நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சொன்னதைச் செயலில் காட்டுதல் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஏப்ரல் 24, 2015 | ,


சரியான, அழகான வாழ்வின் முன்மாதிரி (உஸ்வத்துன் ஹஸனா) என்று ஆண்டவனால் அடையாளப் படுத்தப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள், தமது கொள்கைப் பிரச்சாரத்தின் முதல் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அண்டை வீட்டாருக்கான கடமைகளைப் பற்றி மக்களுக்கு அறவுரை பகர்ந்தார்கள்; அதன் முதல் முன்மாதிரியாகத் தாமே திகழ்ந்தார்கள். பெண்ணுரிமை பற்றிப் பேசினார்கள்; கடந்த பதினான்கு நூற்றாண்டாக நடைமுறைப் படுத்தப்படாமலிருக்கும் சிறப்பான பெண்ணுரிமைச் சட்டத்தின் வரை விலக்கணத்தை அப்போதே தந்தார்கள். பொது வாழ்வில் உண்மை பற்றி உபதேசம் செய்தார்கள்; அதற்குத் தாமே இலக்கணமாகத் திகழ்ந்து, உண்மை மற்றும் நம்பகத் தன்மைக்காகத் தம் குறைஷி எதிரிகளிடமிருந்தும்கூட, ‘அஸ்ஸாதிகுல் அமீன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்கள்.

தமக்கு வாழ்க்கை நெறியாக இறைவனால் வழங்கப்பட்ட ‘இஸ்லாம்’ மார்க்கத்தைத் தாமே தமது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் முதலில் நடைமுறைப் படுத்தினார்கள். அதே வாழ்க்கை நெறியைத் தம் அன்புத் தோழர்களுக்கும் எடுத்துரைத்து நடைமுறைப் படுத்துமாறு கூறினார்கள். அத்தகைய சிறந்த முன்மாதிரியாலும், நடைமுறைப் படுத்த இலகுவான தன்மையாலும், இஸ்லாம் தூரமாகவும் விரிவாகவும் உலகில் பரவிற்று. இத்தகைய இஸ்லாத்தின் வளர்ச்சி, போர் மூலமாகவோ, மற்ற மார்க்கங்களோடு கருத்து மோதல் மூலமோ பரவவில்லை. மாறாக, நபியவர்களால் பரப்பப்பட்ட நற்போதனைகள், பாமர முஸ்லிமிலிருந்து படித்த முஸ்லிம்வரை, அனைவரும் செயல்படுத்திய அதன் எளிமையான இயல்பினாலுமே இஸ்லாம் அப்படிப் பரவிற்று. முஸ்லிம்கள் தமது வாழ்க்கையில் செயல்படுத்திய முறையினால்தான், இஸ்லாம் உலகில் விரைவாகப் பரவிற்று என்றும் கூறலாம். இஸ்லாமிய வாழ்க்கையை முழுமைப்படுத்தத் தமது வாழ்க்கையே போதுமானது என்பதை முன்னுதாரணமாக்கி, வாழ்க்கையின் முன்மாதிரியாக்கினார்கள்; அதை இறைவனும் ஏற்றுக்கொண்டான்.

இவ்வடிப்படையில்தான் அல்லாஹ் கூறினான்: “எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அவ்விறைவனை மிகைப்பட நினைவுகூர்ந்து வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரியுண்டு.” (அல்குர்ஆன் 33:21)

நபிமொழிக் கலை வல்லுனரான இமாம் ஜுஹ்ரி (ரஹ்) அவர்களின் கூற்று ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகின்றது: “மக்கா வெற்றிக்குப் பிறகுதான், இஸ்லாம் மிக விரைவாகப் பரவிற்று. காரணம், இந்த வாழ்க்கை நெறியை – இஸ்லாமிய நெறியை – பாமர முஸ்லிமும் நடைமுறைப் படுத்த முடியும் என்பதன் உண்மை நிலை உலக மக்களுக்குத் தெரிந்த பின்னர்தான், இஸ்லாம் விரைவாகப் பரவிற்று.”

கொள்கை அளவில் மட்டும் மார்க்க போதனைகள் இருந்து, அவை வாழ்வில் நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கும்போது ஏற்படும் மாற்றத்தைவிட, சாதாரண முஸ்லிம்கூட, தனக்குப் போதிக்கப்பட்ட மார்க்க நெறிகளை இலகுவாகப் பின்பற்றி நடைமுறைப் படுத்தியபோதுதான், இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்கள் இம்மார்க்கத்தை விரைந்து ஏற்றுக் கொள்கின்றார்கள்.

மார்க்கப் பிரச்சாரத்தை மக்கள் கேட்பதைவிட, மிகையாகக் கண்ணால் பார்க்கவும் செய்கின்றார்கள். இம்மார்க்கத்தை ஏற்றவர்களின் வாழ்வில் அது நடைமுறைப் படுத்தப்படும்போதுதான், அவர்கள் மிக விரைந்து முஸ்லிம்களாக உயர்வைப் பெறுகின்றார்கள். மார்க்கப் பிரச்சாரகர்கள் என்று வருவோர், எவ்வளவு திறமையாகப் பிரச்சாரம் செய்திருந்தாலும், பேச்சு ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருந்தால், அத்தகைய பேச்சாளர்கள் தமது சுயவாழ்வில் இந்த மார்க்கத்தை நடைமுறைப் படுத்தாதவரை, மக்களின் மனங்களைக் கவர முடியாது; அவர்கள் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்து, உள்வாங்கி, வாழ்வில் நடைமுறைப் படுத்துபவர்கள் மிகச் சொற்பமே.

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாவிட்டால், அந்தப் பிரச்சாரத்தால் யாதொரு பயனுமில்லை. இறைத்தூதரும் அன்னாரின் தோழர்களும் ஒருபோதும் இந்த நிலை ஏற்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மனித உரிமையையும் சமூகப் பொறுப்பையும் பற்றிய போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அண்டை வீட்டார்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும், அவர்கள் முஸ்லிம்களானாலும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும், அழுத்தமாக எடுத்துரைத்தார்கள். 

ஒருமுறை அண்ணலார் (ஸல்) தம் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள்: “உங்கள் அண்டை வீட்டாருடன் உங்களுக்குள்ள உரிமையும் கடமையும் பற்றி அறிவீர்களா?” இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு, தம் தோழர்களின் எதிர்பார்ப்பைக் கண்டு, கீழ்வரும் பட்டியலை வழங்கினார்கள்:
  • அவர் உங்களின் உதவியை நாடினால், அவருக்கு உதவுங்கள்.
  • பொருளுதவி தேடினால், கொடுத்துதவுங்கள்.
  • அவருடைய தேவையை அறிந்து உதவி செய்யுங்கள். 
  • அவர் நோயுற்றிருக்கும்போது, அவரைச் சென்று கண்டு ஆறுதல் கூறுங்கள்.
  • அவர் இறந்துவிட்டால், அவருடைய ‘ஜனாஸா’வில் கலந்து கொள்ளுங்கள்.
  • அவருடைய மகிழ்ச்சியான நேரங்களில் அவருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
  • அவருக்கு இழப்பு ஏற்படும்போது, ஆறுதல் கூறுங்கள்.
  • அவருடைய வீட்டுக்கு வரும் காற்றைத் தடுக்கும் அளவுக்கு உங்கள் வீட்டை உயரமாகக் கட்டாதீர்கள். 
  • நீங்கள் பழம் வாங்கும்போது, அதில் ஒரு பகுதியை அவர்களுக்கும் கொடுங்கள். அவ்வாறு உங்களால் கொடுக்க முடியாவிட்டால், அவர்கள் பார்க்காத அளவுக்கு வீட்டுக்குள் மறைத்து வையுங்கள். உங்கள் பிள்ளைகள் அப்பழங்களை வெளியில் எடுத்துச் சென்று, அடுத்த வீட்டுப் பிள்ளைகள் பார்த்து வேதனைப்படும் அளவுக்கு உங்கள் மக்கள் தின்னுவதை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் வீட்டுப் புகை அவர் வீட்டுக்குள் புகுந்து, அவருக்குத் தீங்கிழைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளாதீர்கள்.

இந்தப் பத்து நெறிகளையும் வரிசைப் படுத்திக் கூறிய பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கருணையைப் பெற்றவரைத் தவிர வேறு எவரும் இக்கட்டளைகளைப் பற்றி அறியமாட்டார்.”

இன்னுமொரு நபிமொழியின் மூலம், கீழ்க்கண்டவாறு திருநபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியதாக அறியப்படுவதாவது: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையாளன் (முஃமின்) அல்லன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்!” என்று (மும்முறை) திருப்பித் திருப்பிக் கூறினார்கள். அப்போது அவர்களின் தோழர்கள், “அவன் யார்?” எனக் கேட்டார்கள். அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், “எவன் தன் அண்டை வீட்டுக்காரருக்குத் தொல்லை கொடுக்கிறானோ, அவன்தான்” என்று மறுமொழி கூறினார்கள்.

பிறிதொரு ஹதீஸில் கூறப்படுவதாவது: “அத்தகையவன் ஒருபோதும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது.” ஒரு காட்சியானது, ஆயிரம் சொற்களுக்கு ஈடாகும்; அதே நேரம், ஒரு செயலானது, பத்து லட்சம் சொற்களுக்கு ஈடாகும். சிந்தித்து நோக்குங்கள்! இத்தகைய போதனைகளின் அடிப்படையில் உலகம் செயல்படத் தொடங்கினால், வாழ்க்கை எப்படி இருக்கும்? மக்கள் தம் கண்களால் தலைவரின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். எனவே, தலைவர் என்பவர் தன் நல்லுரைகளின்படி நடப்பவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அவரது பேச்சுக்குப் பெருமதிப்புக் கொடுப்பார்கள். அதுதான் தலைவருக்கான சோதனைக் களம்.

அதிரை அஹ்மது

5 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அற்புதமான முன்மாதிரியாகத் திகழும் அண்ணல் நபி ஸல் அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் அண்டை வீட்டாரோடான அன்றாட வாழ்க்கை நெறிகளை ஒழுங்குபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை அழகாகச் சொல்லிக்காட்டியுள்ளீர்கள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Abdul Khadir Khadir சொன்னது…

//தமது சுயவாழ்வில் இந்த மார்க்கத்தை நடைமுறைப் படுத்தாதவரை, மக்களின் மனங்களைக் கவர முடியாது; அவர்கள் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்து, உள்வாங்கி, வாழ்வில் நடைமுறைப் படுத்துபவர்கள் மிகச் சொற்பமே.//
ஆம் சொர்ப்பத்திலும் மிக சொற்பமே.

ஆனால் சொல்லும் நடைமுறை வாழ்வும் ஒரே நேர் கோட்டில்சென்ற உத்தம
நபியின் வாழ்வு இருட்டில் ஒளி விளக்கன்றோ ?

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

என்ற கூற்றுக்கு எதிரான வாழ்வன்றோ நபி (ஸல்)
அவர்களின் வாழ்வு.

ஒரு தலைமைக்கு உரிய மாபெரும் தகுதியாக
"என்னைப்பற்றி எந்த செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள் என்று சொன்ன ஒரே தலைவரோன்றோ ? நபி (ஸல்) அவர்கள்.

அபு ஆசிப்.


Iqbal M. Salih சொன்னது…

//ஒரு காட்சியானது, ஆயிரம் சொற்களுக்கு ஈடாகும்; அதே நேரம், ஒரு செயலானது, பத்து லட்சம் சொற்களுக்கு ஈடாகும். சிந்தித்து நோக்குங்கள்//
//தலைவர் என்பவர் தன் நல்லுரைகளின்படி நடப்பவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அவரது பேச்சுக்குப் பெருமதிப்புக் கொடுப்பார்கள்.//

ஆழமான, அர்த்தம் நிறைந்த வரிகள்! அருமையான மொழிபெயர்ப்புக்கு நன்றி காக்கா.sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sheikdawoodmohamedfarook சொன்னது…

இன்றையதலைவர்கள் தங்களுக்கு முன்மாதிரியாககொள்ளவேண்டிய தலைமைத்துவ பண்புகள் ரஸுலுல்லாஹ் அவரகளின் சொல்லிலும்செயலிலும்மண்டிக்கிடக்கிறது.காஸுகொடுக்காமல்வாங்கிக்கொள்ளலாம்.செயல்படுத்தினால்உலகம்உள்ளவரைபெயர்நிலைக்கும். ஆனால் சந்ததிகளுக்கு ஒன்னும் தேடிவைக்க முடியாது. எதுஉங்கள்சாய்ஸ்தலைவரே?

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+