Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்ரமாஹ்வும் மானப் பிரச்சினையும்! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 12

படைப்புகளில் எல்லாம் மகிமையானவர், மனித குலத்தின் மாண்பாளர் நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு, அறிவுப் பெருந்தகை அண்ணலாரின்  எளிமையான, ஆனால் எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய, சக்தியும் யுக்தியும் நிறைந்த அந்த உத்தமர் கொண்டு வந்த உயர் தத்துவத்தின்  போதனைப் பிரகாரம் நேர்வழி நடந்த குலபாயே ராஷிதீன்களில்  மூன்றாவது கலீபா நமது உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் ஆவர்!

முதன்முதலில் தூய இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட எட்டு நபர்களில் ஏழாவது இடத்தையும், சுவனத்தைக் கொண்டு இவ்வுலகிலேயே அஷரத்துல் முபஷ்ஷரா என்று நன்மாராயம் பெற்ற பதின்மரில் மூன்றாவது இடத்தையும் பெறுபவர் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள்!

இவ்வுலகில் வாழும்போதே, சுவர்க்கவாசிகள் என்று நன்மணி நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி வழங்கப்பட்ட அந்தப் பத்து முக்கியமான பேறுபெற்ற நபித்தோழர்கள்: (1)அபுபக்ரு இப்னு அபுகுஹாஃபா (ரலி), (2)உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) (3)உதுமான் இப்னு அஃப்பான்  (ரலி) (4)அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) (5)தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6)ஜுபைர் இப்னு அல்அவ்வாம் (ரலி) (7)அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8)ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)  (9)அபூ உபைதா இப்னு அல்ஜர்ரா (ரலி) (10)ஸயீத் இப்னு ஸைது (ரலி) ஆகியோர் ஆவர். (1)

மிக முக்கியமாக, ஒவ்வொரு நபிக்கும் மறுமையில் ஒரு நெருங்கிய தோழருண்டு. தேன் சுரக்கும் சொர்க்க லோகம், தூயவர்கள் வாழும் இல்லம்! அங்கே "எவர் என் ஆத்ம நண்பர் என்றால், அவர்தாம் உதுமான் இப்னு அஃப்பான்" என்ற அல்லாஹ்வின் தூதரின் ஆத்மார்த்த நட்பு எனும் அபூர்வமான, நிலையான பாக்கியத்தையும் பெற்றவர்!

வெற்றிகரமான வணிகராகவும் குறைஷிகளில் மாபெரும் செல்வந்தராகவும் திகழ்ந்த உதுமான்  இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள், பல சமயங்களில் சன்மார்க்கம் செழிக்கத்  தம்   செல்வத்தை வாரி வழங்கினார்கள். குறிப்பாக, தபூக் யுத்தத்தின்போது, மொத்தம் ஆயிரம் ஒட்டகங்களும் பதினாயிரம் திர்ஹங்களும் நிதியாக அல்லாஹ்வின் தூதரிடம் வழங்கினார்கள்!

“யூசுப் நபியின் வசீகரமான அழகைக் காண விரும்புபவர்கள், உதுமான் இப்னு அஃப்பானை கண்டுகொள்ளுங்கள்” என்று நன்மொழி நாயகர் நபியவர்களால், அவர்தம் எழில் தோற்றம் குறித்துப் பாராட்டைப் பெற்றவர். அண்ணலாரின் இரு பெண்மக்களான ருகையாவையும் அதன்பின், உம்முகுல்தூமையும் மணமுடித்த, மாண்புமிக்க மருமகன் ஆதலால், “துன்நூரைன்” (இரு ஒளிகள் உடையவர்) எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்!

நெஞ்சின் இருள்கள் நீங்கிடச் செய்யும் நேரிய வாழ்வு ஓங்கிடச் செய்யும் அருள்மறையைத் தொகுத்தளிக்கும் அரும் பணியை ஆற்றியவர் அவர்!

"நான் நாணத்தின் நகர் என்றால், அதன் நுழைவாயில் உதுமான்" என்று அண்ணல் எங்கள் ஆருயிர் நபியால்  அடையாளம் காட்டப்பட்டவர்.

நபி பெருமானின் நல்லுரைகளைப் பேணி நானிலத்தில் வாழும் நல்லவர்களின் தலைவராக, நீதி மிகுந்த, நெறி மிகுந்த ஆட்சியாளராக அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அரசோச்சிய காலம் அது!


அன்று மதீனாவில் மஸ்ஜிதுன் நபவீ வழக்கம்போல் மக்களால் நிரம்பி வழிந்தது.

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) ன்  மனைவி, நபியவர்களின்  நெருங்கிய தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) உடைய சகோதரி என்பதை முன்னரே நாம் கண்டோம்.  அந்தக்  கோத்திரத்தில் கண்பார்வை அற்றுப் போய்விட்ட மக்ரமாஹ் பின் நவ்ஃபல் என்ற வயோதிகர் இருந்தார். வயது வெறும் 115 தான்! இவர் அந்-நுஐமானின் மனைவிக்கு பாட்டனார் முறை.

மனைவியின் நெருங்கிய உறவினர் என்ற உரிமையில், மக்ரமாஹ்வை சற்று அதிகப்படியாகவே சீண்டிப் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அந்-நுஐமானின் வாடிக்கையாகவே இருந்தது!

பள்ளியில் அமர்ந்திருந்த மக்ரமாஹ்வுக்கு, வயோதிகர்களுக்கு அடிக்கடி இயல்பாக வரும் உணர்வாகிய சிறுநீர் உபாதை தோன்றிவிட்டது. தன் கைத்தடியை ஊன்றிக் கொண்டே தள்ளாடி நடந்து சென்று ஓரிடம் தேர்ந்தெடுத்து சிறுநீர் கழிக்க அமர முயன்ற அவரைப் பார்த்து  கும்பலில் இருந்து கூச்சல் எழுந்தது! அவர் இன்னும் தள்ளிப் போக வேண்டும் என்று கும்பலின் அதிரொலிகளால் ஆட்சேபிக்கப்பட்டார். தடம் புரியாத தவிப்பில், சரியான இடம் கண்டுபிடிக்கத் தடுமாற்றம் அந்தகர் அவருக்கு!

‘என் இன்னல் தீர்ப்பதில் உதவிக்கு  எவர் முன் வருவர்?’ என்று ஏங்கி நின்ற அவருக்கு ஆதரவாக, ஒரு குரல் ஒலித்தது!

"உதவ நான் தயார்!" அந்தக்குரல் மக்ரமாஹ்வுக்கு மட்டும் தெரிந்ததல்ல!

அங்கு அனைவருக்கும் அறிமுகமான அதே கிண்டலடிக்கும் கீச்சுக் குரல்தான்! அது யாருமல்ல. நம் அந்-நுஐமான் இப்னு அமர் (ரலி) தான்!

அதாவது, அவரைப் பொறுத்தவரை மக்ரமாஹ்வை வைத்து ஒரு வேடிக்கை செய்து பார்க்க வசமான ஒரு வாய்ப்பு கிட்டிவிட்டது!

"வாருங்கள் பாட்டனாரே!, ஒரு தோதான இடத்திற்கு உங்களைக்  கூட்டிச் செல்கிறேன்" என்று என்ன செய்தார் தெரியுமா?

முன்பு இருந்த இடத்திலிருந்து சில அடி தூரமே சுற்றி வளைத்து அவரை அழைத்துச் சென்று, “இதுதான் வாகான  இடம். நான் தங்கள் முன்னால் நின்று மறைத்துக் கொள்கிறேன். இப்போது நீங்கள் தாராளமாகப் பெய்யலாம்” என்று கிழவருக்கு தைரியம் கொடுத்துவிட்டு, மக்ரமாஹ் சிறுநீர் கழிக்கத் துவங்கியதும், சுற்றுமுற்றும் பார்த்த அந்-நுஐமான் வயோதிகரை அதே நிலையில் அப்படியே  விட்டுவிட்டு, நைஸாக நழுவி ஓடிவிட்டார்.

அந்த இடம் இன்னும் பள்ளியின் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்ததால், மக்களுக்கு அவரின்  அமர்வு மறைவாகத் தோன்றவில்லை! அதட்டும் சப்தம் எழுந்ததும் மக்ரமாஹ்வுக்கு மானப் பிரச்சினை ஆகிவிட்டது! மக்களில் சிலர் அவரை அதட்டி, ஆட்சேபம் செய்ததில் மிகவும் சங்கடப் பட்டுப்போன மக்ரமாஹ் சபதம் செய்து நின்றார். "இப்படி என்னை மோசம் செய்த அந்தப் பயலை நிச்சயமாக, என் கைத்தடியாலேயே ஓங்கி அடித்து, அவன் மண்டையைப் பிளப்பேன்!"

அடுத்த நாள், அந்-நுஐமான் மஸ்ஜிதுக்குள் நுழையுமுன்பே, அங்கு மக்ரமாஹ் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டார்.

சற்று தூரத்தில் அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். "தொழுகை" அவர்களுக்கு அண்ணலாரின் பாசறையில் பயின்ற நேரடிப் பயிற்சி அல்லவா? எனவே, தக்பீர் கட்டித் தேனமுதத்  திருமறையை உகப்பான முறையில் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் ஓதத் தொடங்கிவிட்டார்கள் என்றால், அதன் பிறகு, இந்த உலகையே மறந்து அதன் இனிமையிலேயே லயித்து விடுவார்கள்!

கிழவர் மக்ரமாஹ்வை  மீண்டும் சீண்டிப் பார்க்கத் தோன்றியது அந்-நுஐமானுக்கு!

அவரை நெருங்கி வந்தார். குரலைக் கனைத்து வைத்துகொண்டார். தொனியை அடிக்குரலில் அழுத்திக்கொண்டு, "பெரியவர் அவர்களே! அந்-நுஐமான் எங்கிருக்கிறான் என்று உங்களுக்குக் காட்டித் தந்தால்  அது உதவியாக இருக்குமா?" என்று கேட்டார் நயமாக!

நேற்று நடந்த அந்-நுஐமானின் அட்டூழியம் நினைவுக்கு வந்து, உடனே அவர் உடம்பெல்லாம்  ஆவேசமானது. "பேராண்டி! உடனே அந்த உதவியைச் செய்! எங்கே அந்தக் காட்டுப் பயல்? காட்டு உடனே" என்றார், நேற்றைய சபதத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன்!

சற்றுத் தள்ளி, தொழுகையில் ஒன்றிப் போய் இருந்த அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களுக்கு நேர் பின்னால் கொண்டுபோய் கிழவரைச் சரியாக நிறுத்தினார். “இதோ, அந்-நுஐமான். உங்களுக்கு எதிரேதான் நிற்கிறான். கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கிழவரின் காதுக்குள் அவசரமாக கிசுகிசுத்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்!

மனதில் தேக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி, இரு கைகளாலும் அவர் கைத்தடியை உயரே தூக்கி ஒரே போடாக போடுவதற்கு ஓங்கினாரே கிழவர்!

அவ்வளவுதான்! உடனே பாய்ந்து சென்று மக்ரமாஹ்வை பின்னால் இழுத்துப் போட்டார்  ஒருவர். மக்களிடையே ஒரே கூச்சலும் குழப்பமும் சேர்ந்துகொண்டது!

புனித மஸ்ஜிதுன் நபவீயில் இருந்துகொண்டு அமீருல் முஃமினீன் அவர்களையே தாக்கும் முயற்சியா? என்று ஒரே அமளி துமளியாய் ஆகிப்போனது! கிழவரைப் பிடித்து வைத்துகொண்டு ஆளாளுக்கு ஏசத்தொடங்கினார்கள்! முதலில் அவருக்குப் புரியவில்லை!

பிறகுதான், ஒருமுறை அல்ல! இருமுறை, தான் அந்-நுஐமானால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அங்கிருந்த அனைவருக்கும் விளக்கி வைத்து வருத்தம் தெரிவித்தார்.

அந்-நுஐமானைப் பிடித்து வர சிலர் எழுந்தபோது, அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் மக்களைக் கட்டுப் படுத்திவிட்டார்கள்.

அந்-நுஐமானை அவர் வழியிலேயே விட்டு விடுங்கள். அவரின் நடத்தை எப்படி இருந்தாலும் அவர் பத்ருப் போரில் பங்கு கொண்ட ஒரு நபித் தோழர் அல்லவா!(2) என்று புன்னகைத்த வண்ணம் நவின்றார்கள்  நிலவில் மலர்ந்திடும் அல்லிமலரைப் போன்ற மென்மையானவராகவும் பொது வாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவராகவும் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள்!

o o o o 0 o o o o 
ஆதாரங்கள்:
(1) அபுதாவூத் 4632 : ஸயீத் இப்னு ஸைது (ரலி)
(2) ஹயாத்துஸ் ஸஹாபாஹ் 2/587: அப்துல்லாஹ் இப்னு முஸ்அப் (ரலி) 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

7 Responses So Far:

Iqbal M. Salih said...

Thanks for your appreciations Sabeer.

தலைத்தனையன் said...

Alhamdu lillah. Very good flow, streams beautifully

Thameem

Iqbal M. Salih said...

Thameem,
Thanks for your valuable comments!

sheikdawoodmohamedfarook said...

இஸ்லாத்தின்முன்னோடிகளின்வரலாற்றைஅழகுதமிழில்கூறும்நாவிலும் நெஞ்சிலும்தேனுறும்சுவையானவரிகள்.

Iqbal M. Salih said...

ஃபாரூக் காக்கா அவர்களை அதிரை நிருபரில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! இன்றைய தேதியில் இந்தியாவிலா அல்லது கோலாலம்பூரிலா?

sheikdawoodmohamedfarook said...

//இன்றையதேதியில்இந்தியாவிலாகோலாலும்பூரிலா// இன்றுஇந்தியாவில்தான்இருக்கிறேன்.சோறூட்டியபூமியைவிட்டுபாலூட்டியபூமிக்குவந்துநாளாச்சு! தம்பியை பார்த்தும்நாளாச்சு. இன்ஸா அல்லா ஊர்வந்ததும்தொடர்புகொள்ளவும்.அஸ்ஸலாமுஅலைக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு