Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம்... 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2016 | , ,

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஒரே நாளில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவுற்றது. வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே வழக்கம் போல அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டன. தெருவெங்கும் கட்சிக் கொடிகள், தெருமுனைகள் எங்கும் கூட்டங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் எல்லாம் சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போல பேசிய பேச்சுக்கள், கூடவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரைகள். பேசத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வானூர்தியில் பறந்து , எழுதிவைத்தாவது படித்த தமிழக ஆளும் கட்சித்தலைவி ஒரு புறம்; மற்றொரு புறமோ தள்ளாத வயதில் தள்ளு நாற்காலியில் அமர்ந்தாவது தனது கட்சிக்காகப் பரப்புரை செய்த தமிழக முக்கிய எதிர்க் கட்சியின் தலைவர். அவருக்குத்துணையாக தமிழகமெங்கும் சுற்றி கவர்ச்சிகரமான – காட்டமான பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்த திமுக வின் பொருளாளர் ஸ்டாலின், தேர்தலில் போட்டியிடாமல் நாடெங்கும் சென்று பிரச்சாரம் செய்த திரு. ஜி.கே. வாசன் போன்ற முக்கியத் தலைவர்களின் பரப்புரைகள் என்று ஜனநாயகத் திருவிழா பலவாறும் களைகட்டியது. கூடவே சோனியா, அத்வானி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்வுகளும் நிகழ்ந்தன. 

இவர்களுடன் கூடவே கட்சிகளின் பல்வேறுதரப்பட்ட பேச்சாளர்களின் பொதுக் கூட்டங்கள் , தொண்டர்களின் கோஷங்கள், மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் அணி வகுப்புகள், வீதியெங்கும் வீட்டு சுவர்களில் உடமையாளரின் அனுமதி பெற்றும் பெறாமலும் வரையப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் என தமிழகமே அல்லோகலப் பட்டது. 

வெற்றி வாய்ப்புக்களுக்கான கருத்தாக்கங்கள் என்ன? கருத்துக் கணிப்புகள் என்ன? தொலைக் கட்சி விவாதங்கள் என்ன? முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் நிகழ்ந்த வம்புகள், வசவுகள் என்ன? பஜார் முதல் படித்துறை வரை பகிர்ந்து கொண்ட அரசியல் கருத்துக்கள் யாவை? ஆரூடங்கள் யாவை? அடிதடிகள் எத்தனை? 

தமிழகமே சுறுசுறுப்பாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழாவின் காவடி எடுக்கும் அனைத்துக் கட்சிகளுமே தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்தன. இத்தகைய பல்வேறு தரப்பட்ட பரப்புரைகளின் தன்மைகளையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் எடுத்து வைக்கப்பட்ட விவாதங்களையும் உண்மைகளையும் மக்கள் அலசி ஆய்ந்து தங்கள் மனதில் ஒரு முடிவெடுத்து வாக்களிக்கும் தினத்தில் தாங்கள் முடிவு செய்த கட்சிக்கு வாக்களித்து ஆதரிப்பதே நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் பணிகளுக்கும் ஒரு முடிவாக இருந்து இருக்க முடியும். ஆனால் இந்த அனைத்து வகை ஜனநாயக் செயல் பாடுகளையுமே செல்லாக்காசாக்கி, இறுதி இரண்டு நாட்களில் இடுப்பை ஒடித்துப் போட்டது ஆளும் கட்சியினரால் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கப் பட்ட காசு, பணம், மண்ணி! மண்ணி!. சட்ட ரீதியாக ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படையாக இதை மறுக்க முற்படலாம். ஆனால் அவரவர் மனசாட்சியின்படி மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல; ஊர் அறிந்த ரகசியம். 

இவ்விதம் பணம் கொடுத்து வாக்குகளை திசை மாற்றுவது சரியான ஜனநாயக நடவடிக்கையா? மக்கள் சேவையே எங்களின் இலட்சியம் என்று மேடையில் வாய் கிழிய முழங்கி விட்டு திரைமறைவில் பணத்தை முதலீடாக்கி வெற்றி பெற நினைப்பது அரசியல் நாகரீகமா? அரசியல் நன்னடத்தையா? இதுதான் ஒரு பெரிய அரசியல் கட்சியின் அரசியல் பண்பாடா? அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு எம்ஜியார் பெயரை என்றும் முழங்கிக் கொண்டு வலம் வரும் கட்சிக்கு இது மரியாதை தருமா? அப்படி என்றால் ஒன்றரை மாதங்கள் நடந்த ஜனநாயகப் பணிகளுக்கு அர்த்தம்தான் என்ன? பணக்கட்டுகள் இருந்தால் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்றால் தேர்தல் ஏன்? கோஷம் ஏன்? கொள்கைகள் ஏன்? தேர்தல் அறிக்கைகள் ஏன்? மக்களுடைய அரசியல் அறிவு அப்படி மழுங்கிவிட்டது என்று எடை போடுவது நியாயமா? இருநூறு ரூபாய் காசுக்காக இந்த மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று ஆளும் பொறுப்பில் இருந்த கட்சி நினைத்தது – அதற்காக பெரும் தொகையை ஒதுக்கி அதை விநியோகித்தது இந்திய அரசியல் வரலாற்றில் கழுவ முடியாத களங்கம். 

இந்த பணப்பட்டுவாடா மக்களின் மனதில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுகளின் பிரகாரம் வாக்களிக்கவிடாமல், வாக்குகளை திசை திருப்பியதா? இப்படிப்பட்ட அசாதாரணமான அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா? இப்படிப்பட்ட இழிவான செயலுக்கு பரிகாரங்கள் என்ன? இவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக் கொள்வார்களா? ஆகிய கேள்விகளை இங்கு விவாதிக்கலாம். 

இந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத முறையாக தேர்தல் பிரச்சாரம் முடிவு பெற்ற நாளின் மாலை முதல் தேர்தல் ஆணையம், தமிழகமெங்கும் 144 தடை உத்தரவை – அமுல் படுத்தியது. தேர்தல் பரப்புரைகள் நடைபெற்ற காலங்களில் சட்டம் ஒழுங்குக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் அமைதியாக அனைத்தும் நடந்தன என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த தேத்தல் ஆணையமும் அரசும் 144 தடை உத்தரவை அமுல் படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நடுநிலையாளர்கள் முதல் ஆளும் கட்சியல்லாத அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் ஆரம்பத்தில் புரியவில்லை. ஆனால் நடு இரவுகளில், வீடுகளைத் தேடி சில்லரையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் முதல் ஐநூறு ரூபாய்வரை அனைத்து பெரிய சிறிய ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்ந்துவரும் சேரிகளுக்கும் ரொக்கங்களாக வந்த பிறகுதான் இந்தத்தடையின் உண்மை நோக்கம் பற்றி ஒரு சந்தேகம் மக்கள் மனதில் தோன்றியது; ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்தது. இவ்விதம் வழங்கப் பட்ட தொகையின் மொத்த மதிப்பு சுமார் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஆக இருக்கலாமென்று பொருளியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பிறகு வணிகர்களும் சாதாரண பொதுமக்களும் பணப்பரிவர்த்தனை விஷயத்தில் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல . ஒரு திருமணக் குடும்பம் , நகைகள் வாங்கக் கொண்டு சென்ற ரொக்கங்களைக் கூட பறிமுதல் செய்து தங்களது பலத்தைக் காட்டியது தேர்தல் ஆணையம். இன்றைய விலைவாசி உயர்வில் , ஒரு சாதாரண நடுத்தர வியாபாரி டாடா ஆஸ் அளவுள்ள வாகனத்தில் சரக்கு வாங்க நினைத்தால் கூட அந்த சரக்கின் மதிப்பு ஐம்பதினாயிரத்துக்கு மேலேதான் இருக்கும் . ஆனால் இத்தகைய சிறிய வணிக நடமாட்டங்களின் கூட பணப்பரிமாற்றத்துக்கு தடை செய்து பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை. ஆனால் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக கட்டுக் கட்டாக ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் பணம் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டதே அது எவ்வாறு சாத்தியப்பட்டது என்று சொல்ல தேர்தல் ஆணையம்தான் தார்மீகமாக கடமைப்பட்டு இருக்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்று வரையறுக்கபப்ட்டு இருந்தாலும் உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் அதிகாரம்தான் என்று நாம் மனதில் வைக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்களிப்பும் வாக்கெண்ணிக்கையும் முடிவடைந்ததும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் காலம் வரைதான் ஒரு மாநிலத்தின் அனைத்து அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகள் உட்பட தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப் பட்டவர்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததும் அந்த அதிகாரிகள் அனைவரும் மீண்டும் மாநில ஆட்சியாளர்களுக்கு சலாம் அடித்தே ஆகவேண்டுமேன்பதே துரதிஷ்டவசமான ஆட்சிமுறை அமைப்பு. ஆகவே , தற்காலிகமாக தேர்தல் ஆணையத்துக்கு தலையாட்டும் அதிகாரிகள் கூட மனப்பூர்வமாக மனசாட்சிப் படி நியாயமாக நடக்க மாட்டார்கள். அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் என்ன தண்ணீர் இல்லாத காடுகளுக்குப் பஞ்சமா? இந்த அச்ச உணர்வு இருக்கும் மாநிலத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழே உள்ளவர்கள் அனைவரும் தங்களின் கடமைகளை நியாயமாக நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைதான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம். 

வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்குள்ளேயும் வெளியேயும் ஆளும் கட்சியின் அல்லரைகளின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருப்பதே அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு எழுதப் படாத உத்தரவு. இந்த நிலை இருக்கும்போது வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துப் பணம் கொடுப்பதையும், வாக்களித்த பிறகு வாக்களித்த சின்னத்தைக் கேட்டு உருட்டி மிரட்டி பயமுறுத்தி உறுதி செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்துக்குக் கூட வழியே இல்லை. தேர்தல் ஆணையத்துக்கென்று தனியாக காவல்படை இருந்தால் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இராணுவம் அல்லது துணைப்படை வந்தால்தான் இந்தக் குறையை ஓரளவு நீக்க முடியும். அதைவிட்டுவிட்டு, மாநிலக் காவல்துறையை நம்பி தேர்தல் நடத்துவது பாலுக்குப் பூனையைக் காவலுக்கு வைத்தது போலத்தான் அமையும். 

தேர்தல் ஆணையத்திடம் சென்று எதிர்க் கட்சிகள் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை அளிக்கச் சென்றால் தேர்தல் ஆணையம் ஒற்றை வரியில் பதில் சொல்கிறது. தேர்தல் ஆணையம் சொல்லும் அல்லது கேட்கும் கேள்வி ஆதாரம் இருக்கிறதா என்பதுதான். கள்ளத்தனமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் போவது என்பது திருமண நிகழ்ச்சியோ அல்லது நிச்சயதார்த்தமோ அல்லது பூநீராட்டுவிழாவோ அல்ல என்பதை தேர்தல் ஆணையம் உணராமல் பணம் கொடுத்த புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? வீடியோ அல்லது புகைப்பட ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இத்தனை மணிக்கு சுபயோக முகூர்த்தத்தில்தான் ஓட்டுக்குப் பணம் தரும் திருட்டு ஜனநாயக வியாபார்கள் வருவார்களென்று முன் கூட்டியே அய்யரை வைத்து நேரம் குறித்து இருந்தால் மட்டுமே ஆதாரம் தர இயலும். நாட்டில் பரவலாக நடக்கும் அத்துமீறலை அறியாமல் கூட ஒரு ஆணையம் இருக்குமென்றால் அது தேர்தல் ஆணையமே. கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கேட்கும் கேட்கும் ஆணையமும் அதுவாகவே இருக்க முடியும். 

படித்தவர்கள்- விழ்ப்புணர்வு பெற்றவர்கள் கூட உள்ளூர் ஆளும்கட்சியின் பிரமுகர்களுக்கு அஞ்சி புகார் தரவோ பிடித்துக் கொடுக்கவோ முன்வருவதில்லை என்பதுதான் இந்தப் பிரச்னையின் நிதர்சனம். எளிய மக்கள் யாராவது வீட்டுக்கு வந்து பணம் தருவதை மறுக்காமல் , வாங்கிக் கொள்ளவே நினைப்பார்களே தவிர தைரியமாக புகார் தர முன் வருவார்களா? இப்படிப் பட்ட பலவீனங்கள்தான் ஜனநாயகத்தை விலை பேசும் வியாபாரிகளுக்கு அத்துமீறும் துணிச்சலைத் தருகிறது. ஒருவேளை எதிர்க் கட்சிக்காரர்கள் புகார் அளித்துப் பிடித்துக் கொடுக்க முயன்றாலும் எளிய மக்களின் மனநிலை, பணம் தராத எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பும் சாத்தியமும் உண்டு. காரணம் இவர்களும் தராமல், தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்கிற ஏழைகளின் இயற்கையான மனோபாவம்தான். சமுதாயத்தில் இந்த நிலையில் இருப்பவர்களின் இந்த மனோநிலை வாக்குகளை எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திருப்பும் சக்தி படைத்தது. 

பொதுவாகப் பார்க்கப் போனால் பணம் கொடுத்தால் மக்களின் மனதை மாற்றிவிட முடியும் என்ற எண்ணம் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படுவது இது முதல் முறையல்ல. இந்த முறை மிகவும் விரிவாக நடைபெற்றது என்பதுதான். இப்படிப்பட்ட தீய செயலுக்கான விதை, திருமங்கலத்தில் விதைக்கப்பட்டு - ஏற்காட்டில் வளர்க்கப் பட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

இப்படிப் பணம் கொடுத்த காரணத்தால் மக்கள் மனம் மாறி வாக்களித்துவிடுவார்களா? என்ற கேள்விக்கு விட தேடினால் இதனால் ஏற்படும் விளைவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம் பணப்பட்டுவாடா ஒவ்வொரு பகுதிகளின் செயலாளர்களின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பானமையான கட்சிகளின் பகுதிச் செயலாளர்கள் இயல்பில் எவ்வளவு நல்லவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மூலம் பணம் கொடுக்கப்பட்டபோது, ஒருவித அச்ச உணர்வு அப்பாவிகளின் மனதில் விதைக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதே நேரம் இவ்வளவு பணம் கொடுத்த பிறகும் அதன் பலன் கொடுத்தவர்களுக்குப் போய்ச் சேராவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு, அதன் பாதிப்புகள் அந்தந்தப் பகுதிகளில் அராஜகமாக உருமாற வாய்ப்புண்டு. இதை எளிய மக்கள் வாழும் பகுதியினர் உணர்ந்தே நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கலாம். பல இடங்களில் சமுதாயமாக வாழும் மக்களைக் கூட்டி விலை பேசியும் பட்டுவாடா நடந்து இருப்பதால் குறிப்பிட்ட சமுதாயம் வாழும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை வைத்து எவ்வளவு வாக்குகள் எங்கிருந்து விழுந்தன என்று கண்டறியும் வசதியும் இருப்பதால் பணம் பெற்றவர்கள் பணத்துக்காக, மனசாட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வாய்ப்புண்டு. இந்த நிலை அப்பட்டமான ஜனநாயகத்தின் தற்கொலைக்கு சமம். இந்த தற்கொலைக்குத் தூண்டியவர்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்த குற்றத்துக்கு ஆளாவார்கள்.

அதே நேரம் ஏற்கனவே மக்களின் கோபத்துக்கு ஆளான கட்சிக்கு எதிராக அவர்கள் பணம் தந்தாலும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டுமென்று ஏற்கனவே ‘மைன்ட் செட்” செய்தவர்கள் – கட்சியின் தீவிர உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இந்தப் பணம் மாற்றிவிட இயலாது. ஒரு இரு நூறு ரூபாய்க்கு மக்களின் மனதில் இவ்வளவு நாட்களாக இருக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை துடைத்துப் போட்டுவிடும் சக்தி இருக்கிறதா? என்கிற சிந்தனையும், இவ்வளவும் செய்து மக்களை துன்பத்தில் மிதக்கவிட்டு விட்டு கடைசி நேரத்தில் இரு நூறு ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மறந்து இவர்களுக்கு வாக்களித்து விடுவோமா என்று மக்கள் மனதில் கோபத்தைத் தூண்டி சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்ளும் போக்கும் இந்தப் பணத்துக்கு உண்டு. இப்படி பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்து இருந்தவர்களும் மாறி வாக்களித்திருக்கவும் வாய்ப்புண்டு. அத்துடன் ஒரே தெருவில் வேண்டியவர்களுக்குக் கூடுதலாகவும் வேண்டாதவர்களுக்கு சில இடங்களில் குறைவாகவும் கொடுத்த நிகழ்வுகளும் நிகழ்ந்திருப்பதால் அவனுக்கு நான் என்ன மட்டமா என்கிற மனோபாவத்திலும் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க இயலாது. 

நல்லதோ கெட்டதோ கை நீட்டிக் காசு வாங்கிவிட்டோம் ஆகவே போட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து வாக்களித்தவர்களும் கணிசமாக இருந்து இருப்பார்கள். பாமர மக்களின் இந்த நாடித்துடிப்பு, இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை விலைபேசி வாங்க நினைக்கும் பெருச்சாளிகள் அறியாதது அல்ல. ஆளும் வர்க்கத்துக்குத்தான் அதிகார போதை, கண்ணை மறைத்து நீதி நியாயங்களை காண முடியாமல் செய்துவிடும். ஆனால் அடித்தட்டு மக்கள், கடவுள் ! சாமி! பாவம்! பழி! என்கிற தர்மநியாங்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதால் வாக்களித்தபடி வாக்களிக்க வாய்ப்புண்டு. பல நேரங்களில் சாமி படங்களின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டும் பணம் தரப்படுவதுண்டு. 

இவ்வளவு விரிவான முறையில் பணபட்டுவாடா ஒரு பெரிய நெட் ஒர்க் ஆக நடைபெற்றது இதுவே முதல் முறை. இதன் வெற்றி தோல்வி இனி வரும் தேர்தல்களிலும் பயன்படுத்தப் படும் . ஜன நாயகம் என்கிற உயர்ந்த தத்துவம் என்கிற பூமாலை அதிகார போதை கொண்ட குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிவதை நடுநிலையாளர்களால் பார்த்து ஆதங்கப்பட மட்டுமே முடியும். 

இப்படிப் பட்ட ஜனநாயகக் கொடுமையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்தித்தால் சில எண்ணங்கள் அல்லது ஆசைகள் நமது மனங்களில் அரும்பு விடலாம். 

முதலாவது தேர்தல் ஆணையம் என்கிற வண்ணாத்தி பூச்சியின் வாழ்வு காலம் ஒரு தேர்தல் முதல் அடுத்த தேர்தல் வரை என்கிற சட்ட திருத்தம் வேண்டும். 

முக்கியமாக சட்ட ஒழுங்குப் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் மாநில காவல்துறையை நம்பி இருக்கும் நிலை மாற்றப் பட வேண்டும் .

அதே ரீதியில், தேர்தல் விதிகளின் நடைமுறைக் காலத்தில் மாநில அரசுக்கு உட்பட்ட நிர்வாகிகளைப் பயன்படுத்தும் முறைகள் மாற்றப்பட வேண்டும். உதாரணமாக, வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவோர் அதே மாநில அரசின் ஊழியர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து ஊழியர்களைக் கொண்டுவரலாம். 

தேர்தல் என்றால் எப்படியாவது அந்தத் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால் போதும் என்கிற மனோநிலையில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது. காரணம் ஒரே தலைமை தேர்தல் ஆணையர் எல்லாவகையானப பணிகளையும் கவனிக்க இயலவில்லை. மத்தியில் இருப்பது போல் மாநிலங்களிலும் இரண்டு மூன்று தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் படலாம். ஒரே தலைமை தேர்தல் ஆணையரால் தனது சொந்த விருப்பங்களை மீறி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை -எடுக்கவில்லை என்பதே கடந்தகாலம் கற்றுத்தந்த வருத்தமான குறைபாடு. ஒரு சார்பாக தேர்தல் ஆணையம் நடக்கிறது என்கிற குறைபாட்டை இதன் மூலம் களைந்து தேர்தல் ஆணையம் தனது பத்தினித் தனத்தை நிருபிக்க முடியும். 

தேர்தல் பரப்புரைக்கான காலத்தை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தொடங்குவதை தடை செய்து வாக்குப் பதிவு நடைபெற ஒரு வார காலம் முன்புதான் அரசியல் கட்சிகள் பரப்புரையைத் தொடங்க வேண்டுமென்ற விதியை அமுல் படுத்த வேண்டுமென்றும் இதனால் அரசியல் கட்சிகள் செய்யும் செலவையும் அத்துமீறல்களின் அளவையும் கட்டுப்படுத்த உதவுமென்று சில சமூக நலவிரும்பிகள் ஆலோசனை தருகிறார்கள். 

மேலும், இன்னொரு ஆலோசனையும் சமூக அரசியல்வாதிகளால் எடுத்து வைக்கப்படுகிறது. பரப்புரை செலவுகளை அரசே ஏற்று ஒரே மாதிரியாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டுமென்றும் இதனால் கூடுதல் குறைவான சமத்துவமற்ற பிரச்சார செலவுகள் குறையுமென்றும் ஒரு கருத்து வைக்கப்படுகிறது. தேர்தல்களில் பணம் பெருமளவு விளையாடுவதையும் – கறுப்புப் பணம் பெருமளவு அங்கம் வகிப்பதையும் இந்த முறை கட்டுப் படுத்துமென்று அந்தக் கருத்து வலியுறுத்துகிறது. 

தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டால் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சட்டபூர்வமான சகல பாதுகாப்பும் வழங்குவதற்கும் பணம் கொடுத்த அல்லது பணம் கொடுக்க முயற்சித்த வேட்பாளரை போட்டியிலிருந்து உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுமென்றும் தேர்தல் ஆணையம் தனது விதிமுறைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் . இப்படி ஒன்றிரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யபட்டால் அதன் மூலம் மற்றவர்களுக்கு அச்சமுண்டாக வாய்ப்புண்டு. அதை விட்டுவிட்டு தேர்தல் ஒழுங்காக நடைபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு விடுகிறது. ஆனால் இன்னொரு புறமோ தேர்தல் நடந்த ஒரே நாளில் 248 முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அதே தேர்தல் ஆணையம்தான் சொல்கிறது. மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது ஆனால் இத்தனை புகார்கள் வந்தன என்று சொல்வது உடல் முழுதும் அடி ஆனால் உயிர் போகவில்லை என்று சொல்வது போலத்தான் தெரிகிறது. 

இப்போதுள்ள நடை முறையில் , தேர்தல்களின் ரிடர்நிங்க் ஆபீசர் என்கிற மாவட்ட தேர்தல் அதிகாரியின் தலைமைப் பொறுப்பு , அந்தந்த மாவட்ட ஆட்சித்த் தலைவர்கள் இடம் வழங்கப் பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனைவரும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே . அதே போல் மாவட்ட காவல்துறைத் தலைவர்களும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டுமல ஆட்சியாளரின் கடைக்கண் பார்வைக்கு காத்து இருப்பவர்களே. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டில் இவர்கள் எல்லாம் பணியாற்றுவது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆணைகளுக்கே உண்மையில் கட்டுப் பட்டவர்கள் ஆவார்கள். ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யும் தன்மை கொண்டவர்களே. இதை மறுக்கவே இயலாது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொண்டு கடமை நேர்மை என்று வசனம் பேசினால் பிறகு அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவதிகளுக்குள்ளாக நேரிடும் என்பது ஐ ஏ எஸ், ஐ பி எஸ் படித்திருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியும். ஆகவே , தேர்தல் நேரத் தில்லுமுல்லுகளை உண்மையிலேயே ஒழிக்கவேண்டுமென்று தேர்தல் ஆணையம் நினைத்தால் ரிடர்நிங்க் ஆபீசர் மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற பொறுப்புக்களுக்கான அதிகாரிகளை இனி வரும் காலங்களில் தேர்தல் ஆணையமே தனது சொந்த அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டும். மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் அதிகாரிகளை இப்பொறுப்புக்களில் ஈடுபடுத்துவது நண்டைச் சுட்டு நரிக்கு வைப்பதற்கு ஒப்பானது. இதற்காக தேர்தல் ஆணையம் தனது மனித வளத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

ஆக, பெருமளவில் ஒரு பெரிய தேர்தலில் ஜனநாயக செயல்பாடுகளை அர்த்தமற்றதாக ஆக்க ஒரு முயற்சி நடந்து இருக்கிறது. மக்கள் இதை எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்.

ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு உலகப் புகழ் பெற்ற விளக்கம் ஒன்றைச் சொன்னார் என்பது நமக்குத் தெரியும் 

“Democracy is of the people, for the people and by the people “ என்பதே லிங்கனின் வாக்கு. அதாவது ஜனநாயகம் என்பது மக்களுடைய ஆட்சி , மக்களால் , மக்களுக்காக என்பதாகும். ஆனால் இன்றோ அது !

“Democracy off the people far the people and to buy the people “ என்று நாம் மாற்றிப் படித்துக் கொள்ள வேண்டிய நிலைமைகள்தான் உருவாகி ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த இலட்சியம் உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டில் கேலிக் கூத்தாக மாறிக் கொண்டு இருக்கிறது. 

அதிரைநிருபர் பதிப்பகம்

19 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

நடந்து முடிந்ததேர்தலில் எனக்கு ரூபாய் 500 நட்டம்.என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை?

sabeer.abushahruk said...

கையிலே காசு வாயில தோசை என்னும் பிரசித்தி பெற்ற கோட்பாடு நினைவுக்கு வருகிறது.

adiraimansoor said...

யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் ஏமாலியானேன்


அழகைக் காட்டும் கண்ணாடிஅடுத்தவர்
மனதைக் காட்டக் கூடாதோ
ஓட்டு கேட்டு வரும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ

வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு

யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம்

adiraimansoor said...

கன்னதாசனின் வரிகள் என்னமா பொருந்துது பாருங்க
நாட்டை காப்பதற்கா இவர்கள் பல ஆயிரம் கோடி செலவழிக்கின்றனர்
நாட்டை சுரண்டுவதற்காகத்தான் என்பது நம் இன மக்களுக்கு இன்னும் விளங்காமல் இருப்பது ஏமாளித்தனமே
சுதந்திரம் என்ற பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அராஜகம்
கொஞ்ச நஞ்சமல்ல நாடு எங்கே உருப்பட
நாட்டுமக்கள் எங்கே நிம்மதியாக வாழ
இவர்கள் யாவரும் அரசியல் வாதிகள் அல்ல
பகல் கொள்ளையர்கள? ஏதூ ஈவாள்வி
ஒரு ருபாய் சம்பளம் வாங்குவதாக காட்டியவர்களுக்கு பல ஆயிரம் கோடி வாரி இறைப்பதற்கு எங்கிருந்து வந்தது
கள்ள நோட்ட அச்சடித்தார்களா? ஏது இவ்வளவு பணம் வருவாய் துறை தூங்குகின்றதா
உளவுத்துறை இருந்து என்ன பயன்
இப்படி வீன் விரயம்செய்யும் வரிப்பணத்தை கொண்டு
எத்தனையோ நலத்திட்டங்களை அமுல் படுத்தலாமே
எல்லாம் நம் வரிப்பணம்
விஐ அணைத்தையும் நன்கு தெரிந்து கொண்டு இதுவரை நாட்டை சுரண்டியது போதாது இன்னும் நால்லா சுரண்டி சுவிஸ் பேங்ல போடுன்க என்று ஒவ்வொருத்தருக்கும் நாம் கொடி பிடிக்கின்றமே நம்மை செருப்பால அடிக்கனும்

இனி இந்த அரசியல் வாதிகள் உடுத்திருக்கும்
நம் உடையை கேட்பதற்குள்

ஒரு நிம்மதியான இடத்தை தேடுவோம்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

என்ன நினைத்து
இந்தியாவுக்கு........
சுதந்திரம் தந்தார்களோ
அவர்கள் கொடியவர்களே

Ebrahim Ansari said...

இத்தக் கட்டுரையை பலபேர் படிக்கவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா?

sheikdawoodmohamedfarook said...

இந்த கட்டுரையேபடிக்க வில்லையா?பிடிக்கவில்லையா?கட்டுபள்ளிதிருவிழா பிஸியில் ஜனநாயக திருவிழாஅடிபட்டுபோச்சு!

இப்னு அப்துல் ரஜாக் said...

//இத்தக் கட்டுரையை பலபேர் படிக்கவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா?//

இந்தியா பண நாயகமாக மாறிப் போனதால் உள்ள கோபமாக இருக்கலாம்.

Ebrahim Ansari said...

//திரைப்பட நட்சத்திரங்கள் எல்லாம் சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போல பேசிய பேச்சுக்கள்,//

இவர்களில் ஆர்த்தி என்கிற ஒரு நகைச்சுவை நடிகை பேசியது தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்து வைக்கப்படவேண்டியது. அவர் சொன்னார்

" அம்மா இந்தியாவின் பிரதமராக வந்தால் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சீனா வுக்குக் கூட ஏற்றுமதி செய்வார் "

மின்சாரம் என்பது அட்டைப் பெட்டியில் போட்டு அடைத்து கண்டெயினரில் பூட்டி கப்பலில் அனுப்புவது என்று எண்ணிக்கொண்டார் போலத் தெரிந்தது.

அது கூடப் பரவாயில்லை. அவரது இந்தப் பேச்சுக்குக் கிடைத்த கைதட்டல்களும் விசில் சத்தமும் நமது மக்களின் அறிவின் அடையாளங்களை இன்னமும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்ட இன்னொரு அறிஞர் குண்டு கல்யாணம்,

" அம்மா சொன்னால் மழை பொழியும். அம்மா நில் என்று சொன்னால் மழையும் நிற்கும் ".

எனக்குத் திருக்குறள் நினைவுக்கு வந்தது.

"தெய்வம் தொழாள் கொழுநன் தாழ் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை " .

sabeer.abushahruk said...

நடிக நடிகைகள் பேசியபோது எது விளங்கியதோ இல்லையோ இவர்கள் ஏன் கூத்தாடித் தொழிலுக்குப் போனார்கள் என்பதும்; கோமாளிகள் திரையில் மட்டுமல்ல நிசத்திலும் கோமாளிகளே என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

Ebrahim Ansari said...

ஆனாலும் குமரி முத்து என்ற நடிகர் பேச்சில் பழைய திமுகவின் வெற்றிகொண்டானின் வாடை அடித்தது. பல விஷயங்களை விபரமாகவே பேசினார். மற்றவர்கள் கூலிக்கு மாரடித்தார்கள்.

Shameed said...

எல்லாமே பணத்தை பேஸ் பண்ணிஇருப்பதால் இந்த ஓட்டுக்கும் வேட்டு வைக்குது இந்த பணம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மிகவும் ஒரு அற்புதமான அலசல், ஒரு முறையல்ல பலமுறை முறை வாசிக்க வேண்டிய அலசல்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் இன்றைக்கு ஏனோதானோ என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்படலாம், நாளை நிச்சயம் இந்த விஷயங்கள் விஷ்வரூபம் எடுக்கும் இங்கிருந்தும் எடுத்தாளப்படும் !

//ஒரே தலைமை தேர்தல் ஆணையர் எல்லாவகையானப பணிகளையும் கவனிக்க இயலவில்லை. மத்தியில் இருப்பது போல் மாநிலங்களிலும் இரண்டு மூன்று தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் படலாம். ஒரே தலைமை தேர்தல் ஆணையரால் தனது சொந்த விருப்பங்களை மீறி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை -எடுக்கவில்லை என்பதே கடந்தகாலம் கற்றுத்தந்த வருத்தமான குறைபாடு. ஒரு சார்பாக தேர்தல் ஆணையம் நடக்கிறது என்கிற குறைபாட்டை இதன் மூலம் களைந்து தேர்தல் ஆணையம் தனது பத்தினித் தனத்தை நிருபிக்க முடியும்.//

மேற்சொன்ன சுட்டல் எனது எண்ணத்தில் தோன்றியதை அப்படியே பதிக்கப்பட்டிருக்கிறது !

எழுத்திற்கான ஒவ்வொரு உழைப்பும், விரையம் ஆவதே இல்லை... இந்த பதிவிலிருந்து இதுவரை 7 தளங்களில் பகிரப்பட்டு இருக்கிறது, இன்னும் தேர்தலில் சனநாயகம் தேடுவோருக்கு இது ஒரு காட்டாக அமையும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தேர்தலிலும் பரப்புரையில் ஈடுபட்டவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர ஏராளமானோர் கீழ்தரமாகவும், அசிங்கங்களை அள்ளித் தெளித்த வர்களாகவுமே செயல்பட்டனர்.

பிரதம வேட்பளார் பிரம்மையோடு வளம் வர வைத்திருக்கும் மோடி யின் "இஞ்ச் " பேச்சு அடிமட்ட தரம் தாழ்ந்த அரசியல்வாதி !

Ebrahim Ansari said...

//இதுவரை 7 தளங்களில் பகிரப்பட்டு இருக்கிறது,//

Fine.

Ebrahim Ansari said...

// நடந்து முடிந்ததேர்தலில் எனக்கு ரூபாய் 500 நட்டம்//

மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கு,

நாடே நஷ்டமாகிக் கொண்டு இருக்கிறது . எதிர்காலம் இருட்டாகவே தெரிகிறது. எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் வழக்கம் நாட்டை எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.

Ebrahim Ansari said...

தம்பி மன்சூரின் பின்னூட்டம் விரக்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டதே! ரிலாக்ஸ் ப்ளீஸ்.

உங்களுக்கு இரு கோடுகள் தத்துவம் தெரியுமா?

sheikdawoodmohamedfarook said...

அதிராம்பட்டினத்து முஸ்லிகள் நமக்கேபோடுவார்கள்என்பதாலும்உள் கட்சி பிரச்சனையாலும் வந்த கட்டுகளை சொந்தக்கட்கட்டாக சுருட்டிகொண் டதாகசெய்தி உலாவருகிறது. கட்சி V.I,பி யாரும் மனம்வைத்து வேலை செய்யவில்லை யாம்.வாக்குஎண்ணிக்கைமுடிந்ததும் நோக்-அவுட்/வாக்அவுட்நடக்குமென்று பத்திரிக்கை செய்தி வந்தது'மாநிலத்தைஆளும்கட்சி அதிகம் வருமெனஎதிர்பார்ப்பு'பணத்தைபணம்என்றுபார்க்காமல்பாரிவள்ளல்பரம்பரைபோல் வாரிஇரைத்ததோடு வேலையும்செய்தார்கள்
.இனிவீல்ஷேர்கட்சியே தள்ள யாருக்கும் வில் இருக்காதுபோல் தெரிகிறது.

sheikdawoodmohamedfarook said...

வீல்ஷேர் கட்சிக்கு உட்கட்சி பூசல்அதிகம்.சொந்தமே சொந்தகாசில் சூனியம் வைக்கிறது.கொள்ளிகட்டையால் முதுகை சொறிந்தது. ஓட்டப்பம் வீட்டைசுடும்:தன் வினைதன்னை சுடும்.பாலூட்டி வளர்த்த கிளி......''யெல்லாம் நடக்க போவுது.

அதிரை.மெய்சா said...

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் ஒன்று.
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்.

வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம்.

ஓட்டுப்போடுவது ஒவ்வொரு இந்தியரின் கடமை ஆகவே சிந்தாமல் சிதறாமல் உங்கள் ஓட்டை ஒழுங்காக சிந்தித்து பார்த்து ஓட்டளியுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு