அலகே ஆயுதம்!

கூரைக்கு வெளியே
அடை மழை
கூடைக்கு உள்ளே
அடை காக்கிறது கோழி:
நல்லோர் அடைகாக்கும்
நல்லெண்ணங்களைப் போல

கோழி இறக்கைகள்
பறக்க இயலாவிடினும்
பாதுகாக்கும்;
தேகம் பழுத்து
திண்ணையில் இருக்கும்
தாத்தா பாட்டியின்
அறிவுரை போல.

தட்டை மேல்
முட்டைகளை வைத்து
அடை காத்திருந்த கேள்விகளுக்கு
விடை யென
வெளி வருகின்றன குஞ்சுகள்;
பொறுத்தோருக்கு
பூமி பிளந்து விளையும்
விதைகளைப் போல

முட்டைகளின்மேல் கோழி
இருக்கிறது - ஆனால்
இறுக்குவ தில்லை;
பிள்ளைகள்மீதான
அன்னையின் அடியைப்போல

ஓட்டை முட்டி
உடைத்த பின்னரே
உலகை எட்டிப்
பார்க்கிறது குஞ்சு;
வீட்டைவிட்டு வெளியேறி
எதார்த்தத்தைச் சந்திக்கும்
மனிதனைப்போல

முட்டி மோதாமலும்
தட்டிக் கேட்காமலும்
முடங்கிப் போகும் மனிதர்கள்
உள்ளேயே அடங்கி
கூமுட்டையாய் -நிலை
குலைந்து போவர்

கூட்டை உடைக்க
குஞ்சுகளிடம்
கைகளுமில்லை
கடப்பாரையுமில்லை
அலகால் கொத்தி உடைக்கும்
அழகாய் கத்தி பிறக்கும்

இல்லாதவை எண்ணி
இயலாமல் கிடப்பதைவிட
இருப்பதை உபயோகித்து
இயன்றதை ஈட்டுவதே
இதிலுள்ள பாடம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

27 கருத்துகள்

Iqbal M. Salih சொன்னது…

//அலகால் கொத்தி உடைக்கும்
அழகாய் கத்தி பிறக்கும்//

அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் ஆபரணத்தைப்போல், அருமையான இந்தக் கவிதைக்கு அழகு சேர்க்கும் மழைத்துளிக்குக் கண்சிமிட்டும் அற்புதமான குருவிப் படம்!

அதிரை.மெய்சா சொன்னது…

உன் வரிகளில் நானும்
அடையினுள்ளே அடைபட்ட
முட்டையானேன்

அலகு கவிதையை
அழகுபடச் சொல்லி
அற்த்தங்கள் ஆயிரத்தை
அடைகாத்து அறியத்தந்துள்ளாய்
நண்பா

ZAKIR HUSSAIN சொன்னது…

அழகான அலகு

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//ஓட்டை முட்டி
உடைத்த பின்னரே
உலகை எட்டிப்
பார்க்கிறது குஞ்சு;
வீட்டைவிட்டு வெளியேறி
எதார்த்தத்தைச் சந்திக்கும்
மனிதனைப்போல///

அருமை !

sabeer.abushahruk சொன்னது…

//அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் ஆபரணத்தைப்போல்//

இக்பால்,

பொன்
ஆபரணத்திற்கு
அணி சேர்க்கும் (வைரக்)
கற்களைப் போல உன்
சொற்கள்!

sabeer.abushahruk சொன்னது…

//உன் வரிகளில் நானும்
அடையினுள்ளே அடைபட்ட
முட்டையானேன்//

மெய்சா,

இதோ
காலம் உனக்குக்
கனிந்து வருகிறது

எந்த அடைக்குள்ளும்
காத்திராமல்
தமிழால் உடைத்து
வெளியே வா
தனியாய்ப் படைத்து
கவியாய்த் தா!

Shameed சொன்னது…

//முட்டி மோதாமலும்
தட்டிக் கேட்காமலும்
முடங்கிப் போகும் மனிதர்கள்
உள்ளேயே அடங்கி
கூமுட்டையாய் -நிலை
குலைந்து போவர்//

அருமை அருமை

Shameed சொன்னது…

கோழியை வைத்து தந்துரி செய்யலாம் மசாலா சிக்கன் செய்யலாம் கப்ஸா செய்யாலாம் இன்னும் பல வெரைட்டி செய்யாலாம் என்பது எனக்கு தெரியும் ஆனால் இப்படி ஒரு அழகிய கவிதை செய்யாலாம் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்

sabeer.abushahruk சொன்னது…

//அழகான அலகு//

ஜாகிர்,

அழகான அளவு

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//கோழியை வைத்து தந்துரி செய்யலாம் மசாலா சிக்கன் செய்யலாம் கப்ஸா செய்யாலாம் இன்னும் பல வெரைட்டி செய்யாலாம் என்பது எனக்கு தெரியும் ஆனால் இப்படி ஒரு அழகிய கவிதை செய்யாலாம் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் //

வாங்க இதுக்குத்தானே உங்களை தேடிகிட்டு இருக்கோம் ! :)

sabeer.abushahruk சொன்னது…

//அருமை//

அபு இபு,

நன்றி

sabeer.abushahruk சொன்னது…

//கோழியை வைத்து தந்துரி செய்யலாம் மசாலா சிக்கன் செய்யலாம் கப்ஸா செய்யாலாம்//

ஹமீது,

இதெல்லாம் எப்படி செய்வது என்பதை விளக்கமாக உங்கள் பாணியில் எழுதிப் பதிந்தால் செம டேஸ்ட்டா இருக்கும்ல?

Ebrahim Ansari சொன்னது…

உயிரினங்கள் உருவாகும்போதே முயற்சி முனைப்புக் காட்டுகிறது.

பெண் சினை முட்டைகளுடன் சேரும் போட்டியில் முந்தும் ஆண் அணுவே உயிராகிறது.

பிறக்கும்போதே தனது சின்ன அலகால் கொத்திக் கொத்திக் கொண்டே குஞ்சு வெளிப்படுகிறது. தடைகளை உடைத்து நொறுக்கும் தன்மையின் இயற்கை இயல்பு இது.

அழகான அறிவியல் பூர்வமான கவிதை . பாராட்டுக்கள் தம்பி.

sheikdawoodmohamedfarook சொன்னது…

முட்டைக்குள்இவ்வளவுஅற்ப்புதங்களா?ஆச்சரியமாஇருக்கே?எனக்குதெரிந்தமுட்டைஇரண்டு.ஒன்றுஆரம்பபள்ளிக்கூடத்தில்வாத்தியார்சாக்பீஸால் சிலேட்டுபலகையில்போட்டமுட்டை.இரண்டுகல்யாணம்முடித்தகாலையில்மாமியார்வீட்டில்வெறும்தேத்தண்ணியில்அடித்துக்கொடுத்தமுட்டை!

sheikdawoodmohamedfarook சொன்னது…

//கல்யாணம்முடிந்தகாலையில்மாமியார்வீட்டில்அடித்துக்கொடுத்தமுட்டை//இதுதவிர கப்பலில் வந்து இறங்கிய மூனுபுள்ளை பெத்த சபுறு மாப்புளை க்கும் காலையிலே-காலையிலே சிலமாமியா முட்டை அடிச்சு கொடுத்தாங்களாம்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

முட்டைக்குள்இருக்கும்குஞ்சு தன்னைசிறைபடுத்திய தோட்டைதானேஉடைத்து வெளி வருவருவதை ''மனிதா!நீஉன் சுய முயற்சியால் முன்னேறு!'' என்றுநமக்குசொல்லும்பாடமாகஎடுத்துக்கொள்ளலாமே!.

sabeer.abushahruk சொன்னது…

//தடைகளை உடைத்து நொறுக்கும் தன்மையின் இயற்கை இயல்பு இது.//

காக்கா,

திறக்கும் என்று காத்திருப்பவர்களுக்கு கதவுகள் வேண்டுமானால் திறக்கலாம்; திசைகள் திறக்குமா?

காற்றின் திசையில் காகிதங்களை வேண்டுமானால் அடித்துச் செல்ல விடலாம்; கனவுகளை?

அலகால் கொத்திப் புழு உண்ணும் குஞ்சைவிட கூட்டை உடைத்து வெளிப்படும் குஞ்சை எனக்குப்பிடிக்கும்.

வாயால் உண்டு பசியாறுவோர்க்கு மத்தியில் வாயால் வென்று ஆண்டோரையே சரித்திரம் நினைவு கூரும்!

நன்றி!

sabeer.abushahruk சொன்னது…

//மனிதா!நீஉன் சுய முயற்சியால் முன்னேறு//

ஃபாரூக் மாமா,

சற்று உற்று நோக்கினால், சுய முயற்சியால் அடைந்த முன்னேற்றம் நிலைத்திருப்பதையும், லொத்தர் அடித்தல், வயிற்றில் அடித்தல், பகல் கொள்ளை போன்றவற்றினால் அடைந்த முன்னேற்றம் கூமுட்டையாய் உதவாமல் போய்விடுவதையும் நிகழ்காலத்திலேயே அவதானிக்கலாம்.

தேத்தண்ணியில் பச்சைமுட்டை அடிச்சு கொடுத்த காலம் மறைந்துபோனது. இப்பவெல்லாம் மஞ்சள் கரு வேண்டாம் என்கிறது புது மாப்பிள்ளைகளின் கொலஸ்ட்ரால் ரிப்போர்ட்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கவி
கவிப்படம்
கவிப் பொருள்

ரொம்ப சூப்பர்

sabeer.abushahruk சொன்னது…

//
கவி
கவிப்படம்
கவிப் பொருள்

ரொம்ப சூப்பர்//

எம்
எம் ஹெச்
எம் ஹெச் ஜெ

ரொம்ப நன்றி!

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிஞர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை அவரின் வித்தியாச கோணத்தில் வரைந்த கவிதை ஓவியம்,வழக்கம் போல் அசத்தல்!

crown சொன்னது…

கூரைக்கு வெளியே
அடை மழை
நல்லோர் அடைகாக்கும்
நல்லெண்ணங்களைப் போல
கூடைக்கு உள்ளே
அடை காக்கிறது கோழி:
-----------------------------------------------------
கவிஞரே!பிழை பொருக்கவும்.சும்மா வரியை மாற்றி கோழிக்கிறுக்கல் கிறுக்கினேன்!எப்படித்தான் உங்கள் சிந்தையில் இப்படி "கரு"க்கல் உருவாகி கவிதை குஞ்சு பொரிக்கிறது?!ஆனாலும் கவிதை குஞ்சு"எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில்.....அல்ஹம்துலில்லாஹ்!.

crown சொன்னது…

கோழி இறக்கைகள்
பறக்க இயலாவிடினும்
பாதுகாக்கும்;
தேகம் பழுத்து
திண்ணையில் இருக்கும்
தாத்தா பாட்டியின்
அறிவுரை போல.
--------------------------------------------------
அனுபவம் நம்மை காக்கும் வழி.,இங்கே உருவகம் அருமை! தீவிர கற்பனை!மாசா அல்லாஹ்!

crown சொன்னது…

தட்டை மேல்
முட்டைகளை வைத்து
அடை காத்திருந்த கேள்விகளுக்கு
விடை யென
வெளி வருகின்றன குஞ்சுகள்;
பொறுத்தோருக்கு
பூமி பிளந்து விளையும்
விதைகளைப் போல
---------------------------------------------
விடைதெரியா கேள்விக்கு கிடைப்பதோ முட்டை!ஆனால் இங்கே விடையாய் முழுமதிப்பெண் !

crown சொன்னது…

முட்டி மோதாமலும்
தட்டிக் கேட்காமலும்
முடங்கிப் போகும் மனிதர்கள்
உள்ளேயே அடங்கி
கூமுட்டையாய் -நிலை
குலைந்து போவர்
-----------------------------------------------------
உரிமையை கேட்டு பெறனும் இல்லையேல் தட்டி கேட்கனும்,விழிப்புணர்வு ஆக்கம்!இல்லாமல் போனால் நம் சமூகமே கூழ்முட்டையாகிவிடும்.

crown சொன்னது…

இல்லாதவை எண்ணி
இயலாமல் கிடப்பதைவிட
இருப்பதை உபயோகித்து
இயன்றதை ஈட்டுவதே
இதிலுள்ள பாடம்!
இதை படித்து ,மனதில் பதிந்து ,வாழ்வில் நடக்க நல்லதொரு ஊக்கமருந்து!வாழ்த்துக்கள் கவிஞரே!

sabeer.abushahruk சொன்னது…

//உரிமையை கேட்டு பெறனும்
இல்லையேல் தட்டி கேட்கனும்,//

க்ரவ்ன்,

கேட்டுப் பெறுவதிலும் தட்டிக் கேட்பதிலும் விடா முயற்சி வேண்டும்.

வந்துவிட்டீர்கள், நன்றி!