Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எந்தையே...! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 07, 2015 | , ,

இப்பவும்
இருப்பதைப் போலவே
இருக்கிறது

இழுத்துவிட்ட மூச்சு
இல்லாமல் நின்றுவிட
இறைவனடி எய்தி
இன்றேழு ஆண்டுகள் ஆகியும்
இப்பவும்
இருப்பதைப் போலவே
இருக்கிறது

நீங்கள்
உயிராய் இருக்கும்வரை
வயிராய் நான்
வாழ்க்கையில் லயித்திருக்க
முதுகாய் எனை
முழுதாய்க் காத்திருந்தீர்கள்

நான்
உழைத்துச் சேர்த்த
செல்வமெல்லாம்
நீங்கள்
விதைத்து வைக்கப்போய்,
களைத்துச் சோர்வடையும்
காலமிதில்
முளைத்துக் கிளைத்து
முற்றத்து நிழலாய்
மிகைக்க
வேப்பமரத்தடியில்
வீசும் தென்றலில்
மதுரம் ருசிக்கின்றேன்

நீங்கள்
எழுதி வைத்தக் காகிதங்கள்
உழுது வைத்த நஞ்செயைப்போல்
அபிவிருத்தி ஆகி
அசுர லாபம் காட்டுகின்றன

நான்
கொடுக்க நினைத்ததைத்
தடுத்ததில்லை நீங்கள்
அதுவே -நான்
தடுக்கி விழுமுன்
தூக்கி நிறுத்தித்
தலையைக் காக்கிறது
தர்மம்

தங்களின்
கடவுச் சீட்டும்
கனராவங்கிக் கணக்கும்
என
ஒவ்வொன்றாய்
புதுப்பிக்க சாத்தியப்படாத
நிபந்தனைக்குட்பட்டு
காலாவதி எய்தினாலும்...

கட்டிலின் வெறுமையிலும்
உம்மாவின் ஒருமையிலும்
பேரனின் பார்வையிலும்
பேர்த்தியின் பாஷையிலும்

கண்களுக்குள் ஈரமாயும் -என்
கவிதைகளுக்குச் சாரமாயும்
நெஞ்சுக்குள் நினைவாகவும் -என்
நேர்மைக்கு விதையாகவும்

இப்பவும் -தாங்கள்
இருப்பதைப் போலவே
இருக்கிறது!

(மகன்)சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

16 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இவன்தந்தைஎன்நோற்றான்கொல்

Ebrahim Ansari said...

இதய வீணையின் நரம்புகளை முகாரி ராகத்தில் மீட்டும் கவிதை வரிகள்.

Ebrahim Ansari said...

//தங்களின்
கடவுச் சீட்டும்
கனராவங்கிக் கணக்கும்//

நெஞ்சு பொறுக்குதில்லையே!






Yasir said...

யா அல்லாஹ் ---மனதை உருக்கும் கவிதை..ஈடு செய்ய முடியாத இழப்பு...அல்லாஹ் உங்கள் வாப்பாவிற்க்கு மறுமையில் உயர்ந்த பதவியை தருவானாக.....ஆமீன்

Shameed said...

இருக்கும் வரை எளிமையாய்
இறக்கும் வரை இளமையாய்
இருந்தவர் தங்களின் தகப்பனார்

Shameed said...

எப்போது உங்கள் வீட்டிற்கு சென்றாலும் வாசலில் அந்த சிவப்பு சேரில் தங்கள் வாப்பா உட்காந்து இருப்பதுபோல் ஒரு பிரமை எனக்கு தோன்றும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நெருக்கம் சொல்லும் உருக்கும் கவிதை ! ஒரே பார்வையில் பசையாக ஒட்டியது மனதில் !

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா, இப்றாகீம் அன்சாரி காக்கா, யாசிர், ஹமீது மற்றும் அபு இபுறாகீம்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசிப்பில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

வாழ்க்கைச் சுமையின் சரியான கனத்தை நான் உணர்ந்து கொண்டது வாப்பாவின் மறைவுக்குப் பிறகுதான்.

எனவே பொருளாதார, சொந்தபந்த, உறவுகள் தொடர்பான, கொடுக்கல்வாங்கல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்றவை மிரட்டும்போதெல்லாம் இவற்றின் எந்த பாதிப்பும் எனக்கு ஏற்படவிடாமல் தடுத்தாண்ட வாப்பாவின் நினைவு அழுத்தும்.

அப்படியான ஒரு தருணத்தின் தோன்றல்களே இந்தப் பதிவு.

நன்றி!

Unknown said...

தந்தையின் இழப்பில் தனயன் பெரு மூச்சு
கவிதையின் சாராம்சம்.

அடுத்த கவிதையில் உன் தந்தைக்காக
இறைவனிடம் இறைஞ்சும் துஆ உலாவரட்டும்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

காதரு,

ஜஸாக்கல்லாஹு க்ஹைரன்!

//அடுத்த கவிதையில் உன் தந்தைக்காக
இறைவனிடம் இறைஞ்சும் துஆ உலாவரட்டும்.//

இன்ஷா அல்லாஹ்!

Ebrahim Ansari said...

//அடுத்த கவிதையில் உன் தந்தைக்காக
இறைவனிடம் இறைஞ்சும் துஆ உலாவரட்டும்.//

தந்தையை இழந்த அனைவருக்கும் அது பொருத்தமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

//அடுத்த கவிதையில் உன் தந்தைக்காக
இறைவனிடம் இறைஞ்சும் துஆ உலாவரட்டும்.//

தந்தையை இழந்த அனைவருக்கும் அது பொருத்தமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

அதிரை.மெய்சா said...

தந்தையை நினைத்து
தரமான வரிகளில்
உன் சிந்தையில் உதித்த
சிறப்பான உணர்வுகள்
சிர்ப்பிக்குள் இருக்கும் முத்துபோல்
உன் மனதிற்குள் அடைபட்டுக் கிடந்த
பாச முத்துக்களை வேதனையுடன்
நினைவுகளுடன்
வெளிக் கொண்டு வந்துள்ளாய்
அருமை...அருமை...
அருமை நண்பனே !

அதிரை சித்திக் said...

நீங்கள்
உயிராய் இருக்கும்வரை
வயிராய் நான்
வாழ்க்கையில் லயித்திருக்க
முதுகாய் எனை
முழுதாய்க் காத்திருந்தீர்கள்//

மனம் கசிந்தேன் ...
பேரு பெற்ற தனையன் நீங்கள் மட்டுமல்ல ,,,தங்களின் தந்தையும் தான் ..நல்ல மகனை பெற்றதால்

Iqbal M. Salih said...

வல்ல ரஹ்மான் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!
அல்லாஹும்மக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு.

sabeer.abushahruk said...

மெய்சா, சகோ அதிரை சித்திக் மற்றும் இக்பால்,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

(க்ரவ்னைக் காங்கலயே)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு