Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2015 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

23 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்காமார்களுக்கு,

ஷைத்தான்களே ஷாக்காகிப்போகும் அளவிற்கு சட்டசபை சனியன்களின் குழாயடிச் சண்டையை விவரித்த விதம் அருமை. சிரிப்பு போலீஸ்மாதிரி சிரிப்பு அரசியல்வாதிகளின் காலம் இது.

இப்படி காமெடி பண்ணி நம்மையெல்லாம் கண்களைக் கட்டிவிட்டு செம கொள்ளை அடிக்கிறாங்க.

அந்த அடிதடி காட்சிகளை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கு படிக்கும்போது ஆத்திரம் வந்தாலும் நகைச்சுவையான விவரிப்பு ஆத்திரத்தைக் குறைத்தது.

பாராளுமன்றத்திற்காகக் காத்திருக்கிறோம். தேன் குழைத்த கசப்பு மருந்து தொடரட்டும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காஸ்!

sabeer.abushahruk said...

//வானுலகில் ஒரு வட்ட மேசை மாநாடு! மேசையை சுற்றியும் ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன.//

காக்காஸ்,

வானுலகில் மட்டும்தானா இவ்வகை ஷைத்தான்கள் இருக்கின்றன?

//குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து விண்ணுலக ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு //

அருமை அருமை!

ஷைத்தான் குளிக்க சாக்கடை நீர். அருமை!

//ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக்கேளுங்கள்//

அந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்..

பட்ஜெட்டை கவனித்துக் கொண்டிருக்கிறோம். பின்னர் சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

//அமைச்சர்களும்இப்படிஆடுவார்களா?/குட்டிசெய்தான்கேட்டது. ஒசெய்த்தானே நீ ஊருக்குபுதுஸு! கொஞ்சநாள்பொறுத்திரு. அம்மாவெளியேவந்தால்கும்மிகோலாட்டம்பொய்க்கால்குதிரை ஆட்டமெல்லாம் நடக்கும். வாசலிலேகோலமிட்டுபறங்கிபூவச்சு''லோலோ''என்றுகுலவையும்இட்டு இந்த ஆம்புளைங்க நடவு பாட்டும் பாடுவாங்க! இதை யெல்லாம் கேக்காமே அவசரபட்டுபோயிடாதே!

sheikdawoodmohamedfarook said...

அண்ணாமுதலமைச்சராஇருந்தபோதுசட்டமன்றத்தில் ஒருஅங்கத்தினரின் வேட்டிகொஞ்சம்கீழேஇறங்கிஅவர் தொப்புள் தெரிந்தது. அதைப்பார்த்தகாங்ரஸ்உறுப்பினர் ''சட்டமன்றத்தில்தொப்புளை காட்டலாமா?'' என்றார். அதற்க்குபதிலளித்தஅண்ணா ''தொப்புளை காட்டலாம்! அதற்க்குகீழேதான்காட்டக்கூடாது''என்றார். சிரிப்பில் சட்டமன்றம் அதிர்ந்தது. இன்றுஅப்படியல்ல.''தொப்புளையும்காட்டுவேன்! அதற்க்குகீழேயும்காட்டுவேன்.என்னடாசெய்வே? வாடா!ஒண்டிக்குஒண்டிபோட்டுபாக்கலாம்''என்பார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தேர்ந்தெடுக்கப்பட்ட செய்த்தான்களின் மன்ற செயல்பாடுகள் பற்றிய (வேதனையான) சுவையான பதிவு!

sheikdawoodmohamedfarook said...

1967தேர்தலில்காமராஜர்விருதுநகர்தொகுதியில்மாணவர் தலைவர் சீனிவாசனிடம்தோற்றார்.அதைகேட்ட அண்ணாஅவரை தோற்க்கடித்திருக்க கூடாதுஎன்றார். இன்றோ அந்த பண்பாடுகள் இல்லை.சிவபட்டாசுகள் இன்னும் வெடித்துக் கொண்டிருக்கும். நாடாளுமன்றசட்டமன்ற,கூத்துக்களை டி.வி. பார்க்கும் மலேசியா சிங்கப்பூர்காரர்கள் காறி இந்தியன் மூஞ்சியில் துப்புகிறார்கள். கல்தோன்றிமண்தோன்றாகாலத்தேமுன்தோன்றியமூத்தகுடிகள் மூஞ்சியில் எச்சி.

Anonymous said...

ஒரு பழைய பேட்டியின்போது கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதிலும். சிலவற்றை மட்டும் தருகிறேன்.

9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?

கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.

10.கேள்வி:சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.

11. கேள்வி : 1957இல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?

கலைஞர் : அழைத்துச் சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.

12. கேள்வி : சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?

கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது தான்.

13. கேள்வி : மறக்கமுடியாத சம்பவம்?

கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களே, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.

14. கேள்வி : வருத்தப்பட வைத்த சம்பவம்?

கலைஞர் : 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.

15. கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?

கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?

இப்ராஹீம் அன்சாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

வானுலகில் சைத்தான் போக முடியாது. மலக்குகள் அரணாக இருக்கிறார்கள். அங்கு இந்த சைத்தான்கள் மாநாடு கூட்டுவது போன்ற கற்பனை இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரன்.
இதை எழுதியவரையும் , வெளியிட்ட அநியையும் அல்லாஹ்வுக்காக கண்டிக்கிறேன்.
நீக்க வேண்டுகிறேன்

இப்னு அப்துல் ரஜாக் said...

//குடித்துவிட்டு வெளியே வந்த விண்ணுலக ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளத்தில் இருக்கும் தனது பெரியப்பாவின் மகன் குட்டிச் சாத்தானுக்கு ஒரு போன் அடித்து , “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. //

Do you believe in kutti satan in kerala exist?
This is totally against Islam .
Please think before write.
Please be alert on Islam .thanks

Ebrahim Ansari said...

நேற்று ! இன்று ! நாளை ! தொடரில் பதியப்பட்ட இந்தப் பகுதியை படித்து கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றி.

இந்த இரண்டாம் பகுதியை தொடங்கும்போதே இது அங்கதம் என்கிற வகையில் எழுதப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் அப்படி எழுதுவது நமது மார்க்கத்துக்கு விரோதமானது என்கிற கருத்து தெரிவிக்கபட்டிருப்பதால் இந்தத் தொடரை தொடர்ந்து எழுதுவதை தவிர்க்க விரும்புகிறோம். எங்களது எழுத்தால் அதிரை நிருபருக்கு களங்கம் வருவதை நாங்கள் விரும்பவில்லை.

இந்தத் தொடரை நாங்கள் இணைந்து எழுதுவது மட்டுமே நிறுத்தப்படுகிறது. மற்றபடி தேவையான சந்தர்ப்பங்களில் யாரையும் புண்படுத்தாமலும் களங்கம் ஏற்படாத வகையிலும் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தொடர்ந்து தயங்காமல் செயல்படும் தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களுக்கு மிக்க நன்றி.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி நெறியாளர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்கள் போன்ற மார்க்க மேதைகளின் வேண்டுகோளின்படி இந்தபதிவை நீக்கிவிடுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே. வருத்தமில்லா. தயவு செய்து நீக்கி விடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'ஷைத்தான்' என்ற பதத்திற்கு என்ன பொருள் ?

sabeer.abushahruk said...

இந்தத் தொடரைக் கைவிடும் முடிவு பக்குவமான முடிவல்ல. உண்மையான அரசியல் சூழல்களை எங்களிடம் சொல்ல மாட்டோம் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அ.நி.:

விண்ணுலக ஷைத்தான்களை நரகத்து ஷைத்தான்கள் என்று திருத்தவும். (வெயிட் அ மினிட். நரகமும் விண்ணுலகில்தானே இருக்கிறது? அப்படி என்றால் 'மலக்குகள் ஷைத்தான்களை நரகத்திற்குக்கூட போகாமல் தடுத்து அரணாக நிற்பார்களா என்ன? எங்கேயோ இடிக்கின்றதே!!!)

குட்டிச்சாத்தானை நீக்கிவிட்டு பிஜேபி எம் பியை அழைத்ததாக மாற்றம் செய்துவிட்டால் இந்த நகைச்சுவையான சூப்பரான கட்டுரையை நீக்கக் கோரும் காரணிகள் அற்றுப்போய்விடும் அல்லவா?

தம்பிகளே காக்காமார்களே,

நேற்சொன்ன திருத்தங்களுக்குப் பிறகும்கூட பதிவை நீக்க வேண்டும் என்றோ தொடரைக் கைவிடுவோம் என்றோ முழங்கினால் இன்னும் சற்று விவாதிக்க நேரிடும்.

sheikdawoodmohamedfarook said...

//நரகமும்விண்ணுலகில்தானேஇருக்கிறது.அப்படியென்றால்மலக்குகள் செய்த்தான்களைநரகத்திற்குகூடபோகாமல்தடுத்துஅரணாகநிர்ப்பார்களா?// மருமகன் சபீர்கேட்டது./சரியானநெத்தியடிகேள்வி.

Ebrahim Ansari said...

மிகவும் பிரயாசை எடுத்துப் பதியும் பதிவுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீக்கச் சொல்வது வருத்தம் தருகிறது.

அதற்கு பதிலாக நீக்கச் சொல்லும் காரணத்தை பதிவாளர்களுக்கும் EDUCATE செய்கின்ற வகையில் சொன்னால் அனைவராலும் புரிந்து கொள்ளப்படும்.

இதில் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்ட விபரங்கள் களையப்பட்டு திருத்திப் பதியப்படும்.

அதே நேரம் சில சிறைகளுக்குள் இருந்து தொடர்ந்து எழுத இயலாத நிலை தொடர்ந்து இருப்பதால் இந்தத் தலைப்பில் தொடர் எழுதுவதை இனித் தொடர இயலாத நிலையாக இருக்கிறது. காரணம் இது அரசியல் தொடர்- அதாவது சாக்கடைத் தொடர் இதில் எங்களால் சந்தனத்தை உற்பத்தி செய்ய இயலாது.

மேலும் கற்பனைகள், காவிய மேற்கோள்கள், திருக்குறள் மேற்கோள்கள் , கவிஞர்களின் வர்ணனைகள் ஆகியவற்றை காட்டாமல் சுவைபட எழுதும் அறிவும் எங்களுக்கு இல்லை.

இவ்வளவு நாட்களாக தொடர்ந்து ஆர்வமூட்டி வந்த அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.

கொஞ்ச காலம் எழுத்துப் பணிகளுக்கு வி ஆர் எஸ். இதை வாங்கித் தந்த நல்லவர்களுக்கு நன்றி.

இப்னு அப்துல் ரஜாக் said...

[33:36] அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை யாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன்: 15:16)

وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
(அல்குர்ஆன்: 15:17)


إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُّبِينٌ
திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
(அல்குர்ஆன்: 15:18)

இப்னு அப்துல் ரஜாக் said...

http://www.dawahteam.com/en/உங்களை-நரக-நெருப்பின்-இர/

இப்னு அப்துல் ரஜாக் said...

A kind Attention to Abu sharook kaka and farook kaka
அல்லாஹ் சைத்தானை விரட்டி, அவனுக்கு அவகாசம் கியாம நாள் வரை கொடுத்துள்ளான் .எனவே அவன் வானுலகம் சென்று நரகத்தில் உழல்கிறான் என சொல்வது சரி அல்ல.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு