Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
     
 பாங்கு கூறுதலின் சிறப்பு

''பாங்கு கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்து, பின்பு அதற்கு சீட்டுக் குலுக்கிப் போடாமல் அவர்கள் அதை அடைந்து கொள்ள முடியாது என்று இருந்தால், அதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். மேலும், (தொழுகைக்கு) விரைந்து செல்வதில் உள்ளதை அவர்கள் அறிந்து கொண்டால், அதன் பக்கம் முந்திச் செல்வார்கள். இஷாத் தொழுகையிலும், சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவ்விரண்டு தொழுகைக்கும் அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1033)

''பாங்கு கூறக்கூடியவர்கள், மறுமை நாளில் மக்களிலேயே கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள் ''என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: முஆவியா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1034)

''தொழுகைக்கு பாங்கு கூறப்பட்டால், பாங்கு கூறும் சப்தம் கேட்காத தூரம் வரை பின் துவாரத்தில் காற்றை வெளிப்படுத்தியவனாக ஷைத்தான் பின்னோக்கி ஓடுவான். பாங்கு கூறி முடித்து விட்டால் முன்னோக்கி வருவான். தொழுகைக்கு இகாமத் கூறி முடிக்கப்பட்டு விட்டால் முன்னோக்கி வருவான். இறுதியாக, ஒரு மனிதரின் உள்ளத்தில் இதற்கு முன் நினைத்திராதவற்றை, இதை நினை. அதை நினை எனக் கூறுவான். கடைசியில், அவர் எத்தனை தொழுதார் என்பதை அந்த மனிதர் அறியாதவராக ஆகிவிடுகிறார்'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1036)

''பாங்கை நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் போல் கூறுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1038)

''பாங்கு கூறுவதைக் கேட்ட ஒருவர், அல்லாஹும்ம ரப்ப ஹாஃதிஹித் தாமத்தி, வஸ்ஸலாதில் காஇமத்தி, ஆதி முஹம்மதனில் வஸீலத்த, வல்ஃபழீலத்த, வப்அஸ்ஹுமகாமன் மஹ்மூதன் அல்லஃதீ வஅத்தஹு'' என்று கூறினால், மறுமை நாளில் என் பரிந்துரை அவருக்கு கடமையாகி விட்டது என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

இறைவா! முழுமையான இந்த அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரிய  இறைவா ! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ''வஸீலா தகுதியையும், சிறப்பையும் வழங்குவாயாக!  நீ வாக்குறுதி அளித்த '' மகாமன் மஹ்மூத்'' எனும் புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1039)

''பாங்கு கூறுபவரின் பாங்கை கேட்டவர், அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹுலாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு, ரழீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரஸுலன், வபில் இஸ்லாமி தீனன்'' என்று கூறினால் அவரின் குற்றங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாளன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது(ஸல்) அவர்களை தூதராகவும், இஸ்லாமை மார்க்கமாகவும் நான் திருப்தியுடன் ஏற்றுக் கொண்டேன்.(அறிவிப்பவர்: ஸயீத் இப்னு அபீவகாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1040)

''பாங்கும், இகாமத்திற்குமிடையே கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1041)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று அவர்களிடம்  வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர். (98:1)

இவர் அல்லாஹ்வின் தூதரவார். தூய்மையான ஏடுகளைக் கூறுகிறார். (98:2)

அதில் நேரான சட்டங்கள் உள்ளன. (98:3)

வேதம் கொடுக்கப்பட்டோர் தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை. (98:4)

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை  நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (98:5)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அவர்களே படைப்புகளில்  மிகவும் கெட்டவர்கள். (98:6)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (98:7)

அவர்கள் இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.  அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது. (98:1)
(அல்குர்ஆன்: 98:1 - 8 அல்பய்யினா -தெளிவான சான்று )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

அதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2016 | , , ,


நோம்பு  முடிந்து சங்கை மிகு ஈகைப் பெருநாள் துவங்கும் விளிம்பில் (அதிரையில்) இருக்கும் நாம், இந்த நோம்பு காலங்களில் இரவு தொழுகைகளிலும் பகல் நேரங்களில் குர்ஆன் ஓதியும் சிறப்புடன் கழித்த அத்தனை அனபர்களுக்கும் அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக!

இது ஒரு ஃப்ளாஸ்பேக்...: (இரண்டு கண்ணுக்கு நடுவில் வட்டம் வட்டமாக சுழல்வது போன்று கற்பனைகள் வந்தால் அது விளம்பரதாரர் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்)

35 வருடங்களுக்கு முன் பெருநாட்களில் ஒரு பெருநாளை சுற்றியே எமது நினைவலைகள் பின்னோக்கி செல்கிறது.... ! (ஈஸ்மண்ட் கலரில் தெரியவில்லை என்றால் கலர் பேப்பர் ஒட்டிய பிளாஸ்டிக் கண்ணாடி பெருநாள் அன்று மாலைக் கடைகளில் வாங்கி போட்டுக் கொண்டால் நல்லது).


பெரியவர்களெல்லாம் "பிறையை கண்டாச்சா இல்லையா, அது கண்ட இடம் எந்த இடம்" என்ற கேள்வியோடு மரைக்காப் பள்ளியில் ஒன்று கூடுவர். எங்களைப் போல் உள்ள சிறுவர்களுக்கு ஏக்கமெல்லாம் நாளை வைக்கப் போகும் பெருநாள் ஸ்டால் மற்றும் சர்பத் கடை பற்றிய சிந்தனையே!

வீடு வீடாய்ப்போய் சர்பத் பாட்டிலை கண்டெடுத்து செக்கடிக் குளத்திலே கழுவியெடுத்து நானும் சித்தீக்கும் ஆளுக்கு ஒன்றரை ரூபா முதலில் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவோம். சீனியோடு வியாபார யுக்திக்காக சாக்ரீனும் ஜப்ஜா விதையும் பிசின் மற்றும் கலர் பவ்டர் இதுதான் கச்சாப் பொருளாகும். அடுத்து  அணிகுண்டு தயார் செய்ய சக்கரையும் பொட்டுக் கடலையும் வாங்கி சக்கரையை பாகாக்கி பொட்டுக் கடலையை அதனுள் இட்டு கிண்டினால் அணிகுண்டு தயார். தினத்தந்தி பேப்பரை சதுரமாய்க் கிழித்து அதை சிறு சிறு அணிகுண்டாக்கி உருட்டி விற்பனைக்கு தயார்படுத்திடுவோம்.

அடுத்து அரை லிட்டர் பால் வாங்கி காய்ச்சி 4- 5 வீடேறி ஒரமோரு வாங்கி வந்து அதை தயிராக்கி எங்க வீட்டு நீச்சோற்றை பிசைந்து வடிகட்டி அத்தோடு நீர் சேர்த்து விட்டால் எங்கள் ஐஸ் மோர் ரெடி. (மோர் தயாரித்த தந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு சொன்ன சித்தீக் இங்கே மன்னிக்கனும்) 

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர்....

தக்பீர் முழக்கம் ஒலிபெருக்கியில் தொடரும் அழகிய ஓசை….

விடிந்தது பொழுது...
பெருநாள் வந்தது…

மரக்கட்டிலை துடைத்தெடுத்து கடை பரத்த தயாராவோம். பாட்டிலில் கலர் கலராய் தண்ணீர் ஊற்றி வரிசையாய் அடுக்கி வைத்து அனிகுண்டும் ஐஸ் மோரும் அத்தோடு கொத்து மாங்காய், கடலை மிட்டாய் வரிசையாய் அடுக்கி வைத்து வியாபாரத்தை ஆரம்பிப்போம் .

அப்போதெல்லாம் பணக்கார வீட்டுப் பையன் (!!?) வந்துதான் முதல் போணியை ஆரம்பிப்பான். 

“காக்கா ஒரு சர்பத் ரெண்டு கடலை மிட்டாய்.”

புத்தம் புது ரென்டு ரூபா நோட்டை நீட்ட “சில்லரை இல்லையடா!!” என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு.

“அப்புறம் வா” என்று அனுப்பி வைப்போம்.

அடுத்த கஸ்டமர் எல்லாமே சிறுசுங்க தானே வந்து நின்று அனிகுண்டு ரெண்டு பேட்பான். 3 பத்து பைசா என்று 3 கொடுத்திடவே !!! வியாராபரம் சூடு பிடிக்கும். வாங்கிய அனிகுண்டை பிரிப்பதற்குள் எங்க கஸ்டமருங்க படும் திண்டாட்டம் தான் (ஹைலெட்டே !). தினத்தந்தி பேப்பரோடு அனிக்குண்டும் ஐக்கியமாகிவிட பாதி பேப்பர் பிரித்தெடுக்க, மீதி அதோடு ஒட்டியிருக்க கொடுத்த காசு வீணாப் போகுதுன்னு அப்படியே சாப்பிடுவர் எங்கள் வாடிக்கையாளர்கள்.?!?! (அப்போவெல்லாம் கன்ஸூமர் கோர்ட் எல்லாம் இல்லேய்ய்ய்ங்கோ)

முதல் போனி கஸ்டமரான பனக்கார வீட்டுப் பையன் வந்துவிட...

“காக்கா மீதி காசு???” என்று கேட்டு நிப்பான். 

“தம்பி சில்லரை இன்னும் சேரவில்லை” என்று சொல்லி மீண்டும் ரெண்டு க்ளாஸ் சர்பத் கொடுக்கப்படும்!!!


மணி 10 வெயிலும் சூடு பிடிக்க ஐஸ் மோர் விற்பனையும் சூடு பிடிக்கும் 12 மணிக்கெல்லாம் விற்று தீரும். மறுபடியும் தயார் செய்ய  வீடு தேடி ஓடிடுவோம் நீச்சோரு பானையை நோக்கி!!! "இப்பத்தான் கொறத்தி வந்து வாங்கிப் போனாள்" என்று உம்மா சொல்ல உடனே உதயமாகும் அடுத்த யோசனை. நடுத்தெரு வெலக்காரியிடம் மோர் வாங்கி தண்ணீர் விட்டு இரட்டிப்பாய் மாற்றிவிட்டு விற்று பெருமிதம் கொள்வோம்.

அட ! வந்து விட்டான் நம்ம முதல் கஸ்டமர் பையன் மீதி காசு கேட்பதற்காகவே…

“நீ இன்னும் மோரே குடிக்கலையே இந்தா மோர்” என்று ரெண்டு க்ளாஸ் ஊற்றி அதீத சந்தோஷத்தோடு எங்களால் அவனுக்கு கொடுக்கப்பட முறைத்து விட்டு குடித்திடுவான். 

மறுபடியும் மீதி கேட்கையிலே...

"அப்புறம் வா"யென்று சொன்னால்..

"உம்மா திட்டுது" என்பான். 

"கவலைப்படாதே உம்மாவுக்கு ரெண்டு க்ளாஸ் சர்பத் பார்சல்" என்று (பார்சல்….) போடப்படும். 

“போங்கடா (….........)களா” என்று சொல்லி திட்டிவிட்டு ஓடியே போய் விடுவான்.

கம்பெனிக்கு(!!!) மிச்ச காசு உபரி(யாக) லாபம் !.

எங்களுக்கு போட்டியாளர்களே டாட்டாவும் பிர்லாவும் தான். அம்பானியெல்லாம் அதற்கு அப்புறம் தான்.

மு.செ.மு. சபீர் அகமது (திருப்பூர்)

மழை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2016 | , ,


சுவனத்திலிருந்து இறங்கி வரும் ஷவர்!

கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாகக் கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!

அத்துடன் நீர்த் துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!

சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்!

அதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான்! பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

ஆனால், "இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்" என்றான் தற்காலக் கவிஞன் அபுஷாஹ்ருக்! அதுவும் சரிதான். இங்கே, நம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா!

எல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:

வறண்ட பூமியை நோக்கித் தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களின் கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? (1)

அன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு(2) உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று உலகத் தூதர் (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்"
கடும் வெப்பத்தின்போது ஆறு, ஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறிக் காற்றுடன் கலந்து, ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன! அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தெந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி! அது ஏகன் இறைவனின் ஏற்பாடு!

“நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர்” (3)

மழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர் பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி, மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன!

பாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை! அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்துகொண்டது. வானம் பொய்த்துப் போனது!

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, யா ரசூலல்லாஹ்" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத்தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.

செங்கதிரோன் தன் பொன்னிறக் கதிர்களை, கீழ்வானத்தின் விளிம்பில் சிந்திநின்ற அன்று காலை, செம்மல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,

"மக்களே, நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக் காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்"

என்று கூறி தமது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ்! நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள். ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக!)

பின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையைக் கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத் தொழுகை'யைத் தொழுவித்தார்கள்.

அப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது. அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழை கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள், இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத் துவங்கியது!

மக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்" என்று உரைத்தார்கள். (4)

இதுபோல் மற்றொரு முறை மழை பெய்த சம்பவத்தில், மனிதகுலத்தின் மாணிக்கம் (ஸல்) அவர்கள், மற்ற மக்களைப் போல் மழை கண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள்! இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.

அந்த வெற்றி வேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன!

“அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு! எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள்! விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கின்றேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சைச் சுண்டியிழுக்கும் ராஜ கம்பீர அழகு! அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம்! ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு! அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான்! எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது! இறுதியாக, அந்தச் சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் தோன்றி நின்ற இந்த மண்ணகத்தின் வண்ணஒளி அண்ணல் நபியே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்!” என்றார், நபிமணி என்ற நந்தவனத்தில் பூத்த நற்குண மலர்களின் நறுமணத்தைச் சுவாசித்து மகிழும் பாக்கியம் பெற்ற நபித் தோழர்களுள் ஒருவரான ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி).(5)

அதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது! அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ்! பருவ மழை பொய்த்துவிட்டது! அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாறு வேண்டுங்கள்' என்றார்.

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அதில் மழை மேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மண்ணகத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக் கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.

உடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன! மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர் வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன! மழை என்றால் மழை! வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை! அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது. 

இந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே! இடைவிடாத தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன! எங்களின் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன! எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிறையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

அதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது! அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்த தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்! (6)

‘தங்களின் துஆ'வை அப்படியே, அந்தக் கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது! எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி "அல்ஹம்துலில்லாஹ்" என்றனர்.

சற்று நேரத்தில், தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரிய தந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:

'இன்று என் பெரிய தந்தை அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்’ என்றார்கள்.' அப்போது, அங்கிருந்த அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத் தொடங்கினார்:

"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ, 
அவரால் வான்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்!
அதுமட்டுமின்றி,
அனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்! அந்த 
ஆதரவற்ற விதவைகளின் காவலனும் அவரேதான்!" (7)

இதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:

நான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் தம் தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)

இவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத் தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன! இன்னும் அந்த அருள் மழைத் துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன! அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன!

o o o 0 o o o
ஆதாரங்கள் :
(1) அல்குர்ஆன் 32:27
(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)
(3) அல்குர்ஆன்: 24:43
(4) அபூதாவூத் 992: அன்னை ஆயிஷா (ரலி)
(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)
(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)
(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)
(8) திர்மிதீ 3087: ஜாபிர் பின் சமுரா (ரலி)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்

அந்த திக் திக் நேரங்கள்... 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2016 | , ,


இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சந்தோசமான, சங்கடமான, பதட்டத்துடன் கூடிய இருதயம் படபடக்கும் திக், திக் நேரங்களை எப்படியேனும் சந்திக்காமல் இருப்பதில்லை. சிலருக்கு அவை ஆனந்தம் பொங்கக்கூடியதாகவும், சிலருக்கு அவை துக்கம் தொண்டையை அடைக்கக்கூடியதாக இருப்பதை காண முடியும். அவற்றுள் அறிந்த சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரசவத்திலும் கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நிமிடமும் அது ஆப்பரேசனா? சுகப்பிரசவமா? ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? தாயும், சேயும் எப்படி இருக்கின்றனர்? என ஒவ்வொருவருக்கும் இதயத்தின் திக், திக் ஓசை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
ஆண் குழந்தையானால் அது வளர்ந்து சுன்னத் செய்யும் பருவம் வந்ததும் அதற்கு அதனால் வரும் பயம் கலந்த திக், திக் அந்த குடும்பத்தையே தொற்றிக்கொள்ளும்.

பெண் குழந்தையானால் அது பருவம் அடையும் தருவாயில் அதன் பெற்றோருக்கு வரும் ஏதேச்சையான திக், திக் அந்த குடும்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும்.

ஆண், பெண் பிள்ளைகளை ஆரம்ப பள்ளி அனுப்பும் பொழுது பள்ளி செல்லும் முதல் நாள் வரும் பயம் கலந்த திக், திக் நாளடைவில் பள்ளிக்கட்டணம் செலுத்தும் நாளை எண்ணி பக், பக் வென மாறிப்போகும்.

அமைதியாய் இருக்கும் பரிட்சை அறையில் வினாத்தாள் வாங்கும் சமயம் படித்த கேள்விகளா? அல்லது படிக்காதது வந்து விட்டதா? என அதை பார்க்காமலேயே திக், திக் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பரவத்தொடங்கும்.

பரிட்சைகளெல்லாம் எழுதிய பின் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் பொழுது அவரவருக்கு எதிர்பார்ப்பிற்கேற்ப திக், திக் ஓசை ஓயாமல் அடிக்கத்தொடங்கும்.

பள்ளி, கல்லூரி மாணவ பருவத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருப்பின் அதை செய்தது யார்? என ஆசிரியர்களால் விசாரணை துவங்கும் சமயம் திக், திக் தானாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு இதயத்தில் ஆனாகிவிடும்.

அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என அமைதியாய் இருந்து வரும் ஊரில் திடீரென ஒரு மூலையில் வெடிக்கும் கலவரம், குழப்பத்தால் ஒட்டு மொத்த ஊரினருக்கும் திக், திக் சூழ்நிலையை ஏற்படுத்தும்.

முதன் முதலில் அயல்நாடுகள் செல்வோருக்கு விசா, விமான டிக்கெட் ஏற்பாடுகள் ஆகி விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுதும், வரிசையில் ஒவ்வொருவராக குடியுரிமை அதிகாரிகளின் முன் சென்று நிற்கும் பொழுதும் நாம் குற்றமேதும் செய்யாமல் அப்பாவியாக இருந்தும் இதயத்தில் திக், திக் தீயாய் பற்றிக்கொள்ளும்.

வருடங்கள் சில கழித்து அயல்நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பி சென்று தாய், தந்தையரை, உற்றார், உறவினரை, சொந்த, பந்தங்களை பார்க்க ஊர் திரும்பும் வேளையிலும், கொண்டு செல்லும் சாமான்களுக்கு கூடுதல் லக்கேஜ் ஏதேனும் வந்து விடாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு அசைவிலும் திக், திக் அடிக்காமல் யாரும் ஊர் திரும்புவதில்லை.

வீட்டினரால் திருமண ஏற்பாடாகி அந்த அரிய தருணம் நெருங்கும் வேளையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும், இறுதியாக மணமேடையில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்கள், பெரியவர்களின், குடும்பத்தினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும் என்ன தான் நாம் உடல் பலசாலியாக இருந்து சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் இதய பேஸ்மெண்ட் திக், திக் என கொஞ்சம் ஆட ஆரம்பித்து விடும்.  

நன்கு படித்து முடித்து உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ ஒரு நல்ல வேலைவாய்ப்பு தேட நேர்முக தேர்விற்காக அழைக்கப்பட்டு உரிய இடம் சென்றடைந்து நேர்முக தேர்வு நடத்தும் அதிகாரியால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தக்க பதில் அளித்து திரும்பும் வரை திக், திக் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

அரசு பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பரபரப்புடன் கூடிய திக், திக் திசையெல்லாம் பரவிக்கிடக்கும்.

பணியிடங்களில் மேலதிகாரிகளால் ஏதேச்சையாக சந்திக்க அழைக்கப்படும் பொழுது எதற்கென்றே தெரியாமல் திக், திக்கும் கூடவே சேர்ந்து வரும்.

விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போகும் பொழுது உள்ளத்தில் திக், திக் நிரம்பிக்கிடக்கும்.

நாம் நேசிக்கும் சிலர் திடீரென இவ்வுலகை விட்டுப்பிரியும் பொழுது அதைக்கேட்கும் சமயம் மனவேதனையுடன் செய்வதறியாது திகைக்கும் சமயம் உள்ளத்தில் திக், திக் குடிகொள்ளும்.

வீட்டினர்களுக்கு திடீரென சுகக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயமோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும் சமயமோ பரிதவிக்கும் உள்ளத்தில் திக், திக் வந்து பாய் விரித்து படுத்துக்கொள்ளும்.

மரண தண்டணைக்கைதிகளின் மரண தண்டணை நிறைவேற்றப்படும் சில மணித்துளிகளுக்கு முன்னர் அவர்களின் இதயம் திக், திக்கால் எப்படி திண்டாடி இருக்கும் என அவர்களையும், நம்மை படைத்த அந்த இறைவனுக்கே நன்கு விளங்கும்.

உலகில் பெரும் குற்றங்களுக்கு தண்டணை இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களால்  நிறைவேற்ற கட்டளையிடப்பட்டிருக்கும் இறைவன் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மன்னித்தால் அந்த தண்டணையிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவிக்கலாம் எனவும் தெளிவுர நமக்கு என்றோ தெரிவித்துவிட்டான் இறைவன். எனவே குற்றத்திற்காக தண்டிக்கும், மன்னிக்கும் இரு பெரும் பொறுப்புகளைப்பெற்றிருக்கும் மனிதர்களாகிய நாம் அந்த ஏழைப்பெண் ரிஸானா நஃபீக்கை அவள் குடும்ப ஏழ்மை கருதி அப்படியே அவள் தவறு செய்திருப்பினும் மன்னித்து விட்டு உலக இஸ்லாமிய எதிரிகளின் வாய்களை அடைத்திருக்கலாமே? அதனால் இறைப்பொருத்தத்தை நிரம்பப்பெற்றிருக்கலாமே? அரபு நாட்டவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் என உண்மைநிலையறியாது உளரும் ஊடகங்களுக்கும் பாலைவனத்திலும் நறுமணம் வீசும் ரோஜாக்கள் அன்று முதல் இன்று வரை மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என  அந்த பாதிக்கப்பட்ட அரபுக்குடும்பம் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உலகுக்கு எடுத்துரைத்திருக்கலாமே? என்ற துக்கம் கலந்த ஏக்கம் நம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை.

திடீரென நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சவுதியில் தண்டணை நிறைவேற்றப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த இலங்கைப்பெண் ரிஸானா நஃபீக்கின் ஞாபகமும், அவர் பெற்றோரின் துக்கம் தொண்டையை அடைக்கும் பேட்டியும் பார்த்தபின் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிரிச்சி. அதற்கு பின் எனக்கு தூக்கத்தை தொடர இயலாமல் போய் காலையில் எப்பொழுதும் போல் எழும்பி வழக்கம் போல் பணிக்கு வந்து விட்டேன். அதன் தாக்கமே இந்த ஆக்கம் எழுத வித்திட்டது.

இது எதோ ஒரு இஸ்லாமியப்பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்டுவிட்டதால் நமக்கு வந்த பச்சாதாபமும், இரக்கமும், பரிவும் அல்ல. உலகில் எந்த மூலையிலும் மனிதனாய் பிறந்த எவருக்கும் வேதனை தரும் நிகழ்வுகளும், அநீதியும் இழைக்கப்படக்கூடாது என்பதே மார்க்கம் போதிக்கும் நம் விருப்பமும், ஆசையுமாகும். அதை சரிவர உலக ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லையெனில் அது அவர்களின் தவறேயன்றி அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது.

சமீபத்தில் நம் வடக்கு எல்லையை பாதுகாத்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் இருவர் (பாக்கிஸ்தான் ராணுவத்தாலோ அல்லது இரு நாட்டு எல்லையின் சீர்கேட்டை என்றுமே விரும்பும் சில அயோக்கிய பிரிவினைவாதிகளாலோ) கொல்லப்பட்டு அதில் ஒரு வீரனுடைய தலை துண்டிக்கப்பட்டு வெறும் முண்டம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு யாரும் ஒரு போதும் வக்காலத்து வாங்க இயலாது. அந்த வீரனின் தலை கிடைக்காமல் அவர் முண்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் பெற்றோர்கள் மேற்கொண்ட ஆக வேண்டிய சடங்குகள் அவர்கள் நம்பிக்கைப்படி செய்ய இயலாமல் வேதனையில் தவித்து வருவதால் வரும் வலியை வெளியிலிருந்து யாரும் அந்தளவுக்கு உணர்ந்து விட முடியாது. அவ்வளவு கொடுமையான வலி தன் மகனின் தலையை திருப்பித்தர கேட்டு நம் நாட்டு அரசிக்கு அவர்கள் கோரிக்கை வைத்து நிற்பது. கண்ணீருக்கு நிறமில்லை, வேதனைக்கு மதமில்லை, மார்க்கமில்லை. எனவே யாருடைய வேதனையையும் யாரும் கொச்சைப்படுத்த உலகில் யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அல்லாஹ் அந்த பெண்ணுக்கு மறுமையில் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக.... அவரின் பிரிவால் வாடும் அந்த ஏழைக்குடும்பத்திற்கு அவர் ஹயாத்தோடு இருக்கும் பொழுது என்ன வருமானம் கிடைத்ததோ அதை விட பன்மடங்கு அந்த குடும்பத்திற்கு நினையாப்புறத்திலிருந்து ஏற்படுத்திக்கொடுப்பாயாக....ஆமீன்.

இதுபோல் வாழ்வில் நாம் சந்திக்கும் எத்தனையோ திக், திக் நிகழ்வுகள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அதை பின்னூட்டம் மூலம் நீங்கள் தொடரலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

படுமுன் தெளிக! 34

அதிரைநிருபர் | September 25, 2016 | , ,

ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்போடு
ஓடிப்போனது...
பெற்றோருக் கிடை
வகுப்புக் கலவரம்!

போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!

குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்...
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!

கண்கள் வழி
கற்ற காதலும்...
காதலன் வழி
பெற்ற காமமும்...
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!

கண்மனியும் பொன்மனியும்...
காவியமும் ஓவியமும்...
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!

அவனுக்கு அவளும் -
அவளுக்கு அவனும் -
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்...

அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...
என -
மிகைத்த காதல்;

முடியாத இரவு...
விடியாத வானம்...
படியாத உரவு ...
உலர்ந்த மலர்வனம்...
உருகாத மேகம்...
என -
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!

ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!

முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!

சபீர்

உலகின் தலைசிறந்த பணக்காரர்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2016 | , ,

''நபி(ஸல்) அவர்கள் உபரியான (நபிலான) தொழுகைகளில் சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்களைவிட வேறு எதிலும் மிக உறுதியாக கடைபிடிப்பவர்களாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1101)

''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)

''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்''  (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை  ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108


அதிரைநிருபர் பதிப்பகம்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உளுச் செய்வதின் சிறப்பு
அல்லாஹ் கூறுகிறான் :

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் :  அல்மாயிதா - 5:6)   

"உளுவின் காரணமாக (கை, கால், முகம் ஆகியவை) பிரகாசமானவர்களாக என் சமுதாயத்தினர் மறுமையில் கொண்டு வரப்படுவார்கள். அந்த பிரகாசத்தை தனக்கு அதிகமாக்கிக் கொள்ள உங்களில் ஒருவர் சக்தி பெற்றால், அவர் (அதை) செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) கூறியதை  நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1024)
     
''மூஃமினின் ஆபரணங்கள், (மறுமையில்) உளுச் செய்த உறுப்புகள் முழுவதும் இருக்கும்'' என்று என் நேசர் நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1025)

''ஒருவர் அழகிய முறையில் உளுச் செய்தால், அவரின் உடலிருந்து அவரின் குற்றங்கள் வெளியேறி விடும். இறுதியாக அவரது நகக் கண்கள் கீழிலிருந்தும் வெளியேறும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1026)

''ஓரு முஸ்லிம் (அல்லது மூஃமின்) உளுச் செய்யும் போதும் தன் முகத்தைக் கழுவினால் அவரின் முகத்திலிருந்து. அவர் பார்த்த அனைத்து தவறுகளும் அவரின் கண்கள் வழியாக தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறிவிடும். அவர் தன் கைகளைக் கழுவினால், தன் கைகளால் பிடித்த அனைத்து தவறுகளும் அவரின் கைகள் வழியாக தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறி விடும். தன் கால்களை அவர் கழுவினால், அவரின் கால்கள் நடந்தது மூலம் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளும் தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறி விடும். இறுதியாக அவர், பாவங்களை விட்டும் தூய்மையானவராக வெளியேறுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1028)
     
''நபி(ஸல்) அவர்கள் மண்ணறைக்கு வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் தாரகவ்மின் மூஃமினீன் வஇன்னா இன்ஷாஅல்லாஹுபிகும் லாஹிகூன்'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் (இறை விசுவாசியான கூட்டத்தாரின் வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக அல்லாஹ் நாடினால் உங்களை நாங்கள் வந்து சேருவோம்) ''எங்களின் சகோதரர்களை நாங்கள் பார்ப்போம்'' என விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், ''இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களின் சகோதரர்களாக இல்லையா?'' என்று கேட்டார்கள். ''நீங்கள் என் தோழர்கள். நம் சகோதரர்கள் இதுவரை வரவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! உங்கள் சமுதாயத்தில் இதுவரை வராதவர்களை எப்படி அறிந்து கொள்வீர்கள்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,  ''கருப்பு நிறமுடைய குதிரைகளினூடே கை, கால், முகம் வெளுத்த குதிரை ஒன்று ஒருவருக்கு இருந்தால் அதை அவர் (எளிதாக) அறிந்து கொள்வார் என்பதை அறிவீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! ஆம்'' என்று கூறினார்கள். ''நிச்சயமாக (நம் சகோதரர்கள்) உளுவின் காரணமாக கை, கால், முகம் வெளுத்தவர்களாக வருவார்கள். நான் அவர்களுக்காக  ''ஹவ்ழ்'' எனும் தடாகத்தின் அருகே காத்திருப்பேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1029)

''ஓன்றின் மூலம் அல்லாஹ் குற்றங்களை அழிப்பான். பதவிகளை அதன் மூலம் உயர்த்துவான். அதை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி '' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். ''சிரமமான (குளிர்) நேரத்திலும் உளுவை முழுமையாகச் செய்தல், மேலும் பள்ளிவாசல் பக்கம் நடப்பதை அதிகப்படுத்துதல், மற்றும் ஒரு தொழுகைக்குப் பின் மறு தொழுகைக்காக எதிர்பார்த்திருத்தல் ஆகியவைகளாகும். இதுவே உங்களுக்கு வெற்றியாகும். உங்களுக்கு வெற்றியாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1030)
     
''சுத்தமாக இருப்பது, ஈமானில் ஒரு பாதியாகும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1031)

''உங்களில் ஒருவர் முழுமையாக உளுச் செய்த பின்பு, ''அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால், அவருக்கு சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு, அதில் தான் விரும்பிய வழியாக அவர் நுழையாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

''அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்; இல்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணையானவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது தூதராகவும் உள்ளார்கள் என்றும் சாட்சி கூறுகின்றேன். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1032)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:3)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! . ( அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:43)

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (அல்குர்ஆன் : அல்பகரா- அந்த மாடு-2:45)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்; என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். (அல்குர்ஆன் :அல்பகரா - அந்த மாடு -2:83)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.(அல்குர்ஆன் :அல்பகரா-அந்தமாடு- 2:110)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:153)

நிச்சயமாகத் தொழுகை வெட்கக்கேடான கரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் : அல் அன்கபூத் – 29:45)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

மூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2016 | , ,

அதிரைநிருபரின் மூன்றாம் கண் சுற்றிய இடங்களின் காட்சித் தொகுப்புகள்.


திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருந்தேன் உனக்காக.


நீரை பார்த்தாலே ஆனந்தம் அதுவும்  மழை பெய்தாலே பேரானந்தம்


என்னதான் கம்ப்யூட்டரில் கலர் மிக்ஸ் பண்ணினாலும் இயற்கையின் கலருக்கு ஒரு  தனி அழகுதான்


அருவிகளை கிட்டே இருந்து பார்த்தாலும் அழகுதான் எட்டி இருந்து பார்த்தாலும் அழகுதான்.

ஷாஹமீத்

படிக்கட்டுகள் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2016 | , , ,


மனிதனின் செயல்பாடுகளில் மாற்றம் , முன்னேற அல்லது உருப்படாமல் போக எப்படி நிகழ்கிறது என்ற மெக்கானிசம் புரிந்தால் எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் சாத்தியம் என்பது புரியும்.

முதலில் நமது எண்ணங்கள் நமது உணர்வுகளின் வழியாக ஒரு உருவாக உள் வாங்கப்படுகிறது. நாம் அன்றாடம் கேட்கும் விசயம், ருசிக்கும் உணவு , நுகரும் வாசனை , பார்க்கும் விசயங்கள் இவை எல்லாம் ஒரு மனிதனை ஃபார்மேட் செய்கிறது.

நடுக்கும் டோக்யோ குளிரில் கெட்டிச்சட்னியுடன் இட்லி கிடைக்குமா என்று அலைவது ஃபார்மேட் மாற முடியாமல் அடம் பிடிக்கும் கம்ப்யூட்டர் மாதிரி. புதிதாக சொல்லும் / அல்லது இன்ஸ்டால் செய்யப்படும் ப்ரோக்ராமை ஏற்றுக் கொள்ளாத சூழல்தான் மனிதனுக்கும். ஆனால் அதற்கான ஒரு பேட்ச் வொர்க் செய்து விட்டால் எப்படி கம்ப்யூட்டர் நம் இஷ்டப்படி அடுத்த சூழலுக்கு கொண்டு செல்ல முடியுமோ அது போல்தான் மனிதனின் ரிசல்ட்டும். உணர்வுகளின் மூலம் பதியப்படும் விசயங்கள் மேலோட்டமாக பதியப்பட்டு  சரியா / தவறா என சரி பார்க்கப்பட்டு ] பிறகு ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆழ்மனதில் பதியப்பட்டால் இனிமேல் அது தனது உடம்பின் செயலாக மாற்றம் அடையும் போது சரியான ரிசட்டை தரும்.

ஒரு சின்ன உதாரணம்... முன்பு நாம்  பரீட்சைக்கு எப்படி படித்தோம். பரீட்சை தேதி அறிவித்தவுடன்  நம் எண்ணம் முழுக்க அந்த தேதியை எத்தனை முறை நினைத்திருக்கும். பிறகு என்ன செய்தோம்... நம்மிடம் உள்ள வேடிக்கை விளையாட்டு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பாட புத்தகம்தான் எப்பொதும் பக்கத்தில். நம் உடம்பு நம் எண்ணத்துடன் ஒத்துழைத்தது. எவ்வளவு சோம்பல், உடல் நலக்குறைவையும் மனது ஏற்றுக் கொள்ளாததால் நமது ரிசல்ட்டை நோக்கியே நம் வாழ்க்கை அமைந்தது. 

அப்போது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்??. நம் வீட்டில் நடந்த முக்கிய தேவைகளை விட நம் முன்னேற்றமே முக்கியமாக இருந்தது. ஏனெனில் நம் சப் கான்சியஸ் மைன்ட் தெளிவாக பதியப்பட்டிருந்தது. எப்போது நமக்கு சந்தேகமும் / பயமும் நம்மை ஆட்கொள்கிறதோ. அப்போதே நாம் ரிசல்ட்டை சொதப்ப போகிறோம் என்பது உறுதி. இது பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதே விதிதான்.

இந்த விசயங்களை சரியாக புரிந்துகொள்ள இந்த படம் உதவும் என நினைக்கிறேன். 


உங்கள் உணர்வுகள் மூலம் பதியப்படும் விசயங்கள் உங்கள் முதல் மனதில் பதிந்து [ வடிகட்டி] பிறகு ஆழ்மனதில் பதியப்படும் விசயம் நடந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்கள் உடம்பின் உதவி கொண்டு நடந்து. இதுவரை நீங்கள் சாதித்தது அல்லது சாதிக்க தவறவிட்டது என்ற எல்லா விசயங்களும் நடந்து இருக்கிறது. இதில் உங்களின் நம்பிக்கை ரேகைகள்[ Belief Layers]  என்பது அவ்வளவு சீக்கிரம் அழிந்து போகாது [ கனவில் கூட நாம் பாம்பு , பல்லி சாப்பிட மாட்டோம் ] இதே நாம் சீனனாக பிறந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ " ஊர்வன' சமாச்சாரங்கள் ஸ்வாகா ஆகியிருக்கும். இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.

எனவே நம்பிக்கையை மாற்றி அமைக்கும் போது பல நடவடிக்கைகளில்  மாற்றம் ஏற்படுகிறது.
  1. இதுவரை நீங்கள் உங்கள் ஹெல்த் விசயங்களில் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள். ?
  2. பணம் [Money]  என்ற சக்தியில் உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறது?
  3. “உறவுகள்” [ Relationships]  என்ற விசயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது.?
  4. சமுதாயம் [society/ community]  பற்றி உங்களின் எண்ணம் / நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது?
  5. வாழ்க்கையில் எவ்வளவொ ரூல்டு / அன்ரூல்டு நோட்டு வாங்கி எழுதிவிட்டோம். இதை ஒவ்வொரு தலைப்பிலும் உங்கள் எண்ணத்தை எழுதிப்பாருங்கள். நீங்கள் எழுதிய படியே உங்கள் ரிசல்ட்டும் இருக்கும்.
பொதுவாக நம் பகுதி பெண்கள் சம்பாதிக்க போகாமல் இல்லத்தரசியாகவே இருக்கிறார்கள். சரி நாம் தான் பணம் சம்பாதிக்கும் வேலையெல்லாம் இல்லையே இது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கலாம். சம்பாதிக்காவிட்டாலும் மேலே சொன்ன அனைத்து விசயங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்பு இல்லாதவர்கள் ..குழந்தைகள் , புத்திசுவாதீனமில்லாதவர்கள் [முன்பு ஞானிகளும் இதில் இருந்தார்கள், இப்போது ஞானிகளப்பற்றி சரியாக ஸ்கேன் செய்யாமல் எதுவும் எழுத முடியவில்லை.]

அவநம்பிக்கையுடன் எதையும் அனுகாதீர்கள்.

இதுவரை பணம் சம்பாதிப்பது என்ற விசயத்தில் என்ன உங்கள் எண்ணமோ அவ்வாறாகவே உங்கள் ரிசல்ட்டும் இருந்திருக்கும். நீங்கள் கடனை அடைக்கவும் , மாதாந்திர செலவுக்காகத்தான் இப்படி பாடுபடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. உங்கள் ரிசல்ட் = பாடுபடுவீர்கள், மாதாந்திர செலவு ஏதோ  சரிவரும். கடன் அப்பப்ப மேலே கீழே போய்வரும். ஏனெனில் நீங்கள் அட்ராக்ட் செய்வது சுத்தமான அக்மார்க் நெகடிவ் எனர்ஜி. இதையே ஏன் நீங்கள் சுபிட்சமாக சிந்திக்கமுடியாமல் போனது.

சாதித்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழலில்தான்  “நான் நிமிர்ந்து நிற்பேன் என்ற உத்வேகமே பிறக்கிறது. எந்த சூழலிலும் அவர்கள் தன்மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை... நீங்கள் எப்படி?

யாரையும் பார்த்தவுடன் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒப்பிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்?.

சிலர் மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினாலே அதற்கும் ஹார்ட்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். ஹார்ட் ரேட்டை அதிகரிக்கும் எல்லா விசயங்களுக்கும் அதை சமன்செய்ய நுரையீரலின் அதீத செயல்தேவை என்பது இயற்கை.

சிலர் கொஞ்சம் அதிகம் நடந்தால் வரும் மூட்டுவலிக்கு தனக்கு வயதாகிவிட்டது...ஆர்த்ரைட்டிஸ்..என்று ஏதாவது 'மருத்துவ சிறப்பிதழ்" என்று கண்ட ஆஸ்பத்திரிகள் விளம்பரம் செய்யும் வார இதழ்களை படித்து விட்டு தனக்கு அதில் சொன்ன நோயெல்லம் இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.

இதில் ஏன் உங்கள் எண்ணம் அவநம்பிக்கையில் சிக்கி கிடக்கிறது. 80 வயதிலும் என்னால் முடியும் என்று எவ்வளவொ பேர் உலகத்தில் சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை இல்லை. நீங்கள் எப்படி? . 

இப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண்னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும். முதலில் ரிசல்ட்டை மாற்ற எப்படி உங்கள் எண்ணம் / நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதிந்தது என்ற விசயம் தெரிந்தால் தேவையில்லாததை தூக்கி எறிவது மிக எளிது.

இதை இன்னும் சரியாக செய்ய இந்த விசயங்களை நீங்கள் படித்து விட்டு போகாமல் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் எழுதிப்பார்த்தால் நீங்கள் எந்த விசயங்களில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கே தோன்றும். நான் இதை எனக்காக 18 வருடங்களுக்கு முன் செய்தேன்.

வாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லம் இன்னும் எந்த லேபரட்டரியும் இதுவரை இல்லை.

இந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன். அதனால் நிறைய எழுதவில்லை. சரியாக புரிந்து கொண்டால் மனசு லேசாகும் என்பது மட்டும் உறுதி.

ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு