Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
     
''இந்தக் குர்ஆனை (அடிக்கடி ஓதி) பாதுகாத்துக் கொள்ளுங்கள். முஹம்மதின் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டப்பட்டுள்ள ஒட்டகம் அறுத்துக் கொண்டு ஓடுவது போல் அது வெகு சீக்கிரமாக (ஓதாமல் இருந்தால்) ஓடிவிடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1002)

''குர்ஆனைத் தெரிந்தவருக்கு உதாரணம், கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகையின் உதாரணம் போலாகும்.அவர் அதைப் பேணி பாதுகாத்துக் கொண்டால், அதை தன்னிடம் வைத்துக் கொள்ளலாம். அதை விட்டு விட்டால் அது ஓடி விடும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1003)

''குர்ஆனை ராகத்துடனும், சப்தமாகவும், இனிய குரலிலும் ஓதுவதை தன் நபியிடம் கேட்பதை விட வேறு எதையும் அல்லாஹ் கேட்க விரும்புவதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1004)

''குல்ஹுவல்லாஹு அஹது'' (எனத் துவங்கும் 112-வது) அத்தியாயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, ''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, நிச்சயமாக இந்த அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்கு நிகரானதாகும்'' என்று கூறினார்கள். (புகாரி)

மற்றொரு அறிவிப்பில் : நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதி முடிக்க உங்களில் ஒருவர் சக்தி பெறுவாரா? என்று கேட்டார்கள். அவ்வாறு ஓதுவது அவர்களுக்கு சிரமமாக இருந்ததால், ''இறைத்தூதர் அவர்களே! எங்களில்  எவர்தான் இதற்கு சக்தி பெறுவார்?'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ''குல்ஹுவல்லாஹு அஹது, அல்லாஹுஸ் ஸமது'' (அல்குர்ஆன் :112) என்ற அத்தியாயம் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியாகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1010)

''குல்ஹுவல்லாஹு அஹது'' அத்தியாயத்தை ஒருவர் திரும்ப திரும்ப ஓதிக் கொண்டிருந்ததைக் கேட்ட மற்றொருவர், காலையில் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கூறினார். அவர் ஓதிய அத்தியாயத்தை குறைவாக எண்ணிக் கொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, நிச்சயமாக இது, குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதிக்கு நிகராகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1011)

''இறைத்தூதர் அவர்களே! இந்த ''குல்ஹுவல்லாஹு அஹது''  அத்தியாயத்தை நான் விரும்புகிறேன்'' என்று ஒரு மனிதர் கூறினார். ''நீ அதை விரும்புவதே, உன்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும்'' என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் . (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1013)

''அல்பகரா'' அத்தியாயத்தின் இறுதியான இரண்டு வசனங்களை ஓர் இரவில் ஒருவர் ஓதினால், அவருக்கு  அந்த இரண்டுமே போதுமானவையாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்பத்ரீ  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1017)

உங்கள் வீடுகளை, மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் ''அல்பகரா'' அத்தியாயம் ஓதப்படும் வீட்டை விட்டு விரண்டு ஓடுகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1018)

''ரமளானில் ''ஜகாத்'' (கருவூலத்தை பாதுகாக்க என்னை நபி(ஸல்) பொறுப்பாளியாக்கினார்கள். அப்போது ஒருநாள் இரவு என்னிடம் ஒருவன் வந்து, உணவுப் பொருட்களை எடுத்தான். அவனை நான் பிடித்து, ''உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்வேன்'' என்று கூறினேன். ''நான் ஏழை எனக்கு குடும்பம் உண்டு எனக்கு அதிக தேவையாக உள்ளது'' என்று கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். நான் காலையில் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தேன். ''அபூஹுரைராவே! நேற்று இரவு நீ பிடித்த உன் கைதி என்ன ஆனான்?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே!  அவன் ஏழ்மையையும், குடும்பத்தையும் கூறி முறையிட்டான். நான் அவனிடம் இரக்கம் கொண்டு, அவனை அப்படியே விட்டு விட்டேன்'' என்று கூறினேன். ''அறிந்து கொள். அவன் உன்னிடம் பொய் கூறிவிட்டான். மீண்டும் வருவான்'' என நபி(ஸல்) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறியபடி அவன் மீண்டும் வருவான் என விளங்கிக் கொண்டேன். அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை எடுத்தான். ''நபி (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று கூறினேன். என்னை விட்டு விடுங்கள். நான் ஏழை எனக்கு குடும்பம் உண்டு இனி வர மாட்டேன்'' என்று கூறினான். அவனிடம் இரக்கம்  கொண்ட நான், அவனை அப்படியே       விட்டு விட்டேன். நான் காலையில் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தேன். ''அபூஹுரைராவே! நேற்று இரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே!  அவன் ஏழ்மை பற்றியும், குடும்பம் பற்றியும் என்னிடம் முறையிட்டான். அவனிடம் நான்  இரக்கம் கொண்டு, அவனை அப்படியே விட்டு விட்டேன்'' என்று கூறினேன். ''அவன் உன்னிடம் பொய் கூறிவிட்டான். மீண்டும் வருவான்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூன்றாம் நாள் அவனை எதிர்பார்த்திருந்தேன். அவன் வந்து, உணவுப் பொருட்களை எடுத்தான். அவனை நான் பிடித்தேன். ''நபி(ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன். இது தான் கடைசி. மூன்று தடவை ஆகிவிட்டது. இனி வரமாட்டேன் என்று கூறுகிறாய். திரும்ப வருகிறாய்'' என்று கூறினேன். அப்போது அவன் ''என்னை விட்டு விடுங்கள். சில வார்த்தைகளை உங்களுக்கு கற்றுத் தருகிறேன் இதன் மூலம்  அல்லாஹ் உமக்கு பயன் தருவான்'' என்று கூறினான்.

அவை என்ன? என்று கேட்டேன். ''உம் படுக்கைக்கு நீர் வந்து விட்டால், ஆயத்துல் குர்ஸியை (2:255வது வசனம்) ஓதுவீராக! அல்லாஹ்விடமிருந்து உமக்கு ஒரு பாதுகாவலர் வருவார். நீர் காலையில் எழும் வரை ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்'' என்று கூறினான். அவனை அப்படியே நான் விட்டேன். காலையில் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தேன்.

''நேற்று இரவு (நீ பிடித்த) உன் கைதி என்ன ஆனான்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்கு பயன் தருகின்ற சில வார்த்தைகளை எனக்குக் கற்றுத் தருவதாகக் கூறினான். இதனால் அவனை அப்படியே விட்டு விட்டேன்'' என்று கூறினேன். ''அவை என்ன?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''உம் படுக்கைக்கு நீர் வந்து விட்டால், 'ஆயத்துல் குர்ஸி' எனும் அத்தியாயம் முழுவதையும் நீர் ஓதும் இதனால் அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். நீர் காலையில் எழும் வரை ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்'' என்று அவன் கூறியதை (நபி(ஸல்) அவர்களிடம்) கூறினேன். ''அறிந்து கொள்க! அவன் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் உண்மை கூறி உள்ளான்.'' அபூஹுரைராவே! மூன்று தடவை நீர் சந்தித்த அவனை அறிவீரா?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ''இல்லை'' என்றேன். ''அவன் ஷைத்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1020)
    
''ஒரு முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் முன் அமர்ந்திருந்த போது, தனக்கு மேலே ஒரு சப்தத்தைக் கேட்டார்கள். தன் தலையை  உயர்த்திய ஜிப்ரீல் (அலை) அவர்கள், ''இதோ! வானத்தின் வாசல் இன்று திறக்கப்படுகிறது. இதற்கு முன் எப்போதும்  அது திறக்கப்பட்டதில்லை'' என்று கூறினார்கள். அப்போது அதிலிருந்து ஒரு வானவர் இறங்கி வந்தார். ''இந்த வானவர் பூமிக்கு இறங்கி வருகிறார். இதற்கு முன் இவர் இறங்கி வந்ததில்லை'' என்று ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.(அந்த வானவர் வந்து) ஸலாம் கூறினார். ''(நபியே!) இரண்டு ஒளிகள் மூலம் நற்செய்தி பெறுவீராக! உமக்கு முன் எந்த நபிக்கும் கொடுக்கப்படாத இரண்டை நீர் கொடுக்கப்பட்டுள்ளீர். அவை ''ஃபாத்திஹா'' எனும் அத்தியாயம் மற்றும் ''அல்பகரா'' எனும் அத்தியாயத்தின் கடைசி வசனம் ஆகும். இதிலிருந்து ஒரு எழுத்தை ஓதினாலும் அதற்காக நன்மை கொடுக்கப்படாமல் அதை நீர் ஓதுவதில்லை'' என்று அந்த வானவர் கூறினார். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1022)

''அல்லாஹ்வின் வீடுகளில் (பள்ளிவாசல்களில்) ஒரு வீட்டில் அல்லாஹ்வின் வேதத்தை ஓதவும், தங்களிடையே அதை (பொருள் பற்றி) கற்றுக் கொள்ளவும், ஒன்று கூடுகின்ற மக்கள் மீது அமைதி இறங்காமல் இருப்பதில்லை. மேலும் அவர்களை இறையருள் சூழும். மலக்குகள் அவர்களை சுற்றி இருப்பர். அவர்கள் பற்றி தன்னிடம் உள்ள (வான)வர்களிடம் அல்லாஹ் புகழ்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1023)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக! (100:1,2,3,4,5)

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (100:6)

அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான். (100: 7)

அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான். (100: 8)

மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும் போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டாமா? (100: 9,10,11)

(அல்குர்ஆன் :அல் ஆதியாத் -- வேகமாக ஓடும் குதிரைகள் -- 100 :1-11)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
 '' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாரம் ஒருநாள் வருகை தரும் அமைதிக்கு மருந்து !
வைரம் பதிக்கிறது வாழ்நாள் முழுவதும் நிரந்தர நிம்மதிக்கு !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...!

sheikdawoodmohamedfarook said...

நல்வழி காட்டும் நல்ல ஆக்கம் ! இந்தப்பணியாற்றும் உங்களுக்கு அல்லாஹ தன் அருளை பொழிவானாக.ஆமீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

குல்ஹுவல்லாஹு அஹது சூரா,
அல்பகரா சூராவின் கடைசி இரு பகுதி
மற்றும் ஆயத்துல் குர்சியின் மகத்துவம்

அறியத்தந்த, அறிந்ததை புதுப்பித்து தந்தமைக்கு
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

குர்'ஆனை ஓதுவோம், ராகமாக! இனிய குரலில்!! அர்த்தம் புரிந்து!!!

sabeer.abushahruk said...

எவ்வளவு அருந்தினாலும் இன்னும் இன்னும் கேட்கும் ஒரு மருந்து இந்த அருமருந்து.

நன்றி அலாவுதீன்.

Ebrahim Ansari said...

Assalamu Alaikkum.

Jasaak Allah Hairan.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் : ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு