Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிரியமில்லா பிரிவுகள்! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2015 | , , , ,

படித்த பள்ளியையும், ஆசிரியப் பெருமக்களையும், பள்ளி கால நட்பு வட்டாரத்தையும் இறுதித் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குப் பின் மேற்படிப்பிற்காக வேறொரு பள்ளி/வேறொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்லுதல் என்பது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

ஓரளவு கற்ற பின் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தனக்கும், உடன் பிறந்தோருக்கும் திருமண காரியங்கள் நடந்தேறவும்வீட்டுத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் பாஸ்போர்ட் எடுத்து அயல்நாடு செல்ல விசா வந்து பின் புறப்பட்டுச் செல்ல இருக்கும் தேதியில் அந்த பரிதாபமான உள்ளம் படும் பாடு அது ஒரு பிரியமில்லா பிரிவு.


வியாபார, வணிக நோக்கத்திற்காகவோ அல்லது வாழ்வாதாரத் தேவைகளுக்-காகவோ பாசமிக்க பெற்றோர், அன்பு மனைவி, ஆசைக் குழந்தைகளை கொஞ்ச காலம் விட்டுப் பிரிந்து தொலை தூரங்கள் கிழம்பிச் செல்வது ஒரு பிரியமில்லா பிரிவு.

ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து விட்டு வேறு வேலை காரணமாகவோ அல்லது சொந்த தொழில் தொடங்கும் எண்ணத்திலோ அந்த நிறுவனத்தின் பணியையும், நட்பு வட்டாரத்தின் நேரடி தொடர்புகளையும் முடித்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு புறப்படுவது வாழ்வின் வசந்தத்திற்காக புறப்பட்டாலும் அது ஒரு பிரியமில்லா பிரிவு.

புனித பயணங்கள் மேற்கொண்டு உள்ளத்தில் தினந்தோறும் நிழலாடும் அந்த புனித நகரங்களான மக்கமாநகரம், மதீனமாநகரத்தில் சில நாட்கள் தங்கிவல்ல இறையோனை அழுது, தொழுது வணங்கி நல்ல பல அமல்கள் செய்து வரையறுக்கப்பட்ட காலம் முடிந்ததும் அப்புனித பூமியை விட்டு நகரும் சமயம் இனி இன்னொரு முறை இத்தலங்களை வந்து தரிசிக்க இறைவன் நாட்டம் உண்டோ? இல்லையோ? என உள்ளத்துக்குள் நினைத்துக் கொண்டு கண்கள் பனித்து உள்ளத்தை பரவசப்படுத்தி கரையவைக்கும் பிரிவு ஒரு பிரியமில்லா பிரிவு.

ஊரில் மிச்சம் மீதியாய், சொச்சமாய் இருக்கும் வீட்டின் மூத்த, வயோதிக சொந்தங்களை விட்டு காலத்தின் சூழ்ச்சியில் பிரிவது ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

மரணித்த சொந்த பந்தங்களின் ஜனாஸாவை முறையே குளிப்பாட்டி கஃபனிட்டு இறுதியாய் முகத்தை மட்டும் கொஞ்சம் திறந்து வைத்து உறவினர்கள் கடைசியாய் கண்ணீர் மல்க அந்த ஜனாஸாவை பார்த்து பிரியாவிடை கொடுத்தனுப்புவது ஒரு பிரியமில்லா பிரிவு. (பிரியப்பட்டாலும், பிரியப்படா விட்டாலும் ஒவ்வொரு ஆன்மாவும் இந்த இறுதிப் பயணத்தை மேற்கொண்டே ஆக வேண்டியுள்ளது).

தன் வீட்டு பிள்ளைச்செல்வங்களை கொஞ்ச காலம் வீட்டினர்களுடன் இருந்து படிக்க வைத்து பிறகு பெரியவனாக ஆன பின் மேற்படிப்பிற்காக அவனை எங்கேனும் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்க அனுப்பி வைப்பது ஒரு பிரியமில்லா பிரிவு.

அயல் நாடுகளில் தனிமையில் இருப்பவர்களும், குடும்பத்துடன் இருந்து வருபவர்களும் தாயகம் புறப்பட்டு சென்று குறிப்பிட்ட காலம் தான் பிறந்து, வளர்ந்து ஆளான ஊரில் சொந்த பந்தங்களுடன் சுகமாய் இருந்து விட்டு பிறகு காலச் சூழலில் அவர்களை விட்டு பிரிந்து புறப்பட்டு செல்வது ஒரு பிரியமில்லா பிரிவு.

நமதூரில் மார்க்கத்திற்கு மாறாக பெரும்பாலும் திருமணம் முடித்து ஆண் மகன் சொந்தத்திற்குள்ளேயே, ஊருக்குள்ளேயே என்ற ஒரு வரம்பு வட்டத்திற்குள் இருந்தாலும் திருமணம் முடித்து பிறந்து, வளர்ந்த வீட்டை விட்டு அவன் மனைவி வீடு செல்வது என்பது அவனை வளர்த்து ஆளாக்கிய அந்த பெற்றோர்களுக்கும், அவனுக்கும் காலத்தின் கேட்டால் ஒரு பிரியமில்லா பிரிவு.

உலகில் அது எந்த இடமாக இருந்தாலும் நாம் கொஞ்ச காலம் தன் வசிப்பிடத்தை அங்கு ஏற்படுத்தி வாழ்ந்து வந்த அந்த இடங்களை, பழக்கப்பட்ட அந்த சுற்றுப்புற சூழலை விட்டு ஏதேனும் காரணத்தால் பிரிய வேண்டி இருப்பது ஒரு பிரியமில்லா பிரிவு.

ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதத்தை பிறை நோக்கி சீரும், சிறப்புடன் எதிர்கொண்டு அதனை நல்ல முறையில் வரவேற்று அமல்கள் பலசெய்து வல்லோனை அவன் விரும்பும் வழியில் வழிபட்டு தத்தமது ஆன்மாக்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மறுமைக் கணக்கில் அதிக வரவுகளை நன்கு ஏற்படுத்திக் கொண்டு பிறகு 29ம் நாள் அல்லது 30ம் நாள் நம்மை எல்லாம் உடலாலும், உள்ளத்தாலும் குதூகலப்படுத்திய அப்புனித ரமழான் அடுத்த வருடம் நாம் அதை இதே சங்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்புகள் இருக்குமோ? இல்லையோ? என எவருக்கும் விடை தெரியாமல் விடை பெற்றுச் செல்வது நம் அனைவருக்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

வியாபார, வர்த்தகம் மூலம் லாபங்கள் பல ஈட்டி சுகபோகத்தில் இருந்து வாழ்ந்து வந்த மனிதன் ஏதேனும் காலச் சூழ்நிலையால் அதே வியாபாரத்தில் பெரும் நஷ்டமடைந்து அவனுடைய சுகபோகங்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அல்லது மொத்தமாய் இழக்க நேரிடின் அதன் பிரிவு அவனுக்கு ஒரு பிரியமில்லா பிரிவு.

இல்லற வாழ்க்கை இறையோனின் கிருபையால் நல்லறமாய் நடந்தேறிக் கொண்டிருக்கும் பொழுது வாழ்வில் குறுக்கிடும் ஏதேனும் சிறு, சிறுபிணக்குகளால், சஞ்சலங்களால் பக்குவமற்ற குடும்ப பெரியவர்கள் சிலரின் பயனற்ற அறிவுரையாலும், சமயோசித புத்தியின்மையாலும், குறிப்பாக மார்க்க தெளிவின்மையாலும் சில நல்ல தம்பதிகள் கூட நிரந்தரமாய் விவாகரத்து மூலம் பிள்ளைகள் பெற்ற பின்பும் ஒருவருக்கொருவர் பிரிந்து செல்வது இருவருக்கும் நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு (எந்த பிள்ளையும் புதிய வாப்பா, உம்மாவை அந்தளவுக்கு உள்ளத்திற்குள் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை).

நல்ல குடும்பங்களில் குடும்ப நல விரும்பிகள் போல் போலி வேசமிட்டு வரும் சில சைத்தான்களின் குறுக்கீட்டாலும், தவறான வழி காட்டுதலாலும் நிலம், சொத்து, வியாபார கொடுக்கல், வாங்கல், திருமண சம்மந்தம் என சில உலகாதாய சில்லரை சமாச்சாரங்களுக்காக உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்குள் கூட ஒரு பெரும் பிணக்கை, சச்சரவை ஏற்படுத்தி அந்தப் பிரிவினையினூடே எவருக்கேனும் ஒருவருக்கு மரணம் சம்பவித்தாலும் கூட அவன்/அவள் வீட்டுப்படி ஏறி மையத்தின் முகம் கூட பார்க்கமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்ய வைத்து தேவையற்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இரு குடும்பங்களுக்கும் ஹயாத்திற்கும், மவுத்திற்கும், எதற்கும் கிடையாது என வீராவேசம் பேசி பிரிவது நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு.

செல்லமாய் வீட்டில் பிள்ளை போல் வளர்ந்த மாடு, கன்று, கோழி,குஞ்சு போன்ற வீட்டு பிராணிகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாலோ அல்லது காணாமல் போய் விட்டாலோ அதை சீரும், சிறப்புடன் தினம், தினம் கவனித்து வளர்த்து வந்த வீட்டினர்களுக்கு வாயில்லா ஜீவனாக அது இருந்த போதிலும் அதன் பிரிவு நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு.

என்ன தான் நாம் உடலாலும், உள்ளத்தாலும் பலசாலிகளாக இருந்து வந்தாலும் அல்லது அது போல் நடித்துக் கொண்டாலும் சில எதிர்பாராத திடீர் பிரிவுகள் எம்மை நிலைகுலைய வைத்து உடலாலும், உள்ளத்தாலும் பலஹீனமடைய வைத்து அவை பால் போன்ற கண்களில் பரிசல் போல் மிதக்கும் கருவிழிகளுடன் சிவக்கச் செய்து கண்ணீர் மூலம் பகிரங்கப்படுத்தி விடும் உள்ளத்தை உலுக்கிய அவ்வேதனைகளை.

இப்படி பிரிவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். குறிப்பாக, நம்மூரில் மற்ற ஊர்களைக் காட்டிலும், பிற மதத்தினர்களைக் காட்டிலும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அடிக்கடி நம் வாழ்வில் விரும்பியோ, விரும்பாமலோ சம்பவிக்கும் வேதனை தரும் இது போன்ற பிரிவுகள் அதிகமே. இதில் விடுபட்ட உங்கள் வாழ்வில் சங்கடத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பல பிரிவுகளை நீங்கள் பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம்.

வஸ்ஸலாம்.

பிரியமில்லா பிரிவுகள் முடியவில்லை இன்னும்...!

மு.செ.மு. நெய்னா முஹம்மது

1 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

பத்துமாதம்சுமந்து பாலுட்டி வளர்த்த தாயின்பிரிவே தாங்காதபிரிவு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு