நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கா வெற்றி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஏப்ரல் 17, 2015 | ,

:::: தொடர் - 19 ::::

பதின்மூன்று  ஆண்டுகளாக மக்கத்துக் குறைஷிகளின் கொடுமையை நுகர்ந்த பின்னர், தோழர் அபூபக்ரும் அண்ணலாருமாக மக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து, ஆதரவளித்த அருட்பதியான மதீனாவுக்குச் சென்று அமைதியாக வாழ்ந்த எட்டாண்டுகளுக்குப் பின், தோழர்கள் புடைசூழ, இப்போது வெற்றி வீரராக மக்காவினுள் நுழைகின்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.  இப்போது அவர்கள் மிகத் தாழ்மையுடன் குர்ஆனின் முதல் அத்தியாயமான ‘அல்ஃபாத்திஹா’வை ஓதியவர்களாக, கஅபா வளாகத்தினுள் நுழைந்தார்கள்.

அவ்வளாகத்தினுள் வந்து, ‘தவாஃப்’ எனும் வணக்கத்தைச் செய்யத் தொடங்கினார்கள்.  அதன்பின், ‘பனூ அப்துத் தார்’ குடும்பத்தைச் சேர்ந்த உஸ்மான் பின் தல்ஹா என்பவரைக் கூப்பிட்டு, கஅபாவின் சாவியைக் கொண்டுவருமாறு கூறினார்கள்.  தன் வீட்டுக்கு வந்து, தன்  தாயிடம் இருந்த சாவியைக் கேட்டார் உஸ்மான்.  முதலில் கொடுக்க மறுத்த அப்பெண், அந்தச் சாவி வேறு யாரிடமும் போய்விடக் கூடாது எனும் நிபந்தனையுடன் தன் மகனிடம் கொடுத்தார். 

சாவி தம்மிடம் கொடுக்கப்பட்டவுடன், நபி (ஸல்) அவர்களே கஅபாவைத் திறந்தார்கள்.  தமக்கு முன்னால் இருந்த ஒரு பறவையின் மரச் சிலையை உடைத்தார்கள்.  பின்னர், அடுத்தடுத்து இருந்த சிலைகளையும் பிம்பங்களையும் தம் கைகளாலேயே உடைத்தார்கள்.  “நம் மூதாதையான இப்ராஹீம் (அலை) அவர்களின் பிம்பம் என்று ஒன்றை உண்டாக்கியவனை அல்லாஹ் நாசமாக்குவானாக!” என்றும் கூறினார்கள்.  மற்ற உருவங்களையும் படங்களையும் உடைத்து அகற்றிவிடுமாறும் தம் தோழர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 

கஅபா நுழைவை முடித்துவிட்டு வெளியில் வந்த நபியவர்கள், அதன் நுழைவாயிலில் தாமதித்து நின்றார்கள்.  நபியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் மக்கள் கூடினார்கள்.  ஒரு காலத்தில் – நபித்துவத்தின் தொடக்க காலத்தில் –  அவர்களை அண்ணலார் அழைத்தபோது ஓடிவந்து கூடாதவர்கள், இப்போது முஸ்லிம்களாகி, அச்சமும் ஆர்வமும் கொண்டு, இறுதித் தூதரைச் சுற்றிக் கூடினார்கள்!  அண்ணலார் ‘உளூ’ செய்வதற்காக ‘ஜம்ஜம்’ கிணற்றை நோக்கிச் சென்றார்கள்.  தோழர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அண்ணலார் ‘உளூ’ செய்தபோது அவர்களின் உறுப்புகளிலிருந்து வடிந்த நீரைப் பிடித்துத் தம் உடம்பில் தேய்த்துக்கொண்டார்கள்!  அத்துணை அன்பு அண்ணலாரின் மீது!

இதைக் கண்ணுற்ற இணைவைப்பாளர்கள்,  “இவரைப் போன்ற அரசரை ஒருபோதும் இந்த மக்காவில் நாம் கண்டதே இல்லை” என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.  அன்றிருந்த இறைத் தூதர்தான் இன்றும்;  ஆனால், அன்றில்லாத வலிமை இப்போது அவர்களிடம் இருந்தது.  அதனால், மக்காவின் மக்கள் நபியைச் சுற்றிக் கூடினார்கள்.

வழக்கமான இறைப் புகழுக்குப் பின், நபியவர்கள் அம்மக்களிடம் பேசத் தொடங்கினார்கள்:  “புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே.  அந்த வல்லோன் எமக்கு அருளிய வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்.  அவனுடைய அடியார்களுக்கு உதவியும் செய்தான்.  தான் ஒருவனாக நின்று, எதிரிக் கூட்டத்தை அழித்தொழித்தான்!  இந்த மக்கா வெற்றியின்போது எவருடைய குடும்ப உறுப்பினராவது தம் உயிரை இழந்திருந்தால், அதற்குப் பகரமாக நூறு ஒட்டகங்களைப் பெற்றுக்கொள்வார்.   அறியாமைக் காலத்தில் பெற்றிருந்த தனிச் சலுகைகளும் பதவிகளும் இன்றோடு நின்றுவிட்டன.  அவை அனைத்தும் என் கால்களின் கீழே மிதிபட்டு, உரிமையை இழந்துவிட்டன.”

கஅபாவின் திறவுகோலைக் கையில் பிடித்தவர்களாக நின்ற நபியவர்களை விளித்து, அன்னாரின் மருமகனார் அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  இந்தக் கஅபாவிற்கு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வருவோருக்கு உணவும் குடிப்பும் வழங்கும் உரிமையையும், கஅபாவின் திறவுகோலை வைத்திருக்கும் நற்பேற்றையும் எங்களுக்குத் தாருங்கள்” என்று கேட்டபோது, நபியவர்கள் அதற்கு இணங்காமல், உத்மான் இப்னு தல்ஹாவை அழைத்து, அவர் கையில் திறவுகோலைக் கொடுத்தார்கள்.  “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  இது என்றென்றும் உங்கள் குடும்பத்தாரிடமே இருக்கட்டும்.  இதை உங்கள் குடும்பத்திலிருந்து பிடுங்க நினைக்கும் எவனும் கொடுங்கோள் மன்னனாகத்தான் இருப்பான்” என்றும் கூறினார்கள்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், நபியவர்களால் ஒப்படைக்கப்பட்ட மக்காவின் அதே குடும்பத்தில்தான் கஅபாவின் திறவுகோல் இருக்கின்றது என்ற உண்மை பலரும் அறியாத ஒன்றாகும்.

இதையடுத்து, தமது ஒட்டகத்தின் மீது இருந்தபடியே கஅபாவைச் சுற்றிவரத் தொடங்கினார்கள்.  கஅபாவைச் சுற்றி  வைக்கப்பட்டிருந்த சிலைகளைத் தமது கையில் இருந்த அம்பால் சுட்டிக் காட்டியவுடன், அந்தச் சிலைகள் ஒவ்வொன்றாக நொறுங்கி வீழ்ந்தன!  அப்போது அண்ணலார் (ஸல்) அவர்களின் வாய், 

“ஜாஅல் ஹக்கு வ ஜஹகல் பாத்திலு.  இன்னல் பாத்தில கான  ஜஹூகா” (உண்மை வந்துவிட்டது!  பொய்மை அழிந்தது!  கண்டிப்பாகப் பொய்மை அழிந்தே தீரும்!) என்ற மறைவாக்கை மொழிந்தவன்னமாக இருந்தது.

பின்னர், குழுமியிருந்த மக்களுள் மக்கத்துக் குரைஷி இணைவைப்பாளர்களை விளித்து, “உங்களை இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்டார்கள்.

அதற்கவர்கள், “நீங்கள் எங்களின் கண்ணியத்துக்குரிய சகோதரர் ஆவீர்.  மேலும், எங்களின் கண்ணியத்துக்குரியவரின் மகனும் ஆவீர்” என்று மட்டும் கூறினார்கள்.

அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், “நீங்கள் மன்னிப்பைப் பெற்றவர்களாகத் திரும்பிச் செல்லுங்கள்!” என்று கூறி, அவர்களுக்குப் பொது மன்னிப்பை வழங்கினார்கள்!  மக்காவின் வெற்றியைப் பெற்ற மாமனிதராக இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால், அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்திருக்கலாம்.  அதற்கு மாறாக, இரக்கமுள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கொடுக்காமல், எவ்விதப் பணயத் தொகையும் பெறாமல், அவர்கள் அனைவரையும் மன்னித்தார்கள்!

அடுத்து, தம் அருமைத் தோழர் பிலாலை அழைத்து, கஅபாவின் கூரை மீது ஏறி நின்று, (அதான் எனும்)  தொழுகை அழைப்பைக் கூறுமாறு கட்டளையிட்டார்கள்.  நபிமொழிக் கலை (ஹதீஸ்) வல்லுனரான ஒருவரின் கருத்துப்படி, ‘இறைத்தூதர் (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டதன் நோக்கம், மக்கத்து இணைவைப்பாளர்களைச்  சினங்கொள்ள வைப்பதுதான்.   மக்கத்து ‘முஷ்ரிகீன்’கள் ஒரு காலத்தில் எந்த அடிமை பிலாலை வதை செய்தார்களோ, அந்த பிலாலுக்குக் கஅபாவின் மீது ஏறித் தொழுகை அழைப்புக் கொடுக்கும் பெருவாய்ப்பைக் கொடுத்து, மனிதர்களின் உயர்வும் கண்ணியமும் இறையச்சத்தின் அடிப்படையில்தான் என்பதை அவர்களுக்குக் காட்டுவதற்காக, தொழுகை அழைப்புக் கொடுக்கும் பெரும் பேற்றை அளித்தார்கள் அண்ணலார்(ஸல்).

சஈத் பின் முஸய்யிப் (ரலி) என்ற நபித்தோழர் கூறுகின்றார்கள்:  “முஸ்லிம்கள் பெற்ற மக்கா வெற்றியின் இரவு, ஒரு கொண்டாட்டத்திற்கு உரியதாக இருக்கவில்லை.  அந்த இரவு முழுதும் நபித்தோழர்கள் கஅபாவை வலம் வந்துகொண்டும், அல்லாஹ்வின் வலிமையை மொழிந்துகொண்டுமே இருந்தார்கள்.  அன்றிரவு அபூசுஃப்யான் தன் வீட்டுக்குச் சென்று, தன்  மனைவி ஹிந்தாவிடம், ‘முஸ்லிம்களின் இந்த வெற்றியும் குதூகலமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்டானது என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டார்.  ‘அல்லாஹ்வின் ஏற்பாடன்றி, வேறென்ன?’ என்று அப்பெண் திருப்பிக் கேட்டார்.  

இதையடுத்து, கஅபா வளாகத்துக்கு வந்த அபூசுஃப்யானிடம் நபி (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய மனைவி ஹிந்தாவிடம், ‘முஸ்லிம்களின் இந்த வெற்றியும் குதூகலமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்டானது என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டீர்.  அதற்கு ஹிந்தா, ‘ஆம்’ என்று மறுமொழி தந்தாரல்லவா?” என்று, அபூசுஃப்யான் வியந்து நிற்கும் அளவுக்குக் கேட்டார்கள்!   

இதைக் கேட்டுத் தனது வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்ட அபூசுஃப்யான் உடனே கூறிய உறுதி மொழி, “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலில்லாஹ்!” என்பது மட்டுமாகவே இருந்தது. 

இந்நிகழ்வை அடுத்து, பெருமானாரின் கட்டளை, “இந்த மக்கா இன்று முதல் புனிதமான பதியாகும். இதில் சண்டையிடுவது, இதன் மரங்களை வெட்டுவது ஆகியன தடுக்கப் பட்டவையாகும்.  இதே சிறப்பு, மதீனாவுக்கும் உரியதாகும்” என்பதாகும்.

பிற்காலத்தில் ஒருமுறை அபூசுஃப்யானின் மகன் முஆவியா, நபித்தோழர் அபூஹுரைரா (ரலி)வை விருந்துக்கு அழைத்திருந்தார்.  விருந்துக்கு வந்தவர்களில் மதீனாவாசிகள் பெரும்பான்மையாக இருந்தனர். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அன்சார்களே!  உங்கள் தொடர்பான ஒரு தகவலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டுப் பின்வரும் நிகழ்வைக் கூறினார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியன்று, மதீனாவாசிகளைக் கூப்பிடுமாறு அபூஹுரைராவிடம் கூறினார்கள்.  அந்த ‘அன்சார்’கள் வந்து நபியவர்களை நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டார்கள். “மதீனாவாசிகளே!  இந்த என் பிறப்பிடமான மக்காவுக்கு வெற்றியாளனாக நான் வந்துவிட்ட பிறகு, நான் இங்கேயே தங்கிவிடுவேன் என்று பேசிக்கொண்டீர்களாமே?” என்று கேட்டார்கள்.  அதற்கு அவர்கள், “ஆமாம்” என்றார்கள்.  அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் அடிமையாவேன்.  நான் ‘ஹிஜ்ரத்’ செய்தது, அல்லாஹ்வுக்காகவும் உங்களின் நேசத்திற்காகவுமே.  எனவே, எனது வருங்கால வாழ்வும் இறப்பும் உங்களுடனேயே அன்றி வேறில்லை” என்று உறுதிபடக் கூறினார்கள்.

இவ்வாறு இறைத்தூதர் சொல்லக் கேட்டதும், அன்சார்கள் உணர்ச்சிப் பெருக்கால் அழுதவர்களாக, “அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அவ்வாறு கூறியது, அல்லாஹ்வையும் உங்களையும் நாங்கள் நேசித்த உண்மைக்காகத்தான்” என்று கூறினார்கள்.  அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், “நீங்கள் உண்மையே உரைத்தீர்கள் என்பதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதரும் சாட்சியாவார்கள்” எனக் கூறினார்கள்.  

நமக்குத் தொல்லை கொடுத்துக் கடுமையாக வதை செய்தவர்களை மன்னிப்பது, அதிலும் குறிப்பாக, நமக்கு அதற்கான வலிமை வந்த பின்னரும், அவர்களை மன்னித்து வஞ்சம் தீர்க்காமல் விட்டுவிடுவதென்பது, மிகவும் சிரமமான ஒன்றாகும்.  இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை, அந்த மக்கத்து இணைவைப்பாளர்கள் நபியை வீட்டை விட்டுத் துரத்தவும் அல்லவா செய்தார்கள்!  இப்போது, அல்லாஹ் அந்த மக்கத்துத் தலைவர்களைத் தண்டிக்கும் வலிமையான வாய்ப்பை அல்லவா தந்துள்ளான்!  இந்த உரிமையைப் பெருமானார் (ஸல்) பயன்படுத்தினார்களா?  இல்லை!  

முஸ்லிம்களால் மக்கா வெற்றிகொள்ளப்பட்டபோது, பாதகம் செய்த மக்கத்துத் தலைவர்களின் பரிதாப நிலையைக் கண்டபோது, தம்மை வசைச் சொற்களாலும் வதை செய்தும், தமக்கு அநீதி இழைத்த அதே மக்கள், ‘வெற்றி பெற்ற முஸ்லிம்கள் என்ன செய்வார்களோ’ என்று நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பில் நின்ற குறைஷிக் காஃபிர்கள், ‘மன்னிப்பு’ என்ற ஒன்றை மட்டுமே எதிர்பார்த்துக் கூனிக் குறுகி நின்றனர்!   

அதைத்தான் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்!  அதற்கு விரிந்த இதயம் வேண்டும்.  அதனை அண்ணலாருக்கு நிறையவே அல்லாஹ் கொடுத்திருந்தான்!  கடந்த கால நிகழ்வுகள், ஒருவரை வலிமை பெறச் செய்யவேண்டும்.  அல்லது, தளர்வடையச் செய்யவேண்டும்.  நம் மீது இழைக்கப்பட்ட அநீதிகளின் நினைவுகள் மாறாமல் நம் இதயங்களில் உறுதிப் பதிவுகளாக இருக்கும்போதெல்லாம், அவற்றுக்கு நாம் இடங்கொடுத்தால், அவை நமது உறவையும் சிந்தனையையும் பாழாக்கிவிடும்.   மன்னிப்பு என்ற மகத்தான பண்புதான் இதயப் புண்களை ஆற்றும் அருமருந்தாகும்.  இது, அநீதி இழைக்கப்பட்டவரின் இதயத்தில் கருணையாளன் அல்லாஹ் வளரச் செய்த அருட்கொடையும் பேரருளுமாகும்.  இதயத்தின் காயங்கள் ஆறிப்போகும்!  இந்த நிகழ்வு, கொடுமை செய்தவர்களின் இதய அழுக்குகளையும் நீக்கித் தூய்மைப் படுத்தும்.  கொடுமை இழைத்தவர்களை மன்னித்து, புதிய விடியலை நோக்கிப் புறப்படும் நற்பேற்றையும் நமக்குப் பெற்றுத் தரும்.  இதைத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

அனைவருக்கும் பொது மன்னிப்பு என்ற அறிவிக்கையால், நமக்குத் துன்பம் இழைத்துப் பல்லாண்டுகளாகி மறந்துபோன எதிரிகளையும் சிந்திக்க வைத்துச் சீர்பெற வைத்தார்கள்.   நன்மை செய்தவருக்கு, அதற்குப் பகரமாகத் தீங்கு செய்ய முனைபவருக்கு எவர்தான் ஆதரவளிப்பார்? எவருக்குத்தான் மனம் வரும்?  இவ்வாறு நீதியை நிலைநாட்டி, பொது மன்னிப்பு வழங்கியதால், நபியவர்கள் மக்கத்து மக்களின் இரும்பு இதயங்களைக் கனியச் செய்து, புதிய நண்பர்களையும் ஆதரவாளர்களையும் அல்லவா பெற்றுக்கொண்டார்கள்!  முடிவில், மக்காவின் ஆட்சியுமல்லவா அவர்கள் வசம் வந்தது!  கொடுமை இழைத்தவர்கள் மனம் மாறித் தம்மை முஸ்லிம்களாக மாற்றிக் கொண்ட புதுமையும் நிகழ்ந்தது!  

இதே மாற்றம், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறப்பு வரை நீடித்தது.  அதற்குப் பின்னும் – அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களின் கிலாஃபத்தின்போது – இஸ்லாத்திற்கு எதிரான சதி வலைகள் பின்னப்பட்டபோது, இணக்கமான மக்காவைத் தவிர மற்றப் பகுதிகளுக்குப் படைகளை அனுப்பி, எதிர்ப்புகளையெல்லாம் முறியடித்து இணக்கமாக் கினார்கள் என்ற வரலாற்று உண்மை அனைவருக்கும் தெரிந்ததல்லவா?

அதிரை அஹ்மது

2 Responses So Far:

Iqbal M. Salih சொன்னது…

மக்கா வெற்றி பற்றியும் பெருமானாரின் பெருந்தன்மை பற்றியும் படிக்கும் எவருக்கும் மனம் நெகிழ்ச்சியடையாமல் இருப்பதில்லை! அதிலும், இது ஒரு மொழிபெயர்ப்பு போலவும் தெரியவில்லை! அந்த அளவுக்கு காக்காவின் எழுத்து நடை அற்புதமாக இருக்கிறது!
Really, its an excellent expression about the conquest of Makkah. Maasha Allah!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

மக்கா வெற்றியைப் பற்றி பல விவரிப்புகளை வாசித்திருந்தும் தங்களின் வர்ணனை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+