Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புதுமைப் பெண்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2016 | , , , , ,

கல்லூரி மாணவி சுமையா அவர்கள் கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரையின் பதிப்பு

நோக்கம் : 
  •  அருகிவரும் துறையில் சாதித்த பெண்களை அடையாளப்படுத்துவது 
  •  அதன்மூலம் இழந்துக்கொண்டிருக்கும் மரபை மீட்டெடுப்பது

முன்னுரை :

‘பெண்ணுரிமைச் சங்கம்’ அமைத்து வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் பெரும் நிறுவனங்களில் அமர்ந்தவர்கள், முற்போக்கு, தனிமனித சுதந்திரம், நவ நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுக்கு ஆதரவாக களமிறங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் அந்த ‘பாரதிகண்ட புதுமைப்பெண்கள்’ என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அது நம் தவறல்ல  மீடியாக்கள் அப்படி ஆக்கிவிட்டன. 

உயற்கல்வி கற்பதும், பெரும் நிறுவனங்களை கட்டி மேய்ப்பதும், மேற்கத்திய வாழ்க்கை வாழ்வதும் தான் புதுமைப்பெண்ணுக்கான அடையாளம் என்றால் "புதுமைப்பெண்" என்ற வார்த்தையே மிகச்சாதாரண ஒன்றாக மாறிவிடும். காரணம் கல்வியிலும், கார்பரேட் நிறுவனங்களிலும் சாதிக்கும் பெண்கள் இன்று பெருகிவிட்டார்கள் என்பது நிதர்சனம். 

என் அகராதியில் புதுமைப்பெண் என்பவள் வேறு, தான் அடியெடுத்து வைக்கும் துறை தனக்கு மட்டுமே பயனளிக்கும் விதத்தில் குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல், பரந்து விரிந்ததாகவும் அத்தியாவசிய தேவைகளில் அனைவருக்கும் வழிகாட்டும் விதத்திலும் இருக்க வேண்டும். 

ரியல் எஸ்டேட்டின்  ஆக்கிரம்பிப்புகள் முதற்கொண்டு இன்னும் பற்பல காரணிகளால் மிகப்பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருந்தும்கூட, தற்கால தேவையை உணர்ந்து உயிர்களுக்கு உணவளிக்கும் விவசாயத்தை கட்டிகாப்பதென்பது  போற்றுதலுக்குரிய செயல். அப்படியான துறையில்   ஆண்களே  தங்கள்  நம்பிக்கைகளை தகர்த்துக்கொண்டு  வெளிநாடுகளுக்கு பயணிக்க,  சத்தமில்லாமல்   சாதித்த எத்தனையோ புதுமை பெண்களை இவ்வுலகம் அறியாமலே இருந்துவருகிறது. அத்தகைய புதுமைப் பெண்களை பற்றிதான் இங்கே காணப்போகிறோம்.

மரபு :

விவசாயம். எம் தேசத்தின் அடையாளம். அனைத்தும் வியாபாரமாகவும், கார்பரேட்மயமாகவுமாகி வரும் இக்காலத்தில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் நடைபோட்டு வரும் ஓர் உன்னதமான சேவை விவசாயம்.இந்த விவசாயம் முழுக்க முழுக்க பெண்களின் உழைப்பைக் கொண்டே கட்டமைக்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

ஆண்கள் வேட்டையாட கூடியவர்களாகவும், போர் வீரர்களாகவும், இருந்த ஆதிகாலத்தில் பெண்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே பயிர் செய்யக்கூடியவர்களாக இருந்து வந்தார்கள். பெண்களே வேளாண் நாகரீகத்தின் ஆதாரம் எனுமளவுக்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெண்களின் உழைப்பால் குடும்பம் அழகுபெறுவது போன்றே விவசாயமும் வளர்ச்சியடைந்தது.இன்றும் தினக்கூலிக்கு விவசாயத்தில் ஈடுபடக்கூடியவர்களில் 80% பேர் பெண்கள் என்பது வியப்பான உண்மை. எனினும் அவர்களில் 15% பேருக்கே சொந்தமாக நிலம் இருக்கின்றது. மீது 65% பெண்களும் யாருக்கோ உரிய நிலத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

வேளாண் நாகரிகம் உருவாகி கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது.அதற்காக அதிகம் உழைத்தவர்கள் பெண்களாக இருந்தும்கூட இதுவரை பெண்களுக்கு நிலம் சொந்தமாகவில்லை என்பது கசப்பான உண்மை.இருந்தாலும் கூட விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் சாதிக்கும் மிக அரிதான பெண்களைதான் நான் புதுமைப்பெண்களாக பார்க்கிறேன்.

முயற்சியே முன்னேற்றம்:

‘கோழி கூவி விடியவா போகுது’ என்று கேலி செய்தவர்களையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் கம்பீரமாக விவசாயத்தில் இறங்கிய காட்டு மன்னார்குடியை சேர்ந்த திருமதி ரங்கநாயகிக்கு தண்ணீர் வடிவில் வந்தது சோதனை. தனது நிலம் மட்டுமல்லாமல் வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீர் 9.5 கி.மீ. தொலைவில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து ராதா வாய்க்கால் மூலம் வந்து சேர வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால் ராதா வாய்க்காலோ வழக்கம்போல அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் ! அதை மீட்க தனியொருப் பெண்ணாய் ரங்கநாயகி மேற்கொண்ட போராட்டங்கள் எண்ணற்றவை. இருப்பினும் விடாமுயற்சியோடு போராடிய ரங்கநாயகியின் முயற்சிக்குத் தோள்கொடுக்கத் தொடங்கினர் வடம்பூர் கிராம மக்கள். அதன் விளைவாக ராதா வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது தடையின்றித் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது கடலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்கள், மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் திருமதி ரங்கநாயகி ‘ராதா வாய்க்கால் ரங்கநாயகி' என்றே பெயர் பெற்றுவிட்டார்.  மேலும் ரங்கநாயகியின் விவசாய ஈடுபாட்டைப் பாராட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை 2010-ம் ஆண்டு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது இந்த புதுமைப் பெண்ணை! 

தன்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்களைப் பற்றி ரங்கநாயகி கவலைப் படவில்லை. மாறாக அந்த ஏளனப் புன்னகையை ஆச்சரியக்குறியாக மாற்றக் கடுமையாக உழைத்தார். அதில் வெற்றியும் கண்டுவருகிறார் என்பதை ‘தி இந்து’ நாளேடு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

சரி, உயர்கல்வி கற்காத கிராமிய பெண் விவசாயத்தில் ஈடுபாடு செலுத்தியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே என்று நீங்கள் நினைத்தால் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்.பி.ஏ பட்டதாரி வேளாண் துறையில் நிகழ்த்திய சாதணையை கொஞ்சம் கேளுங்கள்.

தலைமுறைகள் கடந்த… :

 பாட்டன், பூட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை (பெண்ணாக பிறந்ததால்) நாம் ஏன் கைவிட வேண்டும் என்ற கேள்வி  வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது கவுண்டன்பாளையத்தை சேர்ந்த திவ்யாவை. எம்.பி.ஏ., முடித்துவிட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது தெரியுமா?  தான் படித்த எம்.பி.ஏ படிப்பெல்லாம் தன் தந்தையின் விவசாய வருமானத்தில் தான், எனவே நாமும் விவாயத்தில் ஏதேனும் சாதிக்கனும் என்ற உணர்வுதான்.

‘ஏசி ரூமில் அமர்ந்து வேலை பார்த்த நீ சேற்றில் இறங்க போறீயா?” என்ற வீட்டாரின் கேள்விகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு களத்தில் இறங்கிய திவ்யாவின் மனதில் பல கேள்விகள்.நம் அடிப்படைத் தேவையான உணவைத் தருவது விவசாயம்தான். ஆனால், 

நம் நாட்டில் விவசாயிகளின் நிலை என்ன? ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் விவசாயத்தைத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த நிலை மாறி, இன்று ஏன் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர்? விவசாயிகள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோவது எதனால்? மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா என திட்டங்களை அறிவிக்கும் அரசாங்கம், இது விவசாய இந்தியா என்பதை மறந்து விவசாயிகளை கைவிட்டது ஏன்.? உற்பத்தி குறைவதும், விவசாயப் பொருட்களின் விலை சரிவதும் என்ன கணக்கு? இப்படி தன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகளை சுமந்தவராக விடை தேடிப் புறப்பட்டார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு கிராமமாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்த பிறகு இக்கேள்விகளுக்கான பதில் கிடைத்தது. நம் பாரம்பரிய விவசாய முறையை மறந்ததும், ரசாயன உரங்களால் மண்ணின் வளம் மங்கியதும்தான் விவசாயத்தின் சரிவுக்கான முக்கிய காரணங்கள். சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவ மழை பொய்த்துப்போவது, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, கிடைத்தாலும் அவர்களுக்குப் போதிய கூலி தர முடியாதது என்று ஏகப்பட்ட சிக்கல்கள். இதற்கெல்லாம் தீர்வு சொல்லும்படி ஓர் அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, ‘அக்ரோ க்ரீன் பயோலைஃப்’என்ற விவசாய ஆலோசணை மையத்தைத் தொடங்கினார் திவ்யா. நான்கு மாதம் ஒரு பயோடெக் கம்பெனியில் வேலை பார்த்திருந்ததால், விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் நிலை பற்றியும் ஓரளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருந்த திவ்யா,  தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு தன் வேளாண் அறிவை மேலும் மெருகேற்றிக்கொண்டார்.

தன் கடின முயற்சியின் மூலம் தன்னை போன்று வேளாண் துறையில் ஆர்வமாயிருக்கும் பெண்களை ஒன்றிணைத்து தான் ஆரம்பித்த அக்ரோ க்ரீன் பயோலைஃப்’ விவசாய ஆலோசணை மையத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களை ஆலோசகர்களாக அமர்த்தியுள்ளார்.

தற்போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட இந்த ஆலோசணை மையத்தின் முன்னோடி, விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், முறையான திட்டமிடுதல் மற்றும் ஆலோசனைகள் மூலம் அமல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக மண் வளத்தையும், உணவு பொருளின் சத்துக்களையும் கெடுக்கும் செயற்கை உரங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் இயற்கை உரங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.மண்ணில்லா விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்னை நார் கழிவு, பலவிதமான இயற்கை உரங்கள், விதைகளையும் விற்பனை செய்கின்றனர். தென்னை நார் கழிவிலிருந்து பல்வேறு அளவிலும் வடிவிலும் செய்யப்படுகிற செங்கல் போன்ற கட்டிகள் 100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.பூச்சிவிரட்டிகள்கூட இயற்கைப் பொருட்களை கொண்டே தயார்செய்து செயற்கை உரத்திற்கு மாற்றாக இயற்கை உரத்தைக் கொண்டு விவசாயத்தை பெருக்கியதன் மூலம், மண் வளத்தை பாதுகாக்கும் முன்னோடியாய் விவாச முறையை மீட்டெடுத்து, வேளாண் துறையில் அமைதியான புரட்சியே செய்துவருகிறார் இந்த புதுமைப் பெண். 

முடிவுரை :

மேற்கத்திய வாழ்க்கை வாழவும், ஐடி நிறுவனங்களில் சாதிக்கவும் ஆட்கள் ஏராளம் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கணினியை, சம்பாதிக்கவே எல்லோரும் கல்வி கற்பதால் அந்த துறைகளில் வேலையில்லா திண்டாட்டம் வரும் அளவுக்குதான் மக்கள் அவற்றின் பக்கமே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயத்தை காப்பாற்றதான் ஆட்கள் பற்றாக்குறை ஆகிவருகிறது. இப்படியாக தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் எதை உண்பார்கள் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  அப்படியாக சிந்திக்க நாம் தவறிய போது பெண்ணாய் இருந்தும்  தன்னால் முடியும் என்றதோடல்லாமல் எல்லோரும் புறக்கணித்த உன்னதமான துறையை தேர்ந்தெடுத்து  சாதித்த இவர்கள்  இருவரும் தான் உண்மையில் புதுமைப் பெண்கள். இவர்களைபோன்ற பெண்கள்  பற்றி அதிகமதிகம் பேசுவதன் வாயிலாக இன்னும் பலரை ஊக்கப்படுத்தி இத்துறையில் காலூன்ற வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனே இக்கட்டுரை வடித்தேன்.  அத்தகைய நம்பிக்கையுடனே முடிக்கிறேன் . 

சுமையா

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு