இந்த பதிப்பு நோன்பு பெருநாளைக்கு மட்டுமல்லா ஹஜ் பெருநாளைக்கும் பொருந்தும்
பெருநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கம் போலவே தொழுகைக்கு பின்பு வட்டலாப்பம், பூரி, இடியாப்பம் மதிய உணவுக்கு மட்டன் பிரியாணி , தாளிச்சா என பெண்கள் பட்டியலிட, இளையபட்டாளமோ கடற்கரைக்கு போகலாமா, கேளிக்கை தளங்களுக்கு போகலாமா என திட்டமிட்டுக்கொண்டிருக்க, இன்னொரு வர்க்கமோ சாப்பிட்டதும் பலத்த தூக்கமொன்று போட்டு விடவேண்டுமென தனது இறுதியறிக்கையில் முடிவெடுத்துவிட்டிருப்பார்கள்.
ஆனால் இதுமட்டுமா பெருநாள்??? இதற்காகவா ஓர் வருடம் காத்திருந்தோம்... ஓர் மாதம் நோன்பு நோற்றோம் ?? நம் பண்டிகை அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக இருந்திட வேண்டாமா
மதினாவிலேயே அதிகம் கொடையளிக்கும் நபராக நபி (ஸல்) அவர்கள் இருந்து வந்தார்கள், அதன் விளைவாய் தான் ராஜபோக வாழ்க்கையை அவர் அனுபவிக்கவில்லை. வழக்கமாக எல்லா நாளிலும் கொடையளிக்கும் பழக்கமுடைய நபி (ஸல்) ரமலானிலோ இன்னும் அதிகமாக தர்மம் செய்பவராக இருந்துள்ளார். ஆனால் இன்றைய சூழலில் ஜக்காத்தை மட்டும் கணக்கிட்டு கொடுத்ததுடன் நம் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து விடுகிறோம். ஆனால் உண்மையில் இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது கொடுக்கும் நிலையில் உள்ளவன் வாங்கும் நிலையில் உள்ளவனுக்கு கொடுத்து இரு வர்க்கத் தரப்பையும் சமப்படுத்துவது தான். ஏழைகள் இல்லாத ஓர் சமுதாயமாய் நம் உம்மத்தை ஆக்குவதற்கான வழிமுறைகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு பாடம் கற்பித்திருக்கிறார்கள். அதன் நீட்சி தான் பித்ரா [ஈகைக் கொடை].
பணம் படைத்த வர்க்கம் பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்க ஏழை வர்க்கமோ ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையை போக்குவதற்கு தான் பெருநாள் தொழுகைக்கு முன்பே பித்ரா பணம் ஏழைகளுக்கு கொடுக்க நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். ஆனால் அவை ஜஸ்ட் கடமை என்ற அளவோடு முடிந்துவிட்டது. குடும்பத்தலைவன் தான் அதற்கு பொறுப்பு என்பதால் பித்ராவின் நோக்கம் இளைய தலைமுறையினருக்கு புரியாமலேயே போய்விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, "இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ
புரட்சிக்கு நம்மை உட்படுத்தும் நாள் தான் ரமலான்.. கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல!!!!
ரமலானில் கறி மணக்காத வீடுகளே இல்லை. என்னதான் தெருவுக்கு தெரு பிரியாணிக்கடை வந்திருந்தாலும் இன்றும் இஸ்லாமியர் வீட்டின் பிரியாணி சகோதர சமயத்தை சார்ந்தவர்களின் விருப்ப பட்டியலில் முதலிடமுள்ளது. அன்றைய நாள் நம் ரமலான் கொண்டாடத்தின் ஓர் பகுதியாக சகோதர சமயத்தை சார்ந்த நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர்களை அழைத்து விருந்தளிக்கலாம். நம் கலாச்சாரம், நம் வணக்க வழிபாடுகள் , நம் நடைமுறை முதலியவைகள் குறித்து அவர்களுக்கும் புரிதல் உண்டாகலாம். இன்னும் ஏழை எளியோரை அழைத்து அவர்களை கௌரவப்படுத்தலாம். ஏழை பணக்காரன் எனும் பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டது நம் மார்க்கமென்பதை பறைசாற்றுவதற்கான ஓர் வாய்ப்பாய் பயன்படுத்தலாம்.
மனிதநேயமும், சமத்துவமும் பன்மடங்காய் பலமாக்கும் நாள் தான் ரமலான்... கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல!!!!
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 2067 )
ஆனால் கூட்டுக்குடும்ப முறை அருகி வரும் காலக்கட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். நெருங்கிய உறவுகளே யாரென தெரியாத அளவுக்கு நம் இளையதலைமுறை உருவாகி வருகிறார்கள். தொழில் , படிப்பு என தத்தம் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த உறவுகளுக்கும் நமக்குமான இடைவெளியை நிரப்புவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விடுகிறது. இன்னும் நம்மில் பலர் சண்டையிட்டுக்கொண்டும், உறவுகளை முறித்தும் எந்தவித குற்ற உணர்ச்சிகளுமின்றி நடமாடிக்கொண்டிருக்கிறோம்.
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி :5984) சொர்க்கம் தான் நம் இம்மை வாழ்வின் குறிக்கோள் எனில் எவ்வித ஈகோவிற்கும் இடமின்றி சலாம் கூறி உறவை வளர்க்கும் முறைதனை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான சந்தர்ப்பமாய் பெருநாட்களை அமைத்துக்கொள்ளலாம்..
உறவுகளின் பிணைப்பிற்கான பாலம் தான் ரமலான்... கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல...
இன்ஷா அல்லாஹ் இனிவரும் ஒவ்வோர் பெருநாளையும் மார்க்கத்தினை வலுபடுத்தவும், சமூகத்தினை பலப்படுத்துவதுமாய் அமைத்திட உறுதிக் கொள்வோம். நன்மைகளை அதிகமதிகம் செய்யும் நாட்களாக இந்த ரமலானை உங்களுக்கும் எனக்கும் ஆக்கித் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆமினா முஹம்மத்
0 Responses So Far:
Post a Comment