’ என்னும் ஓரிறைக் கொள்கையாகும். அவரவர் குலதெய்வங்களை வணங்கிவந்தவர்களை, ‘அல்லாஹ்’ ஒருவனை மட்டும் வணங்கவேண்டும் என்ற கட்டளையானது, அவர்களைப் பொறுத்தவரை, பேரிடியாகத் தோன்றிற்று!  விரல்விட்டு எண்ணத் தக்க சிலர் மட்டும் இந்த இஸ்லாமிய எழுச்சியால் சிறும்பான்மை மக்களை அடக்குவதே சிறந்தது என்று ஆணவம் கொண்டனர்!  இதற்காகப் பல வகையான தொல்லைகளை அம்மக்களுக்குக் கொடுத்தனர்!  ‘வஹீ’ என்னும் இறைச் செய்தி நபியவர்களுக்கு இறங்க இறங்க. சிந்திக்கத் தொடங்கிய சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையினரால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்!  மேலும் மேலும் தொடர்ச்சியாக இறங்கிய இறைச் செய்திகள், அவர்களைப் புடம் போட்ட தங்கங்களாக்கின.
வலுவான தலைமையின் கீழ் அவர்கள் ஒன்றிணைந்ததால், அவர்களின் உறுதியான நம்பிக்கை மேலும் மேலும் இறுக்கம் பெற்றது!  அவர்களை வழி நடத்திய அந்தத் தலைமைத்துவம் இறையருளைப் பெற்று, வெகு விரைவில் அரபுத் தீபகற்பம் முழுவதிலும் ஈடிணையற்ற சமுதாயமாக அவர்களை உருவாக்கிற்று. 

சரியான, வலுவான தலைமைத்துவம் இன்றையச் சூழலில் தேவையான ஒன்றாகும்.  இதை மனத்துள் கொண்டுதான் இந்நூலை எழுதத் தொடங்கினேன்.  முதலில் நபித்துவத் தலைமையைப் பற்றித் தெரிந்துகொண்டு, தலைமையின் இலக்கணம் இதுதான் என்று தெரிந்துகொண்டு, ஒரு தலைமை அமைந்து, அத்தலைமைக்குக் கட்டுப்படுவதன் தேவையை உணர்ந்து செயலாற்றும் செயல் வீரர்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில்தான், நான் நவீன முறையில் இந்நூலைத் தொகுக்க முற்பட்டேன்.  புதிது புதிதாகக் கற்றுக்கொள்வதன் நோக்கமே, கற்றதை வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதுதான்.  நடைமுறைப் படுத்தாத அறிவு, பயனற்றுப் போகும்.  எனவேதான், தலைமைத்துவம் பற்றிய இந்நூலைப் படித்து, அதன்படி நடக்கவேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சுருக்கமாக, அண்ணல் எம்பெருமானாரின் தலைமைத்துவத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதான் என்று வரிசைப் படுத்துகின்றேன்:
 • முழுமையான உறுதிப்பாடு
 • பரிந்துரைக்குக் கட்டுப்படாத தன்மை
 • தலைவர் என்பவர் எத்தகைய சாதகமற்ற சூழலையும் தனியராக எதிர்கொள்வது
 • வெற்றியின் மீது உறுதியான நம்பிக்கை வைப்பது
 • தன்னலத்திற்கு முன்பாக, பொது நோக்கம் ஓங்கி நிற்பது 
 • அண்ணலார் (ஸல்) கொண்டுவந்த தூதுச் செய்திகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவது 
 • எந்தத் தியாகத்தையும் செய்ய ஆயத்தமாக இருப்பது  
 • தலைமையால் வாக்களிக்கப்பட்ட வெகுமதிகளைப் பெறுவதற்கு முன்னால், தற்கால வெகுமதியை விட்டுக் கொடுப்பது 
 • பெருந்தன்மையும் மன்னிக்கும் தன்மையும் உறுதியாக இருப்பது 
 • தலைமையின் ஆளைப் பார்க்காமல், செயலாக்கத்தின் மீது உறுதியாக நிற்பது 
 • ஒரு தலைமையின் முடிவுக்கு முன்பாக அடுத்த தலைமைக்கு ஆயத்தம் செய்வது 

இனி வரும் அத்தியாயங்களில் மேற்காணும் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக குர்ஆன், ஹதீஸ் மற்றும் நபிவரலாறு முதலியவற்றின்படி விரித்துரைப்போம்.  இம்முயற்சியில் நான் தவறிழைக்கா வண்ணம், அல்லாஹ்வின் வழிகாட்டலையும் மன்னிப்பையும் கோருகின்றேன்.

அதிரை அஹ்மது

8 Responses So Far:

Adirai Ahmad சொன்னது…

'அதிரை நிருபர்' தளத்தினர் எதற்காக இந்தத் தலைமைத்துவ நூலை மீள்பதிவு செய்கின்றனர் என்பதை முதலில் வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். "அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்குச் சிறந்த முன்மாதிரியுண்டு" என்று அல்லாஹ்வின் அருள்மறை சும்மா - வெறுமனே கூறவில்லை. இதே போன்று ஒரு தொடர் கதையையோ, நகைச்சுவைப் பதிவையோ, வார்த்தை ஜாலமுள்ள வசன கவிதையையோ தொடர்ந்து பதிந்தால், மீள்பதிவு செய்தால், வாசகர்கள் தம் பொன்னான நேரத்தை எதிர்வினைக்கோ, வெற்றுப் புகழ்ச்சிக்கோ, வரம்பு மீறிய புகழ்ச்சிக்கோ செலவிட்டு, பின்னூட்டத்தை வரைந்து தள்ளுவார்கள். அதுதான் நம் வாசகர்களின் இயல்பாக உள்ளது. எனவே.......?

sheikdawoodmohamedfarook சொன்னது…

ஒருசிறப்பான,தகுதியான, தேவையான தலைமைத்துவத்தின் இலக்கணம் இங்கே விவரிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால்இன்று,இங்கே அது மருந்துக்குகூட இல்லைஎன்பதேஉண்மை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஏராளமான புத்தகங்களை நான் வாசித்திருந்தாலும், வாசித்து வந்தாலும் இதுவரையில் இந்த நூல் ஒரு கொண்டிருக்கும் அனைத்துமே படிப்பினைகள் கொண்டிருக்கிறது நம் அனைவருக்கும்.

sabeer.abushahruk சொன்னது…

அற்புதமான தலைவரின் பண்புகளை எடுத்தியம்பும் இத்தொடர் வாழ்க வளர்க!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.அற்புதமான தலைவரின் பண்புகளை எடுத்தியம்பும் இத்தொடர் வாழ்க வளர்க!

Ebrahim Ansari சொன்னது…

இந்த நூலை அதிரை நிருபர் வலைதளத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆசிரியர் தினத்தில் பல படிகளை விலைக்கு வாங்கி , பள்ளியின் எல்லா ஆசிரியர்களுக்கும் பரிசாக அளித்துப் படிக்கச் செய்தோம். மேலும் தனிப்பட்ட முறையில் நமது அனைவரின் வீட்டு நூலகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. நமது மனங்களிலும் கோலோச்சுகிறது. சிலருடன் வாதிடும்போதும் கூட்டங்களில் உரையாற்றும்போதும் மாணவ மாணவியர்களிடையே பேசும்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஜசாக் அல்லாஹ் காக்கா.

Ebrahim Ansari சொன்னது…

இந்த நூலை அதிரை நிருபர் வலைதளத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆசிரியர் தினத்தில் பல படிகளை விலைக்கு வாங்கி , பள்ளியின் எல்லா ஆசிரியர்களுக்கும் பரிசாக அளித்துப் படிக்கச் செய்தோம். மேலும் தனிப்பட்ட முறையில் நமது அனைவரின் வீட்டு நூலகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. நமது மனங்களிலும் கோலோச்சுகிறது. சிலருடன் வாதிடும்போதும் கூட்டங்களில் உரையாற்றும்போதும் மாணவ மாணவியர்களிடையே பேசும்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஜசாக் அல்லாஹ் காக்கா.

Ebrahim Ansari சொன்னது…

பின்னூட்டங்கள் ஊட்டங்களாக இருந்தன ஒரு காலத்தில்.
இப்போது பின்னூட்டங்கள் தளங்களை விட்டு ஓட்டங்களை ஊக்கப்படுத்துவதற்காகவே இடப்படுகின்றன.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+