பெய்து முடித்த மழை
கொய்து தொடுத்த மலரென
ஒற்றை இரவுக்குள்
உலர்ந்து போய்விட
சேகரிக்க மறந்த மழைநீர்
சேதாரமாகிக்
கடலில் கலந்து
கரித்துப் போய்விட
தண்ணீர்க் குழாய்வழி
வெந்நீர்ப் பாய்ச்சும் கோடை
இதோ
வீரியம் கூட்டுகிறது – உக்கிர
சூரியன் காட்டுகிறது
இனி
வெந்நீரும் வற்றி
குழாய்களில்
காற்று வரும்!
குருவி தாகம் தணிக்கக்கூட
ஒருதுளி நீரும்
அறுகிப்போய்விடும்
குழாயடிகளில்
குடமடிச் சண்டைகளும்
வாயாடி வசவுகளும் கூடும்
மீனற்றக் குளங்கள்
வீணென இனி
கொக்கும் இராது
குருவி வராது
தூர்வாரப்படாத
ஊருணி வற்றி
சோறு பிடித்துப்போன
பாணையின் அடியாய்
சேறு வெடித்துக் காயும்
நிலத்தடி நீர்மட்டம்
ஆழ்த்துளைக் குழாய்களால்
எட்டா தூரம்
எட்ட
நதிக்கரைகளில்
நாணல்கள்
உலர்ந்து உதிர
நகர நெரிசல்களில்
வேர்வைப் பூக்களில்
நர நாற்றம் தூக்க
கடற்கரை மணல்
கிளை விரித்த நிழல்
என
எம் மக்கள் ஏக
கோடை கோலோச்சும்
இனி
கோபக்கார மேகக்கூட்டம்
கோடையிடி முழங்கி
முட்டி மோதி
கொட்டும் மழை நாடி
நீர்வள மேளாண்மை
சீர் செய்யக் கற்காத
கால்நடைகளோடு
கால்நடையாகவே
காத்திருக்க வேண்டியதுதான்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
13 Responses So Far:
அஸ்ஸலாமுஅலைக்கும். தேகத்தின் தாகத்துக்கும்,கவி மோகத்துக்குமான மேகம் இந்த கவிதை! காலத்தின் கோலத்தில் நீர் கானேல். இந்த கானல் நீர் நாணலுக்கும் நீர் இல்லை!எங்கும் மணல் வீதி! சுடும் பாலையாய் சாலையில் காலை வைக்ககூட முடியாத நிலை!அல்லாஹ்தான் காப்பாத்தனும்!.
படிக்க துவங்கும்போதே தொண்டையை வரட்சி கவ்விக்கொள்கிறது!. நிஜம் குளிர்சி என்றாலும் இந்த வரட்சியை சொல்லும் நிஜம் சுடுகிறது!
தண்ணீர்! தண்ணீர்! என்ற தலைப்பில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் ஒரு திரைப்படம் எடுத்தார். திரைப்படங்களுக்கே உரிய மசாலாத் தன்மைகள் அல்லாத சுத்தமான ஆவணப்படம்தான் அது.
அந்தப் படத்தில் ஒரு காட்சியை பலர் இன்றும் மறந்து இருக்க மாட்டார்கள்.
தண்ணீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் ஒரு கிராமம்தான் அந்தப்படத்தின் கதாநாயகன். பலவாறு போராடியும் தண்ணீர் கிடைக்காத காரணத்தால் அந்த அத்திப் பட்டி என்கிற கிராமத்து மக்கள் ஒன்றுகூடி ஒருமனதாக தீர்மானித்து தேர்தலை புறக்கணிப்பார்கள்.
தேர்தல் நாள் அன்று வாக்குச் சாவடி வழக்கம் போல திறந்து இருக்கும். வாக்களிக்க மக்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனால் யாராவது வாக்களிக்க வருகிறார்களா என்று மேற்பார்வையிட கிராமமே வாக்குச் காவடியின் வாசலில் காத்து இருக்கும். அப்போது ஆவலுடன் ஒருவர் வருவார். வாக்குச்சாவடியை நோக்கி உள்ளே போவார். கிராமத்து மக்கள் இதோ இவன் இந்த கிராமத்து தேர்தல் புறக்கணிப்புக் கட்டுப்பாட்டை மீறி வாக்குச்சாவடிக்குள்ளே போகிறானே என்று கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது உள்ளே போனவன் சுற்று முற்றும் பார்த்து திரு திருவென்று முழிப்பான். உள்ளே போனவனை , வாக்குச்சாவடி அதிகாரி புன்னகையால் வரவேற்பார். ஆனால் உள்ளே போனவன் என்ன செய்வான் தெரியுமா? வாக்குச்சாவடியினுள் வைக்கபட்டிருக்கும் ஒரு பானைத் தண்ணீரிலிருந்து இரண்டு குவளை தண்ணீரை மொண்டு ஆவலுடன் குடித்துவிட்டு வாயைத்துடைத்துக் கொண்டு வாக்களிக்காமல் வெளியே வந்துவிடுவான்.
அவனுக்குத் தேவை தண்ணீர்தான் வாக்குரிமை அல்ல என்பதை சிம்பாலிக்காக சொல்லி இருக்கும் அந்தக் காட்சி.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்-தகாஸூர் 102 வது அத்தியாயம் இறங்கிய போதுநபித்தோழர்களிடையேஓதிக்காண்பித்தார்கள்.
அதில் 8ம் வசனத்தை ஓதிகாண்பித்த போதுசுற்றியிருந்த நபித்தோழர்கள் எந்தெந்தஅருட்கொடைகள் குறித்தெல்லாம் நாங்கள்மறுமை நாளில் கேள்வி கேட்கப்படுவோம் என்றுகேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,தண்ணீர் பேரித்தம் பழம் ஆகியவை குறித்தும்கேள்வி கேட்கப்படுவீர்கள் என்றுபதிலளித்தார்கள்
நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்:708
//நீர்வள மேளாண்மை
சீர் செய்யக் கற்காத
கால்நடைகளோடு
கால்நடையாகவே
காத்திருக்க வேண்டியதுதான்!//
ஆம்! நீர்வளக் குறைபாடில்லை. நீர்வள நிர்வாகத்தில்தான் குறை.
கடலில்கலக்கும்கோதாவரிநீரை நதிநீர் இணைப்புதிட்டத்தில் சேர்த்தாலேஇந்தியநீரில்மிதக்கும்என்றுஒருஆய்வாளர்கூறினார். அரசியல்பிசாசும்சுயநலபிசாசும் மத இனபிசாசுகளும் சூழும் இந்நாட்டில்இந்தியாதண்ணீரில்மிதக்காதுகண்நீரிலேமிதக்கும்!
வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,
நன்றி.
இவ்வருடம் கலிஃபோர்னியா மாகானம் வரலாறு காணாத வறட்சியைச் சந்திக்கும் என்றும் அதனால் விவசாயத்திற்கு அல்லாது மற்ற தேவைகளுக்கான மின் விநியோகம் 25 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றனவே அங்கும் தண்ணீர்ப் பஞ்சமா?
இ. அ. காக்கா,
நன்றி!
அபரிதமான மழை கொட்டும் காலங்களில் தூர்வாரப்பட்ட ஏரி குளங்களில் சேமித்ததுபோக உபரி நீரை நிலத்தடியில் சேகரியுங்கள் என்று மக்களிடம் சொன்னால் அவர்கள், மழை நீரைச் சேகரிக்கிறோம் என்று குட்டைகளிலும் குடக்கல் பழைய டயர் மற்றும் சிரட்டைகளில் தேக்கி வைத்து டெங்குவையும் மலேரியாவையும் உருவாக்குகிறார்கள்.
என்னெத்தச் சொல்ல!
காலம் பற்றிய நல்ல கவிதை!
ஃபாரூக் மாமா,
நன்றி!
இந்தியா இப்போதுகூட 'தண்ணியில்'தான் மிதக்கிறது, கொஞ்சம் தள்ளாட்டத்தோடு!
எம் ஹெச் ஜே,
நன்றி!
கவிதை பற்றிய நல்ல கருத்து!
சிரட்டைஅல்லதுசிரட்டாங்க்குச்சிஅந்தக்காலத்தில்அடுப்பு எரிக்கவும்சோறுகிண்டும் ஆப்பையாகவும்பயன்பட்டது.இப்போ டெங்குகாய்ச்சலுக்குதாய்வீடாய்மாறிவிட்டது.காலங்காட்டும்கோலம்
//"இவ்வருடம் கலிஃபோர்னியா மாகானம் வரலாறு காணாத வறட்சியைச் சந்திக்கும் என்றும் அதனால் விவசாயத்திற்கு அல்லாது மற்ற தேவைகளுக்கான மின் விநியோகம் 25 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றனவே அங்கும் தண்ணீர்ப் பஞ்சமா?"//
Highly Exaggerated.
Post a Comment