அசைவு அவஸ்தை
பஸ், கார், விமானம் ஆகியவற்றில் செல்லும் போது உண்டாகக்கூடிய குமட்டல் உணர்வைத்தான் 'மோஷன் சிக்னஸ்' என்று குறிப்பிடுகிறோம். எந்த வயதிலும் இது நேரலாம் என்றாலும் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளையே இது அதிகம் பாதிக்கிறது.
காது நரம்புகளில் இருந்து கிடைக்கும் தகவலும், கண் நரம்புகளில் இருந்து கிடைக்கும் தகவலும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டால் இப்படி நேர வாய்ப்பு உண்டு. சிலருக்குக் கொஞ்சம் அசெளகரியத்தோடு மோஷன் சிக்னஸ் நின்று விடலாம், மாறாக வேறு சில அறிகுறிகளும் தோன்றக் கூடும். குமட்டல், தலைவலி போன்றவை ஏற்படலாம். மயக்க உணர்வும்கூட ஏற்படலாம்.
எக்கச்சக்கமாக வியர்வை வெளியேறுதல், மிக ஆழமாகவோ மிக வேகமாகவோ மூச்சு வாங்குவது, தொடர் கொட்டாவிகள், வாந்தி போன்றவைகளும் ஏற்படலாம். நீங்கள் செல்லும் வண்டியில் போதிய காற்று வசதி இல்லை என்றால் இந்த அவதிகள் விரைவிலேயே தோன்றக் கூடும்.
இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே உள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுவது நல்லது.
- இஞ்சித் தண்டை நுகர்வது சிலருக்குப் பலன் அளிக்கும்
- பயணத்துக்கு முன் ஒருபோதும் மயக்கம் வரக்கூடிய ஆகாரங்களைச் சாப்பிட வேண்டாம்.
- பயணம் கிளம்புவதற்கு முன் வயிற்றை முழுவதுமாக நிரப்பிக் கொள்ள வேண்டாம். குறைந்த அளவு சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள்.
- பயணத்தின்போது புத்தககங்களைப் படிக்க வேண்டாம்.
- அருகில் உள்ள பொருட்களை, பயணத்தின்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம்.
- இதற்கு என்று சில மாத்திரைகள் உண்டு. அவற்றைப் பயணத்தின்போது எடுத்துச் சென்று பயண்படுத்திக் கொள்ளலாம். சொல்லப் போனால், பயணத் தொடக்கத்திலேயே ஒன்றை எடுத்துக் கொண்டால் அறிகுறிகள் தோன்றாது.
- வேறு சில மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு வாகனம் ஓட்டினால் தலை கிர்ர்ர் என்று சுற்றக் கூடும். அத்தகைய மருந்து மாத்திரைகளைப் பயணத்தின்போது எடுத்துக் கொள்ளக் கூடாது.
- ரிஸ்ட் பேண்ட் கட்டிக் கொள்வது பலன் அளிக்கக் கூடும். ஏதோ ஒரு மணிக்கட்டு பட்டை அல்ல. அக்யு-ப்ரஷர் முறையில் வடிவமைக்கப்பட்ட பட்டையை பயன்படுத்த வேண்டும்.
தொண்டை கரகரப்பு
தொண்டையில் வலி அல்லது கரகரப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உணவு விழுங்குவதில் கஷ்டம் உண்டாகலாம். தொண்டைக் கரகரப்பு பெரும்பாலும் வைரஸ்களின் பாதிப்பால்தான் உண்டாகிறது. ஆக, ஆன்டிபயாடிக் மருந்துகளால் இது முணமாவதில்லை (பாக்டீரியா பதிப்புகளைத் தான் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் குணப்படுத்தும்)
பலருக்கும் ஜலதோஷத்தின் ஆரம்ப கட்டத்தில் லேசான தொண்டை கரகரப்பு உண்டாகக் கூடும். மூக்கும், அதன் சைனஸ் பகுதியும் தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு அதன் வழிகள் அடைபடலாம். அப்போது, நீர் வெளியேற வழியின்றி மறுபடியும் தொண்டைக்குள்ளேயே வந்து தங்கி அப்பகுதியைப் பாதிக்கக் கூடும்.
வாய்வழியாக தொடர்ந்து சுவாசிப்பதன் காரணமாகவும் தொண்டைக் கரகரப்பு ஏற்படக் கூடும் முக்கியமாக, உலர்ந்த சூழலில் இப்படி உண்டாகும். கொஞ்சம் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். சிலசமயம், ஏதாவது ஒவ்வாத பொருளின் காரணமாகவும் தொண்டைக் கரகரப்பு உண்டாகலாம்.
பாக்டீரியா பாதிப்பால் தொண்டையில் சிக்கல் என்றால் டாக்டர் பரிந்துரைக்கும் ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளை அவர் குறிப்பிடும் கால அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவாரம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்க, மூன்று நாட்களில் தொண்டை சரியான உணர்வு ஏற்பட்டதும் மாத்திரைகளை நிறுத்திவிடக் கூடாது. சற்று ஒடுங்கிய பாக்டீரியா, மீண்டும் முழு பலத்துடன் தன் தாக்குதலைத் தொடர நிறையவே வாய்ப்பு உண்டு.
மிருதுவான மசாலா சேர்க்கப்படாத உணவுகளை இந்தக் காலகட்டத்தில் சாப்பிடுவது நல்லது.
இப்படிக்கு
கா.மூ.தொ.முற்போக்கு கூட்டணி
1 Responses So Far:
என்ன இது?
தொண்டை கரகரப்பைக் குறை என்கிறீர்களே, கரகர தொண்டையுடைய தலைவர்களின் பேச்சைத்தானே தொண்டைகள்...ஐ மீன் தொண்டர்கள் கேட்டு ஓட்டுப் போடுகிறார்கள்???
(சும்மா கலாய்த்தேன். மற்றபடி கூட்டணி மிகவும் அவசியமான ஆரோக்கியக் குறிப்புகளைத் தருவதால் தொடர வாழ்த்துகள்.)
Post a Comment