Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2016 | ,


"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" என்ற முதுமொழிக்கேற்ப நாம் இப்பொழுது யாராக, எங்கோ, எப்படியோ இருந்து வாழ்ந்து வந்தாலும் காலம் எவ்வித தங்குதடையுமின்றி நம்மை விட்டு கடந்து சென்று கொண்டே தான் இருக்கின்றது. கடலில் கலக்கும் காட்டாற்று வெள்ளம் அது ஓடும் வழியில் இலை,தழைகளையும்,குப்பை,கழிவுகளையும் அடித்துக்கொண்டு செல்வது போல் வாழ்வில் நம் கண் முன்னே வயோதிகத்தாலும், நோய்நொடிகளாலும், விபத்துக்களாலும், விபரீதங்களாலும், இன்ன பிற காரண,காரணிகளாலும் நம்மவர்களை அவர்கள் இளையவர், முதியவர் என்ற பாகுபாடின்றி மரணம் அதன் போக்கில் சேர வேண்டிய இடத்திற்கு இழுத்துச்சென்று விடுகிறது.

"காலஞ்சென்றவர்களை நினைத்துப்பார்க்க நேரமில்லை, நம்முடன் இருக்கும் மூத்தவர்களை மதித்துப்பணிவிடை செய்ய நேரமில்லை. பிறகு தான் உலகில் வாழ்வதே எதற்கென்று விளங்கவில்லை" இப்படித்தான் நம் வாழ்க்கை சக்கரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் இன்று ஆயிரத்தெட்டு அலுவல்களுக்கிடையே நம்மை கடந்து சென்ற அந்தக்காலங்களையும், அதன் நல்நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது தனியாகவோ, கூட்டாகவோ அசைப்போட்டு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டு சிலாகிப்போம் வாரீர்.

வருடம் முழுவதும் கண்டுகொள்ள யாருமில்லாத துணிக்கடை, டைலர் கடை டைலர்களெல்லாம் ரொம்ப மதிப்பும், மரியாதையுடன் பார்க்கப்படுவர் இந்த பெருநாள் நாட்களில். சொன்ன தேதியில் துணி தைத்து கொடுத்த சரித்திரம் படைத்த டைலர்களெல்லாம் எங்கோ ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஊரில் ஆங்காங்கே எங்கோ பிறந்து வளர்ந்த,(தொட்டுக்கறி அரைக்கப்படும்) மொரட்டு மாசியை  கொம்பாய் முறுக்கியது போல் வளைந்த கொம்புகளுடைய ஆடுகள் மந்தையாய் ஊருக்குள் வந்து அந்த தியாகத்திருநாளை தானே முன்னின்று மே,மே என கோஷமிட்டு சிறப்பிக்கும். அதன் மேனியில் விலாசமிட்டு அடையாளப்படுத்தப்படும்.

ஊரின் தொப்பிக்கடைகளெல்லாம் தன் கடையை கடைக்கு வெளியே கடை விரிக்கும். அதை பெட்ரமாஸ் லைட்டு ஒன்று நின்று ஒளி வீசி கண்காணிக்கும்.

கறிக்கடைகளெல்லாம் வாங்க வருவோரை வரிசையில் வந்து நிற்க வைக்கும். ஆட்டின் உதிரி பாகங்களெல்லாம் சட்டைப்பாக்கெட்டில் பணங்காசுகள் எவ்வளவு இருந்தாலும் அதை விரும்பி வேண்டியவருக்கு உடனே கிடைத்து விடாது.சில சலசலப்புக்கு பின்னரே வந்த வேளை முடியும்.

கூடைக்குள் கூனிக்குறுகி நிற்கும் சூப்பு வைக்க உதவும் வெடக்கோழிகளின் விலை இரண்டு,மூன்று நாட்களில் அதன் விலையும் சரியாய் சரியும்.

சென்னை/வெளியூர் சிறுவர்களும், உள்ளூர் சிறுவர்களும் சந்தித்து ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொள்ள பள்ளிகளும் சில நாட்கள் விடுமுறையளித்து அவர்களுக்கு நன்கு உறுதுணையாய் இருந்து உதவி செய்யும்.

வயோதிகம் முதல், வாலிபம் வரை மனசுக்குள் பூரிப்புகள் பனி மூட்டம் போல் ஊரில் எங்கும் பரந்து பரவிக்கிடக்கும்.

பள்ளிகளில் சுபுஹ் முதலே தக்பீர் சொல்ல ஆரம்பிக்கப்படும். பிறகு பெருநாள் தொழுகை சூரிய உதயம் ஆனதும் விரைந்து நடத்தப்படும். தொழுத கையோடு முதல் நாளே சிலர் குர்பானி கொடுக்க அவசர, அவசரமாக வீடு வந்து சேருவர். காத்திருக்கும் அந்த குர்பானிக்கான ஆட்டை அல்லாஹ் பெயர் சொல்லி அறுப்பர். அவர்களுக்காக பசியாறவும் வீட்டின் பெண்களால் பக்குவமாக ஆக்கி பரிமாறப்படும்.

அந்த மொறு,மொறு பொரிச்ச ரொட்டியின் மேனியில் கொஞ்சம் கறியானத்தை ஊத்தி, கையை அதன் மேல் அழுத்தினால் சுக்குநூறாகிப்போகும் அதன் மேனி. பிறகு ஆனத்துடன் சேர்ந்து அது தனக்கே உரித்தான அந்த ருசியை தாரை வார்க்கும் சாப்பிடும் அனைவருக்கும்.

பிறகு இடியப்பமும், ரவ்வாவும், வட்லப்பமும், கடப்பாசியும் அதற்கு நன்கு பக்கபலமாக இருந்து வரிசையில் வந்து அணிசேர்க்கும்.

சொந்த,பந்தங்களின் விசாரிப்புகளும் பெரிசுகள், சிறுசுகளுக்கு பெருநாள் காசு பரிவர்த்தனைகளும் மும்பை பங்கு சந்தையைவிட படு ஜோராக நடக்கும். இங்கு சென்செக்ஸ், காளை, கரடிகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடும்.

பெருநாள் பகல் லுஹர் தொழுகைக்குப்பின் வயிறாற உண்ட பின் தூக்க கிரக்கத்துடன் மனசு ஏதோ ஒன்றை இழந்தது போல் பரிதவிக்கும். நம்மூர், மல்லிப்பட்டின மனோரா, பூனைக்கொல்லைகளெல்லாம் அதை ஆசுவாசபடுத்த முயற்சி செய்யும்.  

பெருநாள் முடிந்து மூன்றாவது நாள் அஸருக்குப்பின் எல்லாப்பள்ளிகளிலும் தக்பீர் சொல்லி நிறுத்தப்படும். இனி அடுத்த வருடம் வர இருக்கும் நோன்புப்பெருநாளுக்காக உள்ளம் ஏக்கப்பெருமூச்சு விட்டு அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் கவனம் செல்லும். வெளியூரிலிருந்து பெருநாள் கொண்டாட்டத்திற்காக ஊர் வந்த தாயபுல்லையலுவோ தன் இருப்பிடம் நோக்கி கூட்டம், குடும்பமாய் நகர ஆரம்பிப்பர். இப்படியே அல்லாஹ் நாட்டத்தில் நானும் இதுவரை நாற்பது முறை சூரியனை சுற்றி வந்து விட்டேன். நீங்கள் எத்தனை முறை சூரியனை சுற்றி வந்திருக்கிறீர்கள் இதுவரை?

அந்த ஒரு நாள், இபுறாஹீம் நபி (அலைஹி) அவர்கள் இறைவனிடம் தவங்கடந்து ஈன்றெடுத்த தன் அருமை மகனார் இஸ்மாயீலை (அலைஹி) அறுத்து இறைவனுக்காக பலியிட தான் கண்ட கனவை நனவாக்க அவர்களை அரபு நாட்டின் அந்த பரந்த பாலைவன வனாந்தரத்திற்கு அழைத்துச்சென்றார்களே அந்த நிகழ்வுகள் நம்மூர் வட்டார மொழியில் எப்படி இருந்திருக்கும் என கொஞ்சம் மனக்கண்ணில் இங்கு ஓட விட்டுப்பார்த்தேன்....(இதில் ஏதேனும் தவறுகள்,பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக....)

இபுறாஹீம் (அலைஹி) அவர்களிடம் அருமை மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்கள் "வாப்பா, என்னை எங்கே? இப்படி ஒத்தியா கூட்டிக்கிட்டு போறீங்க?"

அதற்கு தகப்பனார் "அதுவா தம்பீ, நேத்து ராத்திரி இந்த மாதிரி உன்னை அறுத்து அல்லாஹ்வுக்காக பலி கொடுக்க கனவு கண்டேன். அதை நிறைவேத்தனும் அதுக்காக தான் உன்னை கூட்டிக்கிட்டு போறேன் வா என்னோடு என்றார்கள்.

மகனார்: " அப்புடியா? அப்பொ அது நிச்சயம் படைத்த ரப்புவிடமிருந்து உங்களுக்கு கட்டளையாக தான் வந்திரிக்கும். தாராளமாக அதை நிறைவேத்துங்க வாப்பா, எதுக்கும் தயங்காதீங்க நான் அதுக்கு முழுசா  ஒத்துழைக்கிறேன்" என்றார்கள்.

சரி வா போவலாம் தம்பீ....கரடுமுரடாண பாறைகள் நிறைந்த அந்த வனாந்தர இடத்திற்கு வாப்பாவும், மகனும் வந்து சேர்ந்தார்கள்.

தம்பீ, கீழே படுக்கிறியா?. அவர்கள் சொல்படி மகனும் படுத்து விட்டார்கள். மகனார் அருமை வாப்பாவை பார்த்து "வாப்பா, உங்க வேட்டியெ நல்லா மேலே தூக்கி கட்டிக்கிடுங்க, இல்லாட்டி நீங்க என்னை அறுக்கும் பொழுது என் ரத்தம் உங்க வேட்டியில பட்டு விட்டால் அப்புறம் அதை பார்த்து,பார்த்து நீங்கள் என்னை நெனச்சி  மனசுக்கு ரொம்ப வருத்தப்படுவீங்க வாப்பா. அதனால தான் சொல்றேன்.

பிறகு வாப்பா தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகனுடைய கழுத்தில் அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு அறுக்க முற்பட்டார்கள். ஆனால் வாப்பாவிற்கு கனவு மூலம் அறுக்க கட்டளையிட்ட அல்லாஹ் அதேநேரம் கத்திக்கு அறுக்கக்கூடாது என கட்டளையிட்டிருந்தது வாப்பாவுக்கு அந்நேரம் விளங்கவில்லை. பிறகு எப்படி அது கழுத்தை அறுக்கும்? கோபம் கொண்ட வாப்பா, ஓங்கி பாறையில் கத்தியை அடிக்கிறார்கள். பிறகு, எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அகிலத்தை படைத்த ரப்புல் ஆலமீன். ஓ, இபுறாஹீம் (அலைஹி...) உம்முடைய தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். உம்மை கஷ்டப்படுத்தி வறுத்துவது எம் நோக்கமல்ல. உம்மை சோதிக்கவே இந்த பரீட்ச்சையை நடாத்தினோம் என்று அவன் கூறி அதற்கு பிரதிபலனாக மெய்சிலிர்த்து ரத்தம் உறைய வைக்கும் இந்த நிகழ்வை நினைவுடன் யுக முடிவு காலம் வரும்வரை வரும் மக்கள் நினைத்து பின்பற்ற வேண்டும் என்பதற்காக வானிலிருந்து ஒரு ஆட்டை மண்ணிற்கு இறக்கி இதை அறுத்து பலியிடுவீராக! என இபுறாஹீம் அலைஹி...அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். நாமும் அதையே இன்றும் பின்பற்றி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

தாயபுல்லையல்வோ எல்லோருக்கும் என் இனிய தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் அது வருவதற்கு முன்பே.

கடந்த காலங்களில் எழுதி இங்கு வெளியிடப்பட்ட கட்டுரைகளை அவ்வப்பொழுது மீள்பதிவு செய்து வெளியிடும் அதிரை நிருபர் குழுமத்திற்கும், அதற்கு கருத்தெழுதும் சான்றோர்களுக்கும் நன்றிகளும், து'ஆவும் சென்றடையட்டுமாக.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

5 Responses So Far:

Shameed said...

//அல்லாஹ் நாட்டத்தில் நானும் இதுவரை நாற்பது முறை சூரியனை சுற்றி வந்து விட்டேன்//

இன்னும் பலமுறை சூரியனை சுற்றிவர அல்லாஹ் துணை புரிவனாக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

msm(N) மாஷா அல்லாஹ் ! நினைவுகளையும் மன்வாசனையையும் கிளப்பி விடுவதில் எம்.எஸ்.எம்(என்)க்கு நிகர் MSM(n)தான் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஹமீத் காக்கா ஆமீன்......

என்னா ஒத்தரையும் பொழக்கத்தெ காணோம்??? எல்லாம் ஹஜ்ஜுப்பெருநாளக்கி ஆடு வாங்க போயாச்சா???

sheikdawoodmohamedfarook said...

மண்வாசனைநுகரமலேசியாவிலிருந்துஆவலோடுஊர்வந்தஎனக்குநிறையகைகுட்டைகள்தேவைபடுகிறது.மூக்கை பொத்த!

இப்னு அப்துல் ரஜாக் said...

ஊர் பாஷையில் ,ஏகத்துவ தந்தையின் வரலாறு
Super brother Naina

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு